03 August 2005

எளிமையாக இருப்பது ஒரு குற்றமா?

"நெசமாவா சொல்ர??என்னப்பா இது,நீ வாங்கிற சம்பளத்துக்கு ஒரு செல் போன் கூட வாங்க முடியலையா உன்னால?அடப்போப்பா"என்ற ஒரு சொந்தக்காரரின் கேள்விக்கு என்ன பதில் தருவது?

"இன்னும் சைக்கிள்லயும் பஸ்ஸிலயுமா ஆஃபீஸ் போய்ட்டு இருக்க?சீக்கிரமா ஒரு டூ வீலர் வாங்கிக்கப்பா.என்ன தான் ஆஃபீஸ் பக்கம்னாலும் வண்டில போய் இறங்கினாத் தான ஒரு கெத்தாய் இருக்கும்.சைக்கிள் எல்லாம் அந்தக் காலத்து வண்டி"என்ற அப்பாவின் நண்பருக்கு எப்படிப் புரிய வைப்பது.

இங்கே நிறையப் பேருக்கு எளிமைக்கும்,ஏழ்மைக்கும் வித்தியாசமே தெரிவதில்லை.கடன் வாங்கியாவது பகட்டாய்த் தோற்றமளிப்பது தவறில்லை நம்ம ஊரில்.ஆனால் எளிமையாய் இருக்க முயற்சிப்பவருக்குக் கிடைக்கும் பட்டமோ கஞ்ச மகாப் பிரபு.

"என்கிட்ட கார் கிடையாது.அதனால ஒரு விழாவுக்கு நான் ஆட்டோவில போயிருந்தேன்.நான் ஆட்டோவில் இருந்து இறங்கியதைப் பார்த்த விழா அமைப்பாளர் ஓடி வந்து,"என்ன சார் இது?சொல்லியிருந்தா நானே வீட்டுக்கு வண்டி அனுப்பிச்சிருப்பேனே.ரஜினி,ஸ்ரீதேவியை எல்லாம் வச்சி படம் எடுத்த டைரக்டர் நீங்க.ஒரு கார் கூட வச்சிக்காம இருக்கீங்களே?"என்று கேட்டார்.கார் இல்லாமல் இருப்பது ஒரு குற்றமா?எளிமையாய் இருப்பதும் ஒரு தவறா"என்று உதிரிப்பூக்கள்-மகேந்திரன் அங்கலாய்த்தது நினைவுக்கு வருகிறது.

எளிமையின் இலக்கணமாய்த் திகழ்ந்த கர்மவீரர் சாதிக்காத விஷயங்களையா தற்போது ஸ்கார்ப்பியோவிலும்,குவாலிசிலும் பறக்கும் கரை வேட்டிகள் சாதித்து விட்டார்கள்.எளிமையாய் இருப்பது அப்படி ஒன்றும் கடினமான செயலும் அல்ல.ஒவ்வொருவரும் தங்கள் நிலையினை உணர்ந்து இயல்பாய் இருந்தாலே போதும்.ஒரு மனிதனுக்கு எப்போதெல்லாம் தனது நிலையின்று உயர்வு வருகிறதோ(பதவி,பொருள்),அப்போதெல்லாம் அடி மனதில் புதைத்து வைக்கப்பட்ட மிருக எண்ணங்களான கோபம்,அடக்கி ஆள நினைத்தல்,எள்ளல் போன்றவை வெளி வர முயற்சி செய்யும்.இவற்றையும் அடக்கி ஆண்டால் மட்டுமே ஒருவர் அடைந்த உயர்வு முழுமை பெரும்.

என் அப்பாவின் நண்பர் ஒருவர்,மிகவும் எளிமையானவர்.எல்லார்க்கும் உதவும் மனது படைத்தவர்.எங்கள் குடியிருப்புப் பகுதியில் பொதுக் குடிநீர் வழங்கல்,சாலை செப்பனிடல்,சாலையோர மரங்கள் பராமரிப்பு போன்ற பொதுக் காரியங்களில் தன்னார்வத்துடன் கலந்து வந்தார்.குடி தண்ணீர்ப் பிரச்சினைக்காக எப்போது வேண்டுமானாலும் அவரது கதவைத் தட்டலாம்.பொதுக் காரியங்கள் அவரது பெரும்பான்மையான நேரத்தினை விழுங்கிய போதும்,முகம் சுளிக்காது பங்களிப்புத் தருவார்.

