பத்தாயிரத்து எண்பது நிமிஷங்கள்...
இரண்டாயிரத்து சொச்சம் ஹிட்டுகள்...
சிலருக்குக் கொஞ்ச நேர இளைப்பாறல்கள்...
என்று எனது நடத்திர வாரம் ஒரு வழியாய் நிறைவுக்கு வந்துவிட்டது.
இந்தியா விடுதலை அடையும் சமயத்தில் எனது பதிவுகளினின்று உங்களுக்கும் விடுதலை கிட்டியிருக்கிறது.இந்த மின்மினி திரும்ப தனது பழைய கூட்டிற்கு செல்லவிருக்கிறது.திடீரென முளைத்த அலுவலக சிக்கல்களினால் திட்டமிட்ட படி சில பதிவுகளைப் போட முடியவில்லை.
கல்யாண சமையலில் ஆரம்பித்த வாரம், காணாமல் போனவர்களில் நிறைவு பெறுகிறது.இதில் சில பதிவுகளை மீண்டும் பின்னர் தொடர்வதாய் இருக்கிறேன்.தினப்படி எனது பதிவுகளைப் படித்த, பின்னூட்டமிட்டு என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.வாய்ப்பளித்த மதி கந்தசாமிக்கும் காசி ஆறுமுகத்திற்கும் நன்றி பல.அடுத்து வரும் நட்சத்திரங்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்.
அன்புடன்,
சுதர்சன்.கோபால்
"உங்கள் அனைவருக்கும் எனது இந்திய விடுதலை நாள் வாழ்த்துகள்!"
14 August 2006
[+/-] |
முன்னாள் நட்சத்திரத்தின் நன்றிகள் |
12 August 2006
[+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 7 |
"அம்மா.ரொம்ப நாளா இந்த பட்டுப் புடவையை ட்ரை வாஷ் பண்ணணும்னு இருந்தீங்களே..." என்று பெண்பிள்ளை ஆரம்பித்தால் அடுத்து வரப்போவதைத் தாராளமாக ஊகிக்கலாம் - "அந்தப் பட்டுப்புடவையும் திருமண பஃபே விருந்தில் கலந்து கொண்டு பசியாற்றியது" என்று.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
எங்க கீழே சொல்லியிருக்கிற மேட்டர்கள்ள மெய்ப்பொருள் என்ன என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்.
1.கல்யாணத்திற்குக் கெளம்பரப்ப தான் ஞயாபகம் வந்திச்சி இன்னைக்கு ஞாயித்துக் கிழமைன்னு.இந்த ஊர்ல எவன் ஞாயித்துக் கிழமையன்னிக்கு கடைய சீக்கிரமே தொறக்கப்போரான்... ஹி.ஹி..
2.நம்ம சூலூர் பிரேஞ்சில உங்களப் போல ஒரு அனுபவஸ்தர் இல்லாமத் தான் குட்டிச்சுவர் ஆகிப்போச்சு.
3.ஸ்போர்ட்சிலயெல்லாம் உங்க பையன் தான் ஸ்கூல்லயே முதல்..
4.அடடா..நீங்க சொல்ரது சரிதான் சார்.ரொம்பத்தான் ஒழுகுது.ரிப்பேர் செஞ்சிட வேண்டியது தான்.
5.ஏம்பா.உங்க பேனா உடையவே உடையாதுன்னு சொல்லீட்டு இருந்தீங்களே...
6.இஸ்திரிக்கு போட்டிருந்த அந்த புளூக் கலரு கட்டம் போட்ட சட்டை புதுசுங்களா???
7.ஆமாம்.காவிக்கலர்ல இந்தச் சேர்ல தான் இருந்தது.நீங்க தான் அந்த கர்ச்சீப்பைப் போட்டு வச்சிருந்தீங்களோ??
8.என்ன சார்.நீங்க ஏறும் போதே தெளிவா சொல்லியிருக்காலம்ல இன்னர் ரிங் ரோடு தான் போகணும்னு.
9.உப்பெல்லாம் புக்ல சொல்லியிருக்கிற அளவு தான் போட்டேன்.ஆனாக்கூட....
[+/-] |
"காணாமல் போனவர்கள்" ஸ்பெஷல் |
தூர்தர்ஷன் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது.
எல்லா நாள் நிகழ்ச்சிகளினிடயே எதிர்பாராமல் வரும் "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்ற் அறிவிப்புப் பலகையையும்,வெள்ளியன்று "ஒலியும் ஒளியும்" முன்னால் சிவபூசைக் கரடியாக வரும் "எதிரொலி" நிகழ்ச்சியினையும் வெறுக்காத ஆட்கள் இல்லை எனலாம்.இது போல் மறக்க முடியா இன்னுமொரு நிகழ்ச்சி "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு".எங்கள் வீட்டில் யாருக்குமே பிடிக்காத இந்த நிகழ்ச்சியானது சொல்லத்தெரியாத காரணங்களுக்காக எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
காணாமல் போன தினத்தில் கறுப்பு நிறக் கால்சட்டை அணிந்த சிறுவனின் ஒளிப்பட முகத்தில் தெரியும் மென் சோகம் என்னை என்னவோ செய்த நாட்களும் உண்டு."நான் காணாமப் போயிட்டா பழனீ விஜயா ஸ்டூடியோவில எடுத்த கலர் ஃபோட்டோ தான் TVக்கு தரணும்" என்று எத்தனை முறை சண்டையிட்டிருப்பேனோ எனக்கே தெரியாது?
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவியவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் "கண்டேன் சீதையை" என்று வந்த அனுமனுக்குத்தான் முதலிடம் தரப்பட வேண்டும்.இதில் தூர்தஷனுக்கும் அதில் வரும் கா.போ.ப.அறிவிப்புகளுக்கும் எத்தனையாவது இடம் வரும் என்று சத்தியமாக எனக்குத் தெரியாது.
சரி,,சரி,,விஷயத்துக்கு வருவோம்.
நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான சிலர் கொஞ்ச நாளாய்க் காணாமல் போய்விட்டார்கள்.அவர்களைக் கண்டுபிடிக்கத் துப்பு கொடுப்பவர்களுக்கு மயில்ஜீயுடன் ஒரு "அதிரடிப் பரிசு"ம் உண்டு.
நபர்1 :- "மூலிகை பெட்ரோல் புகழ்" ராமர் பிள்ளை
மாற்று எரிபொருள் பற்றிய ஆராச்சியில் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்தவர். 90களின் இறுதியில் இவரது கட்டுரை வாராத வாரப் பத்திரிக்கைகளே இல்லை
எனலாம்.ராஜபாளையத்தைச் சேர்ந்த இவர் காணாமல் போய் விட்டாரா இல்லை சிறை வாசம் முடித்துவிட்டு வந்து விட்டாரா என்று தெரியவில்லை.துப்பு கொடுப்பவர்களுக்கு "வைக்கோலில் இருந்து சாம்பலை உருவாக்குவது எப்படி" என்னும் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.(ஆமாம் இப்போ இவர் வளர்ப்பு குடும்பம் எப்படி இருக்கு??)
நபர் 2:- ஷ்ரீவித்யா
எம்.எல்.வி. என்னும் ஒரு மாபெரும் இசைக்கலைஞரின் மகளாய்ப் பிறந்து ஒரு நட்சத்திர இயக்குனரால் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிப் பல்வேறு கதாபாத்திரங்களை அனாயசமாக எற்று நடித்த இவரைக் கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழ் திரையில் காணவில்லை.கடைசியில் கண் பார்வை இழந்தவராக "லண்டன்" என்னும் படத்தில் பார்த்ததாய் ஞாபகம்.உச்ச நட்சத்திரத்திற்கு இணையாக,அக்காவாக,அம்மாவாக நடித்த இவர் அடுத்த படத்தில் பாட்டியாய் நடிக்கவிருக்கிறார் என்று ஒரு பேச்சு அடிபட்டது உண்மையாக இருக்குமோ(ஆமா,ஜெயேந்திரர் வழக்கில இவங்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்குதுன்னு பேசிக்கிறாங்களே.அது இன்னா மேட்டர்??)
நபர் 3:- அஜீத்ஜோகி
இந்திய ஆட்சியமைப்புத் துறையில் தாழ்த்தப்பட்டோர் கோட்டாவில் நுழைந்த இவர் அப்போதைய மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் அர்ஜூன் சிங்கின் ஆணைக்கேற்ப அரசுப்பணியினை விட்டு அரசியலில் நுழைந்தார்.மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிந்து சென்ற சட்டீஸ்கர் மாநிலத்தின் முதலாம் முதலமைச்சராய் பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்தார்.2003ல் நடந்த தேர்தலில் முதலமைச்சர் நாற்காலியைப் பறி கொடுத்த இவர் 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அரசியலில் நுழைந்தார்.அப்போது நடந்த ஒரு மோசமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பின்னர் இவரது சௌவுண்டை எங்கும் காணோம்.(அது சரி.சமீபத்தில 25 எம்பிக்களுடன் சேர்ந்து சோனியாதான் பிரதமராகணும்னு நீங்க அனுப்பின மனுவுக்குப் பின்னால உள் குத்து ஒண்ணும் இல்லையே??)
