"தம்பி,ஏழே கால் நியூஸ் ஆரம்பிச்சாச்சு.போய் குளிச்சுட்டு வந்திடு" இந்த வாசகம் கேட்காத நாட்களே இல்லை எனலாம் எனது K.G.நாட்களில்.
இங்கே தம்பி என்று விளிக்கப்பட்டது எனது மாமா.
என்னதான் எங்கள் வீட்டில் அப்போது சாவி கொடுக்கும் கடிகாரம் இருந்தாலும் எனது தாத்தாவிற்கு ஆகாசவாணி தான் கடிகாரம்.எங்கள் வீட்டில் இருந்த ரேடியோப் பெட்டியோ அரதப் பழசான ஒன்று.என் தாத்தாவின் திருமணப்பரிசாக அவரது எதிரிகளால் பரிசளிக்கப்பட்டது என்று கேலி செய்வது எங்கள் பாட்டியின் தினசரிக் கடமைகளில் ஒன்றாய் இருந்தது.
"ஏம்மா அப்பவோட ஜிகிரி தோஸ்த்துகளைப் போய் இப்படிப் பேசறியே"என்று மெதுவாகத் தீயில் எண்ணை ஊற்றத் துவங்குவார் என் மாமா."ஆமாம்.உங்கப்பா தான் அவங்கள மெச்சிக்கணும்.தோஸ்துகளாம் தோஸ்துங்க.எல்லாம் எச்சக் கையால காக்கா ஓட்டாத ஆளுங்க.அவங்கள விட்டுத் தள்ளு.அவங்க பரிசாக் கொடுத்த இந்தப் பொட்டி-யை வச்சிட்டு உங்க அப்பா செஞ்ச கூத்து இருக்கே.அப்ப எங்க ஊரில ரேடியோ எல்லாம் கிடையாது.இவருக்கோ ரேடியோக் கேக்காம உண்ட சோறு சீரணம் ஆகாது.இவர் புடிச்ச புடிவாதத்தினால எங்க தல தீவாளிக்கு எங்க வீட்டுல இருந்து எல்லா சனமும் இங்கயே வந்திட்டாங்க."என்று தனது வணக்கம் தமிழகத்தைத் தொடர்வார் என் பாட்டிம்மா.
இப்படி ரேடியோவை வைவதெல்லாம் வெறும் நடிப்பே என்பதை இலங்கை வானொலியில் மாலை நேர ஒலிபரப்புகளில் வரும் பாடல்களை ரசித்தவாறே அவற்றை முணுமுணுக்கும் பாட்டியின் மற்றுமொரு முகம் காட்டிக் கொடுத்துவிடும்.
இந்த வானொலியின் விசேஷம் என்னவென்றால்,இதன் வாக்குவம் குழாய்களின் மூலம் இயங்குவதைக் குறிப்பிடலாம்.ட்ரான்சிஸ்ட்டரின் எல்டர் சிஸ்டர் இது :)
நீங்கள் 7 மணிக்கு ஏதாவது நிகழ்ச்சியினைக் கேட்க வேண்டும் என்றால் வானொலியினை சுமார் 6.45க்கே ஆன் செய்து விட வேண்டும்.(கூகிளிட்டுத் தெரிந்து கொள்ளலாம்).ஆயினும் எத்தனையோ இதயங்களின் சாயங்கால சந்தோஷமாய் வானொலி இருந்தது என்பதினை மறுப்பதற்கில்லை.
திருமணமாகாத சித்திக்குப் பிடித்த இலங்கை ஒலிபரப்பு(எனக்குப் பிடித்தது அவற்றினூடெ வரும் பிறந்த தின வாழ்த்துக்கள்),என் மாமாவிற்குப் பிடித்த கிரிக்கேட் வர்னணைகள்,தாத்தாவிற்குப் பிடித்த மதிய நேரத்து கர்னாடக சங்கீதம்,புதனிரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் அரை மணி நேர நாடகம்,என்னுடைய favourite என்று முத்திரை குத்திவிட்டு அனைவரும் அமர்ந்து கேட்கும் மழலையர் பூங்கா,ஞாயிறு மதியம் ஒலி வலம் வரும் ஒரு மணி நேர நாடகம்/ஒலிச் சித்திரம்,மார்கழிக் காலைகளை எழுப்பும் திருப்பாவை,திருவம்பாவை விளக்கங்கள் இப்படிப் பலப் பல நிகழ்ச்சிகள்.
