சே,இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல.என் தலையில கொஞ்சம் தலையில முடி மொளச்சிடக் கூடாதே.உடனே எதோ ஒரு கோயிலுக்குக் கிளப்பீட்டுப் போயிடும்.கால் பரிச்சை லீவுல தான் கொல தெய்வம் கோயில் போய் மொட்டை போட்டுட்டு வந்தோம்.இப்போ இந்த முழுப் பரிச்சை லீவில பழனில மொட்டை போடணும்ணு சொல்றாங்க.இவங்களுக்கு என்ன?என் கூடப் படிக்கிற K.கதிர்வேல்,"கொடுக்காப்புளி"தங்கதுரை,மீனாச்சியக்கா வூட்டு ரமேசு இவிங்க எல்லாம் புதுசா வந்திருக்கிற மாயாவி பட சூர்யா மாதிரி முடி வெட்டிக்கப் போறாங்களாம்.
அப்பா,ரெண்டு வருசம் முன்னாடி எங்களை விட்டுப் போனப்போ ஆரம்பிச்சது இந்த மொட்டை போடரது.பழனியில ரெண்டு தடவை,கொடுமுடில ஒரு தடவை,குல தெய்வம் கோயில்ல ரெண்டு வாட்டின்னு தொடர்ந்துட்டே போகுது.இந்த வாட்டி லீவிலயே அடிக்கரதினால,பள்ளிக்கூடம் தொறக்கரதுக்கு முன்னாடியே முடி வந்திடும்.அப்பவாவது யாரும் என்னை மொட்டையான்னு கூப்பிடாம,"பழனிச்சாமி"ன்னு என் பேர் சொல்லியே கூப்பிடறாங்களான்னு பார்ப்போம்.
இப்படி வரிசைக்கா மொட்டை போட்றதப் பத்தி யாராவது கேட்டாலும் பழனிச்சாமிக்கு சாமி பக்தி சாஸ்தி;அவன் நேர்ந்து கிட்டதனாலத் தான் இப்படின்னு அம்மா பொய் சொல்றப்பவெல்லாம் ஊடால புகுந்து அம்மா பொய் சொல்றாங்கன்னு சொல்லத் தோணும்.ஆனா மொட்டை போட்டதுக்கு அப்புறம் அம்மா சந்தனத்தைப் பூசுரது குளுகுளுன்னு சூப்பரா இருக்கும்.இதுக்கோசரமே அடிக்கொருக்கா மொட்டை போட்டுக்கலாம்னு கூடத் தோணும்.
"பழனிக்கண்ணூ,டேய்.அங்க என்ன பண்ணீட்டு இருக்கற?"அம்மா முன்னாடி இருந்து கூப்படரது கேக்குது.அம்மா சந்தோசமா இருந்தா இப்படித்தான் பழனிக்கண்ணூன்னு கூப்புடும்.
"அம்மா.இதோ வந்திட்டேன்."முன்னாடி ரூமுக்குப் போன புதுசா ஒரு ஆள்,அம்மா கூடப் பேசிட்டு இருக்காரு.
"பழனிச்சாமிக்கி என்ன அடையாளம் தெரியலை போலிருக்கு.அதான் இப்படி முழிக்கிறாப்பல.நான் தான் முத்துசாமி.உங்க அய்யனோட பங்காளி. அட,உங்கூட ஒண்ணாம்புப் படிச்ச கவிதாவோட அப்பா. ".
அட ஆமாம்.எங்க அப்பா இருந்தப்போ எங்க வீட்டுக்கு வந்து போயிட்டு இருந்தக் கொஞ்சப் பேர்த்தில இவரும் ஒருத்தரு.
