09 August 2006

எனது முன் பதின்மங்களில் சில பாடல்கள்

நினைத்துப் பார்த்தல் என்பது எப்போதுமே மனிதனுக்கு அலாதியான விஷயம்.அதெல்லாம் ஒரு காலம் என என்றைக்கோ நடந்தவற்றை ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் அசைபோடுகிறது.அசை போட்டு அசை போட்டு மனம் ஆனந்தப்படுகிறது அல்லது அல்லல்படுகிறது.

--"அது ஒரு நிலாக் காலம்" நாவலின் ஆரம்பக் குறிப்பிலிருந்து

பதின்ம வயது...ஆஹா... முகத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க நினைக்கும் பருக்களுக்குப் பின்னால் தான் எத்தனை கனவுகள்,ஆசைகள். வாழ்க்கையில் ரீவைண்ட் என்னும் பொத்தான் இருக்காதா என்று ஏங்காத நாட்கள் இல்லை.

காதல்,நட்பு,நம்பிக்கை துரோகம்,ஏமாற்றம்,துக்கம்,அதீத சந்தோஷம்,வெற்றி,தோல்வி என்று கலைடாஸ்கோப்புக் காட்சிகளாய் விரிகிறது என் பதின்ம நினைவுகள்.அந்த ஒவ்வொரு காட்சியினையும் அப்போது வெளி வந்த பாடல் எப்போதும் நினைவூட்டி வருகிறது. "அந்தக் காலத்துப் பாட்டு மாதிரி வருமா?இப்பவும் வருதே பாட்டுங்கற பேர்ல..." என்று அங்கலாய்க்கும் பெரிசுகளிடம் கேட்டுப்பாருங்கள்.அவர்கள் குறிப்பிடும் எல்லாப் பாடல்களும் அவர்களது பதின்மத்தில் வெளிவந்த திரைப்பாடல்களாகத் தான் இருக்கும்.அப்படி எனது முன் பதின்ம வயதில் ரசித்த சில பாடல்களை இங்கே பட்டியல் இட்டுள்ளேன்.

பூவுக்கென்ன பூட்டு -> பம்பாய்:
ஏ.ஆர்.ரகுமானின் இசை,வைரமுத்துவின் வரிகள்,மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான "பம்பாய்"யின் பாடல்கள் 1995 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சார்ட் பஸ்டராய் இருந்தன.மணீஷாவுக்கு குழந்தை பிறப்பதில் ஆரம்பித்து,அந்தக் குழந்தைகள் பெரிதாவதைக் காட்ட இந்தப் பாடல் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும்.படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் இந்தப் பாடலினை நோயல்,அனுபமா மற்றும் பல்லவி பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்கள்.பாடலின் இடையிடையே வரும் புல்லாங்குழலின் interlude அற்புதமாயிருக்கும்.(நவீன்???) முதன்முதலில் தம் அடித்துக் கொண்டே பார்த்த படம் இது,என்பதால் கொஞ்சம் தனி கவனிப்பு இதற்கு.

"வாழத்தானே வாழ்க்கை...வீழ்வதற்கு இல்லை.
ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு"

காதலிக்கும் பெண்ணின் கைகள்->காதலன்:
காதலன் படத்தில் வந்த அத்துனை பாடல்களும் நன்றாக இருக்கும்.இருந்த போதும் உதித் நாராயணனின் மழலைக் குரலுக்காகவே கேசட்டை ரீவைண்ட செய்து கேட்ட நாட்கள் ஏராளம்.இந்தப் பாடலில் இருந்து தான் உதித்ஜீ தனது தமிள்த் தொன்டினைத் துவங்கினார்.அவருக்கு மட்டுமல்ல பல்லவி பாலசுப்ரமணியத்திற்கும் இது தான் முதல் பாடல்.ஷங்கரின் அட்டகாசமான பாடல் படமாக்கமும்,ராஜூ சுந்தரத்தின் நடன அமைப்பும் பார்ப்பவரை அப்படியே கட்டிப் போட்டுவிடும்.S.P.பாலாவின் நடனமும் தான்.பாடலில் ஒரு குறிப்பிட்ட ஃப்ரேமில் ஷங்கர்,ராஜூசுந்தரம் மற்றும் ஷங்கரின் அசிஸ்டென்ட் மாதேஷ் தோன்றுவார்கள்.தொலைந்து போன ஹூக்கைத் தேடுவதில் ஆரம்பிக்கும் இப்பாடலில் மனம் தொலைந்து போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அப்புறம் எனது முதல் காதல்...காக்கர்லா மகளின் மீது.

