14 July 2005

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...


எப்போதெல்லாம் வெறுமையும்,சோகமும் கோடை வெயிலாய் என்னைப் பீடித்ததோ அப்போதெல்லாம் நான் தேடி ஓடும் நிழல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

நல்ல கருத்தாழம் நெஞ்சைத் தொடும் பாடல் வரிகள்.

வரிகளுக்கு மதிப்பளித்து அவற்றை அமுக்காது இயல்பாய்ப் பின் தொடரும் இசை.

கேட்டவர் மனதில் கேட்ட உடனேயே பாடலை நடவு செய்யும் குரல்.

எல்லாவற்றிற்கும் மேலாக பாடல் படம் ஆக்கப்பட்ட விதம்.

இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னால் ஒரு நேர்காணலில் இந்தப் பாடலானது முன்னர் சேரன் பாடுவது போன்று இருந்ததாகவும் பின்னர் அது சினேகாவிற்கு ஒதுக்கப்பட்டது எனவும் சினேகா குறிப்பிட்டிருந்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடம் ஆக்கப்பட்டது,தென்னிந்தியத் திரை உலகிற்கான ஃபிலிம்பேர் விருதுகளில் தமிழில் சிறந்த இசை அமைப்பாளர் விருது பெற்றது என்று தொடரும் இப்பாடலின் சாதனைகளில் ஒரு மகுடமாய் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த பின்னணிப் பாடகி விருதினையும்,சிறந்த பாடலாசிரியர் விருதினையும் பெற்றுள்ளது இந்தப்பாடல்.

சித்ரா,பா.விஜய் மற்றும் சேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

மனிதா! உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம்,படுதோல்வி எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்,அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

5 Comments:

Ganesh Gopalasubramanian said...

சேரன் தற்கால இயக்குனர்களிலிருந்து வித்தியாசப்படுபவர். ஆனால் அவரது அறிவு சார்ந்த ஆக்கங்களான தேசிய கீதம், பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு ஆகியவை எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை ஆனால் உணர்வு சார்ந்த ஆட்டோகிராஃப் வெளுத்து வாங்கி விட்டது. சேரனுக்கு பெரிய ஓஓஓஓஓஓஓஓ போடலாம்...

Sud Gopal said...

"அறிவு சார்ந்த ஆக்கங்களான தேசிய கீதம், பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு ஆகியவை எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை"
பாரதி கண்ணம்மா, 1997-தமிழ்ப் புத்தாண்டின் போது வெளியாகி அந்த சமயத்தில் ரிலீஸ் ஆன மற்ற எல்லாப் படங்களையும் ஓவர்டேக் செய்தது
என்று நினைக்கிறேன்.

"ஆனால் உணர்வு சார்ந்த ஆட்டோகிராஃப் வெளுத்து வாங்கி விட்டது"
உண்மை..உண்மை...உண்மை

நன்றி கணேஷ்(உங்க வீட்டில யாராவது ரைட்டர் சுஜாதா ரசிகர்கள் இருக்காங்களா???)

அன்பு said...

அருமையான பாடல். என்னைவிட எங்கள் 5 வயது மகளுக்கு மிகவும் பிடித்த பாடல் - ரசித்து பாடுவாள்.

இதற்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயம் இன்றைய செய்தித்தாளில் படித்தது:

கலைஞருக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும் இருந்த உரசல் இப்போது விரசல் அளவுக்கு சென்று விட்டது. வைரமுத்துவின் இடத்திற்கு கவிஞர் பா. விஜயை கொண்டுவரும் ஒரு முயற்சி நடக்கிறது. பா. விஜயின் கவிதை நூல் வெளியீட்டுவிழா காமராசர் அரங்கில் கலைஞர் தலைமையில் பிரமாண்டமாக அரங்கேறியது. வைரமுத்துவின் பிறந்தநாள் விழா அதே அரங்கில் கலைஞர் இல்லாமல் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் "நான் யாருக்கும் விரோதியல்ல ஆனால் சிலர் என்னை புரிந்துகொள்வதில்லை" என்று வருத்தப்பட்டதாகவும்... பாரதிராஜா பேசும்போது "தன்னுடைய கவிதை போலவே வைரமுத்து வாழ்க்கையிலும் யாருக்கும் தலை வணங்கக்கூடாது" என்று பேசியதாகவும்... கலைஞரின் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கும் வைரமுத்துவை மாற்றி பா. விஜயை அழைத்துள்ளதாகவும் தகவல்...

இது என்ன என்று தெரியவில்லை... வதந்தியாக இருக்க கடவது.

Unknown said...

சுதர்ஸன்,

ஒரு முறை கே டிவியில் அந்தப் பாடலில் இடம்பெறும் கண் தெரியாத இசைக்குழுத் தலைவரை பேட்டி கண்டார்கள். அவர் சொன்ன ஒரு நிகழ்ச்சி எனக்கு சேரன் மேல் மரியாதையை அதிகப்படுத்தியது.

இந்தப் பாடல் சேரன் மனம் உடைந்து இருக்கும்போது கடற்கரையில் சில குருட்டு பிச்சைக்காரகள் பாடுவது போல படமாக்க இருந்தார்களாம். படபிடிப்புக்கு முன் இதனை சேரன் விளக்கியபோது அந்தக் குழுத்தலைவர் "எங்கள் குழுவில் எல்லோருமே குறைந்தபட்சம் மாஸ்டர் டிகிரி வரை படித்தவர்கள். அவர்களை சுயமாக முன்னேறியவர்கள் போல காட்ட முயற்சியுங்கள். பிச்சைக்காரர்கள் போல காட்டுவது என் மனதிற்கு ஒப்பவில்லை" என்று சொன்னாராம். பின்னர் மறுநாள் சேரன் அழைத்து இப்பொழுது படமாக்கப்பட்டுள்ளது போல காட்சியினை மாற்றி இருக்கிறேன். சம்மதம் தானே என்று கேட்டு படமாக்கினாராம்.

Sud Gopal said...

அன்பு-
//அருமையான பாடல். என்னைவிட எங்கள் 5 வயது மகளுக்கு மிகவும் பிடித்த பாடல் - ரசித்து பாடுவாள்//
முன்னர் குறிப்பிட்டது போலவே பாடல் வரிகளை அமுக்காத மெல்லிசையும்,பாடும் குரலும் இந்தப் பாடலின் ரீச்சுக்கு முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.

உங்களுடைய ஜூனியர் பாடுவதை ரெக்கார்ட் செய்து தந்தால் நீங்க பெற்ற இன்பத்தை நாங்களும் பெற முடியும்.

KVR -
//அவர் சொன்ன ஒரு நிகழ்ச்சி எனக்கு சேரன் மேல் மரியாதையை அதிகப்படுத்தியது.//
இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்...கருத்துகளுக்கு நன்றி...