"தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட..."
"ஆமாம் வில்லினில் பாட..."
"வந்தருள்வாய் கலைமகளே..."
"ஆஹா...வந்தருள்வாய் கலைமகளே..."
"அதாகப்பட்டது மக்களே..."
"மக்களே..."
"கீர்த்தனாரம்பத்திலே கொஞ்சம் கொஞ்சமா எழுதிகிட்டு இருந்தவரும் இப்போது "ஓ" போட்டுக்கொண்டிருப்பவருமான சுதர்சன்.கோபால் தான் இந்த வாரத்துத் தமிழ்மண நட்சத்திரமாம்"
"ஓஹோ...நட்சத்திரமாம்"
"நட்சத்திர வாரத்தில என்ன செய்யப் போகிறார் தெரியுமா? "
"தெரியாதே...?"
"நல்ல கட்டுரைகளைத் தட்டிப்போடுவார்,பெரிய கொசுவர்த்தியை ஏற்றுவார் என்று ஊரார் எல்லாம் பேசிக்கொள்கிறார்கள்"
"ஓ...அப்படியா???!!!"
"ஆமாம்.இதோ.அவரே வந்திட்டார் போலிருக்கே.அவரை வரச் சொல்லி நான் வழி விடுறேன்.."
"ஆஹா....ஜென்ம சாபல்யம்"
அனைவருக்கும் வணக்கம்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் காலையில் மறக்காமல் செய்யும் காரியங்களுள் ஒன்று இந்த வார நட்சத்திரம் யார் என்று தமிழ்மணத்தில் பார்ப்பது.இந்த வாரம் இவர் தான் என்று மனத்தில் நினைத்தவரே நட்சத்திரமான வாரங்களும் உண்டு.பல நட்சத்திரங்கள் ஒளிவீசிய இந்தத் தளத்தில், ஒரு சிறிய மின்மினியாகிய நானும் இப்போது பதவி உயர்வு பெற்ற நிலையில்.அதுவும் ஒரு முழு வாரத்துக்கு.
இந்த உலகம் ஆச்சரியங்களால் ஆனது என்பது நிஜமான உண்மை போல.முழு வாழைப்பழ சோம்பேறியான என்னை இந்தப் பொறுப்பானது கொஞ்சம் சுறுசுறுப்பானவனாக மாற்றியிருக்கிறது.இந்த ஒரு வாரத்தில் நானும்,என்னுடைய பதிவுகளும் இன்னமும் அதிகம் பேரைச் சென்றடைய இருக்கிறோம் என்பதில் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
இதுவரை ஐம்பது பதிவுகளைக் கூட தாண்டாத என்னையும் நட்சத்திரமாக்கி அழகு பார்த்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகக் குழுவினருக்கு எனது நன்றிகள்.
சிறு வயதில் என் கையில் கிடைத்த பென்சிலை விட உயர்ந்த பொருள் ஏதும் இல்லை என்று முடிவு செய்திருந்தேன்.அதற்காக அழுது போராடியிருக்கிறேன்.கல்கி,விகடன்,குமுத வகையாறாக்களில் வரும் எந்த ஒரு புகைப்படமும் எனது பென்சிலால் அழகுபடுத்தப் படாமல் இருந்ததில்லை.பொய்யாய் மீசை வரைவது,தப்புத் தப்பாய் எனது பெயரை எல்லாப் பக்கங்களிலும் நிரப்புவது என்று தொடர்ந்தது எனது திருவிளையாடல்கள்.எனது கிறுக்கல்களெல்லாம் சித்திரங்களாகிப் புத்தகங்களை நிறைத்த சந்தோஷம்,அந்தக் காகிதங்கள் அண்ணாச்சி கடை ரவைப் பொட்டலமாய் வீட்டுக்கு வந்த பிறகும் வெளிச்சமாக நினைவில் நிற்கிறது.இப்படியாய் ஆரம்பித்தது எனது எழுத்துலக அனுபவம்(கொஞ்சம் ஓவராய்த் தோணுதா..ஹி...ஹி...).
அம்மா வழிப் பாட்டனாரின் பண்புகள் பேரனுக்கும்,அப்பா வழிப் பாட்டியின் மரபியல் பண்புகள் பேத்திக்கும் மரபியல் ரீதிப்படி வரும் என எங்கோ படித்ததாய் ஞாபகம்.எனது விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருந்தி வருகிறது.
