"சாப்பாடு எல்லாம் நல்லாத்தான் இருந்தது.ஆனா கேரட் பீன்ஸ் பொறியலுக்கு உப்பு பத்தலை.கேரட் கூட அரைவேக்காடாத்தான் இருந்தது.பாயாசம் ஊத்த ஒரு பிளாஸ்டிக் கப்பு வச்சாங்க பாரு.பாயாச சூட்டில கப்பு ஓட்டை ஆகி இலை எல்லாம் பாயாசம் ஓடி.....என்னதான் சொல்லு.போன வாரம் போயிருந்த நம்ம மணியண்ணன் பொண்ணு கல்யாணம் மாதிரி வராது"
"ஏம்பா...டிஃபன் ஏதும் இல்லையா? ஏன்னா,நான் சனிக்கிழமை ஒரு பொழுது தான் சாப்பாடு சாப்பிடுவேன்.இதனாலதான் சனிக்கிழமைகள்ள வர்ர விசேஷங்களுக்கு நான் போரதே கிடையாது."
"என்னங்க.போன பந்தியில மக்கன் பேடா போட்டீங்க.இந்த பந்திக்கு என்னடான்னா மைசூர்பா வைக்கறீங்க?என்னமோ போங்க"
கல்யாண வீடுகளில் இது போன்ற வசனங்களைக் கேட்காத காதுகளே இல்லை என்று உறுதியாகக் கூறிவிடலாம்.இரு குடும்பத்தார் இணையும் ஒரு நிகழ்வாய்த் திருமணங்கள் இருக்கும் இந்தியாவில்,திருமணத்தை முன்னிட்டு நடக்கும் அமளி துமளிகளுக்கு அளவே இல்லை.அதுவும் சாப்பாட்டு விஷயத்தில் அவ்வளவு எளிதாய்த் திருப்தி அடையாத நம்ம ஆளுங்களைத் திருமணத்தில் சமாளிப்பது ஒரு ஹெர்குலியன் டாஸ்க் தான்.கல்யாண முகூர்த்தம் குறிக்கப்பட்டு,நிகழுமிடம் உறுதிப்படுத்தப் பட்டபின்னால் அனைவரும் செய்யும் ஒரு முக்கிய விஷயம் கல்யாணசமையலுக்கு மெனு போடுவதுதான்.
இன்னும் சொல்லப்போனால் பெண்/ஆண் பார்க்கும் படலத்திலேயே மெனு போடுதல் போன்ற் உணவு பற்றிய விவாதங்கள் ஆரம்பித்துவிடுகிறது.பெண்/ஆண் பார்க்கும் படலம் என்றால் எனது நினைவுக்கு வருவது by default மெனுவான சொஜ்ஜியும்,பஜ்ஜியும் தான்(உபயம் தமிழ் நகைச்சுவைத் துணுக்குகள்).சில தமிழ்த் திரைப்படங்களில் சொல்வது போல் சம்பந்தம் முடிக்காமல் அந்த வீட்டில் கையை நனைக்காத மனிதர் இன்றும் உளரோ என்று அவ்வப்போது ஆச்சரியப்பட்டதும் உண்டு.என் அம்மாவைப் பெண் பார்க்கச்சென்ற போது சாப்பிட்ட காப்பிக்கு "நல்லா இருக்கு" என்று சொல்லப்போய் அதனைத் தப்பாய் எடுத்துக்கொண்டு அம்மாவைத் தனக்கு மணம் முடித்ததாய் இன்னமும் அப்பா கூறிக்கொண்டே இருக்கிறார்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்தக் காப்பியானது அவரது நாக்கின் சுவை மொட்டுகளை விட்டு அகலாது இருக்கிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்...
கல்யாண சமையல் குழுவினைத் தேர்ந்தெடுத்த பின்,கல்யாண ஸ்வீட்டிற்கு என்ன போடலாம் என்பதில் ஆரம்பிக்கும் மெனு பற்றிய விவாதங்கள்.இரண்டு வீட்டாருக்கும் பொதுவான உறவினரோ,நண்பரோ தான் இதில் பெரும்பாலும் நாட்டாமை செய்து வைப்பார்.அப்படி போடப்படும் மெனுவானது கால தேச வர்த்தமானங்களுக்கு உகந்ததாய் இருத்தல் வேண்டும்.கோடைகாலமென்றால் ஐஸ்கிரீம்,குளிர்பான வகையறாக்களும்,குளிர்காலமென்றால் சூடான பாதாம்பால் வகையறாக்களும் இருக்கும்.இப்படிப் பார்த்துப் பார்த்து முடிவு செய்யப்பட்ட மெனுவினைக் கெடுக்காதது சமையல் குழுவின் கையில் இருந்தாலும்,அது உருவாவதில் இருந்து நுகர்வோரைச் சென்றடைவது வரை இன்னும் சிலருக்கும் பங்கு இருக்கிறது.
