27 June 2005

மச்சான், பரிசம் போட சிங்கப்பூரான் ராவில வாரான்...

மதிய உணவு அரட்டைக் கச்சேரியின் போது,எனது அலுவலக நண்பர் தமிழில் வரும் கிராமத்துத் திரைப்படங்களைப் பற்றி ஆரம்பித்தார்.அன்னாரது சொந்த ஊரோ தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் இருக்கிறது.அவருக்கு தமிழ் எழுதப் பேசத் தெரிந்ததே ஒரு பெரிய விஷயம்.எங்கள் அலுவலகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களினால் தமிழ் கற்றவர்கள் வரிசையில் அவரும் ஒருவர்.இப்படித் தமிழ் கற்றுக் கொண்டிருக்கும் அவர் தமிழின் வெவ்வேறு உச்சரிப்பு வடிவங்கள் பற்றியும் அறிந்திருப்பார் என்று எண்ணியது எனது தப்புத்தான்.

விஷயம் இது தான்...

நேற்று இரவு பொழுது போகாமல் வெவ்வேறு சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தவர் காதில் மேலே சொன்ன வசனம் கேட்டிருக்கிறது.அதன் அர்த்தம் விளங்காதவர்,முன்னமே நான் கூறியது போல ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு இன்று மதிய உணவின் போது கேட்டார்."சுட்ஸ்(இது தான் எனது விளிப்புப் பெயர்).மச்சான், பரிசம் போட பட்டாளத்தான் ராவில வாரான்...அப்படின்னா என்ன மீனிங்??"

இதைக் கேட்டதும் முதலில் திருவாத்தான் போல முழித்தேன்.பிறகு மெல்ல அவருக்கு அதைப் புரிய வைத்தேன்.

இவர் போன்ற அன்பர்களின் எதிர்கால நலனை முன்னிட்டு ஒரு "தமிழ்த் திரைப்பட கிராமியத் தமிழ் அகராதி"-யினைத் தொகுத்து அளித்து உள்ளேன்.

இந்தத் தொகுப்பில் இடம் பெறாத,இடம் பெறத் தகுதியான சொல்லோ,சொற்களோ இருப்பின் தயை கூர்ந்து எனக்குத் தெரியப் படுத்தவும்.

மச்சான்:சக்திவேலு,முத்து,ரத்தினம் என்ற பல நாமகரணங்களால் அறியப்படுபவர்.அடிக்கடி திருட்டுத்தாலி,ஓடிப் போதல் ஆகியவற்றைப் பற்றி பேசுவான்.கிராமப் பந்தயங்களில் சக்கையாக அடிபட்டாலும்,கடைசியில் அவனே ஜெயிப்பான்.

சிங்கப்பூரான்: பொல்லாத பூரான்.போடும் கணக்கெல்லாம் வெள்ளியிலேயே இருக்கும்.அந்த ஊரில் பல வீடுகளில் லேடியோப் பொட்டி பாடுவதற்கு காரண கர்த்தா.

பரிசம்: வேலாயியைக் கட்டிக்க இது போட வேண்டும்.மச்சான் பாரிச வாயுவோ,ப்ளட் கேன்சரோ வந்து உசிருக்குப் போராடிக்கொண்டிருப்பான்.வேலாயியின் அப்பனோ இதிலியே குறியாக இருப்பான்.சிங்கப்பூரான் இதைத் தயாராக நீட்டுவான்.

ராவு: ஜாமக்கணக்கில் ஓடும்.கொலைகள்,திருட்டுகள் நடக்கும் நேரம்.ஆள் மாறாட்டமாக அடித்து வீழ்த்தச் சௌகரியமான வேளை.

திருவிழா:மச்சான்கள் நிரம்பி வழியும் இடம்,ஊரங்கும் இதே பேச்சாயிருக்கும்.

பெரிய பண்ணை:எப்போதும் மாட்டு வண்டியில் தான் போவார்;மாடுகள் எப்போதும் ஜல்,ஜல் என்று தான் போகும்.வெள்ளை வேட்டி சட்டை,சவ்வாதுப் பொட்டு,வைரக்கடுக்கன் இல்லாத பெரிய பண்ணை,பைசாப் பிரயோஜனமில்லை.மகன் அல்லது மகள் பட்டிணத்தில் படித்துக் கொண்டிருப்பார்கள்.

பாம்பு:சமயம் பார்த்துக் கடித்து வைக்கும்.இதற்கு முறி அல்லது மூலிகை மருந்து அல்லது மந்திரம் பார்த்துக் கொண்டிருப்பவர் கதாநாயகனின் எதிரியாக இருப்பார்.

அரிவாள்:யாராவது ஒருவர் இதைத் தீட்டிக் கொண்டே இருப்பார்கள்.ஓங்கிக் கொண்டே வருவார்கள்.ஒரே போடு தான்.

அண்ணே: "தம்பி" என்று மற்றவ்ர்களைக் கூப்பிடுபவர்.

பரிசல்:நடு ஆற்றில் முழுகுவதற்கென்றே ஏற்பட்டது.சுழல் இல்லாவிட்டால் சுகம் இல்லை.

கடா:ஆடு அல்லது மாடு.காதல் வளர்க்க உதவும் வஸ்து.வள்ளி இதனை ஓட்டிக் கொண்டு வரும் அழகே தனி தான்.

பட்டாளத்தான்:எங்கிருந்தோ வருவான்.வரும் போதே சீமைச்சரக்குகளயும் கொணர்வான்.இல்லாத ரகளைகளை எல்லாம் செய்வான்.சமயத்தில் காதலுக்கும் உதவி செய்வான்.

ஏதொ என்னோட சிற்றறிவுக்கு எட்டிய வரைக்கும் பதிஞ்சிட்டேன்.

மக்கா உங்களோட பங்களிப்பு இர்ந்தா இந்தத் தொகுப்பை இன்னும் பெரிசாக்கலாம்...

2 Comments:

துளசி கோபால் said...

மரத்தடியிலே நடக்குற பஞ்சாயத்தை விட்டுப்புட்டீங்களே!!!

என்றும் அன்புடன்,
துளசி கோபால்

Sud Gopal said...

மிக்க நன்றி அக்கா.

உங்கள மாதிரி ஜாம்பவான்கள் என்னோட வலைத் தளத்திற்கு அடிக்கடி வரணும்.