07 August 2006

சிறுதுளி பெருவெள்ளம்

பானீ,வெள்ளம்,ஜல்,நீரு,நீலு என்று வெவ்வேறு மொழிகளில் அழைக்கப்படும் நீரின்றி அமையாது உலகு.அது சரி வெறுங்கையில் முழம் போட முடியுமா? மழை இன்றி இவ்வுலகின் நீர் ஆதாரங்கள் தான் செழிக்குமா?

ஆறு,ஏரி,குளம்,கிணறு,ஓடை,அருவி என்று இந்த உலகிலுள்ள பல்வேறு நீர்வளங்களுக்கு மழையே ஆதாரம்மழை பெய்யாமல் பொய்க்கும்போது தான் அதனுடைய அருமையை உணர்வோம்.சிறுவாணி,புழல் ஏரிகளின் தற்போதைய நீர்வரத்து,அடிப்பம்பு,லாரித் தண்ணீர்,மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்று ஆயிரம் விஷயங்களைப் பேச,சிந்திக்கத் துவங்குவோம்..பணத்தைப் பல தலைமுறைகளுக்குச் சேமித்துவைக்கத் துடிக்கும் நாம்,நீர் போன்ற இயற்கை வளங்களைப் பொறுத்த மட்டிலும் அவற்றின் மதிப்புணரா தற்குறிகளாய் இருக்கிறோம்.இதே நிலைமை நீடித்து வந்தால் அடுத்த உலகயுத்தம் நீரின் முன்னிட்டே இருக்கும் என்று கூற முடியும்.யார் கண்டது,இந்தியாவே அது போன்றதொரு யுத்தம் துவங்குமிடமாய் இருக்கக் கூடும்.

ஐ.நா. சபையின் உலக நீர்ப்பயன்பாட்டு அறிக்கையின் படி தற்போது உலகிலுள்ள 6 பில்லியன் மக்கள்கூட்டம் ஏறத்தாழ பூமியிலிருக்கும் 54 % தூயநீரினைப் பயன்படுத்தி வருகிறது.2025 ஆம் ஆண்டில் இது 70% ஆக அதிகரிக்கக்கூடும்.தனிமனித நீர்ப்பயன்பாடு தற்போதைய விகிதத்தில் அதிகரித்து வருமாயின் இன்னும் 20 வருடங்களில் மனித சமுதாயம் உலகிலுள்ள 90% நீர்வளங்களைக் காலியாக்கிவிடும்.அடுத்து வரும் இருபதாண்டுகளில் பெருகிவரும் மக்கள்தொகையும் அதனையொட்டி அதிகரிக்கும் நுகர்வுத்தேவைகளும் மேற்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளைத் தண்ணீர் பஞ்சத்திற்கு உள்ளாக்கி விடும்.மரம் வெட்டுவதால் மழை குறைகிறது.மழையில்லாமல் விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில் வயிற்றுப்பாட்டிற்கு வேலை தேடி நகருக்குப் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திட்டமிடப்படாத,கட்டுப்படுத்தப்படாத நகர் புறப்பெருக்கம் அங்குள்ள இயற்கை வளங்களை அழித்து விட்டே நடக்கிறது.என இது ஒரு சுழற்சியான நிகழ்வு.

இந்த நகர்புறப்பெருக்க நிகழ்வுக்கு "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்றழைக்கப்படும் கோவை மட்டும் விதிவிலக்கா என்ன? சுவையான சிறுவாணி நீருக்குப் பெயர் போன கோவையில் மரம் வளர்ப்பு/பராமரிப்பில் உள்ள தொடர்ச்சியான புறக்கணிப்பு,நீர்வளங்களின் மீதான ஆக்கிரமிப்பு,மோசமான பராமரிப்பு காரணமாய் வெகுவிரைவில் ஒரு தண்ணீர்ப்பஞ்சம் திணிக்கப்பட உள்ளது.சிங்காநல்லூர் குளத்தேரியினைக் கடந்து செல்லும் போதெல்லாம் இந்தக் குளத்தின் இன்றைய மோசமான நிலமைக்கு நாமும் ஒரு காரணம் என்று ஆதங்கப்படுவதோடு இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையும் வெகுவாய் இருந்து வந்தது.சிறுதுளி திட்டத்தினைப் பற்றி அறியும் வரையில்.