"குண்டுமல்லி ரெண்டு ரூபாய்.
உந்தன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தாலே லட்ச ரூபாய்"

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ -> சூரிய வம்சம்:
"லா லா லா லா..." என்று ஆரம்பிக்கும்போதே உணர்ந்து கொள்ளலாம் இந்தப் பாடல் யாரல் இசையமைக்கப்பட்டது என்று.எளிமையே அழகு என்னும் எனது சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் மற்றுமொரு விஷயம் இந்தப் பாடல்.விக்கிரமன்,எஸ்,ஏ,ராஜ்குமார் கூட்டணியில் வெளியான மற்றுமொரு சூப்பர் ஹிட் பாடல்.பாடல் படமாக்கப்பட்ட இடமும்,மு.மேத்தாவின் வரிகளும் பாடலுக்கு மற்றுமொரு பக்கபலம். அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை வாராத வீடுகளில்லை.அதுவும் பதின்ம வயதில் கேட்கவே வேண்டாம்.அப்படி ஒருமுறை அப்பாவை எதிர்த்துப் பேசிவிட்டு,மனம் உருகிப் பார்த்த படம்.ஹூம். கலெக்டரம்மாவுக்குக் கணவானாகும் கொடுப்பினை எனக்கு இல்லை.

"மழை பேய்ஞ்சாத் தானே மண்வாசம்...ஒன்னை நெனச்சாலே பூவாசம் தான்"

தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் -> பசும்பொன்;
சீமானின் கதை வசனத்தில்,வித்யாசாகரின் இசையில்,பிரபுவுக்கு அம்மாவாக ராதிகா நடித்து பாரதிராசாவின் இயக்கத்தில் வெளியான மற்றுமொரு கிராமியப் படம்,"பசும்பொன்".பிரபுவுக்கு இணையாய் சரண்யா நீண்ட நாட்களுக்குப் பின்னர் திரையில் தோன்றியது;சிவாஜியும்,பிரபுவும் கடைசியாய் இணைந்து பணியாற்றிய படம் என்னும் பல சிறப்புகளைக் கொண்டது இந்தப் படம்.மூக்கினால் நாக்கினத் தொட இயலாத காதலனும் அவனைச் சீண்டி வேடிக்கை பார்க்கும் காதலிக்கும் இடையிலான ஊடல் தான் பாடல்.கிருஷ்ணசந்தர்,சுஜாதாவின் குரல்கள் விக்கி-யுவா கூட்டணிக்குப் பாந்தமாய்ப் பொருந்தி இருக்கும்..எனக்கு வாழ்க்கையில் நேர்ந்த முதல் மித்திர துரோகம்.ஓட்டைப்பல்லானால் முதுகில் குத்தப்பட்டது மறக்கமுடியாது.சிட்டுக்குக் கல்யாணம் ஆனது உனக்குத் தெரியுமா ஓ.ப.??

