17 August 2005

அய்யப்ப பக்தர்கள் - தேவை ஒரு மாரல் போலீஸ்

டிஸ்க்ளெய்மர்: ஒரு குறிப்பிட்ட இறை வழிபாட்டு முறை நல்ல வழிகாட்டுதல் இன்றி நீர்த்துப் போய் வருகிறது என்ற ஆதங்கத்தின் விளைவினால் எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை. இதன் மூலம் யாருடைய மனத்தையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை.எல்லாம் வல்ல இறையின்(அதனை எந்தப் பெயரிட்டு அழைப்பினும்) மேல் எனக்கும் தீவிர நம்பிக்கையுண்டு.

"ரொம்ப நாளைக்கப்புறமா இந்த மாதிரி மூணு நாள் சேர்ந்தாப்பில விடுமுறை வருது.அதனால நாம தீவாளிக்குன்னு போட்டிருந்த பிளானைக் கேன்சல் பண்ணிட்டு இப்பமே மதுரை பக்கம் போயிட்டு வந்திடுவோம்.மணி கிட்ட கூட ஒரு டாடா - சுமோவுக்கு சொல்லி வச்சாச்சு" என்று அப்பா கூறியதிலிருந்து எனது மதுரைக் கனவுகள் ஆரம்பமாயின.திட்டமிட்ட படி நாங்கள் மதுரையை அடைந்தோம்.

"இன்னைக்குச் சனிக்கெழமை.அதனால கூட்டமும் அவ்வளவு அதிகமா இருக்காது.எந்தப் பிக்கல் பிடுங்கல் இல்லாமக் கோவிலையும் ஆர அமர சுத்திப் பார்க்கலாம்."என மனசுக்குள் நினைத்தவாறே கோவிலினுள் நுழைந்த போது எழுந்த அந்தக் கூச்சலினால் நான் சற்று ஆடிப்போனதென்னமோ உண்மை தான்.

"சாமியே....." "சரணம் அய்யப்பா!" "சாமியே....." "சரணம் அய்யப்பா!"

"சே.இங்கயும் வந்திட்டாங்களா."என்று உச்சுக் கொட்டினேன்.

"ஏம்பா தம்பி.ஒரு மண்டலம் கஷ்டப்பட்டு விரதம் இருந்து,இருமுடி கட்டி,பல சோதனைகளயெல்லாம் காட்டில தாண்டி,சாமி கும்பிடப் போறவிங்க அவிங்க.அய்யப்ப சாமி பக்தர்களை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது."

"அம்மா,நீயும் அண்ணனும் வெளியே போய் உங்க கச்சேரியை வச்சிகுங்க.மொதல்ல சாமி கும்பிடர வழியப் பாருங்க"சொன்னது தங்கை.

எனக்குச் சின்ன வயதில் இருந்தே அய்யப்ப சாமிகள் என்று அழைக்கப்படும் கூட்டத்தைக் கண்டால் ஒரு பயம்.அமைதியாக வழிபாடு நடந்து கொண்டிருக்கும் எந்தக் கோவிலும் இவர்கள் நுழைந்தவுடன் யானை புகுந்த வெண்கலக் கடையாய் மாறிவிடும்.எந்தக் கோவிலுக்குப் போனாலும் இவர்கள் அய்யப்பனைத் தான் உரக்கத் தொழுவார்கள். அதிலும் யார் சப்தமாகக் கூவுவது என்று சில சமயம் போட்டிகளும் நடக்கும். அன்றும் அங்கே அது தான் நிகழ்ந்தது.

சுந்தரேஸ்வரர் சன்னதியில், சில சிறுமிகள் தேவாரத்தை இனிமையாக ஓதிக் கொண்டிருந்தனர்.சன்னதியில் இருந்தவர்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.இந்தப் பக்தர்கள் உள்ளே நுழைந்தது தான் தாமதம்.பாவம் அந்தச் சிறுமியர்.பக்தர்களது பரவசப்பிளிரல்களுக்கிடையே இந்தச் சிறுமியரின் குரல் எடுபடவில்லை.பக்த கோடிகளுக்கோ, கூட்டத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்த்ததில் சொல்லவொண்ணாப் பெருமிதமும்,பூரிப்பும்.

