14 October 2006

விட்டு விடுதலையாகி... - தேன்கூடு போட்டிக்கு

சமையல் ரூமில இருந்து சப்பாத்தி சுடுற சத்தம் கேக்குது.அனேகமா எங்களுக்கு சப்பாத்தி செஞ்சிட்டு இருக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.ஆன்ட்டி எங்களை இங்கே கூட்டீட்டு வந்த நாளில இருந்து இன்னைய வரைக்கும் எங்களுக்கு ராத்திரி தீஞ்சு போன சப்பாத்திதான் ஆகாரம்.நாங்களும் போட்டதைச் சாப்பிட்டுக்கறோம்;இல்லேன்னா எங்க ஆன்ட்டி கிட்ட திட்டும் உதையும் யாரு வாங்குறது.

நாங்கன்னு சொன்னது என் கூட இருக்கிற அனு,சில்வியா,சித்ரா இவங்களையும் சேர்த்துதான்.அதோ...பச்சை சுடிதார் போட்டிட்டு ஆன்ட்டி துணிகளுக்கு இஸ்திரி போட்டிட்டு இருக்கறது தான் அனு.மத்த ரெண்டு பேரும் வீட்டைத் துடைச்சிட்டு இருக்காங்க. நான் இப்போ தான் என்னோட வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து உக்காந்தேன்.சன் நியூஸ் போடற சத்தம் கேக்குது.அட மணி எட்டு ஆயிடுச்சா??

இங்கே இருக்கிற ஸ்கூலில முழுப்பரிச்சை ஆரம்பிச்சிடுச்சி.மதியம் துணி காயப்போடும் போது பார்த்தேன்.பரிட்சை எழுதி முடிச்சிட்டு எல்லாரும், பேடோட வீட்டுக்குப் போயிட்டு இருந்தாங்க.இங்கே ஸ்கூலில யூனிபார்ம் வேற கலர்.இன்னைக்கு தமிழ்ப் பரிச்சையாயிருக்கும்.
என்ன,என்ன கேள்வியெல்லாம் கேட்டாங்களோ?காலாண்டுத் தேர்வில நான் இந்தப் பாடத்தில 86 மார்க்கு வாங்கினேன்.அரையாண்டுத் தேர்வு கூட நல்லாத் தான் எழுதினேன்.எப்படியும் ஒரு 85 மார்க் வாங்கியிருப்பேன்.

"விஜிம்மா..விஜிம்மா....அப்படி என்ன உக்கார்ந்திட்டே கனவு கண்டிட்டு இருக்கே?? ?காலா காலத்துக்கு சாப்பிட வேண்டாமா.."

அட இது எங்க ஆன்ட்டி குரல் போல இருக்கு.இவங்களுக்குக் கூட இப்படியெல்லாம் கூப்பிடத் தெரியுமா??என்னைக்கும் இல்லாம இவ்வளவு பாசமா சாப்பிடக் கூப்பிடறாங்க.இன்னைக்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது.

"வாம்மா விஜி.உன்னைத் தவிர எல்லாரும் சாப்பிட வந்தாச்சு.ஏன் உனக்குப் பசியே எடுக்கலையா?மதியம் சாப்பிட்டதெல்லாம் இன்னேரம் செரிச்சிருக்கணுமே??வந்து சாப்பிடு வா."

எனக்கு எதுவுமே நம்பமுடியலை.ஆன்ட்டியா இப்படி??அதோ..வலது கைப் பக்க மூலைல இருக்கிறது தான் சமையல் ரூம்.அதுக்குப் பக்கமா இருக்கிற சின்ன ரூம் தான் எங்க டைனிங் ஹால்.நான் போய் சாப்பிடப் போறேன்.எல்லாரும் வேலைய முடிச்சிட்டு சாப்பிட வந்திட்டாங்க போல இருக்கு.நாங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்திக்கிட்டோம்.எல்லோருக்கும் ஆன்ட்டி இப்படி அன்பா இருக்கறது இது ஒரு அதிர்ச்சியாத் தான் இருந்தது.அதை விடப் பெரிய அதிர்ச்சி,தீஞ்ச சப்பாத்தி தட்டில விழும்னு எதிர் பார்த்து இருந்தா,தட்டில விழுந்த நல்ல சப்பாத்தியப் பார்த்து வந்தது.

