சர் ஐசக் நியூட்டன்,மா சே துங்,எல்விஸ் ப்ரெஸ்லி,அடல் பிஹாரி வாஜ்பேயி,மெல் கிப்ஸன்,கில்லி என்ற இந்த சங்கிலித்தொடரில் உள்ளவர்களை இணைக்கும் ஒரு பொதுவான விஷயம் என்ன தெரியுமா?
இவர்கள் அத்தனை பேரது ராசியும் கேப்ரிகார்ன் என்பது தான்.
சாதித்தே தீர வேண்டும் என்னும் வெறியுணர்வு கொண்டவர்கள்;புதுமை விரும்பிகள்;நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள்;ஒரு தினுசானவர்கள்; ப்ராக்டிக்கலானவர்கள் ; பொறுமைத் திலகங்கள்;அதே சமயத்தில் ரவுசானவர்கள் என்று ஒரு கலவையான,சுவாரசியமான குணாதிசியங்கள் கொண்டவர்கள் இந்தக் கேப்ரீக்கள்.கில்லி பூவுலகுக்கு வந்த இந்த ஒரு ஆண்டில் இதில் பெரும்பாலானவற்றைக் கண் கூடாகப் பார்க்க முடிந்தது.அப்புறம் இதே கேப்ரீக்களின் பட்டியலில் என்னைப் போன்ற விதிவிலக்குகளும் இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
மாதாந்திர மென்பொருள் வெளியீடு முடிவடைந்து ஈ ஓட்டிக்கொண்டிருந்த ஒரு மத்தியான வேளையில் இணையத்தைக் குடைந்த போது கண்ணுக்குத் தென்பட்டது தான் இந்த கில்லி.ஆரம்பத்தில் மற்றுமொரு வலைப்பதிவு திரட்டி தானே என்றதொரு கண்ணோட்டத்தில் இருந்த எனக்கு கில்லிக்கும் தமிழ்மணம் போன்ற தானியங்கி வலைப்பதிவு திரட்டிகளுக்கும் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள உதவியது "கில்லி ஏன்???" என்னும் இந்தக் கட்டுரை.
கில்லி வந்த பிறகு எனது பகுத்தறிவு பல்கிப்பெருகியது;ஏழாம் அறிவு கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது.தமிழை,தமிழர்களை அடுத்த நூற்றாண்டுப் பயணத்திற்குத் தயார்படுத்துவதில் கில்லியின் பங்கு அளப்பறியது.கில்லி இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.கில்லியைத் தான் எனது நெருப்புநரியின் ஹோம் பேஜாக வைத்துள்ளேன்.கில்லியை வாழ்த்த வயது,அனுபவம் இன்றி வணங்குகிறேன்.கில்லியின் நலனை வேண்டி மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவிலில் ஆயுஷ் விருத்தி ஹோமம் செய்யப்போகிறேன் போன்ற உண்மைகளை எல்லாம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சரி..சரி....விஷயத்திற்கு வருவோம்.கில்லியின் வாயிலாகப் படித்தவை ஏராளம் என்றாலும் எனது மனதுக்குப் பிடித்த கட்டுரைகளை இங்கே பட்டியலாக்கியிருக்கேன்.
1)வைகோ திமுகவில் இணைந்து விட்டால் கருத்துக்கள் என்ன விழும் என யோசிக்கிறார் முகமூடி. தமிழக அரசியல்கட்சிகளின் வரலாறைப் பொறுத்த மட்டிலும் 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் முக்கியமான ஒன்று.இப்படிக் கூட நடந்துப்பாங்களா என்று எண்ண வைத்த பல கேலிக் கூத்தான நிகழ்வுகள் மார்ச்சு,ஏப்ரல் மாதங்களில் நடந்தது.என்றாலும்,தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் சகபதிவர் கைவண்ணத்தில் பிப்ரவரியில் வெளியான இந்த அரசியல் நையாண்டிக் கட்டுரை குலுங்கிக் குலுங்கி சிரிக்கவைத்தது.
2) அமிர் உல்லா கான் மற்றும் பிபேக் தெப்ராய் என்ற இரு பொருளாதார நிபுணர்களினால் வெளியிடப்பட்ட "பாலிவுட்டின் கண்களின் ஊடாக இந்தியப் பொருளாதார மாற்றம்" என்ற கட்டுரையின் சாரத்தைப் பற்றிய ஆங்கிலப் பதிவு.கில்லி சுட்டாமல் இருந்திருந்தால் இது போன்ற தளங்களை ஜென்மத்துக்கும் நான் பார்வையிடுவேனா என்பது சந்தேகமே
3)இளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா. 1985ல் கல்கி இதழில் வெளியான இளையராஜாவின் பேட்டியிலிருந்து சில பத்திகளை எடுத்து கப்பி பய பதிந்திருந்தார்.பதிவும் அருமை.அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் நடந்த இளையராஜா பற்றிய கருத்து பரிமாற்றங்களும் அதைக் கப்பி பய கையாண்டவிதமும் அருமை.
4) பிரபல ஹிந்தி இயக்குனர் சுபாஷ் கய்யின் கனவுத் திட்டமான WWI பற்றிய பதிவு இது.ஷப்னா ஆஸ்மி,ஜாவேதா சாப்,கிங் கான்,ஏ.ஆர்.ஆர்.போன்ற பெருந்தலைகள் இந்த கல்விக்கூடத்திலே அகடமிக்கல் அட்வைசர்களா இருக்காங்களாம்.அப்புறமா அடுத்த வருசத்திற்கான விண்ணப்பங்கள் தந்திட்டு இருக்காங்க.பதிவிலேயே இந்த நிறுவனத்தின் இணையதள முகவரியும் இருக்குதுங்கோவ்...
டிபிக்கல் கில்லி டச்: 'கிஸ்னா' மாதிரி படங்களை எப்படி எடுக்கக் கூடாது என்றும் சொல்லித் தருகிறார்களா என்று கேட்கவேண்டும்.
5)மற்ற சமயங்களில் ஊர் ஊராய்ச் சுற்றினாலும் துர்கா பூஜைக்கு சொந்த ஊருக்குப் போன கொல்கத்தாவின் எளவரசர் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு தான் இது.சிறந்த முறையில் அமைக்கப்படும் பந்தல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாய் என்.டீ.டீவியில் மொனுதீபா சொல்லிக்கொண்டிருந்ததாய் நினைவு.அருமையான புகைப்படங்கள்
6)பொறுத்தது போதும் மனோகரா, சிக்சர் அடி. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றது இந்திய கிரிக்கெட் அணி.டெஸ்ட் தொடரைப் பறி கொடுத்த நிலையில் ஒரு நாள் பந்தயங்களில் விளையாடச் சென்றது.ஒரு குழுவாக சிறப்பன முறையில் ஆடி அந்த ஒருநாள் தொடரினையும் வென்றது.அப்போது எழுதப்பட்ட இந்தப் பதிவினை எப்போது படித்தாலும் குபீரெனச் சிரிப்பு வரும்.$செல்வன் இந்த வருடம் புதியதாய் தமிழில் வலை பதிக்க வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.நையாண்டி,சமூகம்,அரசியல்,சமயம் என்னும் பல்வேறு களங்களில் திறம்பட பல பதிவுகள் தந்தவர்;தந்து கொண்டிருப்பவர்.அவரது ஆரம்பகாலப் பதிவுகளில் மறக்க முடியாத ஒன்று இது.அப்புறம் கில்லியில் பதிவு பற்றிக் குறிப்பிடும் போது,சூப்பர் ஸ்டார் பற்றிய விஷயத்தை ஹைலைட்டாக்கியது பிரகாசரின் திருவிளையாடல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே
7)"நான் எஞ்சினியரிங் படிச்சிட்டு இருக்கேன்.என்னைப் போய் எலிமெண்டரி ஸ்கூல் பசங்களுக்கு ட்யூஷன் எடுக்கச் சொல்லாதே" என்று அம்மாவுடன் சண்டை போட்ட கல்லூரி விடுமுறை நாட்கள் நினைவுக்கு வருகின்றன.பொறியியல் படிப்பவர்களுக்குக் கொம்புகள் இரண்டு முளைக்கும்,பொட்டி தட்டும் வேலை மட்டுமே அவர்கள் செய்வார்கள் என்று தீவிரமாய் எண்ணிய நாட்கள் அவை.ஒரு இரண்டாம் நிலைக் கல்லூரியில் படித்த என் போன்றவர்களே இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கும் போது, ப்ரீமியர் கல்வி நிறுவனங்களில் படித்த இருவரைப் பற்றி கில்லி வாயிலாகக் கேள்விப்பட்டது மறக்க முடியாத ஒரு விஷயம். அதிகம் பயணப்படாத பாதையினைத் தேர்ந்தெடுக்க மனவுறுதி,தன்னம்பிக்கை தேவை.அப்படிப் பட்ட இருவரைப் பற்றிய கில்லியின் சுட்டி தான் மேலே தரப்பட்டுள்ளது.
8)இது "நமக்கு நாமே" திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று
எனது பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது;மனதிற்கு நெருக்கமானது.உலக அம்மாக்கள் எல்லாம் ஒரே ரகம் என்பதை பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் நிரூபணம் செய்தன.இதுவரை படிக்காமல் இருந்தால் படித்துத் தான் பாருங்களேன்
9)என்ன தான் மொட்டையைத் தாண்டி வெளியே வரவில்லை என்றாலும்,"வாத்யார்" இளவஞ்சியின் எழுத்து நடைக்காக ரசித்த பதிவு இது.அய்யா இப்போது ஹிபர்னேஷன் மோடில் இருக்கிறாராம்.
