09 October 2006

கலைநிகழ்ச்சியும்,கட்டான ஒரு டெலிஃபோன் கம்பியும்

"ஹலோ...ம்மா..நான் தான் பேசறேன்.இவ்ளோ நேரமா டெலிஃபோன் அடிக்குது.என்ன செஞ்சிட்டு இருந்தீங்க??"

"நல்லாருக்கியா தம்பி. குப்பையக் கொண்டு போய்க் கொட்டப் போயிருந்தேன். வரும்போது வழியில லோகநாயகியக்கா எடுத்த தீபாவளி சேலையப் பார்த்திட்டுப் போங்கன்னு ஒரே ரகளை. அங்கே நின்னு ஒரு அஞ்சு நிமிஷம் ஆகியிருக்கும். அப்போ பார்த்து தான் நீ கூப்பிட்டிருக்கே."

"ஏம்மா.குப்பையக் கொட்ட நீ தான் போகணுமா? செல்வியக்கா வேலைக்கு வர்லையா? அவங்களுக்கு ஒடம்பு இன்னும் சரியாகலையா?"

"செல்விக்கு வந்த சிக்குன்குனியா, இப்போ நல்லாயிருச்சு. ஆனா அவ பொண்ணு சாந்திக்கு தான் ஏதோ கிட்னில ஸ்டோன் வந்து ஆஸ்பத்திரியில இருக்காளாம். பாவம் செல்விக்கு கஷ்டத்துக்கு மேல கஷ்டம்.செலவுக்கு மேல செலவு. நான் கூட ஆஸ்பத்திரி போய்,பார்த்துட்டு வந்தேன். ஆஸ்பத்திரியில பக்கத்து பெட்டுல நம்ம எளனீக்கடை குருசாமியோட பொண்ணும் இதே மாதிரி கிட்னில ஸ்டோன் வந்து அட்மிட் ஆகியிருந்தது.

ஆமா,இந்த ஸ்டோன் எதனால வாரது தம்பீ?"

"ஹூம். பொதுவா சிறுநீர் கழிக்கணும்கிற உணர்வு வந்தவுடனே போகாம அடக்கி வச்சிருந்தா அது ஸ்டோனா மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு. இது ஒரு முக்கிய காரணம். இது போகப் பல காரணங்கள் இருக்கு. அது சரி இந்தப் பொண்ணுங்க படிக்கிற ஸ்கூலில் முறையான கழிப்பிட வசதி இருக்கா?"

"ஓஹோ. அது தான் விஷயமா? அந்த ஸ்கூல்ல லெட்ரின் எல்லாம் கெடையாது. எல்லாம் திறந்தவெளீல தான் போகோணும். வயசுக்கு வந்த புள்ளைக எப்படிப் போகும்.சாயங்காலம் ஸ்கூல் முடியறவரைக்கும் அப்படியே கட்டுப்படுத்தீட்டு தான் இருக்கும் போல. பாவம். இலவசமா என்னென்னமோ கொடுத்து என்ன பண்றது. இந்த மாதிரி கழிப்பிட வசதியில்லாத பள்ளிகளுக்கு ஏதாவது செஞ்சிருக்கலாம்."

"அதெல்லாம் நமக்கெதுக்கு ம்மா...நேத்தைக்கு சாயங்காலம் நாலு வாட்டி ஃபோன் செஞ்சேன். ஏன் யாருமே எடுக்கலை? கடைக்குப் போயிட்டீங்களா?"

"இல்லை தம்பி. திரையுலகம் எடுத்த பாராட்டுவிழாவை சுவாரஸ்யமாப் பார்த்திட்டு இருந்தோமா. யாராச்சியும் ஃபோன் பண்ணி தொந்தரவு செஞ்சா என்ன பண்ரதுன்னு நெனச்சி,ஃபோன் ஒயரைக் கழட்டி விட்டிருந்தோம். புரொக்கிராம் எல்லாம் சூப்பரா இருந்திச்சு கண்ணூ. ஆமா..நீ பாக்கலை?"

"நற....நற....நற....நற...."

0 Comments: