மழை வரும் போது நிழலுக்காக டீக் கடையைத் தவிர்த்து எங்கே வேண்டுமானாலும் ஒதுங்கலாம்.அதுவும் சூடான பருப்புவடை,போண்டா போடும் கடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.பாடி மாஸ் இன்டெக்ஸ்,ஒபேசிட்டி என்று ஜல்லியடிப்பவர்கள் மழைக்குப் பயந்து எங்கேயும் ஒதுங்கக் கூடாது.திரு,திருவென முழிக்காமல் கீழே தொடரவும்.
"அடச்சே,என்ன மழைப்பா??சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்களேன்"என்ற அந்த சிவப்புச்சட்டை ஆசாமியின் குரல் கேட்டு தான் நான் இந்தப் பூவுலகிற்கு மறுபடியும் திரும்பினேன்."குடை எடுத்திட்டு வரும்போதெல்லாம் மழை பெய்யறதேயில்லை.இன்னைக்கு மறந்து குடைய வெச்சுட்டு வந்தனோ போச்சு மழ கொட்டிட்டு இருக்கு" என்று அவர் பாட்டுக்கு மழைக்கு தன்னுடன் ஒதுங்கிய சக மனிதர்களுடன் பேச ஆரம்பித்து விட்டார்.நாங்கள் அனைவரும் ஒதுங்கிய இடம் "அஜீத் டீ-இஷ்டால்".அவருக்கு இடம் தந்துவிட்டு கடைக்குள் இருந்து வந்த வடை சுடும் வாசனையின் உபயத்தால் சொர்க்கலோகத்திற்கு மறுபடியும் பயணிக்க ஆரம்பித்தேன்.
வெளியே மழை பாட்டுக்கு வெளுத்துக் கொட்டிக்கொண்டிருந்தது."ஹூம்.ஆஹா....அட வடையில் இஞ்சி,கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டிருக்காங்க போலிருக்கு.இது வெங்காய பக்கொடா பொரிச்செடுக்கும் சத்தம் தான்.அய்யோ..இந்த போண்டா எல்லாம் குண்டு,குண்டா பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு" என்று எனது ஐம்புலன்கள் தகவல்களைச் சேகரித்து தங்த வண்ணம் இருந்தன.
"முழுவதும் வறுக்கப்பட்ட பொருட்களை நீ சுத்தமாத் தவிர்க்கணும்.குறிப்ப உனக்குப் பிடிச்ச நொறுக்குத் தீனிகளான வடை,சிப்ஸ்,பக்கோடா.அப்புறமா,நார்ச்சத்து இருக்கிற பொருளா நிறைய சாப்பிடணும்.என்ன தான் உன்னோட பாடி மாஸ் இன்டெக்ஸ் படி கரெக்டான வெயிட்னாலும்,ஜெனடிக்கலா உங்க வீட்ல அம்மா சைட் எல்லாருமே ஒபீஸ் தான்.ஹல்லோ நான் உன் கிட்ட தான் சொல்லீட்டு இருக்கேன்"என்ற அவளது அறிவுரை ஒரு மின்னலாய் வெட்டிச் சென்றது.அவளைச் சந்தித்தது முதல் என்னால் நிம்மதியா சாப்பிட முடியலை.போயும் போயும் ஒரு நியூட்ரீஷியனைக் காதலித்தது தப்பாப் போச்சு.
"சார்,ஒரு வடை எடுத்துக்கோங்க"என்ற சிவப்புச் சட்டை ஆசாமியின் தாராள மனப்பான்மைக்கு நன்றி சொல்லி வடையக் கவனமாய்த் தவிர்த்தேன்."என்ன ஆயில் உபயோகிக்கறாங்களோ?எப்பத்த மாவோ?வடை போடற ஆசாமி சுத்த பத்தமாத் தான் சுடுவானா?இந்தப் பாத்திரங்களைப் பார்த்தா இதெல்லாம் குளிச்சே மாமாங்கமாயிருக்கும் போல இருக்கே?வாசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.ஆனா,மேடமோட வார்த்தைகளை மெமரியில ஏத்திக்கோ"என்றது எனது மனசாட்சி.பார்வையை மழையின் பக்கம் திருப்பினேன்.இன்னமும் சோவென ஊற்றிக்கொண்டிருந்தது.