வருடா வருடம் வரும் போனஸ் பணத்தில் தனக்குத் தீபாவளித்துணி கூட எடுக்காமல் அந்தக் காசுக்கு தீபாவளி மலர்களையும்,வேறு சில புத்தகங்களையும் வாங்குவது எனது தாத்தாவின் வழக்கம்.புத்தகங்களுக்குச் செலவிடுவது என்பது அவரால் என்னுள் பதிக்கப்பட்ட ஒரு முக்கிய பண்பு.எண்பதுகளின் தொடக்கத்தில் நடந்த ஒரு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட எங்கள் தாத்தாவுடன் பிரச்சாரத்திற்கு வீடு வீடாய்ப் போனதிலிருந்து ஆரம்பித்தது எனது அரசியல் மீதான காதல்."கட்,கட் கமர் கட்...________யை ஒழிச்சுக் கட்" என்பது போன்ற கூவல்கள் அப்போது எங்களைப் போன்ற சிறாரிடையே மிகவும் பிரபலம்.இன்னமும் மாறாமல் என்னைத் துரத்தும் எனது நாற்காலி பற்றிய கனவுகள், அவரால் என்னுள் பதிக்கப்பட்ட மற்றுமொரு பண்பு.
இப்படியாகக் கொங்கு நாட்டில் இளம் பிராயத்தைக் கழித்த பின்னர் தற்போது பணியின் நிமித்தம் பெங்களூரில் வாசம்.சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால் நான் பெஞ்சில் இருந்த சமயத்தில்,ஒரு சுபயோக சுபதினத்தில் வலைப்பதிவதை ஆரம்பித்தேன்.அன்றே தமிழ்மணத்தில் ஐக்கியமாகி விட்டேன். தமிழ்மணம் மூலம் எனக்கு கிடைத்த நட்புகள் ஏராளம்.
"எந்தரோ மகானு பாவுலு
அந்தரிகி நா வந்தனமு..."
மற்றவரை மனத்தால் கிஞ்சித்தும் பாதிக்காத,தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமளிக்காத, ஒரு இனிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கக் கூடியதாய் எனது பதிவுகள் இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் கவனமாய் இருக்கிறேன்.என் சக்திக்கு எட்டியவரை நல்ல படைப்புக்களை உங்களுக்கு இந்த நட்சத்திர வாரத்தில் தரவேண்டும் என நினைத்துள்ளேன்.
இந்த நட்சத்திர வாரத்தில் எழுதவிருக்கும் சில தலைப்புகள்.
1.'கல்யாண சமையல் சாதம்..."
2.சிறுதுளி பெருவெள்ளம்
3.என் பதின்மங்களின் பாடல்கள்
4.மந்திராலயம் போனோமே
5.ஆப்பரேஷன் "மொட்டைக் கடிதாசி"
6.பெங்களூரு - குறிப்புகள்,கோபங்கள்,கேள்விகள்
7."காணாமல் போனவர்கள்" ஸ்பெஷல்
என 7 கட்டுரைகளை இந்த நட்சத்திர வாரத்தில் இட எண்ணி உள்ளேன்.அத்துடன் அவ்வப்போது கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடியினையும் தரலாம் என்று எண்ணியிருக்கிறேன்.மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன்.
உங்கள் ஆதரவினை எதிர்பார்த்து,
சுதர்சன்.கோபால்
PS:- நேற்று தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடிய உலகளாவிய இணையத்திற்கும்,11 செப்டெம்பர் 2007ல் தனது முதல் மணநாள் நிறைவினைக் கொண்டாடவிருக்கும் சரவணன்(s/o பழனிச்சாமி) தம்பதியினருக்கும் எனது வாழ்த்துகள்.
33 Comments:
தலைப்பு எல்லாம் ரெடி பண்ணி வச்சுகிட்டு வர்றத பார்த்தா, ஆட்டாம் கலக்கலா இருக்கும் போல.. ம்ம் ஆகட்டும், ஆகட்டும்.. ஒரு பெரிய் 'ஓ'!
"ஆரம்பமே கலக்கலா இருக்கு..."