அவரது நண்பர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க,வார்டு தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்கினார்.கடுமையான போட்டிகளுக்குப் பின் கரை வேட்டிகளை வீழ்த்திவிட்டு வெற்றியும் பெற்றார்.அவரது பதவிக்காலத்தில் முதல் இரு வருடங்கள் வழக்கம் போல கால்களைத் தரையில் ஊன்றித்தான் நடந்து சென்றார்.அவரது பெருகி வரும் செல்வாக்கினையும்,அவர் சார்ந்த சமூகத்தின் சாதி ஓட்டுகளையும் கணக்குப் போட்டு ஒரு முன்னேற்றக் கழகம் அவரை நல்ல விலைக்கு வாங்கியது.அவருக்கு மாவட்ட அளவில் ஒரு நல்ல பதவியும் கொடுக்கப்பட்டது.TVS-50, மாருதி ஆம்னியாக வளர்சிதை மாற்றம் அடைந்தது."நாய்கள் சாக்கிரதை"என்ற அறிவிப்போடு ஒரு காவலாளி அவர் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டான்.

அவரை வார்டுப் பிரச்சினைக்கு அணுகுவதே கடினமாய் இருந்தது.எளிமையின் சின்னமாய் இருந்தவர் ஒரே நாளில் தலைகீழாக மாறினார்.ஆனால் இதற்கு விலையாக அவர் கொடுத்த பல நட்புக்கள் மற்றும் நேசமனங்களின் இழப்பினை அவர் அப்போது அறிந்திருக்க வழியில்லை.கழகத்தில் யாரோ அவரது விரோதி போட்டுக் கொடுக்க,சிறகுகள் வெட்டப்பட்டன.கெத்தாயிருக்கும் என்று சொல்லி வாங்கப்பட்ட காருக்குப் பெட்ரோல் வாங்க வழியின்றி விற்றார்.தனது வீட்டையும் காலி செய்து விட்டு எங்கள் குடியிருப்புப் பகுதியினை விட்டு விட்டுச் சென்று விட்டார்.

இவ்வளவு களேபரங்களுக்கிடையே உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.இந்த முறை எங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் போட்டியிடப்போவதாகச் சொல்லி வருகிறார்.எங்கோ தெருவில் ஒரு பிரச்சார ஊர்தி செல்கிறது.அதிலிருந்து மெல்லியதாய்க் கசிந்து கொண்டே செல்கிறது கீழ் வரும் பாடல்.
"பூமியில் இருப்பதும்,வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே"

11 Comments:

துளசி கோபால் said...

ஆமாங்க. நீங்க சொல்றது உண்மைதான். ச்சும்மா கெத்துக்கு ஆளுங்க பண்ணற அலம்பல் கூடித்தான் போச்சு.

நான் எப்பவும்சொல்றது என்னன்னா,
'எனக்குத் தெரிஞ்சவுங்களுக்கு என்னைப் பத்தித்தெரியும். தெரியாதவங்களுக்குத் தெரியவைக்கணும் என்ற அவசியம் இல்லை'

சரியா?

துளசி.

Badri Seshadri said...

நீங்கள் சொன்ன கதை சிந்திக்க வைத்தது. எனக்குத் தெரிந்த வகையில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தொண்டர்களைத் தவிர மீதி அனைவருமே அரசியலில் நுழைந்தவுடன் தலைகால் புரியாமல்தான் ஆடுகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு உடனடியாக அழிவு வருவதில்லை. அதனால் புதிதாக அரசியலை எதிர்நோக்கி வரும் பிறரும் மோசமாகவே நடந்துகொள்கின்றனர். மாற்றத்துக்கு வழி: நிஜமாகவே நல்ல மனிதர்கள் உள்ளே நுழைவதுதான்.

வானம்பாடி said...

உண்மைதான். எளிமைக்கும் கஞ்சத்தனத்திற்கும் வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை.

அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சொல்லமுடியாது, 1000 கார் ஆடம்பர பவனி வந்தால்தான் முதல்வர், 100 கார் வந்தால் அமைச்சர் என்ற எண்ணம் மக்களுக்கும் உள்ளது. எளிமையாக இருக்கும் புதுவை முதல்வர்களை கிண்டலடிக்கும் எத்தனையே தமிழ்நாட்டவரை கண்டிருக்கிறேன்.

நல்ல பதிவு சுதர்சன்.

Ramya Nageswaran said...

சுதர்சன் கோபால், சுனாமி வந்த பொழுது உரைநடையாக நான் எழுதிய ஒரு கவிதை(?!) நீங்கள் எழுதியிருக்கும் விஷயத்திற்கு தொடப்பிருப்பதால் இதோ:

‘அர்மானி’ உடை உடுத்தி, ‘ரோலெக்ஸ்’ கடிகாரம் அணிந்தேன்
‘மெர்சிடீஸ்’ காரில் விமான நிலையம் அடைந்து, முதல் வகுப்பில் பயணித்தேன்
ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி, அழகு நங்கையுடன் பீச்சில் உலாவச் சென்றேன்
இவ்வளவு செய்தும் என் அந்தஸ்து தெரியவில்லையே இந்தச் சுனாமிக்கு!

enRenRum-anbudan.BALA said...