அடுத்து வருபவர்கள் "குத்துவிளக்கு" கோபாலகிருஷ்ணன்,"சின்ன சின்ன ஆசை" மின்மினி,"சிட்டிசன்" ஷரவண சுப்பையா.
வெளியே செல்லவிருப்பதால் "மறுமொழி மட்டுறுத்தல்" கொஞ்சம் தாமதமாவே நிகழும்.பொறுத்தருள்க :-)
[+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 6 |
இன்றைக்குக் கொறிக்க, "பெங்களூரு" பற்றிய சில தகவல்களும் கேள்விகளும்:
தகவல்கள்:
1)இந்தியாவில் முதன்முதலில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்ட நகரம் பெங்களூர் ஆகும்.வந்த ஆண்டு 1905.
2)அந்தமானில் 1872ல் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலான மேயோவின் நினைவாகக் கட்டப்பட்டதே எம்.ஜீ.ரோட்டிலுள்ள மேயோ ஹால் ஆகும்.பொது மக்கள் உதவியுடன் கட்டப்பட்ட இது 1883 ஆம் ஆண்டில் அப்போதைய நகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
3)மெஜஸ்டிக் என்று அழைக்கப்படும் இடத்தின் உண்மையான பெயர் காந்திநகர் ஆகும்.அந்த இடத்தில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த மெஜஸ்டிக் டாக்கீஸால் இந்த இடத்திற்கு இப்பெயர் வந்தது.
4)1760-ல் ஹைதர் அலியால் உருவாக்கப்பட்ட "லால் பாக்கின்" நிஜப் பெயர் என்ன தெரியுமா?
"மேங்கோ டோப் & சைப்ரஸ் கார்டன்"
கேள்விகள்:
1)70களின் பிற்பகுதியில்,பெங்களூரின் இந்தக் குறிப்பிட்ட பகுதியானது ஆசியாவிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகக் குறிப்பிடப்பட்டது.அது எந்தப் பகுதி?
2)BTM மற்றும் HSR லே-அவுட்டுகளை விரிவு படுத்துக.
3)பெங்களூரு ஏரிகளினால் ஆன நகரம்....இல்லை.இல்லை. நகரமாக இருந்தது.இப்போது முக்கால்வாசி ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவை இருந்த இடங்களில் காங்க்ரீட் கட்டிடங்கள் தான் இருக்கின்றன.கீழே கொடுக்கப்பட்ட ஏரிகளின் மீது தற்போது காணப்படும் பெயர் பெற்ற கட்டிடங்கள் என்ன என்று கண்டுபிடிக்க முடியுமா?
சம்பங்கி ஏரி,தரமம்புடி ஏரி.
4)நான் குறிப்பிடும் இந்த மனிதர் பெங்களூரில் சில காலம் மல்லேஸ்வரத்திற்கும்,பசவன்குடிக்கும் இடையே செல்லும் 14ஆம் நம்பர் அரசுப் பேருந்தில் வேலை பார்த்து வந்தார்.இவரது விசில் ஊதும் அழகைப் பார்க்கவே கூட்டம் இவரது பேருந்தில் அள்ளுமாம்.இவர் யார்??
[+/-] |
ஆப்பரேஷன் "மொட்டைக் கடிதாசு" - பகுதி 2 |
வினோத்தோட மேனேஜர் பேசுகிறேன்:
உங்க கிட்ட வினோத் ஏதோ சொல்லீட்டு இருந்தான் போல இருக்கு.என்னைப் பார்த்ததுமே நழுவிட்டான்.என்ன சொன்னான்னு நான் உங்ககிட்ட கேட்கக்கூடாது.அது அநாகரீகம்.அவன் சொன்னதக் காது கொடுத்துக் கேட்ட நீங்க,நான் சொல்லப் போறதையும் கொஞ்சம் கேளுங்களேன்.
இன்று காலை 10:45 மணி:
நான் செஞ்சதை என்னாலயே நம்ப முடியலை.கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன் போலிருக்கு.வெறுமனே என்னோட மொபைல் நம்பர் மட்டும் கொடுத்திருக்கலாமோ?என்ன செய்ய ஒரு தடவை "சென்ட்" பட்டனை அமுக்கிய பிறகு கன்ட்ரோல் நம்ம கிட்ட இல்லையே.சரி.என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே
"ஹலோ.யெஸ் சார்..ஓக்கே சார்.இப்போ வர்ரேன்".
நேரம் காலம் தெரியாம இந்த நேரம் பார்த்து ஆந்தைகண்ணன் கூப்பிடறான்.வேற
யாருமில்லை.என்னோட பாஸ் தான்.எதுக்காக இருக்கும்??
நான் போயிட்டு வந்திடறேன்.அதுக்குள்ள நீங்க போய் தமிழ்மணத்தில புதுசா எதுனாச்சி வந்திருக்கான்னு பார்த்திட்டு வந்திடுங்க.
11:45 மணி:
என்னோட பாஸ் சொன்னத இன்னும் என்னால நம்பவே முடியலை.நான் வெளிநாடு போக முயற்சி செஞ்சிட்டு இருக்கறதப் பத்தி இவருக்கு எப்படித் தெரிய வந்தது.யாராவது போட்டுக்கொடுத்திருப்பாங்களா?இல்லைன்னா அது பத்தி இவர் ஏன் அதுவும் திடீர்னு இன்னைக்கு கேக்கறாரு?எனக்கென்னமோ இந்த வினோத் மேலயும் செபாஸ்டியன் மேலயும் தான் கொஞ்ச சந்தேகமா இருக்கு.செபாஸ்ட்யன் வேற நான் ரெண்டு மூணு வாட்டி கன்சல்டன்ட் கிட்ட பேசரதப் பார்த்திருக்கான்.அதுவும் தவிர எனக்குத் தெரிஞ்சவரை இந்த ஆஃபீஸில என்மேல காண்டு இவனுங்க ரெண்டு பேருக்குத் தான்.ஹூம்.இப்ப என்ன செய்யலாம்???
அட வைப்ரேட்டர் வேற சத்தம் போடுது.செந்தில் தான் கூப்பிடறான்."சொல்லு செந்தில்.ஆமாம்.நான் பெரிசு கூடப் பேசிட்டு இருந்தேன்.நானே உன்னைக் கூப்பிடலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.மேட்டர் என்னங்கறத நான் கேன்டீன்ல சொல்றேன்.இல்லை இன்னைக்கு நான் கார்ல தான் வந்திருக்கேன்.ஓக்கே...பை..."செந்தில் என்னோட மூணாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை ஒண்ணாப் படிச்சவன்.பல இடங்கள்ள குப்பையைக் கொட்டிட்டு ஆறு மாசம் முன்னாடி தான் எங்க கம்பெனியில சேர்ந்தான்.வேற,வேற கட்டிடத்தில வேலை செஞ்சாலும்,அப்பப்போ கேன்டீன்ல சந்திச்சுக்குவோம்.நீங்களும் என் கூட கேன்டீனுக்கு வாங்க.உங்களுக்கு வேணும்கிற எல்லா ஐட்டமும் கிடைக்கும்.0f course dutch treat தான்.
"என்ன விஷ்வா.ரொம்ப டல்லா இருக்கே.ஏதாவது பிரச்சினையா?"
"ஆமா செந்தில்.பெரிசுக்கு நான் வெளிநாடு போகறதுக்கு முயற்சி செஞ்சிட்டு இருக்கற விஷயம் எப்படியோ தெரிஞ்சுபோச்சு.யாரோ என் டீம்ல இருந்து தான் போட்டுக் கொடுத்திருக்காங்க.பக்கா ப்ரூஃபோட பேசுது பெரிசு.எவனோ கூட்டுக்களவாணிக மொட்டைக் கடிதாசு மாதிரி ஏதோ ஒண்ணைப் போட்டு என்னோட விக்கெட்டை சாச்சிட்டாங்க.சே...."
"சரி....சரி...விஷ்வா...அந்த சாஸைக் கொஞ்சம் இப்படித் தள்ளு.அப்புறம் உங்க பெரிசு அதுக்கு என்ன சொல்லிச்சு?நீ மொட்டைக் கடிதாசுன்னு சொன்னதும் தான் எனக்கு நம்ம சாந்தா டீச்சர் ஞாபகத்துக்கு வாராங்க.ஆமா..அந்த மேட்டர் நடந்து ஒரு பதினெட்டு வருஷம் இருக்குமா??"
"செந்தில் திஸ் இஸ் டூ மச்,மனுஷன் இங்கே குழப்பத்தில கொந்தளிச்சுட்டு இருக்கேன்.நீ பாட்டுக்கு சிரிச்சுட்டு பழைய குப்பையக் கிளறீட்டு இருக்கே??"