"ஹூம்.அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கச்சிவோட சந்தோஷமா இருந்த கொழந்தைக உங்களை இந்தக் கோலத்தில பார்க்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கு.பாழாப்போன சுனாமி வந்தாலும் வந்தது;எல்லாரோட சந்தோஷத்தையும் வாரீட்டு இல்ல போயிடுச்சு.தெய்வமே...இந்தக் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டக் கூடாதா?
சகாயம்,அந்தப் பாக்கெட்டில லட்டு இருக்கு.எல்லாருக்கும் ரெண்டு,ரெண்டு லட்டை வையி...."

லட்டுங்கற பேரைக் கேட்டாலே எனக்கு எங்க பாட்டி ஞாபகம்தான் வரும்.எனக்காக குட்டி,குட்டியா லட்டு செஞ்சு அவங்க கையாலேயே ஊட்டி விடுவாங்க.ஹூம்.எல்லாரும் போயிட்டாங்க.அரைப் பரீட்சை லீவுக்கு குடும்பத்தோட வேளாங்கண்ணி வந்தோம்.எவ்ளோ பெரிய அலை...அப்பெல்லாம் அதோட பேரு சுனாமின்னு தெரியலை.
அறிவியல் பாடத்தில எப்பவோ படிச்ச ஞாபகம்.எங்க தம்பியக் காப்பாத்த முடியலையேன்னு,எங்க அப்பாவும் அவருக்குப் பின்னாடி அம்மாவும் கடலில் குதிச்சது இன்னும் கண்ணு முன்னாடியே இருக்கு.சே... என்னைய மட்டும் விட்டிட்டு எல்லாரும் போயிட்டாங்க.

"விஜி.என்னது இது?சாப்பிடறப்போ கண்ணக் கசக்கீட்டு.தட்டிலே போட்டது வேற அப்படியே இருக்கு.ஒன்னை கேம்பில பார்த்தப்போ இருந்ததை விட,இப்போ ரொம்ப இளைச்சுப் போயிட்டியே??சகாயம்,விஜிக்குக் கொஞ்சம் குருமா ஊத்து.வயசுப் பொண்ணுங்க நல்லா சாப்பிட்டுத் தெம்பா இருக்க வேணாமா?பொண்ணுங்களா,சீக்கிரம் தட்டைக் காலி பண்ணீட்டு,போய் தூங்குங்க.காலையில சீக்கிரமே எழுந்திடணும்.வேன் டாண்ணு ஏழரைக்கெல்லாம் வந்திடும்."

என்னோட லட்டை அனுவுக்குக் கொடுத்திட்டேன்.எதுவுமே சாப்பிடப் புடிக்கலை.காலைல இருந்து அம்மா நெனப்பாவே இருக்கு.நேத்திருந்து சொல்லிக்கிட்டே இருக்காங்க.எங்கேயோ போகப் போறோம்னு.எங்கேன்னு மட்டும் தெரியலை.ஆன்ட்டியைக் கேக்கவும் பயமாயிருக்கு.எங்கே கூட்டிட்டுப் போனாலும் பரவாயில்லை ,மூச்சு முட்டிக்கிட்டு இருக்கிற இருட்டான கூண்டில இருந்து கொஞ்சம் நேரம் வெளியே போனா சரிதான்.நாங்க ஒருத்தரை ஒருத்தர் திருதிருன்னு முழிச்சிக்கிட்டே சப்பாத்தியை மென்னு முழுங்கினோம். நாளைக்கு வெளியே போகப் போறோம்கிறதை நெனச்சா ஒரு பக்கம் சந்தோஷமாத்தான் இருக்கு.

"ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...."

"நேரம் கெட்ட நேரத்தில யாரு கூப்பிடறாங்க...ஹூம்..."

"ஹலோ..ஆமாங்க இது கருணை இல்லம் தான்.அட என்ன இது அண்ணாச்சி குரல் மாத்தி எல்லாம் பேசிக்கிட்டு...சௌக்கியமா இருக்கீங்களா?.நானே கூப்பிடணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.எல்லாம் ரெடியா இருக்கு.நாளைக்கு கேட் பாஸ் கொடுத்திட வேண்டியதுதான்.நாலு வருது நாளைக்கு ட்ரிப்பில.அட..ஒங்களுக்கு இல்லாததா??சாமிக்குத் தான மொத படையல்.அய்யோ..அப்படியேல்லாம் நீங்க சொல்லக்கூடாது..நாந்தான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.அப்புறமா செக் வேணாம்.கேஷாவே கொடுத்திடுங்க.சரிங்க அண்ணாச்சி.நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடுங்க.நாளைக்குப் பார்ப்போம்.வச்சிடறேன்..."

