இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் வாத்யாருக்கு
03 July 2006
| [+/-] |
லலிதாம்மாவுக்கு சில கேள்விகள் |
லலிதாம்மா,
கடைசியா நான் எப்போ என் கையால கடிதம் எழுதினேன்?
ஆங்...ஞாபகம் வந்திருச்சு.அஞ்சு வருஷம் முன்னாடி மும்பையில இருந்தப்போ இதே மாதிரியான ஒரு பெருமழைக்காலத்தில உங்களுக்கு எழுதினது தான் கடைசியா நான் எழுதின கடிதம்னு நினைக்கிறேன்.
வழக்கமான கடிதங்களோட ஃபார்மேட்ல நலம் நலமறிய ஆவல்,மற்றவை நேரில் அப்படின்னு எல்லாம் எழுதறது ரொம்பவும் ஃபார்மலா இருக்கறாப்ல தோணுது.அதனால கடிதம்னு சொல்ல முடியாத ஒரு உரை வடிவத்தில இந்தக் கடிதம்.
இதில இருக்கிற சில கேள்விகளை நான் பல்வேறு காலகட்டங்களில் உன் கிட்ட கேட்டு அதுக்கு உன்னோட மௌனமான புன்னகையே பதிலா வாங்கியிருக்கேன்.இருந்தாலும் தன் முயற்சியில் சிறிதும் மனம் தளரா விக்கிரமாதித்த மகாராஜா மாதிரி நானும் கேட்கறத நிறுத்தினதில்லை.அப்புறம், இப்படி எல்லார் முன்னிலையிலும் உனக்கான கேள்விகளைப் போட்டு உடைப்பது கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு.என்னோட பல தப்புகளை மன்னிச்ச நீ இதையும் பெரிசுபடுத்தமாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
பப்புவுக்கு மதிய சாப்பாடு வச்சிருப்ப போலிருக்கு.போய் குக்கர் விசில் ஆஃப் பண்ணீட்டு வந்து நிதானமாப் படி.
1) அப்பாவைக் கல்யாணம் செய்யறதுக்கு முன்னால வரைக்கும் R.லலிதான்னு கையெழுத்து போட்டிட்டு இருந்த நீ கல்யாணத்துக்கு அப்புறம் மட்டும் ஏன் G.லலிதான்னு போட ஆரம்பிச்சே?
2) என் கூட எப்போ ஃபோன்ல பேசினாலும் மொதல்ல "சாப்பிட்டியா கண்ணு"ன்னே ஏன் ஆரம்பிக்கறே?அது எந்த நேரமானலும் சரி,நான் எங்கே இருந்தாலும் சரி என் கூட தொலைபேசும் போது உன்னோட முதல் கேள்வி இது தான்.
3) "அரிசிக்காரர் வீட்டு ரங்கனாயகி அம்மாவோட கடைசி மருமக","நம்ம கோபாலண்ணன் சம்சாரம்","மிஸ்ஸஸ்.கோபால்","சங்கீதாம்மா" அப்படின்னு கூப்பிடறவங்களுக்கு உன்னோட உண்மையான பேரு தெரியுமா?அவங்கள விடு உனக்காவது உன்னோட பேரு ஞாபகம் இருக்கா?
4) என் கூட ஒண்ணாப்புப் படிச்ச மயில்சாமில இருந்து இப்போ கூட வேலை செய்யிற ராம்ஸ் வரைக்கும் எல்லார்த்தையும் ஞாபகம் வச்சிருக்க ஒனக்கு,உன்னோட பத்தாம்பு ஃபோட்டோல பக்கத்தில் ஒக்கார்ந்திருக்கரது சரசுவா இல்லை செல்வியான்னு தெரியாமப் போனது ஏன்?
5) நான் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த என் கூட வேலை பார்க்கிற வெளியூர்ப் பசங்க கூட உன்னால கொஞ்சம் கூட பேச முடியாமப் போனதுக்காக நீ என்கிட்ட "இங்லீஸ்,ஹிந்தி தெரிஞ்ச அம்மாவுக்குப் பையனாப் பொறந்திருக்கலாம்னு தோணுதா கண்ணு" சொன்னது ஞாபகம் இருக்கா?நீ கிண்டலுக்கு சொன்னியா இல்ல நெசமாச் சொன்னியான்னு தெரியாது.இப்போ அந்தப் பசங்க ஒன் கூடப் பேசணும்னு தமிழ் படிச்சுட்டு இருக்காங்கன்னு ஒனக்குத் தெரியுமா?
இதுக்கேல்லாம் வழக்கம் போலவே உன் கிட்ட இருந்து பதில் வராதுன்னு தெரியும்.அதுக்காக நான் கேக்கறத மட்டும் நிறுத்தவே மாட்டேன்.
வாசல்ல குருவிக சத்தம் போடுது போல.அதுகளுக்கு தங்கமே தீனியாப் போட்டாலும் நீ பக்கத்தில இருக்கோணும்.அதுங்களைப் பார்க்கையில கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு.
ஹூம்...லலிதாம்மா, கொஞ்ச நாள் நீ என் கூட வந்து இருந்திட்டுப் போகக் கூடாதா?
30 June 2006
| [+/-] |
குட்டீஸ் |
மும்பையில் கொடி கட்டிப் பறந்துகொண்டிருக்கும் மதிய டேப்லாய்டு பத்திரிக்கையான "மிட் டே" நேற்று முதல் பெங்களூரு பதிப்பைத் துவங்கி இருக்கிறது.நகரின் பல்வேறு இடங்களில் பார்த்த சுவாரசியமான விளம்பரப் பலகைகள் மூலமே இந்தத் தகவலை அறிய முடிந்தது.கடைக்குச் சென்று கேட்ட போது "ஸ்டாக் இல்லா குரு" என்ற கடைக்காரரிடம் இன்றைய பதிப்புக்கு முன்பதிவு செய்து வந்துள்ளேன்.பெங்களூரைப் பொறுத்தவரை மாலை நேரப் பத்திரிக்கை என்னும் தளம் இன்னமும் unexplored ஆக இருப்பதாலும்,இதன் கண்டெண்ட்(obviously junk) பெங்களூரின் பையிங் பாப்புலேஷனான IT,BPO மக்களுக்குப் பிடித்தமான ஒன்று என்பதாலும் இந்தப் பத்திரிக்கை ஒரு பெரிய சுற்று வரும் என தீர்க்கமாகக் கூறலாம்.ஆனானப்பட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கே மும்பையில் தண்ணி காட்டிய மிட் டேயின் வரவு நல்வரவாகுக.
*************************************************************************************
இந்த சீசன் கோலிவுட்டில் நடனம் சொல்லித்தந்தவர்கள்,திரைப்பட இயக்குனர்களாக உருவெடுக்கும் சீசன் போல.பிரபுதேவா,ராகவேந்திரா லாரன்ஸ் வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் ராஜூ சுந்தரம்.பிரபுதேவாவும்,ராகவேந்திரா லாரன்ஸும் தெலுங்கில் தங்களது இயக்குனர் பணியை ஏற்கனவே துவங்கியிருந்த போதும் ராஜூ சுந்தரம் இப்போது தான் களத்தில் குதிக்கிறார்.
புதிய களம்.புதிய பொறுப்புகள்...ஆல் த பெஸ்ட் மக்களே...
*************************************************************************************
தற்போது பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் ஜெட் ஏர்வேஸ்-ஏர் சஹாரா இணைவதில் ஏற்பட்ட பிரச்சினையின் பின்புலத்தில் விரைவில் உபி.யில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலே காரணம் போலத் தெரிகிறது.அமர்சிங்குக்கும்,ஏர்-சஹாரா குழுமத்தின் சுப்ரதோ ராயிக்குமிடையேயான நட்பு, முலாயம்,அமர்சிங் வகையறாக்களுக்கும் மேடம் ஜீ முகாமுக்கும் இருந்து வந்த சண்டை போன்ற தகவல்களை வைத்துப் பார்க்கும் போது இது உண்மையாய் இருப்பதாகவே தொன்றுகிறது.
*************************************************************************************
"கபீ அல்விதா நா கெஹ்னா" என்ற விரைவில் வெளிவரவிருக்கும் தெரை ஓவியத்தின் மூலம் தன்னுடைய ஐந்தாண்டுகால ஹிபர்னேஷனில் இருந்து வெளி வருகிறார் கரண்ஜோஹர்.என்.ஆர்.ஐ. மக்களைத் திருப்தி செய்யும் வகையில் அமெரிக்காவினைக் கதைக்களனாகக் கொண்ட இப்படத்தில் அமிதாப்,ஷாரூக், அபிஷேக்,ராணி முகர்ஜி,ப்ரீத்தி ஜிந்தா என்னும் ஒரு பெரிய கும்பலே தெறம காட்டியிருக்கிறார்கள்.கரணோட பேட்டியைப் படிச்சா இந்தப் படம் பார்க்கும் போது கண்டிப்பா ரெண்டு கர்ச்சீப் பத்தாதுன்னு தோணுது.