10) எந்த நேரத்துக்குப் போனாலும் சுடச்சுட இட்டிலி கிடைக்கும் மருதை மாநகரத்தின் ஸ்பெஷல் உணவு ஜிகர்தண்டா மட்டுமல்ல இந்த பீமபுஷ்டி அல்வாவும் தான் என்கிறார் கட்டியக்காரர்.பாதம் அல்வா,கோதுமை அல்வா,பால் அல்வா,மஸ்கோத் அல்வா என்று வகைவகையாகச் சாப்பிட்டிருக்கும் எனக்கு இப்படியும் ஒரு அல்வா இருக்கும் சங்கதி கில்லி மூலமே தெரிய வந்தது.இந்த மாதிரி வழக்கொழிந்த போன உணவு வகைகளை அந்தந்த வட்டாரத்து மக்கள் செய்முறையோடு எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்??
11)மாற்றமே நிரந்திரமாகி விட்ட உலகில், இதோ வரேன் என்று சொல்லி விட்டுப் போன சௌமியா திரும்ப வரவேயில்லை.ஆதிகாலத்து வலைப்பதிவரான சௌமியாவிற்கு கில்லியின் அஞ்சலி..
12) எனக்கும் கடவுளுக்கும் இருக்கும் தூரம் அறுபத்தெட்டு ஒளி ஆண்டு என்பதைத் தெரியப்படுத்திய பதிவு இது. "1976 வருஷம் பிப்ரவரி இரண்டாவது வாரத்து குமுதத்துல ப்ரியா தொடர் பதினேழாவது அத்தியாயம் இரண்டாம் பக்கம் லெ*ப்ட் சைடு பாட்டத்துல பிரிண்ட் ஆயிருக்கும். போதுமா?! " என்று பின்னூட்டத்தில் ராம்கி பிளிறியது மறக்கக் கூடிய ஒன்றா??
நிற்க....இன்னும் பல பதிவுகளுக்கு இதயத்தில் இடம் அளித்துள்ளேன் என்பதை சொல்லவும் வேண்டுமோ??
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கில்லி மென்மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.
29 December 2006
| [+/-] |
Happy B'day Dear(peer) Gilli.... |
| [+/-] |
என்ன பாடல் ? என்ன படம் ? |
1)விழிகள் இரண்டையும் விளக்காய் மாற்றி
ஊமை விழிக்கொரு ஒளியைத் தாருங்கள்
கருணை உதவியும் இரண்டு கரங்கள் தான்
வாழ்க்கை முழுவதும் வணக்கம் சொல்லுங்கள்
2)அந்த பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ
3)தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுபாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்?
4)பாடும் பறவைக் கூட்டங்களே
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதைப் பாருங்கள்
5)பூமலர் தூவும் பூமரம் யாவும்
போதை கொண்டு பூமி தன்னைப் பூஜை செய்யுதே
பூவிரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
6)பூ விழுந்த மாதிரியே மயங்கி மயங்கி விழ வேண்டும்
பொட்டு வைத்த குலமகள் போல் தயங்கி தயங்கி வர வேண்டும்
7)முத்துநகை போலே சுற்றிவரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்தவரை லாபம் கொண்டவரை மோகம் உள்ளவரை நானாக...
8)அறிந்தாலும் அதுகூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
குலவிளக்காக நான் வாழ வழி காட்டவா
9)இன்னும் கொஞ்சம் நீளவேண்டும் இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி
10)கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன..
28 December 2006
| [+/-] |
கில்லியை மேய்வதில் பிரச்சினையா?? |
உங்கள் அலுவலகத்தில் இருந்து கில்லியினை மேய முடியவில்லையா???
வீட்டில் இருந்து கில்லி விளையாடுவதில் தடையா???
வாங்க..வாங்க..நீங்களும் எலைட் லிஸ்டில சேர்ந்துட்டீங்க போல.
கூகிளாண்டவர் துணையால கண்டுபுட்ச்ச உரலைக் கீழே தந்திருக்கேன்.முயற்சி செஞ்சு பாருங்கோ...
http://www.google.com/gwt/n?u=gilli.in
மேலும் சில வொர்க் அரௌண்டுகள் கீழே உள்ள உரலில்:
http://labnol.blogspot.com/2005/12/how-to-access-blocked-websites.html
18 December 2006
| [+/-] |
என்ன பாட்டு? என்ன படம்? |
என்ன பாட்டு? என்ன படம்?
1)நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
உன்னையே நினைச்சு உயிர் வளர்த்தேன்
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை..
2)பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ணமுகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கும் தூது விட்டாள்
3)கடற்கரை எங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான்
4)கடலொன்று நடுவிலே இல்லையென்று கொள்வினம்
எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்று தான்
தமிழனர் தமிழர் தான்
புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா???
5)எண்ணம் என்னும் ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும் வாழ்க்கையிலே துணைவி
6)தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென் பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோகம்
7)மழையும் வெயிலும் என்ன
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன
ரதியும் நாணும் அழகிலாடும் கண்கள்
8)பள்ளி சென்ற காலப்பாதைகளே..
பாலங்கள் மாடங்கள் ஆஹா...
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
9)தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை.
10)நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா?
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக்கொடி கட்டுங்கள்...
29 November 2006
| [+/-] |
Remembering N.S.K - ஸ்பெஷல் "ஓ"மப்பொடி |
தமிழ்த்திரையுலகின் மறக்கமுடியாத தலை பத்து நபர்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த கலைவாணரது பிறந்த நாள் இன்று.இது பற்றி நினைவு கூர்ந்த தருமிக்கும்,பாலபாரதிக்கும் நன்றிகள்.
இவரது ஆரம்பகாலத்திரைப்படங்களைப் பற்றிய ஒரு கதம்பம் தான் இந்தப் பதிவு.
1935:- ராஜா சாண்டோவின் இயக்கத்தில் வெளியான "மேனகா" என்னும் திரைப்படம் தான் என்.எஸ்.கே நடிப்பில் வெளியான முதல் படம்.இதில் தீய குணம் கொண்ட சாமா ஐயர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
1936:- திரும்பவும் ராஜா சாண்டோவின் இயக்கத்தில் "சந்திரகாந்தா" என்ற திரைப்படத்தில் நடித்தார்.நயவஞ்சகச் செயலுக்குத் துணை போனதால் சிறிது லாபம் அடைந்து தனது பழைய நிலையை மறந்த நாவித முனியன் பாத்திரத்தில் கலக்கியிருந்தார்.
1936:- இந்த ஆண்டு வெளியான "சதி லீலாவதி" தான் இவர் நடிக்க ஒப்புக்கொண்ட முதல் படம் என்றாலும் "மேனகா" முந்திக்கொண்டது.எல்லீஸ்.ஆர்.டங்கனின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தான் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரனுக்கும் முதல் படம்.
1937:- முதன்முதலில் மதுரம் அவர்களுடன் சேர்ந்து நடித்த படமான "வசந்தசேனா" வெளியானது.ராஜா சாண்டோவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின்போது தான் என்.எஸ்.கே மதுரத்தைச் சந்தித்தார்.இருவரும் ராஜா சாண்டோவின் தலைமையில் தம்பதிகளாக சேர்ந்து வாழ முற்பட்டனர்.
1937:- எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் "அம்பிகாபதி".
1938:- ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் "தக்ஷயக்ஞம்".
1939:- ராஜா சாண்டோ இயக்கத்தில் "திருநீலகண்டர்",ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் "மாயா மச்சீந்திரா",ராவ் இயக்கத்தில் "ரம்பையின் காதல்",ரகுநாத் இயக்கத்தில் "ஜோதி (அ) ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகள்".
(தொடரும்)
16 November 2006
| [+/-] |
என்னுடைய ஐடியை ஹேக் செஞ்சிட்டாங்க. |
மாசம் ஒன்று என்ற கணக்கில் பதிவு போடும் என்னைப் போன்ற சோம்பேறிகளின் ப்ளாக்கர் ஐடியை ஹேக் செய்வதனால் யாருக்கு என்ன லாபம்?
ஒண்ணுமே புரியலை...ஏதாவது அயல்நாட்டு சதியான்னு தெரியலை?
ஆகவே மக்கா,உங்க பதிவுகளில் ஏதாவது ஏடாகூடமான பின்னூட்டம் என்னோட பெயரில இருந்தாத் தெரியப் படுத்துங்க.அதை இட்டது யார்னு கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.
Inconvenience caused is highly regretted.
"இறைவா.எனது நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று.எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" - ஜக்குபாய்
19 October 2006
| [+/-] |
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 3 |
1) பாரதியாரது பாடல்கள் முதன் முதலில் திரையில் ஒலித்தது எந்தப் படத்தில்?
2) "பல்லாண்டு வாழ்க" என்ற படத்தில் இடம் பெறும் "ஒன்றே குலம் என்று பாடுவோம்" பாடலுக்கு முன்னால் சில திருக்குறள்கள் இடம் பெற்றிருக்கும்.அவை எவை?
3) பட்டுக்கோட்டையார் இறுதியாக எழுதிய பாடல் எது?