"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியுது சார்.பொது இடத்தில வந்திட்டா நாமும் சோதியில ஐக்கியம் ஆயிடணும்.தவிர,இது நான் ரெகுலராச் சாப்பிடற கடை தான்.சுத்தம் பத்தி எல்லாம் கவலப்படாம ரெண்டு வடய உள்ள தள்ளுங்க.உங்க வயசுக்கு கல்லு,மண்ணு சாப்பிட்டாக் கூட செரிமானம் ஆயிடும்.தங்கம், அந்தச் சட்டினியைக் கொஞ்சம் இங்கே தள்ளு"என்று வடையினை வதம் செய்ய ஆரம்பித்தார் சிவப்புச்சட்டை ஆசாமி.
"அவர் சொல்றதிலும் நியாயம் இருக்கு.வடை போட்ற ஆள் கூட நல்ல துணி தான் போட்டிருக்கான்.முகத்தையும் ஷேவ் பண்ணியிருக்கான்.அவன அசப்பில பாத்தா அல்ட்டிமேட் இஷ்டார் மாதிரிக் கூட இருக்கான்."என்று மனதில் நினைத்துக் கொண்டே தட்டின் மேல் ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்த வடைகளின் மேலே பார்வையை மையப்படுத்தினேன்.
"உங்க ஃபேமிலியில ஹார்ட் டிசீசஸ் வந்து மண்டையப் போட்டவங்க கவுன்ட் இதுவரைக்கும் நாலு.இதுக்கு அவங்களோட உணவு முறைகளும் சரியா உடலை மெயின்டெயின் செய்யாததும் தான் காரணும்னு உனக்கு நல்லாவே தெரியும் தான.இவ்ளோ ஏன் உங்க ராஜியக்காவுக்கு கல்யாணம் தள்ளிப் போறதுக்கு முக்கியக் காரணம் ஷீ இஸ் fat.அதனால நீ வந்து....."ஒரு மின்னல் இடியாய் முழங்கியது நினைவுக்கு வந்து தொலைத்தது.
"வடை சுடுறது மாதிரி அதை அரைக்கிறதும் ஒரு கலை தான்.முழுசா அரைபடாத பருப்பு பல்லுல பட்டுக் கடிபடும் போது இருக்கிற சுகம் இருக்கே.அட.அட.அதுவும் இந்தப் பருப்பு வடை கூடச் சின்ன வெங்காயச் சட்னி தொட்டுட்டு சாப்டா...ஆஹா...இத விட பெங்களூர் பக்கம் மத்தூர் வடைன்னு ஒண்ணு செய்வான் பாரு.அந்த வடையோட டேஸ்டுக்கு நம்ம சொத்தே எழுதிக் கொடுத்தாலும் தகும்"எனது ஆர்வமின்மையை உணர்ந்த சிவப்புச்சட்டை தற்போது பக்கத்திலிருந்த மற்றுமொரு வடைப் பிரியரிடம் உரையாடக் கொண்டிருந்தார்.வெளியே மழையின் வேகம் சற்றுத் தணிந்திருந்தது.
"சே.பாவம் இந்தக் கடைக்காரர்.மழை வந்ததனால சனங்க யாரும் வூட்டை வுட்டு வெளியே வரவே இல்லை.அதனால சரியாக் கூட்டமும் இல்லை;வியாபாரமும் இல்லை.இப்படி மழைக்கு ஒதுங்கினவங்களை நம்பித்தான் இவரோட இன்னத்த பொழப்பே இருக்கு.சுத்தம்,சுகாதாரம்,பி.எம்.ஐ,ஒபேசிட்டி,இன்டர்சிட்டின்னு கண்டதையும் போட்டுக் குழப்பாம ரெண்டு வடைய வாங்கி உள்ள தள்ளுவியா.."என்றது மனசின் குரல்.
"சரி ரெண்டு வடையச் சாப்பிட்டுடு நாளக் காலையில ஜாக்கிங்க்ல ஒரு ரெண்டு ரவுண்டு கூட்டிக்குவோம்.ஆனால்,இந்த சிவப்புச் சட்டைக்கு முன்னால வடை வாங்கிச் சாப்பிடரது நல்லா இருக்காது"என எண்ணிக்கொண்டே மௌனமாய் இருந்தேன்.மெல்லத் தூறலும் நிற்க ஆரம்பித்தது.சிவப்புச்சட்டையும் தனது சகாக்களுடன் கிளம்பியது.
"கிளம்பீட்டாங்கய்யா...கிளம்பீட்டாங்க"என்று மனசில் கூவிக்கொண்டே "ரெண்டு பருப்பு வடை,நிறையச் சட்னியோட குடுங்க"என்றேன்.
"வடையெல்லாம் ஆகிப் போச்சு."
"என்னது???"