"நெலாக் கறைய அழிச்சாலும் ஒன்னத் திருத்த முடியாது
புறட்டிப் போட்டு அடிக்காம ஆமை ஓடு உடையாது"

கவலைப்படாதே சகோதரா -> காதல் கோட்டை:
தேவாவின் இசையில் பெரிய ஹிட்டான ஒரு கானாப் படல்.தலைவாசல் விஜய்க்கு தேவாவின் குரல் கனகச்சிதமாய்ப் பொருந்தி இருக்கும்.தலையுடன் த.வா.விஜயும் சேர்ந்து ஆட முயற்சி செய்திருப்பார்கள். ஒரு ஏற்காட்டுப் பயணத்தில் "சி" செக்சன் சரவணனை இந்தப் பாடல் வைத்துக் கலாய்த்துக் கொண்டே வந்தது அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.உன்னுடைய வீடியோகடைக்கு அவளுடைய பெயரை வைத்துக் கொண்டாடின என் நல்ல சினேகிதனே,நீ ஏன் குடிப்பதை நிறுத்தக் கூடாது?

ஊ..ல..ல..ல..லா-> மின்சார கனவு:
சித்ராவுக்கு மற்றுமொரு தேசிய விருது.வண்ணமயமான விஷூவல்ஸ்,இளைஞர்களுக்கு இணையாய் ஆடும் நாசர்,பாடலில் இடையில் வரும் சாவுக்கொட்டு,அதற்கு ஆடும் பிரபுதேவா குழுவினர் இதற்கெல்லாம் மேலாக நீல நிற மினி ஸ்கர்ட்டில் காஜோல் என்று ஒரு கலவையான பாடல்.நேர்த்தியான நூல்புடவைகளில் பத்து வருடங்களுக்கு முந்திய அர்ச்சனா மாதிரி சிரித்தபடி எங்கள் மாமாவைப் பார்க்கவந்த உங்களுக்குத் திருமணமானதை ஏன் சொல்லவில்லை?இந்தப் படத்திற்கு நான்,நீங்கள் மற்றும் சாரதி மாமா எனக் கூட்டணியாப் போனது நினைவிருக்கிறதா உங்களுக்கு?

."மழைத்துளி மண்ணில் வந்து சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்
அது என்னை வானவில்லில் கொண்டு சேர்த்துவிடுகிறதே சில நேரம்"

தென்றல் வந்து தீண்டும்போது ->அவதாரம் :
கண்பார்வையற்ற கதாநாயகிக்கு வண்ணங்களைப் பற்றி கதாநாயகன் விளக்கும் பாடல் இது.அவதாரம்,நாசரின் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான முதல் படம்.இதில் எல்லாப் பாடல்களையும் இளையராசா பாடியிருப்பார்.இந்தப் படத்தின் ஒரே டூயட் பாடலான இது ஒரு விஷூவல் ட்ரீட். எங்கள் பள்ளிக்கருகே இருந்த ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் இருந்த பார்வைக் குறைபாடு உடைய சகோதரி,வெற்றுவெளியில் சிரிப்பை விதைத்துக் கொண்டு யாருக்காகக் காத்திருந்தீர்கள்?இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு உங்கள் ஞாபகம் தான் வருகிறது என்பதை உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

"எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது"

கோகுலத்துக் கண்ணா கண்ணா->கோகுலத்தில் சீதை:
அகத்தியன் இயக்கும் படங்களுக்கு பாடல்களையும் அவரே எழுதிவிடுவார்.அப்படி அவர் எழுதி தேவா இசையமைப்பில் வந்த இது ஒரு சிச்சுவேஷன் பாடல் ஆகும்.எளிமையான இசைக்காகவும்,அர்த்தமுள்ள வரிகளுக்காகவும்,தேவாவின் குரலுக்காகவும் எனக்கு ரொம்பப் பிடித்த பாடல். இது எங்கள் கணக்கு வாத்தியாருக்கு அர்ப்பணம்.பரிட்சைக்கு முன்னால் நீங்கள் என்னைத் தியேட்டரில் பார்த்ததை எங்கள் அப்பாவிடம் போட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால் இன்னேரம் எருமை மாடு மேய்த்துக் கொண்டிருப்பேனோ என்னவோ???

"சோகமில்லை.சொந்தம் தேவையில்லை.ராவணின் நெஞ்சில் காமமில்லை..கிருஷ்ண,கிருஷ்ண,கிருஷ்ண கேசவனே..."