செந்திலுக்கு அபார ஞாபகசக்தி.ஆன தேவையில்லாத விஷயங்களைத் தான் அதிகமா மெமரில ஏத்தி வச்சிருப்பான்.அவன் சொன்ன அந்த விஷயம் நாங்க ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது.மொட்டைக் கடிதாசுன்னு பேச்சு வந்தாலோ இல்லே எங்கேயாவது அதப் பத்தி படிச்சாலோ எனக்கு உடனே சாந்தா டீச்சர் தான் ஞாபகம் வருவாங்க.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது:
"டேய்...விஸ்வநாதா இது தப்பில்லையா??"
"செந்தில்.நீ அனியாயத்துக்கு பயந்தாங்கொள்ளியா இருக்கியேடா.உங்கப்பா மிலிட்டரில இருக்கிறார்.நீ என்னடான்னே இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் போய் பயந்திட்டு இருக்கியே?நாலு பேருக்கு நல்லது செய்யற மாதிரி இருந்தா எந்த ஒரு விஷயமும் தப்பில்லைன்னு எங்க தலைவரே நாயகன்ல சொல்லியிருக்காரு.அதனால இது தப்பில்லை"
"அது சரி.நாலு பேருக்கு நல்லது செய்யற விஷயம் தான தப்பில்லை.இங்கே நானு,நீ ரெண்டு பேரு தான் இருக்கோம்.விஸ்வநாதா எனக்கென்னமோ இது கொஞ்சம் ஓவராய்த் தோணுது."
"அடச்சே..ஏண்டா பொட்டைப்புள்ளை மாதிரி பயப்படுதே???எங்க அப்பா நம்ம பழைய லைப்ரேரியன் சரியான நேரத்துக்கு வர மாட்டேங்கிறார்னு மொட்டைப்பெட்டிஷன் எழுதிப்போட்ட பொறவு தான் அந்த லைப்ரேரியனுக்கு கவுர்மென்டில ரிவிட் அடிச்சாங்க.இப்போ பாரு எப்படி டாண்ணு நேரத்துக்கு வந்திடறாரு.உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா?அந்த லெட்டரை என்னை வச்சித் தான் எழுதினாரு எங்க அப்பா. அது மாதிரி நம்மளையே எப்போ பார்த்தாலும் குறி வச்சு ரிவிட் அடிக்கிற சைன்ஸ் டீச்சருக்கு வக்கிற ஆப்பு தான் இந்தக் கடிதாசு"
"வெறும் கடிதாசு இல்லை.மொட்டைக் கடிதாசுன்னு சொல்லுடா.யாரோ வார மாதிரியிருக்கு.உள்ளே பாக்கெட்ல வச்சுக்கோ"
ஆம்.எங்கள் ஒன்பதாம் வகுப்பு "ஆ" பிரிவுக்கு அறிவியல் பாடம் சொல்லித்தர புதிதாய் வந்திருக்கும் சாந்தா டீச்சர் தான் எங்களது மொட்டைக் கடிதாசியின் இலக்கு.பின்னே என்னவாம்???அறிவியல் பாடமே சுட்டுப் போட்டாலும் வராத மக்குகள் பலரிருக்க,சுமாராய்ப் படிக்கும் எங்களையே குறி பார்த்து ஒவ்வொரு வகுப்பிலும் அத்தனை பேர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவதை என்னால் மறக்கவே முடியாது.புதுசாத் தாவணி போட்ட குமரிகள் முன்னால்,இன்னமும் திருமணம் ஒரு டிச்சர் கையால் அடி வாங்குவதை எத்தனை நாள் தான் பொறுத்துக்கொள்வது.
அப்பா சொல்படி மொட்டைப் பெட்டிஷன்கள் பல எழுதிய அனுபவம் உள்ள எனக்கு,இதெல்லாம் வெறும் ஜூஜூபியாய் இருந்தது.எங்கள் திட்டத்தின் படி ஒரு அரையாண்டுப் பரிச்சை விடுமுறை ஆரம்பிக்கும் சமயம்,இது போல ஒரு கடிதாசியை எழுதி அனுப்பிவிட வேண்டும்.
என்னன்னு எழுதறது...???ஹூம்..புதுசா வந்த பீ.டி.மாஸ்டருக்கும் நம்ம சையின்ஸ் டீச்சருக்கும் கசமுசான்னு எழுதுவோம்.அப்போ தான் விஷயம் இன்னும் பெரிசாகும்.பீ.டி.மாஸ்டருக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை.எப்போ ஸ்டாஃப்ரூம் போனாலும் ஏதோ பாலமுருகன் புத்தகங்களைப் பத்தி ரெண்டு பேரும் சதா அரட்டை அடிச்சிக்கிட்டே இருக்காங்க.அதுவும் தவிர ரெண்டு பேரும் வேற வேற ஜாதி.
அது சரி...யாருக்கு அனுப்புவது ?? தலைமை ஆசிரியருக்கு..சே..அந்த ஆள் பொண்ணுங்களைப் பார்த்தாலே மூத்திரம் குடிச்ச மாடு மாதிரி குழைவான்.திட்டம் படுதோல்வி ஆகிடும்..ஊர் ப்ரெசிடன்டுக்கு அனுப்புவோமே.சே..அந்த ஆளுக்குக் குடும்பத்திலேயே பல சிக்கல் இருக்கு.இதில எங்கே இதையெல்லாம் கவனிக்கப் போறாரு.பேசாம சாந்தா டீச்சர் வீட்டுக்கே அனுப்பிட வேண்டியது தான்.அவங்க அப்பா வேற செம ஸ்ட்ரிக்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.விஷயம் தெரிங்சதும் அவங்க அப்பா டீச்சரை வேற ஊருக்கு மாத்தல் வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவாரு,இல்லை டீச்சர் கொஞ்ச நாளைக்கு எங்களை அடிக்காம தன்னோட சொந்த துக்கத்தில மூழ்கிக் கிடப்பாங்க.
அப்புறமென்னா எங்க காட்டில தெனம் தெனம் மழை தான்.
திட்டத்தின் படி,எங்கள் அரையாண்டுப் பரிச்சை முடிந்த ஒரு சுபயோக சுபதினத்தில் எனது இடது கையினால் எழுதிய அந்த மொட்டைக் கடிதாசியினை பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பழனிக்குச் சென்று போஸ்ட் செய்துவிட்டு வந்தோம்.போஸ்ட் செய்த மறு நாளே நான் தாத்தா ஊருக்கும்,செந்தில் தனது மாமா ஊருக்கும் பயணப்பட்டோம்.எனது உடல் தான் தாத்த ஊரில் இருந்தது.முழு மனசும் டீசச்ர் வீட்டில் லெட்டர் கிடைத்ததா,அதற்குப் பின்னால் டீச்சருக்கு என்ன ஆயிருக்கும் என்பதைப் பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.
(தொடரும்)
11 August 2006
[+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 5 |
1)விஸ்வனாதன் - ராமமூர்த்தி இணை பிரிந்ததும் இருவரும் தனித்தனியாக இசையமைத்த படங்கள் எவை?
2)"உள்ளத்தை அள்ளித்தா" - ஒரு பழையபடத்தின் டிட்டோ காப்பி ஆகும்.அந்த ஒரிஜினல் படம் எது?
3)"ராசாத்தி,என் உசிரு என்னுதில்லை" திருடா-திருடாவில் இடம் பெற்ற இந்தப் பாடலின் சிறப்பம்சம் என்ன?
4)தஞ்சைப் பெரியகோவிலைப் பற்றிய நீண்ட காலம் மக்களிடையே பேசப்பட்டு வந்த ஒரு விஷயம்,பொய்யான ஒன்று அறிஞர் பெருமக்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.நான் எதை பற்றிக் குறிப்பிடுகிறேன்?
5)ஜெயலலிதா நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் எது?
சொன்னாங்க...சொன்னாங்க
1) " My plight is like Draupadi's.Everyone watched her being disrobed but no one helped."
--- 1998 மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட்டு மறுக்கப்பட்ட நிலையில் P.V.நரசிம்மராவ்
2) " The wife has not won.I have handed her husband back to her on a golden platter."
--- அமிதாப்,ஜெயா பச்சன் தம்பதியர் பற்றி ரேகா 1987-ல்
3) "The Rashtrapathi bhavan should not be treated like a nursing home.Of late,it has unfortunately became a den of the retiring old."
--- ராம் ஜெத்மலானி 1992-ல்
4) " From a buffalo's back I have landed into a helicopter. This is real democracy"
--- 1993ல் பீகார் முதல்வரான பின் லாலூ யாதவ்
[+/-] |
ஆப்பரேஷன் "மொட்டைக் கடிதாசு" |
வினோத் பேசுகிறேன்:
நேற்று இரவு 11.30 மணி:
"ஆப்பரேஷன் சக்ஸஸ்,Fwded தலை'ஸ் மெயில் டூ பெர்சு" என்னும் குறுஞ்செய்தியை வாசித்ததும் செபியுடன் உடனே பேச வேண்டும் என்னும் ஆர்வம் மனத்தில் பீறிட்டுக் கிளம்பியது.இரவு 10 மணி வாக்கில் அனுப்பப்பட்ட தகவலானது என்னைச் சேர்ந்த நேரமோ மனி 11.15.இதற்கு மேல் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம்;காலையில் அலுவலகத்தில் போய் பேசிக் கொள்ளலாம் எனத் தீர்மானித்து விட்டு உறங்கப் போனேன்.புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.அது சரி இந்த நல்ல செய்திக்குத் தானே கடந்த 168 மணி நேரமாய்க் காத்துக் கொண்டிருந்தோம்.காரியம் நல்லபடியாய் முடிந்ததைக் கொண்டாடாமல் எப்படித் தூங்க முடியும்?
