28 June 2005

2005 - ஒரு வி.ஆர்.எஸ் கதை.

இன்று காலை எனக்குப் பரிச்சயமான் குரல் ஒன்று எங்கள் குடியிருப்பின் படிக்கட்டுகளில் கேட்டது.குரலுக்குச் சொந்தக்காரர் யாராயிருக்கும் என்று யோசித்து முடிப்பதற்குள் அவர் எங்கள் வீட்டு அழைப்புமணியை அழுத்துவது கேட்டது."என்னப்பா,இன்னும் வேலைக்குக் கிளம்பலியா??கதவு திறந்திருந்தாலும் அனுமதி இல்லாம உள்ளே நுழையறது தப்பில்லையா"என்றவாரே ஒரு நாற்காலியினை ஆக்கிரமித்தார் முன்பு நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான திருவாளர்.பாண்டுரங்கன்."என்னா அங்கிள்.எப்படி இருக்கீங்க.வீட்டில எல்லாம் நல்லா இருக்காங்களா" என்று கேட்ட என் சகாவின் மனதில் அய்யோ இதுக்கு மேல பேருந்தைப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியோட்டம் துவங்கியது.

"எல்லாம் பரம சௌக்கியமா இருக்காங்கப்பா.என்னோட Ex-கலீக் வீட்டுல ஒரு பங்ஷன்.சரி இவ்ளோ தூரம் வந்திட்டோமே அப்படியே உங்களையும் பாத்திட்டுப் போகலாம்னு வந்தேன்.தவிர நீ ஆபீஸ் போரப்போ என்னை அப்படியே சில்க் போர்டில டிராப் பண்ணிடு.V.R.S.வாங்கினதில இருந்து வண்டி எடுக்கறதே கிடையாது" என்று தமது சிற்றுரையைத் தொடர்ந்தார்.எனக்கு இன்னமும் அலுவலகத்திற்கு நேரம் இருந்தது.அதனால் அவருடன் தொடர்ந்து உரையாட ஆரம்பித்தேன்.Stop.Stop,இருவர் மாறி மாறிப் பேசிக் கொண்டிருப்பது தான் உரையாடல் என்றால் இது அந்த ரகத்தில் சேராது.பாண்டு மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்.நான் அவருடன் வழக்கமாக உரையாடுபவர் போல "உம்" கொட்டிக் கேட்க(கேட்க மட்டுமே)ஆரம்பித்தேன்."

"நீங்க இந்த வீட்டுக்கு வந்து 8 மாசம் இருக்குமா?ஆமாம்.correct.எப்படி சொல்றேன்னா நான் V.R.S.வாங்கி 9 மாசம் முடிஞ்சு போச்சு.வாங்கினதுக்கப்புறமா நிம்மதியா ஒய்வு எடுக்காலாம்னு ஆசைப்பட்டு தான் எழுதிக்கொடுத்தேன்.இப்போ என்னடான்னா பேங்க் போயிருந்தாலாவது வாரக்கடைசிகளில் ஓய்வு கிடைச்சிருக்குமோன்னு தோணுது."என்றவாறே சற்றே மூச்சு வாங்கினார் பாண்டு.நான் சும்மா இருக்காமல் "என்ன சார்.இப்படி சொல்ரீங்க.இப்போ தான் உங்களுக்கு எந்த வேலையும் இல்லையே,நல்லா வீட்டில ஜாலியா ரெஸ்ட் எடுக்கலாமே"என்றது தான் தாமதம் திருவாளர்.பாண்டு தனது சொற்பொழிவைத் தொடர ஆரம்பித்தார்.

இஞ்சி,பச்சை மிளகாய் நறுக்கித் தருதல்,ஏலக்காய்ப் பொடி செய்தல்,தேங்காய் உடைப்பது,லைட் சுவிட்சுகளை அணைப்பது,வேலைக்காரம்மாவுக்குப் போடும் பாத்திரம் தேய்க்கும் பவுடர் பாக்கெட்டின் வாயைத் திறத்தல்,காப்பிப் பொடி அரைக்குமிடத்தே போய் வாங்கி வருதல்,மேற்படி காப்பிப் பொடியைச் சிந்தாமல் பழய பொடி மேலிருக்கும் படியும்,புதுப்பொடி கீழெயிருக்கும் படியும் கொட்டுதல்,அரை ஈர,முழு ஈரத் துண்டுகளை கலெக்டு செய்து கொண்டு போய் வேலைக்காரம்மாவிடம் தருதல்,எக்ஸ்ட்ரா பால் வாங்கி வருதல்,குக்கரின் கைப்பிடியினை ஆடாமல் இருக்கும்படி ஸ்க்ரூ ட்ரைவராலோ அல்லது கரண்டிக் காம்பாலோ டைட் செய்து தருவது,சாம்பாருக்கு உப்புப் போதுமா என்பதைத் துளி ருசி பார்த்து கரெக்டாகச் சொல்வது,லாண்டரியில் கணக்குப் பார்த்து வருகிற துணிகளைச் சரியாக அடுக்கி வைப்பது,ஒட்டடை அடித்தல்,மின் பல்புகளைத் துடைத்தல்,கடக் கடக் என்று சத்தம் போடும் மின் விசிறியின் சத்தம் வெறும் கேப்பிலிருந்து வருகிறதா இல்லை உள்ளே எதாவது கோளறா என்பதைத் தகுந்த ஆள் கொண்டு சரி செய்தல்.

இஸ்திரி சார்ஜுக்குப் பயந்து கொண்டு படுக்கை அடியில் மனைவி ஓசி மடிப்புக்கு வைக்கும் பட்டுப்புடவையின் இருப்பிடத்தை அவளுக்குத் தகுந்த நேரத்தில் நினைவு படுத்துதல்,மனைவி அந்தண்டை போயிருக்கும்போது அடுப்பில் பால் பொங்குகிறதா என்பதைக் கண்காணித்து அவசர ரிப்போர்ட் தருதல்,பேரனுக்குக் காலையில் ஸாக்ஸ் மாட்டி விடுதல்,அதே போல் பள்ளியிலிருந்து வந்ததும் கழற்றுதல்,கூரியர் பையன்,இதர சேல்ஸ் ரெப்கள் கதவைத் தட்டும் போது திறத்தல்,மனைவியின் மப்ளரைத் தேடித் தருதல்,காலையில் படுக்கை சுருட்டல்,பில்லோ கவர்கள் மாற்றுதல்,ஆயாவுக்கு பினைல் அளவாக ஊற்றுதல்,பாத்ரூமில் சோப்பு வழ வழவென்று இருந்தால் அதை வெய்யிலுக்கு அப்புறப்படுத்தி பக்குவமாக உலர வைத்தல்,சீரியல் நேரங்களை நினைவூட்டுவது,சீரியல் தொடர்ச்சியினைப் புரிய வைப்பத்ற்காக நானும் மெனக்கெட்டு அதனைப் பார்ப்பது.....

அப்பா...அப்பப்பா.. நல்லவேளை எனக்கு ஆபீசுக்கு நேரமாகிட்டது.இன்று மறக்காமல் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.முழுப்பயணத்திற்கு அணியாவிட்டாலும் சில்க் போர்ட் வரை அணிந்து செல்ல வேண்டும் என்றும் உறுதி எடுத்துக் கொண்டேன்.

2 Comments:

Sud Gopal said...

அவர் சொன்னது இவ்வளவுதான்.

உங்களது லிஸ்டில் ஏதாவது இருந்தால் அனுப்புங்களேன்.

நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

Balaji-Paari said...

போட்டுத் தாக்கீட்டீங்க...நல்ல பதிவு :)