அந்தக் காலத்தில் சிறு குழுக்களாகக் காட்டுக்குள்ளே நெடுந்தொலைவு பயணம் செய்து தான், சாஸ்தாவின் கோவிலை அடைய முடியும்.அப்படிப் பயணப்படும் போது ஒரு குழுவில் இருப்போரிடையே பயணத்தினால் ஏற்படும் சோர்வினைப் போக்குவதற்காகவும்,உற்சாகத்தை எழுப்புவதற்காகவும் உருவாக்கப்பட்டவையே இந்த உரத்த கோஷங்கள் என்பது எனது கணிப்பு.அது மட்டுமல்லாது பல்வேறு மொழி,கலாச்சாரப் பின்னணியில் இருந்து வரும் பக்தர் குழுக்களிடையே நெடும்பயணத்தில் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கவும் இவை பயன்பட்டிருக்கலாம்.
இது தெரியாமல், இப்போது எங்கு சென்றாலும் இந்தக் கோஷங்களை எழுப்பும் பக்தர்களைப் பார்க்கும் போது எனக்கு ஐடென்டிடி கிரைசிஸ் வந்து தவிக்கும் சிறு குழந்தைகள் தான் நினைவுக்கு வருவர். இப்படிக் கூவிக் கூவித் தான் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது யார் இட்ட விதிமுறை?

இத்தோடு விட்டதா என்ன?அடுத்து மீனாட்சி அம்மன் கோவிலில் உச்சிகாலப் பூசைக்காகக் காத்திருந்த கூட்டத்திடையேயும் அவர்களது சாகசங்கள் தொடர்ந்தன.மகளிர்க்கென இருந்த க்யூவில் ஊடுறுவ முற்பட்டனர்.அய்யப்ப சாமிங்கதானே என்று அவர்களுக்கு அதில் இடமும் அளிக்கப்பட்டது.அங்கே அவர்கள் தமது தாய் மொழியில் (அதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து) அடித்த கமெண்டுகள் அவர்களது மனநிலையை அப்பட்டமாய் உணர்த்தியது. திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் தங்களது உணர்ச்சிகளை சரியான வழியில் சேனலைஸ் செய்வதற்கு இது போன்ற விரதங்களும் அதன் அசோசியேட்டட் பழக்க வழக்கங்களும் துணை புரியும். ஃபேஷனுக்காய் மாலை போடும் இன்றைய பக்தர்கள்,இது பற்றி உணர்ந்திருப்பார்கள் என எதிர்பார்ப்பது நமது தவறு தான்.

"கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா..."என்ற பழமொழி வேறு ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.கொஞ்ச நேரத்தில் கோவிலை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வெளியேறினோம்.

"அந்த அய்யப்ப சாமிக .....லிருந்து வந்திருக்காங்களாம்.சபரி மலைக்குப் போயிட்டு இந்த மாதிரி எங்கயாவது ட்ரிப் போவாங்களாம்.மதுரைக்கு இதுவரை மூணு வாட்டி வந்திருக்காங்களாம்.இன்னைக்குச் சாயங்காலம் அழகர் கோயிலுக்குப் போராங்களாம்.அவிங்க ட்ரைவர் நம்மாளுதான் சார்.அவன் தான் இதெல்லாம் சொன்னான்"

மதுரை நகரத்துக் கடை வீதிகளிலும் ஃபில்டர் கிங்ஸ் பிடிக்கும் ரமேசு சாமி,பெப்ஸி குடிக்கும் குருசாமி,பெண்கள் கூட்டத்தில் உரசிச் செல்லும் கன்னிச்சாமி என நிறைய அய்யப்ப சாமிகள் தென்பட்டார்கள். இடையிடையே சிறு சிறு கோவில்களைக் கண்ட போது அவரது பிளிரல்களும் தொடரத்தான் செய்தன.மதுரையில் மட்டுமல்ல;பழனி உட்படப் பல கோவில்களிலும் மேலே சொன்ன விஷயங்கள் ஆண்டு முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

சபரிமலைக்குப் போய்விட்டுப் பழனிக்குப் போகாமல் வீடு திரும்பக்கூடாது என்பதால் பயணச்செலவுக்குக் காசில்லாத நிலையிலும் கஷ்டப்பட்டுப் பழனிக்கு வந்த சில அய்யப்ப பக்தர்களை என் இளம் பிராயத்தில் பார்த்திருக்கிறேன்.இந்த மாதிரியான பக்தர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர்களை நெறிப்படுத்த ஒரு மாரல் போலீஸ் தேவையோ என்று தோன்றும்.