சுதர்சன் கோபால்,

சிந்திக்க வைக்கும் ஒரு அருமையான பதிவு தந்ததற்கு நன்றி. நீங்கள் கூறுவது அரசியல்வாதி என்றில்லை, பொதுவாக அனைவருக்கும் ஓரளவு பொருந்தும்.

எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பதை நினைவில் நிறுத்துபவருக்கு இம்மாதிரியான வீழ்ச்சி
ஏற்படாது !!!

எ.அ.பாலா

Unknown said...

அவசியம் இருந்து செலவு செய்யாதது, அவசியம் இல்லாம செலவு செய்யிறது - ரெண்டுமே தப்பு தான்.

Vetri Thirumalai said...

இதற்கு பெரும்பாலான மக்களின் மனோநிலைதான் காரணம். இந்த காலத்தில் எளிமையாய் பிரசாரம் செய்யும் வேட்பாளர்களை மக்களே மதிப்பதில்லை. கண்ணை பறிக்கும் போஸ்டர்கள், பல கார்கள் புடைசூழ போனால்தான் அவன் தகுதியானவன் என்று நினைக்கிறார்கள். அவ்வளவு எளிமையாக இருந்து சாதனைகள் பல செய்த காமரசரையே தோற்கடித்தற்கும் இந்த காரணம்தான். சில சமயம் இப்படிப்பட்ட மக்களுக்கு இந்த அரசியல்வாதிகள்தான் லாயக்கு என்ற எண்ணம் கூட வந்து போகும்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

சுதர்ஸன், நல்ல கருத்தை வைத்து எழுதி இருக்கிறீர்கள். எளிமையாக இருக்க நினைப்பவர்களுக்குக் குமுகாயத்தில் அழுத்தங்கள் உண்டாகின்றன என்பது உண்மை தான். இரண்டாம் வகுப்பில் இரயிலில் சென்றால் "ஏன், ஏசி வகுப்புல வந்துருக்கலாமே"ங்கறாங்க!

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

மன்னிக்கவும். சுதர்சன் என்பதைத் தவறாக சுதர்ஸன் என்று எழுதியதற்காக.

Sud Gopal said...

துளசி கோபால்:
//'எனக்குத் தெரிஞ்சவுங்களுக்கு என்னைப் பத்தித்தெரியும். தெரியாதவங்களுக்குத் தெரியவைக்கணும் என்ற அவசியம் இல்லை'//
நூத்தில ஒரு வார்த்தை சொன்னீங்க.

badri:
//மாற்றத்துக்கு வழி: நிஜமாகவே நல்ல மனிதர்கள் உள்ளே நுழைவதுதான்.//
"மாற்றம் வேண்டும். மாற்றம் வேண்டும் என்று கேட்காதே. மாற்றம் வேண்டுமெனில்,மாற்றமாக நீ மாறி விடு"
courtesy:உருப்படாதது.

sudharsan:
//நல்ல பதிவு சுதர்சன்.//
மிக்க நன்றி சுதர்சன் :-)

Ramya Nageswaran:
//உரைநடையாக நான் எழுதிய ஒரு கவிதை(?!)//
உங்க கவிதை நல்லாவே இருந்தது மேடம்.
பாலா:
//நீங்கள் கூறுவது அரசியல்வாதி என்றில்லை, பொதுவாக அனைவருக்கும் ஓரளவு பொருந்தும்.//
ஆமாம் பாலா.அரசியல்வாதியும் நம்மில் ஒருவர்தானே.

KVR:
//அவசியம் இருந்து செலவு செய்யாதது, அவசியம் இல்லாம செலவு செய்யிறது - ரெண்டுமே தப்பு தான்//
அப்படிப் போடுங்க அரிவாளை.

Vetri Thirumalai:
//சில சமயம் இப்படிப்பட்ட மக்களுக்கு இந்த அரசியல்வாதிகள்தான் லாயக்கு என்ற எண்ணம் கூட வந்து போகும்//
அய்யோ உங்க சாபம் 2006-ல பலிச்சிரப்போகுது..

செல்வராஜ் (R. Selvaraj):
//இரண்டாம் வகுப்பில் இரயிலில் சென்றால் "ஏன், ஏசி வகுப்புல வந்துருக்கலாமே"ங்கறாங்க//
எல்லாருக்குமே இந்தப் பிரச்சினை இருந்திருக்கும் போலிருக்கிறது.நீங்கள் என்னை சுதர்ஸன் என்றும் விளிக்கலாம் :-)

கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.நன்றி.நன்றி.

Ramya Nageswaran said...

சுதர்சன் கோபால், ஒரு கோரிக்கை.. தயவு செய்து மேடம் எல்லாம் வேண்டாம்.. ரம்யான்னே சொல்லலாம் இல்லே அக்காவும் ஒ.கே. சரியா?