"பழனி,நீ போய் சாமினாதன் கடையில அஞ்சு வடையும் இந்த தூக்கு போசியில மூணு காப்பியும் வாங்கியா"
அது ஏனோ எங்க அப்பா இருந்தப்பவும் சரி இப்பவும் சரி எங்க அம்மா வூட்டிலிருந்தோ எங்க அப்பா வீட்டிலிருந்தோ எங்க வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்க.எங்க அம்மாவும் என்னைய எந்த சொந்தக்காரங்க வீட்டுக்கும் கூட்டிட்டுப் போனதில்லை.ஆனா பக்கத்து வீட்டுக் கணேசண்ணன் வீட்டுக்கு எப்பப் பார்த்தாலும் யாரொ ஒரு சொந்தக்காரர் வந்து போயிட்டு இருப்பாரு.ஒரு வாட்டி இதப்பத்திக் கேட்டதுக்கு அம்மா கிட்ட நல்லா மாத்து வாங்கிக் கட்டீட்டது தான் மிச்சம்.
கணேசண்ணன் தான் சொன்னாரு இந்தக் காதல் படத்துல வர்ர மாதிரி எங்க அப்பாவும்,அம்மாவும் லவ் பண்ணி அப்பரமா அவங்க வீட்டுக்குத் தெரியாம திருட்டுக் கல்யாணம் செஞ்சிட்டாங்களாம். இதனாலத்தான் எங்க வீட்டுக்கு எந்தத் தாத்தாவும்,பாட்டியும் வாரதில்லையாம். இதெல்லாஞ்சரி,இந்தப் பிரச்சினை நடந்தப்போ நான் எங்கண்ணா போயிருந்தேன்னு கேட்டதுக்கு தலையில ஒரு தட்டுத் தட்டீட்டு சத்தமாச் சிரிச்சாரு கணேசண்ணன்.இது ஏன்னே தெரியல?அம்மா எப்பாவாச்சி சந்தோசமா இருக்கறப்போ இதப் பத்திக் கேக்கணும்.
டுர்ர்ரு....டுர்ர்ரு...அய்யய்யோ..வண்டிய வெரசலா ஓட்டிட்டு வந்ததில சாமினாதன் கடையத் தாண்டிப் போயிட்டேன்.
விரூம்..
இப்போ ரிவர்ஸ் எடுத்தாச்சி.ஹைய்யா..சாமினாதன் கடையும் வந்தாச்சு.
"அண்ணா,அம்மா அஞ்சு வடையும்,இந்தத் தூக்கு போசியில மூணு காப்பியும் வாங்கியாரச் சொன்னாங்க"
"என்ன பழனிச்சாமி.லீவு வுட்டு பத்து நாளு ஆகப்போகுது.இன்னும் உன் தலைக்கு மொட்டை போடாம இருக்கர.அது சரி,வீட்டில யாராவது ஒரம்பறையா?வடை,காப்பி எல்லாம் பார்த்தா வந்திருக்கரது பெரிய டிக்கட்னு தான் நினைக்கிரேன்.ஒரம்பரை ஆம்பளையா இல்ல பொம்பளையா?"இது டீ மாஸ்டர்.
இந்தாள் கூடவெல்லாம் பேசக்கூடாதுன்னு அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்ததனால தலையை ஆட்டிடு வடபொட்டலத்தயும்,தூக்குபோசியையும் வாங்கிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
டுர்ர்..டுர்ர்..பீம்...பீம்...டுர்ர்ர்ர்ர்..
"என்ன பண்றது தனம். நான் குவைத் போன ஒரே மாசத்தில இந்தத் தகவல் வந்திச்சு.போன வாரம் தான் திரும்பி வந்தேன்.ஓடிப் போனவன் போயிட்டான்.அவனையே நினைச்சிட்டு இருந்தா பழனிச்சாமி கதியை நினைச்சிப் பாரு.ஏதோ நீ பால்வாடி ஆயாவா இருக்கரதால அரைக்கஞ்சி சாப்பிடமுடியுது.இதுவும் இல்லாம இருந்திருந்தா என்ன செஞ்சிருக்க முடியும்.உன்னோட ட்ரான்ஸ்பருக்கு ஏற்பாடு செஞ்சிடறேன்.கொஞ்ச நாள்ல வந்திடும்.அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ".