22 June 2006
| [+/-] |
பெங்களூரில் வலைப்பதிவர்கள் சந்திப்பு |
வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதி பெங்களூரில் ஒரு வலைப்பதிவர்கள் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.நடைபெறும் இடம்,நேரம் முதலிய விவரங்கள் ஆலோசனையில் இருப்பதால் பின்னர் அறிவிக்கப்படும்.
இதில் பங்கு கொள்ள விருப்பமுள்ளவர்கள் iyappan_k@yahoo.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10 June 2006
| [+/-] |
கனா காணும் காலங்கள் - தேன்கூடு போட்டி |
"ஏம்பா,நீ இன்னைக்கு கணக்கு ட்யூஷன் போகலியா?"
"இல்லையே அங்கிள்.இப்போ தான் ட்யூஷன் விட்டு வந்தேன்.கல்பனாவுக்கு ஒடம்புக்கு சரியிலீங்களா?இன்னைக்கு ட்யூஷனுக்கு வரலை.மாஸ்டர் கூடக் கேட்டாரு."
"என்னது ட்யூஷனுக்கு வரலையா??? என்ன தம்பி சொல்ரே? ட்யூஷன்ல இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகும்னு சொல்லீட்டுக் காலைலயே கெளம்பீட்டாளே.அப்படி ட்யூஷனுக்கு வாராம எங்க போயிருப்பா?ஒண்ணுமே புரியலையே.எதுக்கும் போய் அவ பிரண்ட் சில்வியா வீட்டுக்குப் போய் பார்க்கரேன்."
அது சரி...நீங்கள் கல்பனாவைப் பார்த்திருக்கிறீர்களா?
வலது பக்கத் தெற்றுப்பல் மற்றும் சிரித்தால் விழும் கன்னக்குழிகள் கொண்டு எங்கள் பள்ளியை ஆண்டு வந்த தேவதை. எங்கள் பத்தாம் வகுப்பு "ஆ" பிரிவில் எப்போதும் முதல் மூன்று ராங்குகளுக்குள் வாங்கி வந்த கல்பனா, அரையாண்டு விடுமுறையின் போது பஸ் கண்டெக்டருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்துகொண்டாள்.
"அவ எங்களுக்குப் பொண்ணே இல்லை.அவ வந்தாலும் சேர்த்துக்க மாட்டோம்.நாங்களும் போய்ப் பார்க்க மாட்டோம்." என்று இறுகிக் கிடந்த பெற்றோர்களின் சகிதம் கல்பனாவைக் குழந்தைகளுடன் போன வாரம் சாரதாம்பாள் கோயிலில் பார்த்தேன்.ஆள் பருத்துப் போய் கண்ணில் கருவளையம் விழுந்து....சே..அது கல்பனாதான் என்று நம்பவே முடியவேயில்லை..தேவதைகளுக்கும் வயதாகும் போல.
பள்ளியில் படிக்கும் போது "காதல்" குறித்து ஏற்பட்ட முதல் அனுபவம் அது. இரண்டாவது அனுபவம் சற்றே விநோதமானது.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு நெருங்கிய நண்பன் ஒருவன்.என் வகுப்பில் படித்த ஒரு பெண்ணுக்கும்,அவனுக்கும் தெய்வீகக் காதல்."வேண்டாம்பா.ப்ராப்ளம் வரும்...அந்தப் பொண்ணு 2 வருஷம் இருந்து மெடிக்கல் சீட்டுக்கு ட்ரை பண்ணி இம்ப்ரூவ்மெண்ட் முடிச்சுட்டு இப்போ இங்க வந்திருக்கு.உன்னை விட வயசில பெரியவங்க.இதெல்லாம் நமக்கெதுக்கு...?"நான் சொன்ன மறுநாளில் இருந்து அவன் என்னிடம் இருந்த நட்பைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கத் துவங்கினான்.
சில மாதங்கள் கழித்து அவன் என்னிடம் வந்து "ஒரு மேட்டர் பேசணும்.எனக்குக் கொஞ்சம் ப்ராப்ளம்...." என்றான்.என் வகுப்புத் தோழி அவளுக்கும் என் நண்பனுக்கும் ஏற்பட்ட காதலை வீட்டில் சொல்லியிருக்கிறாள்.அவள் மாமா ஒருத்தர் பையன் யாரென்று பார்க்கக் கல்லூரிக்கே வந்து விட்டார்.வந்தது மட்டுமல்ல,என் நண்பனைச் சந்தித்து,"தம்பி,உங்க வீட்டில பேசறோம்.கல்யாணத்தை வேண்டுமானால் படிப்பு முடிந்ததும் வச்சிக்கலாம்" என்று சொல்லியிருக்கிறார்.என் நண்பனின் உடலில் இருந்த அத்தனை உறுப்புகளும் வாய் வழியே வந்து விட்டது.
"ஐயோ..எங்க வீட்டில இவர் போய் பேசினால் என்ன நடக்கும் ! ப்ளீஸ் மச்சி...டூ சம்திங்.டெல் ஹெர் டு ஃபர்கெட் மீ..."அழாத குறையாகச் சொன்னான்.
"நான் எத்தனை வருஷமானாலும் காத்திருக்கேன்..." என்றது அந்த நங்கை.
"வேண்டாம்மா...நீ இப்பவே எங்களை விட வயசில பெரிசு.உன் வீட்டில சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.இவனை விட்டிடு..."என்று ஒரு வழியாகப் பேசி முடித்தோம். கல்லூரியில் கேண்டீனில் வைத்து முதல் ஆண்டு நண்பனை மாப்பிள்ளை பார்க்கப்பட்ட அனுபவம் அனேகமாக உங்களில் யாருக்கும் ஏற்பட்டிருக்காது என நினைக்கிறேன்.சரி அதனால் என்ன?யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கித் தேற வேண்டிய அவன் வேண்டுமட்டும் கப்புகள் வாங்கி அவதியுற்றது தான்.
பெரும் கோ-கோ வீரனாக வருவான் என எதிர்பார்க்கப்பட்டவனும் காதலுக்காக வீட்டை விட்டு ஓடிப்போய் தற்போது மெஸ் வைத்து நடத்திவருபவனுமான எனது பள்ளிக்கூட சீனியர் சரவணன்,ஆண்டுக்கொன்றாய் ஆடைகளை மாற்றுவதைப் போல காதலர்களை மாற்றிப் பின் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையைக் கை பிடித்து இரு குழந்தைகளுக்குத் தாயாகியுள்ள அர்ச்சனா,சொத்துக்காகக் காதலித்துத் தற்போது மாமனார் வீட்டில் (சுயமரியாதையை இழந்து)ஏவலாளாயுள்ள ஒரு தோழன் என் சங்கிலித் தொடர் போலே நீளும் நான் கண்ட அடலசண்ட் காதல்களின் எண்ணிக்கை.
வளர்சிதை மாற்றப் பருவத்துக் காதலை அடிப்படையாக வைத்து வந்த "அலைகள் ஓய்வதில்லை","வைகாசி பொறந்தாச்சு" போன்ற படங்கள் எவ்வ்ளவு பேரைப் பாதித்ததோ...அனுபவபூர்வமாக நான் கண்டு,பழகிய,வியந்த பல மனிதர்களை(மேலே சொன்னது போக) நிறையப் பாதித்தது.
அது சரி காதல் என்பது என்ன?
காமம் என்பது ஆபாசமான சொல் என்று கருதி இலக்கியவாதிகள் கண்டுபிடித்த இடக்கரடக்கல் தான் காதல்."செத்துப் போயிட்டர்" என்பதை "சிவலோக பதவியடைந்தார்" என்பது மாதிரிதான் காமம் காதலானது.காதலுக்கென்றே தனி அகராதி உண்டு.அதன் பொருள் ஆளுக்கு ஆள் மாறுபடும்.
அடிப்பம்பில் தண்ணியடிக்கக் கஷ்டப்படும் போது "ஐயோ..பாவம்" என்று ஒரு குடம் அடித்துக் கொடுத்தவனும்,வழக்கமாய்ச் செல்லும் பேருந்தில் சில்லறையின்றித் தவிக்கும் போது "உங்களுக்கும் சேர்த்து டிக்கட் வாங்கிட்டேன்" என்று உதவிக்குரல் கொடுத்தவளும் அதைக் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுவதுண்டு.தன்னை உணரும் பருவத்தில்,இன்னொருவரால் வித்தியாசமான பார்வையில் கவனிக்கப்படுகிறோம் எனும் போது,மனதில் ஏற்படும் குறுகுறுப்பைக் காதல் என்று கற்பிக்கிறது வயது.
எனக்குத் தெரிந்த வரையில் பெரும்பாலும் வளர்சிதை மாற்றத்தில் ஒருவரது வீழ்ச்சிக்குப் பெரிதும் காரணமாய் இருப்பது பாலினக்கவர்ச்சியைக் காதல் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தான்.பத்தாவது வரை ஒழுங்காய்ப் படித்தவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் காதல் வலையில் சிக்கிய கதை ஏராளம்.என்னையும் சேர்த்துத் தான்.