4) கீழ்க்கண்ட இசையமைப்பாளர்கள், பாரதியாரின் எந்தப் பாடல்களுக்கு திரைப்படங்களுக்காக இசையமைத்து உள்ளனர்?
மெல்லிசை மன்னர்
இளையராஜா
வித்யாசாகர்
ஏ.ஆர்.ரகுமான்.
5)"முதல்வன்" படத்தில் அர்ஜூனுக்கும்,ரகுவரனுக்குமிடையிலான தொலைக்காட்சி பேட்டி நல்ல வசனங்களைக் கொண்டிருக்கும்.அந்தப் பேட்டியின் இடையில் ரகுவரன் திருக்குறள் ஒன்றை உதாரணமாய்க் கூறுவார்.அது என்ன?
நான் அடிக்கடி முணுமுணுக்கும் சில பாடல்களின் வரிகள் கீழே உள்ளன.
என்ன பாடல் ??? என்ன படம் ???
1) கன்று குட்டி துள்ளும் போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக் கென்ன கட்டுப்பாடு
2)சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா
3)உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது
4)சோள காட்டு மூலையிலே ...பப்பம்...பப்பரப்பப்பா...
ஒரு சோடி ஒண்ணு சேர்ந்திருச்சு
5)காற்று நம்மை அடிமை என்று விலக்கவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லயே
6)உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
7)பிள்ளைக்கூட்டங்களைப் பார்க்கையிலே,
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே
நல்லவரெல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது
8)இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய், ஒதுக்கீடு கேட்கிறாய்
9)நடமாடும் மேகம் நவ நாகரீகம்
அலங்காரச் சின்னம் அலை போல மின்னும்
வரும் பண்டிகை நாட்கள், அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
18 October 2006
| [+/-] |
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 2 |
நான் அடிக்கடி முணுமுணுக்கும் சில பாடல்களின் வரிகள் கீழே உள்ளன.
என்ன பாடல் ??? என்ன படம் ???
1)ஏரிக்கரையில் ஜோடிப் பறவைகள் எல்லா அழகும் ஆனந்தம்
ஆடும் கடலினில் ஓடும் படகுகள் அதிலே உலகம் ஆரம்பம்
2)நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கிச் செல்லும் மாளிகை
3)ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைப்போல் புது வித்தை காட்டிடவா
4)ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
5)குட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா ஒன்னையும் தொட்டுக்கரேன்
6)கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம
7)சொந்த ஆகாயம் வேண்டும் ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும
8) தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென வளர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
9) மேடையைப்போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப்போலே உரவும் அல்ல பாதைகள் மாரியே பயணம் செல்ல
10) மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
17 October 2006
| [+/-] |
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 1 |
தமிழ்ப்பதிவுகள் என்ற ஊடகத்தில் முதன்முறையாக் கிசுகிசுக்களைச் சூடாக,சுவையாக தந்த போது சாம்புக்களும்,இரவுக்கழுகாரும் தோன்றியிருக்கவில்லை.இப்படியாகத் தானே உருவாக்கப்பட்ட ட்ரெண்ட்டினைத் தீபாவளி ஸ்பெஷலாய் மீண்டும் தருவதில் மெத்த மகிழ்ச்சியே...(ஹி...ஹி..தற்புகழ்ச்சி எல்லாம் எனக்குப் புடிக்காதுங்ணா)
இந்தச் செய்தியில் சம்பந்தப் பட்டவர்கள் யார்,யார் என்று கண்டு பிடிப்பது மக்களே உங்கள் சமத்து.ஆனால் ...இவர் தானே ...அவர் என்பது போன்ற உங்களுடைய கேள்விகளுக்கு, என்னுடைய பதில் "நோ காமென்ட்ஸ்" என்று தான் இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் :-)
1)அத்துவானக் காட்டில் தேன் தேடிய தனித்துவமான சிட்டு, இப்போது கடல் கடந்து சூரியன் மறையாத நாட்டில் இருக்கிறதாம்.யங் ஜிஞ்சரான டீச்சர் இல்லாத வகுப்பில் எலிகள் துள்ளிக்குதித்து விளையாடுகின்றனவாம்.
"எப்போ வருவாரோ...எங்கள் கலி தீர......???"
2) பெரிய டேமேஜரும்,பெரும்பாலான இனிப்புகளின் அடிப்படையுமான நம்ம ராஜீயின் படைப்புகள் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிவலம் வரவிருக்கின்றன.தெலுங்கில் வரவிருக்கும் இந்தத் தொடர் ப்ளேக் மாரியம்மனைப் பற்றி இருக்கலாம் என்று நெம்பத்தந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
"....ரமணா...ரகுநாதா...பாற்கடல் வாசா...ஜானகி நேசா...."
3)சோள தோசை சாப்பிட்டேன்,அச்சாபீஸ் போனேனே தவிர வேற எங்கேயும் போகலை என்று தல மேல் அடித்துக் கூறும் கிங்கானவருக்கு மஞ்சத்தண்ணி தெளித்தாயிற்று.கர்நாடக ராஜ்யோத்சவத்தன்று இவரது விக்கெட் போல்டாகவிருக்கிறது. ஏணுங்ணா...அதுக்குப் பொறவாலை எழுதுவீங்ளா?
" ....க்கொடியிலே முத்துகள் கோர்த்தால் புன்னகை என்றே பேர் ஆகும்..."
4)தங்கமணியார் வீட்டுக்குப் போன பின் சங்கங்களில் பிளிறிக்கொண்டிருந்த "ஏக் காவ் மே..ஏக் கிஸான்" நடுவில் இண்டர்வெல் விட்டதற்கான காரணம்,ஊருக்குத் திரும்பியுள்ள ஜூனியருடன் அதிக நேரம் செலவிடத்தானாம்.சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இந்தச் சிங்கம் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஷயம் உங்களுக்குத் தெரியுமா??
5)நான் ஒரு பாவி..சாரி...ஆவி என்று கூட இருப்பவர்களை மிரட்டிக்கொண்டிருப்பது நாமக்கோளாறு பிசியின் கல்லூரிக்கால குறும்புகளில் ஒன்று.அமானுஷ்ய ஆவியாருக்கு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா?
"நானே வருவேன்..அங்கும் இங்கும்...."
உங்களது ஆதரவுடன் தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி தொடரும்.
14 October 2006
| [+/-] |
விட்டு விடுதலையாகி... - தேன்கூடு போட்டிக்கு |
சமையல் ரூமில இருந்து சப்பாத்தி சுடுற சத்தம் கேக்குது.அனேகமா எங்களுக்கு சப்பாத்தி செஞ்சிட்டு இருக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.ஆன்ட்டி எங்களை இங்கே கூட்டீட்டு வந்த நாளில இருந்து இன்னைய வரைக்கும் எங்களுக்கு ராத்திரி தீஞ்சு போன சப்பாத்திதான் ஆகாரம்.நாங்களும் போட்டதைச் சாப்பிட்டுக்கறோம்;இல்லேன்னா எங்க ஆன்ட்டி கிட்ட திட்டும் உதையும் யாரு வாங்குறது.
நாங்கன்னு சொன்னது என் கூட இருக்கிற அனு,சில்வியா,சித்ரா இவங்களையும் சேர்த்துதான்.அதோ...பச்சை சுடிதார் போட்டிட்டு ஆன்ட்டி துணிகளுக்கு இஸ்திரி போட்டிட்டு இருக்கறது தான் அனு.மத்த ரெண்டு பேரும் வீட்டைத் துடைச்சிட்டு இருக்காங்க. நான் இப்போ தான் என்னோட வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து உக்காந்தேன்.சன் நியூஸ் போடற சத்தம் கேக்குது.அட மணி எட்டு ஆயிடுச்சா??
இங்கே இருக்கிற ஸ்கூலில முழுப்பரிச்சை ஆரம்பிச்சிடுச்சி.மதியம் துணி காயப்போடும் போது பார்த்தேன்.பரிட்சை எழுதி முடிச்சிட்டு எல்லாரும், பேடோட வீட்டுக்குப் போயிட்டு இருந்தாங்க.இங்கே ஸ்கூலில யூனிபார்ம் வேற கலர்.இன்னைக்கு தமிழ்ப் பரிச்சையாயிருக்கும்.
என்ன,என்ன கேள்வியெல்லாம் கேட்டாங்களோ?காலாண்டுத் தேர்வில நான் இந்தப் பாடத்தில 86 மார்க்கு வாங்கினேன்.அரையாண்டுத் தேர்வு கூட நல்லாத் தான் எழுதினேன்.எப்படியும் ஒரு 85 மார்க் வாங்கியிருப்பேன்.
"விஜிம்மா..விஜிம்மா....அப்படி என்ன உக்கார்ந்திட்டே கனவு கண்டிட்டு இருக்கே?? ?காலா காலத்துக்கு சாப்பிட வேண்டாமா.."
அட இது எங்க ஆன்ட்டி குரல் போல இருக்கு.இவங்களுக்குக் கூட இப்படியெல்லாம் கூப்பிடத் தெரியுமா??என்னைக்கும் இல்லாம இவ்வளவு பாசமா சாப்பிடக் கூப்பிடறாங்க.இன்னைக்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது.