"ஹூம்.நீங்க தகிரியம் கொடுக்கற மாதிரி ஆதரவாப் பேசக்கூட ஆள் இங்கில்லை. எங்க ரெண்டு வீடுகள்ளயும் தான் தண்ணியத் தெளிச்சி விட்டுட்டாங்களே. சொந்த ஊர்னா யாராவது ஒருத்தராவது சப்போர்ட்டுக்கு வருவாங்க.பொழைக்க வந்த ஊர்தானே.ஆம்பளையில்லாத வூடுன்னு ஊர்ல கண்ட நாயும் இங்க ஒதுங்கப் பாக்குது.ஒரு கல்யாணம்,காட்ச்சின்னு போனாக்கூட எல்லாரும் சாடை பேசராங்க.இவ்வளவு ஏன் ஒரு தடைவை பழனிச்சாமிய முடி வெட்டரதுக்குக் கூட்டிடுப் போய் திரும்பி வாரதுக்குள்ளே உசிரு போய் உசுரு வந்திடுச்சு.கேக்க ஆளில்லைங்கற தெனாவெட்டில கையப் புடுச்சிட்டான் கட்டிங் பண்ற ஆறுமுகம்.
அதிலிருந்து பழனிக்கு மூணு மாசத்துக்கொருக்கா மொட்டை தான்.நானும் ஏதாச்சி ஒரு சாமிக்கி விரதம் புடிக்க ஆரம்பிச்சிடுவேன்.இந்தக் வெள்ளப் பொடவைய விடக் காவியும்,மஞ்சளும் தான் என்னைக் காப்பாத்துது.ஹூம்.நான் வாழ்ந்து முடிஞ்ச ஆளு.எனக்கு இதெல்லாம் பழகிப்போச்சு.ஆனால் இவந்தான் ஆவூன்னா மொட்டையான்னு அழுதிட்டே இருக்கான்.வயசுப் பையன் வெத வெதமாக் கிராப்பு வைக்க வுடாமே நானும் ஒவ்வொரு கோயிலுக்காக் கூட்டிட்டுப் போய் மொட்டை போட்டிட்டு இருக்கேன்."
"அட.தனம் என்னாய்ப் போயிருச்சின்னு அழுகறே.நான் இருக்கேன். அப்பறம் ஒரு முக்கியமான விசயம்.மகேஸ்வரிக்கு இதெல்லாம் தெரியாது.தெரியாம இருக்கரதே நல்லதுண்ணு நினைக்கிறேன்.நீ என்ன சொல்ற?"
"இனிமேப்பட்டு நான் சொல்ரதுக்கு என்ன இருக்கு.விதி விட்ட வழின்னு போக வேண்டியது தான். அடக் கைய எல்லாம் புடிச்சிட்டு விடுங்க.பழனி வார சத்தம் கேக்குது"
எனக்குக் கால் பரிச்சை லீவு விட்டாச்சு.புது ஸ்கூல்ல புதுசா நெறையக் கூட்டாளிங்க கெடச்சிருக்காங்க.நாளைக்கு என்னை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போரென்னு முந்தா நேத்து வந்த முத்துசாமி சார் சொன்னாரு.ஆமாம்,இனிமேப்பட்டு அவர சார்னு தான் கூப்பிடணும்னு அம்மா சொல்லியிருக்காங்க.
இப்பெல்லாம் அவரும் வாரத்துக்கு ரெண்டு மூணு வாட்டி எங்க புது வீட்டுக்கு வந்திடராறு.அன்னைக்கெல்லாம் எங்க வீட்டுல நல்ல சாப்பாடு தான்.அவர் வந்தவுடனே நானும் அம்மா சொன்னா மாதிரி விளையாடப் போயிருவேன்.எங்க வீட்டுக்கு TV கூட வந்திடுச்சு.அதுவும் துபாய் TV. புது ஊர்ல அம்மாவுக்கு நெறய ஃபிரண்ட்ஸ் கெடச்சிட்டாங்க.முன்ன மாதிரி அம்மா அடிக்கடி எந்தக் கோயிலுக்கும் வேண்டிக்கரதில்லை.எனக்கும் மொட்டை போடறதில்லை.