"ஆமா..கலக்கலா இருக்கு.."
ஒரு பெரிய 'ஓஓஓஓஓஓஓஓஓஓ' போட்டாச்சு.
வாழ்த்து(க்)கள்.
ஆமாம், சூரியாவின் ஒரிஜினல் பேர் சரவணனா? :-))))
நட்சத்திரம் மின்ன வாழ்த்துக்கள்...
Very good start.......
All the best! We are waiting for your excellent writings!
Thanks and regards
Krishnamoorthi
Singapore
தந்தனத்தோம் பாடும் நட்சத்திரத்துக்கு என் வந்தனம் ! வந்தனம் ! வந்தனம் !
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துவோமில்லா நாங்களும்...
ஹுக்க்க்க்கும்...
நாட்டுலயும் வீட்டுலயும் காட்டுலயும் மேட்டுலயும் கூடியிருக்கிற மக்களே....இந்த வாரம்...சுதர்சன கோபால் அவர்கள் நட்சத்திரமாம். வாழ்த்துவோம்..வாழ்த்துவோம்..வாழ்த்துவோம்
அண்ணே அவரு பட்டியல் போட்டிருக்காருன்னே
அடேய்! அவரு பட்டியலும் போடுவாரு...அட்டியலும் போடுவாரு....ஆனா யாருக்குங்குறதுதான் கேள்வி. போன வாரம் சுத்தியல் போட்டாரம் தெரியுமா!
ஐயோ அண்ணே விடுங்கண்ணே!
நான் எங்க விடுறது...அதான் அவனவன் அத்துக்கிட்டு போறீங்களே.....சரி....சுதர்சனம் நமக்கு வேண்டப்பட்டவரு...ஆகையால எல்லாரும் அவரு எழுதுறதப் படிச்சி...பாராட்டவோ திட்டவோ செய்யனும்னு கண்டிப்பாக் கேட்டுக்கிறேன்.
சுதர்சன் ஜீ,
நட்சத்திர வாழ்த்துக்கள்!
பட்டியல் கொஞ்சம் பலமா இருக்கு! பட்டைய கெளப்புங்க :)))
// போன வாரம் சுத்தியல் போட்டாரம் தெரியுமா! //
ஜீரா, அன்புத்தம்பி சுதர்சன் உடல் மற்றும் கண் வலிக்காக மருந்து சாப்பிடுவதையெல்லாம் இப்படி பப்ளிக்கா சொல்லலாமா?!
நட்சத்திர மின்மினிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சுதர்சனம்!
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வாரமாக இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது.
ரொம்ப அருமையான தொடக்கம். வாழ்த்துக்க
இவ்வார நட்சத்திரத்திற்கு என் வாழ்த்துகள். எனக்கும் சரயு நதி, லாலி ரோடு, மால்குடி, மெம்ஃபிஸ் ஹில்ஸ் இதெல்லாம் ரொம்ப புடிக்குங்க. கலக்குங்க.
முதல் "ஓ" போட்டு துவக்கி வைத்த
ராசா- டேங்ஸ்பா :-)
வாங்க,சிபி.ரொம்ப நாளைக்குப் பொறவு இந்தப் பக்கம் வந்தாப்பில தெரியுது.இனிமே அடிக்கடி வந்து போயிட்டு இருங்க.
ஆமாம் டீச்சர்.சூர்யாவோட சொந்தப் பேரு சரவணன் தான்."ஓ" போட்டதுக்கும்,வாழ்த்தியதுக்கும் நன்றிகள் பல.
வாழ்த்துக்களுக்கு நன்றி அருட்பெருங்கோ
க்ருஷ்,கோவி.கண்ணன்,குமரன் எண்ணம்,செந்தழல் ரவி
__/\__.வாழ்த்துக்கு நன்றிகள்.அடிக்கடி வந்து போங்கள்.
//அவரு பட்டியலும் போடுவாரு//
ஆமாம்...
//...அட்டியலும் போடுவாரு...ஆனா யாருக்குங்குறதுதான் கேள்வி.//
இது இன்னா மேட்டர்பா?
//போன வாரம் சுத்தியல் போட்டாரம் தெரியுமா!//
தெரியாதே??