சிறுதுளிகள் சேர்ந்து உருவாவதே பெருவெள்ளம்.அதுபோல கோவையின் எக்கோஸிஸ்டத்தினைப் புத்துயிரூட்டும் வண்ணம் திருமதி.வனிதா மோகன்(ப்ரிகால்) அவர்களின் சீரிய முயற்சியினால் உருவாக்கப்பட்டதே இந்த சிறுதுளி திட்டம்."தூய்மையான கோவை,பசுமையான கோவை" என்னும் கொள்கைகளுடன் உருவானதே இந்த சிறுதுளி திட்டம்.

இந்தத் திட்டமானது திரு.S.V.பாலசுப்ரமணியம்(CMD,பண்ணாரி அம்மன் சுகர்ஸ்)அவர்களைச் சேர்மனாகவும்,மருத்துவர் R.V.ரமணி(சங்கரா கண் மருத்துவமனை),ரவி சாம்,ஆரதி வரதராஜ்,கனக்லால் அபய்சந்த்,N.V.நாகசுப்ரமணியம் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள சிறுதுளி ட்ரஸ்டியினால எடுத்து நடத்தப்படுகிறது.பெரிய அளவிலான மழை நீர் சேகரிப்பு,திட/திரவக் கழிவுகள் மேலாண்மை,ஆறு/குளம்/ஏரி போன்ற நீர் வள ஆதாரங்களின் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,அவற்றினைத் தூர்வாரல்,கரைகளை செப்பனிடுதல்,பெரிய அளவிலான மரப்பெருக்கம் என்று தனது இலக்கினை அடைய வெவ்வேறு களங்களில் பயணிக்கிறது இந்த சிறுதுளி திட்டம்.

கிருஷ்ணாம்பதி,செல்வம்பதி,முத்தண்ணன்குளம்,செல்வமுத்தண்ணன் குளம்,பெரிய குளம்,சின்ன குளம்,வாலன் குளம்,சிங்காநல்லூர் குளத்தேரி போன்றவை கோவையிலுள்ள சில முக்கிய குளங்கள்.நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள இந்தக் குளங்கள் நிலத்தடியே உள்ள கால்வாய்களால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.நாளடைவில் பல்வேறு காரணங்களால் இந்தக் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாய் மழைநீரானது குளங்களுக்கிடையே சீராகச் செல்ல இயலாமற்போனது.சில கால்வாய்களின் மேலே நிகழ்ந்த ஆக்கிரமிப்பு,கால்வாய் குளங்களை இணையும் இடத்தில் ஏற்பட்ட பிளாஸ்டிக் அடைப்புகள் போன்றவற்றின் காரணமாய் மழை நீர்வெள்ளமானது எதிர்த் திசையில் பெருகி ஓடி, பல இடங்களை வெள்ளக்காடாக்கிய நிகழ்வுகள் அனைவரும் அறிந்த ஒன்றே.

கோவை மக்களிடையே விழிப்புணர்வையும்,இந்தத் திட்டத்தினால் விளையும் நீண்டகால நன்மைகளையும்,முக்கியமாக நம்மால் முடியும் என்ற நம்பிக்கையினையும் புகுத்த கரும்பு வளர்ப்பு ஆராய்ச்சிக்கூடத்திற்கு அருகே உள்ள கிருஷ்ணாம்பதி குளத்தினைத் தூர் வாரும் பணி முதலில் மேற்கொள்ளப்பட்டது.108 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் ஏறத்தாழ 30% ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததது.தூர் வாருதல் முடிந்தபின்னர் மேலும் ஆக்கிரமிப்புகள் நேராவண்ணம் கரைகளை உயர்த்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.இந்தக் குளத்தினை நோக்கிச் செல்லும் கால்வாய்களும் தூர்வாரப்பட்டன.சிறுதுளியின் முதல் துளி இது தான்.பிறகு நடந்ததெல்லாம் வரலாறு தான்.

இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய இலக்கான பெரும் மரப்பெருக்கத்தினை அடைவதன் முதல் படியாகச் சுமார் 1 இலட்சம் மரக்கன்றுகள் பெரியகுளம்,கிருஷ்ணம்பதி போன்ற குளங்களின் கரைகள்,ராம் நகர்,ஹோப் காலேஜ் போன்ற இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.பசுமைப் பயணம் என்னும் இந்த நிகழ்வானது நமது குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களால் 6,ஜூலை,2005-ல் துவங்கி வைக்கப்பட்டது. கோவையிலுள்ள பள்ளிச் சிறார்களிடையே மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துரைக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறது.தற்போது நொய்யல் ஆற்றினைச் சுத்திகரிப்பதில் பெரும் முனைப்புடன் இயங்கி வருகிறது சிறுதுளி திட்டம்.

இப்படியாகக் கோவையின் எதிர்காலமானது சத்தமின்றி மாற்றியமைக்கப் பட்டுவருகிறது.

இந்தத் திட்டம் பற்றி மேலதிக விவரங்களுக்கு http://www.siruthuli.org/

இது பற்றிய மற்றுமொரு கட்டுரையைப் பின்னர் தருவேன்.

"தூய்மையான கோவை,பசுமையான கோவை"

16 Comments:

G.Ragavan said...

மிகவும் நல்ல முயற்சி. கோவையைக் காக்கப் பாடுபடும் இந்த வீரர்களுக்கு எனது வணக்கங்கள். இதே போல இந்தியாவில் ஒவ்வொரு ஊரினரும் நினைக்கத் தொடங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

Unknown said...

கோவையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கோவையின் தட்ப வெட்பம் ஒரு மாற்றத்துக்கு உள்ளானதையும், நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்...

"சிறுதுளி" தனது முயற்சிகளைத் தொடங்கியிருந்த சமயத்தில் இதுவும் லாபநோக்கோடு இருக்கும் மற்றொரு சமூகசேவை அமைப்போ என ஐயம் தான் ஏற்பட்டது.

ஆனால் அதன் முயற்சிகளும், கண்முன்னேத் தெரிந்த பயன்களும் அதன் நல்ல நோக்கத்தை மக்களும் புரிந்துகொள்ள வைத்தது.

சிறுதுளியைப் பற்றி ஒரு சிறு துளியை வலைப்பதிவில் இட்டிருக்கிறீர்கள் - அது பெரு வெள்ளமாகட்டும்!!!

Pavals said...

11 வருஷம் கழிச்சு குறிச்சி குளம் நிரம்பி தழும்பி நிக்குதே, அது தாங்க சிறுதுளி'யின் வெற்றி.. சிறுதுளியின் வெற்றிக்கு நிறையா பேரு காரணமா இருந்தாலும் மொத்தபெருமையும் திருமதி:வனிதாமோகனுக்கே சேரவேண்டியது.. சமூகசேவை'ங்கிற பேருல சும்மானாச்சுக்கும் கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு போயி அங்கிருக்கிற பசங்களுக்கு எண்ணை தேய்ச்சு குளிப்பாட்டி விடுற பல பெரிய இடத்து பெணகளுக்கு மத்தியில்.. இது நிசமாலுமே ஒரு தொலைநோக்கு பார்வையோட அமைஞ்ச சத்தியமான சமூக சேவை.