யாரைப் பற்றி பேசுகிறேன் என்று புரியவில்லையா??
ஸ்டோர் ரூமில் இருக்கும் மூலப் பொருட்களின் இருப்பைக் கண்காணிப்பவர்(inventory maintenance),சமைக்கப்பட்ட பதார்த்தங்களை விருந்தினருக்குப் பரிமாறுதலை மேற்பார்வையிடுபவர்(client co-ordinator),தவிர இவர்கள் இருவரும் தங்களது டிபார்ட்மென்டில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனே அணுகும் இவர்களது சமையல் துறையின் பொறுப்பாளர்(project lead) என்ற அந்த மூவர் கூட்டணியைத்தான் குறிப்பிட்டேன்.
ஸ்டோர் ரூமில் இருக்கும் முந்திரி,திராட்சை முதற்கொண்டு எது வெளியே போனாலும் கண்கொத்திப் பாம்பாய் கணக்கு பார்ப்பது தான் இந்த ஸ்டோர்ரூம் பாதுகாவலரின் முக்கிய வேலை.எங்கள் வீட்டுத் திருமணங்களில் ஒன்று விட்ட மிலிட்டரி சித்தப்பா தான் பெரும்பாலும் ஸ்டோர் ரூம் பாதுகாவலராய் இருப்பார்.எதிரிகள் ஊடுறுவா வண்ணம் எல்லையைக் காத்தவருக்கு இதெல்லாம் வெறும் ஜூஜூபி என்பார்.ஆனால் ஸ்டோர் ரூம் சாவி கைக்கு வந்த உடனே அதைப்பூட்டிக் கொண்டு, செவன்ஸ் விளையாடுமிடம் தேடி இவரது கால்கள் சென்றுவிடும்.ஏழரை மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய பந்திக்கான அப்பளக் கட்டைத் தேடி, ஸ்டோர் ரூமுக்குப் போன சமையல்கார சிதம்பரம் கத்திக் கொண்டிருப்பார்.மிலிட்டரி சித்தப்பாவோ கழுகுக்கு மூக்கு வியர்ப்பது போல ட்ரிங்ஸ் ப்ரெக்கில் வந்து நமது தேவையைத் தீர்த்து வைத்து விட்டி மீண்டும் களம் திரும்புவார்.இது போன்ற சில இடர்பாடுகள் இவரால் இருப்பினும், எங்கள் கல்யாணங்களில் by default ஸ்டோர் ரூம் பாதுகாவலர் மிலிட்டரி சித்தப்பாதான்.
அடுத்து முக்கியமானவர் பந்தி பரிமாறுவதை மேற்பார்வையிடும் எங்களது டேவிட் மாஸ்டர்.இவரது வேலை வாங்கும் திறனைப்பார்த்து அனைவரும் ஹை-ஸ்கூல் பி.டி. மாஸ்டரா இருக்கீங்களா இல்ல சர்க்கஸ்ல ரிங் மாஸ்டரா இருக்கீங்களா என்று ஆச்சரியத்துடன் கேட்பதாய்க் கூறிக் கொண்டிருக்கிறார்.ஆனால் இவரைப் பார்த்தால் விளையாட்டுவாத்தியார் என்று யாருக்குமே எண்ணத் தோணாது.இவரிடம் படித்த/படித்துக் கொண்டிருக்கும் மாணவர் யாராவது வந்துவிட்டால் போது, கொஞ்சம் ஸ்பெஷல் கவனிப்பு கட்டாயம் இருக்கும்.
திருமணம் செய்து கொள்ளாத எங்களது மாமா ஒருவர் தான் இவர்களுக்கெல்லாம் தலை.ஸ்வீட் தீர்ந்து போனால கடையில் வாங்கி வருவதா, இல்லை சுடச்சுடப் போடுவதா என்பதில் ஆரம்பித்துப் பல விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை பெற்றவர்.இரவு உணவுக்கு விழுந்த இலைகளை வைத்தே காலை உணவுக்கு வரும் கூட்டத்தைத் துல்லியமாய்க் கணக்கிடுவதில் வல்லவர்.மாப்பிள்ளையின் நட்பு வட்டாரங்களுக்கு வாட்டர் ஸ்போர்ட்ஸின் போது தேவைப்படும் சைட் டிஷ்களைப் பார்சலாய் அனுப்புவது,கல்யாண சம்பிரதாயங்களை முடித்து உணவு உண்ண வரும் மணமக்களுக்கு ஸ்வீட்,சிறப்பு உணவு வகைகளை பத்திரப்படுத்தி வைப்பது,தேவைப்படும் நேரங்களில் சாம்பார் வாளி தூக்குவது,மீதியாகப் போன உணவு வகைகளைப் பக்கத்திலிருக்கும் சேரிக்கு அனுப்பி வைப்பது என்று பார்த்துப் பார்த்துப் பண்ணும் இவர் ஒரு பெரிய ஆல் ரவுண்டர்.
