உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்.
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்.
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்.
நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞானம் ஒளி வீசட்டும்.
நம் கடமை அறவாழ்வில் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்; வாழ்க வளமுடன்.
23 December 2005
[+/-] |
!!!~~ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ~!!! |
[+/-] |
|~~ அதிரூபன் தோன்றினானே ~~| |
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே,
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே,
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றிட சிசுபாலன் தோன்றினானே,
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே,
முட்காடு எங்கிலும் பூக்காடு காணவே புவிராஜன் தோன்றினானே.
05 December 2005
[+/-] |
சரத்பவார்,யுவராஜ் சிங் மற்றும் சிவாஜிராவ் கெய்க்வாட் |
பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டபிறகும் சிறிது கூட நம்பிக்கையத் தளர விடாத குணம்,அனைவரையும் தன் பால் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தி பெற்றிருப்பது(crowd puller),சூழலுக்குத் தக்கவாறு தனது ஆட்டத்தை மாற்றி ஆடுவது என்று பல்வேறு ஒற்றுமை இருப்பினும், மேலே குறிப்பிட்ட மூன்று பேரையும் ஒரு புள்ளியில் இணைப்பது அவர்கள் பிறந்த தேதி தான்.
ஆம்.மூன்று பேருமே வெவ்வேறு கால கட்டங்களில் 12 திசம்பரில் தான் பிறந்தனர்.
பாபாவின் தோல்வியை சந்திரமுகியின் சரித்திரம் காணா வெற்றியால் சமன் படுத்தியது,அவுட் ஆஃப் பார்மிலிருந்து அடுத்த தொடரிலேயே ஆட்ட நாயகனானது,டால்மியா என்ற முரட்டுக்காளைக்கு மூக்கணாங்கயிறு கட்டியது என்று இந்த மூவேந்தர்களின் காட்டில் இப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது.
சந்திரமுகியின் வெற்றியை சிவாஜியில் தக்க வைத்துக் கொள்வது,டெஸ்ட் மேட்ச் ஸ்க்வாடில் புதிதாய் வந்திருக்கும் ஆல்ரவுண்டரிடம் இருந்து தனது ஸ்லாட்டை பத்திரப்படுத்துவது,இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் ஏகபோக சக்ரவர்த்தியாய் இருந்த டால்மியாவை வரும் காலங்களில் சமாளிப்பது என்று சவால்களும் இவர்களை எதிர் நோக்கி இல்லாமல் இல்லை.
வரும் வருடம் இவர்களது தொப்பியில் மேலும் பல சிறகுகளை இணைக்க எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்!!!
25 October 2005
[+/-] |
தீபாவளியில் இருந்து... |
மாற்றமே நிரந்தரமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் எனது திட்டக்குழுவில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தினால் பதிவுகள் இடுவதில் ஒரு சிறிய இடைவேளை விட நேரிட்டது.
புஷ்பவனத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு கின்னஸ் சாதனை(அதில் எங்களது பங்களிப்பு),மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்குச் சேருவதில் நிகழும் முறைகேடுகள்,மீண்டுமொரு சிறுகதை,ஆவியின் விலை உயர்வு என்று பல்வேறு விஷயங்கள் மனத்தில் தோன்றுகின்றன.தீப ஒளித் திருநாள் முடிந்ததும் மீண்டும் பதிவிடலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் பண்டிகை நாள், அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
13 September 2005
[+/-] |
அனைவருக்கும் நன்றி!!! |
முடிவுகள் வெளியாகும் முன்னமேயே,இந்தக் கதை பரிசு பெறத் தகுதியானது என்று ஊகித்த,கருத்துத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
இளம்பிராயத்தில் நான் பழனியில் இருந்த போது,எப்போதும் என் தாத்தாவோ அல்லது மாமாவோ தான் என்னை முடி திருத்தகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.அப்படி ஒரு முறை என் தாத்தாவுடன் சென்ற போது,நான் கண்ட ஒரு வேதனையான காட்சியே இந்தக் கதை எழுதக் காரணியாய் இருந்தது.என்னுடன் பயின்று வந்த தந்தையை இழந்த மாணவன் ஒருவன் தனது தாயுடன் முடி திருத்துவதற்காக அதே சலூனுக்கு வந்திருந்தான்.என் நண்பன் முடி திருத்தி முடிக்கும் வரை,வரக்கூடாத இடத்திற்கு வந்தது போலத் துடித்த அந்தத் தாயின் தவிப்பு நிறைந்த முகம் இன்னமும் என் கண் முன்னே விரிகிறது.
அந்த அரைமணி நேரம் தந்த அனுபவத்தை அவர் வாழ்நாளில் மறந்திருக்க வாய்ப்பிலை என்றே எண்ணுகிறேன்.கிராமத்து/சிறு நகரத்து, மகளிர் முடி திருத்தகம் போன்ற ஆண்கள் மட்டுமே பெரும்பான்மையாகப் புழங்கும் இடங்களுக்குச் செல்வது இன்றும் ஒரு அரிதான நிகழ்வாகாகவே உள்ளது.அதையும் மீறிச் செல்லும் சிறுபான்மை மகளிர்க்கும் உரிய மரியாதையோ,இணக்கமான சூழலோ அளிக்கப்படுவதில்லை.இது எப்போது மாறும்???
இந்த வெற்றி தந்த ஊக்கம்,மேலும் பல படைப்புகளை உருவாக்க உறுதுணையாய் இருக்கும் என நம்புகிறேன்.என் உழைப்பு மேல் அயராத நம்பிக்கை கொண்டிருக்கும் என் பெற்றோருக்கும்,எனது முதல் வாசகியான என் தங்கைக்கும்,என்னுள் படிக்கும் பழக்கதை வித்திட்டவரும்,எனது வெற்றிகளைப் பார்க்காமலேயே அமரர் ஆனவருமான என் அம்மா வழிப் பாட்டனாருக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.
இப்படிப்பட்ட ஒரு போட்டியை நடத்தியதன் மூலம் பல்வேறு படைப்பாளிகளை உருவாக்கிய அமைப்பாளர்,சக வலைப்பதிவர் முகமூடிக்கும்,தனது தீராத வேலைப்பளுவிற்கிடையேயும் நேரத்தை ஒதுக்கி,விரிவான அலசலுடன் முடிவுகளை வெளியிட்ட நடுவர் மாலன் அவர்கட்கும் ஒரு ஸ்பெஷல் "ஓ"...
17 August 2005
[+/-] |
அய்யப்ப பக்தர்கள் - தேவை ஒரு மாரல் போலீஸ் |
டிஸ்க்ளெய்மர்: ஒரு குறிப்பிட்ட இறை வழிபாட்டு முறை நல்ல வழிகாட்டுதல் இன்றி நீர்த்துப் போய் வருகிறது என்ற ஆதங்கத்தின் விளைவினால் எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை. இதன் மூலம் யாருடைய மனத்தையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை.எல்லாம் வல்ல இறையின்(அதனை எந்தப் பெயரிட்டு அழைப்பினும்) மேல் எனக்கும் தீவிர நம்பிக்கையுண்டு.
"ரொம்ப நாளைக்கப்புறமா இந்த மாதிரி மூணு நாள் சேர்ந்தாப்பில விடுமுறை வருது.அதனால நாம தீவாளிக்குன்னு போட்டிருந்த பிளானைக் கேன்சல் பண்ணிட்டு இப்பமே மதுரை பக்கம் போயிட்டு வந்திடுவோம்.மணி கிட்ட கூட ஒரு டாடா - சுமோவுக்கு சொல்லி வச்சாச்சு" என்று அப்பா கூறியதிலிருந்து எனது மதுரைக் கனவுகள் ஆரம்பமாயின.திட்டமிட்ட படி நாங்கள் மதுரையை அடைந்தோம்.
"இன்னைக்குச் சனிக்கெழமை.அதனால கூட்டமும் அவ்வளவு அதிகமா இருக்காது.எந்தப் பிக்கல் பிடுங்கல் இல்லாமக் கோவிலையும் ஆர அமர சுத்திப் பார்க்கலாம்."என மனசுக்குள் நினைத்தவாறே கோவிலினுள் நுழைந்த போது எழுந்த அந்தக் கூச்சலினால் நான் சற்று ஆடிப்போனதென்னமோ உண்மை தான்.
"சாமியே....." "சரணம் அய்யப்பா!" "சாமியே....." "சரணம் அய்யப்பா!"
"சே.இங்கயும் வந்திட்டாங்களா."என்று உச்சுக் கொட்டினேன்.
"ஏம்பா தம்பி.ஒரு மண்டலம் கஷ்டப்பட்டு விரதம் இருந்து,இருமுடி கட்டி,பல சோதனைகளயெல்லாம் காட்டில தாண்டி,சாமி கும்பிடப் போறவிங்க அவிங்க.அய்யப்ப சாமி பக்தர்களை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது."
"அம்மா,நீயும் அண்ணனும் வெளியே போய் உங்க கச்சேரியை வச்சிகுங்க.மொதல்ல சாமி கும்பிடர வழியப் பாருங்க"சொன்னது தங்கை.
எனக்குச் சின்ன வயதில் இருந்தே அய்யப்ப சாமிகள் என்று அழைக்கப்படும் கூட்டத்தைக் கண்டால் ஒரு பயம்.அமைதியாக வழிபாடு நடந்து கொண்டிருக்கும் எந்தக் கோவிலும் இவர்கள் நுழைந்தவுடன் யானை புகுந்த வெண்கலக் கடையாய் மாறிவிடும்.எந்தக் கோவிலுக்குப் போனாலும் இவர்கள் அய்யப்பனைத் தான் உரக்கத் தொழுவார்கள். அதிலும் யார் சப்தமாகக் கூவுவது என்று சில சமயம் போட்டிகளும் நடக்கும். அன்றும் அங்கே அது தான் நிகழ்ந்தது.
சுந்தரேஸ்வரர் சன்னதியில், சில சிறுமிகள் தேவாரத்தை இனிமையாக ஓதிக் கொண்டிருந்தனர்.சன்னதியில் இருந்தவர்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.இந்தப் பக்தர்கள் உள்ளே நுழைந்தது தான் தாமதம்.பாவம் அந்தச் சிறுமியர்.பக்தர்களது பரவசப்பிளிரல்களுக்கிடையே இந்தச் சிறுமியரின் குரல் எடுபடவில்லை.பக்த கோடிகளுக்கோ, கூட்டத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்த்ததில் சொல்லவொண்ணாப் பெருமிதமும்,பூரிப்பும்.
அந்தக் காலத்தில் சிறு குழுக்களாகக் காட்டுக்குள்ளே நெடுந்தொலைவு பயணம் செய்து தான், சாஸ்தாவின் கோவிலை அடைய முடியும்.அப்படிப் பயணப்படும் போது ஒரு குழுவில் இருப்போரிடையே பயணத்தினால் ஏற்படும் சோர்வினைப் போக்குவதற்காகவும்,உற்சாகத்தை எழுப்புவதற்காகவும் உருவாக்கப்பட்டவையே இந்த உரத்த கோஷங்கள் என்பது எனது கணிப்பு.அது மட்டுமல்லாது பல்வேறு மொழி,கலாச்சாரப் பின்னணியில் இருந்து வரும் பக்தர் குழுக்களிடையே நெடும்பயணத்தில் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கவும் இவை பயன்பட்டிருக்கலாம்.
இது தெரியாமல், இப்போது எங்கு சென்றாலும் இந்தக் கோஷங்களை எழுப்பும் பக்தர்களைப் பார்க்கும் போது எனக்கு ஐடென்டிடி கிரைசிஸ் வந்து தவிக்கும் சிறு குழந்தைகள் தான் நினைவுக்கு வருவர். இப்படிக் கூவிக் கூவித் தான் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது யார் இட்ட விதிமுறை?
இத்தோடு விட்டதா என்ன?அடுத்து மீனாட்சி அம்மன் கோவிலில் உச்சிகாலப் பூசைக்காகக் காத்திருந்த கூட்டத்திடையேயும் அவர்களது சாகசங்கள் தொடர்ந்தன.மகளிர்க்கென இருந்த க்யூவில் ஊடுறுவ முற்பட்டனர்.அய்யப்ப சாமிங்கதானே என்று அவர்களுக்கு அதில் இடமும் அளிக்கப்பட்டது.அங்கே அவர்கள் தமது தாய் மொழியில் (அதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து) அடித்த கமெண்டுகள் அவர்களது மனநிலையை அப்பட்டமாய் உணர்த்தியது. திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் தங்களது உணர்ச்சிகளை சரியான வழியில் சேனலைஸ் செய்வதற்கு இது போன்ற விரதங்களும் அதன் அசோசியேட்டட் பழக்க வழக்கங்களும் துணை புரியும். ஃபேஷனுக்காய் மாலை போடும் இன்றைய பக்தர்கள்,இது பற்றி உணர்ந்திருப்பார்கள் என எதிர்பார்ப்பது நமது தவறு தான்.
"கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா..."என்ற பழமொழி வேறு ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.கொஞ்ச நேரத்தில் கோவிலை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வெளியேறினோம்.
"அந்த அய்யப்ப சாமிக .....லிருந்து வந்திருக்காங்களாம்.சபரி மலைக்குப் போயிட்டு இந்த மாதிரி எங்கயாவது ட்ரிப் போவாங்களாம்.மதுரைக்கு இதுவரை மூணு வாட்டி வந்திருக்காங்களாம்.இன்னைக்குச் சாயங்காலம் அழகர் கோயிலுக்குப் போராங்களாம்.அவிங்க ட்ரைவர் நம்மாளுதான் சார்.அவன் தான் இதெல்லாம் சொன்னான்"
மதுரை நகரத்துக் கடை வீதிகளிலும் ஃபில்டர் கிங்ஸ் பிடிக்கும் ரமேசு சாமி,பெப்ஸி குடிக்கும் குருசாமி,பெண்கள் கூட்டத்தில் உரசிச் செல்லும் கன்னிச்சாமி என நிறைய அய்யப்ப சாமிகள் தென்பட்டார்கள். இடையிடையே சிறு சிறு கோவில்களைக் கண்ட போது அவரது பிளிரல்களும் தொடரத்தான் செய்தன.மதுரையில் மட்டுமல்ல;பழனி உட்படப் பல கோவில்களிலும் மேலே சொன்ன விஷயங்கள் ஆண்டு முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
சபரிமலைக்குப் போய்விட்டுப் பழனிக்குப் போகாமல் வீடு திரும்பக்கூடாது என்பதால் பயணச்செலவுக்குக் காசில்லாத நிலையிலும் கஷ்டப்பட்டுப் பழனிக்கு வந்த சில அய்யப்ப பக்தர்களை என் இளம் பிராயத்தில் பார்த்திருக்கிறேன்.இந்த மாதிரியான பக்தர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர்களை நெறிப்படுத்த ஒரு மாரல் போலீஸ் தேவையோ என்று தோன்றும்.
சாதி,மத பேதமில்லாத ஒரு இணக்கமான வழிபாட்டுச்சூழலுக்கு வழி செய்வதில் சபரிமலைக்கு ஒரு தனி இடமுண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை.ஆனால் அதே சமயத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பம்பா நதியின் சூழ்நிலைச் சீர்கேடு,ஆட்டு மந்தைகளாய்த் தாங்கள் செய்வதன் பொருள் உணராமல் நடந்து கொள்ளும் பக்தர்கள் என்று சபரிமலை சந்திக்கும் அபாயங்களும் இல்லாமல் இல்லை. இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்???
பின்கதைச்சுருக்கம்:
"அம்மா..அத்தை தான் ஃபோன் செஞ்சாங்க.அவங்களோட மாமனாரு,பெருந்துறையில தவறிட்டாராம்.நாளக்கிக் காலையில எரிப்பாங்க போலிருக்கு.இப்பமே வீட்டை விட்டுக் கிளம்பினாத்தான், ஏற்காடு எக்ஸ்ப்ரசைப் பிடிக்க முடியும்.அப்பத் தான் காலையில நேரத்துக்குப் போயிடலாம்"
"உக்கும்.எங்க அப்பா செத்ததுக்கு அவுங்க வீட்டில இருந்து யாராவது ஒரு ஆள் வந்திச்சா??நாம மட்டும் எதுக்கு செலவு பண்ணீட்டுப் போகணும்.அதெல்லாம் ஒண்ணும் வேணாம்"
"அப்பா நாளைக்குத் துபாய்ல இருந்து போன்ல கேட்டா என்ன சொல்ரது?"
"உங்க அண்ணன் தான் எப்படியும் இந்த வாரம் சபரிமலைக்கு மாலை போடப்போரான் தான.இன்னக்கிக் காலைலயே போட்டுட்டான்னு சொல்லீடுவோம்.மாலை போட்ட வீட்டில இருந்து இந்த மாதிரி விஷயங்களுக்கு யாரும் போகக் கூடாதுன்னு உங்க அப்பாவுக்குத் தெரியாதா என்ன??!!!"
08 August 2005
[+/-] |
சிறுகதை - "முத்துசாமி சாரில் இருந்து புதுக் கிராப்பு வரை" |
சே,இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல.என் தலையில கொஞ்சம் தலையில முடி மொளச்சிடக் கூடாதே.உடனே எதோ ஒரு கோயிலுக்குக் கிளப்பீட்டுப் போயிடும்.கால் பரிச்சை லீவுல தான் கொல தெய்வம் கோயில் போய் மொட்டை போட்டுட்டு வந்தோம்.இப்போ இந்த முழுப் பரிச்சை லீவில பழனில மொட்டை போடணும்ணு சொல்றாங்க.இவங்களுக்கு என்ன?என் கூடப் படிக்கிற K.கதிர்வேல்,"கொடுக்காப்புளி"தங்கதுரை,மீனாச்சியக்கா வூட்டு ரமேசு இவிங்க எல்லாம் புதுசா வந்திருக்கிற மாயாவி பட சூர்யா மாதிரி முடி வெட்டிக்கப் போறாங்களாம்.