//பாராட்டவோ திட்டவோ செய்யனும்னு கண்டிப்பாக் கேட்டுக்கிறேன்//
நன்றி..நன்றி...நன்றி...
பட்டைய கெளப்பீடுவோம் வாத்யாரே..
//ஜீரா, அன்புத்தம்பி சுதர்சன் உடல் மற்றும் கண் வலிக்காக மருந்து சாப்பிடுவதையெல்லாம் இப்படி பப்ளிக்கா சொல்லலாமா?! //
இது இன்னா மேட்டர்னே எனக்கு பிரியலையே???
வாங்க,வாங்க துபாய் ராசா.வாழ்த்தியதுக்கு நன்றி.
அட..ஜோ கூட வந்திருக்கார் பா.
//எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வாரமாக இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது.//
நன்றி..நன்றி..நன்றி
அனானி அண்ணாத்தே...
நன்றி..வாரம் முழுக்க வந்து போங்க.
வாங்க கைப்பு,வாங்க.
//எனக்கும் சரயு நதி, லாலி ரோடு, மால்குடி, மெம்ஃபிஸ் ஹில்ஸ் இதெல்லாம் ரொம்ப புடிக்குங்க.//
தோடா..நீங்களும் நம்மள மாதிரியா?
அடிக்கடி சகாக்களோட வந்து போயிட்டு இருங்க.
இந்த வார நட்சத்திரம் சுதர்சன் கோபாலுக்கு எனது வாழ்த்துக்கள்
சுதர்சன்,
நட்சத்திர வாரம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்!
அடடா..!
அந்த மாதிரி ஒரு அட்டகாசமான வரவு.
வரவே இப்படி என்றால் தொடர்வது...
ம்... தொடருங்கள். வாழ்த்துக்கள்.
வாங்கய்யா...வாங்க.... வித்தியாசமாத்தேன் ஆரம்பிச்சிருக்கீக... 'ஓ'மப்பொடி நிறைய தூவவும்.. :-D , அதுக்காக மெயின் டிஸ-ஐ மறந்துராதிக... நட்சத்திரப்பதிவச்சொன்னேம்பா...
சின்னக்குட்டி,சந்திரவதனா,ஸ்ருசல்,யாத்திரீகன் _/\_
வாழ்த்துகளுக்கு நன்றி...
//'ஓ'மப்பொடி நிறைய தூவவும்.. :-D //
தங்கள் சித்தம் என் பாக்கியம்.
//அதுக்காக மெயின் டிஸ-ஐ மறந்துராதிக.நட்சத்திரப்பதிவச்சொன்னேம்பா...//
மாட்டேன்..மாட்டேன்..மாட்டேன்...
-----மற்றவரை மனத்தால் கிஞ்சித்தும் பாதிக்காத,தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமளிக்காத, ஒரு இனிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கக் கூடியதாய் எனது பதிவுகள் இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் கவனமாய் இருக்கிறேன்.-----
:-) இதுவரை தங்கள் பதிவுகளைப் படித்தவன் என்றவரையில் 100% உண்மை
----அவ்வப்போது கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடியினையும் தரலாம் ---
இது என்னுடைய ஜீவாதாராமாச்சே... அள்ளிக் கொடுங்க; கொசுறு போடுங்க :-)
சுதர்சனம்,
உங்களுக்கு மொதல பெரிய ஓ..
சுதரசன்!
அமர்க்களமான ஆரம்பம். நட்சத்திரவாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
வணக்கம் சுதரு, என்னாங்க பதிவே போடமாட்டேங்கிறீங்கன்னு இங்க மேல பிராது குடுக்கலாம்ன்னு நெனச்சுட்டு இருக்கிற நேரத்துல நட்சத்திரம் ஆகிட்டீங்க. தூள் கிளப்புங்க
பா.பா.:
//இது என்னுடைய ஜீவாதாராமாச்சே... அள்ளிக் கொடுங்க; கொசுறு போடுங்க :-) //
போட்டுட்டே இருக்கேனே பார்க்கலையா??
ராம்,மலைநாடான்,
வாழ்த்துகளுக்கு நன்றி...
என்னாங்க இளா.
பிராது கொடுக்கறேன்னு சொல்லி பயப்படுத்தறீங்களே???
அடிக்கடி வந்து போயிட்டு இருங்க.
Post a Comment