இப்படிக் கல்யாண வீட்டில் பரிமாறப்படும் ஒவ்வொரு கவள சோற்றுக்குப் பின்னாலும்,சொல்லப்படாத ஆயிரம் பேரின் உழைப்பு இருக்கிறது.திருமண வீடுகளில் மற்ற அனைவரும் திருப்தியாக சாப்பிடும் படி பார்த்துக்க் கொள்ளும் இவர்களது அன்றைய உணவு பெரும்பாலும் உப்புமாவாய்த் தான் இருக்கும்.கேட்டால்,"மத்தவங்க சந்தோஷமாச் சாப்பிட்டுப் போறதப் பார்த்தாலே எங்களுக்கு வயறு நெரஞ்சிடும்" என்பார்கள்.இந்த மூன்று பேரும் இல்லாத எங்கள் வீட்டுத் திருமணத்தை, நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.
உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் இருந்த அந்தப் மாமாவைப் பார்க்க சமீபத்தில் சென்றிருந்தேன்.தனது ஆரஞ்சு ஜூசை என்னோடு பகிர்ந்து சாப்பிட்ட அவரது முகம் வாட்டமாய் இருந்தது.
"என்ன கண்ணு.இப்படி மாமா ஆசுபத்திரியில வந்து அடிக்கடி படுத்துக்கிறார்னு வெசனமா இருக்கா??உன்னோட கல்யாணத்துக்கு சமையல் இன்சார்ஜ் வேலை பார்க்காம நான் வர மாட்டேன்னு எமன் கிட்ட சொல்லியனுப்பீட்டேன்.அதப் பத்தி நீ ஒண்ணும் கவலைப்படாதே"
என்பதைக் கேட்டதும் என் குரல் லேசாய் உடைந்து போனது.
34 Comments:
///
"என்ன கண்ணு.இப்படி மாமா ஆசுபத்திரியில வந்து அடிக்கடி படுத்துக்கிறார்னு வெசனமா இருக்கா??உன்னோட கல்யாணத்துக்கு சமையல் இன்சார்ஜ் வேலை பார்க்காம நான் வர மாட்டேன்னு எமன் கிட்ட சொல்லியனுப்பீட்டேன்.அதப் பத்தி நீ ஒண்ணும் கவலைப்படாதே"
என்பதைக் கேட்டதும் என் குரல் லேசாய் உடைந்து போனது.
///
உறவுகள் போட்டிக்கு அனுப்பலாமே
அதெல்லாம் மாமா கல்யாணத்துக்கு மட்டுமில்லை, (பிறக்கப்போகும்) குழந்தையின் ஆயுஷ்ஹோமத்துக்கும்
அவர்தான் இன்சார்ஜ்ன்னு 'சொல்லவேண்டியவர்'கிட்டே சொல்லி அனுப்பிட்டேன். கவலைப்படாதீங்க.
சூப்பரா இருக்கு பதிவு.
உண்மைக்கும் கற்பனைக்கும் லேசான இடைவெளிதான். அது தெரியாமல் கதையைத் தைப்பவந்தான் காதாசிரியன். கை தேர்ந்திருக்கிறீர்கள். என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பு.
Sudharsan,
I have experienced everything you have mentioned in "Kalayana Samayal Sadham". It really reminds me the people who have involved in my marriage preparations.
keep it up.
Cheers,
Vadi.
கல்யாண வீட்டுல செருப்பு திருடறதுக்குன்னே போறவங்களை கலாய்க்காம விட்டுட்டீங்களே ?
ஆரம்ப பதிவே அருமை.அனுபவங்கள்
தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். பதிவுக்குப் பொருத்தமாப் படங்கள். எங்கய்யா பிடிக்கிறீங்க?
சுதர்சன்...
நீங்கள் சொல்லும் கதாபாத்திரங்கள் எல்லோர் குடும்பத்திலும் இருப்பார்கள்..