மாயா மச்சீந்த்ரா->இந்தியன்:
கிளைமாக்சினை நெருங்கும் போது வரும் எல்லாப் பாடல்களும் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போடும் படியாய் இருக்க வேண்டும் என்னும் திரையுலக லாஜிக்கினை மீறாத மற்றுமொரு பாடல்.அதிலும் ஷங்கரின் இயக்கம்,உலகநாயகனின் நடிப்பில் என்றால் கேட்கவா வேண்டும்.வாலியின் வரிகளை பாலாவும்,சுவர்ணலதாவும் தங்கள் குரலால் மெருகூட்டியிருப்பார்கள்.சரோஜ்கான் தமிழில் பணியாற்றிய ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.தன்னுடன் வேலை பார்க்கிற பெண்ணை விரும்பி,அப்பா-அம்மா சம்மதத்துடன் கட்டிக் கொண்ட அண்ணனின் வளைந்த மூக்குச்சினேகிதரை இப்போது என் ஊருக்குப் போகும்போது,எங்கள் தெருவில் பார்க்க முடியவில்லை.அவரது கல்யாணத்தில் தான் இந்தப் படம் பார்த்துவிட்டு முதன்முதலில் தீர்த்தவாரி ஆடினேன் என்பது அவருக்குத் தெரிந்திருக்குமோ?

"கனலில் பனியாக் கரைவோமா
கரைந்தே கவிதை புனைவோமா
சொல்லடி சோன் பப்படி"

பாடல்களைப் பிறிதொரு சமயத்தில் மீண்டும் தொடர்வேன்

24 Comments:

Jayaprakash Sampath said...

தலைமுறை இடைவெளி என்றால் என்ன என்பதை இப்போதுதான் முதன்முறையாக உணர்கிறேன் :-)

Anonymous said...

///மூக்கினால் நாக்கினத் தொட இயலாத காதலனும்///

நாக்கினால் மூக்கு :)

G.Ragavan said...

அப்பல்லாம் ஒரே சண்டக்காடா கெடக்கும். ரோசா படம் வந்தப்ப பயக எல்லாரும் எளையராசா ரசிகருங்க. நா மட்டுந்தான் ரகுமான் பெரிய ஆளா வருவாரு. எளையராசாவுக்கு அடுத்து அவருதான்னு அடம் பிடிச்சேன். இல்ல...மரகதமணி, தேவா கதையெல்லாம் என்னாச்சுன்னு வம்புக்கு வருவாங்க. இதுனாலயே நான் தீவிர ரகுமான் விசிறியாகி போற போக்குல எல்லாம் எளையராசாவோட அப்பத்திய படங்களத் தாக்குறதும் ரகுமானத் தூக்குறதுமா இருந்தேன். பெறகு பயக ஒவ்வொருத்தனா நம்ம பக்கம் வந்தது வரலாறு. ஹி ஹி. (எனக்கும் இளையராஜா இசை பிடிக்கும். but not most of the songs of 90s.)

Unknown said...

சுதர்சன்,

நான் எழுத நினைத்திருந்தப் பதிவு அப்படியே நீங்கள் எழுதி விட்டீர்கள்...

நம்முடைய வாழ்வின் ஒரு காலகட்டத்தை நம் கண்முன் கொண்டு வரும் சக்தி புத்தகங்களுக்கும், பாடல்களுக்கும் இருப்பதாக நம்புகிறவன் நான்...

கேட்கும் ஒவ்வொருப் பாடலிலும் அது வெளிவந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வரும்..

உங்களுடையத் தேர்வில் உள்ள அனைத்துமே எனக்கும் பழசைக் கிளறும் பாடல்கள் தான்!!!!

(என்னுடையப் பட்டியல் கொஞ்சம் நீளம்!)

மதுமிதா said...

இசையுடனான இனிமையான பாடல்களை அசைபோடுதலும் தனி இன்பம் தான்

மதுமிதா said...

நன்றி ஓ சுதர்சன்

ஒவ்வொரு பாடலோடும் சில நினைவிலாடும் விஷயங்கள் இணைந்திருக்கின்றன.