"வாம்மா விஜி.உன்னைத் தவிர எல்லாரும் சாப்பிட வந்தாச்சு.ஏன் உனக்குப் பசியே எடுக்கலையா?மதியம் சாப்பிட்டதெல்லாம் இன்னேரம் செரிச்சிருக்கணுமே??வந்து சாப்பிடு வா."
எனக்கு எதுவுமே நம்பமுடியலை.ஆன்ட்டியா இப்படி??அதோ..வலது கைப் பக்க மூலைல இருக்கிறது தான் சமையல் ரூம்.அதுக்குப் பக்கமா இருக்கிற சின்ன ரூம் தான் எங்க டைனிங் ஹால்.நான் போய் சாப்பிடப் போறேன்.எல்லாரும் வேலைய முடிச்சிட்டு சாப்பிட வந்திட்டாங்க போல இருக்கு.நாங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்திக்கிட்டோம்.எல்லோருக்கும் ஆன்ட்டி இப்படி அன்பா இருக்கறது இது ஒரு அதிர்ச்சியாத் தான் இருந்தது.அதை விடப் பெரிய அதிர்ச்சி,தீஞ்ச சப்பாத்தி தட்டில விழும்னு எதிர் பார்த்து இருந்தா,தட்டில விழுந்த நல்ல சப்பாத்தியப் பார்த்து வந்தது.
"ஹூம்.அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கச்சிவோட சந்தோஷமா இருந்த கொழந்தைக உங்களை இந்தக் கோலத்தில பார்க்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கு.பாழாப்போன சுனாமி வந்தாலும் வந்தது;எல்லாரோட சந்தோஷத்தையும் வாரீட்டு இல்ல போயிடுச்சு.தெய்வமே...இந்தக் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டக் கூடாதா?
சகாயம்,அந்தப் பாக்கெட்டில லட்டு இருக்கு.எல்லாருக்கும் ரெண்டு,ரெண்டு லட்டை வையி...."
லட்டுங்கற பேரைக் கேட்டாலே எனக்கு எங்க பாட்டி ஞாபகம்தான் வரும்.எனக்காக குட்டி,குட்டியா லட்டு செஞ்சு அவங்க கையாலேயே ஊட்டி விடுவாங்க.ஹூம்.எல்லாரும் போயிட்டாங்க.அரைப் பரீட்சை லீவுக்கு குடும்பத்தோட வேளாங்கண்ணி வந்தோம்.எவ்ளோ பெரிய அலை...அப்பெல்லாம் அதோட பேரு சுனாமின்னு தெரியலை.
அறிவியல் பாடத்தில எப்பவோ படிச்ச ஞாபகம்.எங்க தம்பியக் காப்பாத்த முடியலையேன்னு,எங்க அப்பாவும் அவருக்குப் பின்னாடி அம்மாவும் கடலில் குதிச்சது இன்னும் கண்ணு முன்னாடியே இருக்கு.சே... என்னைய மட்டும் விட்டிட்டு எல்லாரும் போயிட்டாங்க.
"விஜி.என்னது இது?சாப்பிடறப்போ கண்ணக் கசக்கீட்டு.தட்டிலே போட்டது வேற அப்படியே இருக்கு.ஒன்னை கேம்பில பார்த்தப்போ இருந்ததை விட,இப்போ ரொம்ப இளைச்சுப் போயிட்டியே??சகாயம்,விஜிக்குக் கொஞ்சம் குருமா ஊத்து.வயசுப் பொண்ணுங்க நல்லா சாப்பிட்டுத் தெம்பா இருக்க வேணாமா?பொண்ணுங்களா,சீக்கிரம் தட்டைக் காலி பண்ணீட்டு,போய் தூங்குங்க.காலையில சீக்கிரமே எழுந்திடணும்.வேன் டாண்ணு ஏழரைக்கெல்லாம் வந்திடும்."
என்னோட லட்டை அனுவுக்குக் கொடுத்திட்டேன்.எதுவுமே சாப்பிடப் புடிக்கலை.காலைல இருந்து அம்மா நெனப்பாவே இருக்கு.நேத்திருந்து சொல்லிக்கிட்டே இருக்காங்க.எங்கேயோ போகப் போறோம்னு.எங்கேன்னு மட்டும் தெரியலை.ஆன்ட்டியைக் கேக்கவும் பயமாயிருக்கு.எங்கே கூட்டிட்டுப் போனாலும் பரவாயில்லை ,மூச்சு முட்டிக்கிட்டு இருக்கிற இருட்டான கூண்டில இருந்து கொஞ்சம் நேரம் வெளியே போனா சரிதான்.நாங்க ஒருத்தரை ஒருத்தர் திருதிருன்னு முழிச்சிக்கிட்டே சப்பாத்தியை மென்னு முழுங்கினோம். நாளைக்கு வெளியே போகப் போறோம்கிறதை நெனச்சா ஒரு பக்கம் சந்தோஷமாத்தான் இருக்கு.
"ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...."
"நேரம் கெட்ட நேரத்தில யாரு கூப்பிடறாங்க...ஹூம்..."
"ஹலோ..ஆமாங்க இது கருணை இல்லம் தான்.அட என்ன இது அண்ணாச்சி குரல் மாத்தி எல்லாம் பேசிக்கிட்டு...சௌக்கியமா இருக்கீங்களா?.நானே கூப்பிடணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.எல்லாம் ரெடியா இருக்கு.நாளைக்கு கேட் பாஸ் கொடுத்திட வேண்டியதுதான்.நாலு வருது நாளைக்கு ட்ரிப்பில.அட..ஒங்களுக்கு இல்லாததா??சாமிக்குத் தான மொத படையல்.அய்யோ..அப்படியேல்லாம் நீங்க சொல்லக்கூடாது..நாந்தான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.அப்புறமா செக் வேணாம்.கேஷாவே கொடுத்திடுங்க.சரிங்க அண்ணாச்சி.நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடுங்க.நாளைக்குப் பார்ப்போம்.வச்சிடறேன்..."
பொதுவாவே ஆன்ட்டியோட குரல் கணீர்னு கேக்கும்.அதுவும் சந்தோஷத்தில இன்னும் சத்தமா பேசுவாங்க.அவங்க ரூமில ஃபோன்ல ஆன்ட்டி பேசினதில பாதி புரிஞ்ச மாதிரி இருக்கு;புரியாத மாதிரியும் இருக்கு.ஹூம்...என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே...?சே...இந்த கிழிஞ்ச பாயையும், அழுக்குத் தலகாணியையும் பார்த்தா எரிச்சலா வருது.சினிமாவில வார மாதிரி வெள்ளையா,புஸ்ஸுன்னு இருக்கிற மெத்தையில ஒரு நாளாவது படுத்துத் தூங்கணும்.வீட்டில நான் போர்த்தீட்டு இருந்த பச்சைப் போர்வை குளிருக்கு எவ்வளவு நல்லா இருக்கும்..சே..இன்னை ஏன் இப்படி சும்மா சும்மா வீட்டைப் பத்தியே நினைச்சிகிட்டு இருக்கேன்.
"விஜி...இன்னும் தூங்கலியா??? தூக்கம் வரலையா???அப்புறம் நாளைக்கு காலைல ஒருத்தரப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போறோம்.நல்லாத் தூங்கி காலைல சீக்கிரமே எந்திரிச்சுடணும்.உங்களுக்குப் புதுத் துணி வாங்கி வச்சிருக்கு.தலைக்குக் குளிச்சிட்டு அதைப் போட்டுகிட்டு ஏழு மணிக்கெல்லாம் ரெடியாகிடணும்.மத்த பொண்ணுங்க கிட்டயும் சொல்லீடு.எல்லாரும் தூங்கீட்டாங்க போல..."
புது ட்ரெஸ் போட்டுகிட்டு யாரோட வீட்டுக்குப் போகப் போறோம்?சுடிதாரா இல்லை பாவாடை தாவணியா?எனக்குப் புடிக்காத சிவப்புக் கலர்ல சுடிதார் எடுத்திருக்க் கூடாது.கடவுளே...ஒரு வேளை சினிமாவில வார மாதிரி எங்களை யாருக்காவது வித்துடப் போறாங்களா??சே....ஆன்ட்டி அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க.இத்தனை நாளா எங்களைக் கஷ்டப்படுத்தினதை நெனச்சிப் பார்த்து இப்போ மனசு மாறியிருக்காங்க.இல்ல..இல்ல..ஆன்ட்டி எங்கேயோ தப்பான இடத்துக்குத் தான் கூட்டிட்டுப் போகப் போறாங்கன்னு தோணுது.ஆனா எங்கே கூட்டிட்டுப் போகப் போறாங்கன்னு தெரியலையே...கடவுளே...எங்களுக்கு விடுதலை கெடையாதா??
காலைல இருந்து வேலை செஞ்ச அசதீல எப்போ தூங்கினேன்,எப்போ முழிச்சேன்னு தெரியலை.எங்க எல்லார்த்தையும் நல்ல வாசனை சோப்பு போட்டு குளிக்க வச்சு,ஆன்ட்டி போடற செண்ட் அடிச்சு,வாங்கி வச்சிருந்த துணியப் போட்டுக்க வச்சி வேன் ஏறினப்ப மணி 7.35 . நல்ல வேளை என்னோட புது சுடிதார் சிவப்பு கலர்ல இல்லை.என்னோட சுடிதாரை விட அனுவோட சுடிதார் நல்லா இருக்குது.எல்லாரும் புது ட்ரஸ் போட்டிட்டு வேன்ல வெளியே போற சந்தோஷத்தில இருந்தாங்க.ஆனா,எனக்கு மட்டும் ஏதோ நடக்கப் போகுதுன்னு ஒரு நெனப்பு.