அப்பா,ரெண்டு வருசம் முன்னாடி எங்களை விட்டுப் போனப்போ ஆரம்பிச்சது இந்த மொட்டை போடரது.பழனியில ரெண்டு தடவை,கொடுமுடில ஒரு தடவை,குல தெய்வம் கோயில்ல ரெண்டு வாட்டின்னு தொடர்ந்துட்டே போகுது.இந்த வாட்டி லீவிலயே அடிக்கரதினால,பள்ளிக்கூடம் தொறக்கரதுக்கு முன்னாடியே முடி வந்திடும்.அப்பவாவது யாரும் என்னை மொட்டையான்னு கூப்பிடாம,"பழனிச்சாமி"ன்னு என் பேர் சொல்லியே கூப்பிடறாங்களான்னு பார்ப்போம்.
இப்படி வரிசைக்கா மொட்டை போட்றதப் பத்தி யாராவது கேட்டாலும் பழனிச்சாமிக்கு சாமி பக்தி சாஸ்தி;அவன் நேர்ந்து கிட்டதனாலத் தான் இப்படின்னு அம்மா பொய் சொல்றப்பவெல்லாம் ஊடால புகுந்து அம்மா பொய் சொல்றாங்கன்னு சொல்லத் தோணும்.ஆனா மொட்டை போட்டதுக்கு அப்புறம் அம்மா சந்தனத்தைப் பூசுரது குளுகுளுன்னு சூப்பரா இருக்கும்.இதுக்கோசரமே அடிக்கொருக்கா மொட்டை போட்டுக்கலாம்னு கூடத் தோணும்.
"பழனிக்கண்ணூ,டேய்.அங்க என்ன பண்ணீட்டு இருக்கற?"அம்மா முன்னாடி இருந்து கூப்படரது கேக்குது.அம்மா சந்தோசமா இருந்தா இப்படித்தான் பழனிக்கண்ணூன்னு கூப்புடும்.
"அம்மா.இதோ வந்திட்டேன்."முன்னாடி ரூமுக்குப் போன புதுசா ஒரு ஆள்,அம்மா கூடப் பேசிட்டு இருக்காரு.
"பழனிச்சாமிக்கி என்ன அடையாளம் தெரியலை போலிருக்கு.அதான் இப்படி முழிக்கிறாப்பல.நான் தான் முத்துசாமி.உங்க அய்யனோட பங்காளி. அட,உங்கூட ஒண்ணாம்புப் படிச்ச கவிதாவோட அப்பா. ".
அட ஆமாம்.எங்க அப்பா இருந்தப்போ எங்க வீட்டுக்கு வந்து போயிட்டு இருந்தக் கொஞ்சப் பேர்த்தில இவரும் ஒருத்தரு.
"பழனி,நீ போய் சாமினாதன் கடையில அஞ்சு வடையும் இந்த தூக்கு போசியில மூணு காப்பியும் வாங்கியா"
அது ஏனோ எங்க அப்பா இருந்தப்பவும் சரி இப்பவும் சரி எங்க அம்மா வூட்டிலிருந்தோ எங்க அப்பா வீட்டிலிருந்தோ எங்க வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்க.எங்க அம்மாவும் என்னைய எந்த சொந்தக்காரங்க வீட்டுக்கும் கூட்டிட்டுப் போனதில்லை.ஆனா பக்கத்து வீட்டுக் கணேசண்ணன் வீட்டுக்கு எப்பப் பார்த்தாலும் யாரொ ஒரு சொந்தக்காரர் வந்து போயிட்டு இருப்பாரு.ஒரு வாட்டி இதப்பத்திக் கேட்டதுக்கு அம்மா கிட்ட நல்லா மாத்து வாங்கிக் கட்டீட்டது தான் மிச்சம்.
கணேசண்ணன் தான் சொன்னாரு இந்தக் காதல் படத்துல வர்ர மாதிரி எங்க அப்பாவும்,அம்மாவும் லவ் பண்ணி அப்பரமா அவங்க வீட்டுக்குத் தெரியாம திருட்டுக் கல்யாணம் செஞ்சிட்டாங்களாம். இதனாலத்தான் எங்க வீட்டுக்கு எந்தத் தாத்தாவும்,பாட்டியும் வாரதில்லையாம். இதெல்லாஞ்சரி,இந்தப் பிரச்சினை நடந்தப்போ நான் எங்கண்ணா போயிருந்தேன்னு கேட்டதுக்கு தலையில ஒரு தட்டுத் தட்டீட்டு சத்தமாச் சிரிச்சாரு கணேசண்ணன்.இது ஏன்னே தெரியல?அம்மா எப்பாவாச்சி சந்தோசமா இருக்கறப்போ இதப் பத்திக் கேக்கணும்.
டுர்ர்ரு....டுர்ர்ரு...அய்யய்யோ..வண்டிய வெரசலா ஓட்டிட்டு வந்ததில சாமினாதன் கடையத் தாண்டிப் போயிட்டேன்.
விரூம்..
இப்போ ரிவர்ஸ் எடுத்தாச்சி.ஹைய்யா..சாமினாதன் கடையும் வந்தாச்சு.
"அண்ணா,அம்மா அஞ்சு வடையும்,இந்தத் தூக்கு போசியில மூணு காப்பியும் வாங்கியாரச் சொன்னாங்க"
"என்ன பழனிச்சாமி.லீவு வுட்டு பத்து நாளு ஆகப்போகுது.இன்னும் உன் தலைக்கு மொட்டை போடாம இருக்கர.அது சரி,வீட்டில யாராவது ஒரம்பறையா?வடை,காப்பி எல்லாம் பார்த்தா வந்திருக்கரது பெரிய டிக்கட்னு தான் நினைக்கிரேன்.ஒரம்பரை ஆம்பளையா இல்ல பொம்பளையா?"இது டீ மாஸ்டர்.
இந்தாள் கூடவெல்லாம் பேசக்கூடாதுன்னு அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்ததனால தலையை ஆட்டிடு வடபொட்டலத்தயும்,தூக்குபோசியையும் வாங்கிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
டுர்ர்..டுர்ர்..பீம்...பீம்...டுர்ர்ர்ர்ர்..
"என்ன பண்றது தனம். நான் குவைத் போன ஒரே மாசத்தில இந்தத் தகவல் வந்திச்சு.போன வாரம் தான் திரும்பி வந்தேன்.ஓடிப் போனவன் போயிட்டான்.அவனையே நினைச்சிட்டு இருந்தா பழனிச்சாமி கதியை நினைச்சிப் பாரு.ஏதோ நீ பால்வாடி ஆயாவா இருக்கரதால அரைக்கஞ்சி சாப்பிடமுடியுது.இதுவும் இல்லாம இருந்திருந்தா என்ன செஞ்சிருக்க முடியும்.உன்னோட ட்ரான்ஸ்பருக்கு ஏற்பாடு செஞ்சிடறேன்.கொஞ்ச நாள்ல வந்திடும்.அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ".
"ஹூம்.நீங்க தகிரியம் கொடுக்கற மாதிரி ஆதரவாப் பேசக்கூட ஆள் இங்கில்லை. எங்க ரெண்டு வீடுகள்ளயும் தான் தண்ணியத் தெளிச்சி விட்டுட்டாங்களே. சொந்த ஊர்னா யாராவது ஒருத்தராவது சப்போர்ட்டுக்கு வருவாங்க.பொழைக்க வந்த ஊர்தானே.ஆம்பளையில்லாத வூடுன்னு ஊர்ல கண்ட நாயும் இங்க ஒதுங்கப் பாக்குது.ஒரு கல்யாணம்,காட்ச்சின்னு போனாக்கூட எல்லாரும் சாடை பேசராங்க.இவ்வளவு ஏன் ஒரு தடைவை பழனிச்சாமிய முடி வெட்டரதுக்குக் கூட்டிடுப் போய் திரும்பி வாரதுக்குள்ளே உசிரு போய் உசுரு வந்திடுச்சு.கேக்க ஆளில்லைங்கற தெனாவெட்டில கையப் புடுச்சிட்டான் கட்டிங் பண்ற ஆறுமுகம்.
அதிலிருந்து பழனிக்கு மூணு மாசத்துக்கொருக்கா மொட்டை தான்.நானும் ஏதாச்சி ஒரு சாமிக்கி விரதம் புடிக்க ஆரம்பிச்சிடுவேன்.இந்தக் வெள்ளப் பொடவைய விடக் காவியும்,மஞ்சளும் தான் என்னைக் காப்பாத்துது.ஹூம்.நான் வாழ்ந்து முடிஞ்ச ஆளு.எனக்கு இதெல்லாம் பழகிப்போச்சு.ஆனால் இவந்தான் ஆவூன்னா மொட்டையான்னு அழுதிட்டே இருக்கான்.வயசுப் பையன் வெத வெதமாக் கிராப்பு வைக்க வுடாமே நானும் ஒவ்வொரு கோயிலுக்காக் கூட்டிட்டுப் போய் மொட்டை போட்டிட்டு இருக்கேன்."
"அட.தனம் என்னாய்ப் போயிருச்சின்னு அழுகறே.நான் இருக்கேன். அப்பறம் ஒரு முக்கியமான விசயம்.மகேஸ்வரிக்கு இதெல்லாம் தெரியாது.தெரியாம இருக்கரதே நல்லதுண்ணு நினைக்கிறேன்.நீ என்ன சொல்ற?"
"இனிமேப்பட்டு நான் சொல்ரதுக்கு என்ன இருக்கு.விதி விட்ட வழின்னு போக வேண்டியது தான். அடக் கைய எல்லாம் புடிச்சிட்டு விடுங்க.பழனி வார சத்தம் கேக்குது"
எனக்குக் கால் பரிச்சை லீவு விட்டாச்சு.புது ஸ்கூல்ல புதுசா நெறையக் கூட்டாளிங்க கெடச்சிருக்காங்க.நாளைக்கு என்னை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போரென்னு முந்தா நேத்து வந்த முத்துசாமி சார் சொன்னாரு.ஆமாம்,இனிமேப்பட்டு அவர சார்னு தான் கூப்பிடணும்னு அம்மா சொல்லியிருக்காங்க.
இப்பெல்லாம் அவரும் வாரத்துக்கு ரெண்டு மூணு வாட்டி எங்க புது வீட்டுக்கு வந்திடராறு.அன்னைக்கெல்லாம் எங்க வீட்டுல நல்ல சாப்பாடு தான்.அவர் வந்தவுடனே நானும் அம்மா சொன்னா மாதிரி விளையாடப் போயிருவேன்.எங்க வீட்டுக்கு TV கூட வந்திடுச்சு.அதுவும் துபாய் TV. புது ஊர்ல அம்மாவுக்கு நெறய ஃபிரண்ட்ஸ் கெடச்சிட்டாங்க.முன்ன மாதிரி அம்மா அடிக்கடி எந்தக் கோயிலுக்கும் வேண்டிக்கரதில்லை.எனக்கும் மொட்டை போடறதில்லை.
ஆனா எனக்கு தான் இந்த எதுவுமே பிடிக்கலை. முத்துசாமி சார்ல இருந்து புதுசா வச்சிருக்கற ஸ்டைலான கிராப்பு வரைக்கும்.
---- சுதர்சன்.கோபால்
பி.கு: இக்கதை முகமூடி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை. போட்டியின் நடுவர் மாலனின் கருத்துகள் பின்வருமாறு:
"இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்துசாமி சாரிலிருந்து... கதை ஒரு நுட்பமான கதை. ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை சற்றும் மிகையில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. அடிக்கடி மொட்டையடித்துக் கொள்ளும் நிர்பந்த்தத்திற்குள்ளாகிறான் பழனிச்சாமி. அந்த மொட்டைக்குப் பின் ஒரு காரணம் இருக்கிறது. அது எவருக்கும் மகிழ்ச்சிதரும் காரணமல்ல. நிர்கதியான பெண்களை வெள்ளைப் புடவையை விட மஞ்சளும் காவியும்தான் காக்கிறது என்பதில் ஓர் உரத்து முழக்கப்படாத சமூக அவலம் இருக்கிறது. அம்மாவை அம்மாவாக, ஒரு புனிதப் பசுவாகப் பார்க்கிற மனோபாவம்தான் நம்மிடையே உருவாக்கப்பட்டிருக்கிறது. அவளை ஒரு பெண்ணாகவும் பார்ப்பதற்கு ஒரு பேருள்ளம் வேண்டும். தி.ஜானகிராமனுக்கு இருந்த அத்தகைய உள்ளத்தை இந்தக் கதாசிரியரிடமும் பார்க்க முடிகிறது. சமூகம் வகுத்துள்ள ஒழுக்கவிதிகளை வலியுறுத்தாமல் பெண்ணைப் பெண்ணாகப் பார்க்க முற்படும் அதே வேளையில் அதை முற்றிலும் அங்கீகரிக்க முடியாத சங்கடமும் கடைசியில் வெளிப்படுகிறது.யதார்த்தம், வ்டிவமைதி இவை கருதிக் கூடக் கதை இந்த விதமாக முடிந்திருக்கலாம்."
03 August 2005
[+/-] |
எளிமையாக இருப்பது ஒரு குற்றமா? |
"நெசமாவா சொல்ர??என்னப்பா இது,நீ வாங்கிற சம்பளத்துக்கு ஒரு செல் போன் கூட வாங்க முடியலையா உன்னால?அடப்போப்பா"என்ற ஒரு சொந்தக்காரரின் கேள்விக்கு என்ன பதில் தருவது?
"இன்னும் சைக்கிள்லயும் பஸ்ஸிலயுமா ஆஃபீஸ் போய்ட்டு இருக்க?சீக்கிரமா ஒரு டூ வீலர் வாங்கிக்கப்பா.என்ன தான் ஆஃபீஸ் பக்கம்னாலும் வண்டில போய் இறங்கினாத் தான ஒரு கெத்தாய் இருக்கும்.சைக்கிள் எல்லாம் அந்தக் காலத்து வண்டி"என்ற அப்பாவின் நண்பருக்கு எப்படிப் புரிய வைப்பது.
இங்கே நிறையப் பேருக்கு எளிமைக்கும்,ஏழ்மைக்கும் வித்தியாசமே தெரிவதில்லை.கடன் வாங்கியாவது பகட்டாய்த் தோற்றமளிப்பது தவறில்லை நம்ம ஊரில்.ஆனால் எளிமையாய் இருக்க முயற்சிப்பவருக்குக் கிடைக்கும் பட்டமோ கஞ்ச மகாப் பிரபு.
"என்கிட்ட கார் கிடையாது.அதனால ஒரு விழாவுக்கு நான் ஆட்டோவில போயிருந்தேன்.நான் ஆட்டோவில் இருந்து இறங்கியதைப் பார்த்த விழா அமைப்பாளர் ஓடி வந்து,"என்ன சார் இது?சொல்லியிருந்தா நானே வீட்டுக்கு வண்டி அனுப்பிச்சிருப்பேனே.ரஜினி,ஸ்ரீதேவியை எல்லாம் வச்சி படம் எடுத்த டைரக்டர் நீங்க.ஒரு கார் கூட வச்சிக்காம இருக்கீங்களே?"என்று கேட்டார்.கார் இல்லாமல் இருப்பது ஒரு குற்றமா?எளிமையாய் இருப்பதும் ஒரு தவறா"என்று உதிரிப்பூக்கள்-மகேந்திரன் அங்கலாய்த்தது நினைவுக்கு வருகிறது.
எளிமையின் இலக்கணமாய்த் திகழ்ந்த கர்மவீரர் சாதிக்காத விஷயங்களையா தற்போது ஸ்கார்ப்பியோவிலும்,குவாலிசிலும் பறக்கும் கரை வேட்டிகள் சாதித்து விட்டார்கள்.எளிமையாய் இருப்பது அப்படி ஒன்றும் கடினமான செயலும் அல்ல.ஒவ்வொருவரும் தங்கள் நிலையினை உணர்ந்து இயல்பாய் இருந்தாலே போதும்.ஒரு மனிதனுக்கு எப்போதெல்லாம் தனது நிலையின்று உயர்வு வருகிறதோ(பதவி,பொருள்),அப்போதெல்லாம் அடி மனதில் புதைத்து வைக்கப்பட்ட மிருக எண்ணங்களான கோபம்,அடக்கி ஆள நினைத்தல்,எள்ளல் போன்றவை வெளி வர முயற்சி செய்யும்.இவற்றையும் அடக்கி ஆண்டால் மட்டுமே ஒருவர் அடைந்த உயர்வு முழுமை பெரும்.
என் அப்பாவின் நண்பர் ஒருவர்,மிகவும் எளிமையானவர்.எல்லார்க்கும் உதவும் மனது படைத்தவர்.எங்கள் குடியிருப்புப் பகுதியில் பொதுக் குடிநீர் வழங்கல்,சாலை செப்பனிடல்,சாலையோர மரங்கள் பராமரிப்பு போன்ற பொதுக் காரியங்களில் தன்னார்வத்துடன் கலந்து வந்தார்.குடி தண்ணீர்ப் பிரச்சினைக்காக எப்போது வேண்டுமானாலும் அவரது கதவைத் தட்டலாம்.பொதுக் காரியங்கள் அவரது பெரும்பான்மையான நேரத்தினை விழுங்கிய போதும்,முகம் சுளிக்காது பங்களிப்புத் தருவார்.
அவரது நண்பர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க,வார்டு தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்கினார்.கடுமையான போட்டிகளுக்குப் பின் கரை வேட்டிகளை வீழ்த்திவிட்டு வெற்றியும் பெற்றார்.அவரது பதவிக்காலத்தில் முதல் இரு வருடங்கள் வழக்கம் போல கால்களைத் தரையில் ஊன்றித்தான் நடந்து சென்றார்.அவரது பெருகி வரும் செல்வாக்கினையும்,அவர் சார்ந்த சமூகத்தின் சாதி ஓட்டுகளையும் கணக்குப் போட்டு ஒரு முன்னேற்றக் கழகம் அவரை நல்ல விலைக்கு வாங்கியது.அவருக்கு மாவட்ட அளவில் ஒரு நல்ல பதவியும் கொடுக்கப்பட்டது.TVS-50, மாருதி ஆம்னியாக வளர்சிதை மாற்றம் அடைந்தது."நாய்கள் சாக்கிரதை"என்ற அறிவிப்போடு ஒரு காவலாளி அவர் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டான்.