வளர்சிதை மாற்றப் பருவ காலத்துக் காதல் பற்றிய எனது அனுபவங்கள்,அதன் மூலமான புரிதல்கள் பெரும்பாலும் கசப்பாகவே இருந்ததால் கல்லூரிக்காலங்களில் உள்ளுக்குள் ஒரு வித எச்சரிக்கை ஒலித்துக் கொண்டே இருந்தது.படித்து முடித்து வேலையில் சேர்ந்த பின்னர் கொல்லுவதற்கு நிறைய மணித்துளிகள் இருந்தன.பல சந்தர்ப்பங்களில்,"நாம் பொய்யோ..எதன் பெயராலோ இயற்கை உணர்வுகளுக்கு மாறுபட்டு வாழ்வதும் ஒரு சாடிஸம் தானோ" என்று ஆன்ம விசாரணை செய்து கொண்ட நிமிடங்கள் உண்டு.ஆனால் அடலசன்ட் காதல்கள் பற்றிய எனது கணிப்பு என்றுமே பொய்த்ததில்லை.வாழ்க்கையின் சில வருடங்களைக் கடந்த பின்னர் "எதையோ இழந்துவிட்டோமோ?" என்று மனம் கேட்டது.ஆனால் எதுவுமே இழக்கவில்லை என்றே என் புத்தி எனக்குச் சொன்னது.இந்த ரஸவாதம் நடக்காத மனம் ஏது என்று அப்புறப்படுத்தி விடுவேன்.
அடலசண்ட் காதல் கொடுத்த வலியால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தம்பிமார்களுக்கு,"சரி போனது போகட்டும்.காதலை மட்டுமல்ல,உங்களின் அத்தனை உறவுகளையும் இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.வாழப் பிடிப்பதற்கு அதுதான் ஆதாரம்.காயங்கள்,இழப்புகள்,பிரிவுகள்.....யாருக்கு இல்லையென்று சொல்லுங்கள்? பூக்கள் எவ்வளவு மலர்ந்து உதிர்ந்தாலும் வாசம் உண்டு.மேகங்கள் எத்தனை கடந்து போனாலும் வானம் உண்டு.வாழ்க்கையும் தானே...."
"எல்லாம் சரிதாங்க..சொல்றதுக்கும் கேக்கரதுக்கும் இது எல்லாம் ரொம்ப நல்லாத் தான் இருக்கு.புதுசாப் பொண் கொழந்தை பொறக்கிற உங்க சகாக்கள் கிட்ட எல்லாம் ஏன் அனிதான்னு பேர் வைக்க சொல்லி சஜஸ்ட் செய்யறீங்க???உங்க அடுத்த கதையோட நாயகி பேரு கூட அனிதாவாமே??இன்னா மேட்டர் அது.???.." என்று நிறுத்தி என்னை கேள்வி கேட்கத் தோன்றுகிறவர்களுக்கு மட்டும்
" நீங்க காதலிச்சிட்டு இருக்கீங்களா.... என்னோட வாழ்த்துகள்!"
08 June 2006
| [+/-] |
முக்கியமில்லாத சில குறிப்புகள் |
மதுமிதா அவர்களின் ஆய்வுக்காக,என் வலைப்பூ விவரங்களை அளிக்கிறேன்.
வலைப்பதிவர் பெயர்: சுதர்சன்.கோபால்
வலைப்பூ பெயர் : ஓ...!!!
சுட்டி(உர்ல்) :http://konjamkonjam.blogspot.com (எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: சொந்த ஊர்: கோவை,தற்போது இருப்பது:பெங்களூர்
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகிள் மற்றும் தமிழோவியம்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 22/ஜூன்/2005
இது எத்தனையாவது பதிவு: 49
இப்பதிவின் சுட்டி(உர்ல்): http://konjamkonjam.blogspot.com/2006/06/blog-post_08.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தமிழில் எழுதுவது என்பது மனதில் தேக்கி வைக்கப்பட்ட ஆசையாக இருந்தது.நீண்ட நாள் கனவு என்று கூட சொல்லலாம்.தற்போதைய எனது சூழலில் அது நனவாவது வலைப்பூக்களின் மூலமே சாத்தியம் என்று உணர்ந்ததால்.
சந்தித்த அனுபவங்கள்: ஏராளம்.கல்லூரியில் வெகு தினங்களுக்கு முன் சந்தித்த ஒரு சீனியரை அவரது பதிவுலகு மூலம் மீண்டும் எதிர்பாராத வகையில் சந்தித்தது என்று சங்கிலித் தொடர் போலே செல்லும் அனுபவங்கள்.
பெற்ற நண்பர்கள்: ஏராளம்
கற்றவை:ரொம்பக் கம்மி.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: வித்தியாசமான களங்களில் பயணிக்கத் தூண்டுகிறது.
இனி செய்ய நினைப்பவை: கடற்கரையில் உள்ள கூழாங்கற்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன் போன்று உணர்கிறேன்.இன்னமும் முழுமையாக உணர்ந்தறியா ஒரு சமுத்திரம் என் முன்னே இருக்கிறது.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:இரண்டு விஷயங்களுக்காக நான் இதயம் திறப்பேன்.ஒன்று காதல்;மற்றொன்று சுதந்திரம்.காதெலென்றால் நான் இதயம் தருவேன்.சுதந்திரமென்றால் காதலையும் தருவேன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இந்த உலகம் ஆச்சரியங்கள் நிறைந்தது.
05 June 2006
| [+/-] |
அம்பலப்புழை பாயாசம்,G.P & சில சவால்கள் |
உலகின் பழமையான இனிப்புப் பண்டம் என்னவென்றால் பாயாசம் என்று தான் நான் அடித்துக் கூறுவேன்.தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்த போது கிடைத்த பாயாசத்தைப் பகிர்ந்துண்ட பிறகு தான் ராம,பரத,லக்ஷ்மண,சத்ருக்கன சகோதரர்கள் இப்புவியில் உதித்ததாகக் கூறுகிறது ராமாயணம்.இட்லியைப் போலவே மிக எளிய செய்முறையைக் கொண்டுள்ள பாயாசம் இல்லாத விருந்து ஒரு போதும் நிறைவு பெறுவதில்லை.ஜவ்வரிசி,சேமியா,கோதுமை,கடலை,பலாப்பழம் என்று பல்வேறு வேரியன்ட்ஸ் வந்த போதும் பால் பாயாசத்திற்கு(யம்மீ...) இருக்கும் மவுசே தனி தான்.
தமிழகத்திலுள்ள வைஷ்ணவத் திருத்தலங்களின் நைவேத்தியங்களில் சர்க்கரைப் பொங்கல்/அக்கார அடிசில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது போலவே கேரளாவிலுள்ள கிருஷ்ணன் கோவில்கள் பிரசாதங்களில் பாயாசத்திற்கு முக்கியத்துவம் தரப்படும்.குருவாயூரில் சோறூட்டலின் போது வழங்கப்படுவதும் அரிசிப் பாயாசமே.
அது சரி நீங்கள் அம்பலப்புழை(ஆலப்புழை மாவட்டம்,கேரளா) கிருஷ்ணன் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா?கேரளாவிலுள்ள மூன்று பெரிய கிருஷ்ண பரமாத்மாவின் கோவில்களுள் இதுவும் ஒன்று.இந்தக் கோவிலில் வழங்கப் படும் பாயாசப் பிரசாதத்தின் பின்னணி வரலாற்றைக் கேட்டால் என்னைப் போலவே நீங்களும் ஆச்சரியமடையக் கூடும்.
அதாகப்பட்டது கிருஷ்ண பரமாத்மா ஒருமுறை ஒரு முனிவரின் வடிவில் சதுரங்கப் பிரியனான அந்தப் பிரதேசத்து அரசரின் சபைக்கு வந்தாராம்.வந்ததும் அரசனை ஒரு சதுரங்கப் போட்டிக்கும் அழைத்தாராம்.போட்டி துவங்கும் முன்னரே பரிசை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முனிவரின் நிபந்தனையை மன்னரும் ஏற்றுக் கொண்டார்.முனிவர் போட்டியில் வென்றால் அவருக்குக் கொஞ்சம் அரிசி மணிகள் தரப்பட வேண்டும் என்பது தான் அந்தப் பரிசு.ஆனால் தரப்பட வேண்டிய அரிசி மணிகளின் எண்ணிக்கை சதுரங்கக் கட்டத்திலிருந்து கீழ்க்கண்ட முறையில் கணக்கிட வேண்டும் என்றார்.
அதாவது சதுரங்கத்தின் முதல் கட்டத்தில் 1,அதையடுத்துள்ள இரண்டாம் கட்டத்தில் 2,மூன்றாம் கட்டத்தில் 4,நான்காம் கட்டத்தில் 8 என்று தொடர்ந்து செல்லும்.அதாவது ஒவ்வொரு கட்டமும் அதனுடையே முந்தைய கட்டத்தின் எண்ணிக்கையைப் போல இரட்டிப்பு மடங்கு அரிசி மணியைப் பெறும்.
ie. பத்தாம் கட்டத்திலுள்ள மணிகளின் எண்ணிக்கை = 2 x (ஒன்பதாம் கட்டத்திலுள்ள மணிகளின் எண்ணிக்கை).