கில்லி படத்தில வார மாதிரி ஒரு வெள்ளைக் கலர் வேன்.ஆன்ட்டி நல்ல மூடில இருந்தாங்க போலிருக்கு.ஏதோ பாட்டை முணுமுணுத்திட்டே வந்தாங்க.நான் சாமியக் கும்பிட்டுக் கிட்டே வேனுக்குள்ள ஏறினேன்.இங்க வந்த இந்த மூணு மாசத்தில மொத முறையா இப்போ தான் கேட்டைத் தாண்டி வெளியே போறோம்.இதுவே ஒரு பெரிய விடுதலை கிடைச்ச மாதிரி அனுவோட முகத்தில சந்தோஷம்.
"டேய்..சுரேசு...காலையிலயே சரக்கைப் போட்டிட்டு வந்திட்டியா??ரோட்டைப் பார்த்து மெதுவா ஓட்டு.வேற வண்டி இல்லையா??இந்த பாழாப்போன குவாலிசையே எடுத்திட்டு வந்து எழவு கொட்டாட்டி என்ன?"
வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்த எங்களுக்கு அந்த ரோட்டோரக் காட்சிகள் ரொம்ப புடிச்சுப் போச்சு.வேடிக்கை பார்த்திட்டு வந்தோம்.திடீர்னு ஒரு ஐடியா தோணுச்சு.பாத்ரூம் வருதுன்னு சொல்லி வேனை நிப்பாட்டச் சொல்லி,இறங்கி ஓடிப் போயிடலாம்னு தோணிச்சு.கொஞ்ச நேரம் பொறுத்து சொல்வோம்னு வெயிட் பண்ணீட்டு இருக்கேன்.
க்ரீச்ச்...க்ரீச்ச்ச்....
"டேய்...டேய்....பார்த்து மெதுவா பிரேக்கைப் போடு..."
"சாரிக்கா...இனிமே பார்த்துப் போறேங்கா..."
"அய்யோ..எருமை மாடு நடு ரோட்டில...பார்த்து...அம்மா....."
க்ரீச்...டபார்.....
"அய்யோ...அம்மா...கர்த்தரே.....அய்யோ...."
உங்க எல்லாருக்கும் டாடா....விடுதலை கொடுத்த சாமியப் பார்க்கப் போறேன்.உங்களோட கோரிக்கை ஏதாச்சியும் இருந்தா சொல்லுங்க...அவர் கிட்டே சேர்த்திடறேன்.....
---------------------------------------------------------------------------------
சற்றே பெரிய கதை,உங்களது ஆதரவினை வேண்டி...
அன்புடன்,
சுதர்சன்.கோபால்
---------------------------------------------------------------------------------
11 October 2006
| [+/-] |
மால்குடியும் சில கேள்விகளும் |
R K நாராயண் (அக்டோபர் 10, 1906 - மே 13, 2001)
இவரது முழுப்பெயர் ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயணசுவாமி.ஆரம்ப காலங்களில் R K நாராயணசுவாமி என்ற பெயரில் எழுதி வந்த இவர் கிரஹாம் கிரீனின் ஆலோசனைப்படி "Swami and Friends" என்ற படைப்பின் வெளியீட்டிலிருந்து தனது பெயரை "R K நாராயண்" என்று சுருக்கி வைத்துக் கொண்டார்.
பாடப்புத்தகம் போரடிக்கிறது என்ற காரணத்தால் கல்லூரியில் ஆங்கில நுழைவுத் தேர்வில் முதல் முறை எழுதும்போது கோட்டைவிட்டார்.ஆனால் ஒரு வருடம் கழித்து திரும்பவும் எழுதி மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டமும் பெற்றார்.
இவருடைய படைப்புகள் ஹீப்ரு மற்றும் அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.
1958ல் சாஹித்ய அகாதமி ,1964ல் பத்ம பூஷன்,1980ல் ராயல் சொசைட்டி ஆஃப் லிட்டரேச்சர் அமைப்பால் பென்சன் விருது, 2000ல் பத்ம விபூஷன் என்று இவருக்குக் கிடைத்த விருதுகள் ஏராளம்.
---------------------------------------------------------------------------------------------------
இதோ இவரைப் பற்றியும் படைப்புகள் பற்றியும் ஒரு சில கேள்விகள்.சரியான பதில் தருவோருக்கு "மால்குடி கொண்டான்" என்ற பட்டமும் அவரவரது கட்சி சார்புக்கு ஏற்றவாறு மஞ்சள்/பச்சை/கருப்புத் துண்டுகளோ வழங்கப்படும்.
1) "Swami and Friends" தொகுப்பில் வரும் சுவாமியின் நண்பர்கள் பெயர் என்ன?
2) R K நாராயணின் முதல் புத்தகம் வெளியாக உதவியவர் யார்?
3) தென் இந்தியாவின் எந்த கற்பனை நகரத்தினை அடிப்படையாகக் கொண்டு இவரது கதைகள் எழுதப்பட்டன?
4) எந்த ஆண்டு "The Vendor of Sweets" வெளியானது?
5) "The Guide" என்ற நாவலின் கதை நாயகன் யார்?
6) மால்குடியின் மூன்று முக்கிய லேண்ட்மார்க்குகளைக் குறிப்பிடவும்.
7) R K நாராயண் எந்த ஊரில் தனது "The Guide" நாவலை எழுதினார்?
8) முதன் முதலில் வெளியான R K நாராயணின் படைப்பு எது?
9) இவரது படைப்புகளுக்குப் பாந்தமான ஓவியங்களை வரைந்த இவரது சகோதரர் பெயர் என்ன?
10) இவர் எழுதிய இரண்டு பயணக் குறிப்புகளின் பெயரைக் கூறவும்.
10 October 2006
| [+/-] |
பசந்தீ,உன்னோட பேரு என்ன? |
இருக்கையுடன் கட்டிப்போடும் திரைக்கதை,அற்புதமான நடிப்பு,தேர்ந்த நடிகர் தேர்வு,கதைக்கு மிகவும் பொருத்தமான ஒளிப்பதிவு,பாந்தமான இசை என்று ஒரு படம் வெற்றி பெறத் தேவையான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய"ஷோலே"வில் இடம்பெற்ற மேற்படி வசனத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
1975ல் வெளியாகி சக்கை போடு போட்ட படமான "ஷோலே",திரும்பவும் ராம்கோபால் வர்மாவால் எடுக்கப்பட்டு வருகிறது.பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்திற்கு,"ராம் கோபால் வர்மாவின் ஷோலே" என்று பெயரிடப்பட்டு உள்ளது.தனது .ஃபேக்டரியிலிருந்து புதிய பொருட்களைச் சீரான கால இடைவெளியில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் ராம் கோபால் வர்மா இந்தப் படத்தை இயக்குவது ஆட்லேப்ஸுக்காக.
ஹேமமாலினி ஏற்று நடித்த பசந்தீ கதாபாத்திரத்தைத் தவிர மற்ற முக்கிய பாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு முடிந்த நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் ஆரம்பித்துவிட்டது.கப்பார்சிங்காக அமிதாப் பச்சன்,வீருவாக அஜய் தேவ்கன்,ஜெய்யாக மோஹித்,தாக்கூராக மோகன்லால்,விதவை ராதாவாக சுஷ்மிதா சென் என்று ஒரு கலவையான நட்சத்திரக் கூட்டமே இதில் தெறமை காட்டுகிறது.இடைவேளைக்குப் பின்னால் வரும் "மெஹ்பூபா" பாடலை யாராலும் மறக்க முடியாது எனலாம்.அந்தப் பாடலுக்கு ஆடவிருப்பவர் யார் தெரியுமா? வர்மாவின் உள்ளம் கவர் கள்ளி ஊர்மிளா தான்.
போன வாரம் கப்பார்சிங்கின் புதிய தோற்றம் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் அமிதாப்பினால் வெளிவிடப்பட்டது.அதைத் தான் போன பதிவில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஹூம்.தமிழில் இப்படிப் பழைய படங்களைத் திரும்ப எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
சூர்யா-ஜோ நடிப்பில் மிஸ்ஸியம்மா,சீயான் - சதா நடிப்பில் பலே பாண்டியா என்று எனது படத் தேர்வுகள் நீளும் ஒரு மைலுக்கு.தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகளில் எந்தப் படங்களை,யார் நடிப்பில் பார்க்க உங்களுக்கு விருப்பம்??
காசா..பணமா..சும்மா அடிச்சி ஆடுங்கப்பா...
09 October 2006
| [+/-] |
கலைநிகழ்ச்சியும்,கட்டான ஒரு டெலிஃபோன் கம்பியும் |
"ஹலோ...ம்மா..நான் தான் பேசறேன்.இவ்ளோ நேரமா டெலிஃபோன் அடிக்குது.என்ன செஞ்சிட்டு இருந்தீங்க??"
"நல்லாருக்கியா தம்பி. குப்பையக் கொண்டு போய்க் கொட்டப் போயிருந்தேன். வரும்போது வழியில லோகநாயகியக்கா எடுத்த தீபாவளி சேலையப் பார்த்திட்டுப் போங்கன்னு ஒரே ரகளை. அங்கே நின்னு ஒரு அஞ்சு நிமிஷம் ஆகியிருக்கும். அப்போ பார்த்து தான் நீ கூப்பிட்டிருக்கே."
