14 திசம்பர் 1983 - இந்திய ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றைப் பொறுத்தமட்டிலும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.
தினம் தினம் சந்தையில் அறிமுகமாகும் அல்ட்ரா மாடர்ன் கார்களை இன்றைய இந்திய இளைஞர்கள் அலுப்புடன் ஏற்றுக் கொள்கின்றனர்.இன்னமும் புதிய மாடல்கள் சீரான கால இடைவெளியில் அறிமுகப்படுத்தப் படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்தங்களது வண்டியில் எந்த ஒரு சிறு இடர்பாடோ அல்லது பழுதோ சரியான நேரத்தில் சிறப்பான முறையில் விற்பனைக்குப் பிந்திய சர்வீஸால் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் பெருங்கவனம் செலுத்துகின்றனர்.பாவம்,23 வருடங்கட்கு முன்னால் இந்தியாவில் வெறும் இரு கார் மாடல்கள் மட்டுமே இருந்தது என்பதனையோ,பிரீமியர் பத்மினி ரக வண்டியை வாங்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பதனையோ அல்லது நுகர்வோர்கள் கார் தேவைக்காகத் தங்களை நம்பி இருக்கிறார்கள் என்னும் நினைப்பில் ஆட்டம் போட்ட டீலர்கள் பற்றியோ அறியாதவர்கள்.
இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் நான்கு சக்கர சொகுசு வாகனச் சந்தையில் அப்போது ஒரு இக்கட்டான சூழல் நிலவி வந்தது என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.நடுவண் அரசின் சோஷலிசத்தினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளே இதற்கு முழு முக்கிய காரணம்.சிகப்புநாடா ராஜ்ஜியத்தில், ஆடம்பரப் பொருளாகக் கருதப்பட்ட காரானது பட்டியலில் கடைசி இடத்தினைப் பெற்றது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லை. பற்றாக்குறைகள் நிறைந்த,திறம் குறைந்த பொதுப் போக்குவரத்து வசதியினையே, மக்கள் பெரிதும் உபயோகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்த அரசு வேறு என்ன செய்யும்?உலகளாவிய கார் உற்பத்தித்துறையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.இந்திய நடுத்தர வர்க்கத்தினரில் சிலர் காரில் செல்வது பற்றிய கனவுகளில், எப்போதும் போல அமிழ்ந்திருந்தனர்.
அப்புறம் என்ன ஆச்சு??
ஒரு ஏர்-க்ராஷில் சஞ்சய்காந்தி இறந்தபின்னர் இந்த நிலைமை மாறத்தொடங்கியது.1970-ஆம் ஆண்டின் போது சஞ்சய்காந்திக்கும் மற்றும் வேறு இரண்டு பேருக்கும் கார்கள் உற்பத்தி செய்வதற்கான உரிமம் அரசால் வழங்கப்பட்டது.அந்த உரிமமானது செயல்முறைப் படுத்தப்படுவது சிவப்பு நாடா சிக்கல்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.அவசரநிலைப் பிரகடனம் மற்றும் அதன் பின்னால் வந்த ஜனதா அரசு என பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையேயும், சஞ்சய் காந்தியின் மாருதி லிமிட்டெட் நிறுவனமானது கார்களை உற்பத்தி செய்ய முயற்சி செய்து வந்தது.மற்ற இருவரும் அந்த முயற்சியில் கூட ஈடுபடவில்லை.1977ல் மாருதி லிமிட்டெட் நிறுவனம் லிக்குவிடேஷன் ஆனது.1980ல் சஞ்சயின் மறைவுக்குப் பின்னால் சஞ்சயின் கனவினை நனவாக்குவதில் தீவிரமாக ஈடுபடலானார் இந்திரா காந்தி.
பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் அந்த நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தும் அரசின் வசம் வந்தது.இப்படியாக 100சதவிகித அரசாங்கப் பங்குகளுடன் மாருதி உத்யோக் லிமிட்டெட்(MUL) தொடங்கப்பட்டது.வாகன உருவாக்கத்தில் வெளிநாட்டுத் தொழில்நுட்பமும்,முதலீட்டு ரீதியாக 40 சதவிகித ஈக்வெட்டிக்கு ஒரு வெளிநாட்டுப் பங்குதாரரும் MUL-க்குத் தேவைப்பட்டனர்.இவை எல்லாம் அப்போது இருந்த சோஷலிசம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு முரணானது என்பதினை நினைவில் கொள்க.
ஒருபுறம், இந்திய நுகர்வோரின் கார் சம்பந்தமான தேவைகளைக் கண்டறிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மறுபுறம் தொழில் நுட்பம் வழங்கக்கூடிய ஒரு பார்ட்னருக்கான தேடுதல் உலக அளவில் நடந்தது.இறுதியாக ஜப்பானைச் சார்ந்த சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் தொழில்நுட்ப உரிமம் சம்பந்தமாக ஒரு ஒப்பந்தமும்,இருவரும் இணைந்து கூட்டாய் ஒரு நிறுவனம் அமைப்பது சார்பாக ஒரு ஒப்பந்தமும் கையொப்பமிடப்பட்டது.14-திசம்பர் 1983ல், அப்போது இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி அவர்களால் முதல் மாருதி800 கார் வெளியிடப்பட்டது.அதற்குப் பிறகு பல நிகழ்ந்தது எல்லாம் வரலாறு மறக்காது.