சாதி,மத பேதமில்லாத ஒரு இணக்கமான வழிபாட்டுச்சூழலுக்கு வழி செய்வதில் சபரிமலைக்கு ஒரு தனி இடமுண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை.ஆனால் அதே சமயத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பம்பா நதியின் சூழ்நிலைச் சீர்கேடு,ஆட்டு மந்தைகளாய்த் தாங்கள் செய்வதன் பொருள் உணராமல் நடந்து கொள்ளும் பக்தர்கள் என்று சபரிமலை சந்திக்கும் அபாயங்களும் இல்லாமல் இல்லை. இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்???

பின்கதைச்சுருக்கம்:
"அம்மா..அத்தை தான் ஃபோன் செஞ்சாங்க.அவங்களோட மாமனாரு,பெருந்துறையில தவறிட்டாராம்.நாளக்கிக் காலையில எரிப்பாங்க போலிருக்கு.இப்பமே வீட்டை விட்டுக் கிளம்பினாத்தான், ஏற்காடு எக்ஸ்ப்ரசைப் பிடிக்க முடியும்.அப்பத் தான் காலையில நேரத்துக்குப் போயிடலாம்"

"உக்கும்.எங்க அப்பா செத்ததுக்கு அவுங்க வீட்டில இருந்து யாராவது ஒரு ஆள் வந்திச்சா??நாம மட்டும் எதுக்கு செலவு பண்ணீட்டுப் போகணும்.அதெல்லாம் ஒண்ணும் வேணாம்"

"அப்பா நாளைக்குத் துபாய்ல இருந்து போன்ல கேட்டா என்ன சொல்ரது?"

"உங்க அண்ணன் தான் எப்படியும் இந்த வாரம் சபரிமலைக்கு மாலை போடப்போரான் தான.இன்னக்கிக் காலைலயே போட்டுட்டான்னு சொல்லீடுவோம்.மாலை போட்ட வீட்டில இருந்து இந்த மாதிரி விஷயங்களுக்கு யாரும் போகக் கூடாதுன்னு உங்க அப்பாவுக்குத் தெரியாதா என்ன??!!!"

9 Comments:

Anonymous said...

Thanks for writing about this.

NambikkaiRAMA said...

புல்லுருவிகளால் தான் இம்மாதிரியான பிரச்சினைகள் வருகின்றன. எல்லா சாமிக்கும் ஆசாமியாலத்தான் ஆபத்து. முன்னெச்சரிக்கையோடு வார்த்தகளை கையாண்டு உங்களது செய்தியை சொல்லியுள்ள விதம் என்னை மிகக் கவர்ந்தது.

வீ. எம் said...

மிக சரியாக சொன்னீர்கள் சுதர்சன். ஒரு காலத்தில் பக்திப்பெருக்கால் வந்த கோஷங்கள்.. இப்போதெல்லாம், பந்தா பன்னுவதற்கென்றாகிவிட்டது...

ஐய்யப்ப பக்தர்கள் கோஷம் போடுவார்கள் என்பது போய்... அடித்தொண்டையில் கோஷம் போட்டால் தான் பக்தர்கள் என்றாகிவிட்டது.. பேஷன் என்றாகிவிட்டது...

மேலும், சிகரெட் பிடித்துக்கொண்டு போகும் ஐய்யப்ப சாமிகளை பார்க்கும் போது...என்ன சொல்றது போங்க..
வீ எம்

குழலி / Kuzhali said...

சாமிக்கு தனி கிளாஸ் என்ற அளவிற்கு ஏற்கனவே வந்துவிட்டது, ஆனாலும் அய்யப்பன் கோவிலுக்கு போய் வருவது ஒரு மிகச் சிறந்த பயணம், அனுபவம், மகிழ்ச்சி எல்லாமும் சேர்ந்த ஒரு நல்ல அனுபவம்.