பொதுவாவே ஆன்ட்டியோட குரல் கணீர்னு கேக்கும்.அதுவும் சந்தோஷத்தில இன்னும் சத்தமா பேசுவாங்க.அவங்க ரூமில ஃபோன்ல ஆன்ட்டி பேசினதில பாதி புரிஞ்ச மாதிரி இருக்கு;புரியாத மாதிரியும் இருக்கு.ஹூம்...என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே...?சே...இந்த கிழிஞ்ச பாயையும், அழுக்குத் தலகாணியையும் பார்த்தா எரிச்சலா வருது.சினிமாவில வார மாதிரி வெள்ளையா,புஸ்ஸுன்னு இருக்கிற மெத்தையில ஒரு நாளாவது படுத்துத் தூங்கணும்.வீட்டில நான் போர்த்தீட்டு இருந்த பச்சைப் போர்வை குளிருக்கு எவ்வளவு நல்லா இருக்கும்..சே..இன்னை ஏன் இப்படி சும்மா சும்மா வீட்டைப் பத்தியே நினைச்சிகிட்டு இருக்கேன்.

"விஜி...இன்னும் தூங்கலியா??? தூக்கம் வரலையா???அப்புறம் நாளைக்கு காலைல ஒருத்தரப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போறோம்.நல்லாத் தூங்கி காலைல சீக்கிரமே எந்திரிச்சுடணும்.உங்களுக்குப் புதுத் துணி வாங்கி வச்சிருக்கு.தலைக்குக் குளிச்சிட்டு அதைப் போட்டுகிட்டு ஏழு மணிக்கெல்லாம் ரெடியாகிடணும்.மத்த பொண்ணுங்க கிட்டயும் சொல்லீடு.எல்லாரும் தூங்கீட்டாங்க போல..."

புது ட்ரெஸ் போட்டுகிட்டு யாரோட வீட்டுக்குப் போகப் போறோம்?சுடிதாரா இல்லை பாவாடை தாவணியா?எனக்குப் புடிக்காத சிவப்புக் கலர்ல சுடிதார் எடுத்திருக்க் கூடாது.கடவுளே...ஒரு வேளை சினிமாவில வார மாதிரி எங்களை யாருக்காவது வித்துடப் போறாங்களா??சே....ஆன்ட்டி அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க.இத்தனை நாளா எங்களைக் கஷ்டப்படுத்தினதை நெனச்சிப் பார்த்து இப்போ மனசு மாறியிருக்காங்க.இல்ல..இல்ல..ஆன்ட்டி எங்கேயோ தப்பான இடத்துக்குத் தான் கூட்டிட்டுப் போகப் போறாங்கன்னு தோணுது.ஆனா எங்கே கூட்டிட்டுப் போகப் போறாங்கன்னு தெரியலையே...கடவுளே...எங்களுக்கு விடுதலை கெடையாதா??

காலைல இருந்து வேலை செஞ்ச அசதீல எப்போ தூங்கினேன்,எப்போ முழிச்சேன்னு தெரியலை.எங்க எல்லார்த்தையும் நல்ல வாசனை சோப்பு போட்டு குளிக்க வச்சு,ஆன்ட்டி போடற செண்ட் அடிச்சு,வாங்கி வச்சிருந்த துணியப் போட்டுக்க வச்சி வேன் ஏறினப்ப மணி 7.35 . நல்ல வேளை என்னோட புது சுடிதார் சிவப்பு கலர்ல இல்லை.என்னோட சுடிதாரை விட அனுவோட சுடிதார் நல்லா இருக்குது.எல்லாரும் புது ட்ரஸ் போட்டிட்டு வேன்ல வெளியே போற சந்தோஷத்தில இருந்தாங்க.ஆனா,எனக்கு மட்டும் ஏதோ நடக்கப் போகுதுன்னு ஒரு நெனப்பு.

கில்லி படத்தில வார மாதிரி ஒரு வெள்ளைக் கலர் வேன்.ஆன்ட்டி நல்ல மூடில இருந்தாங்க போலிருக்கு.ஏதோ பாட்டை முணுமுணுத்திட்டே வந்தாங்க.நான் சாமியக் கும்பிட்டுக் கிட்டே வேனுக்குள்ள ஏறினேன்.இங்க வந்த இந்த மூணு மாசத்தில மொத முறையா இப்போ தான் கேட்டைத் தாண்டி வெளியே போறோம்.இதுவே ஒரு பெரிய விடுதலை கிடைச்ச மாதிரி அனுவோட முகத்தில சந்தோஷம்.