இதைத்தானே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று இந்திய நடுத்தரமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர்.கார்களுக்கான உள்ளூர் தேவை எல்லா எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கியது.MUL,களத்தில் இறங்கும் போது ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கார்கள் என்ற இலக்குடன் இறங்கியது.அதற்கு முந்தைய 10 வருடங்களில் வெறும் 35000 - 40000 என்று தேக்க நிலையில் இருந்த மொத்தக் கார் மார்க்கெட்டை வைத்துப் பார்க்கும் போது இந்த இலக்கு சாத்தியமே இல்லை என்று பல "அறிஞர் பெருமக்கள்" திருவாய் மலர்ந்தருளினார்கள்.ஆனால் அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் ஆச்சரியத்தால் வாயைப் பிளக்கும்படி அமைந்தது அந்தக் காரின் வெற்றி.மாருதி800 வேண்டி முன்பதிவு செய்து நீண்ட காலம் காத்திருத்தல்,காரின் மீதான ப்ரீமியம் போன்றவை பல காலம் தொடர்ந்தது.காலங்கள் உருண்டோடின.1984ல் ஆம்னி,1985ல் ஜிப்ஸி,1993ல் ஜென் என்று புதிய மாடல்கள் சீரான காலகட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டன.
பெருகும் நடுத்தரவர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவில் வெளியான முதல் கார் மாருதி800 எனலாம்.இதுதான் அதனுடைய வெற்றிக்கு மூலகாரணம்.அதிக நம்பகத்தன்மை,வண்டியை இயக்குவதில் இருக்கும் எளிமை மற்றும் பெண்மை கலந்த வெளிப்புறத் தோற்றம் போன்ற குணாதிசியங்கள் பெண்களையும் மாருதியின் பால் ஈர்த்தது.தரத்தில் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காத ஜப்பானியத் தொழில்நுட்பம்,விற்பனைக்குப் பிந்திய சிறந்த சர்வீஸ் என்ற பண்புகள் மேல்தட்டு வாடிக்கையாளர்களையும் கவர்ந்தது.1994க்குப் பின்னால் அசுரவேகத்தில் அதிகரித்த மாருதியின் வளர்ச்சியைக் கண்ட,உலகளாவிய கார் உற்பத்தியாளர்கள் இந்தியா என்ற மாபெரும் சந்தையின் சக்தியினை அப்போது தான் உணர்ந்தனர்.அதற்குப் பிறகு நடந்ததனை நாடு அறியும்.
சொந்தமாக ஒரு கார் என்னும் பலரது கனவினை நனவாக்கிய மாருதிக்கு ஒரு பெரிய "ஓ..."
தகவல் உபயம்:கூகிளான்டவர்,MUL இணையத் தளம் மற்றும் பொழுது போகாத பூங்காவனம்
10 August 2006
"மாருதி"யின் கதை
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
கார்....பெரிய வீடுகளில் மட்டும் இருக்கும் சமாச்சாரம். சினிமாவில் பார்க்கும் சமாச்சாரம். அம்பாசிடர்தான் ரொம்பவும் பிரபலம். மாருதி வந்து அதற்குப் பிறகு நிறைய கார்கள் வந்த பின்னும் மாருதி இன்னும் சாலைகளில் இருக்கிறதென்றால் அது பிடித்திருக்கும் இடத்தை நாம் மறுக்க முடியாது. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ போட்டாச்சு.
That was an informative one.Good job done...
இன்றைக்கும் புதிய மாடல் கார் வைத்திருக்கும் பலரும் தாங்கள் முதலில் வாங்கியக் காராக குறிப்பிடுவது மாருதியைத்தான்..
இன்று புதிதாகக் கார் வாங்கும் நடுத்தரவர்க்கத்துக்கு முதலில் தோன்றுவதும் மாருதி மாடல்கள் எனும்போது அது இன்றும் சந்தையில் முன்னணியிலேயே இருப்பது தெரிகிறது!!!
ஓ!!!!!!!
நல்ல ஒரு வரலாறு படிச்ச திருப்திங்க. அருமையிலும் அருமை. பிள்ஷர் கார்ன்னு வாய் பிளந்து பார்த்துகிட்டு இருந்த மக்களே இப்போ சொகுசு கார்ல போகிற அளவுக்கு வந்துட்டாங்கன்னா அதுக்கு மாருதியும் ஒரு காரணகர்த்தாவா இருந்து இருக்கு.
நல்ல பதிவு
மாருதிக்கு "ஓ" போட்ட ஜீரா,அனானி,அருள்,இளா,சந்திரவதனா...
உங்கள் அனைவரது ஆதரவுக்கு நன்றி.
Post a Comment