Pavals said...

//முதன்முதலில் தம் அடித்துக் கொண்டே பார்த்த படம் இது// யோவ்.. அப்பவேவா?

//"மழை பேய்ஞ்சாத் தானே மண்வாசம்...ஒன்னை நெனச்சாலே பூவாசம் தான்"// இந்த ஒரு பாட்டுக்காக, ஈரோடு ராயல்ல திரும்ப திரும்ப பார்த்தோம்.. (லேப் விட்டு தொரத்திவிட்டுடுவாங்க, அப்புறம் என்ன செய்யிறது, நேரா ராயல் தான்..)

//"எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது"// படிக்கும்போதே சிலிர்த்துக்குதுப்பா.. ம்ம்.. ஓடை நீரோடை, இந்த உலகம் அது போல... நிலையா நில்லாம...

//கோகுலத்துக் கண்ணா கண்ணா// அதிகம் கொண்டாடப்படாம போயிட்ட பாட்டு.. மாட்னி இன்டிபென்டெஸ்டே, ஈவ்னிங் ஷோ மிஸ்டர் ரோமியோ, அப்புறம் அப்படியே நைட் ஷோ 'லட்சுமி'யில கோகுலத்தில் சீதை.. பார்த்துட்டு ராத்திரி பூராவும் படத்தை பத்தியே பேசவச்ச படம்/பாட்டு. முதல் தட்வை கேட்டப்பவே சட்டுன்னு ஒட்டிகிட்ட பாட்டு..

ம்ம்.. ரொம்ப கிளரிவிட்டுட்டயேப்பா.. உடனே இதே மாதிரி ஒரு பதிவு போடனும்னு கை நம நம'ங்குது.. ஆனா கொஞ்சம் வேலை இருக்கே.. :)

// நினைத்துப் பார்த்தல் என்பது எப்போதுமே மனிதனுக்கு அலாதியான விஷயம்.// நிஜம்.. எனக்கேல்லாம் ஸ்ட்ரெஸ்ரிலீவர் மருந்தே இது தான்..

ENNAR said...

இப்படி படங்களை போட்டால் தமி்ழ் மணத்தில் சில சமயங்களில் நுழைய முடியாது என நினைக்கிறேன் நானும் ஒருமுறை அப்படி போட்டு நுழைய முடியவி்ல்லை

Boston Bala said...

பிடித்த பாடல்கள் ஒரு ரகம். நினைவூட்டல்களால் வேறெங்கோ கொண்டு செல்லும் பாடல்கள் இன்னொரு ரகம். பதிவு பிடித்திருந்தது.

ILA (a) இளா said...

//வாழத்தானே வாழ்க்கை...வீழ்வதற்கு இல்லை//
ஒரு பத்து வருஷம் இருக்கும் அந்த விளம்பரம் வந்து. அதாங்க கோல்கேட் விளம்பரம். "வாழ்க்கை வாழ்வதற்கே, வெற்றி நிச்சயம் எனக்கே" இது இன்னைக்கும் என்னோட பிடித்த வரிகள்.
உங்களுக்கு புடிச்ச விளம்பரம்ன்னு ஒரு பதிவு போடுங்களேன். அப்படியே விளம்பரக்கம்பேனி பத்தியும் எழுதலாமே

Chandravathanaa said...

ஓன்று - இளமைக்காலத்தில் நாம் கேட்ட பாடல்கள் எம்மனதில் மிக ஆழமாகப் பதிந்து விடுகின்றன. அவைகளை நாம் எந்த வயதிலும் மறந்து விடமாட்டோம்.
எத்தனை வருடங்களின் பின் அப்பாடல்களைக் கேட்டாலும் எம்முள் ஒரு இனம் புரியாத இன்பக்கிளர்ச்சி ஏற்படுகிறது. அதை வைத்துக் கொண்டு இன்றையபாடல்கள் சரியில்லை என்பதும் அன்றைய பாடல்கள்தான் அருமை என்பதும் தவறானது.

http://manaosai.blogspot.com/2003/09/blog-post.html

Sud Gopal said...

icarus prakash said...
//தலைமுறை இடைவெளி என்றால் என்ன என்பதை இப்போதுதான் முதன்முறையாக உணர்கிறேன்:-)//

பிரகாசரே...மெய்யாலுமேவா??