முகமூடி said...

நல்லா சொன்னீங்க போங்க. சாமிகளுக்கு தனி சிகரெட்டும், தனி சரக்கும் கண்டுபிடிக்கலாம்

// மணி கிட்ட கூட ஒரு டாடா - சுமோவுக்கு சொல்லி வச்சாச்சு" // நீங்களும் சப்வெர்ஸிவ் எழுத்தாளராயிட்டீங்களோன்னு ஒரு நிமிஷம் பயந்தே போனேன்

பத்ம ப்ரியா said...

மிகச்சரியாகச் சொன்னீர்கள்...இந்த ஐயப்ப பக்தர்கள் பூஜை என்ற பெயரில் செய்யும் அமர்களத்திற்க்கு அளவே இல்லை. என் பக்கத்து வீட்டில் பூஜை போடும் போது மைக் செட் போட்டு கத்தும் கத்தில் எனக்கு தலைவலியும் பாட்டிக்கு நெஞ்சு வலியும், அப்பாக்கு ப்ளட் ப்ரெஷரும் வந்தது என்பன இங்கே சொற் சிக்கனம் கருதி சொல்லப்பட்ட குறைந்த பட்ச பாதிப்புகள். குடியிருந்த வேப்ப மரத்தை காலி செய்து போன குயில்களும், அணில்களும் திரும்பி வந்ததாய் தெரியவில்லை

யாத்ரீகன் said...

அது மட்டுமில்லை.. மதுரைக்காரன் என்ற முறையில்.. மற்றுமொரு பெரிய கோபம் இவர்களிடம் எனக்கு...

கடவுளை வணங்காது இருக்கும் என்னைப்போன்றோரே... கோவிலினருகில் அசுத்தம் செய்ய யோசிப்போம்... பொது இடம் என.. ஆனால் இவர்கள், வாழைப்பழத்தோல்களை வீதியில் வீசுவதும், கோவில் சுவற்களில் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் என.. எங்கள் ஊரையோ அசுத்தப் படுத்துச்செல்வர்... ஒவ்வொரு முறையும் அப்படிச்செய்பவர்களைக்கண்டால் அப்படியே போய் அடித்துவிட்டு வரலாம் என்று தோன்றும்... ஆனால் என்னவோ கடைசிவரை செய்யவில்லை..

துளசி கோபால் said...

ஆமாம் சுதர்சன்.
இவுங்க அட்டகாசம் வரவரக்கூடிக்கிட்டே போகுது!
அதுவும் 'மாலை' போட்டுக்கிட்ட ஆட்டோக்காரர்கள் கதை வேற மாதிரி!

Anonymous said...

ஒரு சிறு முக்கியமற்ற அறிவிப்பு

தமிழ்மணம் சம்பந்தபட்ட நிரல்களை என் பதிவிலிருந்து நீக்கியிருக்கிறேன். காரணம் அவர்கள் என் பதிவை நானாகவே நீக்காவிட்டால், தனி விளக்கம் கொடுத்து நீக்க வேண்டிவரும். இதுவரை நான் எழுதியவை அர்த்தமின்றி போக வாய்ப்புள்ளது.

இந்த பதிவு இனி தமிழ்மணத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது தமிழ்மண நிர்வாகிகளைப் பொறுத்தது. அதே சமயம் என் பதிவில் தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ள சில முல்லாக்களின் பதிவையும் நீக்க வேண்டும். நான் எழுதுவதை கொஞ்சம் கூட சிந்திக்காமல் எனக்கு எதிராக பின்னூட்டமிட்டு வருவதே இவர்களின் பழக்கமாக இருக்கிறது. இது போன்ற பதிவுகள் தேவையா?

அதே போல யாரெல்லாம் இந்த பதிவை தங்களுடைய பதிவுகளில் இணைப்பு கொடுக்கிறார்களோ அது அவரவர் விருப்பம். அவர்களது பதிவின் முகவரி இந்த பதிவில் இருக்கலாமா என்பது பற்றி பின்னூட்டத்தில் குறிப்பெழுதினால், அதனை இணைக்கிறேன். இது ஒரு ரெசிபுரோக்கல் மற்றும் வல்காரிட்டி இன் டினமினேசன் அடிப்படையில் செய்கிறேன்.