அப்புறம், நாங்களும் சிறுதுளியோட சேர்ந்து நொய்யலை சுத்தபடுத்தும் இயக்கத்துல பங்காற்றினோமில்ல..

துபாய் ராஜா said...

'சிறுதுளி'யின் பணி பாரெங்கும் பரவி பெருவெள்ளமாக வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

அருமையான & அவசியமான பதிவு.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல தகவலை வெளியிட்டிருக்கிறீர்கள் அதற்காக நன்றிகள்.

Anonymous said...

படிக்கப் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. "நோயை அறிந்தால்; மருந்தைக் கண்டு பிடிக்கலாம்" என்பதே !என் நினைவுக்கு வந்தது; நாம் நம் பாட்டன்மாரால் நமக்கு தந்த இயற்கையை அப்படியே! எம் தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய கடனாளிகள் என்பதனை; ஞாபகம் வைத்திருக்க வேண்டும். இம் முயற்சி எடுத்த அனைவரையும் மனதாரப் பாராட்டுவோம். இத் திட்டத்தை ஏனைய மாவட்டங்களும் நடைமுறைப் படுத்த ஊக்குவிப்போம்.
யோகன் பாரிஸ்

Unknown said...

தமிழ்நாடு முழுமைக்கும் இந்த இயக்கம் வளர வாழ்த்துகிறேன்

செல்வநாயகி said...

இந்தப் பதிவுக்கு நன்றி.

Sud Gopal said...

ஜீரா:

வாங்க...வாங்க..

//இதே போல இந்தியாவில் ஒவ்வொரு ஊரினரும் நினைக்கத் தொடங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.//

அதே..அதே...

Sud Gopal said...

அருட்பெருங்கோ:

//கோவையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கோவையின் தட்ப வெட்பம் ஒரு மாற்றத்துக்கு உள்ளானதையும், நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்...//

ஓ...அப்படியா???இது எப்பத்த மேட்டர்??

//சிறுதுளியைப் பற்றி ஒரு சிறு துளியை வலைப்பதிவில் இட்டிருக்கிறீர்கள் - அது பெரு வெள்ளமாகட்டும்//

தொடர்ச்சியான ஆதரவு,ஊக்கங்களுக்கு டேங்ஸ்பா.

Sud Gopal said...

ராசா (Raasa):
//சமூகசேவை'ங்கிற பேருல சும்மானாச்சுக்கும் கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு போயி அங்கிருக்கிற பசங்களுக்கு எண்ணை தேய்ச்சு குளிப்பாட்டி விடுற பல பெரிய இடத்து பெணகளுக்கு மத்தியில்.. இது நிசமாலுமே ஒரு தொலைநோக்கு பார்வையோட அமைஞ்ச சத்தியமான சமூக சேவை.//

உண்மை..உண்மை...உண்மையைத் தவிர வேறேதுமில்லை.

//நாங்களும் சிறுதுளியோட சேர்ந்து நொய்யலை சுத்தபடுத்தும் இயக்கத்துல பங்காற்றினோமில்ல.//

பலே..பலே..

Sud Gopal said...

சிறுதுளியை வாழ்த்திய துபாய் ராசவுக்கும்,டீச்சரக்காவிற்கும் ஒரு "ஓ"

Chandravathanaa said...

நல்ல முயற்சி

ilavanji said...

நம்ப ஊரு பெயரை தூக்கி நிறுத்தும் அருமையான பதிவு!

// நாங்களும் சிறுதுளியோட சேர்ந்து நொய்யலை சுத்தபடுத்தும் இயக்கத்துல பங்காற்றினோமில்ல.. // நான் அசுத்தப்படுத்தும் வேலையில் பங்காற்றியிருக்கிறேன்! அடிக்கடி குளிப்பம்ல.. ஹிஹி...

வாழ்க சிறுதுளி... வளர்க அவர்தம் சேவை!

கருப்பு said...

சிறந்த பதிவு.