"டேய்..சுரேசு...காலையிலயே சரக்கைப் போட்டிட்டு வந்திட்டியா??ரோட்டைப் பார்த்து மெதுவா ஓட்டு.வேற வண்டி இல்லையா??இந்த பாழாப்போன குவாலிசையே எடுத்திட்டு வந்து எழவு கொட்டாட்டி என்ன?"

வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்த எங்களுக்கு அந்த ரோட்டோரக் காட்சிகள் ரொம்ப புடிச்சுப் போச்சு.வேடிக்கை பார்த்திட்டு வந்தோம்.திடீர்னு ஒரு ஐடியா தோணுச்சு.பாத்ரூம் வருதுன்னு சொல்லி வேனை நிப்பாட்டச் சொல்லி,இறங்கி ஓடிப் போயிடலாம்னு தோணிச்சு.கொஞ்ச நேரம் பொறுத்து சொல்வோம்னு வெயிட் பண்ணீட்டு இருக்கேன்.

க்ரீச்ச்...க்ரீச்ச்ச்....

"டேய்...டேய்....பார்த்து மெதுவா பிரேக்கைப் போடு..."

"சாரிக்கா...இனிமே பார்த்துப் போறேங்கா..."

"அய்யோ..எருமை மாடு நடு ரோட்டில...பார்த்து...அம்மா....."

க்ரீச்...டபார்.....

"அய்யோ...அம்மா...கர்த்தரே.....அய்யோ...."

உங்க எல்லாருக்கும் டாடா....விடுதலை கொடுத்த சாமியப் பார்க்கப் போறேன்.உங்களோட கோரிக்கை ஏதாச்சியும் இருந்தா சொல்லுங்க...அவர் கிட்டே சேர்த்திடறேன்.....



---------------------------------------------------------------------------------

சற்றே பெரிய கதை,உங்களது ஆதரவினை வேண்டி...

அன்புடன்,
சுதர்சன்.கோபால்

---------------------------------------------------------------------------------

27 Comments:

மா சிவகுமார் said...

தமிழ்மணத்தில் முதல் மூன்று வரிகளில் இழுக்கப்பட்டு ஒவ்வொரு வரியிலும் மனம் சப்பாத்தி மாவு போல பிசையப்பட்டு கடைசியில் 'ஆறுதலான' விடுதலை. அருமையான மனதில் முத்திரை பதித்து விட்ட கதை. பாராட்டுக்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

நாமக்கல் சிபி said...

கதை சூப்பர்...

ரெண்டு ஓட்டு குத்திடலாமா???

G.Ragavan said...

சுதர்சன், ஒரு + போட்டுட்டுதான் பின்னூட்டம் போடுறேன்.

அந்தப் பிள்ளைகளுக்கு உண்மையிலே விடுதலைதானய்யா கிடைச்சது.

விடுதலைங்குறது எப்பவும் நம்ம கிட்ட இருக்கிறது மட்டுமல்ல. விடுதலையோட விளக்கம் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரி மாறிக்கிட்டேயிருக்கும். சூழ்நிலையைப் பொறுத்து அதனோட தேவை கூடுங்குறதுதான் உண்மை. உண்மை. உண்மை. வாழ்த்துகள் சுதர்சன்.

BadNewsIndia said...

மரணம்தான் சிலருக்கு விடுதலை என்பது மறுக்க முடியாத உண்மை.
கதை நன்றாக இருந்தது.

உணவு கை நீட்டும் மக்களின் படம் 'வாவ்' போட வைத்தது, அதன் கலை நேர்த்திக்காக. அந்த மக்கள் அடைந்த துயரங்கள் முழுதும் தீர்ந்ததா என்று தெரியவில்லை.

Anonymous said...

எதிர்பாராத முடிவு. கதை நல்லாயிருக்கு! வாழ்த்துகள்!!!

-சுந்தர் ராம்ஸ்

ஷைலஜா said...

கதை இயல்பா நல்லா இருக்கு..வாழ்த்துகள் சுதர்சன்கோபால்!
ஷைலஜா

Ramya Nageswaran said...

உண்மையை சொல்லலாமா? :-) நல்லா இருக்கு ஆனா ப்ரமாதம்னு சொல்ல முடியாது...இன்னும் நிறைய எழுதுங்க!

அன்புடன்,
ரம்யா அக்கா

துளசி கோபால் said...

போட்டியில் வென்றதற்கு வாழ்த்து(க்)கள்.

கதை நல்லாவே இருக்கு.

நாமக்கல் சிபி said...

வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள்!!!

சொன்னமா :-))

ILA (a) இளா said...