போட்டியும் விறுவிறுப்பாய்ச் சென்றது.முடிவில் முனிவர் தான் வென்றார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.போட்டியில் தோற்ற மன்னனும்,முன்னரே ஒப்புக் கொண்டது போலப் பரிசினை வழங்க ஆயத்தமானான்.முன்னர் பார்த்த கணக்கீட்டின் அடிப்படையில் அரிசி மணிகளைக் கூட்டிக் கொண்டு வந்த போது தான் முனிவரின் நிபந்தனையின் உண்மையான அர்த்தம் புரிந்தது.
இருபதாவது கட்டம் வந்த போது அரிசி மணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும்,நாற்பதாவது கட்டத்தை அடைந்த போது ஒரு ட்ரில்லியனையும் அடைந்தது.வெகு சீக்கிரமே -தானிய நிலவறையில் இருந்த மொத்தக் கையிறுப்பும் காலியாகிவிட்டது.தனது நாட்டில் மட்டுமல்ல,பக்கத்திலுள்ள நாடுகளில் இருந்து அரிசியைக் கொணர்ந்தாலும் முனிவருக்குத் தரப்பட்ட தனது வாக்கை எப்போதும் காப்பாற்ற முடியாது என்பதை அந்த மன்னன் உணர்ந்தான்.
ஜ்யாமெட்ரிக் ப்ரோக்ரஷனில் அதிகரித்துக் கொண்டு சென்றது அரிசி மணிகளின் எண்ணிக்கை.64 கட்டங்கள் உள்ள சதுரங்கக் கட்டத்தை நிரப்பத் தேவையான அரிசி மணிகள் எவ்வளவு தெரியுமா?
18,446,744,073,709,551,615 [ (2^64)-1 ].இது கிட்டத்தட்ட பல ட்ரில்லியன் டன்கள் மதிப்பாகும்.அரசனின் குழப்பத்தை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா தனது நிலையை வெளிப்படுத்தினார். மேலும் அந்தக் கடனை உடனே தர வேண்டியதில்லை எனவும்,கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாயாசமாக்கி தனது பக்தர்களுக்குப் பிரசாதமாய்த் தந்தால் போதும் எனவும் கேட்டுக்கொண்டார்.அந்த வழக்கம் இன்னமும் தொடர்ந்து வருகிறது.
இது புனைக்கதையோ இல்லை உண்மை நிகழ்வோ தெரியாது.ஆனால் அந்தக் கோவிலின் பாயாசத்திலிருக்கும் சுவையில் எந்த ஒரு ஐயமும் கொள்ளத் தேவையில்லை.
அப்புறம் தெருவில் எத்தனையோ சாமான் கூவல்கள்! ஆனால் என்ன சொல்லிக் கத்துகிறான் என்பது நூற்றுக்கு நூத்திரெண்டு சதவிகிதம் யாருக்கும் தெரியாது.எனக்குத் தெரியும் என்பவர்களுக்குக், கீழே கொஞ்சம் கூவல்கள் சவால்களாகத் தரப்பட்டுள்ளன.எங்கே முயற்சி செய்து தான் பாருங்களேன்???
1.ம்ல்லி,கதம்ப்பா,சம்ந்தி....
2.சான்யாப்டிக்கலியா...க்திக்கி..
3.பளே பேய் வாங்கர்தூ...
4.யாப் பாத்ர சேமே....
30 May 2006
| [+/-] |
கொஞ்சம் கிசுகிசு..கொஞ்சம் கேள்விகள்.. |
தன்னுடைய அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் தெரியாதவன் தான் பிறர் அந்தரங்கத்தில் நுழைய விரும்புகிறான்.நாலு பேருடன் அதை அலச முற்படுகிறான்.எங்கேயோ படித்த வார்த்தைகள் அவை.
சமீபத்தில் எக்கனாமிக் டைம்ஸில் "அலுவலகங்களில் மீட்டிங் ரூம்கள் இருப்பத்தைப் போலவே காசிப் அறைகளுக்கான தேவையைப் பற்றி"ய ஒரு சுவையான அலசல் இருந்தது.வம்பு பேசுதல் என்பது உலகளாவிய ஒரு பழக்கமாய் தொன்று தொட்டு இருந்து வருகிறது.கொஞ்சமாய்க் கொஞ்சம் உண்மை,கொஞ்சம் நிறையவே பொய் சேர்த்துத் தயாரிக்கப்படும் காக்டெயிலான கிசுகிசுவுவை விரும்பாதார் உளரோ???சரி..சரி....மேட்டருக்கு வருவோம்.
தமிழ்ப்பதிவுகள் என்ற ஊடகத்தில் முதன்முறையாக் கிசுகிசுக்கள் சூடாக,சுவையாக.இந்தச் செய்தியில் சம்பந்தப் பட்டவர்கள் யார்,யார் என்று கண்டு பிடிப்பது மக்களே உங்கள் சமத்து.ஆனால் ...இவர் தானே ...அவர் என்பது போன்ற உங்களுடைய கேள்விகளுக்கு, என்னுடைய பதில் "நோ காமென்ட்ஸ்" என்று தான் இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் :-)
1) பிறந்தது வேறு ஊராயினும், தற்போது சென்னையில் மென்பொருளாளராய்க் குப்பை கொட்டிக்கொண்டே இரு வலைபூக்களை நடத்தி வரும் இவர் சமீபத்தில் காதல் வலையில் விழுந்துவிட்டதாய் தகவல்கள் வருகின்றன.இது இவரது முதல் காதலிக்குத் தெரியுமா என்பது மதுரை மீனாட்சிக்கும்,மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மனுக்கும் தான் வெளிச்சம்.
2) TN 41 - என்று ஆரம்பிக்கும் ஒரு வண்டியை வைத்துக் கொண்டு பைரசந்தரா.தாவர்கரே.மடிவாலா லே-அவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் இவரது விக்கெட் விரைவில் விழப்போகும் செய்தியென்னமோ அனைவரும் அறிந்த ஒன்றே.வரவிருக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தே.தி.மு.க. சார்பாக இவர் போட்டியிடப்போகிறார் என்னும் செய்தி உங்களுக்குத் தெரியுமா?மேலும் அந்த கட்சியின் மென்பொருள் பிரிவின் மாநிலச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்படப் போகும் இவர் அக்கட்சியின் வெப்சைட்டை நிர்மாணிப்பதில் இப்பொது மிகவும் பிசியாக உள்ளாராம்.ஹூம்....அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.
3) மதர்லேண்ட் போயிருந்தேன்,லக்செம்பர்க் போறேன்,காரொக்கோ போறேன் என்று கலர் கலராய்ப் படம் காட்டிக் கொண்டிருக்கும் இந்தப் பரிதி அடுத்தச் செல்லவிருப்பது சந்திரனுக்காம்.அந்த 100-ஆவது ஆள் இவர் தான் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என் கேள்விக்கென்ன பதில் ???
<<இந்தக் கேள்விகளுக்கு சரியாக பதிலளிப்பவர்களுக்கு இங்கே கிசு-கிசு எழுத வாய்ப்பளிக்கப்படும்.>>
1) மால்குடி,நார்னியா,எல்ஸ்பிரிட்ஜ் இந்த மூன்று இடங்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன?
2) மல்லேஸ்வரத்திலிருந்து பசவண்குடி செல்லும் தடம் எண் 14. இது உங்களுக்கு எதையாவது நினைவூட்டுகிறதா?
26 May 2006
| [+/-] |
ராம்குமாருக்குத் திருமண வாழ்த்துகள் |
சில பேரைப் பார்த்த உடனே, அது தான் முதல் தடவை பார்த்திருந்த போதும்,என்னவோ நெடுநாள் பழகியவர்கள் போல உணர்வோம். ராம் அந்த வகையைச் சார்ந்தவன்.பத்தாண்டுகளுக்கும் மேலான நட்பு இது.பள்ளியில் கூடப் படித்தது என்னவோ இரண்டு ஆண்டுகள் தான்.ஆனாலும் அது பொதிந்து வைத்திருக்கும் நினைவுகளோ ஏராளம்.எதிர்பார்ப்புகள் அறவும் இல்லாமல் பழகும் அவனை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.
நிற்க...
வரும் திங்களன்று(29/05/2006) கோவையில் மணவிழா காணும் தோஸ்த் ராம் குமாருக்கும் அவனது கரம் பற்றப் போகும் ரஞ்சனிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
11 May 2006
| [+/-] |
வீடு விட்டு வீடு மாறும் வித்தை |
"ஏங்கண்ணு.புது வீடு பரவாயில்லையா?தண்ணீ எல்லாம் ஒழுங்கா வருதா?சமையலுக்கும்,துணி துவைக்கறதுக்கும் அங்கனயே புதுசா ஏதாவது ஒரு வேலையாளைப் புடிச்சு போட்டுக்க வேண்டியது தானே?ஆமா.இந்தவாட்டியாவது பால் காய்ச்சினீங்களா?"
"அம்மா.தோசை எனக்குப் போதும்.உன் அருமை மகனை நல்லாக் கவனி.அது சரி ப்ரதர்.உங்க புது வீட்டுக்கும் ஆஃபீசுக்கும் எவ்வளவு தூரம்? ஆஃபீஸ் CAB எதாவது வருமா?இந்த வீட்டிலயாவது உன்னோட அருமை செல்ஃபோன்ல சிக்னல் ஒழுங்காக் கிடைக்குமா?"