அவரை வார்டுப் பிரச்சினைக்கு அணுகுவதே கடினமாய் இருந்தது.எளிமையின் சின்னமாய் இருந்தவர் ஒரே நாளில் தலைகீழாக மாறினார்.ஆனால் இதற்கு விலையாக அவர் கொடுத்த பல நட்புக்கள் மற்றும் நேசமனங்களின் இழப்பினை அவர் அப்போது அறிந்திருக்க வழியில்லை.கழகத்தில் யாரோ அவரது விரோதி போட்டுக் கொடுக்க,சிறகுகள் வெட்டப்பட்டன.கெத்தாயிருக்கும் என்று சொல்லி வாங்கப்பட்ட காருக்குப் பெட்ரோல் வாங்க வழியின்றி விற்றார்.தனது வீட்டையும் காலி செய்து விட்டு எங்கள் குடியிருப்புப் பகுதியினை விட்டு விட்டுச் சென்று விட்டார்.
இவ்வளவு களேபரங்களுக்கிடையே உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.இந்த முறை எங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் போட்டியிடப்போவதாகச் சொல்லி வருகிறார்.எங்கோ தெருவில் ஒரு பிரச்சார ஊர்தி செல்கிறது.அதிலிருந்து மெல்லியதாய்க் கசிந்து கொண்டே செல்கிறது கீழ் வரும் பாடல்.
"பூமியில் இருப்பதும்,வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே"
02 August 2005
[+/-] |
நான் ரெடி.நீங்க ரெடியா??? |
எனது முந்தைய பதிவுக்குக்(நான் யார்? )கிடைத்த அமோக ஆதரவினை முன்னிட்டு(எத்தனை பேரு வந்து பார்த்தாங்கன்னு மனசாட்சி கேக்கறது சத்தியமா என் காதில விழவே இல்லை),இதோ மற்றுமொரு வினாடி-வினா பதிவு.நீங்க கொடுக்கும் ஆதரவைப் பொறுத்து இந்தப் பகுதியை நான் தொடரலாம்னு நினைச்சிட்டு இருக்கேன்.
இதோ இன்றைய கேள்விகள்.
1.பிரபல இந்திப் பாடகர் கிஷோர்குமார் மாடலிங் செய்த ஒரெ பொருள் எது?
2.டில்பெர்ட் நகைச்சுவைத் துணுக்குகளில் கொடூரமாகச் சித்தரிக்கப்படும் மனித வள மேம்பாட்டு(HR) இயக்குனரின் பெயர் என்ன?
3.சுமார் 550 நாட்களுக்கு மேல் நீடித்த இந்தியாவின் மிக நீளமான ஸ்ட்ரைக்கினை முன்னின்று நடத்தியவர் யார்?
4."லக்ஸ்:சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்" என்று விளம்பரங்களில் கூவிய முதல் இந்திய நடிகை யார்?
5.அமெரிக்கா எந்த நாட்டிடம் இருந்து வர்ஜீனியத் தீவுகளை வாங்கியது?
6.ஆசியாவில் இந்த நாட்டில் மட்டும் தான் வெளியிடப்படும் கரன்ஸி நோட்டுகள் அனைத்தும் ஒன்பதால் வகுபடக் கூடியவைகளாக இருக்கும்.நான் குறிப்பிடும் நாடு எது?
7. #700,19-வது தெரு
NW, வாஷிங்டன்(D.C)20431
மேலே சொன்ன முகவரியின் சிறப்பம்சம் என்ன?
8.மேடம் துஸ்ஸாடின் காட்சியகத்தில் பொம்மையாக வைக்கப்பட்ட முதல் சூப்பர் மாடல் யார்?
01 August 2005
[+/-] |
நான் யார்? நான் யார்? நான் யார்? |
1.நான் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில் ஒரு அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறேன்.அனைவரும் மறந்த ஒரு விஷயம் நான் பாம்பே டையிங்-குக்கு மாடலிங் செய்தது தான்.நான் ஒரு பெண் என்பதையே சில நேரங்களில் மறந்து விடுகிறேன்.அமலா அக்கினேனியும் நானும் ஒரு விஷயத்தில் ஒரே நேர் கோட்டில் வருகிறோம்.நான் யார்?
2.ஏப்ரல் 1999 - அப்போது பிரபல மாடலாக இருந்த சரிதாவைக் கை பிடிக்க ட்ராக்சூட் அணிந்து கொண்டு, லான்ட்க்ரூஸரில் சர்ச்சிற்குச் சென்றது இன்னமும் நினைவில் இருக்கிறது.நான் நடத்தும் உணவகத்தின் பெயர் "கர்ரி லீவ்ஸ்".எனது பழைய பொழுதுபோக்கு கிரிக்கெட் விளையாடுவது தான்.இப்போது சொல்லுங்கள்,நான் யார்?
3.கர்னாடகாவைச் சார்ந்த நான் ஒரு சிறந்த பேங்கர் மற்றும் நிர்வாகி என்று இன்னமும் மக்கள் என்னை நினைவில் வைத்து இருக்கிறார்கள்.அது மட்டும் அல்ல,நான் மத்திய அரசில் ரயில்வே அமைச்சராகவும்,தொழில் துறை மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சராகவும் பணி புரிந்து இருக்கிறேன்.எனது நினைவாக ஒரு மேலாண்மைக் கல்விக்கூடம் பெயரிடப்பட்டுள்ளது.நான் யார்?
4.எனது தாத்தா "பர்மாவின் அரிசி அரசு"(The Rice king of Barma) என்று அழைக்கப்பட்டவர்.எனது தந்தையோ பாகிஸ்தானுக்கு வரும்படி அழைத்த ஜின்னாவின் வேண்டுகோளை நிராகரித்தவர்.நான் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மின்னியலில் பட்டம் பெற்றேன்.குடும்ப வியாபரத்தில் நுழைந்த நான் என் சிந்தனைகளைத் திறம்படச் செலுத்தி வெற்றி கண்டு வருகிறேன்.நான் யார்?
5.லண்டன் மிருகக் காட்சி சாலை இழுத்து மூடப்படுவதை நிறுத்த 1 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் கொடுத்த NRI நான்.இப்போது எனது மகளின் பெயரிடப்பட்டுள்ள அந்த ஜூவில் ஒவ்வொரு வருடமும் நான் பார்ட்டி தருவது வழக்கம்.மற்றவர்களால் வள்ளல் எனவும் அழைக்கப்படும் நான் யார்?
26 July 2005
[+/-] |
சந்திரமுகி - ஒரு ஸ்டாடிஸ்டிக்கல் அனாலிசிஸ் |
23 சூலை 2005 - சந்திரமுகி 100 நாட்களை எட்டிப் பிடித்த நாள்.
திருட்டு VCD-க்கள்,மெகாசீரியல்கள்,டிக்கெட் கட்டண அதிகரிப்பு,திரையரங்குகளின் பராமரிப்புப் பிரிச்சனைகள்,சினிமாவை ஓரம் கட்டி விட்ட ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்கள் என்று ஆயிரம் தடைகளைத் தாண்டி 100 நாள் ஓடியிருப்பது ஒரு சாதனை தான்.ரஜினிகாந்தின் திரைப்படம் ஒரு தீம் பார்க்கினைப் போல.எப்போதல்லாம் அவரது படங்கள் வெளியிடப்படுகிறதோ,அப்போதெல்லாம் குடும்பத்துடன் வார இறுதியைக் களிக்க அவற்றைத் தேர்ந்தெடுப்பது என்பது காலம் காலமாக நடந்து வருவது.
கீழே தரப்பட்டுள்ள சந்திரமுகியின் சாதனை பல்வேறு ஊடகங்களினின்று தொகுக்கப்பட்டது.
1.மாயாஜாலில் 100 நாட்கள் ஓடிய முதல் படம்.
2.ஜூலு மற்றும் ஆஃப்ரிக்கானா மொழிகளில் டப் செய்யப்பட்ட முதல் படம்(ஜூலு - லான்ஸ் க்ளூஸ்னரின் தாய் மொழி,ஆஃப்ரிக்கானா- தென் ஆப்பிரிக்காவின் பிரதான மொழி)
3.இதன் மூலப் பிரதியின் மொழி பேசப்படும் கேரளாவில் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது.இதனுடன் வெளியான மோகன்லாலின் திரைப்படத்தையே ஓரம் கட்டிவிட்டது.
4.சுந்தரத் தெலுங்கிலும் சந்திரமுகியின் ராஜ்ஜியம் தான்.பத்துத் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிவிட்டது.
5.பொதுவாக,அமெரிக்காவில் இந்தியத் திரைப்படங்கள் இரு வாரங்களே ஓடும்;அதுவும் வார இறுதியில் 4 காட்சிகளும்,மற்ற நாட்களில் ஒரே காட்சியும் தான் காண்பிக்கப்படும்.ஆனால் சந்திரமுகி 5 வாரங்கள் ஓடியது அதுவும் தினசரி 5 காட்சிகளாக.
6.எல்லாவற்றிர்க்கும் மேலாயப் பல அனாலிஸ்களைப் பதிய வைத்துப் பல அனலிஸ்டுகளை உருவாக்கிய புண்ணியமும் இதற்குப் போய்ச் சேரும் :-)
25 July 2005
[+/-] |
கொட்டும் மழையும் தொட்டுக்க சூடான ஒரு காதல் கதையும் |
மழை வரும் போது நிழலுக்காக டீக் கடையைத் தவிர்த்து எங்கே வேண்டுமானாலும் ஒதுங்கலாம்.அதுவும் சூடான பருப்புவடை,போண்டா போடும் கடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.பாடி மாஸ் இன்டெக்ஸ்,ஒபேசிட்டி என்று ஜல்லியடிப்பவர்கள் மழைக்குப் பயந்து எங்கேயும் ஒதுங்கக் கூடாது.திரு,திருவென முழிக்காமல் கீழே தொடரவும்.
"அடச்சே,என்ன மழைப்பா??சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்களேன்"என்ற அந்த சிவப்புச்சட்டை ஆசாமியின் குரல் கேட்டு தான் நான் இந்தப் பூவுலகிற்கு மறுபடியும் திரும்பினேன்."குடை எடுத்திட்டு வரும்போதெல்லாம் மழை பெய்யறதேயில்லை.இன்னைக்கு மறந்து குடைய வெச்சுட்டு வந்தனோ போச்சு மழ கொட்டிட்டு இருக்கு" என்று அவர் பாட்டுக்கு மழைக்கு தன்னுடன் ஒதுங்கிய சக மனிதர்களுடன் பேச ஆரம்பித்து விட்டார்.நாங்கள் அனைவரும் ஒதுங்கிய இடம் "அஜீத் டீ-இஷ்டால்".அவருக்கு இடம் தந்துவிட்டு கடைக்குள் இருந்து வந்த வடை சுடும் வாசனையின் உபயத்தால் சொர்க்கலோகத்திற்கு மறுபடியும் பயணிக்க ஆரம்பித்தேன்.
வெளியே மழை பாட்டுக்கு வெளுத்துக் கொட்டிக்கொண்டிருந்தது."ஹூம்.ஆஹா....அட வடையில் இஞ்சி,கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டிருக்காங்க போலிருக்கு.இது வெங்காய பக்கொடா பொரிச்செடுக்கும் சத்தம் தான்.அய்யோ..இந்த போண்டா எல்லாம் குண்டு,குண்டா பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு" என்று எனது ஐம்புலன்கள் தகவல்களைச் சேகரித்து தங்த வண்ணம் இருந்தன.
"முழுவதும் வறுக்கப்பட்ட பொருட்களை நீ சுத்தமாத் தவிர்க்கணும்.குறிப்ப உனக்குப் பிடிச்ச நொறுக்குத் தீனிகளான வடை,சிப்ஸ்,பக்கோடா.அப்புறமா,நார்ச்சத்து இருக்கிற பொருளா நிறைய சாப்பிடணும்.என்ன தான் உன்னோட பாடி மாஸ் இன்டெக்ஸ் படி கரெக்டான வெயிட்னாலும்,ஜெனடிக்கலா உங்க வீட்ல அம்மா சைட் எல்லாருமே ஒபீஸ் தான்.ஹல்லோ நான் உன் கிட்ட தான் சொல்லீட்டு இருக்கேன்"என்ற அவளது அறிவுரை ஒரு மின்னலாய் வெட்டிச் சென்றது.அவளைச் சந்தித்தது முதல் என்னால் நிம்மதியா சாப்பிட முடியலை.போயும் போயும் ஒரு நியூட்ரீஷியனைக் காதலித்தது தப்பாப் போச்சு.
"சார்,ஒரு வடை எடுத்துக்கோங்க"என்ற சிவப்புச் சட்டை ஆசாமியின் தாராள மனப்பான்மைக்கு நன்றி சொல்லி வடையக் கவனமாய்த் தவிர்த்தேன்."என்ன ஆயில் உபயோகிக்கறாங்களோ?எப்பத்த மாவோ?வடை போடற ஆசாமி சுத்த பத்தமாத் தான் சுடுவானா?இந்தப் பாத்திரங்களைப் பார்த்தா இதெல்லாம் குளிச்சே மாமாங்கமாயிருக்கும் போல இருக்கே?வாசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.ஆனா,மேடமோட வார்த்தைகளை மெமரியில ஏத்திக்கோ"என்றது எனது மனசாட்சி.பார்வையை மழையின் பக்கம் திருப்பினேன்.இன்னமும் சோவென ஊற்றிக்கொண்டிருந்தது.
"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியுது சார்.பொது இடத்தில வந்திட்டா நாமும் சோதியில ஐக்கியம் ஆயிடணும்.தவிர,இது நான் ரெகுலராச் சாப்பிடற கடை தான்.சுத்தம் பத்தி எல்லாம் கவலப்படாம ரெண்டு வடய உள்ள தள்ளுங்க.உங்க வயசுக்கு கல்லு,மண்ணு சாப்பிட்டாக் கூட செரிமானம் ஆயிடும்.தங்கம், அந்தச் சட்டினியைக் கொஞ்சம் இங்கே தள்ளு"என்று வடையினை வதம் செய்ய ஆரம்பித்தார் சிவப்புச்சட்டை ஆசாமி.
"அவர் சொல்றதிலும் நியாயம் இருக்கு.வடை போட்ற ஆள் கூட நல்ல துணி தான் போட்டிருக்கான்.முகத்தையும் ஷேவ் பண்ணியிருக்கான்.அவன அசப்பில பாத்தா அல்ட்டிமேட் இஷ்டார் மாதிரிக் கூட இருக்கான்."என்று மனதில் நினைத்துக் கொண்டே தட்டின் மேல் ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்த வடைகளின் மேலே பார்வையை மையப்படுத்தினேன்.
"உங்க ஃபேமிலியில ஹார்ட் டிசீசஸ் வந்து மண்டையப் போட்டவங்க கவுன்ட் இதுவரைக்கும் நாலு.இதுக்கு அவங்களோட உணவு முறைகளும் சரியா உடலை மெயின்டெயின் செய்யாததும் தான் காரணும்னு உனக்கு நல்லாவே தெரியும் தான.இவ்ளோ ஏன் உங்க ராஜியக்காவுக்கு கல்யாணம் தள்ளிப் போறதுக்கு முக்கியக் காரணம் ஷீ இஸ் fat.அதனால நீ வந்து....."ஒரு மின்னல் இடியாய் முழங்கியது நினைவுக்கு வந்து தொலைத்தது.
"வடை சுடுறது மாதிரி அதை அரைக்கிறதும் ஒரு கலை தான்.முழுசா அரைபடாத பருப்பு பல்லுல பட்டுக் கடிபடும் போது இருக்கிற சுகம் இருக்கே.அட.அட.அதுவும் இந்தப் பருப்பு வடை கூடச் சின்ன வெங்காயச் சட்னி தொட்டுட்டு சாப்டா...ஆஹா...இத விட பெங்களூர் பக்கம் மத்தூர் வடைன்னு ஒண்ணு செய்வான் பாரு.அந்த வடையோட டேஸ்டுக்கு நம்ம சொத்தே எழுதிக் கொடுத்தாலும் தகும்"எனது ஆர்வமின்மையை உணர்ந்த சிவப்புச்சட்டை தற்போது பக்கத்திலிருந்த மற்றுமொரு வடைப் பிரியரிடம் உரையாடக் கொண்டிருந்தார்.வெளியே மழையின் வேகம் சற்றுத் தணிந்திருந்தது.
"சே.பாவம் இந்தக் கடைக்காரர்.மழை வந்ததனால சனங்க யாரும் வூட்டை வுட்டு வெளியே வரவே இல்லை.அதனால சரியாக் கூட்டமும் இல்லை;வியாபாரமும் இல்லை.இப்படி மழைக்கு ஒதுங்கினவங்களை நம்பித்தான் இவரோட இன்னத்த பொழப்பே இருக்கு.சுத்தம்,சுகாதாரம்,பி.எம்.ஐ,ஒபேசிட்டி,இன்டர்சிட்டின்னு கண்டதையும் போட்டுக் குழப்பாம ரெண்டு வடைய வாங்கி உள்ள தள்ளுவியா.."என்றது மனசின் குரல்.
"சரி ரெண்டு வடையச் சாப்பிட்டுடு நாளக் காலையில ஜாக்கிங்க்ல ஒரு ரெண்டு ரவுண்டு கூட்டிக்குவோம்.ஆனால்,இந்த சிவப்புச் சட்டைக்கு முன்னால வடை வாங்கிச் சாப்பிடரது நல்லா இருக்காது"என எண்ணிக்கொண்டே மௌனமாய் இருந்தேன்.மெல்லத் தூறலும் நிற்க ஆரம்பித்தது.சிவப்புச்சட்டையும் தனது சகாக்களுடன் கிளம்பியது.