"வடையெல்லாம் தீர்ந்து போச்சு சார்.நல்ல மழக்காலம் பாருங்க.எல்லாம் சூடு ஆறரதுக்கு முந்தியே வித்துப் போகுது.வேற ஏதாவது வேணுமின்னாக் கேளுங்க"என்றும் முழக்கமிட்டவாரே பால் பாக்கெட்டைப் பிரிக்க ஆரம்பித்தார் கடைக்காரர்.
"நல்ல வேளை வடை தீர்ந்திடுச்சு.எந்த எண்ணைல சுட்டதோ??எந்த மாவில சுட்டதோ?சன்டே-அன்னைக்குக் காலையில சீக்கிரம் எழுந்து ஓடரதே பெரிசு.இதில ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ராவா??தப்பிச்சேன்"என்று எச்சிலை விழுங்கியவாறே வடைச்சட்டியை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.
ஆகவே அன்பர்களே,மறுபடியும் இந்தக் கட்டுரையின் முதல் பாரவைப் படிக்கவும்.
25 July 2005
கொட்டும் மழையும் தொட்டுக்க சூடான ஒரு காதல் கதையும்
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
நன்றாக உள்ளது, வித்தியாசமான நடை
//நன்றாக உள்ளது, வித்தியாசமான நடை// - குழலி
குழலி, ஒங்க கமெண்ட்ட
நன்றாக உள்ளது
வித்யாசமான வடை
அப்டீன்னு தப்பா படிச்சுட்டேன்... sorry ;-)
நல்லா இருக்கு சுதர்சன். என்னாலே நல்லா identify பண்ண முடியுது :-(
சுதர்ஸன், நீங்க என்னோட ஜூனியர் சுதர்ஸனா இருக்க முடியாது. ஏன்னா அப்போவே அவருக்கும் BMIக்கும் சம்பந்தமே இருக்காது.
வடையெல்லாம் வாசனை நம்ம மூக்குக்கு வரும்போதே வாங்கி சாப்ட்றணும். இல்லாங்காட்டி இப்படி பொலம்ப வேண்டியது தான்.
இந்தப் பதிவினை அப்டேட் செய்யும் போது தவறுதலாய் ஒரு பின்னூட்டம் அழிக்கப்பட்டு விட்டது.
துளசியக்கா,என்னைக் கோவிச்சுக்காதீங்க.இதோ நீங்க கொடுத்த பின்னூட்டம்.
Good One.
ரசித்துப் படிச்சேன்.
வாழ்த்துக்கள்.
துளசி
குழலி,துளசியக்கா உங்க பாராட்டுக்களுக்கு நன்றி.
ரம்யா:
பாராட்டுக்கு நன்றீங்கா..
//என்னாலே நல்லா identify பண்ண முடியுது :-(//
இது மட்டும் பிரியலை எனக்கு.
KVR:
//வடையெல்லாம் வாசனை நம்ம மூக்குக்கு வரும்போதே வாங்கி சாப்ட்றணும். இல்லாங்காட்டி இப்படி பொலம்ப வேண்டியது தான்//
என்ன செய்ய...என் நேரம் அப்படி ஆகிடுச்சு...
goinchami6:
//அட! அட!//
வட..வட.. என்று தலைப்பிடலாம இந்தக் கவிதைக்கு...???
நல்ல முயற்சி.
வாசித்துக் கொண்டு போகும் போது, இன்று வடை சுட்டுச் சாப்பிடுவோமா! என மனசு நப்பாசை கொண்டது.
வடை சுடுறது மாதிரி அதை அரைக்கிறதும் ஒரு கலை தான்.முழுசா அரைபடாத பருப்பு பல்லுல பட்டுக் கடிபடும் போது இருக்கிற சுகம் இருக்கே. இந்த வசனங்களை வாசித்ததும் அம்மா சுட்டுத் தந்த கடலைப் பருப்பு வடை வந்து கட்டாயம் இன்று வடை சுட வேண்டும் என்றது.
ம்... கடைசிப் பந்தியோடை சேர்த்து மீண்டும் முதற்பந்தியை வாசித்ததும் ஒண்டும் வேண்டாம் பேசாமல் ஒரு அப்பிளையோ மெலனையோ சாப்பிட்டிட்டு இரு என்று மனசு சொல்கிறது.
சுவையாக எழுதியிருக்கிறீங்கள் சுதர்சன்.
மழைப்பெய்யும்போது எல்லாம் சுட வடை
சாப்பிட ஆசையாக இருக்கும்.இந்தப்பதிவுப்படித்தப்பின்பு
இன்னும் அதிகமாகி விட்டது
Post a Comment