என்னடா இவன் ஓவராகப் பில்ட்-அப் கொடுக்கிறானே என்று பார்க்கிறீர்களா?
விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை.அடியேனுக்கும்,செபி அலையஸ் செபாஸ்டியனுக்கும் சமீபத்தில் நடந்து முடிந்த வருடாந்தர அப்ரெய்ஸலில் புதிதாக எங்களுக்கு வந்த மேனேஜர் அல்வா கிண்டி கொடுத்து விட்டார்(வழக்கம் போலவே).இதைவிடக் கேவலமான உத்யோக ரேட்டிங் கார்டை இதுவரை யாரும் வாங்கியிருக்கவே மாட்டார்கள்.
என்னதான் உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும்,மேலாளர்களுக்கு சோப்பு போடாத அவர்களைக் காக்காய் பிடிக்காத எல்லாருக்கும் கம்பெனி வேறுபாடின்றி நிகழ்வது தான் இது.என்னைப் பொறுத்தமட்டிலும் சோப்பு போடுவது என்பது பிடிக்காத,எனக்கு சுட்டுப் போட்டாலும் வராத ஒரு சமாச்சாரம்.
போன வருடமும் இதேபோல் இதற்கு முந்தைய மேனேஜரால் தரப்பட்ட மோசமான பின்னூட்டத்தினால் எனக்கு வரவிருந்த பணி உயர்வும் அது சார்ந்த சௌகர்யங்களும் பறி போனது.சரி அடுத்த முறை பார்த்துக் கொள்வோம் என்று ஒரு வருடம் இலவு காத்த கிளியாய் இருந்த எனக்கு இந்த முறையும் அதே அல்வாவை வேறு ஒருவர் அழகாய்க் கிண்டித் தந்தார்.செபியின் கதையைக் கேட்கவே வேண்டாம்.அவனுடைய காதலி இருக்கும் சென்னை கிளைக்கு மாற்றல் வேண்டி அனுப்பப்பட்ட விண்ணப்பத்தினை,ஏதோ சொத்தை காரணம் காட்டி நிறுத்திவிட்டார். எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் சித்தாந்தத்தின் படி நானும் செபியும் இத்தகைய ஒரு சூழலில் போட்ட ஆப்பரேஷன் தான் இது.
ஒரு வாரத்திற்கு முன்னால்,காலையில் 11.30 மணி:
"டேய் செபி,உண்மையாவா சொல்றே?"
"மொதல்ல அந்த மேட்ச் பாக்சை இப்படிக் கொடு.தல செல்ஃபோன்ல குசுகுன்னு யாரோ கன்சல்டன்ட் கிட்ட பேசினதக் கேட்டிட்டுத் தான் இருந்தேன்.சம்பளம் பத்தியும் ஓவரால் பெனிஃபிட்ஸ் பத்தியும் கேட்டது என் காதில ஸ்பஷ்டமா விழுந்தது.நான் பார்க்கறென்னு தெரிஞ்சதுமே யாரோ பேங்க் ஆளு கிட்ட பேசற மாதிரி மனுஷன் இன்ட்ரெஸ்ட் ரேட் பத்தி விசாரிக்க ஆரம்பிசிட்டான்.சரியான டகால்ட்டி டாக் அது.அப்புறம் நம்ம ரெட்டி கூட தலயை போன வாரம் "இன்னவேட்டர் பில்டிங்ல" ஃபுல் பார்மல்சில பார்த்ததா சொன்னான்.கிளையன்ட் மீட்டிங்குக்கே செப்பல்சில வர்ர ஆளு,அங்கே ஷூ எல்லாம் போட்டிட்டு என்ன பண்ணியிருப்பான்??"
"ஹூம்.நீ சொல்றத வச்சிப் பார்க்கும் போது பட்சி வெளியே பறக்கத் திட்டம் போடுதுன்னு நினைக்கிறேன்.பறந்து போறதுக்குள்ள அதுகிட்ட கொஞ்சம் வெளையாடிப் பார்த்தாத்தான் என்ன?செபி சேட்டா எனிக்கு ஒரு ஐடியா தோணுது"என்று உருவானது தான் இந்த ஆப்பரேஷன்.
என்ன ஜேம்ஸ்பாண்ட் பட எஃபெக்ட் கிடைக்கிறதா??(சரி..சரி...எனக்கே கொஞ்சம் ஓவராத் தான் இருக்கு)
மற்ற நண்பர்களைக் கலாய்ப்பதற்காக, செபி பல்வேறு பெயர்களில் மின்னஞ்சல் கணக்குகளைத் ஜீமெயிலில் துவக்கி வைத்திருப்பான்.அதில் ஒன்று தான் எங்கள் ஆப்பரேஷனுக்கு உதவப் போகும் ஒரு ஒரு தனியார் ஜாப் கன்சல்டன்டின் மின்னஞ்சல் முகவரி.
அந்த முகவரியிலிருந்து எங்கல் தலக்கு "வெளி நாட்டு வேலை வாய்ப்புகள்" பற்றிய ஒரு மயிலைத் தட்டி விட்டு அதற்கு தலயிடமிருந்து ரெஸ்பான்சினையும் கூடவே அதனுடைய பயோடேட்டாவினையும் பெறுவது தான் ஆப்பரேஷனின் முதல் இலக்கு.அப்படி தலயிடமிருந்துவந்த மயிலினை தலயின் தலையான பெரிசுக்கு அனுப்பி வைப்பதுதான் எங்கள் ஆப்பரேஷனின் இறுதி இலக்கு.
"வினோ.சரி நம்மோட மெயிலுக்கு மயங்கி தலையும் அவரோட CV-ய அனுப்பிடறாரு.அதை பெருசுக்கு forward பண்றதனால என்ன லாபம்?ஏதோ வயாக்ரா மாத்திரை,ஜேக்பாட் அடிச்சிடுச்சு அப்படின்னு தினமும் வர்ர ஸ்பேம் மெயில்கள்ள ஒண்ணுனு நினைச்சி டெலீட் செஞ்சிட்டார்னா?"
"செபி.இப்பெல்லாம் மேனேஜர் லெவல்ல வேலை மாற்றும் ஆளுங்களோட ப்ரொஃபைல் சரியாத்தான் இருக்கா இல்லை ஏதாவது மொள்ளமாரித்தனம் பண்றாங்களான்னு கண்டுபிடிக்க நெறைய பேக்கிரவுண்டு செக் செஞ்சிட்டு இருக்காங்க.அப்படி நம்ம தலையோட பேக்கிரவுண்ட் செக்குகாகத் தான் இந்த மயிலை அனுப்பறோம்னு தெளிவாச் சொல்லீடுவோம்.நாம பெருசுக்கு அனுப்பற மெயில்ல இந்த மாதிரி உங்க கம்பெனியில உங்க கீழ வேலை செய்யும் இவர்,புதிய வேலை தேடிக்கொண்டிருக்கிறார்.இவரோட ஃப்ரொபைலையும் அனுப்பியிருக்காரு.இது கரீக்டான்னு பார்த்துச் சொல்லௌங்களேன் அப்படின்னு ஒரு பிட்டைப் போடுவோம்"
நான் சொல்லி முடித்தது தான் தாமதம்.இதற்காகவே ஜென்ம ஜென்மங்களாய்க் காத்திருந்தது போலத் துள்ளிக் குதித்தான் செபி.
"அடிப்பொளி சேட்டா,சூப்பர் ஐடியா மச்சி,இது மட்டும் சக்ஸஸ் ஆச்சு உனக்கு ஒரு பெரிய ட்ரீட் தர்ரேன்".
"செபி.முதல் கட்ட நடவடிக்கையின் படி நம்ம தலைக்கு ஒரு ஜாப் கன்சல்டன்ட் கிட்ட இருந்து அனுப்பின மாதிரி ஒரு மெயில் ரெடி பண்ணு.நான் போய் ஒரு தம் போட்டிட்டு வந்திடரேன்".மனம் முழுக்க ஒரு சாதனையைச் செய்த நிறைவு.முழு சிகரெட்டினையும் இழுக்க முடியாமல் பாதியிலே திரும்ப செபியின் இருக்கைக்கு வந்தேன்.ட்ராஃப்ட் காப்பியுடன் தயாராக இருந்தான் செபி.