"அட தம்பிய சாப்பிட விடாம ஏன் இப்படி ஆள் ஆளுக்கு கேள்வி மேல கேள்வியாக் கேட்டுட்டு இருக்கீங்க.எம்பா,இந்த வீட்டுக்கு வாடகை எவ்ளோ வருது?டூ வீலர் பார்க்கிங் ஸ்பேஸ் பரவாயில்லையா? அப்புறம்,மெஜஸ்டிக்குக்கு பஸ் கனெக்டிவிட்டி எப்படி இருக்கு?" என்று அம்மாவும் தங்கையும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார் அருமை அப்பா.
நான்கு பேர்களாய் இருந்த நாங்கள் சமீபத்தில் இருவராய் சுருங்கிபோனோம்.நான்கைந்து வார இறுதிகளில் மேற்கொண்ட வீடு தேடலுக்குப் பலனாய் தற்போது குடியிருக்கும் வீட்டைத் தேர்ந்தெடுத்தோம்.(சே..ஆனாலும் DownTownல வீடு கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்பா).வீடு மாறுதலின் முதற்கட்ட நடவடிக்கையாய்ப் புது வீடு பார்த்து அதற்கு டோக்கன் அட்வான்ஸ் தந்து ஃபிக்ஸ் செய்ய வேண்டும்.வீட்டுத்தரகர் மூலம் சென்றால் அதற்கு வேறு தனியாக அழ வேண்டும்.தற்போது குடியிருக்கும் வீட்டுக்காரருக்கு முன்னர் பேசியபடி நோட்டீஸ் தர வேண்டும்.முகவரி மாற்றம் பற்றி வங்கி,க்ரெடிட் கார்டு,அந்த வீதியில் குடியிருக்கும் அழகான நங்கையர்,தொலைபேசிக் கம்பெனிகள்,வேலை செய்யும் அலுவலகம்,கோடை கால வார இறுதிகளை குழப்படியாக்கும் ஒன்று விடாத சொந்தக்காரர்கள்,நண்பர்களிடையே பேச்சுலர் பார்ட்டி நடத்த இந்த வீடே சிறந்தது என்று எம் வீட்டின் மேல் தீராதக் காதல் கொண்டுள்ள காம்ரேடுகள் என்று ஒரு பெரும் பட்டாளத்திற்கே அறிவிக்க வேண்டும்.
பால்காரர்,பேப்பர்காரர்,கேபிள்காரர்,அப்பப்போ ஓசி தம்முக்கு உதவும் பொட்டிக்கடைக்காரர் இத்யாதி இத்யாதிக்கெல்லாம் அந்த மாதத்தோடு கணக்கைத் தீர்ப்பது பற்றி அறிவிக்க வேண்டும்.புதிதாய்ப் போகும் வீடும் அதே லொக்காலிட்டியில் அமைந்து விட்டால் பரவாயில்லை.இல்லை என்றால் ஆஃபீஸ் ட்ரான்ஸ்போர்டேஷன் ஒரு பெரும் பிரச்சினையாய் மாறும்.சொந்த வண்டியென்றால் புதிய வழித்தடமும் அதிலுள்ள எண்ணிலடங்கா ஒன்வேக்களும்,பாட்டம்லெஸ் பிட்டுக்களும் வயிற்றைக் கலக்கும்.அலுவலக வண்டியென்றால் அதிகாலைப் பயணத்தில் நம் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தவாரே நம் தோள்பட்டையைத் தலையனையாய்ப் பாவித்துத் தூக்கத்தில் சலைவாவை வழியவிடும் கடங்காரன் முகம் தான் நினைவுக்கு வரும்.
உஸ்ஸ்ஸ்ஸ். யாரங்கே???!!! ஜோடா ப்ளீஸ்ஸ்....
இத்தனையும் கடந்து வீடு மாற வேண்டிய நாள் வந்ததும், இங்கே இருக்கும் அனைத்துப் பொருட்களையும் சரியான முறையில் பேக் செய்ய வேண்டும்.அதனை புது வீட்டுக்குக் கொண்டு செல்ல ஒரு வேனோ,மினி டோர் லாரியோ பிடிக்கவேண்டும்.லிஃப்ட் வசதி இல்லாத குறுகலான படிக்கட்டுகள் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து ரிஃப்ரிஜிரேடர் முதற்கொண்டு எல்லாவற்றையும் கீழே கொண்டு வர வேண்டும்.("இந்த இம்சையை வாங்கீட்டு வந்தப்போ எப்படி மேலே ஏத்தினோம்? "ஓ அதுவா..அன்னைக்கு நம்ம பெருசும்,ஒச்சுவும் ஃபுல் டைட்ல வந்திருந்தாங்க.என்ன பாடரதுன்னு தெரியாம சாமியே அய்யப்பா அய்யப்போ சாமியே பாடியே ஏத்தீட்டாங்க").அப்பாடா எல்லாத்தையும் ஒரு வழியா வண்டியில ஏத்தியாச்சா.வெரி குட்.
அரசியல் வியாதிகளுக்குப் பாதுகாப்பாய்ச் செல்லும் கருப்புப் பூனைகள் போல பொருட்கள் ஏற்றிய வண்டியில் ஒருவர் வழிகாட்டியாகவும்,வண்டியில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஏதேனும் கீழே விழுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்காக டூவீலரில் ஒருவர் வண்டியைப் பின் தொடர்ந்தும் செல்ல வேண்டும்.அப்பாடா..ஒரு வழியாய்ப் புது வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.
புது வீட்டை அடைந்ததும் அங்கே பொருட்களை அன்பேக் செய்து உரிய இடங்களில் வைக்க வேண்டும்.அங்கே சென்றதும் மீண்டும் தொடரும் அதே பால்காரர்,பேப்பர்காரர்,கேபிள் கனெக்ஷன் அடாவடிகள்.("என்னது ஒரு ரூவாப் பேப்பர் இங்க கிடைக்காதா? ஞாயித்துக்கிழமை கேபிள் பசங்க வேலைக்கு வர மாட்டங்களா? கஸ்டமர் சர்வீஸ் ரொம்பவே நன்னா இருக்கு.") மன்டே ப்ளூஸ் மாதிரி புது வீட்டு ப்ளூஸ் குறையாத நிலையில் ஒரு வார இறுதியில் நான் ஊருக்குச் சென்ற போது தான் மேற்கண்ட உரையாடல் நடந்தது.
வீடுகளை மாற்றுவது என்பது என் போன்ற பணியிட நிரந்திரமில்லாத பேச்சுலர்களைப் பொறுத்த மட்டிலும் இயல்பான ஒரு நிகழ்வு.அது போலவே இங்கே எந்த வீடும் நிரந்தரமல்ல என்று உணர்ந்திருப்பதால் குடிபுகும் வீடுகளின் மேல் எந்த ஒரு எமோஷனல் அட்டாச்மென்டும் வருவதில்லை.
"வருசத்துக்கு ஒருக்கா வீட்டை மாத்திக்கிட்டு இருக்கிறதுனால உங்களுக்குப் பழைய வீட்டை இழந்திட்டோங்கற நினைப்பே இல்லை.வீடுங்கறது வெறும் சுவர்,தரை,கூரை மட்டுமில்லப்பா.பல நினைவுகள்,சம்பவங்களோட உணர்ச்சிக் குவியல்.உங்கிட்ட போய் இதப் பத்திப் பேசி...."என்ற என அம்மாவின் அங்கலாய்ப்பு "வீடென்று எதனைச் சொல்வீர்?" என்னும் கவிதையை நினைபடுத்தியது.
19 April 2006
| [+/-] |
சம்சார சாகரத்தை விட்டு... |
எந்த ஒரு இரவு நேர இரயில் பயணத்தின் போதும் நான் விரும்பித் தேர்ந்தெடுப்பது அப்பர் பர்த்தைத் தான்.யாருக்கும் தொந்தரவு தரவேண்டியதில்லை.யாருடைய தொந்தரவுக்கும் ஆட்பட வேண்டியதில்லை.இதுவே பகல் நேரப் பிரயாணம் என்றால் எனது தேர்வோ சைட் லோயருக்குத் தான்.காலை நீட்டிக்கொண்டே சன்னல் வழியாக நம்மைக் கடந்து செல்லும் மரங்கள்,மனிதர்கள் என்று மனத்தைக் கண்டபடி செலுத்துவதில் இருக்கும் சுகமே தனி தான்.
இப்படி எண்ணிக் கொண்டே எனது சைட் லோயரில் அமர்ந்து கொண்டே கண்ணை லேசாகத் திறந்து மூடுவதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டது."ரேவதி 35ஆம் நம்பர் இங்க இருக்கு பாரு.தினேஷ்,அம்மா கையப் பத்திரமாப் புடிச்சிக்க.அந்தக் கறுப்பு பேக்கை இப்படிக் கொடு.குறும்பு பண்ணாம அம்மா கிட்ட சமர்த்தா இருக்கணும்.யாராவது தெரியாதவங்க ஏதாவது சாப்பிடக் கொடுத்தா வாங்கக் கூடாது.பாத்ரூம் போகணும்ணா அம்மா கிட்ட சொல்லணும்.ஒகேவா??"கண்களை மூடிக்கொண்டே மேற்கண்ட சம்பாஷனையைக் கேட்டவுடன், தான் உடன் வாராமல் தன் மனைவி,குழந்தைகளை வழியனுப்ப வந்திருக்கும் ஒரு அப்பாவின் பிம்பம் மனக்கண்ணில் நிழல் ஆடியது.
கணவர் புத்தகங்களுடன் ஐக்கியம் ஆன பின்னர் அந்தத் தாயும்,குழந்தையும் பல்வேறு விளையாட்டுகள் விளையாடினர்.அந்த அப்பாவோ எதோ ஒரு சாமியாரின் 30 நாட்களில் வீடு பேறு அடைவதற்கான வழிகளைப் படித்துக் கொண்டிருந்தார்.குழந்தை கொஞ்ச நேரம் அம்மாவுடன் கீழே விளையாடியதும் தன்னை அப்பாவின் பெர்த்தில் ஏற்றி விடச் சொல்லும்.மேலே போய் சரியாய் மூன்றாவது நிமிடத்தில் போரடித்துப் போய் கீழே இறங்கும்.மறுபடியும் அம்மாவுடன் ஒரு அரைமணி நேரம் விளையாடும்.
இப்படி நான்கைந்து முறை செய்ததும்,"ரேவதிம்மா.தினேஷுக்கு அந்தப் பிஸ்கெட்டையும் பாலையும் கொடுத்துக் கொஞ்ச நேரம் தூங்க வை.கீழயும்,மேலயும் ஏறி,ஏறி இறங்கினதில பய ரொம்பக் களைப்பாயிட்டான் போலிருக்கு.அப்படியே நீயும் கொஞ்ச நேரம் தூங்கு.எப்படியும் வீடு போக ராத்திரி பத்து மணியாயிடும்.வீட்டுக்குப் போய் மீதி விளையாட்டு வெளாடுங்க."இதைக் கேட்டவுடனேயே எந்திரம் போலத் தனது கணவரின் கட்டளைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றிய அந்தத் தாயின் முகம் அவர்களது மனநிலையை உணர்த்தியது.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே இவ்வளவு ஆத்திரமும்,கோபமும் வந்தால் அந்தக் குழந்தைக்கும்,தாய்க்கும் எவ்வளவு ஏமாற்றமும் கோபமும் வந்திருக்கும்.இந்த ஆளுக்கெல்லாம் எதுக்குக் கல்யாணமும்,குழந்தையும் என்று ஆதங்கப் பட்டுக்கொண்டே கொஞ்சம் தூங்கிப் போனேன்.வண்டி ஒசூரை நெருங்கியதும் விழித்துக் கொண்டேன்.
"..அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா? சரி அத விடு.இந்தப் பத்தியில ஸ்வாமீஜீ சம்சார சாகரத்தைக் கடக்கறதப் பத்தி என்ன சொல்றார் தெரியுமா...?" என்று தொடர்ந்த அவரது உரையை இரு குழந்தைகள் மலங்க மலங்க விழித்தபடி கேட்டுக் கொண்டிருந்தனர்.
22 March 2006
21 March 2006
| [+/-] |
மறக்க முடியுமா?? |
2002ஆம் ஆண்டு, மே மாதம், ஏதாவது ஒரு ஞாயிறு இரவு சுமார் 8.30 மணி தொடங்கி 9 மணி வரை நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நினைவிருக்கிறதா?
அந்த நேரத்தை "மறக்க முடியுமா" என்று நினைப்பவர்கள் எல்லாம் கை தூக்குங்கள் பார்ப்போம்? அட நான் நினைத்ததை விட எண்ணிக்கை அதிகமா இருக்கே?
வாரம் ஒரு முறை என்று இருந்த தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்,தினப்படி மெகாசீரியல்களாய் மெல்லப் பரிணாம வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த காலமது.ரயில் சினேகம்,கரிப்பு மணிகள்,பகலில் ஓர் இரவு என்று தூர்தர்ஷனின் குட் ஓல்ட் டேஸ் நினைவுகளில் இருந்த என்னை சன் டீவியில் வந்த எந்த தொடர்களும் பெரிதாய்க் கவரவில்லை(மர்ம தேசம்,ரமணி Vs. ரமணி இதில் விதிவிலக்கு).எதேச்சையாக ஒரு ஞாயிறு இரவு உணவுக்குப் பின் தொலைக்காட்சிப்பெட்டியைக் குடைந்து கொண்டிருந்த போது சன் தொலைக்காட்சியில் "இந்தக் கேள்விகள் எழுந்த பின்பும்,இடறிக் காதலில் விழுந்த பின்பும் மறக்க முடியுமா" என்ற வரிகளுடன் வந்த பாடல் என்னைக் கட்டிப்போடவே "மறக்க முடியுமா"வைப் பார்க்க ஆரம்பித்தேன்.விஜய் ஆதிராஜ்,மௌனிகா,தேவதர்ஷினி(க.மு.),தேவிப்பிரியா,வத்சலா பாட்டி,மோகன் ராம் போன்ற தேர்ந்த நடிகர்களின் இயல்பான நடிப்பும்,ஆரம்ப காலகட்டத்தில் விறுவிறுப்பாய்ச் சென்ற கதையும்,காட்சியமைப்புகளும்,ஸ்ரீபிரியாவின் தேர்ந்த இயக்கமும் இத்தொடரைச் சில வாரங்கள் தொடர்ந்து பார்க்க வைத்தன.இந்த எல்லாவற்றையும் விட இத்தொடரின் தலைப்புப்பாடலே என்னைப் பெரிதும் ஈர்த்தது.சித்தி,கிருஷ்ணதாசி போன்ற தொடர்களின் வெற்றிக்குப் பின்னர் டெலிசீரியல் என்றாலே நித்யஸ்ரீ மகாதேவனின் ஹைபிட்ச் குரலில் டைட்டில் பாடல் இருக்க வேண்டும் என்ற ஃபார்மேட்டை உடைத்தெறிந்து வந்த ஒரு இனிமையான பாடல் அது.அப்போது தான் "கன்னத்தில் முத்தமிட்டால்" மூலம் அனைவரது கவனத்தையும் கவனத்தை ஈர்த்த சின்மயி குரலில்,தீனாவின் இசையில்,வாலியின் வரிகளில் வரும் இந்தப் பாடலை யாராவது மறக்க முடியுமா?
பாடலை ரியல் ப்ளேயரில் கேட்க -> http://raretfm.mayyam.com/stream/tvserial/Marakka_Mudiyuma-Ulaga_medayil.rm
ஆனந்த பவனம்,பஞ்சவர்ணக்கிளி,அக்ஷயா,புஷ்பாஞ்சலி என்ற வாராந்திரத் தொடர்களுக்குப் பின் "விகடன் டெலிவிஸ்டாஸ்" தயாரித்த முதல் மெகா தொடர் "அலைகள்".2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எதோ ஒரு திங்கள் கிழமையில் ஆரம்பித்த இந்தத் தொடர் முதலில் மாலை 7.30க்கும் பின்னர் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கிடைத்த அபார முன்னணி காரணமாய்ப் ப்ரைம் டைமான 9மணிக்கு மாற்றப்பட்டு வெற்றிகரமாய் ஐந்நூறு எப்சோடுகளுக்கு மேல் வெற்றிகரமாய் ஒளிவலம் வந்தது.முன்பொரு காலத்தில் மகேந்திராவின் இணையாய் நகைச்சுவை வேடங்களில் நடித்து பின்னர் பாடகர் கிருஷ்ணசந்தரைத் திருமணம் செய்து கொண்டு ஹிபர்னேஷனில் இருந்த வனிதா அவர்களுக்கு இத்தொடர் ஒரு கம்பேக் வெகிகிளாக அமைந்தது.பாடகர் A.L.ராகவன்,ஜெயச்சித்ரா,வடிவுக்கரசி,ராஜேஷ்,ஒரு கேமியோ ரோலில் எம்.என்.நம்பியார் என்று ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே இருந்த போதிலும் அனைவரது கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது வேணு அர்விந்தும்,துர்காவுமே.
தீனாவின் இசையில்,வைரமுத்துவின் வரிகளில் மற்றுமொரு தலைப்புப் பாடல்.இதில் ஆச்சரியப்படச் செய்வது பாடலைப் பாடத் தேர்ந்துடுக்கப்பட்ட குரல்கள் தான்.கவிதா(கிருஷ்ணமூர்த்தி) சுப்ரமணியமும்,ஸ்ரீராமும் ஒரு வித்தியாசமான பின்னணி இசையுடன் கூடிய இந்தப் பாடலை தங்கள் குரல்களால் அற்புதப்படுத்தி இருப்பார்கள்.நேசல் வாய்சில் பாடும் கவிதாவின் குரலின் மீது என்னையும் சேர்த்துப் பலருக்கும் மாறாத நேசம் இருப்பது உண்மையே.தைய்யா தைய்யா,வெற்றிக் கொடி கட்டு போன்ற பல பிரபலமான பாடல்கள் பாடியிருந்த போதும் ஸ்ரீராம் இன்னமும் பிரபலமாகவில்லை என்பது ஒரு வருத்தமான தகவல்.