"கிளம்பீட்டாங்கய்யா...கிளம்பீட்டாங்க"என்று மனசில் கூவிக்கொண்டே "ரெண்டு பருப்பு வடை,நிறையச் சட்னியோட குடுங்க"என்றேன்.
"வடையெல்லாம் ஆகிப் போச்சு."
"என்னது???"
"வடையெல்லாம் தீர்ந்து போச்சு சார்.நல்ல மழக்காலம் பாருங்க.எல்லாம் சூடு ஆறரதுக்கு முந்தியே வித்துப் போகுது.வேற ஏதாவது வேணுமின்னாக் கேளுங்க"என்றும் முழக்கமிட்டவாரே பால் பாக்கெட்டைப் பிரிக்க ஆரம்பித்தார் கடைக்காரர்.
"நல்ல வேளை வடை தீர்ந்திடுச்சு.எந்த எண்ணைல சுட்டதோ??எந்த மாவில சுட்டதோ?சன்டே-அன்னைக்குக் காலையில சீக்கிரம் எழுந்து ஓடரதே பெரிசு.இதில ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ராவா??தப்பிச்சேன்"என்று எச்சிலை விழுங்கியவாறே வடைச்சட்டியை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.
ஆகவே அன்பர்களே,மறுபடியும் இந்தக் கட்டுரையின் முதல் பாரவைப் படிக்கவும்.
20 July 2005
[+/-] |
ஆட்டுக்குத் தாடி எதற்கு??? |
ஆண்டவனின் படைப்பே விசித்திரமானது.எத்தனையோ வகை உயிரினங்களையும் படைத்துள்ளான்.அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விசித்திரமான தோற்றத்தை அளித்திருக்கிறான்.எந்த உறுப்பும் வீணாகப் படைக்கப்படவில்லை.
ஆடுகளுக்கு வால் மட்டுமின்றி தாடி கூட இருக்கிறது.ஆட்டுத் தாடியின் உபயோகம் பற்றிப் பல பேருக்குப் பல முறை சந்தேகம் வந்திருக்கும்.நம் தமிழ்நாட்டில் சிலர் அதனை ஒரு குறிப்பிட்ட பதவியுடன் ஒப்பிட்டு முனைவர் பட்டம் கூட வாங்கிருக்கின்றனர்.
சென்ற பிறவியில் ஆடாக இருந்து இப்பிறவியில் ஒரு எருமை மாடாய் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் எனது ஒரு சகாவிடம் இருந்து நான் பெற்ற ஆட்டுத் தாடி பற்றிய விளக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அதாகப்பட்டது,முதலில் தோன்றிய ஆட்டுக் கூட்டத்தில் எந்த ஒரு ஆட்டிற்கும் தாடி இல்லை.இந்த ஓநாய் இருக்கிறதே,அதற்கு எப்போதும் ஆடு பற்றிய நினைப்புத்தான்.ஒரு கொட்டாயில் சில ஆடுகளும் அவற்றின் குட்டிகளும் வசித்து வந்தன.தாய் ஆடு வெளியில் செல்லும் போது அதன் கதவை மூடிவிட்டுச் சென்றுவிடும்.குட்டிகள் கதவை உள் தாளிட்டுக்கொள்ளும்.தாய் ஆடு வந்து கதவைத் தட்டினால்தான் குட்டிகள் திறக்கும்இந்த ஆட்டுக்குட்டிகளை ஏமாற்றி இரையாக்கத் தீர்மானித்தது ஓநாய்.அதன்படி தாய் ஆடு இல்லாத சமயம் பார்த்துச் சென்று கதவைத் தட்டியது.ஆட்டுக்குட்டிகள் கதவை உடனே திறக்கவில்லை.
சற்று நேரம் தாமதித்தன.ஓநாய் தந்திரமாகக் குரலை மாற்றி,"இந்த ஓநாய்களின் தொல்லை பெரிசா இருக்கு!ஓநாய்கள் தொலைந்தால்தான் நிம்மதி.சீக்கிரமாய் கதவைத் திறங்கள்"என்றது.இந்த வார்த்தைகள் தாய் ஆடு அடிக்கடி சொல்லக்கூடியது.இதை அறிந்து வைத்திருந்த ஓநாய் இந்தத் தந்திரத்தைக் கையாண்டது.ஆட்டுக்குட்டிகள் நம்பி ஏமாந்து போயின.உண்மையினை அறிந்த தாய் ஆடு ஆண்டவனிடம் முறையிட்டதன் பேரில்,இறைவன் அவற்றின் முகத்தில் புதிதாய் ஒரு உறுப்பான தாடியினைப் படைத்தான்.அதோடு ஓநாயினால் விழுங்கப்பட்ட குட்டி ஆடுகளுக்கும் உயிர் கொடுத்தான்.
சில மாதங்கட்குப் பிறகு அந்த ஆடுகளைத் தாடியுடன் பார்த்த ஓநாய் நினைத்தது.ஆடுகளுக்கு தாடி எதற்காக?அதனால் எந்தப் பயனுமில்லையே!வேடிக்கைக்காக இருக்குமோ என்றெல்லாம் கற்பனை செய்தது.அதற்கு சிரிப்புதான் வந்தது.வழக்கம் போல் தாய் ஆடு இல்லாத நேரம் பார்த்துக் கொட்டாயின் கதவைத் தட்டியது.ஆட்டுக்குட்டிகள் கதவை உடனே திறக்கவில்லை.சற்று நேரம் தாமதித்தன.
"இந்த ஓநாய்களின் தொல்லை பெரிசா இருக்கு!ஓநாய்கள் தொலைந்தால்தான் நிம்மதி.சீக்கிரமாய் கதவைத் திறங்கள்"என்ற வழக்கமான டயலாக் அடித்தது ஓநாய்.புத்திசாலியான ஆட்டுக்குட்டிகள்,"யார் அது?இங்கே வந்து இந்த சந்து வழியாக் உன் முகத்திலுள்ள தாடியைக் காட்டு!"என்று ஓர் ஆட்டுக்குட்டி கூறியது.
ஓநாய் திகைத்துவிட்டது.இந்த ஆட்டுக்குட்டிகளை ஏமாற்ற முடியாது என்றும் தெரிந்து கொண்டது.அது மட்டுமா?ஆட்டுக்கு மட்டும் தாடி இருப்பது இதற்குத் தானா என்றும் புரிந்து கொண்டது.
18 July 2005
[+/-] |
எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் ஒரு காதல் |
"நல்லாத் தெரியுமா,அது அவ தான்னு" என்றவாரே தண்ணீரை விழுங்கினான் சர்த்தன்.எங்கள் அலுவலக மின்னஞ்சல் பயனர் உருவாக்க(Mail id creation) விதிமுறைப்படி அவனது ஸ்ரிநிவாசன் அர்த்தனாரி(Srinivasan arthanari) என்ற முழுப்பெயர் 8 எழுத்துகளுக்கு சுருக்கப்பட்டு சர்த்தன் ஆகினான்.
"ஆமாம் சர்த்தன்.அது அவளே தான்.அந்த லெமன் எல்லோ கலர் சூடிதார் அவ்ளோடோடது தான்.எனக்கு நல்லாவே தெரியும்"இது அடியேன்."தென் வாட்.நீ போய் பேசியிருக்கணும் சுட்.அல்மோஸ்ட் 4 வருஷம் ஆகப் போகுது.இன்னும் பழச நெனச்சுட்டு இருக்கறது வேஸ்ட்.என்னமோ போ"என்றவாரே எங்கள் மதிய உணவுக்குப் பின்னால் வழக்கமாகப் பயிலும் சிறு நடைக்குத் தயாரானோம்.
"ஏன் சுட்.அந்தப் பொண்ணு இப்பொ உன்னப் பார்த்தா ஞயாபகம் வச்சிருப்பாளா??தேர்ட் ஃப்ளோர் காஃபிடேரியால பார்த்தேன்னு தான சொன்னே.நாம இன்னைக்கு சாயங்காலம் ஸ்னேக்ஸ் சாப்பிட அங்கே போவோம்.கண்டிப்பா ஷீல் கம் தேர்.ஏன்னா கழுதை கெட்டா குட்டிச்சுவர் வந்து தானே ஆகணும்"என்று கலாய்த்துக் கொண்டு சென்ற சர்த்தனின் பேச்சுக்கு நான் செவி மடுத்தாலும்,நினைவெல்லாம் அந்த லெமன் எல்லோ தேவதை பற்றியே இருந்தது.உத்யோகப் பளுவினால் மேற்கொண்டு நடையைத் தொடர முடியாமல் இருக்கைகளுக்குத் திரும்பினோம்.
அது நிவேதா.மூன்றாண்டுகளுக்கு நாங்கள் ஒலம்பஸ் அருகில் வசித்த போது எங்கள் வீட்டுப் பக்கத்தில் குடியிருந்த சத்தியமூர்த்தி அங்கிளின் இரண்டாவது உயிர்.எங்கள் வீட்டுப் பக்கம் குடியிருந்ததும்,காலெஜில் எனது ஜூனியராய் இருந்ததும் எங்கள் நட்பு வளரக் காரணமாயிருந்தது.
நிவேதா தனது வகுப்புத் தோழனைக் காதலிப்பது தெரியாமல் அவள் மீது மனத்தை செலுத்தியது என் தப்புத் தான்.ஆனால் உண்மை தெரிந்ததுமாவது நான் அவள் மீதான என் நாட்டத்தினைத் திசை திருப்பியிருக்க வேண்டும்.என்னை நம்பகமானவன் என்று நம்பிச் சொன்ன இந்த விஷயத்தை அவர்கள் வீட்டில் போட்டுக் கொடுத்தது,நிவேதாவின் காதலை சத்தியமூர்த்தி அங்கிள் பிரித்தது,நாங்கள் சொந்த வீட்டுக்குக் குடி பெயர்ந்தது,நான் அந்த வருஷம் வேலை கிடைத்து மும்பாய் சென்றது...சே எவ்ளோ நடந்துடிச்சி இந்த மூணு வருஷத்தில...
இன்னமும் மறக்க முடியவில்லை.நான் தான் அந்த விஷயத்தை அவளது தந்தையிடம் போட்டுக் கொடுத்தேன் என்று தெரிந்ததும்,நிவி என்னைப் பார்த்த அந்தக் கடைசிப் பார்வை.அந்தக் குற்ற உணர்ச்சினால் நான் மனம் புழுங்காத நாட்களே இல்லை என்று சொல்லலாம்.
"சே இன்னைக்குப் பார்த்து நான் என்னோட 6610 கொண்டு வர்லை.மோகினி அடிக்கரதப் பத்தி கேள்விப்பட்டுருக்கேன்.இன்னைக்கு நேர்லயே பார்த்திட்டேன்.சுட்,நம்ம ரெட்டி சொல்ரான்.அவனுக்கு உன்னோட லெமன் எல்லோவைத் தெரியுமாம்"சர்த்தன் என்னை எழுப்பிய போது மணி 3.30.
"சே..சே..ஐ வாஸ் ஜஸ்ட் திங்கிங் அபௌட் த அப்ரய்சல்"என்றவாறு இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.
சர்த்தனுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியும்.ஒரு நம்பிக்கைத் துரோகத்தினால் என் மனம் படும் வேதனையும் தெரியும்."சுட்,பழச நினச்சுக் கவலப் பட்டுட்டு இருக்கிறதுல எந்த லாபமும் இல்லை.இந்த உலகத்திலே தப்பு செய்யாத மனுஷனே கிடையாது.உன்னோட பொசிஷன்லா யார் இருந்தாலும் அப்படித் தான் செஞ்சிருப்பாங்க.பழச மறந்திட்டு இன்னைக்கு மேடம் கிட்ட போய் மனசு விட்டு பேசு.நான் நினைக்கிறேன் அந்த ஆண்டவனே உன்னோட வேதனையைப் புரிஞ்சிட்டு தான் மேடத்தை இங்கே அனுப்பியிருக்கான்.கம்மான்.சியர் அப் மேன்."
"என்கு நிவேதாவைத் தெரியும்.ஷீ இஸ் ஸ்டயிங் வித் ஹர் பேரென்ட்ஸ் இன் 13த் மெயின்"இது அதே ஏரியாவில் தன் மாமனாரின் வீட்டை வைத்திருக்கும் ரெட்டி,என் மற்றுமொரு சகா.நாங்கள் கேஃப்டீரியாவினுள் நுழைந்த சிறிது நேரம் கழித்து வந்தது எலுமிச்சை மஞ்சள் நிற தேவதை.இரண்டு டீ மற்றும் ஒரு காபிக்குப் பிறகு என்னை சற்று தைரியப்படுத்திக் கொண்டு நான் அவள் அருகிலே சென்றேன்.சர்த்தனையும்,ரெட்டியையும் கழற்றி விட்டுத்தான்.
"ஹல்லோ நிவேதா,என்னைத் தெரியுதா???"
"ஹல்லோ சுட்.ஓ வாட் எ சர்ப்ரைஸ்.உங்கள மறக்க முடியுமா?? எப்படி இருக்கீங்க?? நேத்து ஈவினிங் தான் உங்க க்ளாஸ் வெண்ணிலா அக்காவைப் பார்த்தேன்.ஷீ டோல்ட் மீ தட் யூ ஆர் வொர்க்கிங் ஹியர்.நான் இன்னைக்குத் தான் இங்கே ஜாயின் செஞ்சேன்.வெட்டியா ரொம்ப நேரம் உக்கார முடியலை.சோ,மதியத்தில இருந்து இதோட மூணு வாட்டி கேஃப்டீரியா வந்தாச்சு.என்ன அமைதியா இருக்கீங்க??"
"ஒண்ணும் இல்லை நிவி.க்ளேட் டு மீட் யூ.ரொம்ப நாள் ஆச்சில்ல பார்த்து.வீட்டுல எல்லாம் நல்லா இருக்காங்களா? எனக்கும் வேலை ஒண்ணும் ஜாஸ்தியில்லை இன்னைக்கு."வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தோம்.
இருவருக்கும் இடையில் இருந்த பனித்திரையை உடைக்க முடிவு செய்து ஆரம்பித்தேன்,"என்னை மன்னிச்சிரு நிவி.நான் அன்னைக்கு உங்க அப்பா கிட்ட உங்க விஷயத்தை சொல்லாம இருந்திருக்கணும்.என்னை முழுசா நம்பி உன்னோட காதலைப் பத்தி நீ சொன்ன.ஆனா,உனக்கு நான் நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டேன்.இத்தனை நாளும் இந்த விஷயத்தை மனசில போட்டு புழுங்கிட்டு இருந்தேன்.ஐம் சோ சாரி."
இதனைக் கேட்டதும் சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தது தேவதை."அய்யோ சுட்,இன்னுமா அதை நினைச்சு ஃபீல் செஞ்சிட்டு இருக்கீங்க.எனக்கும் கொஞ்ச நாள் கஷ்டமா இருந்தது.அப்புறமா மத்த விஷயங்கள் ஆக்கிரமிச்சுட்டதால அந்த ஃபீலிங்க்ஸ் எல்லாம் போயிடுச்சு.
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா,நான் லவ்வீட்டு இருந்த அந்த பாலா அவங்க மாமா பொண்ண நாங்க ஃபைனல் இயர் படிக்கும் போதே கல்யாணம் செஞ்சிட்டான்.இந்தக் கல்யாணம் சின்ன வயசிலேயே அவங்க வீட்டுல பேசி வச்சதாம்.அவனுக்கு அந்த விஷயம் தெரிஞ்சும் என்னை லவ் செஞ்சிருக்கான்.கேட்டா எப்படியும் உங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க-ங்கற தைரியத்தில தான் என்ன லவ் செஞ்சேன்னு சொல்றான்.இவனப் போய் நான் நம்பியிருக்கேன் பாருங்க.
இதெல்லாம் தெரிஞ்ச பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெளிஞ்சேன்.இதுக்கு அப்புறமா இதப் பத்தி உங்க கிட்ட மனசு விட்டு பேசணும்னு கூட நினைச்சேன்.பட்,நீங்களோ மும்பாய் போய்ட்டீங்க.நானும் ப்ரொஜெக்ட் அது இதுன்னு ரொம்ப பிசி ஆகிட்டேன்.
இந்தச் சுடிதார் ஞயாபகம் இருக்கா??இன்னைக்கு இங்கே வரும் போது எப்படியாவது மீட் செய்வேன்னு மனசில ஒரு குருவி சொல்லிச்சு.அதனால தான் பழசானாலும் பரவால்லைன்னு இதையே போட்டுட்டு வந்தேன்."
என்று தொடங்கிப் பல விஷயங்களைப் பேசிவிட்டும்,எங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களைப் பரிமாரிக் கொண்டும் இருக்கைக்குத் திரும்பும்போது மணி 5.30.எல்லாவற்றையும் கேட்டு விட்டு "அப்புறம் என்ன சுட்.நிவேதா உன் மேல வச்சிருந்த அன்பு,நம்பிக்கை எல்லாம் கூடியிருக்கு.ஏஸ் டிஸ்கஸ்டு இந்த வாரம் சனிக்கிழமை அவங்க வீட்டுக்கு போய்ட்டு வா.நான் அப்பவே சொன்னேன் இல்லையா?நத்திங் டூ வொர்ரி.காலேஜ் படிக்கும் போது தான் மிஸ் பண்ணிட்ட.இந்த முறையாவது உன் மனசில இருக்கறத சொல்லிடு..."என்றார் சர்த்தன்.
என்ன செய்யலாம்??
நீங்களும் சொல்லுங்களேன்...
15 July 2005
[+/-] |
குழலினிது யாழினிது என்பர்... |
ஷூ பாலீஷ் டின்னை சீப்பால் ஓங்கி ஓங்கித் தட்டவும்.(சுமார் 101 முறை).
கதவு மேல் ஏறுக.