"சான்ஸே இல்லை.இந்த மாதிரி ஒரு மெயிலைப் பார்த்தா நம்ம தல மட்டும் இல்லை.நம்ம பெரிசுக்கே சபலம் வந்திடும்.சரி தலயோட பெர்சனல் ஐ.டி. தெரியுமா உனக்கு"
********@hotmail.com தானே??
"அத்தே தான்.ரெடி...ஒன் டூ த்ரீ...இப்போ சென்ட் பட்டனை அமுக்கு."
"அப்பாடா.ஒரு வழியா அனுப்பிட்டேன்.வினோ,இப்பவே கேன்டீன் போய் இந்த சந்தோஷத்தைக் கொண்டாடலாம்."
இன்று அலுவலகத்தில்,காலை 10 மணி:
"செபி, ஏன் இவ்ளோ லேட்டா வர்ரே?என்ன நைட்டு ஓவர் தண்ணியா??"
"வினோ,உனக்கே இதெல்லாம் ஓவராத் தெரியலை.நம்ம வாத்யாரோட ஜூனியருக்கு இன்னைக்குப் பிறந்த நாளாம்.சாயங்காலம் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்கார்.கிஃப்ட் வாங்கப் போயிருந்தேன்.நேத்து கூட இதப் பத்தி பேசீட்டு இருந்தோமே..சரியான பட்ட்ர் நீ..."
"சரி...சரி.ரிலாக்ஸ் மேன்.எங்கே நம்ம தல கிட்ட வந்த மெயிலைக் காமி."
"இங்கே பாரு.இந்த மெயில் தான்.பயங்கர டெஸ்பரேட்டா வேலை தேடீட்டு இருக்கார் போலத் தோணுது.பாரேன்... முகம் தெரியாத ஒரு அனானிமஸ் மெயிலை நம்பி அவரோட முழு ப்ரொஃபைலையும் அனுப்பி இருக்கார்.சரி இந்த மெயிலை இப்போ என்ன பண்ணலாம் வினோ?"
"அப்படியே Fwd பட்டனை அமுக்கி நாம அன்னைக்கு முடிவு செஞ்சு வச்ச மாதிரி ஒரு மெயிலைத் தட்டி நம்ம பெரிசோட அஃபீஷியல் மெயில் ஐ.டிக்கு அனுப்ப வேண்டியதுதான்."
அப்படி அனுப்பிய நாற்பதாவது நிமிடத்தில் எங்கள் தல பெரிசின் அறைக்குள் சென்றது.அந்த நாற்பது நிமிடங்களும் எங்களுக்கு யுகங்களாய்க் கழிந்தது.
"வினோ.பெரிசு நாம அனுப்பின மெயிலை முழுசா நம்பிட்டார் போலத் தோணுது"
"எப்படிறா சொல்றே?"
"தல, பெருசு ரூமுக்குள்ளார போய் இருபது நிமிஷம் ஆச்சு..இன்னும் காணோமே" என்று சொல்லி முடிப்பதற்குள் வாயெல்லாம் பல்லாக வெளிப்பட்டார் எங்கள் தல.அதற்குப் பிறகு எங்களுக்குக் கையும் ஓடவில்லை;காலும் ஓடவில்லை.
பெரிசு கண்டிப்பாகக் கடித்துக் குதறி இருப்பாரே?கடி வாங்கிய பிறகும் மனிதர் சந்தோஷமாக இருக்கிறாரே???உள்ளே என்ன நடந்து இருக்கும்?
கடிக்க எனக்கு பன்னிரெண்டு நகங்கள் போதவில்லை....
(தொடரும்)
*************************************************************
உள்ளே அப்படி என்ன ஆச்சு???கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்....
*************************************************************
10 August 2006
[+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 4 |
தாத்தாவின் வைப்பாட்டி வீடு
சாயக்காரர் தெருவில்
கண்கள் நிறைய மை
மூக்கில் இருபுறமும் மூக்குத்திகள்
எப்போதும் வாயில் வெற்றிலை
அவள்வீட்டுக்குப் போய் வருவதென்றால்
எங்களுக்கு சொர்க்கம் போல
என்னை அவளுக்கு மிகவும் பிடிக்கும்
"மொதலாளிகளோட சின்னவுக பிள்ளை"
அக்கம்பக்கம் என்னை அறிமுகம் செய்வாள்
அஞ்சாம் வகுப்புப்பையன் நான்
வாங்க ராசா என்பாள்
தாத்தா இருக்கும் போது
போகக்கூடாது யாரும்
"இங்க என்னடா ஒனக்கு ஜோலி"
என விரட்டுவார்
"என்னைப் பார்க்க வந்திருக்கு பிள்ளை
இருக்கட்டுமேயே"யென்று இழுத்துக் கொள்வாள்
மீன் குழம்பு ஊற்றி
சோறு பிசைந்தது தருவாள்
"கோழி அடிச்சிருக்கேன் பாட்டிக்கு
கொண்டு போறீகளா" என்பாள்
என் எதிரிலேயே சேலை மாற்றுவாள்
வெட்கப்படும் என் குஞ்சு தொட்டு
கேலி பண்ணிச் சிரிப்பாள்
திடீரென்று ஒருனாள் யாரும்
அவள் வீட்டுக்குப் போகக்கூடாது என்றார்கள்
தாத்தாவும் போகாமல் இருந்தார்
எனக்குப் போய்
அவள் வீட்டு ஊஞ்சலில்
ஆடவேண்டும் போலிருந்தது
யாருக்கும் தெரியாமல் போனேன்
எவரோ ஒருவர் படுத்திருக்க
அவள் விசிறிக் கொண்டிருந்தாள்
"வாங்க என் சின்னராசா"
எப்போதும் போல் அழைத்தாள்
வெறித்துப் பார்த்தேன் பின்
வெறுப்புடன் வெளியில் ஓடினேன்
பலதெரு தாண்டினேன்
ஒருமுனையில் நின்றேன்
மூத்திரம் கழித்தேன் வெகுநேரம்.
-- ஸ்டெல்லாபுரூஸின் "வீட்டுக்குள் ஒரு கல்வெட்டு"
------------------------------------------------------------------------------------------------
இந்த அறுவர் கூட்டணி யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
[+/-] |
"மாருதி"யின் கதை |
14 திசம்பர் 1983 - இந்திய ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றைப் பொறுத்தமட்டிலும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.
தினம் தினம் சந்தையில் அறிமுகமாகும் அல்ட்ரா மாடர்ன் கார்களை இன்றைய இந்திய இளைஞர்கள் அலுப்புடன் ஏற்றுக் கொள்கின்றனர்.இன்னமும் புதிய மாடல்கள் சீரான கால இடைவெளியில் அறிமுகப்படுத்தப் படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்தங்களது வண்டியில் எந்த ஒரு சிறு இடர்பாடோ அல்லது பழுதோ சரியான நேரத்தில் சிறப்பான முறையில் விற்பனைக்குப் பிந்திய சர்வீஸால் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் பெருங்கவனம் செலுத்துகின்றனர்.பாவம்,23 வருடங்கட்கு முன்னால் இந்தியாவில் வெறும் இரு கார் மாடல்கள் மட்டுமே இருந்தது என்பதனையோ,பிரீமியர் பத்மினி ரக வண்டியை வாங்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பதனையோ அல்லது நுகர்வோர்கள் கார் தேவைக்காகத் தங்களை நம்பி இருக்கிறார்கள் என்னும் நினைப்பில் ஆட்டம் போட்ட டீலர்கள் பற்றியோ அறியாதவர்கள்.
இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் நான்கு சக்கர சொகுசு வாகனச் சந்தையில் அப்போது ஒரு இக்கட்டான சூழல் நிலவி வந்தது என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.நடுவண் அரசின் சோஷலிசத்தினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளே இதற்கு முழு முக்கிய காரணம்.சிகப்புநாடா ராஜ்ஜியத்தில், ஆடம்பரப் பொருளாகக் கருதப்பட்ட காரானது பட்டியலில் கடைசி இடத்தினைப் பெற்றது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லை. பற்றாக்குறைகள் நிறைந்த,திறம் குறைந்த பொதுப் போக்குவரத்து வசதியினையே, மக்கள் பெரிதும் உபயோகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்த அரசு வேறு என்ன செய்யும்?உலகளாவிய கார் உற்பத்தித்துறையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.இந்திய நடுத்தர வர்க்கத்தினரில் சிலர் காரில் செல்வது பற்றிய கனவுகளில், எப்போதும் போல அமிழ்ந்திருந்தனர்.
அப்புறம் என்ன ஆச்சு??