எந்த ராஜா எந்த பட்டிணம் போனாலும் எங்கள் தாத்தா மாலை 6.30க்கு அலுவலகத்திலிருந்து வந்து விடுவார்.6.30 மாநிலச் செய்திகள்,அதற்குப் பிறகு என் பாட்டியுடன் சிறிது சண்டை(பெரும்பாலும் இரவு டிபன் பற்றியும்,எங்கள் மாமா நேரத்திற்கு வீடு திரும்பாத்து பற்றியுமே இருக்கும்)பிறகு 7.15 தேசியச் செய்திகள் என்று தொடரும்.அவர் விருப்ப ஓய்வு பெற்ற போது வீட்டினுள் தொலைக்காட்சி வந்திருந்த போதிலும் அவரது அந்தப் பழய வானொலி மீதான காதல் குறையவில்லை.
அட இப்போது தான் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.அப்போது சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் நேர்முக வர்ணனை தமிழில் சென்னை வானொலி நிலையத்தின் புண்ணியத்தால் வந்து கொண்டிருந்தது.ஒளிக்கு தூர்தர்ஷனையும் ஒலிக்கு வானொலியினையும் set செய்து புதுமை செய்தார் எங்கள் தாத்தா.அந்தச் சமயங்களில் தெருவே எங்கள் வீட்டில் தான் இருக்கும்.துபாய் கலர் டி.வி. வைத்திருந்த சத்தியமூர்த்தி மாமா கூட எங்கள் வீட்டில் தான் மேட்ச் பார்ப்பார்.எனது பாட்டிக்கோ பெருமை கொள்ளாது.
ஹூம்....இப்பொது அந்த வானொலியும் இல்லை எனது தாத்தவும் இல்லை இந்தப் பூவுலகில்.நான் 7வது படிக்கும் போது(ரோஜா வெளிவந்த சமயம்)ஒரு கால் பரிட்சை விடுமுறையின் போது எனது தாத்தாவும் அதற்கு சற்றேறக்குறைய 15 நாட்களுக்கு முன்னால் அவரது வானொலி நண்பனும் இயக்கமற்றுப் போயினர்.
இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை.
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை.
01 July 2005
ஆகாசவாணி,செய்திகள் வாசிப்பது...
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
மனதை தொடும் பதிவு.
எளிமையான நடை..
நல்ல பதிவு! நல்ல நடை!!
இந்த ரேடியோ நாடகம்'ன்தும் நினைவுக்கு வர்றது '....சத்திரம்'! அப்ப மனோரமா நடிச்சது!
என்றும் அன்புடன்,
துளசி.
"........என் தாத்தாவின் திருமணப்பரிசாக அவரது எதிரிகளால் பரிசளிக்கப்பட்டது என்று கேலி செய்வது எங்கள் பாட்டியின் தினசரிக் கடமைகளில் ஒன்றாய் இருந்தது......"
சுவாரசியமான பாட்டிதான் :-)
நல்ல நடை..... சுவையான கருத்து..... நான் சொல்ல நினைத்தை துளசி சொல்லிவிட்டார்கள். வெட்டி ஒட்டிவிடலாமா என்று கூட யோசித்தேன் :-)
துளசியக்கா,
அந்த வானொலி நாடகத்தின் பெயர் காப்பு கட்டிச் சத்திரம் (அப்படி என்றால் என்ன?)
லதா,
காப்புக்கட்டின்ற இடத்துலே இருக்கற சத்திரம்னு நினைக்கிறேன்.
துளசியக்கா
பாலாஜி பாரி:
தங்களின் பின்னூட்டங்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன.வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல.
துளசியக்கா:
ரொம்ப சந்தோஷம்.ஆனா மனோரமா நடிச்ச நாடகத்தோட பேரு "காட்டுப்பட்டி சத்திரம்"னு நினைக்கிறேன்.பெரியவங்க யாராவது இத்தப் பட்ச்சா கரீட்டா இல்லையான்னு சொல்லுங்க.
அருணா மேடம்:
"சுவாரசியமான பாட்டிதான் :-)"
நேத்திக்கு தொலைபேசியில எங்க பாட்டி கூட பேசும் போது இதச் சொன்னேன்.ரொம்பவும் சந்தோஷப் பட்டாங்க.பாராட்டுக்களுக்கு நன்றி.
லதா மேடம்:
மனோரமா நடிச்ச நாடகத்தோட பேரு "காட்டுப்பட்டி சத்திரம்"னு நினைக்கிறேன்.வருகைக்கு நன்றி.
Post a Comment