ஆனா எனக்கு தான் இந்த எதுவுமே பிடிக்கலை. முத்துசாமி சார்ல இருந்து புதுசா வச்சிருக்கற ஸ்டைலான கிராப்பு வரைக்கும்.
---- சுதர்சன்.கோபால்
பி.கு: இக்கதை முகமூடி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை. போட்டியின் நடுவர் மாலனின் கருத்துகள் பின்வருமாறு:
"இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்துசாமி சாரிலிருந்து... கதை ஒரு நுட்பமான கதை. ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை சற்றும் மிகையில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. அடிக்கடி மொட்டையடித்துக் கொள்ளும் நிர்பந்த்தத்திற்குள்ளாகிறான் பழனிச்சாமி. அந்த மொட்டைக்குப் பின் ஒரு காரணம் இருக்கிறது. அது எவருக்கும் மகிழ்ச்சிதரும் காரணமல்ல. நிர்கதியான பெண்களை வெள்ளைப் புடவையை விட மஞ்சளும் காவியும்தான் காக்கிறது என்பதில் ஓர் உரத்து முழக்கப்படாத சமூக அவலம் இருக்கிறது. அம்மாவை அம்மாவாக, ஒரு புனிதப் பசுவாகப் பார்க்கிற மனோபாவம்தான் நம்மிடையே உருவாக்கப்பட்டிருக்கிறது. அவளை ஒரு பெண்ணாகவும் பார்ப்பதற்கு ஒரு பேருள்ளம் வேண்டும். தி.ஜானகிராமனுக்கு இருந்த அத்தகைய உள்ளத்தை இந்தக் கதாசிரியரிடமும் பார்க்க முடிகிறது. சமூகம் வகுத்துள்ள ஒழுக்கவிதிகளை வலியுறுத்தாமல் பெண்ணைப் பெண்ணாகப் பார்க்க முற்படும் அதே வேளையில் அதை முற்றிலும் அங்கீகரிக்க முடியாத சங்கடமும் கடைசியில் வெளிப்படுகிறது.யதார்த்தம், வ்டிவமைதி இவை கருதிக் கூடக் கதை இந்த விதமாக முடிந்திருக்கலாம்."
08 August 2005
சிறுகதை - "முத்துசாமி சாரில் இருந்து புதுக் கிராப்பு வரை"
Subscribe to:
Post Comments (Atom)
30 Comments:
அருமையான கதை, சுதர்சன்.
இந்தக் கதைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் என்ற என் ஊகத்தை இங்கே பதிவு செய்து விடுகிறேன்.
ரொம்ப நல்லா இருக்கு சுதர்சன் கோபால்.. ஒரு சின்னப் பையனோட பார்வையிலேயே எவ்வளவு பெரிய பிரச்சனைகளை சொல்லிட்டீங்க.. நானும் சுரேஷ் சொன்னதை வழிமொழியறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்!
கதை நல்லா இருந்தது...பாராட்டுகள்
அன்புடன்...ச.சங்கர்
அருமையாக இருந்தது சுதர்சன்... உங்களதுதான் முதல் கதை.. பரிசு கிடைக்க வாழ்த்துக்கள் (இப்படி பின்னூட்டம் இடுவது ஒன்னும் ப்ரச்னை இல்லை... நான் ஒன்னும் நடுவர் இல்லையே...)
சிறுகதைப் போட்டி
அருமை சார்! வாழ்த்துக்கள்.
சுதர்சன்,
கதை அருமையா வந்திருக்கு.
பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்!!!
என்றும் அன்புடன்,
துளசி.
Good sudharshan...Fantastic!
Hi Sudharsan,
Nice story. Good way of taking it through. All the Best for receiving reward.
Anbudan,
Vijay.
Nice Story ..
சுதர்சன்,
கதையை நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. தொடர்ந்து எழுதுங்கள்.