ஒரு ஏர்-க்ராஷில் சஞ்சய்காந்தி இறந்தபின்னர் இந்த நிலைமை மாறத்தொடங்கியது.1970-ஆம் ஆண்டின் போது சஞ்சய்காந்திக்கும் மற்றும் வேறு இரண்டு பேருக்கும் கார்கள் உற்பத்தி செய்வதற்கான உரிமம் அரசால் வழங்கப்பட்டது.அந்த உரிமமானது செயல்முறைப் படுத்தப்படுவது சிவப்பு நாடா சிக்கல்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.அவசரநிலைப் பிரகடனம் மற்றும் அதன் பின்னால் வந்த ஜனதா அரசு என பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையேயும், சஞ்சய் காந்தியின் மாருதி லிமிட்டெட் நிறுவனமானது கார்களை உற்பத்தி செய்ய முயற்சி செய்து வந்தது.மற்ற இருவரும் அந்த முயற்சியில் கூட ஈடுபடவில்லை.1977ல் மாருதி லிமிட்டெட் நிறுவனம் லிக்குவிடேஷன் ஆனது.1980ல் சஞ்சயின் மறைவுக்குப் பின்னால் சஞ்சயின் கனவினை நனவாக்குவதில் தீவிரமாக ஈடுபடலானார் இந்திரா காந்தி.
பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் அந்த நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தும் அரசின் வசம் வந்தது.இப்படியாக 100சதவிகித அரசாங்கப் பங்குகளுடன் மாருதி உத்யோக் லிமிட்டெட்(MUL) தொடங்கப்பட்டது.வாகன உருவாக்கத்தில் வெளிநாட்டுத் தொழில்நுட்பமும்,முதலீட்டு ரீதியாக 40 சதவிகித ஈக்வெட்டிக்கு ஒரு வெளிநாட்டுப் பங்குதாரரும் MUL-க்குத் தேவைப்பட்டனர்.இவை எல்லாம் அப்போது இருந்த சோஷலிசம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு முரணானது என்பதினை நினைவில் கொள்க.
ஒருபுறம், இந்திய நுகர்வோரின் கார் சம்பந்தமான தேவைகளைக் கண்டறிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மறுபுறம் தொழில் நுட்பம் வழங்கக்கூடிய ஒரு பார்ட்னருக்கான தேடுதல் உலக அளவில் நடந்தது.இறுதியாக ஜப்பானைச் சார்ந்த சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் தொழில்நுட்ப உரிமம் சம்பந்தமாக ஒரு ஒப்பந்தமும்,இருவரும் இணைந்து கூட்டாய் ஒரு நிறுவனம் அமைப்பது சார்பாக ஒரு ஒப்பந்தமும் கையொப்பமிடப்பட்டது.14-திசம்பர் 1983ல், அப்போது இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி அவர்களால் முதல் மாருதி800 கார் வெளியிடப்பட்டது.அதற்குப் பிறகு பல நிகழ்ந்தது எல்லாம் வரலாறு மறக்காது.
இதைத்தானே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று இந்திய நடுத்தரமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர்.கார்களுக்கான உள்ளூர் தேவை எல்லா எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கியது.MUL,களத்தில் இறங்கும் போது ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கார்கள் என்ற இலக்குடன் இறங்கியது.அதற்கு முந்தைய 10 வருடங்களில் வெறும் 35000 - 40000 என்று தேக்க நிலையில் இருந்த மொத்தக் கார் மார்க்கெட்டை வைத்துப் பார்க்கும் போது இந்த இலக்கு சாத்தியமே இல்லை என்று பல "அறிஞர் பெருமக்கள்" திருவாய் மலர்ந்தருளினார்கள்.ஆனால் அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் ஆச்சரியத்தால் வாயைப் பிளக்கும்படி அமைந்தது அந்தக் காரின் வெற்றி.மாருதி800 வேண்டி முன்பதிவு செய்து நீண்ட காலம் காத்திருத்தல்,காரின் மீதான ப்ரீமியம் போன்றவை பல காலம் தொடர்ந்தது.காலங்கள் உருண்டோடின.1984ல் ஆம்னி,1985ல் ஜிப்ஸி,1993ல் ஜென் என்று புதிய மாடல்கள் சீரான காலகட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டன.
பெருகும் நடுத்தரவர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவில் வெளியான முதல் கார் மாருதி800 எனலாம்.இதுதான் அதனுடைய வெற்றிக்கு மூலகாரணம்.அதிக நம்பகத்தன்மை,வண்டியை இயக்குவதில் இருக்கும் எளிமை மற்றும் பெண்மை கலந்த வெளிப்புறத் தோற்றம் போன்ற குணாதிசியங்கள் பெண்களையும் மாருதியின் பால் ஈர்த்தது.தரத்தில் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காத ஜப்பானியத் தொழில்நுட்பம்,விற்பனைக்குப் பிந்திய சிறந்த சர்வீஸ் என்ற பண்புகள் மேல்தட்டு வாடிக்கையாளர்களையும் கவர்ந்தது.1994க்குப் பின்னால் அசுரவேகத்தில் அதிகரித்த மாருதியின் வளர்ச்சியைக் கண்ட,உலகளாவிய கார் உற்பத்தியாளர்கள் இந்தியா என்ற மாபெரும் சந்தையின் சக்தியினை அப்போது தான் உணர்ந்தனர்.அதற்குப் பிறகு நடந்ததனை நாடு அறியும்.
சொந்தமாக ஒரு கார் என்னும் பலரது கனவினை நனவாக்கிய மாருதிக்கு ஒரு பெரிய "ஓ..."
தகவல் உபயம்:கூகிளான்டவர்,MUL இணையத் தளம் மற்றும் பொழுது போகாத பூங்காவனம்
09 August 2006
[+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 3 |
குளம்படி ஓசைக் கவிதை
குதிரையின் கனைப்புக் கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் விழியே சக்தி
குதிரையின் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு-இது
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்
-- பாலகுமாரன் "இரும்பு குதிரைகள்"
------------------------------------------------------------------------------------------------
1975: ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய மிதிவண்டி உற்பத்தியாளர் ஆனது.1957ல் வெறும் ஒரு ஆண்டிற்கு 7500 மிதிவண்டிகள் என்று துவங்கிய இந்த நிறுவனத்தின் வருடாந்தர விற்பனை 2005-ல் 6.5 மில்லியனைத் தொட்டது.
1978: இந்தியாவின் முதல் மொபெட்டான "ஹீரோ மெஜஸ்டிக்"சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்டது.முதல் நான்கு வருடங்களில் இதன் வருடாந்தர உற்பத்தி 1 லட்சத்தைத் தொட்டது.
திசம்பர் 1983: முதல் மாருதி- 800 சாலையில் சீறிப்பாய்ந்த வருடம்.அறிமுகப்படுத்தப்பட்ட இரு வருடங்களிலேயே "மொபிலிட்டி"பற்றிய எண்ணங்களை மாற்றியமைத்த இந்த வண்டி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்னும் பெருமையினையும் பெற்றது
மே 1985: ஹீரோஹோண்டா நிறுவனத்திலிருந்து முதல் பைக்கான CD100 சந்தையில் காலடி எடுத்துவைத்தது.தடைகள் பல தகர்த்து எறிந்துவிட்டு 2001-ல் உலகில் மிக அதிகம் விற்பனையாகும் பைக் என்னும் சாதனைச் சிகரத்தை எட்டிப் பிடித்தது.
------------------------------------------------------------------------------------------------
ரெனால்ட்ஸ்-045 பால் பாயிண்ட் பேனாவினை(கருப்பு மை) ஓங்கித் தரையில் பதினெட்டு முறைகள் குத்திய பின்னரும் அதை உபயோகப்படுத்துவதில் பிரச்சினை இருக்காது.
பழைய ஒலினாடாவிலுள்ள சுருளினை சுமார் 1.04 மீட்டர் தூரம் வரை அறுந்து போகாமல் இழுத்துக் கொண்டு போகலாம்.
--பொழுது போகாத பூங்காவனம்.
[+/-] |
பிளாக்கரின் சொதப்பல்கள் |
பிளாக்கரின் சொதப்பல்களால் இன்றைய எனது பதிவினைத் தமிழ்மணத்தில் சேர்க்க இயலாமல் திணறுகிறேன்.கீழே உள்ள சுட்டிக்குச் சென்று இன்றைய நட்சத்திரப் பதிவினை வாசிக்கவும்.
http://konjamkonjam.blogspot.com/2006/08/blog-post_09.html
அன்பின்,
சுதர்சன்.கோபால்
[+/-] |
எனது முன் பதின்மங்களில் சில பாடல்கள் |
நினைத்துப் பார்த்தல் என்பது எப்போதுமே மனிதனுக்கு அலாதியான விஷயம்.அதெல்லாம் ஒரு காலம் என என்றைக்கோ நடந்தவற்றை ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் அசைபோடுகிறது.அசை போட்டு அசை போட்டு மனம் ஆனந்தப்படுகிறது அல்லது அல்லல்படுகிறது.
--"அது ஒரு நிலாக் காலம்" நாவலின் ஆரம்பக் குறிப்பிலிருந்து
பதின்ம வயது...ஆஹா... முகத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க நினைக்கும் பருக்களுக்குப் பின்னால் தான் எத்தனை கனவுகள்,ஆசைகள். வாழ்க்கையில் ரீவைண்ட் என்னும் பொத்தான் இருக்காதா என்று ஏங்காத நாட்கள் இல்லை.