எங்கள் குடும்பத்திலும் அப்படி சிலர் உண்டு...
எதிர்ப்பார்ப்பில்லாமலும், கௌரவம் பார்க்காமலும் எல்லா வேலைகளையும் சரியான சமயத்தில் நம்மோடு சேர்ந்து அவர்கள் முடித்து வைப்பதை என் அக்கா, அண்ணன் திருமணத்தில் பார்த்திருக்கிறேன்...
அதனை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்...
ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான் போடனும்னு எதாவது சட்டமா என்ன??
இன்னும் பதியுங்கப்பா:))
நல்லா எழுதி இருக்கீங்க. பழைய நினைவுகள் கிளறிவிட்ட பதிவு.
கதைகளிலும்; திரைப்படங்களிலும் படித்துக் பார்த்த விடயம்!
கல்யாண சமையல் சாதத்தில்!இவ்வளவு கல்யாண (விவகாரம்) குணங்கள் உண்டா? நான் ஈழத்தவன் நம்மபக்கம் இந்தளவுக்கு இல்லைத்தான்.
எழுத்து சுவையாக இருக்கிறது.
யோகன் பாரிஸ்
கடைசி வரி வந்ததும்.. மொத்த கட்டுரையிலிருந்த குதூகலம் போய்.. சட்டுனு என்னமோ போல இருந்துச்சு சுதர்சன்...
க்ருஷ்,தொடர்ந்து தரும் ஊக்கங்களுக்கு நன்றி.
குமரன் எண்ணம்:
//உறவுகள் போட்டிக்கு அனுப்பலாமே//
இதுவரை அப்படி யோசிக்கவில்லை.பார்ப்போம்.பின்னூட்டயதிற்கு நன்றி.
டீச்சரக்கா,
நீங்க சொன்னதுக்குப் பொறவு மறுபேச்சு இருக்குமா என்ன??
ஜீரா,
பாராட்டுகளுக்கும் தொடர்ந்து தரும் ஊக்கங்களுக்கும் நன்றி சொல்லி உங்களை அன்னியப்படுத்த விரும்பவில்லை.
வடிவேல்:
குமார்,சரவணன் ஞாபகம் எல்லாம் வந்திடுச்சா என்ன?
செந்தழல் ரவி:
செருப்பென்ன பிரமாதம்.இப்ப சில கல்யாண வீடுகள்ள...சரி சரி..அத அடுத்த கதையில பார்த்திக்கிடுவோம்.
துபாய் ராசா:
சமீபத்தில உங்க கல்யாணத்தில நடந்த கலாட்டக்கள் எல்லாம் நினைவுக்கு வந்திடுச்சா என்ன?
ஜீரா:
//பதிவுக்குப் பொருத்தமாப் படங்கள். எங்கய்யா பிடிக்கிறீங்க?//
ஹூம்.வலை போட்டுப் புடிக்கறோம்.
அருள்:
//எதிர்ப்பார்ப்பில்லாமலும், கௌரவம் பார்க்காமலும் எல்லா வேலைகளையும் சரியான சமயத்தில் நம்மோடு சேர்ந்து அவர்கள் முடித்து வைப்பதை என் அக்கா, அண்ணன் திருமணத்தில் பார்த்திருக்கிறேன்.//
திருமணம் என்பது ஊர் கூடி இழுக்கும்
தேர் போன்றது.இந்த மாதிரி எதிர்பார்ப்பில்லாத,கலப்பிடமில்லாத மனங்கள் இருக்கிறதுனால தான் இன்னமும் அப்பப்போ மழை பெய்யுது.
//ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான் போடனும்னு எதாவது சட்டமா என்ன??
இன்னும் பதியுங்கப்பா:))//
அது தான் கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி தர்ரோம்ல.
பத்மா:
முதல்முறையா வந்திருக்கீங்க.அதுவும் கல்யாண சாப்பாட்டைச் சாப்பிட :D.
அடிக்கடி வந்து போங்க.
யோகன் பாரிஸ்:
மொத தபா ஊட்டுப்பக்கம் வந்த யோஹனுக்கு ஒரு "ஓ".
கருத்துகளுக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி யோஹன்.
யாத்திரீகன்:
//கடைசி வரி வந்ததும்.. மொத்த கட்டுரையிலிருந்த குதூகலம் போய்.. சட்டுனு என்னமோ போல இருந்துச்சு சுதர்சன்//
ஹூம்.தம்பிக்கு வூட்டு ஞாபகம் வந்திடுச்சு போல.அது சரி எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறீரு???