தேசிகன்
சமீப காலத்தில் படித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்று.
நன்றி
மிகவும் அருமை.
ராஜ்குமார்
நான் இறுதியாண்டு பொறியியல் படிக்கும்போது முதன்முதலாக ஒரு நேர்காணலுக்குச் சென்ற போது இருந்த மனநிலையை மீண்டும் உணர்கிறேன்.
இதுவரை கருத்துத் தெரிவித்தும்,வாழ்த்துக்கள் கூறியும் என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி.
சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் ஒரு விரிவான பின்னூட்டம் இட முயற்சிக்கிறேன்.
சுதர்சன்.கோபால்
அருமை! வாழ்த்துக்கள்.
அருமையான கதை, வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் சுதர்ஸன்
//அருமையான கதை, சுதர்சன்.
இந்தக் கதைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் என்ற என் ஊகத்தை இங்கே பதிவு செய்து விடுகிறேன். //
அன்றே சொன்னார் - அறிஞர் அன்றே சொன்னார்!
Congratulations !!!
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சுதர்சன்
//நானும் சுரேஷ் சொன்னதை வழிமொழியறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்!//
அறிஞர் சொன்னதை இன்னோரு அறிஞர் வழிமொழிந்தார்... அன்றே வழிமொழிந்தார்!!! :-)))
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல.நேரமின்மையால் நிறைய எழுத முடியவில்லை.
இன்று மாலை இது பற்றி ஒரு பதிவிடலாம் என்று நினைத்துள்ளேன்.
Dear சுதர்சன் கோபால்,
மனதை நெருடிய ஒரு அருமையான கதை !!!! பரிசு வென்றதற்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள்
அன்புடன்
ராஜ்குமார்
பரிசுக்கு வாழ்த்துக்கள். கதை நன்று. கடைசியில்தான் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை. அம்மா முத்துச்சாமியுடன் இருப்பது பையனுக்கு விருப்பமில்லை. பையனுடைய இந்த மனவுளைச்சலைப் படிக்கிறவர்களின் மீது கதை கடைசியில் சுமத்துகிறது. ஆனால் இது தனக்கானவொரு முடிவினை எடுக்கும் ஒரு ஆண்-பெண் உறவினைக் குழந்தையின் வாயிலாகக் குற்றவுணர்வு கொள்ளச் செய்துவிடும் அவலம் இருப்பதையே காட்டுகிறது. நான் சொல்வதன் அர்த்தம் குழந்தையின் கருத்தைத் தள்ளு என்பதோ அல்லது முத்துசாமி வைத்துக் கொள்ளலாமென்பதை நியாயப் படுத்துவதோ அல்ல, மாறாக அந்தம்மாவின் உடல் மற்றும் உணர்வு பூர்வமான தேவைகளுக்காக அவள் செய்தது நியாயமே என்பதை அந்தப் பையனுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும். அதை விடுத்துக் கிராப்போடு பையன் குமைகிறான் என்று முடிப்பது அம்மாக்களைப் 'புனிதப் பசுக்களாகவே' (மாலன் சொன்னது) வைத்திருக்க வேண்டும் என்ற சமயக் கோட்பாடுகளைக் கட்டுறுதி செய்வது போலாகிவிடுகிறது.
பரிசு வென்றதற்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள் Sudharsan Gopal
அருமையான கதை சுதர்சன்.
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
நெஞ்சைத் நெருடும் அழகான கதையை இயல்பான தமிழ் நடையில் அளித்திருந்தீர்கள். பாராட்டுகள் படைப்புக்கும், பரிசுக்கும்.
-Vinodh
http://visai.blogspot.com
arumaiyana kurunkadhai. Parisu petradharku vazhthukal ...vash.
ரொம்ப லேட்டா படிச்சிருக்கேன் ஆனாலும், எழுதாம இருக்க முடியலை :) நல்ல கதைங்க.. மனசை என்னவோ பண்ணுது...
பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள்...நல்ல கதை...
Post a Comment