19 April 2006

சம்சார சாகரத்தை விட்டு...

எந்த ஒரு இரவு நேர இரயில் பயணத்தின் போதும் நான் விரும்பித் தேர்ந்தெடுப்பது அப்பர் பர்த்தைத் தான்.யாருக்கும் தொந்தரவு தரவேண்டியதில்லை.யாருடைய தொந்தரவுக்கும் ஆட்பட வேண்டியதில்லை.இதுவே பகல் நேரப் பிரயாணம் என்றால் எனது தேர்வோ சைட் லோயருக்குத் தான்.காலை நீட்டிக்கொண்டே சன்னல் வழியாக நம்மைக் கடந்து செல்லும் மரங்கள்,மனிதர்கள் என்று மனத்தைக் கண்டபடி செலுத்துவதில் இருக்கும் சுகமே தனி தான்.

இப்படி எண்ணிக் கொண்டே எனது சைட் லோயரில் அமர்ந்து கொண்டே கண்ணை லேசாகத் திறந்து மூடுவதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டது."ரேவதி 35ஆம் நம்பர் இங்க இருக்கு பாரு.தினேஷ்,அம்மா கையப் பத்திரமாப் புடிச்சிக்க.அந்தக் கறுப்பு பேக்கை இப்படிக் கொடு.குறும்பு பண்ணாம அம்மா கிட்ட சமர்த்தா இருக்கணும்.யாராவது தெரியாதவங்க ஏதாவது சாப்பிடக் கொடுத்தா வாங்கக் கூடாது.பாத்ரூம் போகணும்ணா அம்மா கிட்ட சொல்லணும்.ஒகேவா??"கண்களை மூடிக்கொண்டே மேற்கண்ட சம்பாஷனையைக் கேட்டவுடன், தான் உடன் வாராமல் தன் மனைவி,குழந்தைகளை வழியனுப்ப வந்திருக்கும் ஒரு அப்பாவின் பிம்பம் மனக்கண்ணில் நிழல் ஆடியது.

"கண்ணா என்னோடது இந்த சைட் அப்பர்.உங்களுக்கு இந்த மிடில் பர்த்.கீழ் பர்த்திலேயே உக்காருங்க.சேலத்தில தான் இந்த பர்த்துக்கு ஆள் வருமாம்.டீடீ கிட்ட கேட்டுட்டேன்"என்றாவாரே அந்த நபர் எனக்கு மேலே இருந்த பர்த்தில் ஒரு பை நிறையப் புத்தகங்களுடன் அடைக்கலம் புகுந்தார்.கோடை விடுமுறைக் காலம் என்பதால் முக்கால் வாசிப்பெட்டி நிறைந்துவிட்டது.அனைத்துக் கூபேக்களிலும் நண்டு,சிண்டுகளாய்க் குழந்தைகள்;அவர்களுடன் தம்மை மறந்து குழந்தையாய்ப் போன பெற்றோர்,தாத்தா பாட்டிமார்கள்.இரயிலில் குடும்பத்துடன் பயணம் செல்வது என்பது குதூகலமான ஒன்று.

கணவர் புத்தகங்களுடன் ஐக்கியம் ஆன பின்னர் அந்தத் தாயும்,குழந்தையும் பல்வேறு விளையாட்டுகள் விளையாடினர்.அந்த அப்பாவோ எதோ ஒரு சாமியாரின் 30 நாட்களில் வீடு பேறு அடைவதற்கான வழிகளைப் படித்துக் கொண்டிருந்தார்.குழந்தை கொஞ்ச நேரம் அம்மாவுடன் கீழே விளையாடியதும் தன்னை அப்பாவின் பெர்த்தில் ஏற்றி விடச் சொல்லும்.மேலே போய் சரியாய் மூன்றாவது நிமிடத்தில் போரடித்துப் போய் கீழே இறங்கும்.மறுபடியும் அம்மாவுடன் ஒரு அரைமணி நேரம் விளையாடும்.

இப்படி நான்கைந்து முறை செய்ததும்,"ரேவதிம்மா.தினேஷுக்கு அந்தப் பிஸ்கெட்டையும் பாலையும் கொடுத்துக் கொஞ்ச நேரம் தூங்க வை.கீழயும்,மேலயும் ஏறி,ஏறி இறங்கினதில பய ரொம்பக் களைப்பாயிட்டான் போலிருக்கு.அப்படியே நீயும் கொஞ்ச நேரம் தூங்கு.எப்படியும் வீடு போக ராத்திரி பத்து மணியாயிடும்.வீட்டுக்குப் போய் மீதி விளையாட்டு வெளாடுங்க."இதைக் கேட்டவுடனேயே எந்திரம் போலத் தனது கணவரின் கட்டளைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றிய அந்தத் தாயின் முகம் அவர்களது மனநிலையை உணர்த்தியது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே இவ்வளவு ஆத்திரமும்,கோபமும் வந்தால் அந்தக் குழந்தைக்கும்,தாய்க்கும் எவ்வளவு ஏமாற்றமும் கோபமும் வந்திருக்கும்.இந்த ஆளுக்கெல்லாம் எதுக்குக் கல்யாணமும்,குழந்தையும் என்று ஆதங்கப் பட்டுக்கொண்டே கொஞ்சம் தூங்கிப் போனேன்.வண்டி ஒசூரை நெருங்கியதும் விழித்துக் கொண்டேன்.

"..அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா? சரி அத விடு.இந்தப் பத்தியில ஸ்வாமீஜீ சம்சார சாகரத்தைக் கடக்கறதப் பத்தி என்ன சொல்றார் தெரியுமா...?" என்று தொடர்ந்த அவரது உரையை இரு குழந்தைகள் மலங்க மலங்க விழித்தபடி கேட்டுக் கொண்டிருந்தனர்.

16 Comments:

Pavals said...

ஏப்பு.. பகல் ட்ரெயின்ல வந்தா எவ்ளோ நல்ல விஷயம் இருக்கு வேடிக்கை பார்க்க.. அதைவிட்டுட்டு இப்படி வெட்டியா பொழுத போக்கியிருக்க.. ஊரு பேர காப்பாத்துங்கப்பா.. :)

Sud Gopal said...

அப்படியா சொல்றீங்க.இனிமே செஞ்சிட்டாப் போகுது.

ilavanji said...

//இந்தப் பத்தியில ஸ்வாமீஜீ சம்சார சாகரத்தைக் கடக்கறதப் பத்தி என்ன சொல்றார் தெரியுமா...?" என்று தொடர்ந்த அவரது உரையை இரு குழந்தைகள் ///

சுதர்சன், *** இரு குழந்தைகள் *** போதுமப்பா! இனி அந்த ஆளு சம்சார சாகரத்தை நீந்தி கடக்க ஆசைப்படறதுல தப்பே இல்லை! நாட்டுக்கும் நல்லது! :)) சும்மா தமாசுங்க..

உண்மையை சொல்லனும்னா.. "ஏட்டுசுரைக்காய் கறிக்கு உதவாது!"

Sud Gopal said...

இரு குழந்தைகள் -> தினேஷும் அவனோட அம்மாவும்.

"ஏட்டுசுரைக்காய் கறிக்கு உதவாது!"
அது....

Anonymous said...

நீங்க என்ன கொங்கு விரைவு வண்டியிலய பயணம் செஞ்சீங்க? கொஞ்சம் பர்சனலா ஒரு கேள்வி? சர்வஜனா 1998 -MPC??

G.Ragavan said...

அடப்பாவமே...இந்த அளவுக்கு உணர்ச்சியே இல்லாத ஜடமா இருந்திருக்காரே அந்த ஆளு.

தவமும் அவமுடையார்க்குதான் ஆகும்னு அவருக்குத் தெரியலையே....

நல்லா எழுதீருக்கீரு சுதர்சன்....அது சரி...வண்டீல பாத்தது இத மட்டுந்தானா?

Sud Gopal said...

ஆமாம் அனானி.அது கொங்கு எக்ஸ்பிரஸ் தான்.

சர்வஜனா 1998 -MPC
எனக்குத் தனி மெயில் போடவும் sudharsan டாட் g அட் gmail டாட் com

Sud Gopal said...

//வண்டீல பாத்தது இத மட்டுந்தானா?//
ஹும்...அது ...வந்து....இந்தக் கேள்விக்கு உண்மையச் சொல்லவா இல்ல பொய்யை சொல்லவா???

பொன்ஸ்~~Poorna said...

//"..அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா? சரி அத விடு.இந்தப் பத்தியில ஸ்வாமீஜீ சம்சார சாகரத்தைக் கடக்கறதப் பத்தி என்ன சொல்றார் தெரியுமா...?" என்று தொடர்ந்த அவரது உரையை இரு குழந்தைகள் மலங்க மலங்க விழித்தபடி கேட்டுக் கொண்டிருந்தனர்.//

எங்கப்பா தெய்வம் தான்.. முதல் பார்ட் எல்லாம் பாத்துட்டு, அட, நம்ம அப்பா மாதிரியே இருக்காரேன்னு நினைச்சேன்.. எங்க அப்பா பரவாயில்லை.. சம்சார சாகரத்தைப் பத்தி எல்லாம் சொல்ல மாட்டாரு... :)

துளசி கோபால் said...

ஏங்க இதையெல்லாம் கவனமாக் கவனிச்சீங்க? சம்சாரமே
இன்னும் வரலைன்றப்ப சாகரத்தைப் பத்திக் கவலை ஏன்? அதுவும் இப்ப!

ஆப்பு said...

வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.

ramachandranusha(உஷா) said...

பெருசு பெருசுதான், இளவஞ்சியை சொன்னேன். நெத்தியடியாய் 'ஏட்டு சுரைக்காய்"னுட்டாரே :-))

ரேவதியம்மா, நீ படித்து கொஞ்ச நேரம் தூங்கு. பிள்ளைங்கள நா பாத்துகிறேன் என்று தூக்க வர
பிள்ளைகளுக்கு சரியான கதை சொல்லியிருக்கிறார். மனைவியை அம்மா போட்டு கூப்பிடும் அழகு,... ஹ¥ம் (பெரூமூச்சு),
இரண்டு பிள்ளைகளை அழகாய் பெற்றப் பிறகு சம்சார சாகரத்தில் இருந்து உய்ய அவர் எடுக்கும்
முயற்சிகள், இதெல்லாம் சின்ன பசங்களுக்கு புரியாது ஐயா, புரியாது

Sud Gopal said...

வாங்க பொன்ஸ்.மொதத் தடவையா என்ர பதிவு பக்கம் வந்திருக்கீங்க.அடிக்கடி வந்திட்டுப் போங்க.

Sud Gopal said...

//சம்சாரமே இன்னும் வரலைன்றப்ப சாகரத்தைப் பத்திக் கவலை ஏன்? அதுவும் இப்ப!//
ஹி...ஹி...ஒரு முன்னேற்பாடு தான்.

Sud Gopal said...

//தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.//

அது.
அப்புறம் உங்க ப்ரொஃபைல்ல இருக்கும் படம் நல்ல்லாவே இருக்குதய்யா.(அய்யாவா இல்ல அம்மாவா???)

Sud Gopal said...

//பெருசு பெருசுதான்,இளவஞ்சியை சொன்னேன்.//

இன்னமும் பால் குடி மாறாத பாலகனாம் எங்கள் இளவஞ்சியைப் பெர்சு என்று சொன்னதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.ஓவர் டூ இளவஞ்சி.(நாராயண...நாராயண...)


//இரண்டு பிள்ளைகளை அழகாய் பெற்றப் பிறகு சம்சார சாகரத்தில் இருந்து உய்ய அவர் எடுக்கும்
முயற்சிகள், இதெல்லாம் சின்ன பசங்களுக்கு புரியாது ஐயா, புரியாது//

அய்யோ......இரு குழந்தைகள் -> தினேஷும் அவனோட அம்மாவும்.

மத்தபடி மொதத் தபா ஊட்டாண்ட வந்து சொல்லீருக்கீங்கோ.டேங்ஸ்.அடிக்கடி வந்து போங்க.