நேசகுமார், ஐனோமினொ என்ற பெயரிலும் நான் எழுதிவருவதால் என்னமோபோ என்ற என்பதிவை தொடர்வதில் பல தொழில்நுட்ப சிக்கலையும் மன உளைச்சலையும் சந்திக்கிறேன்.இந்த பதிவை எதிர்த்து எழுதுபவர்களது இணைய முகவரியை இந்த பதிவில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். (உதாரணத்துக்கு அபு முஹை, நல்லடியார், இறைநேசன், அப்துல் குத்தூஸ், அபு அதில் ஆசாத்). கொடுப்பதன் ஒரே காரணம், நான் எதனை எதிர்க்கிறேன் என்பதும், நான் எதிர்க்கும் விஷயத்தை முழுமையாக இந்த பதிவின் வாசகர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவும். அபுமுஹை, நல்லடியார் போன்றோர் என்ன எழுதுகிறார்கள் என்பதை நன்றாக முழுமையாக படித்து விளங்கிக்கொண்டு இந்த என்னமோபோ பதிவை படிக்குமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். அவர்களது வார்த்தைகளை நான் திரிக்கிறேன் என்று வாசகர்கள் கருதினால், அதனைப் பற்றி எழுத அது வசதியாக இருக்கும்.

நான் இந்த முடிவை எடுக்கக் காரணம், இந்து மதத்தில் இருந்து கொண்டு, இஸ்லாத்தை மட்டும் திட்டித் தீர்ப்பதால் பிராமனர்கள், எந்த சிரமமும் இன்றி வருணாசிரமத்தை தினிக்கிறார்கள்.காஞ்சி சங்கராச்சாரியின் வீழ்ச்சிக்கு பின்னும் பிராமனீயம் ஒழியாது என நேசகுமாராகிய நான் கருதுவதால் பல்சுவை விசயங்கள் மட்டும் இனி எழுதப்போகிறேன். ஜெயமோகனை மதிக்கிறேன். அதுவும் என் ஊர்க்காரன் என்பதால்.

புலிப்பாண்டியும் நானும் சேர்ந்துதான் இதுவரை எழுதி வந்தோம்.இதற்கான நிதியுதவிகளை நண்பர் அரவிந்தன் நீலகண்டன் நாகர்கோவில் RSS மூலம் ஏற்பாடு செய்திருந்தார். தற்போது அவரே எழுத ஆரம்பித்து விட்டதால் அத்தகைய உதவிகளை எதிர் பார்க்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆதாயம் இல்லாமல் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. இதனால்தான் புலிப்பாண்டியை தவிர்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் என் நிலையை புரிந்து கொள்ளவில்லை.

மற்றபடி, இந்த பதிவை படிப்பவர்களுக்கு, இந்த பதிவை படிக்க நான் கொடுக்கும் கஷ்டத்தை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்மணம் என்ற ஒரே இடத்தில் பார்த்து எளிதில் இந்த இணைப்புக்கு வந்து படிப்பது வசதியானதுதான். ஆனால், தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நான் எந்த குழப்பத்தையும் தர விரும்பவில்லை. முடிந்தால் படியுங்கள். இல்லையேல் உதாசீனம் செய்துவிட்டு போங்கள். ஆயிரம் வருடங்களாக புரிந்து கொள்ளாததை இந்த நிமிடமேவா புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?

நான் வேறெந்த பதிவிலும் பின்னூட்டம் எழுதுவதில்லை. இதுவே என் கடைசி பின்னூட்டம். அதுவும் சுய விளக்கமாகவே.நேசகுமார், புலிப்பாண்டி எழுதியவை போலி பின்னூட்டம் என்று எனக்கு தோன்றினால் அதுவும் நீக்கப்படும். நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பின்னூட்டங்கள் நீக்கப்படும். எரிதங்கள் நீக்கப்படும். (எனக்கு நேரமிருந்தால்).