"ஒவ்வொரு மனிதன் வாழ்வும்,
ஒரு பயணம் என்பதை அறிவீர்.
அதன் தூரம் என்ன நேரம் என்ன
யார்தான் அதனை அறிவார் "
பாடலை ரியல் ப்ளேயரில் கேட்க ->
http://raretfm.mayyam.com/stream/tvserial/Alaigal-Sutrum_boomi.rm
20 March 2006
| [+/-] |
என்ன செய்யப் போகிறாய்??? |
நாற்பத்தெட்டு மணி நேரமும் நத்தையாய் ஊர்ந்து செல்கிறது.
புதுப்பாலில் சுடச்சுடப் போடப்பட்ட தேனீரோ ஆடை படிந்து அமைதி காக்கிறது.
என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று சுத்தமாய்த் தெரியாது.
என்னைப் பிடிக்குமா என்பது தெரியவே தெரியாது.
ஆசைகள்,கனவுகள்,இலக்குகள்,தோல்விகள் இன்னமும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை.
அங்கே எனக்கு ஒரு இடம் இருக்குமா என்ற கேள்விக்கு விடையேதும் அறியவில்லை.
உற்றார்,பெற்றோர் பற்றி ஒன்றுமே தெரியாது.
பெயர்,ஊர்,கல்வி,வேலை மட்டுமே தெரியும்.
அனுப்பும் மயில்களுக்குப் பதில் ஏதுமில்லை.
குறுஞ்செய்திகளும் கவனத்தை ஈர்த்தனவா என்று விபரம் ஏதுமில்லை.
பன்னிரண்டு விரல்களின் நகங்களை காலியாக்கியும் இன்னுமா உன் பசி அடங்கவில்லை??
"பழகும் விதங்களைப் பார்க்கையிலே,
பல வருடப் பரிச்சயம் போலிருக்கும்.
எதிலும் வாஞ்சைகள் தானிருக்கும்.
முதலாம் பார்வையிலே...."
பின்குறிப்பு:- இப்போ குட்டி,குட்டியாப் பதிவு போட்டாத் தான் தமிழ்ப் பதிவாளர்னு ஒத்துக்கிடுவாங்களாம்.அதுக்காகத்தான் இந்தப் பதிவுன்னு நான் சொல்வதை நீங்க நம்பியே ஆகணும்.
13 March 2006
| [+/-] |
ரெண்டும் ரெண்டும் நாலு - சங்கிலித் தொடர் |
வைகோ அம்மாவுடன் கை கோர்த்தது,ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை,தவமாய்த் தவமிருந்துக்குத் தரப்படாத அங்கீகாரம் கள்வனின் காதலிக்குக் கிடைப்பது,வாரணாசி குண்டுவெடிப்பை அரசியலாக்க அரசியல்வியாதிகள் முயல்வது என்று கதம்பமாய்த் தகவல்கள் வந்து இந்த ஆண்டின் முதல் குவார்ட்டரைக் களேபரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு நேரத்திலே, கொஞ்ச நாள் நம்ம தொல்லையில் இருந்து சனங்க நிம்மதியா இருக்கட்டும் என்று நினைத்திருந்த போதே, நம்ம இளவஞ்சி என்னையும் இந்த ஆட்டத்துக்கு இஸ்து விட்டுட்டார்.
பிடித்த நான்கு அரசியல்வாதிகள்:
1. காமராஜர் - இவரைப் பத்தி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை
2. ராஜீவ் காந்தி - இந்தியா தொலைத்தொடர்புத் துறையில் தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
3. ஜெயலலிதா - தோல்வி கண்டு துவளாது போராடும் குணம் கண்டு வியக்காத நாளில்லை.
4. ஏ.கே.ஆன்டனி - எளிமை,எளிமை மற்றும் எளிமை.
எனக்குப் பிடித்த நான்கு படங்கள்(வசனங்களுக்காகவும்):
1. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - "உலகத்திலேயே ரொம்பக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா?மத்தவங்க நம்மளை மறந்திடறது.
2. சதி லீலாவதி : "என்னையே புடிக்கலயாமா,இதில பிர்ரேக் புடிச்சா என்ன? புடிக்காட்டி என்ன?"
3. தில் சாஹ்தா ஹை -"வைசே பீ பர்ஃபக்ஷன் கோ இம்ப்ரூவ் கர்னா முஷ்கில் ஹை"
4. திருவிளையாடல் - "ஆயிரம் பொன்னாச்சே.ஆயிரம் பொன்னாச்சே..."
பிடித்த நான்கு உணவு வகைகள்
1. இட்லி-என்னோட மெனுல இதுக்குதான் எப்போதுமே முதல் இடம்.வெள்ளை நிறமும் யாரோட உடலுக்கும் தீங்கு விளைவிக்காத நல்ல குணமும் கொண்ட இந்த இட்டிலியை வேண்டாம்னு யாராவது சொல்ல முடியுமா?மொதல்ல புடிக்காமப் போயிருந்தாலும் மஞ்சக்காமாலைல விழுந்த எழுந்த பிறகு இட்டிலி தான் என்னோட ஜிகிரி தோஸ்த்.மினி இட்லி,ஃப்ரைடு இட்லி,ரவா இட்லின்னு இப்போ இதுக்கு ஆயிரம் வாரிசுகள் வந்த போதும் என்னோட ஓட்டென்னமோ இட்லி+சாம்பார்க்குத் தான்.
2. கோதுமைப் பாயாசம் : யம்மீ..யம்மீ...இதுக்கு ரெசிப்பி ராகவன் தருவாரு.
3. தட்டைப்பயிறு + கத்தரிக்காய் :எளிமையான ஒரு கிராமிய உணவு.நல்லா இருக்குன்னு அதிகமாச் சாப்பிட்டா அவ்வளவு தான்.
4. எலுமிச்சை சாதம் : சமைக்க அதிக மெனக் கெடவேண்டியதில்லை.நான் சாப்பிடற மாதிரி சமைக்கும் வஸ்துகளில் இதுவும் ஒண்ணு.
விடுமுறைக்குச் செல்ல விரும்பும் நான்கு இடங்கள்:
1.பழனி - பொறந்து,வளர்ந்து கொஞ்ச நாள் படிச்ச ஊர்.சாமி தியேட்டர் உப்புக்கடலை,முல்லையில வாங்கின மொத பேன்ட்,திருப்பூர் லாட்ஜ் ஜிலேபி,சித்தனாதன் கடை வாசனை விபூதி,சண்முக நதிப் பாலத்தில ஓட்டின சைக்கிள்,நெய்க்காரபட்டி லைப்ரரி,ஜெயராம் தியேட்டர்ல பார்த்த தசாவதாரம்.ஹூம்....
2.பாண்டிச்சேரி - கடல்,கடல் மேலும் கடல்.ஆனா அது மட்டுமே காரணமில்லை.
3.ஆலப்புழா - கடவுளின் சொந்த தேசம்னு சொல்றதில தப்பேயில்லை.
4.சூலூர் - சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா??மணிவண்ணன்,சிவக்குமார் இவங்களோட எனக்கும் இது தான் சொந்த ஊர்.
நான் அழைக்க விரும்பும் நால்வர்
1. ரம்யா நாகேஸ்வரன்
2. கேவிஆர்
3. யாத்திரீகன்
4. ஸ்ருசல்
26 January 2006
| [+/-] |
சின்ட்ரெல்லாக்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை |
சின்ட்ரெல்லா என்ற பேரைக் கேட்டவுடன் உங்கள் மனத்திரையில் முதலில் காட்சி அளிப்பது யார்?எட்டாம் வகுப்பு வரை கூடப் படித்த சசிரேகா,பக்கத்து வீட்டு ரோசலின் அக்கா,தங்கையின் ட்யூஷன் தோழி,மூன்றாம் பிறை விஜி,கல்லூரியில் காதலித்த ரேணுகா,பிரியா மணி... என்று ஆளுக்குத் தகுந்த படி பிம்பங்கள் மாறும்.
தன் தாயை இழந்த அழகிய சிறுமி ஒருத்தி சிற்றன்னைக் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் பின் அதிலிருந்து ஒரு ராஜகுமாரனால் மீட்கப்படுவதுமாய்ச் செல்வது சின்ட்ரெல்லாவின் கதை.சரி அதையெல்லாம் விடுங்கள்.எனக்கு சின்ட்ரெல்லா என்றவுடன் நினைவுக்கு வருவது, தி.நகர் உஸ்மான் ரோடு,ரங்கனாதன் தெருவில் உள்ள பல்வேறு கடைகளில் நாராஷிஃபான் புடவையையும்,சந்திரமுகி ஜிமிக்கியையும்,ப்ரெஸ்டீஜ் குக்கரையும்,ஜாக்கி உள்ளாடைகளையும் விற்கப் போராடும் எஸ்தர்களும்,வனிதாக்களுமே.
மேற்படிப்பு என்னும் தாயை இழந்த சிறுமி/மங்கையர்,வறுமை என்னும் சிற்றன்னைக் கொடுமைக்கு ஆளான நிலையில், என்றோ ஒரு நாள் வரப்போகும் ராஜகுமாரனுக்குக் காத்திருக்காமல் தங்களையும்,தங்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றக் களத்தில் குதித்து விட்ட சிண்ட்ரெல்லாக்கள் தான் இவர்கள்.