Sud Gopal said...

Anonymous said...
// ///மூக்கினால் நாக்கினத் தொட இயலாத காதலனும்///
நாக்கினால் மூக்கு :) //

போலாம்...போலாம்..ரைட்..ரைட்..

Sud Gopal said...

G.Ragavan said...
//நா மட்டுந்தான் ரகுமான் பெரிய ஆளா வருவாரு. எளையராசாவுக்கு அடுத்து அவருதான்னு அடம் பிடிச்சேன்.//
ஓய்...நீர் ஒரு பெரிய தீர்க்க தரிசி ஓய்..

//எனக்கும் இளையராஜா இசை பிடிக்கும். but not most of the songs of 90s.//

இங்கனயும் அதே கதை தான்.

ilavanji said...

// //தலைமுறை இடைவெளி என்றால் என்ன என்பதை இப்போதுதான் முதன்முறையாக உணர்கிறேன்:-)//

பிரகாசரே...மெய்யாலுமேவா?? //

சுதர்சனாரே! எனக்கும் அதேதான்! எந்தக்காலத்து பாட்டுகளைய்யா இதெல்லாம்?! நானெல்லாம் "உம்மா.. உம்மம்மா..." கோஷ்டி! (அதாவது.. யூத் இல்லை.. யூத் மாதிரி! ஹிஹி... )

பதிவு அருமை! ஒரே பதிவுல பத்து கதைகள்! கலக்குங்க! :)))

// எனக்கு வாழ்க்கையில் நேர்ந்த முதல் மித்திர துரோகம்.ஓட்டைப்பல்லானால் முதுகில் குத்தப்பட்டது மறக்கமுடியாது.சிட்டுக்குக் கல்யாணம் ஆனது உனக்குத் தெரியுமா ஓ.ப.?? //

இந்த கதைய மட்டும் தனியா நமக்குச் சொல்லுங்க! :)

Sud Gopal said...

அருட்பெருங்கோ said...

//நம்முடைய வாழ்வின் ஒரு காலகட்டத்தை நம் கண்முன் கொண்டு வரும் சக்தி புத்தகங்களுக்கும், பாடல்களுக்கும் இருப்பதாக நம்புகிறவன் நான்//

அதே..அதே..

//கேட்கும் ஒவ்வொருப் பாடலிலும் அது வெளிவந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வரும்.//

ஹூம்.கொசுவர்த்தியைப் பத்த வச்சிட்டேன் போலிருக்கு.

பாராட்டுகளுக்கும் தொடர்ந்து தரும் ஊக்கங்களுக்கும் நன்றி சொல்லி உங்களை அன்னியப்படுத்த விரும்பவில்லை.

Sud Gopal said...

வாங்க மதுமிதா.

மதுமிதா said...

//இசையுடனான இனிமையான பாடல்களை அசைபோடுதலும் தனி இன்பம் தான்//

உண்மையோ உண்மை.

//நன்றி ஓ சுதர்சன்
ஒவ்வொரு பாடலோடும் சில நினைவிலாடும் விஷயங்கள் இணைந்திருக்கின்றன.//

வரவுக்கும்,ஊக்கங்களுக்கு நன்றி.

Sud Gopal said...

ராசா (Raasa) said...
--//முதன்முதலில் தம் அடித்துக் கொண்டே பார்த்த படம் இது// யோவ்.. அப்பவேவா?--

ஹி..ஹி...