படம் தான் சூப்பர்.. பல கல்யாணங்களை நினைவுப் படுத்திட்டீங்க.. நட்சத்திரத்துக்கும் வாழ்த்துக்கள் :)
ஒரு திருப்தியான கல்யாண சாப்பாடு சாப்பிட்ட உணர்வு, நல்ல பதிவு,
//அவர்தான் இன்சார்ஜ்ன்னு 'சொல்லவேண்டியவர்'கிட்டே சொல்லி அனுப்பிட்டேன். கவலைப்படாதீங்க.//
துளசி அக்காகூட சேர்ந்து நானும் சொல்லி அனுப்பிட்டேன், நீங்க கவலைப் பட வேண்டாம்,
அன்புடன்...
சரவணன்.
Sudharshan,
Wonderfully written piece ! I am really touched !
தம்பினு சொல்லிப்புட்டீக.. அப்புறமென்ன கல்யாண சாப்பாடு மொதல்ல கேக்குறீக.. , மொதல்ல எங்களுக்கு நீங்க போடுங்கண்ணே..!!! ;-)
சுதர், ஆரம்பம் ஏதோ ஒரு கணினி வேலை மாதிரி ஆரம்பிச்சு //
அதப் பத்தி நீ ஒண்ணும் கவலைப்படாதே//
இந்த வரிகளை படிச்சு முடிக்கும் போது மனசுக்குள்ல எதோ ஒரு வலி வர மாதிரி செய்ஞ்சுட்டீங்க.
இது கதையோ கற்பனையோ அருமையிலும் அருமை
அப்பாட ... உஸ்ஸ்ஸ்ஸ் ... உங்க பதிவை படிச்சதும் ஒரு கல்யாண வீட்டுக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்குது.
கல்யாண திருவிழா நிச்சயதார்த்தம் போதே ஆரம்பிச்சிடுது. அதுல பந்தி போடுறது என்பது அந்த குடும்பத்தின் கௌரவத்தை கூறிப்பது. யாரும் கல்யாண சாப்பாடு சுமார்னு கூட சொல்லக்கூடாதுனு எதிர் பார்ப்போம்.
-- ஸ்ரீதர்
கல்யாண சமையல் சாதம்...பிரமாதம்.
பொன்ஸ்:
//பல கல்யாணங்களை நினைவுப் படுத்திட்டீங்க.//
ஓ...அப்படியா???
உங்கள் நண்பன் said...
//ஒரு திருப்தியான கல்யாண சாப்பாடு சாப்பிட்ட உணர்வு//
மொய்ப்பணம் வச்சிட்டீங்க தானே?
//துளசி அக்காகூட சேர்ந்து நானும் சொல்லி அனுப்பிட்டேன், நீங்க கவலைப்பட வேண்டாம்//
நன்றி. நன்றி.நன்றி.
எ.அ.பாலா:
என்ன வேலைப் பளு அதிகமோ??
உங்களைக் காணவில்லைன்னு பிராது கொடுக்கலாம்னு எண்ணியிருந்தேன்.
பாராட்டுக்களுக்கு நன்றி.
யாத்திரீகன் அண்ணா:
//தம்பினு சொல்லிப்புட்டீக.. அப்புறமென்ன கல்யாண சாப்பாடு மொதல்ல கேக்குறீக..,மொதல்ல எங்களுக்கு நீங்க
போடுங்கண்ணே..!!! ;-)//
அது சரி....
இளா:
//இது கதையோ கற்பனையோ.அருமையிலும் அருமை//
தொடர்ந்து தரும் ஊக்கங்களுக்கு நன்றி.
ஸ்ரீதர்:
//அப்பாட ... உஸ்ஸ்ஸ்ஸ் ... உங்க பதிவை படிச்சதும் ஒரு கல்யாண வீட்டுக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்குது.//
மொய்ப்பணம் வச்சிட்டீங்க தானே?
//அதுல பந்தி போடுறது என்பது அந்த குடும்பத்தின் கௌரவத்தை கூறிப்பது. யாரும் கல்யாண சாப்பாடு சுமார்னு கூட சொல்லக்கூடாதுனு எதிர் பார்ப்போம்.//
உண்மையோ உண்மை.
மணியன்:
//கல்யாண சமையல் சாதம்...பிரமாதம்.//
கொஞ்சம் தாமதா வந்தீங்களே,பந்தியில எல்லாம் கரிக்டா கவனிச்சாங்களா??
ennathan sonnalum namakku antha samayathula ippadi oru uravu thevaithaane.marakkamudiyatha oru nabar.
intha "mama" maadhiri oruvar illaiendral kalyana samayal saadam rusikkadhu.
Post a Comment