ஓமப்பொடி! செவிச்சுபுட்டியேயா.(வயித்தெரிச்சலுடன்) நல்லா இரும்யா. வாழ்த்துக்கள்.

நம்ம மக்கள் எப்போ பார்த்தாலும் முதல் மூணு இடத்துல இருந்தறாங்களே? எப்படி? அதெல்லாம் கெடைக்கட்டும். Treat எப்போ? ஜி ரா வாக்கு குடுத்துட்டாரு. நீங்க எப்போ?

ஷைலஜா said...

ஹலோ, உள்ளூர்வாசிக்காவது உடனே ட்ரீட் உண்டா?:) வாழ்த்துகள் சுதர்சன்.ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
ஷைலஜா

Sud Gopal said...

வழக்கமான வேலைகள் எதுவும் இல்லாத நிலையிலும் பின்னூட்டமிடாததற்குக் காரணமாய் என் வாழைப்பழ சோம்பேறித்தனத்தைத் தவிர வேறெது இருக்கக் கூடும்???

Sud Gopal said...

வாங்க..வாங்க..மா.சி..

//கடைசியில் 'ஆறுதலான' விடுதலை.//

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

பாராட்டுகளுக்கும்,உங்களுடைய ஓட்டிற்கும் எனது நன்றி.

அடிக்கடி வந்து போயிட்டு இருங்க.

Sud Gopal said...

ரெண்டு ஓட்டு குத்திடவா என்று கேட்டதோடு நின்றுவிடாமல் அதை செயல்படுத்தியும் காட்டிய வெட்டிக்கு நன்றி..நன்றி..நன்றி..

Sud Gopal said...

கெலிச்சதுக்கு வாழ்த்துகள் ஜீரா.

//விடுதலைங்குறது எப்பவும் நம்ம கிட்ட இருக்கிறது மட்டுமல்ல. விடுதலையோட விளக்கம் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரி மாறிக்கிட்டேயிருக்கும். சூழ்நிலையைப் பொறுத்து அதனோட தேவை கூடுங்குறதுதான் உண்மை. உண்மை. உண்மை.//

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீரய்யா...

வாழ்த்துகளுக்கும்,ஓட்டுக்கும் நன்னி...

Sud Gopal said...

இந்தியாவின் கெட்ட செய்தியே,
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

Sud Gopal said...

சுந்தர் ராம்ஸ் உங்களோட கருத்துக்கு நன்றி.

Sud Gopal said...

ஷைலஜா...வாங்க..வாங்க...

பாராட்டுகளுக்கு நன்றி.ஆமா ஏதோ "ஓ"மப்பொடி ரெசிப்பி போடப்போறேன்னு சொன்னீங்களே,அது என்னாச்சி?

Sud Gopal said...

ரம்யா அக்கா...
உண்மையான விமர்சனத்திற்கு நன்றி..

இன்னும் அதிகமாக எழுதக் கண்டிப்பாக முயல்வேன்.

Sud Gopal said...

டீச்சர்,வெட்டி பாராட்டுக்கு நன்றி.

Sud Gopal said...

கிஸானுக்கு இல்லாத ட்ரீட்டா???
கொடுத்துட்டா போகுது.

Sud Gopal said...

உள்ளூர் ஷைலஜாக்காவுக்கு இல்லாத ட்ரீட்டா??? any day,any time...

Anonymous said...

vaashthukkal, nice story :-)

லக்கிலுக் said...

இப்போது தான் படித்தேன்.

வெற்றிக்கு வாழ்த்துக்கள்....

ஷைலஜா said...

நன்றியோ நன்றி சுதர்சன்..சீக்கிரமா ட்ரீட் கொடுக்கணும் ஆமா ..நான் அடுத்தவருஷத்திலிருந்து நமது தாய்த்திருநாட்டின் தலைநகருக்கு குடிபோறேன் (சும்மா ஒரு ஆறுமாசத்துக்குதான்!!)ஓமப்பொடி ரெசிப்பீ போட்லாங்கறீங்களா ஓகே முதல்ல 'இலவசமா' அனுப்ப வேண்டியத அனுப்பிட்டு ஆரம்பிச்சிட்றேன்
ஷைலஜா

மதுமிதா said...

மனமார்ந்த வாழ்த்துகள் சுதர்சன்

Prakash G.R. said...

எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியல. படிக்காம விட்டுட்டேன். நல்ல வேளை இப்போவாச்சும் படிச்சேன். ஹூம். முன்னமே படிச்சிருந்தா ஓட்டு போட்டிருக்கலாம்