நான் சென்னையில் இருந்த இரண்டரை ஆண்டுகளில் பெரும்பங்கு வசித்தது, தி.நகர்- ராமனாதன் தெருவிலிருந்த ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் தான்.இந்த ராமனாதன் தெருவானது ரங்கனாதன் தெருவிற்குப் பெர்பென்டிக்குலராய் இருக்கும்.ரங்கனாதன் தெருவிலிருந்த சில பெரிய கடைகளில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண்களுக்கான விடுதிகள் எங்கள் குடியிருப்புக்கு அருகாமையிலேயே இருந்தது.தினமும் அலுவலகம் விட்டு வரும் போதெல்லாம், இரவு உணவருந்தி விட்டு ஹாஸ்டலில் இருந்து பணியிடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் ஒரு பெண்கள் கூட்டத்தைக் காண்பது வழக்கம்.என்ன தான் கலகலப்பாக பேசிக்கொண்டே சென்றாலும்,கண்ணுக்குப் புலப்படாத புகையாய் ஒரு சோகத்தை அவர்களிடம் இருந்து உணர முடியும்.அப்பொதேல்லாம் சிறுவயதில் படித்த சின்ட்ரெல்லாவின் கதை தான் என் நினைவுக்கு வரும்.
ரங்கனாதன் தெருவிலிருக்கும் இந்த சோ கால்ட் சூப்பர்மார்க்கெட்டுகளில் விற்பனைப் பிரிவில் வேலை செய்ய பெரும்பான்மையான ஆண்/பெண்கள் தென் தமிழகத்திலிருந்து கூட்டி வரப்படுகிறார்கள்.டிமாண்டிங் குடும்பச்சூழ்நிலை,மேலே தொடரமுடியாத கல்வி,சென்னை பற்றிய கற்பனைகள்,வசிக்குமிடத்தில் வேலையின்மை,உண்ணும் உணவும் இருக்க உறைவிடமும் இலவசம்,முன்னமே இந்த வேலையில் இருக்கும் அவர்களது கசின்களின் சென்னை சாகசக் கதைகள் என்று இவர்கள் இந்தப் பணிக்கு சென்னை வர ஒத்துக்கொள்வதில் பல காரணங்கள் இருக்கின்றன.
பொதுவாக இவ்வாறு இடம் பெயர்ந்த பின்னர் ஆண்கள் தங்களைப் பற்றியும்,தங்களது இருப்பு பற்றியும் அதிகமாய்க் கவலைப்பட வேண்டியதில்லை.இது அவர்களைப் புதிய பணிச்சூழலில் எளிதாய்ப் பொருத்திக்கொள்ள உதவுகிறது.ஆண்களின் கவலையெல்லாம் காலிப்பயல்களுக்கு நடுவே ஊரில் விட்டு வந்த காதலி பற்றியோ,தன் தங்கையின் திருமணம் பற்றியோ அல்லது அடுத்து வரவிருக்கும் இளைய தளபதியின் படம் பற்றியோ தான் இருக்கும்.பெண்களுக்கு அப்படிப்பட்ட சூழல் இன்னும் கனியவில்லை.பணியிடத்திலும் வெளியிடங்களிலும் பெருகிவரும் பாலியல் கொடுமைகள்,இப்படி வேலைக்காய்ப் புலம் பெயரும் பெண்களிடையே ஒரு பீதியை உண்டுபண்ணி இருக்கிறது. இதனால் அவர்களால் புதிய இடத்திலும் சரி,பணியிடத்திலும் சரி தங்களைப் பொருத்திக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
பெற்றோரின் அரவணைப்பில் இருந்து கொண்டு வேலைக்குச் செல்லும் மகளிரையே பாதுகாப்பாய் விட்டு வைக்காத சென்னை மாநரகத்தில், பெற்றோர்/குடும்பத்தாரை விட்டு வந்து தனியே இருக்கும் இவர்கள் என்ன பாடுபடுகிறார்களோ என்ற எண்ணம் ஒவ்வொரு முறையும் அவர்களைப் பார்க்கும் போதும் தோன்றும்.
இவர்களின் இந்த வேலை அரசால் முறைப்படுத்தப்பட்ட பணிகளின் பட்டியலில் வருகிறதா?பீஎஃப்,இன்ஷ்யூரன்ஸ் வசதி இவர்களுக்கு அளிக்கப்படுகிறதா?இவர்களுக்கு என்று யூனியன் என்று ஏதாவது இருக்கிறதா?எவ்வளவு மாதம்/வருடங்களுக்குப் பிறகு இவர்களுக்கு ஊதியவுயர்வு அளிக்கப்படுகிறது(If at all)?இப்படிப் பணி புரியும் பெண்களின் பாதுகாப்பிற்கென்று அந்த அந்த நிறுவனங்கள் ஏதாவது செய்து வருகின்றனவா?எல்லாவற்றிற்கும் மேலாய் தீபாவளி,பொங்கல்,கிறிஸ்துமஸ்,ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களை அவர்கள் எப்போது குடும்பத்தாரோடு கொண்டாடப் போகிறார்கள்?
ஹூம்.மேற்சொன்ன கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒரு ராஜகுமாரன்,இந்த சின்ட்ரெல்லாக்களிடத்தே சீக்கிரமே வந்தால் தேவலை.
18 January 2006
| [+/-] |
சோதனை முயற்சி |
புதுச் சரக்கு போட்டு செய்யும் ஒரு சோதனை முயற்சி.
05 January 2006
| [+/-] |
தமிழக அரசியல் கட்சிகளின் இணைய தளங்கள் |
தலைவர்களின் சூறாவளி சுற்றுப்பயணங்களின் போது பறக்கும் யெஸ்.யூ.விக்கள்,மா.செக்களிடமும் வா.செக்களிடமும் புழக்கத்திலிருக்கும் நோக்கியா கம்யூனிகேட்டர்,பில்கேட்சின் தமிழ் தாகத்தைக் தணிக்க புத்தகங்கள் தருதல்,அன்றாட செய்திகளை சார்பு நிலையில் தர உதவும் சாட்டிலைட் தொலைக்காட்சிகள் என்று லேட்ட்ஸ்ட் அறிவியல் நுட்பங்களைத் தங்களது கட்சிப் பயன்பாட்டில் உபயோகப்படுத்தி வருவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல தமிழகத்து அரசியல் கட்சிகள். கட்சி நிதியைக் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்குவதால் ஏற்படும் சட்ட சிக்கல்களைக் அறிந்ததனாலோ என்னவோ அந்தத் தொழில் நுட்பம் உபயோகிக்கப் படுவதில்லை என்று நினைக்கிறேன்.
ரங்கனாதன் தெருவில் டீக்கடை வைத்திருப்பவர் முதற்கொண்டு அனைவரும் தங்களுக்கென ஒரு எக்ஸ்க்ளூசிவ் இணைய தளம் வைத்திருக்கும் காலம் அல்லவா இது.நம் கழகக் கண்மணிகள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?
தமிழகத்தின் முன்னேற்றக் கழகங்களுக்கு சொந்தமாக இணையதளங்கள் இருக்கின்றன என்பது தற்செயலாகக் கூகிளிட்ட போது தான் தெரிந்தது.தமிழகக் கட்சிகளில் இணையதளம் வைத்திருப்பவை :- தி.மு.க.,அ.இ.அதிமுக,ம.தி.மு.க மட்டுமே.(தேசியக் கட்சிகளான காங்கிரஸ்(ஐ),பா.ஜா.க,கம்யூனிஸ்ட்கள் போன்றவற்றை நான் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை).ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால்,தமிழகத்தின் மூன்றாவது பெரிய/முக்கியக் கட்சியாகத் தன்னை முன்னிறுத்தும் பா.ம.க.வுக்கென ஒரு தளம் கூடக் கிடையாது.(Not even geocities).
இந்தத் தளங்களின் கன்டென்டில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை யாராவது படித்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.
அதிமுகவின் இணைய தளத்திலும் சரி,திமுகவின் இணைய தளத்திலும் சரி கட்சி நிர்வாகிகள் பற்றி எந்தத் தகவலும் இல்லை.ஆனால் மதிமுக தனது தளத்தில் பொதுச்செயலர்கள்,மாவட்டச்செயலர்கள்,எம்பிக்கள் போன்றோரது தகவல்களோடு,அவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக கான்டேக்ட் எண்களும் தரப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவல்களுக்கு:
http://www.aiadmkindia.org/
http://www.mdmk.org.in
http://www.thedmk.org
23 December 2005
| [+/-] |
!!!~~ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ~!!! |
உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்.
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்.
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்.
நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞானம் ஒளி வீசட்டும்.
நம் கடமை அறவாழ்வில் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்; வாழ்க வளமுடன்.
| [+/-] |
|~~ அதிரூபன் தோன்றினானே ~~| |
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே,
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே,
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றிட சிசுபாலன் தோன்றினானே,
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே,
முட்காடு எங்கிலும் பூக்காடு காணவே புவிராஜன் தோன்றினானே.