அங்கிருந்து "ஊய்" என்ற சத்தத்துடன் கீழே குதிக்கவும்.(இது மாதிரி நாலு முறை செய்யவும்)
"மே.மே.மே","லொள்,லொள்" என்று மாறி மாறி இரண்டு நிமிடங்களுக்கு ஊளையிடவும்.
ஆறு குட்டிக்கரணங்கள் போடவும்.
நாக்கினை வளைத்து மூக்கு நுனியினைத் தொடவும்.
வீட்டில் சப்பாத்தி தயாரிக்கச் சொல்லி ஒரு சப்பாத்தியினை வலது கை ஆள் காட்டி விரலில் மாட்டிக் கொண்டு விஷ்ணு சக்கரம் போலே சுற்றவும்.
ஊதுவத்தியை ஏற்றி அதை வாய்க்குள் நெருப்புடன் வைத்துப் புகையை ஊதவும்.(சுமார் பத்து நிமிடங்களுக்கு,அல்லது நாக்கில் நாலு தடவை சுட்டுக்கொள்ளும் வரை)
ஷேவ் செய்து கொள்ளும் சோப்பை முகமெல்லாம் தடவிக் கொண்டு வீட்டுக்குள் குதிக்கவும்.
சைக்கிள் சக்கரத்தைப் பலம் கொண்ட மற்றும் சுற்றி அதில் ஒரு சன்ன மரக்கட்டையைக் கொடுக்கவும்.(மூன்று ஸ்போக் உடைகிறவரை இதனை செய்யவும்)
மனைவியின் தலையில் ஓங்கிக் குட்டவும்.
உங்கள் தலையில் 13 குட்டுகள் குட்டிக் கொள்ளவும்.
ஓட்டையிருக்கும் சாவி ஒன்றை எடுத்து மூச்சைப் பிடித்துக் கொண்டு அதில் தெரிந்த சினிமாப் பாட்டை விசில் அடிக்கவும்.
அரை டஜன் கொக்கொ கோலா வாங்கி வந்து அதனை ஓப்பனர் மூலம் உடைத்துக் காட்டவும்.
மாடு மாதிரி கத்திக் கொண்டு ஆனால் தவளை மாதிரி தத்தித் தத்தி வீட்டினுள் 30 ரவுண்ட் வரவும்.
கட்டட வேலை நடந்து கொண்டிருக்கும் பக்கத்து ஃப்ளாட்டில் போய் ஏணி இரவல் வாங்கி வந்து வீட்டின் நடுவே வைக்கவும்.ஒரு கயிற்றில் பெட் பாட்டிலைக் கட்டி ஏணியின் மேல் படியில் போட்டு,கீழேயிருந்து இழுக்கவும்.
இவ்வளவு செய்தும் உங்களிடம் விட்டு விட்டுச் செல்லப்பட்ட பக்கத்து வீட்டுக் குழந்தை தனது அழுகையை நிறுத்தவில்லையென்றால்,நீங்களும் சேர்ந்து அழுங்கள்.வேறு வழியே இல்லை....
தகவல் உபயம்:புதியதாய்த் திருமணமாகியிருக்கும் என் சோக்காளி
14 July 2005
[+/-] |
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்... |
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
"அம்மா.ரொம்ப நாளா இந்த பட்டுப் புடவையை ட்ரை வாஷ் பண்ணணும்னு சொல்லீட்டு இருந்தீங்களே..." என்று பெண்பிள்ளை ஆரம்பித்தால் அடுத்து வரப்போவதைத் தாராளமாக ஊகிக்கலாம் - "அந்தப் பட்டுப்புடவையும் திருமண பஃபே விருந்தில் கலந்து கொண்டு பசியாற்றியது" என்று.
அதே போல இவற்றைக் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.
1.கல்யாணத்திற்குக் கெளம்பரப்ப தான் ஞயாபகம் வந்திச்சி இன்னைக்கு ஞயாயித்துக் கிழமைன்னு.இந்த ஊர்ல எவன் ஞயாயித்துக் கிழமையன்னிக்கு கடைய சீக்கிரமே தொறக்கப்போரான்... ஹி.ஹி..
2.நம்ம சூலூர் பிரேஞ்சில உங்களப் போல ஒரு அனுபவஸ்தர் இல்லாமத் தான் குட்டிச்சுவர் ஆகிப்போச்சு.
3.ஸ்போர்ட்சிலயெல்லாம் உங்க பையன் தான் ஸ்கூல்லயே முதல்..
4.அடடா..நீங்க சொல்ரது சரிதான் சார்.ரொம்பத்தான் ஒழுகுது.ரிப்பேர் செஞ்சிட வேண்டியது தான்.
5.ஏம்பா.உங்க பேனா உடையவே உடையாதுன்னு சொல்லீட்டு இருந்தீங்களே...
6.இஸ்திரிக்கு போட்டிருந்த அந்த புளூக் கலரு கட்டம் போட்ட சட்டை புதுசுங்களா???
7.ஆமாம்.காவிக்கலர்ல இந்தச் சேர்ல தான் இருந்தது.நீங்க தான் அந்த கர்ச்சீப்பைப் போட்டு வச்சிருந்தீங்களோ??
8.என்ன சார்.நீங்க ஏறும் போதே தெளிவா சொல்லியிருக்காலம்ல இன்னர் ரிங் ரோடு தான் போகணும்னு.
9.உப்பெல்லாம் புக்ல சொல்லியிருக்கிற அளவு தான் போட்டேன்.ஆனாக்கூட....
எங்க மேலே சொன்ன மேட்டர்கள்ள மெய்ப்பொருள் என்ன என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்...
[+/-] |
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே... |
எப்போதெல்லாம் வெறுமையும்,சோகமும் கோடை வெயிலாய் என்னைப் பீடித்ததோ அப்போதெல்லாம் நான் தேடி ஓடும் நிழல்களில் இந்தப் பாடலும் ஒன்று.
நல்ல கருத்தாழம் நெஞ்சைத் தொடும் பாடல் வரிகள்.
வரிகளுக்கு மதிப்பளித்து அவற்றை அமுக்காது இயல்பாய்ப் பின் தொடரும் இசை.
கேட்டவர் மனதில் கேட்ட உடனேயே பாடலை நடவு செய்யும் குரல்.
எல்லாவற்றிற்கும் மேலாக பாடல் படம் ஆக்கப்பட்ட விதம்.
இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னால் ஒரு நேர்காணலில் இந்தப் பாடலானது முன்னர் சேரன் பாடுவது போன்று இருந்ததாகவும் பின்னர் அது சினேகாவிற்கு ஒதுக்கப்பட்டது எனவும் சினேகா குறிப்பிட்டிருந்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடம் ஆக்கப்பட்டது,தென்னிந்தியத் திரை உலகிற்கான ஃபிலிம்பேர் விருதுகளில் தமிழில் சிறந்த இசை அமைப்பாளர் விருது பெற்றது என்று தொடரும் இப்பாடலின் சாதனைகளில் ஒரு மகுடமாய் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த பின்னணிப் பாடகி விருதினையும்,சிறந்த பாடலாசிரியர் விருதினையும் பெற்றுள்ளது இந்தப்பாடல்.
சித்ரா,பா.விஜய் மற்றும் சேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
மனிதா! உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்அவமானம்,படுதோல்வி எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்,அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!
08 July 2005
06 July 2005
[+/-] |
வீட்டு தோசையும் எனது ஒரு வார இறுதியும் |
முன் குறிப்பு:இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் வீட்டு தோசை என்றழைக்கப்படும் வஸ்துவானது வீட்டில் மட்டுமல்ல காடு,மேடுகளில் கூட செய்யலாம்.இதன் மூலப்பொருளான கோதுமை ஆங்கிலத்தில் வீட் என்று அழைக்கப்படுவதால் தமிழ் தெர்யாத தோசைப் பிரியர்களின் சௌகரியத்திற்காக வீட் தோசா என நாமகரணம் சூட்டப்பட்டது.பின்னர் காலப்போக்கில் அதுவே மறுவி வீட்டு தோசை என்றானது.
நம்ம ஊரு ஆளுங்க சமையல் விஷயத்தில எப்பவுமே புதுமை விரும்பிங்க."கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்"ல மணிவண்ணன் சொல்ற மாதிரி நம்ம ஊர்க்காரவங்க புதுசா ஒரு பூவைப் பார்த்தா ஒண்ணு நூலால் கட்டி தலையில வச்சிக்குவாங்க இல்லையின்னா மாவில பிரட்டி எண்ணையில பொறட்டி எடுத்துடுவாங்க.போன வாரம் இங்கே ஒரு ஹோட்டல்ல "தோசா ஃபெஸ்டிவல்" நடக்குதுன்னு என்னோட ஒரு சோக்காளிக்கு எப்படியே தகவல் வந்திருக்கு.எப்பவுமெ வெளினாட்டு அலகிகளப் பார்க்க மட்டுமெ TOI-ஐப் புரட்டற ஆள் இன்னைக்கு இந்த விளம்பரம் வந்திருக்கான்னு பேப்பரைத் தலைகீழா அலசினான்.எப்படியோ அந்த உணவகத்து முகவரியும் கண்டுபிடிச்சிட்டான்.மக்கா நாள்,சனிக்கிழமை ராவைக்கு அந்த ஹோட்டலுக்கு போறதா முடுவு செஞ்சோம்.
உங்களுக்குத் தான் சனிக்கிழமை ட்ராஃபிக்-ஐப் பத்தி நல்லாத் தெரியுமே.எப்பேர்ப்பட்ட வண்டியானலும் ஆமை மாதிரி ஊர்ந்து செல்லும் ட்ராஃபிக் இருக்கிற ஏரியாவுல இருந்து அந்தப் பலகாரக் கடை.ஒரு வழியா அந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேரும்போதே மணி 9.15 ஆகிடுச்சு.உள்ளே போனவுடனே எங்க எல்லார்த்துக்கும் மயக்கம் வர்ர மாதிரி ஆகிடுச்சு.செமத்தியான கூட்டம்."தம்பிகளா,சனி,ஞாயித்துக் கிழமைகள்ள இங்ஙன யாருமே அடுப்பு பத்த வைக்கிரது இல்லை போல இருக்கு"ன்னு ஒரு வயசான சோக்காளி பொலம்பிட்டே அனாதையா இருந்த ஒரு டேபிள் பக்கமா எங்களை அழச்சிட்டு போனார்.
வெயிட்டர் வந்து ஆர்டர் எடுக்கும் போது தான் அந்தக் கூத்து நடந்தது.என் கூட வந்த தோஸ்துகள்ள ஒருத்தர் கொஞ்சமா சோமபானம் ஏத்தியிருந்தார்.அவர் கேட்ட வீட் தோசை தீர்ந்து போச்சுன்னார் வெயிட்டர்.வீட்டு தோசை இல்லைன்னா என்ன எனக்குக் காட்டு தோசை கொண்டு வான்னு ஒரே அலப்பர.அவர சமாதானப்படுத்த நான் தெரியாத்தனமா வீட் தோசை எல்லாம் வீட்டுல தான் சாப்பிடணும்.நான் உங்களுக்கு நாளைக்கு நம்ம வீட்டுல செஞ்சி தர்ரேன்னு சொல்லி மெதுவா சமாதானப் படுத்தினேன்.அவரோட ஞாபகசக்தி மேலே எனக்கு அபார நம்பிக்கை.
ஒரு வழியா வாழப்பழ தோசை,அன்னாச்சி தோசை,தேங்காய் தோசை,பொடி தோசை அப்படின்னு வித விதமா ரவுண்டு கட்டி சாப்பிட்டு விட்டு வூடு வந்து சேர்ந்தப்போ மணி 11.30 ஆயிருச்சு.நம்ம தோஸ்த்தோ தூக்கத்தில எல்லாம் "வீட்டு தோசை,வீட்டு தோசை"ன்னு பொலம்ப ஆரம்பிச்சிட்டார்.
மக்கா நாள் சன்டே-ங்கறதால எல்லாரும் சூரியனுக்கு மரியாத செலுத்தும் விதமா 11 மணிக்கு எந்திரிச்சோம்.ஒரே அடியா சாப்பாடு செஞ்சு சாப்பிடடலாம்னு எல்லாம் பேசிட்டு இருந்தப்போ தான் நம்ம தோஸ்த்து வீட்டு தோசை பிரச்சினையைக் கெளப்பினாரு.செம்ம ரகளைக்கு அப்பறமா எல்லாம் சேர்ந்து ஒரு முடுவுக்கு வந்தாங்க.அந்த முடுவு என்னன்னா அதாகப்பட்டது நான் வீட்டு தோசை ஊத்தணும்;அதுக்குத் தொட்டுக்க பொடியை நம்ம சோக்காளிகள்ள ஒருத்தர் போய் கடயில வாங்கிட்டு வருவார்.
இதுல என்ன ஒரு கொடுமைன்னா எனக்கு அப்போ வீட்டு தோசைன்னா எப்படி இருக்கும்,அதை எதில செய்யிறதுன்னெல்லாம் தெரியாது.நான் பாட்டுக்கு ஏதோ ஒரு மாவில தோசை சுட்டிடலாம்.ஆனா என் கூட இருக்கிற சோக்காளிக எல்லாம் கோக்கு மாக்கனவிங்க.அவிங்க கிட்ட பொய் சொல்லைத் தப்பிக்க முடியாது.அப்புறம் அதுக்கு தண்டனையா எங்கியாவது கூட்டிட்டுப் போய் தீர்த்தவாரி வைக்கணும்.அப்பாலிக்கா,நம்ம கூட வேலை செய்யற ஒரு தாய்க்குலத்து கிட்ட பேசினப்புரம் தான் தெரிஞ்சது வீட்டு தோசைன்னா கோதுமை தோசைன்னு.அப்படியே அவிங்க கிட்ட அந்த தோசை-யோட ரெசிப்பி கேட்டு வாங்கிட்டேன்.எல்லா மூலப் பொருள்களையும் தயார் பண்ணிட்டு களத்தில குதிச்சேன்.
இப்போ தோசை ஊத்த மாவு ரெடி செஞ்சாச்சு.ஆனா தண்ணி மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கிற மாதிரியில்ல இருக்கு.சரி.மாவு கொஞ்சம் போட்டுட வேண்டியது தான்.அய்யோ.என்ன இது மாவு கொஞ்சம் ஜாஸ்தியாப் போன மாதிரியில்ல இருக்கு.சரி தண்ணி கொஞ்சம் ஊத்திட வேண்டியது தான்.இப்படி 2 கிலோ மாவைப் போட்டு தோசை மாவ ரெடி செஞ்சாச்சு.தோசையும் நல்லாவே வந்தது.எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.
ஆனா ஒண்ணு மட்டும் எனக்கு புரியலைங்க.முந்தா நேத்து மத்தியானம் சாப்பிட்டப்ப எல்லாம் நல்லா இருக்குண்ணாங்க.எப்பவுமே தோசை சாப்பிடாத ஆளு கூட ரெண்டு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிட்டாங்க.முந்தா நேத்து ராவையில சாப்பிட்டப்பவும் ஒருத்தரும் ஒண்ணும் சொல்லலை.நேத்திக்குக் காத்தாலை வீட்டு தோசை சாப்பிட்டப்பவும் எல்லாப் பய புள்ளையும் கம்முன்னு தான் இருந்திச்சு.நேத்திக்கு ராவைக்கு சாப்பிடரப்ப மட்டும் எல்லாம் உம்முன்னு இருந்தாங்க.அதென்னமோ இன்னைக்கு கார்த்தால சாப்பிடரப்ப அந்த வீட்டு தோசை கேட்ட சோக்களி அழுவ ஆரம்பிச்சுட்டாரு.மத்தவிங்க எல்லாம் அவரைத் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.என்ன இனிமே சமயல் ரூமுக்கு வரக் கூடாதுண்ணும் சொல்லிட்டாங்க.எனக்குத் தான் ஒண்ணுமே வெளங்கல.
அவிங்கள விடுங்க.இன்னைக்கு ராத்திரி சாப்பாட்டுக்கு என்ற வூட்டுப்பக்கம் வாங்க.உங்களுக்கு சூடா ஸ்பெஷலா வீட்டு தோசை சுட்டு தர்ரேன்.
அட,என்னப்பா ஓட ஆரம்பிச்சிட்டீங்க.அட நான் என்ன விஷம் சாப்பிடவா வரச் சொன்னேன்.வீட்டு தோசை சாப்பிடத்தானே வரச்சொன்னேன்.
05 July 2005
[+/-] |
சில சமயம் காதலையே.... |
"மூணு பேர்த்த லவ் பண்றானாம்.கடைசியில நாலாவதா ஒரு பொண்ணக் கல்யாணம் செஞ்சிக்கிறானாம்.என்ன கத இது.கனிகாவுக்குப் பதிலா சினேகாவைக் கல்யாணம் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும் இல்லையா அண்ணா??"என்று கேட்ட எனது தங்கை(cousin sister)அப்போது படித்துக் கொண்டிருந்தது ஏழாம் வகுப்பில்.
நாங்கள் ஆட்டோகிராஃப் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது தான் மேற்கண்ட சம்பாஷனை நடந்தது.நானும் சித்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம்."நந்து,படத்தில மூணு பேர சேரன் லவ் பண்ணல.சினேகா அவரோட ஃப்ரெண்ட் மட்டுமே" என்ற எனது பிரசங்கத்தினை ஆரம்பித்த போது,சித்தி மெல்ல நந்தினிக்குத் தெரியாமல் டாபிக்கை மாற்றுமாறு சைகை காட்டினார்.
வீட்டுக்கு வந்தபின் சித்தி "நந்தினிக்கு இந்த உணர்வு பூர்வமான விஷயங்கள் தெரிய வர இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலாம்.நேத்து கூட ஒரு ஹிந்தி படத்தை பார்த்துட்டு இப்படித்தான் ஏதோ சொல்லிட்டு இருந்தா.சினிமா பார்த்து எதக் கத்துக்கறாங்களோ இல்லையோ இதப் பத்தி மட்டும் நல்லாத் தெரிஞ்சுக்கறாங்க.ஆமாம்,நீ கூட புது வசந்தம் படம் வந்த புதிசில அதைப் பார்த்திட்டு சித்தாரா முரளியை ஏன் கல்யாணம் பண்ணலைன்னு கேள்வியாக் கேட்டிடு இருப்பியே,அதெல்லாம் இப்போ ஞாபகம் இருக்கா??
அது சரி.படம் பார்த்திட்டு இருந்தப்போ ஒரு சில காட்சிகள்ள நீ லேசா கண்ணக் கசக்கின மாதிரித் தெரிஞ்சது.என்ன உன்னோட மல்லிகா,கோபிகா எல்லாம் ஞாபகத்திற்கு வந்திட்டாங்களோ" என்றவாறு என்னிடம் போட்டு வாங்க ஆரம்பித்தார்.
நான் மெல்லமாய்ச் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டி வைத்தேன்.
காதல் என்ற உணர்வு ஒரு முறை கூட தனது வாழ்வில் வாராத மனிதர் இருக்க முடியாது.காதல் எனப்படுவது யாதெனின்....ஹல்லோ.யாரும் ஓடிடாதீங்க.என்னோட கதை எல்லாம் போட்டு நான் உங்களைத் துன்பப்படுத்த விரும்பலை.
அது சரி,காதல்னா என்ன???
தான் அன்பு செலுத்தற சக மனிதனை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்.எதனையும் எதிர்பாராமல் பேரன்பு செலுத்துதல்.எங்கேயோ படிச்சது இப்போ ஞாபகத்துக்கு வருது.காதலிக்கும் போது நாம நம்மளோட வீட்டின் முகப்பை மட்டுமே நமது சகாவிற்குக் காட்டுவோம்.நம்ம வீட்டிலும் கழிப்பறை இருக்குங்கறத திருமணத்திற்குப் பிறகே அவங்க அறிய அனுமதிப்போம்.
என்னோட கல்லூரிக்காலங்களில் ஆயிரம் காதல் கதைகள் பார்த்திருப்பேன்.அதில மறக்கமுடியாத ஒரு கதை தான் இப்போ நான் உங்க கூட பகிர்ந்துக்கப் போறது.எந்த ஒரு உறவும் சிறந்து விளங்க அடிப்படைப் பொருளாய் அமைவது ஒருவர் மற்றவரிடத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கையே. இந்த சித்தாந்தத்தின் மேல நான் வச்சிட்டு இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கைக்கு காரணமான நிகழ்வு தான் இது.
என்னோட கிளாசில ஒரு பையன்.அவன் பேரு ஈஸ்வர்னு வச்சிக்குவோம்.ஒரு பொண்ணு.அந்தம்மா பேரு பிரேமான்னு வச்சிக்குவோம்.ரெண்டு பேரும் முத வருஷம் தொட்டே ரொம்ப ஆழமா லவ்வீட்டு இருந்தாங்க.DDLJஐ பார்த்த நம்ம ஹீரோ சார் அதில வர்ர மாதிரி ஹீரோயினி வீட்டுல அவிங்க அப்பா,அம்மா,தங்கச்சி,கஸினுக,ஒண்ணு விட்ட சித்தப்பா,ரெண்டு விட்ட அத்தை இப்படி எல்லார்த்தையும் சினேகம் பண்ணிட்டாரு.இதில அடிக்கடி ,"ப்ரேம்ஸ் வீட்டுக்கு நான் மருமகனாப் போகப் போறது கிடையாது.பையன் இல்லாத வீட்டுக்கு ஒரு பையனாத்தான் போகப் போறேன்" அப்படின்னு டயலாக் வேற விடுவாரு.
ஹீரோயினி வீட்டிலயும் இவிங்க மேல ஒரு நல்ல மதிப்பு வளர்ந்திட்டு வந்தது.
இப்படியா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா அவிங்க காதல் சோதி வளர்ந்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சது.எங்க கல்லூரியில யாரைக் கேட்டாலும் இந்த ரெண்டு பேரும் தான் தங்களோட ஆதர்ஷ காதல் சோடிகள்னு சொல்லுவாங்க.ஹூம் அதெல்லாம் ஒரு காலம்.
எஞ்சினீயரிங் முடிச்சு எல்லாம் திசைக்கு ஒரு பக்கமாப் பிரிஞ்சு போய்ட்டோம்.நாங்க முடிச்ச வருஷத்தில தான் அமெரிக்க ரெஸிஷன்,டாட் காம் பர்ஸ்ட்,கிரகம் புடிச்ச செப்டம்பர் 11 அப்படின்னு தொடர்ச்சியான துன்பியல் நிகழ்வுகள்.எந்த சாஃப்ட்வேருக் கம்பெனியும் ஃப்ரஷர்களை எடுக்கலை.நாங்க ஒரு 10 பேர் கேம்பஸில் தேர்வாகியிருந்ததால் உடனே வேலைக்குச் சேர்ந்துட்டோம்.நம்ம ஹீரோ வேலை தேடி ரொம்பக் களைச்சிப் போயிருந்தார்.ஹீரோயினி ஒரு நிகர் நிலை பல்கலைக்கழகத்தில முதுகலைப் படிப்புக்கு சேர்ந்துட்டாங்க.ஹீரோவை ரொம்பவும் மோட்டிவேட் செஞ்சாங்க.
பாவம் ஹீரோ சார்.விதி விளையாட அவர் என்ன பண்ணுவார்.வீட்ல திடீர்னு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள்,தனக்கு இன்னும் வேலை கிடைக்காத சூழ்நில.தன்னோட வயதொத்த சினேகிதிமார் எல்லாம் கல்யாணம் கட்டீட்டு அமெரிக்கா,ஐரோப்பான்னு பறக்கரதப் பார்த்து முதுகலை படிக்கப் போன நம்ம ஹீரோயினி இன்னமும் ஹீரோவையே நம்பியிருந்தா வேலைக்கு ஆகாதுன்னு முடிவு செஞ்சிட்டாங்க.இப்படி ஒரு வருஷமும் முடிஞ்சு போச்.இப்பொ எப்படியோ ஹீரோ ஒரு அரசாங்கக் கம்பெனியில வேலைக்கு சேர்ந்திட்டார்.ஆனா நம்ம ஹீரோயினிக்கோ சாபுட்வேரு மாப்பிள்ளைங்க மேல தான் இப்ப நாட்டம்.அப்புறம் என்ன நடந்ததுன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.
ஹீரோயினி வீட்டுல அவிங்க காதலப் பத்தி சொல்லியிருந்தா கண்டிப்பா அவிங்க ஒத்துட்டி இருந்திருப்பாங்க.ஆனா வெளி நாடு பறக்கும் ஆசையானது கண்ணை மறச்சிட்டதனால ஹீரோயினி டபுள் கேம் ஆடிட்டாங்க.வீட்டுல தங்களோட காதலுக்கு அங்கீகாரம் கிடைக்காதுன்னு ஹீரோ கிட்ட பொய் சொல்லிட்டு,வீட்டுல இவிங்க காதலைப் பத்தித் தெரியாத பேரன்ட்ஸ் பார்த்து வச்ச ஒரு அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிட்டாங்க.வெவரம் தெரியாத ஹீரோ கொஞ்ச நாளைக்குத் தேவதாசு மாதிரி சுத்தினாரு.கலியாணத்துக்கு எல்லோருக்கும் அழைப்பு வந்தது.
ஹீரோ வீட்டுல இருந்திட்டு "எங்கிருந்தாலும் வாழ்க"ன்னு ஆசிர்வாதிச்சிட்டாரு.அதுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு நம்ம ஹீரோயினி அம்மா ஆகிட்டாங்க.ஆனா அவிங்க பையனுக்கு நியூமராலஜி எல்லாம் பார்த்து மிலிந்த் கார்த்திகேயன்னு தான் பேர் வச்சாங்க.இத்தக் கேள்விப்பட்ட நம்ம ஹீரோ இனியும் ப்ரேம்ஸை நினச்சு வாழ்க்கயத் தொலைக்கறதுல அர்த்தம் இல்லைன்னு முடிவு செஞ்சிட்டாராம்.என்னை அவரோட கலியாணத்துக் கூப்பிட வந்தப்போ தான் இத்தனை கதயும் சொன்னாரு.ஹீரோயினி டபுள் கேம் ஆடின மேட்டர் ஹீரோயினோட ஜிகர் தோஸ்த்து ஹீரோ மேல பரிதாப்பட்டு ரகசியமா சொன்னதாகவும் சொன்னாரு.
ஆகவே மக்கா,திரும்பவும் சொல்றேன்.காதல்னா என்ன???
தான் அன்பு செலுத்தற சக மனிதனை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்.எதனையும் எதிர்பாராமல் பேரன்பு செலுத்துதல்.அது மட்டுமல்ல,எந்த ஒரு உறவும் சிறந்து விளங்க அடிப்படைப் பொருளாய் அமைவது ஒருவர் மற்றவரிடத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கையே (Trust is the basic entity between any relationship).
காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.
சில சமயம் காதலையே...
04 July 2005
[+/-] |
கோவன்புத்தூர் தொடங்கி கோயம்புத்தூர் வரை. |
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா..."
இந்தப் பாட்டைச் சின்ன வயசில கேட்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு தான் வரும்.
எப்படா கால் பரிச்சை,அரைப் பரிச்சை லீவு வரும்,எப்படி ஊர் சுத்தத் தாத்தா ஊருக்குப் போலாம்னு நெனக்கிற ஆளு நானு.
லீவு முடிஞ்சாலும் எனக்கு ஊருக்குத் திரும்ப மனசே இருக்காதாம்,சினிமாவுக்குக் கூட்டிட்டு போறேன்,சர்க்கஸுக்குக் கூட்டிடுப் போறேன்னு பொய் சொல்லிதான் என்னை அங்கே இருந்து இங்கே கிளப்பிட்டு வருவோம்னு இப்போ கூட எங்க மாமா கூட ஓட்டிட்டு இருப்பார்.அங்கென்னு சொல்றது எங்க தாத்தா ஊரான பழனியை.இங்கென்னு சொன்னது நம்மட ஊரான கோயம்த்தூரை.
"சென்னை மேரீ ஜான்"-அப்படின்னு எழுதிய ஒரு பதிவுக்கு வந்த வரவேற்பப் பார்த்து சரி நம்பட ஊரப் பத்தியும் அதே பாணியில ஒரு பதிவைப் போட்டுடலம்ன்னு முடிவு செஞ்சிட்டு இத்த ஆரம்பிச்சிருக்கேன்.
அதனால மக்கா உங்களது கோவை தினங்களை நினைவு படுத்தும் விதத்துல இந்த ஒரு போட்டி.இப்போவே சொல்லிப் புட்டேன் ஆனா prize எதுவும் கிடையாது.
1.கீழ்க்கண்ட இடங்களது பெயர்களை விரிவு படுத்தவும்.
Ex:P.N.பாளையம் - பாப்ப நாயக்கன் பாளையம்
(i)R.S.புரம் -
(ii)N.G.G.O காலனி -
(iii)D.B.ரோடு -
2."செவன் இஸ் ஹெவன்" என்றெல்லாம் சரித்திரப் புகழ் வாய்ந்த 7-ஆம் நெம்பர் பேருந்து செல்லும் பாதையில் உள்ள வழித்தடங்களைக் கூறவும்.
3.ஹோப் காலேஜ் : கோவையிலிர்ந்து அவினாசி மார்க்கமாகச் செல்லும் ஒரு முக்கியமான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பு.இந்தப் பகுதியினைச் சுற்றிலும் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.ஆனால் இந்தப் பகுதில் ஒரு காலேஜும் இந்தப் பெயருடன் இல்லை.
பிறகு எப்படி இந்தப் பகுதிக்கு "ஹோப் காலேஜ்" என்ற பெயர் வந்தது?
4.நான் குறிப்பிடும் இத்திரை அரங்கம் கோவையில் உள்ள திரை அரங்குகளில் மிகச்சிறந்த ஒலி நுட்பம் கொண்டுள்ளது.இந்தத் திரையரங்கில் தான் மணிரத்தினத்தின் திரைப்படங்களில் 90%,ராஜ்கமல் நிறுவன வெளியீடுகளில் 90% ரிலீஸ் செய்யப்பட்டது.(அஞ்சலி,தளபதி,குணா...).இதனுடைய கான்டம்ப்ரரி நிறுவனங்கள் மருத்துவ,ஹோட்டல் துறைகளில் ஈடுபட்டு வந்தாலும் இந்த நிறுவனம் திரைப்பட வெளியீட்டுத் துறையினில் மட்டும் ஈடு பட்டு வருகிறது.
இந்தத் திரையரங்கினைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
5.கோவையில் தொடங்கி மற்ற நகரங்களிலும் வெற்றிக் கொடி கட்டி இருக்கும் வியாபார நிறுவனங்கள் 4 கூறவும்.
6.கோவை மாநகர எல்லைகள் யாவை?
அப்புறம்,ஒரு முக்கிய விஷயம்.உங்களோட பங்களிப்பு,ஆதரவப் பொறுத்து மத்த நகரங்களுக்கும் இந்தக் கேள்வித்தொடரைத் தொடரலாம்னு இருக்கேன்.
நான் போயிருக்காத ரசிக்க வாய்ப்புக் கிடைத்திருக்காத ஊர்கள் ஏராளமா இருக்கு.அதனால உங்க ஊர் பத்தியும் இப்படி ஒரு கேள்வித்தொடர் நடத்த ஆர்வம் இருக்கிற மக்கா எனக்கு ஒரு மெயில் போடுங்க...
01 July 2005
[+/-] |
ஆகாசவாணி,செய்திகள் வாசிப்பது... |
"தம்பி,ஏழே கால் நியூஸ் ஆரம்பிச்சாச்சு.போய் குளிச்சுட்டு வந்திடு" இந்த வாசகம் கேட்காத நாட்களே இல்லை எனலாம் எனது K.G.நாட்களில்.
இங்கே தம்பி என்று விளிக்கப்பட்டது எனது மாமா.
என்னதான் எங்கள் வீட்டில் அப்போது சாவி கொடுக்கும் கடிகாரம் இருந்தாலும் எனது தாத்தாவிற்கு ஆகாசவாணி தான் கடிகாரம்.எங்கள் வீட்டில் இருந்த ரேடியோப் பெட்டியோ அரதப் பழசான ஒன்று.என் தாத்தாவின் திருமணப்பரிசாக அவரது எதிரிகளால் பரிசளிக்கப்பட்டது என்று கேலி செய்வது எங்கள் பாட்டியின் தினசரிக் கடமைகளில் ஒன்றாய் இருந்தது.
"ஏம்மா அப்பவோட ஜிகிரி தோஸ்த்துகளைப் போய் இப்படிப் பேசறியே"என்று மெதுவாகத் தீயில் எண்ணை ஊற்றத் துவங்குவார் என் மாமா."ஆமாம்.உங்கப்பா தான் அவங்கள மெச்சிக்கணும்.தோஸ்துகளாம் தோஸ்துங்க.எல்லாம் எச்சக் கையால காக்கா ஓட்டாத ஆளுங்க.அவங்கள விட்டுத் தள்ளு.அவங்க பரிசாக் கொடுத்த இந்தப் பொட்டி-யை வச்சிட்டு உங்க அப்பா செஞ்ச கூத்து இருக்கே.அப்ப எங்க ஊரில ரேடியோ எல்லாம் கிடையாது.இவருக்கோ ரேடியோக் கேக்காம உண்ட சோறு சீரணம் ஆகாது.இவர் புடிச்ச புடிவாதத்தினால எங்க தல தீவாளிக்கு எங்க வீட்டுல இருந்து எல்லா சனமும் இங்கயே வந்திட்டாங்க."என்று தனது வணக்கம் தமிழகத்தைத் தொடர்வார் என் பாட்டிம்மா.
இப்படி ரேடியோவை வைவதெல்லாம் வெறும் நடிப்பே என்பதை இலங்கை வானொலியில் மாலை நேர ஒலிபரப்புகளில் வரும் பாடல்களை ரசித்தவாறே அவற்றை முணுமுணுக்கும் பாட்டியின் மற்றுமொரு முகம் காட்டிக் கொடுத்துவிடும்.
இந்த வானொலியின் விசேஷம் என்னவென்றால்,இதன் வாக்குவம் குழாய்களின் மூலம் இயங்குவதைக் குறிப்பிடலாம்.ட்ரான்சிஸ்ட்டரின் எல்டர் சிஸ்டர் இது :)
நீங்கள் 7 மணிக்கு ஏதாவது நிகழ்ச்சியினைக் கேட்க வேண்டும் என்றால் வானொலியினை சுமார் 6.45க்கே ஆன் செய்து விட வேண்டும்.(கூகிளிட்டுத் தெரிந்து கொள்ளலாம்).ஆயினும் எத்தனையோ இதயங்களின் சாயங்கால சந்தோஷமாய் வானொலி இருந்தது என்பதினை மறுப்பதற்கில்லை.
திருமணமாகாத சித்திக்குப் பிடித்த இலங்கை ஒலிபரப்பு(எனக்குப் பிடித்தது அவற்றினூடெ வரும் பிறந்த தின வாழ்த்துக்கள்),என் மாமாவிற்குப் பிடித்த கிரிக்கேட் வர்னணைகள்,தாத்தாவிற்குப் பிடித்த மதிய நேரத்து கர்னாடக சங்கீதம்,புதனிரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் அரை மணி நேர நாடகம்,என்னுடைய favourite என்று முத்திரை குத்திவிட்டு அனைவரும் அமர்ந்து கேட்கும் மழலையர் பூங்கா,ஞாயிறு மதியம் ஒலி வலம் வரும் ஒரு மணி நேர நாடகம்/ஒலிச் சித்திரம்,மார்கழிக் காலைகளை எழுப்பும் திருப்பாவை,திருவம்பாவை விளக்கங்கள் இப்படிப் பலப் பல நிகழ்ச்சிகள்.