"ஏம்மா.குப்பையக் கொட்ட நீ தான் போகணுமா? செல்வியக்கா வேலைக்கு வர்லையா? அவங்களுக்கு ஒடம்பு இன்னும் சரியாகலையா?"
"செல்விக்கு வந்த சிக்குன்குனியா, இப்போ நல்லாயிருச்சு. ஆனா அவ பொண்ணு சாந்திக்கு தான் ஏதோ கிட்னில ஸ்டோன் வந்து ஆஸ்பத்திரியில இருக்காளாம். பாவம் செல்விக்கு கஷ்டத்துக்கு மேல கஷ்டம்.செலவுக்கு மேல செலவு. நான் கூட ஆஸ்பத்திரி போய்,பார்த்துட்டு வந்தேன். ஆஸ்பத்திரியில பக்கத்து பெட்டுல நம்ம எளனீக்கடை குருசாமியோட பொண்ணும் இதே மாதிரி கிட்னில ஸ்டோன் வந்து அட்மிட் ஆகியிருந்தது.
ஆமா,இந்த ஸ்டோன் எதனால வாரது தம்பீ?"
"ஹூம். பொதுவா சிறுநீர் கழிக்கணும்கிற உணர்வு வந்தவுடனே போகாம அடக்கி வச்சிருந்தா அது ஸ்டோனா மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு. இது ஒரு முக்கிய காரணம். இது போகப் பல காரணங்கள் இருக்கு. அது சரி இந்தப் பொண்ணுங்க படிக்கிற ஸ்கூலில் முறையான கழிப்பிட வசதி இருக்கா?"
"ஓஹோ. அது தான் விஷயமா? அந்த ஸ்கூல்ல லெட்ரின் எல்லாம் கெடையாது. எல்லாம் திறந்தவெளீல தான் போகோணும். வயசுக்கு வந்த புள்ளைக எப்படிப் போகும்.சாயங்காலம் ஸ்கூல் முடியறவரைக்கும் அப்படியே கட்டுப்படுத்தீட்டு தான் இருக்கும் போல. பாவம். இலவசமா என்னென்னமோ கொடுத்து என்ன பண்றது. இந்த மாதிரி கழிப்பிட வசதியில்லாத பள்ளிகளுக்கு ஏதாவது செஞ்சிருக்கலாம்."
"அதெல்லாம் நமக்கெதுக்கு ம்மா...நேத்தைக்கு சாயங்காலம் நாலு வாட்டி ஃபோன் செஞ்சேன். ஏன் யாருமே எடுக்கலை? கடைக்குப் போயிட்டீங்களா?"
"இல்லை தம்பி. திரையுலகம் எடுத்த பாராட்டுவிழாவை சுவாரஸ்யமாப் பார்த்திட்டு இருந்தோமா. யாராச்சியும் ஃபோன் பண்ணி தொந்தரவு செஞ்சா என்ன பண்ரதுன்னு நெனச்சி,ஃபோன் ஒயரைக் கழட்டி விட்டிருந்தோம். புரொக்கிராம் எல்லாம் சூப்பரா இருந்திச்சு கண்ணூ. ஆமா..நீ பாக்கலை?"
"நற....நற....நற....நற...."
14 August 2006
| [+/-] |
முன்னாள் நட்சத்திரத்தின் நன்றிகள் |
பத்தாயிரத்து எண்பது நிமிஷங்கள்...
இரண்டாயிரத்து சொச்சம் ஹிட்டுகள்...
சிலருக்குக் கொஞ்ச நேர இளைப்பாறல்கள்...
என்று எனது நடத்திர வாரம் ஒரு வழியாய் நிறைவுக்கு வந்துவிட்டது.
இந்தியா விடுதலை அடையும் சமயத்தில் எனது பதிவுகளினின்று உங்களுக்கும் விடுதலை கிட்டியிருக்கிறது.இந்த மின்மினி திரும்ப தனது பழைய கூட்டிற்கு செல்லவிருக்கிறது.திடீரென முளைத்த அலுவலக சிக்கல்களினால் திட்டமிட்ட படி சில பதிவுகளைப் போட முடியவில்லை.
கல்யாண சமையலில் ஆரம்பித்த வாரம், காணாமல் போனவர்களில் நிறைவு பெறுகிறது.இதில் சில பதிவுகளை மீண்டும் பின்னர் தொடர்வதாய் இருக்கிறேன்.தினப்படி எனது பதிவுகளைப் படித்த, பின்னூட்டமிட்டு என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.வாய்ப்பளித்த மதி கந்தசாமிக்கும் காசி ஆறுமுகத்திற்கும் நன்றி பல.அடுத்து வரும் நட்சத்திரங்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்.
அன்புடன்,
சுதர்சன்.கோபால்
"உங்கள் அனைவருக்கும் எனது இந்திய விடுதலை நாள் வாழ்த்துகள்!"
12 August 2006
| [+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 7 |
"அம்மா.ரொம்ப நாளா இந்த பட்டுப் புடவையை ட்ரை வாஷ் பண்ணணும்னு இருந்தீங்களே..." என்று பெண்பிள்ளை ஆரம்பித்தால் அடுத்து வரப்போவதைத் தாராளமாக ஊகிக்கலாம் - "அந்தப் பட்டுப்புடவையும் திருமண பஃபே விருந்தில் கலந்து கொண்டு பசியாற்றியது" என்று.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
எங்க கீழே சொல்லியிருக்கிற மேட்டர்கள்ள மெய்ப்பொருள் என்ன என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்.
1.கல்யாணத்திற்குக் கெளம்பரப்ப தான் ஞயாபகம் வந்திச்சி இன்னைக்கு ஞாயித்துக் கிழமைன்னு.இந்த ஊர்ல எவன் ஞாயித்துக் கிழமையன்னிக்கு கடைய சீக்கிரமே தொறக்கப்போரான்... ஹி.ஹி..
2.நம்ம சூலூர் பிரேஞ்சில உங்களப் போல ஒரு அனுபவஸ்தர் இல்லாமத் தான் குட்டிச்சுவர் ஆகிப்போச்சு.
3.ஸ்போர்ட்சிலயெல்லாம் உங்க பையன் தான் ஸ்கூல்லயே முதல்..
4.அடடா..நீங்க சொல்ரது சரிதான் சார்.ரொம்பத்தான் ஒழுகுது.ரிப்பேர் செஞ்சிட வேண்டியது தான்.
5.ஏம்பா.உங்க பேனா உடையவே உடையாதுன்னு சொல்லீட்டு இருந்தீங்களே...
6.இஸ்திரிக்கு போட்டிருந்த அந்த புளூக் கலரு கட்டம் போட்ட சட்டை புதுசுங்களா???
7.ஆமாம்.காவிக்கலர்ல இந்தச் சேர்ல தான் இருந்தது.நீங்க தான் அந்த கர்ச்சீப்பைப் போட்டு வச்சிருந்தீங்களோ??
8.என்ன சார்.நீங்க ஏறும் போதே தெளிவா சொல்லியிருக்காலம்ல இன்னர் ரிங் ரோடு தான் போகணும்னு.
9.உப்பெல்லாம் புக்ல சொல்லியிருக்கிற அளவு தான் போட்டேன்.ஆனாக்கூட....
| [+/-] |
"காணாமல் போனவர்கள்" ஸ்பெஷல் |
தூர்தர்ஷன் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது.
எல்லா நாள் நிகழ்ச்சிகளினிடயே எதிர்பாராமல் வரும் "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்ற் அறிவிப்புப் பலகையையும்,வெள்ளியன்று "ஒலியும் ஒளியும்" முன்னால் சிவபூசைக் கரடியாக வரும் "எதிரொலி" நிகழ்ச்சியினையும் வெறுக்காத ஆட்கள் இல்லை எனலாம்.இது போல் மறக்க முடியா இன்னுமொரு நிகழ்ச்சி "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு".எங்கள் வீட்டில் யாருக்குமே பிடிக்காத இந்த நிகழ்ச்சியானது சொல்லத்தெரியாத காரணங்களுக்காக எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
காணாமல் போன தினத்தில் கறுப்பு நிறக் கால்சட்டை அணிந்த சிறுவனின் ஒளிப்பட முகத்தில் தெரியும் மென் சோகம் என்னை என்னவோ செய்த நாட்களும் உண்டு."நான் காணாமப் போயிட்டா பழனீ விஜயா ஸ்டூடியோவில எடுத்த கலர் ஃபோட்டோ தான் TVக்கு தரணும்" என்று எத்தனை முறை சண்டையிட்டிருப்பேனோ எனக்கே தெரியாது?
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவியவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் "கண்டேன் சீதையை" என்று வந்த அனுமனுக்குத்தான் முதலிடம் தரப்பட வேண்டும்.இதில் தூர்தஷனுக்கும் அதில் வரும் கா.போ.ப.அறிவிப்புகளுக்கும் எத்தனையாவது இடம் வரும் என்று சத்தியமாக எனக்குத் தெரியாது.
சரி,,சரி,,விஷயத்துக்கு வருவோம்.
நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான சிலர் கொஞ்ச நாளாய்க் காணாமல் போய்விட்டார்கள்.அவர்களைக் கண்டுபிடிக்கத் துப்பு கொடுப்பவர்களுக்கு மயில்ஜீயுடன் ஒரு "அதிரடிப் பரிசு"ம் உண்டு.
நபர்1 :- "மூலிகை பெட்ரோல் புகழ்" ராமர் பிள்ளை
மாற்று எரிபொருள் பற்றிய ஆராச்சியில் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்தவர். 90களின் இறுதியில் இவரது கட்டுரை வாராத வாரப் பத்திரிக்கைகளே இல்லை
எனலாம்.ராஜபாளையத்தைச் சேர்ந்த இவர் காணாமல் போய் விட்டாரா இல்லை சிறை வாசம் முடித்துவிட்டு வந்து விட்டாரா என்று தெரியவில்லை.துப்பு கொடுப்பவர்களுக்கு "வைக்கோலில் இருந்து சாம்பலை உருவாக்குவது எப்படி" என்னும் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.(ஆமாம் இப்போ இவர் வளர்ப்பு குடும்பம் எப்படி இருக்கு??)
நபர் 2:- ஷ்ரீவித்யா
எம்.எல்.வி. என்னும் ஒரு மாபெரும் இசைக்கலைஞரின் மகளாய்ப் பிறந்து ஒரு நட்சத்திர இயக்குனரால் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிப் பல்வேறு கதாபாத்திரங்களை அனாயசமாக எற்று நடித்த இவரைக் கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழ் திரையில் காணவில்லை.கடைசியில் கண் பார்வை இழந்தவராக "லண்டன்" என்னும் படத்தில் பார்த்ததாய் ஞாபகம்.உச்ச நட்சத்திரத்திற்கு இணையாக,அக்காவாக,அம்மாவாக நடித்த இவர் அடுத்த படத்தில் பாட்டியாய் நடிக்கவிருக்கிறார் என்று ஒரு பேச்சு அடிபட்டது உண்மையாக இருக்குமோ(ஆமா,ஜெயேந்திரர் வழக்கில இவங்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்குதுன்னு பேசிக்கிறாங்களே.அது இன்னா மேட்டர்??)
நபர் 3:- அஜீத்ஜோகி
இந்திய ஆட்சியமைப்புத் துறையில் தாழ்த்தப்பட்டோர் கோட்டாவில் நுழைந்த இவர் அப்போதைய மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் அர்ஜூன் சிங்கின் ஆணைக்கேற்ப அரசுப்பணியினை விட்டு அரசியலில் நுழைந்தார்.மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிந்து சென்ற சட்டீஸ்கர் மாநிலத்தின் முதலாம் முதலமைச்சராய் பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்தார்.2003ல் நடந்த தேர்தலில் முதலமைச்சர் நாற்காலியைப் பறி கொடுத்த இவர் 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அரசியலில் நுழைந்தார்.அப்போது நடந்த ஒரு மோசமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பின்னர் இவரது சௌவுண்டை எங்கும் காணோம்.(அது சரி.சமீபத்தில 25 எம்பிக்களுடன் சேர்ந்து சோனியாதான் பிரதமராகணும்னு நீங்க அனுப்பின மனுவுக்குப் பின்னால உள் குத்து ஒண்ணும் இல்லையே??)
அடுத்து வருபவர்கள் "குத்துவிளக்கு" கோபாலகிருஷ்ணன்,"சின்ன சின்ன ஆசை" மின்மினி,"சிட்டிசன்" ஷரவண சுப்பையா.
வெளியே செல்லவிருப்பதால் "மறுமொழி மட்டுறுத்தல்" கொஞ்சம் தாமதமாவே நிகழும்.பொறுத்தருள்க :-)
| [+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 6 |
இன்றைக்குக் கொறிக்க, "பெங்களூரு" பற்றிய சில தகவல்களும் கேள்விகளும்:
தகவல்கள்:
1)இந்தியாவில் முதன்முதலில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்ட நகரம் பெங்களூர் ஆகும்.வந்த ஆண்டு 1905.
2)அந்தமானில் 1872ல் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலான மேயோவின் நினைவாகக் கட்டப்பட்டதே எம்.ஜீ.ரோட்டிலுள்ள மேயோ ஹால் ஆகும்.பொது மக்கள் உதவியுடன் கட்டப்பட்ட இது 1883 ஆம் ஆண்டில் அப்போதைய நகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
3)மெஜஸ்டிக் என்று அழைக்கப்படும் இடத்தின் உண்மையான பெயர் காந்திநகர் ஆகும்.அந்த இடத்தில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த மெஜஸ்டிக் டாக்கீஸால் இந்த இடத்திற்கு இப்பெயர் வந்தது.
4)1760-ல் ஹைதர் அலியால் உருவாக்கப்பட்ட "லால் பாக்கின்" நிஜப் பெயர் என்ன தெரியுமா?
"மேங்கோ டோப் & சைப்ரஸ் கார்டன்"
கேள்விகள்:
1)70களின் பிற்பகுதியில்,பெங்களூரின் இந்தக் குறிப்பிட்ட பகுதியானது ஆசியாவிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகக் குறிப்பிடப்பட்டது.அது எந்தப் பகுதி?
2)BTM மற்றும் HSR லே-அவுட்டுகளை விரிவு படுத்துக.
3)பெங்களூரு ஏரிகளினால் ஆன நகரம்....இல்லை.இல்லை. நகரமாக இருந்தது.இப்போது முக்கால்வாசி ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவை இருந்த இடங்களில் காங்க்ரீட் கட்டிடங்கள் தான் இருக்கின்றன.கீழே கொடுக்கப்பட்ட ஏரிகளின் மீது தற்போது காணப்படும் பெயர் பெற்ற கட்டிடங்கள் என்ன என்று கண்டுபிடிக்க முடியுமா?
சம்பங்கி ஏரி,தரமம்புடி ஏரி.
4)நான் குறிப்பிடும் இந்த மனிதர் பெங்களூரில் சில காலம் மல்லேஸ்வரத்திற்கும்,பசவன்குடிக்கும் இடையே செல்லும் 14ஆம் நம்பர் அரசுப் பேருந்தில் வேலை பார்த்து வந்தார்.இவரது விசில் ஊதும் அழகைப் பார்க்கவே கூட்டம் இவரது பேருந்தில் அள்ளுமாம்.இவர் யார்??
| [+/-] |
ஆப்பரேஷன் "மொட்டைக் கடிதாசு" - பகுதி 2 |
வினோத்தோட மேனேஜர் பேசுகிறேன்:
உங்க கிட்ட வினோத் ஏதோ சொல்லீட்டு இருந்தான் போல இருக்கு.என்னைப் பார்த்ததுமே நழுவிட்டான்.என்ன சொன்னான்னு நான் உங்ககிட்ட கேட்கக்கூடாது.அது அநாகரீகம்.அவன் சொன்னதக் காது கொடுத்துக் கேட்ட நீங்க,நான் சொல்லப் போறதையும் கொஞ்சம் கேளுங்களேன்.
இன்று காலை 10:45 மணி:
நான் செஞ்சதை என்னாலயே நம்ப முடியலை.கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன் போலிருக்கு.வெறுமனே என்னோட மொபைல் நம்பர் மட்டும் கொடுத்திருக்கலாமோ?என்ன செய்ய ஒரு தடவை "சென்ட்" பட்டனை அமுக்கிய பிறகு கன்ட்ரோல் நம்ம கிட்ட இல்லையே.சரி.என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே
"ஹலோ.யெஸ் சார்..ஓக்கே சார்.இப்போ வர்ரேன்".
நேரம் காலம் தெரியாம இந்த நேரம் பார்த்து ஆந்தைகண்ணன் கூப்பிடறான்.வேற
யாருமில்லை.என்னோட பாஸ் தான்.எதுக்காக இருக்கும்??
நான் போயிட்டு வந்திடறேன்.அதுக்குள்ள நீங்க போய் தமிழ்மணத்தில புதுசா எதுனாச்சி வந்திருக்கான்னு பார்த்திட்டு வந்திடுங்க.
11:45 மணி:
என்னோட பாஸ் சொன்னத இன்னும் என்னால நம்பவே முடியலை.நான் வெளிநாடு போக முயற்சி செஞ்சிட்டு இருக்கறதப் பத்தி இவருக்கு எப்படித் தெரிய வந்தது.யாராவது போட்டுக்கொடுத்திருப்பாங்களா?இல்லைன்னா அது பத்தி இவர் ஏன் அதுவும் திடீர்னு இன்னைக்கு கேக்கறாரு?எனக்கென்னமோ இந்த வினோத் மேலயும் செபாஸ்டியன் மேலயும் தான் கொஞ்ச சந்தேகமா இருக்கு.செபாஸ்ட்யன் வேற நான் ரெண்டு மூணு வாட்டி கன்சல்டன்ட் கிட்ட பேசரதப் பார்த்திருக்கான்.அதுவும் தவிர எனக்குத் தெரிஞ்சவரை இந்த ஆஃபீஸில என்மேல காண்டு இவனுங்க ரெண்டு பேருக்குத் தான்.ஹூம்.இப்ப என்ன செய்யலாம்???