--//"மழை பேய்ஞ்சாத் தானே மண்வாசம்...ஒன்னை நெனச்சாலே பூவாசம் தான்"// இந்த ஒரு பாட்டுக்காக, ஈரோடு ராயல்ல திரும்ப திரும்ப பார்த்தோம்.. (லேப் விட்டு தொரத்திவிட்டுடுவாங்க, அப்புறம் என்ன செய்யிறது, நேரா ராயல் தான்..)--

கெமிஸ்ட்ரியா இல்லை பிஸிக்ஸா??

---//"எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது"// படிக்கும்போதே சிலிர்த்துக்குதுப்பா.. ம்ம்.. ஓடை நீரோடை, இந்த உலகம் அது போல... நிலையா நில்லாம...--

அட..அட..இதுக்குப் பின்னாடி எதுனா கதை இருக்குதோ?

---//கோகுலத்துக் கண்ணா கண்ணா// அதிகம் கொண்டாடப்படாம போயிட்ட பாட்டு.. மாட்னி இன்டிபென்டெஸ்டே, ஈவ்னிங் ஷோ மிஸ்டர் ரோமியோ, அப்புறம் அப்படியே நைட் ஷோ 'லட்சுமி'யில கோகுலத்தில் சீதை.. பார்த்துட்டு ராத்திரி பூராவும் படத்தை பத்தியே பேசவச்ச படம்/பாட்டு. முதல் தட்வை கேட்டப்பவே சட்டுன்னு ஒட்டிகிட்ட பாட்டு.---

மிஸ்டர் ரோமியோவில கூட சில பாட்டு ஜூப்பரா இருக்கும்.

--ம்ம்.. ரொம்ப கிளரிவிட்டுட்டயேப்பா.. உடனே இதே மாதிரி ஒரு பதிவு போடனும்னு கை நம நம'ங்குது.--

போட்டுத் தாக்குங்கப்பூ..

Sud Gopal said...

Haranprasanna said...
---30 வயதில் வயதாகிப்போன மாதிரி நினைக்க வைத்துவிட்டது இப்பதிவு.---

ஓ...பாராட்டுக்கு நன்றி .

Sud Gopal said...

ENNAR said...
//இப்படி படங்களை போட்டால் தமி்ழ் மணத்தில் சில சமயங்களில் நுழைய முடியாது என நினைக்கிறேன் நானும் ஒருமுறை அப்படி போட்டு நுழைய முடியவி்ல்லை//

தகவலுக்கு மிக்க நன்றி என்னார் அவர்களே...

Sud Gopal said...

Boston Bala said...

---பிடித்த பாடல்கள் ஒரு ரகம். நினைவூட்டல்களால் வேறெங்கோ கொண்டு செல்லும் பாடல்கள் இன்னொரு ரகம்.பதிவு பிடித்திருந்தது.--

ஓ.!!!பாராட்டுக்கு நன்றி .

Sud Gopal said...

ILA(a)இளா said...

---அதாங்க கோல்கேட் விளம்பரம். "வாழ்க்கை வாழ்வதற்கே, வெற்றி நிச்சயம் எனக்கே" இது இன்னைக்கும் என்னோட பிடித்த வரிகள்.---

சத்தியமான வரிகள்.

---உங்களுக்கு புடிச்ச விளம்பரம்ன்னு ஒரு பதிவு போடுங்களேன். அப்படியே விளம்பரக்கம்பேனி பத்தியும் எழுதலாமே---

தங்கள் சித்தம் என் பாக்கியம் :-)

Sud Gopal said...

Chandravathanaa said...

தங்களது கருத்துகளுக்கும்,தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி.

Sud Gopal said...

இளவஞ்சி said...

//சுதர்சனாரே! எனக்கும் அதேதான்! எந்தக்காலத்து பாட்டுகளைய்யா இதெல்லாம்?! நானெல்லாம் "உம்மா.. உம்மம்மா..." கோஷ்டி! (அதாவது.. யூத் இல்லை.. யூத் மாதிரி! ஹிஹி... )//

ந..ம்..பி...ட்..டே...ன்....

//இந்த கதைய மட்டும் தனியா நமக்குச் சொல்லுங்க! :)//

சொல்லீட்டாப் போகுது.