எந்த ராஜா எந்த பட்டிணம் போனாலும் எங்கள் தாத்தா மாலை 6.30க்கு அலுவலகத்திலிருந்து வந்து விடுவார்.6.30 மாநிலச் செய்திகள்,அதற்குப் பிறகு என் பாட்டியுடன் சிறிது சண்டை(பெரும்பாலும் இரவு டிபன் பற்றியும்,எங்கள் மாமா நேரத்திற்கு வீடு திரும்பாத்து பற்றியுமே இருக்கும்)பிறகு 7.15 தேசியச் செய்திகள் என்று தொடரும்.அவர் விருப்ப ஓய்வு பெற்ற போது வீட்டினுள் தொலைக்காட்சி வந்திருந்த போதிலும் அவரது அந்தப் பழய வானொலி மீதான காதல் குறையவில்லை.
அட இப்போது தான் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.அப்போது சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் நேர்முக வர்ணனை தமிழில் சென்னை வானொலி நிலையத்தின் புண்ணியத்தால் வந்து கொண்டிருந்தது.ஒளிக்கு தூர்தர்ஷனையும் ஒலிக்கு வானொலியினையும் set செய்து புதுமை செய்தார் எங்கள் தாத்தா.அந்தச் சமயங்களில் தெருவே எங்கள் வீட்டில் தான் இருக்கும்.துபாய் கலர் டி.வி. வைத்திருந்த சத்தியமூர்த்தி மாமா கூட எங்கள் வீட்டில் தான் மேட்ச் பார்ப்பார்.எனது பாட்டிக்கோ பெருமை கொள்ளாது.
ஹூம்....இப்பொது அந்த வானொலியும் இல்லை எனது தாத்தவும் இல்லை இந்தப் பூவுலகில்.நான் 7வது படிக்கும் போது(ரோஜா வெளிவந்த சமயம்)ஒரு கால் பரிட்சை விடுமுறையின் போது எனது தாத்தாவும் அதற்கு சற்றேறக்குறைய 15 நாட்களுக்கு முன்னால் அவரது வானொலி நண்பனும் இயக்கமற்றுப் போயினர்.
இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை.
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை.
[+/-] |
21 ஆயிரம் கோடிக்கு எவ்வளவு சைபர்??? |
மிகச் சரியாகச் சொல்லப் போனால் 21,068 கோடிக்கு எவ்வளவு சைபர் என்று தான் கேட்க வேண்டும்.
இந்தத் தொகை தான் ஆண்டொன்றுக்கு ஒரு சராசரி இந்தியன் பல்வேறு அரசு எந்திரங்கள் இயங்க லஞ்சமாகக் கொடுக்கும் பணம் என்று சொல்கிறது ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்னேஷனல் என்ற அமைப்பு நேற்று தில்லியில் வெளியிட்ட "இந்தியா கரப்ஷன் ஸ்டடி 2005" அறிக்கை.
இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட 62% பேர் ஊழல் என்பது ஒரு நிதர்சனமான உண்மை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.மூன்றில் ஒரு பங்கு மக்கள் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஊழல் அதிகரித்திருப்பதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு...
http://economictimes.indiatimes.com/articleshow/msid-1157054,curpg-2.cms
30 June 2005
[+/-] |
ஆறு ஆண்டுகளில் நான்காம் ஆள் - And miles to go before I sleep. |
அசோக் சூட்டா,அருண் தியாகராஜன்,ப்ரசன்னா என்று தொடரும் வரிசையில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்திருப்பவர் விவேக் பால்.கடந்த சில நாட்களாகப் பல்வேறு வணிகத் தளங்களில் பரபரப்பாக off-the-record செய்தி விவாதிக்கப்பட்டு வந்தது இன்று on-the-record செய்தி ஆகி விட்டது.
விவேக் பால்,உலகின் 30 மிகவும் மரியாதைக்குரிய CEO-களில் ஒருவராக Barron's பத்திரிக்கையினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்,இந்த வருடத்தின் காம்பன்சேஷனாக $1.6 மில்லியனுக்கு மேல் பெற்றவர்,இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனத்தின்(Western India Food PROducts) வைஸ் பிரசிடெண்டாகக் கடந்த 6 ஆண்டுகள் பணியாற்றியவர்,$150 மில்லியனாக இருந்த உலகளாவிய IT services turn over-ஐ ஆறு வருடங்களில் $1.4 பில்லியனுக்கு உயர்த்தியவர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவரது விலகலுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும்,இவரைத் தொடர்ந்து யார் அந்தப் பதவியினை ஏற்கப் போகிறார்கள் என்பதிலேயே அனைவரது கவனமும் உள்ளது.இதற்கிடையே சமீபத்தில் ஹார்வர்டு பிஸினஸ் பள்ளியில் முடித்துள்ள ப்ரேம்ஜியின் மூத்த மகனான ரிஷாத் விப்ரோவின் போர்டில் சேர்த்துக் கொள்ளப்படலாம் என்றும் தகவல் ஊடங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஊடங்களுக்கும்,ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கும் கொடுக்கப்பட்ட தகவல் குறிப்பில் விவேக்(இவர் USA-ல் இருந்து பணியாற்றி வருபவர்)அமெரிக்காவைச் சேர்ந்த Texas Pacific Group எனப்படும் ஒரு முன்னணி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் பங்குதாரராக இணையப்போகிறார் என்று விப்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
இவரது விலகலுக்குப்பின் லக்ஷ்மண் ராவ் COO-வாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
சொல்ல மறந்திட்டேனே...
ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் இந்தப் பாடல் விவேக்கிற்குப் பிடித்த பாடல்களுள் ஒன்றாம்.
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
29 June 2005
[+/-] |
இன்னும் சில பாரோக்கள்... |
"ஒ தேவதாஸ்...." -இது தமிழ் பாரோ(பார்வதி)"
"மோரே பியா..." - இது இந்திப் பாரோ.
என் சம காலத்தவற்கு பாரோ என்றதும் ஐஸ்வர்யா ராய் நினைவிற்கு வருவது போல்,என் பாட்டனின் வயது ஒத்தவர்களுக்கு பார்வதி என்றதும் சட்டென்று நினைவிற்கு வருவது சாவித்திரி தான்.
இவர்களையும் தவிர மேலும் சில பாரோக்களும்,பார்வதிகளும் உலா வந்திருக்கிறார்கள்.
ஜமுனா(தேவதாஸ்/பெங்காலி/1935)
தேவதாஸ்:P.C.பரூவா.
தோற்றம்:இயல்பான பக்கத்து வீட்டுப் பெண்
உடை:எளிமையான வங்காளப் பாணி உடை
காதல் என்பது:நிபந்தனையற்றது.
சாவித்திரி(தேவதாசு/தெலுங்கு/1953)
தேவதாஸ்:அக்கினேனி நாகேஸ்வர ராவ்
இயக்கம்:வேதாந்தம் ராகவைய்யா.
தோற்றம்:குடும்பப் பாங்கானது.
உடை:பாரம்பரிய ஆடைகள்
காதல் என்பது:நிபந்தனையற்றது.
சுசித்ரா சென்(தேவ்தாஸ்/ஹிந்தி/1955)
தேவதாஸ்:திலீப் குமர்
இயக்கம்:பிமல் ராய்
தோற்றம்:காவியங்களின் தேவதை.
உடை:பெங்கால் காட்டன் சேலைகள்
காதல் என்பது:நிபந்தனையற்றது.
ஐஸ்வர்யா ராய்(தேவ்தாஸ்/ஹிந்தி/2002)
தேவதாஸ்:ஷாரூக் கான்
இயக்கம்:சஞ்ஜய் லீலா பன்சாலி
தோற்றம்:நவீன பாணி.
உடை:கண்டிப்பாய் எளிமை இல்லை
காதல் என்பது:நிபந்தனையற்றது.
இப்படி சரத் சந்திரரின் தேவதாசைத் துவம்சம் செய்த பல்வேறு பாரோக்களின் இடையே இருந்த ஒரே ஒற்றுமை காதல் மேல் அவர்கள் கொண்டிருந்த அபிப்பிராயம் தான்.ஆம்,காதல் என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டதன்று.
Yes,love is unconditional....
28 June 2005
[+/-] |
2005 - ஒரு வி.ஆர்.எஸ் கதை. |
இன்று காலை எனக்குப் பரிச்சயமான் குரல் ஒன்று எங்கள் குடியிருப்பின் படிக்கட்டுகளில் கேட்டது.குரலுக்குச் சொந்தக்காரர் யாராயிருக்கும் என்று யோசித்து முடிப்பதற்குள் அவர் எங்கள் வீட்டு அழைப்புமணியை அழுத்துவது கேட்டது."என்னப்பா,இன்னும் வேலைக்குக் கிளம்பலியா??கதவு திறந்திருந்தாலும் அனுமதி இல்லாம உள்ளே நுழையறது தப்பில்லையா"என்றவாரே ஒரு நாற்காலியினை ஆக்கிரமித்தார் முன்பு நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான திருவாளர்.பாண்டுரங்கன்."என்னா அங்கிள்.எப்படி இருக்கீங்க.வீட்டில எல்லாம் நல்லா இருக்காங்களா" என்று கேட்ட என் சகாவின் மனதில் அய்யோ இதுக்கு மேல பேருந்தைப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியோட்டம் துவங்கியது.
"எல்லாம் பரம சௌக்கியமா இருக்காங்கப்பா.என்னோட Ex-கலீக் வீட்டுல ஒரு பங்ஷன்.சரி இவ்ளோ தூரம் வந்திட்டோமே அப்படியே உங்களையும் பாத்திட்டுப் போகலாம்னு வந்தேன்.தவிர நீ ஆபீஸ் போரப்போ என்னை அப்படியே சில்க் போர்டில டிராப் பண்ணிடு.V.R.S.வாங்கினதில இருந்து வண்டி எடுக்கறதே கிடையாது" என்று தமது சிற்றுரையைத் தொடர்ந்தார்.எனக்கு இன்னமும் அலுவலகத்திற்கு நேரம் இருந்தது.அதனால் அவருடன் தொடர்ந்து உரையாட ஆரம்பித்தேன்.Stop.Stop,இருவர் மாறி மாறிப் பேசிக் கொண்டிருப்பது தான் உரையாடல் என்றால் இது அந்த ரகத்தில் சேராது.பாண்டு மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்.நான் அவருடன் வழக்கமாக உரையாடுபவர் போல "உம்" கொட்டிக் கேட்க(கேட்க மட்டுமே)ஆரம்பித்தேன்."
"நீங்க இந்த வீட்டுக்கு வந்து 8 மாசம் இருக்குமா?ஆமாம்.correct.எப்படி சொல்றேன்னா நான் V.R.S.வாங்கி 9 மாசம் முடிஞ்சு போச்சு.வாங்கினதுக்கப்புறமா நிம்மதியா ஒய்வு எடுக்காலாம்னு ஆசைப்பட்டு தான் எழுதிக்கொடுத்தேன்.இப்போ என்னடான்னா பேங்க் போயிருந்தாலாவது வாரக்கடைசிகளில் ஓய்வு கிடைச்சிருக்குமோன்னு தோணுது."என்றவாறே சற்றே மூச்சு வாங்கினார் பாண்டு.நான் சும்மா இருக்காமல் "என்ன சார்.இப்படி சொல்ரீங்க.இப்போ தான் உங்களுக்கு எந்த வேலையும் இல்லையே,நல்லா வீட்டில ஜாலியா ரெஸ்ட் எடுக்கலாமே"என்றது தான் தாமதம் திருவாளர்.பாண்டு தனது சொற்பொழிவைத் தொடர ஆரம்பித்தார்.
இஞ்சி,பச்சை மிளகாய் நறுக்கித் தருதல்,ஏலக்காய்ப் பொடி செய்தல்,தேங்காய் உடைப்பது,லைட் சுவிட்சுகளை அணைப்பது,வேலைக்காரம்மாவுக்குப் போடும் பாத்திரம் தேய்க்கும் பவுடர் பாக்கெட்டின் வாயைத் திறத்தல்,காப்பிப் பொடி அரைக்குமிடத்தே போய் வாங்கி வருதல்,மேற்படி காப்பிப் பொடியைச் சிந்தாமல் பழய பொடி மேலிருக்கும் படியும்,புதுப்பொடி கீழெயிருக்கும் படியும் கொட்டுதல்,அரை ஈர,முழு ஈரத் துண்டுகளை கலெக்டு செய்து கொண்டு போய் வேலைக்காரம்மாவிடம் தருதல்,எக்ஸ்ட்ரா பால் வாங்கி வருதல்,குக்கரின் கைப்பிடியினை ஆடாமல் இருக்கும்படி ஸ்க்ரூ ட்ரைவராலோ அல்லது கரண்டிக் காம்பாலோ டைட் செய்து தருவது,சாம்பாருக்கு உப்புப் போதுமா என்பதைத் துளி ருசி பார்த்து கரெக்டாகச் சொல்வது,லாண்டரியில் கணக்குப் பார்த்து வருகிற துணிகளைச் சரியாக அடுக்கி வைப்பது,ஒட்டடை அடித்தல்,மின் பல்புகளைத் துடைத்தல்,கடக் கடக் என்று சத்தம் போடும் மின் விசிறியின் சத்தம் வெறும் கேப்பிலிருந்து வருகிறதா இல்லை உள்ளே எதாவது கோளறா என்பதைத் தகுந்த ஆள் கொண்டு சரி செய்தல்.
இஸ்திரி சார்ஜுக்குப் பயந்து கொண்டு படுக்கை அடியில் மனைவி ஓசி மடிப்புக்கு வைக்கும் பட்டுப்புடவையின் இருப்பிடத்தை அவளுக்குத் தகுந்த நேரத்தில் நினைவு படுத்துதல்,மனைவி அந்தண்டை போயிருக்கும்போது அடுப்பில் பால் பொங்குகிறதா என்பதைக் கண்காணித்து அவசர ரிப்போர்ட் தருதல்,பேரனுக்குக் காலையில் ஸாக்ஸ் மாட்டி விடுதல்,அதே போல் பள்ளியிலிருந்து வந்ததும் கழற்றுதல்,கூரியர் பையன்,இதர சேல்ஸ் ரெப்கள் கதவைத் தட்டும் போது திறத்தல்,மனைவியின் மப்ளரைத் தேடித் தருதல்,காலையில் படுக்கை சுருட்டல்,பில்லோ கவர்கள் மாற்றுதல்,ஆயாவுக்கு பினைல் அளவாக ஊற்றுதல்,பாத்ரூமில் சோப்பு வழ வழவென்று இருந்தால் அதை வெய்யிலுக்கு அப்புறப்படுத்தி பக்குவமாக உலர வைத்தல்,சீரியல் நேரங்களை நினைவூட்டுவது,சீரியல் தொடர்ச்சியினைப் புரிய வைப்பத்ற்காக நானும் மெனக்கெட்டு அதனைப் பார்ப்பது.....
அப்பா...அப்பப்பா.. நல்லவேளை எனக்கு ஆபீசுக்கு நேரமாகிட்டது.இன்று மறக்காமல் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.முழுப்பயணத்திற்கு அணியாவிட்டாலும் சில்க் போர்ட் வரை அணிந்து செல்ல வேண்டும் என்றும் உறுதி எடுத்துக் கொண்டேன்.
27 June 2005
[+/-] |
மச்சான், பரிசம் போட சிங்கப்பூரான் ராவில வாரான்... |
மதிய உணவு அரட்டைக் கச்சேரியின் போது,எனது அலுவலக நண்பர் தமிழில் வரும் கிராமத்துத் திரைப்படங்களைப் பற்றி ஆரம்பித்தார்.அன்னாரது சொந்த ஊரோ தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் இருக்கிறது.அவருக்கு தமிழ் எழுதப் பேசத் தெரிந்ததே ஒரு பெரிய விஷயம்.எங்கள் அலுவலகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களினால் தமிழ் கற்றவர்கள் வரிசையில் அவரும் ஒருவர்.இப்படித் தமிழ் கற்றுக் கொண்டிருக்கும் அவர் தமிழின் வெவ்வேறு உச்சரிப்பு வடிவங்கள் பற்றியும் அறிந்திருப்பார் என்று எண்ணியது எனது தப்புத்தான்.
விஷயம் இது தான்...
நேற்று இரவு பொழுது போகாமல் வெவ்வேறு சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தவர் காதில் மேலே சொன்ன வசனம் கேட்டிருக்கிறது.அதன் அர்த்தம் விளங்காதவர்,முன்னமே நான் கூறியது போல ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு இன்று மதிய உணவின் போது கேட்டார்."சுட்ஸ்(இது தான் எனது விளிப்புப் பெயர்).மச்சான், பரிசம் போட பட்டாளத்தான் ராவில வாரான்...அப்படின்னா என்ன மீனிங்??"
இதைக் கேட்டதும் முதலில் திருவாத்தான் போல முழித்தேன்.பிறகு மெல்ல அவருக்கு அதைப் புரிய வைத்தேன்.
இவர் போன்ற அன்பர்களின் எதிர்கால நலனை முன்னிட்டு ஒரு "தமிழ்த் திரைப்பட கிராமியத் தமிழ் அகராதி"-யினைத் தொகுத்து அளித்து உள்ளேன்.
இந்தத் தொகுப்பில் இடம் பெறாத,இடம் பெறத் தகுதியான சொல்லோ,சொற்களோ இருப்பின் தயை கூர்ந்து எனக்குத் தெரியப் படுத்தவும்.
மச்சான்:சக்திவேலு,முத்து,ரத்தினம் என்ற பல நாமகரணங்களால் அறியப்படுபவர்.அடிக்கடி திருட்டுத்தாலி,ஓடிப் போதல் ஆகியவற்றைப் பற்றி பேசுவான்.கிராமப் பந்தயங்களில் சக்கையாக அடிபட்டாலும்,கடைசியில் அவனே ஜெயிப்பான்.