அட வைப்ரேட்டர் வேற சத்தம் போடுது.செந்தில் தான் கூப்பிடறான்."சொல்லு செந்தில்.ஆமாம்.நான் பெரிசு கூடப் பேசிட்டு இருந்தேன்.நானே உன்னைக் கூப்பிடலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.மேட்டர் என்னங்கறத நான் கேன்டீன்ல சொல்றேன்.இல்லை இன்னைக்கு நான் கார்ல தான் வந்திருக்கேன்.ஓக்கே...பை..."செந்தில் என்னோட மூணாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை ஒண்ணாப் படிச்சவன்.பல இடங்கள்ள குப்பையைக் கொட்டிட்டு ஆறு மாசம் முன்னாடி தான் எங்க கம்பெனியில சேர்ந்தான்.வேற,வேற கட்டிடத்தில வேலை செஞ்சாலும்,அப்பப்போ கேன்டீன்ல சந்திச்சுக்குவோம்.நீங்களும் என் கூட கேன்டீனுக்கு வாங்க.உங்களுக்கு வேணும்கிற எல்லா ஐட்டமும் கிடைக்கும்.0f course dutch treat தான்.
"என்ன விஷ்வா.ரொம்ப டல்லா இருக்கே.ஏதாவது பிரச்சினையா?"
"ஆமா செந்தில்.பெரிசுக்கு நான் வெளிநாடு போகறதுக்கு முயற்சி செஞ்சிட்டு இருக்கற விஷயம் எப்படியோ தெரிஞ்சுபோச்சு.யாரோ என் டீம்ல இருந்து தான் போட்டுக் கொடுத்திருக்காங்க.பக்கா ப்ரூஃபோட பேசுது பெரிசு.எவனோ கூட்டுக்களவாணிக மொட்டைக் கடிதாசு மாதிரி ஏதோ ஒண்ணைப் போட்டு என்னோட விக்கெட்டை சாச்சிட்டாங்க.சே...."
"சரி....சரி...விஷ்வா...அந்த சாஸைக் கொஞ்சம் இப்படித் தள்ளு.அப்புறம் உங்க பெரிசு அதுக்கு என்ன சொல்லிச்சு?நீ மொட்டைக் கடிதாசுன்னு சொன்னதும் தான் எனக்கு நம்ம சாந்தா டீச்சர் ஞாபகத்துக்கு வாராங்க.ஆமா..அந்த மேட்டர் நடந்து ஒரு பதினெட்டு வருஷம் இருக்குமா??"
"செந்தில் திஸ் இஸ் டூ மச்,மனுஷன் இங்கே குழப்பத்தில கொந்தளிச்சுட்டு இருக்கேன்.நீ பாட்டுக்கு சிரிச்சுட்டு பழைய குப்பையக் கிளறீட்டு இருக்கே??"
செந்திலுக்கு அபார ஞாபகசக்தி.ஆன தேவையில்லாத விஷயங்களைத் தான் அதிகமா மெமரில ஏத்தி வச்சிருப்பான்.அவன் சொன்ன அந்த விஷயம் நாங்க ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது.மொட்டைக் கடிதாசுன்னு பேச்சு வந்தாலோ இல்லே எங்கேயாவது அதப் பத்தி படிச்சாலோ எனக்கு உடனே சாந்தா டீச்சர் தான் ஞாபகம் வருவாங்க.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது:
"டேய்...விஸ்வநாதா இது தப்பில்லையா??"
"செந்தில்.நீ அனியாயத்துக்கு பயந்தாங்கொள்ளியா இருக்கியேடா.உங்கப்பா மிலிட்டரில இருக்கிறார்.நீ என்னடான்னே இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் போய் பயந்திட்டு இருக்கியே?நாலு பேருக்கு நல்லது செய்யற மாதிரி இருந்தா எந்த ஒரு விஷயமும் தப்பில்லைன்னு எங்க தலைவரே நாயகன்ல சொல்லியிருக்காரு.அதனால இது தப்பில்லை"
"அது சரி.நாலு பேருக்கு நல்லது செய்யற விஷயம் தான தப்பில்லை.இங்கே நானு,நீ ரெண்டு பேரு தான் இருக்கோம்.விஸ்வநாதா எனக்கென்னமோ இது கொஞ்சம் ஓவராய்த் தோணுது."
"அடச்சே..ஏண்டா பொட்டைப்புள்ளை மாதிரி பயப்படுதே???எங்க அப்பா நம்ம பழைய லைப்ரேரியன் சரியான நேரத்துக்கு வர மாட்டேங்கிறார்னு மொட்டைப்பெட்டிஷன் எழுதிப்போட்ட பொறவு தான் அந்த லைப்ரேரியனுக்கு கவுர்மென்டில ரிவிட் அடிச்சாங்க.இப்போ பாரு எப்படி டாண்ணு நேரத்துக்கு வந்திடறாரு.உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா?அந்த லெட்டரை என்னை வச்சித் தான் எழுதினாரு எங்க அப்பா. அது மாதிரி நம்மளையே எப்போ பார்த்தாலும் குறி வச்சு ரிவிட் அடிக்கிற சைன்ஸ் டீச்சருக்கு வக்கிற ஆப்பு தான் இந்தக் கடிதாசு"
"வெறும் கடிதாசு இல்லை.மொட்டைக் கடிதாசுன்னு சொல்லுடா.யாரோ வார மாதிரியிருக்கு.உள்ளே பாக்கெட்ல வச்சுக்கோ"
ஆம்.எங்கள் ஒன்பதாம் வகுப்பு "ஆ" பிரிவுக்கு அறிவியல் பாடம் சொல்லித்தர புதிதாய் வந்திருக்கும் சாந்தா டீச்சர் தான் எங்களது மொட்டைக் கடிதாசியின் இலக்கு.பின்னே என்னவாம்???அறிவியல் பாடமே சுட்டுப் போட்டாலும் வராத மக்குகள் பலரிருக்க,சுமாராய்ப் படிக்கும் எங்களையே குறி பார்த்து ஒவ்வொரு வகுப்பிலும் அத்தனை பேர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவதை என்னால் மறக்கவே முடியாது.புதுசாத் தாவணி போட்ட குமரிகள் முன்னால்,இன்னமும் திருமணம் ஒரு டிச்சர் கையால் அடி வாங்குவதை எத்தனை நாள் தான் பொறுத்துக்கொள்வது.
அப்பா சொல்படி மொட்டைப் பெட்டிஷன்கள் பல எழுதிய அனுபவம் உள்ள எனக்கு,இதெல்லாம் வெறும் ஜூஜூபியாய் இருந்தது.எங்கள் திட்டத்தின் படி ஒரு அரையாண்டுப் பரிச்சை விடுமுறை ஆரம்பிக்கும் சமயம்,இது போல ஒரு கடிதாசியை எழுதி அனுப்பிவிட வேண்டும்.
என்னன்னு எழுதறது...???ஹூம்..புதுசா வந்த பீ.டி.மாஸ்டருக்கும் நம்ம சையின்ஸ் டீச்சருக்கும் கசமுசான்னு எழுதுவோம்.அப்போ தான் விஷயம் இன்னும் பெரிசாகும்.பீ.டி.மாஸ்டருக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை.எப்போ ஸ்டாஃப்ரூம் போனாலும் ஏதோ பாலமுருகன் புத்தகங்களைப் பத்தி ரெண்டு பேரும் சதா அரட்டை அடிச்சிக்கிட்டே இருக்காங்க.அதுவும் தவிர ரெண்டு பேரும் வேற வேற ஜாதி.
அது சரி...யாருக்கு அனுப்புவது ?? தலைமை ஆசிரியருக்கு..சே..அந்த ஆள் பொண்ணுங்களைப் பார்த்தாலே மூத்திரம் குடிச்ச மாடு மாதிரி குழைவான்.திட்டம் படுதோல்வி ஆகிடும்..ஊர் ப்ரெசிடன்டுக்கு அனுப்புவோமே.சே..அந்த ஆளுக்குக் குடும்பத்திலேயே பல சிக்கல் இருக்கு.இதில எங்கே இதையெல்லாம் கவனிக்கப் போறாரு.பேசாம சாந்தா டீச்சர் வீட்டுக்கே அனுப்பிட வேண்டியது தான்.அவங்க அப்பா வேற செம ஸ்ட்ரிக்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.விஷயம் தெரிங்சதும் அவங்க அப்பா டீச்சரை வேற ஊருக்கு மாத்தல் வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவாரு,இல்லை டீச்சர் கொஞ்ச நாளைக்கு எங்களை அடிக்காம தன்னோட சொந்த துக்கத்தில மூழ்கிக் கிடப்பாங்க.
அப்புறமென்னா எங்க காட்டில தெனம் தெனம் மழை தான்.
திட்டத்தின் படி,எங்கள் அரையாண்டுப் பரிச்சை முடிந்த ஒரு சுபயோக சுபதினத்தில் எனது இடது கையினால் எழுதிய அந்த மொட்டைக் கடிதாசியினை பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பழனிக்குச் சென்று போஸ்ட் செய்துவிட்டு வந்தோம்.போஸ்ட் செய்த மறு நாளே நான் தாத்தா ஊருக்கும்,செந்தில் தனது மாமா ஊருக்கும் பயணப்பட்டோம்.எனது உடல் தான் தாத்த ஊரில் இருந்தது.முழு மனசும் டீசச்ர் வீட்டில் லெட்டர் கிடைத்ததா,அதற்குப் பின்னால் டீச்சருக்கு என்ன ஆயிருக்கும் என்பதைப் பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.
(தொடரும்)