சிங்கப்பூரான்: பொல்லாத பூரான்.போடும் கணக்கெல்லாம் வெள்ளியிலேயே இருக்கும்.அந்த ஊரில் பல வீடுகளில் லேடியோப் பொட்டி பாடுவதற்கு காரண கர்த்தா.
பரிசம்: வேலாயியைக் கட்டிக்க இது போட வேண்டும்.மச்சான் பாரிச வாயுவோ,ப்ளட் கேன்சரோ வந்து உசிருக்குப் போராடிக்கொண்டிருப்பான்.வேலாயியின் அப்பனோ இதிலியே குறியாக இருப்பான்.சிங்கப்பூரான் இதைத் தயாராக நீட்டுவான்.
ராவு: ஜாமக்கணக்கில் ஓடும்.கொலைகள்,திருட்டுகள் நடக்கும் நேரம்.ஆள் மாறாட்டமாக அடித்து வீழ்த்தச் சௌகரியமான வேளை.
திருவிழா:மச்சான்கள் நிரம்பி வழியும் இடம்,ஊரங்கும் இதே பேச்சாயிருக்கும்.
பெரிய பண்ணை:எப்போதும் மாட்டு வண்டியில் தான் போவார்;மாடுகள் எப்போதும் ஜல்,ஜல் என்று தான் போகும்.வெள்ளை வேட்டி சட்டை,சவ்வாதுப் பொட்டு,வைரக்கடுக்கன் இல்லாத பெரிய பண்ணை,பைசாப் பிரயோஜனமில்லை.மகன் அல்லது மகள் பட்டிணத்தில் படித்துக் கொண்டிருப்பார்கள்.
பாம்பு:சமயம் பார்த்துக் கடித்து வைக்கும்.இதற்கு முறி அல்லது மூலிகை மருந்து அல்லது மந்திரம் பார்த்துக் கொண்டிருப்பவர் கதாநாயகனின் எதிரியாக இருப்பார்.
அரிவாள்:யாராவது ஒருவர் இதைத் தீட்டிக் கொண்டே இருப்பார்கள்.ஓங்கிக் கொண்டே வருவார்கள்.ஒரே போடு தான்.
அண்ணே: "தம்பி" என்று மற்றவ்ர்களைக் கூப்பிடுபவர்.
பரிசல்:நடு ஆற்றில் முழுகுவதற்கென்றே ஏற்பட்டது.சுழல் இல்லாவிட்டால் சுகம் இல்லை.
கடா:ஆடு அல்லது மாடு.காதல் வளர்க்க உதவும் வஸ்து.வள்ளி இதனை ஓட்டிக் கொண்டு வரும் அழகே தனி தான்.
பட்டாளத்தான்:எங்கிருந்தோ வருவான்.வரும் போதே சீமைச்சரக்குகளயும் கொணர்வான்.இல்லாத ரகளைகளை எல்லாம் செய்வான்.சமயத்தில் காதலுக்கும் உதவி செய்வான்.
ஏதொ என்னோட சிற்றறிவுக்கு எட்டிய வரைக்கும் பதிஞ்சிட்டேன்.
மக்கா உங்களோட பங்களிப்பு இர்ந்தா இந்தத் தொகுப்பை இன்னும் பெரிசாக்கலாம்...
[+/-] |
தெற்கு தேயவில்லை. |
"வடக்கு வாழ்கிறது.தெற்கு தேய்கிறது" என்னும் கழகக் கண்மணிகளின் கோஷம் இனி செல்லுபடி ஆகாது.
இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார மேதைகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ள பிபேக் தெப்ராயும்,லவீஷ் பண்டாரியும் இணைந்து வெளியிட்டிருக்கும் "State of the states" என்னும் புத்தகத்தினை மேற்கோள் காட்டி பிஸினெஸ் டுடே இதழில் "செக்ஸி சௌத்" என்ற கட்டுரை வெளிவந்துள்ளது.அந்தக் கட்டுரையில் இருந்து சில துளிகள்.
இந்தியாவின் வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே உணரப்பட்ட ஒரு divide இந்த 2005-ஆம் ஆண்டு முதல் பெரிதாகத் துவங்கியுள்ளது.இங்கே வட மாநிலங்கள் என்று குறிப்பிடப்படுவது முறையே பீகார்,இராஜஸ்தான்,ம.பி மற்றும் உ.பி.தென் மாநிலங்கள் என்று குறிப்பிடப்படுவது முறையே ஆந்திரா,கர்நாடகா,தமிழ்நாடு மற்றும் கேரளா.இந்த ஆய்வுக்கு வசதியாக குஜராத் வட மாநிலங்களின் தொகுப்பிலும்,மஹாராஷ்ட்ரா தென் மாநிலங்களின் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஆய்வுகளின் மூலம் வட மாநிலங்கள் பொருளாதாரத்திலும்,சமூகக் குறியீடுகளிலும் பின் தங்குவது தெள்ளத் தெளிவாகத் தெரிய வருகிறது."வட இந்தியாவின் மாநிலங்களில் இன்னமும் விவசாயத்தில் பழைய முறைகளைப் பின் பற்றி வருவதனால் தான் அவர்கள் தென் மாநிலங்களை விட விவசாயத்தில் பின் தங்கி இருக்கிறார்கள்" என்று கூறுகிறார் இண்டிகஸ் அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் லவீஷ் பண்டாரி.
வட மாநிலச் சந்தைகள் அளவில் பெரியதாக இருப்பினும் அவற்றின் சுழற்சியானது குறை மதிப்புப் பொருட்களையே பெரிதும் சார்ந்து உள்ளது.இதற்கு மாறாக தென் மாநிலஙளின் சந்தைகள் உயர் மதிப்புப் பொருட்களை முன்னிறுத்தத் துவங்கி இருக்கின்றன.ஆனாலும் இந்த ஆரோக்கியமான போட்டியில் தென் மாநிலங்களை முன்னுக்குத் தள்ளுவது IT & BPO துறைகளே.
"இந்தியாவின் மொத்த IT & BPO துறையின் ஏற்றுமதியில் 75 - 80 சதவிகிதம் பங்களிப்புத் தருவது தென் மாநிலங்கள் தான்" என்கிறார் சுனில் மேத்தா,வைஸ் ப்ரசிடெண்ட்,நாஸ்காம்.இனி ஒரு ஒப்பீடு.
தனிநபர் வருமானம் :
வடக்கு -8433.22 ரூ. தெற்கு-13,629.88 ரூ
எழுத்தறிவு :
வடக்கு -59.28% . தெற்கு- 73.94%
பொதுச்சுகாதார செலவினங்களில் தனிநபர் வருமானத்தின் பங்களிப்பு :
வடக்கு -91.91 ரூ.தெற்கு- 126.57 ரூ
மின்வசதி பெற்று இருக்கும் வீடுகள்:
வடக்கு -49.44% .தெற்கு- 74.32%
சிம்ப்ப்ளீ சௌத் சாரே....
25 June 2005
[+/-] |
ஈஸ்வரி உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசப்பட்ரேன்... |
ஹலோ...தலைப்பப் படிச்ச உடனே உங்க கற்பனைக் குருதய கண்டபடி ஓட விட்டா அதுக்கு நான் பொறுப்பு கிடையாதுங்ணா.
நேத்து தூங்கப் போகும்போதே முடிவு செஞ்ச மாதிரி இன்னைக்கு காலையில கொஞ்சம் சீக்கிரமா எழுந்து என்னொட புத்தக,ஒலி நாடா குருந்தட்டுகள் இருக்கிற ரேக்-ஐ சுத்தம் செய்யும் போது தான் இந்த கிடைச்சது மேற்கண்ட பாடலும் இருக்கற 5 ஸ்டார் படத்தோட ஒலி நாடா குருந்தட்டு(தமிழாக்கம் கரெக்டுங்ளாங்ணா??).
இந்தப் படம் மூலமா தமிழ் சினிமாவுக்கு ஒரு புது இரட்டை இசை அமைப்பாளர்கள்,ஒரு புது டீன் ஹீரோ,ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்(அதாம்பா நம்ம பிலானி புகழ் கனிகா)கிடைச்சாங்க.
சுமாரா ஓடின படம்.சுசி.கணேசனுக்கு ஒரு நல்ல break through கொடுத்த படம்.எல்லாப் பாட்டும் நல்லாவே இருக்கும்.சுபா முத்கல் அம்மா கூட ஒரு பாட்டைப் பாடியிருப்பாங்க.
இந்த "திரு திருடா" பாட்ட முதல்ல எங்க ரூமில் கேட்கும் போதே(படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலேயே),கேட்கும் எல்லாரையும் கட்டிப் போட்டிடுச்சு.நம்ம சோக்காளிக எல்லாருக்கும் இந்தப் பாட்டை எப்படி எடுத்திருப்பாங்கன்னு ஒரே ஆவலாதி.படமும் ஒரு வழியா செப்டம்பர் 2002-ல் ரீலீஸ் ஆச்சு.நம்ம உதயம் காம்ப்ளெக்ஸ்-ல ரீலீஸ் பண்ணியிருந்தாங்க.சோக்காளிக கூட வழக்கம் போல ஞாயித்திக் கிழமை ரெண்டாம் ஆட்டம் போனோம்.(ஹி..ஹி...நாங்க எப்பவுமே ஞாயித்திக் கிழமை ரெண்டாம் ஆட்டம் தான் போவோம்.)
நடுவில ஒரு சோக்காளிக்கு படம் புடிக்காமே போய் தூங்க ஆரம்பிச்சுட்டாரு."திரு திருடா" பாட்டு வந்த உடனே மறக்காம எழுப்பணும்னு இதில கண்டசன் வேற.
இந்தப் பாட்டு இன்டெர்வெல்லுக்கு அப்பால தான் வந்தது.பாட்டுக்கு கொடுத்த visual build-up பார்த்து எல்லாருமே கணேசு கலக்கிட்டான்யா அப்படின்னு நினச்சப்ப தான் நம்ம கனிகாம்மா(கனிகா-வோட அம்மா இல்லீங்ணா)திடீர்னு ஜான்ஸி ராணி லக்ஷ்மி பாய் மாதிரி குருத மேல ஏறினாங்க.
அவ்வளவு தான் நம்ம ஜிங்குச்சா பாட்டு லிஸ்ட்ல ஒரு புது வரவுய்யான்னு நெனச்சிட்டு அப்படியே அப்பவே தியேட்டர விட்டு வெளி நடப்பு செஞ்சிட்டோம்.
அதென்ன ஜிங்குச்சா பாட்டு லிஸ்ட்னு கேக்கறவங்களுக்கு...
1.கண்ணோடு காண்பதெல்லாம் - ஜீன்ஸ்
2.பூங்காற்றிலே என் சுவாசத்தை - உயிரே
3.எங்கே எனது கவிதை - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
4.எகிறி குதித்தேன் - பாய்ஸ்
5.கவிதை இரவு,இரவு கவிதை - சுள்ளான்.
இந்த லிஸ்ட்ல இருக்கும் எல்லாப் பாட்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.அதக் கண்டு பிடிச்சீங்கன்னா நான் "ஜிங்குச்சா பாட்டு"ன்னு எதை சொல்றேன்னு புரியும்.
குழம்பிப் போனவங்க எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க...
வர்ட்டா....
24 June 2005
[+/-] |
சென்னை மேரீ ஜான்... |
என்னடா இவன் ஜான்,முழம்னு பிளிரிட்டு இருக்கான்னு பார்க்கரீங்களா??
ஒண்ணும் இல்லை.
சென்னப் பட்டினத்தை விட்டு வந்து கிட்டத்தட்ட 1.5 வருஷம் ஆனாலும் கூட ஒவ்வொரு வார இறுதியிலும் அதன் ஞயாபகம்(spelling correct-a??) வந்து என்னை வருத்துவதென்னவோ உண்மை தான்.
எனக்கு மட்டும் இல்லை இந்த வருத்தம்.
சென்னைய விட்டு வந்த என்னோட எல்லா சோக்களிகளும் இப்படிப் புலம்பி நான் கேட்டிருக்கேன்.
அதனால மக்கா உங்களது சென்னை தினங்களை நினைவு படுத்தும் விதத்துல இந்த ஒரு போட்டி.இப்போவே சொல்லிப் புட்டேன் ஆனா prize எதுவும் கிடையாது.
1.கீழ்க்கண்ட இடங்களது பெயர்களை விரிவு படுத்தவும்.
Ex:T.நகர் - தியாகராய நகர்
G.N.செட்டி தெரு -
K.K.நகர் -
T.T.K.சாலை -
2.கோடம்பாக்கத்திற்கும்,பல்லாவரத்திர்க்கும் இடைப்பட்ட தொடர்வண்டி நிலையங்களைக் கூறுக.
3.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும்.
அடையார் ஆனந்த பவன்
கணபதி ஸ்வீட்ஸ்
அர்ச்சனா ஸ்வீட்ஸ்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
4.வடபழனி பகுதியில் உள்ள எதேனும் 3 திரை அரங்குகளின் பெயர் கூறுக.
5.மேற்கு மாம்பலம் இருப்பதைப் போலவே கிழக்கு மாம்பலம் என்று ஒன்று உண்டா?
23 June 2005
[+/-] |
இப்படி நடந்து இருந்தால் எப்படி இருக்கும்..????!!!!! |
நாம் அனைவருமே கண்டிப்பாக சில நேரங்களில் நினைத்திருப்போம்.
சே,இந்தக் கேள்விக்கு பதிலா காலையில் படிச்ச அந்தக் கேள்வி வந்திருந்தா எப்படி இருந்திருக்கும்.
சே,இந்த கோர்ஸ் எடுக்காமே அந்தக் கோர்ஸ் எடுத்திருந்தா எப்படி இருந்திருக்கும்.
சே,இந்த சம்பந்தத்திற்கு பதிலா அந்த உடுமலைப்பேட்டை சம்பந்தத்தை முடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்.
நடந்து முடிந்த நிகழ்வுகளை மாற்றிப் போட விரும்பாத மனிதரே இல்லை இங்கே.நம் வாழ்வில் நடந்த இத்தகைய சாதாரண நிகழ்வுகளையும் அதன் பின் விளைவுகளையும் மாற்றிப் போடுவதனால் மிகப் பெரிய மாறுதல்கள் வரப் போவதில்லை. இதுவே ஒரு சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளை மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த பதிவு பகிர்கிறது.
ராஜேந்திர ப்ரசாதிற்கு பதிலாக ராஜாஜி முதல் குடியரசுத் தலைவராகியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?
தனது கணவர் பட்னி கம்ப்யூட்டர்சை விட்டு விலகும் போது சுதா மூர்த்தியிடம் வீட்டில் அந்த 12,000 ரூபாய் பணம் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர மறுத்து வேலையைத் தொடர்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
விஜய் அம்ரித்ராஜ் 1973 விம்பிள்டனில் வென்று இருந்தால் எப்படி இருந்திருக்கும்?
மாதவ்ராவ் சிந்தியா விமான விபத்தில் இறக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
ஹரி ப்ரசாத் சௌராஸியா ஒரு மல்யுத்த வீரராகவே தொடர்ந்து இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
மு.கருணாநிதி M.G.R -ஐ தி.மு.க.வை விட்டு விலக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
சிவாஜி கெய்க்வாட் தனது செல்லுலாய்ட் கனவுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு பேருந்து நடத்துனராகவே தனது வாழ்க்கையினைத் தொடர்ந்து இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
P.V.நரசிம்மராவ் தனது அமைச்சரவையில் மன்மோகன் சிங்கிற்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
இந்தியா திரும்ப நினைக்காமல் திருபாய் அம்பானி ஏமானிலேயே தனது பெட்ரோல் பங்க் அஸிஸ்டென்ட் வேலையினைத் தொடர்ந்து இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
இப்படி இன்னும் பல...
ஹ்ம் மனிதனின் மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
[+/-] |
இந்தியா Inc. - இளமை புதுமை |
சென்ற மாதம் UB குழுமத்தில் ஒரு புதிய இயக்குனராக சித்தார்த் மல்லையா பொறுப்பேற்றார்.
சித்தார்த்தின் 18-வது பிறந்த நாள் பரிசாக அதை வழங்கியது அவரது தந்தையான விஜய் மல்லையா என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இதைப் போலவே இந்தியாவில் இளம் வயதில் இயக்குனர்கள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு தான் இது.
1.மல்வீந்தர் மோகன் சிங் - 31 வயதில் - ஜனவரி 1, 2004 - ரான்பாக்ஸி
2.கௌதம் சிங்கானியா - 25 வயதில் - ஏப்ரல் 1, 1990 - ரேமன்ட்
3.சதீஷ் ரெட்டி - 25 வயதில் - ஜனவரி 18 ,1993 - Dr.ரெட்டீஸ்
4.G.V.ப்ரசாத் - 25 வயதில் - ஏப்ரல் 8,1996 -Dr.ரெட்டீஸ்
5.ரத்தன் டாடா - 39 வயதில் - ஆகஸ்ட் 17,1997 -TISCO
6.ஆனந்த் மஹிந்த்ரா - 34 வயதில் - நவம்பர் 23,1989 -மஹிந்த்ரா&மஹிந்த்ரா
7.ராஜிவ் பஜாஜ் - 35 வயதில் - மார்ச் 5,2002 - பஜாஜ் ஆட்டோ
8.சஞ்சீவ் பஜாஜ் - 35 வயதில் - செப்டம்பர் 14,2004 - பஜாஜ் ஆட்டோ
9.முகேஷ் அம்பானி - 20 வயதில் -ஏப்ரல் 1,1977 - ரிலையன்ஸ்
10.அனில் அம்பானி - 24 வயதில் -மே 1,1984 - ரிலையன்ஸ்
22 June 2005
[+/-] |
முதல் வலைப்பூ |
எவ்வளவு நாள் தான் மத்தவங்களோட பூக்களையே வாசம் பார்ப்பது.அதனால இன்னையில இருந்து நானும் வலைப்பதியனிட ஆரம்பிச்சுட்டேன்.