காதல்,நட்பு,நம்பிக்கை துரோகம்,ஏமாற்றம்,துக்கம்,அதீத சந்தோஷம்,வெற்றி,தோல்வி என்று கலைடாஸ்கோப்புக் காட்சிகளாய் விரிகிறது என் பதின்ம நினைவுகள்.அந்த ஒவ்வொரு காட்சியினையும் அப்போது வெளி வந்த பாடல் எப்போதும் நினைவூட்டி வருகிறது. "அந்தக் காலத்துப் பாட்டு மாதிரி வருமா?இப்பவும் வருதே பாட்டுங்கற பேர்ல..." என்று அங்கலாய்க்கும் பெரிசுகளிடம் கேட்டுப்பாருங்கள்.அவர்கள் குறிப்பிடும் எல்லாப் பாடல்களும் அவர்களது பதின்மத்தில் வெளிவந்த திரைப்பாடல்களாகத் தான் இருக்கும்.அப்படி எனது முன் பதின்ம வயதில் ரசித்த சில பாடல்களை இங்கே பட்டியல் இட்டுள்ளேன்.
பூவுக்கென்ன பூட்டு -> பம்பாய்:
ஏ.ஆர்.ரகுமானின் இசை,வைரமுத்துவின் வரிகள்,மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான "பம்பாய்"யின் பாடல்கள் 1995 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சார்ட் பஸ்டராய் இருந்தன.மணீஷாவுக்கு குழந்தை பிறப்பதில் ஆரம்பித்து,அந்தக் குழந்தைகள் பெரிதாவதைக் காட்ட இந்தப் பாடல் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும்.படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் இந்தப் பாடலினை நோயல்,அனுபமா மற்றும் பல்லவி பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்கள்.பாடலின் இடையிடையே வரும் புல்லாங்குழலின் interlude அற்புதமாயிருக்கும்.(நவீன்???) முதன்முதலில் தம் அடித்துக் கொண்டே பார்த்த படம் இது,என்பதால் கொஞ்சம் தனி கவனிப்பு இதற்கு.
"வாழத்தானே வாழ்க்கை...வீழ்வதற்கு இல்லை.
ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு"
காதலிக்கும் பெண்ணின் கைகள்->காதலன்:
காதலன் படத்தில் வந்த அத்துனை பாடல்களும் நன்றாக இருக்கும்.இருந்த போதும் உதித் நாராயணனின் மழலைக் குரலுக்காகவே கேசட்டை ரீவைண்ட செய்து கேட்ட நாட்கள் ஏராளம்.இந்தப் பாடலில் இருந்து தான் உதித்ஜீ தனது தமிள்த் தொன்டினைத் துவங்கினார்.அவருக்கு மட்டுமல்ல பல்லவி பாலசுப்ரமணியத்திற்கும் இது தான் முதல் பாடல்.ஷங்கரின் அட்டகாசமான பாடல் படமாக்கமும்,ராஜூ சுந்தரத்தின் நடன அமைப்பும் பார்ப்பவரை அப்படியே கட்டிப் போட்டுவிடும்.S.P.பாலாவின் நடனமும் தான்.பாடலில் ஒரு குறிப்பிட்ட ஃப்ரேமில் ஷங்கர்,ராஜூசுந்தரம் மற்றும் ஷங்கரின் அசிஸ்டென்ட் மாதேஷ் தோன்றுவார்கள்.தொலைந்து போன ஹூக்கைத் தேடுவதில் ஆரம்பிக்கும் இப்பாடலில் மனம் தொலைந்து போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அப்புறம் எனது முதல் காதல்...காக்கர்லா மகளின் மீது.
"குண்டுமல்லி ரெண்டு ரூபாய்.
உந்தன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தாலே லட்ச ரூபாய்"
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ -> சூரிய வம்சம்:
"லா லா லா லா..." என்று ஆரம்பிக்கும்போதே உணர்ந்து கொள்ளலாம் இந்தப் பாடல் யாரல் இசையமைக்கப்பட்டது என்று.எளிமையே அழகு என்னும் எனது சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் மற்றுமொரு விஷயம் இந்தப் பாடல்.விக்கிரமன்,எஸ்,ஏ,ராஜ்குமார் கூட்டணியில் வெளியான மற்றுமொரு சூப்பர் ஹிட் பாடல்.பாடல் படமாக்கப்பட்ட இடமும்,மு.மேத்தாவின் வரிகளும் பாடலுக்கு மற்றுமொரு பக்கபலம். அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை வாராத வீடுகளில்லை.அதுவும் பதின்ம வயதில் கேட்கவே வேண்டாம்.அப்படி ஒருமுறை அப்பாவை எதிர்த்துப் பேசிவிட்டு,மனம் உருகிப் பார்த்த படம்.ஹூம். கலெக்டரம்மாவுக்குக் கணவானாகும் கொடுப்பினை எனக்கு இல்லை.
"மழை பேய்ஞ்சாத் தானே மண்வாசம்...ஒன்னை நெனச்சாலே பூவாசம் தான்"
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் -> பசும்பொன்;
சீமானின் கதை வசனத்தில்,வித்யாசாகரின் இசையில்,பிரபுவுக்கு அம்மாவாக ராதிகா நடித்து பாரதிராசாவின் இயக்கத்தில் வெளியான மற்றுமொரு கிராமியப் படம்,"பசும்பொன்".பிரபுவுக்கு இணையாய் சரண்யா நீண்ட நாட்களுக்குப் பின்னர் திரையில் தோன்றியது;சிவாஜியும்,பிரபுவும் கடைசியாய் இணைந்து பணியாற்றிய படம் என்னும் பல சிறப்புகளைக் கொண்டது இந்தப் படம்.மூக்கினால் நாக்கினத் தொட இயலாத காதலனும் அவனைச் சீண்டி வேடிக்கை பார்க்கும் காதலிக்கும் இடையிலான ஊடல் தான் பாடல்.கிருஷ்ணசந்தர்,சுஜாதாவின் குரல்கள் விக்கி-யுவா கூட்டணிக்குப் பாந்தமாய்ப் பொருந்தி இருக்கும்..எனக்கு வாழ்க்கையில் நேர்ந்த முதல் மித்திர துரோகம்.ஓட்டைப்பல்லானால் முதுகில் குத்தப்பட்டது மறக்கமுடியாது.சிட்டுக்குக் கல்யாணம் ஆனது உனக்குத் தெரியுமா ஓ.ப.??
"நெலாக் கறைய அழிச்சாலும் ஒன்னத் திருத்த முடியாது
புறட்டிப் போட்டு அடிக்காம ஆமை ஓடு உடையாது"
கவலைப்படாதே சகோதரா -> காதல் கோட்டை:
தேவாவின் இசையில் பெரிய ஹிட்டான ஒரு கானாப் படல்.தலைவாசல் விஜய்க்கு தேவாவின் குரல் கனகச்சிதமாய்ப் பொருந்தி இருக்கும்.தலையுடன் த.வா.விஜயும் சேர்ந்து ஆட முயற்சி செய்திருப்பார்கள். ஒரு ஏற்காட்டுப் பயணத்தில் "சி" செக்சன் சரவணனை இந்தப் பாடல் வைத்துக் கலாய்த்துக் கொண்டே வந்தது அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.உன்னுடைய வீடியோகடைக்கு அவளுடைய பெயரை வைத்துக் கொண்டாடின என் நல்ல சினேகிதனே,நீ ஏன் குடிப்பதை நிறுத்தக் கூடாது?
ஊ..ல..ல..ல..லா-> மின்சார கனவு:
சித்ராவுக்கு மற்றுமொரு தேசிய விருது.வண்ணமயமான விஷூவல்ஸ்,இளைஞர்களுக்கு இணையாய் ஆடும் நாசர்,பாடலில் இடையில் வரும் சாவுக்கொட்டு,அதற்கு ஆடும் பிரபுதேவா குழுவினர் இதற்கெல்லாம் மேலாக நீல நிற மினி ஸ்கர்ட்டில் காஜோல் என்று ஒரு கலவையான பாடல்.நேர்த்தியான நூல்புடவைகளில் பத்து வருடங்களுக்கு முந்திய அர்ச்சனா மாதிரி சிரித்தபடி எங்கள் மாமாவைப் பார்க்கவந்த உங்களுக்குத் திருமணமானதை ஏன் சொல்லவில்லை?இந்தப் படத்திற்கு நான்,நீங்கள் மற்றும் சாரதி மாமா எனக் கூட்டணியாப் போனது நினைவிருக்கிறதா உங்களுக்கு?
."மழைத்துளி மண்ணில் வந்து சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்
அது என்னை வானவில்லில் கொண்டு சேர்த்துவிடுகிறதே சில நேரம்"
தென்றல் வந்து தீண்டும்போது ->அவதாரம் :
கண்பார்வையற்ற கதாநாயகிக்கு வண்ணங்களைப் பற்றி கதாநாயகன் விளக்கும் பாடல் இது.அவதாரம்,நாசரின் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான முதல் படம்.இதில் எல்லாப் பாடல்களையும் இளையராசா பாடியிருப்பார்.இந்தப் படத்தின் ஒரே டூயட் பாடலான இது ஒரு விஷூவல் ட்ரீட். எங்கள் பள்ளிக்கருகே இருந்த ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் இருந்த பார்வைக் குறைபாடு உடைய சகோதரி,வெற்றுவெளியில் சிரிப்பை விதைத்துக் கொண்டு யாருக்காகக் காத்திருந்தீர்கள்?இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு உங்கள் ஞாபகம் தான் வருகிறது என்பதை உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?
"எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது"
கோகுலத்துக் கண்ணா கண்ணா->கோகுலத்தில் சீதை:
அகத்தியன் இயக்கும் படங்களுக்கு பாடல்களையும் அவரே எழுதிவிடுவார்.அப்படி அவர் எழுதி தேவா இசையமைப்பில் வந்த இது ஒரு சிச்சுவேஷன் பாடல் ஆகும்.எளிமையான இசைக்காகவும்,அர்த்தமுள்ள வரிகளுக்காகவும்,தேவாவின் குரலுக்காகவும் எனக்கு ரொம்பப் பிடித்த பாடல். இது எங்கள் கணக்கு வாத்தியாருக்கு அர்ப்பணம்.பரிட்சைக்கு முன்னால் நீங்கள் என்னைத் தியேட்டரில் பார்த்ததை எங்கள் அப்பாவிடம் போட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால் இன்னேரம் எருமை மாடு மேய்த்துக் கொண்டிருப்பேனோ என்னவோ???
"சோகமில்லை.சொந்தம் தேவையில்லை.ராவணின் நெஞ்சில் காமமில்லை..கிருஷ்ண,கிருஷ்ண,கிருஷ்ண கேசவனே..."
மாயா மச்சீந்த்ரா->இந்தியன்:
கிளைமாக்சினை நெருங்கும் போது வரும் எல்லாப் பாடல்களும் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போடும் படியாய் இருக்க வேண்டும் என்னும் திரையுலக லாஜிக்கினை மீறாத மற்றுமொரு பாடல்.அதிலும் ஷங்கரின் இயக்கம்,உலகநாயகனின் நடிப்பில் என்றால் கேட்கவா வேண்டும்.வாலியின் வரிகளை பாலாவும்,சுவர்ணலதாவும் தங்கள் குரலால் மெருகூட்டியிருப்பார்கள்.சரோஜ்கான் தமிழில் பணியாற்றிய ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.தன்னுடன் வேலை பார்க்கிற பெண்ணை விரும்பி,அப்பா-அம்மா சம்மதத்துடன் கட்டிக் கொண்ட அண்ணனின் வளைந்த மூக்குச்சினேகிதரை இப்போது என் ஊருக்குப் போகும்போது,எங்கள் தெருவில் பார்க்க முடியவில்லை.அவரது கல்யாணத்தில் தான் இந்தப் படம் பார்த்துவிட்டு முதன்முதலில் தீர்த்தவாரி ஆடினேன் என்பது அவருக்குத் தெரிந்திருக்குமோ?
"கனலில் பனியாக் கரைவோமா
கரைந்தே கவிதை புனைவோமா
சொல்லடி சோன் பப்படி"
பாடல்களைப் பிறிதொரு சமயத்தில் மீண்டும் தொடர்வேன்
08 August 2006
[+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 2 |
விலைச்சீட்டுப் போல் பெயர் தொங்கவிடப்படாத ஓர் ஆண் ஆண் எனவும்,ஒரு பெண் பெண் எனவும், அவரவர் மேல் உள்ள அதிகபட்ச சினேகிதத்துடனும் மரியாதயுடனும் சந்தித்து,அப்பால் போய் மறுபடி சந்திக்க முடிகிற அல்லது முடியாமலே போய் விடுகிற நல்ல உறவுகளுக்கு என்ன பெயரிடுவது?அந்தக் கவிதைத் தொகுப்புப் போல காதலைக் காதல் என்றும் சொல்லலாம்.சொல்லாமலே கூட இருக்கலாம்.இப்படிச் சொல்லாமலே என்னையும் யாரேனும் நினைத்திருப்பார்கள்.நானும் யாரையேனும் நினைத்திருக்கத்தான் செய்வேன்.
ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்ததாம் - இருக்கும்.பூக்கத்தானே செடி. "பூக்கவும் தானே" என்பது இன்னும் சரியாக இருக்குமோ?
---வண்ணதாசனின் "பரிமாறாத பூச்செண்டுகள்" கட்டுரையில் இருந்து
07 August 2006
[+/-] |
சிறுதுளி பெருவெள்ளம் |
ஆறு,ஏரி,குளம்,கிணறு,ஓடை,அருவி என்று இந்த உலகிலுள்ள பல்வேறு நீர்வளங்களுக்கு மழையே ஆதாரம்மழை பெய்யாமல் பொய்க்கும்போது தான் அதனுடைய அருமையை உணர்வோம்.சிறுவாணி,புழல் ஏரிகளின் தற்போதைய நீர்வரத்து,அடிப்பம்பு,லாரித் தண்ணீர்,மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்று ஆயிரம் விஷயங்களைப் பேச,சிந்திக்கத் துவங்குவோம்..பணத்தைப் பல தலைமுறைகளுக்குச் சேமித்துவைக்கத் துடிக்கும் நாம்,நீர் போன்ற இயற்கை வளங்களைப் பொறுத்த மட்டிலும் அவற்றின் மதிப்புணரா தற்குறிகளாய் இருக்கிறோம்.இதே நிலைமை நீடித்து வந்தால் அடுத்த உலகயுத்தம் நீரின் முன்னிட்டே இருக்கும் என்று கூற முடியும்.யார் கண்டது,இந்தியாவே அது போன்றதொரு யுத்தம் துவங்குமிடமாய் இருக்கக் கூடும்.
ஐ.நா. சபையின் உலக நீர்ப்பயன்பாட்டு அறிக்கையின் படி தற்போது உலகிலுள்ள 6 பில்லியன் மக்கள்கூட்டம் ஏறத்தாழ பூமியிலிருக்கும் 54 % தூயநீரினைப் பயன்படுத்தி வருகிறது.2025 ஆம் ஆண்டில் இது 70% ஆக அதிகரிக்கக்கூடும்.தனிமனித நீர்ப்பயன்பாடு தற்போதைய விகிதத்தில் அதிகரித்து வருமாயின் இன்னும் 20 வருடங்களில் மனித சமுதாயம் உலகிலுள்ள 90% நீர்வளங்களைக் காலியாக்கிவிடும்.அடுத்து வரும் இருபதாண்டுகளில் பெருகிவரும் மக்கள்தொகையும் அதனையொட்டி அதிகரிக்கும் நுகர்வுத்தேவைகளும் மேற்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளைத் தண்ணீர் பஞ்சத்திற்கு உள்ளாக்கி விடும்.மரம் வெட்டுவதால் மழை குறைகிறது.மழையில்லாமல் விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில் வயிற்றுப்பாட்டிற்கு வேலை தேடி நகருக்குப் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திட்டமிடப்படாத,கட்டுப்படுத்தப்படாத நகர் புறப்பெருக்கம் அங்குள்ள இயற்கை வளங்களை அழித்து விட்டே நடக்கிறது.என இது ஒரு சுழற்சியான நிகழ்வு.
இந்த நகர்புறப்பெருக்க நிகழ்வுக்கு "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்றழைக்கப்படும் கோவை மட்டும் விதிவிலக்கா என்ன? சுவையான சிறுவாணி நீருக்குப் பெயர் போன கோவையில் மரம் வளர்ப்பு/பராமரிப்பில் உள்ள தொடர்ச்சியான புறக்கணிப்பு,நீர்வளங்களின் மீதான ஆக்கிரமிப்பு,மோசமான பராமரிப்பு காரணமாய் வெகுவிரைவில் ஒரு தண்ணீர்ப்பஞ்சம் திணிக்கப்பட உள்ளது.சிங்காநல்லூர் குளத்தேரியினைக் கடந்து செல்லும் போதெல்லாம் இந்தக் குளத்தின் இன்றைய மோசமான நிலமைக்கு நாமும் ஒரு காரணம் என்று ஆதங்கப்படுவதோடு இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையும் வெகுவாய் இருந்து வந்தது.சிறுதுளி திட்டத்தினைப் பற்றி அறியும் வரையில்.
சிறுதுளிகள் சேர்ந்து உருவாவதே பெருவெள்ளம்.அதுபோல கோவையின் எக்கோஸிஸ்டத்தினைப் புத்துயிரூட்டும் வண்ணம் திருமதி.வனிதா மோகன்(ப்ரிகால்) அவர்களின் சீரிய முயற்சியினால் உருவாக்கப்பட்டதே இந்த சிறுதுளி திட்டம்."தூய்மையான கோவை,பசுமையான கோவை" என்னும் கொள்கைகளுடன் உருவானதே இந்த சிறுதுளி திட்டம்.
இந்தத் திட்டமானது திரு.S.V.பாலசுப்ரமணியம்(CMD,பண்ணாரி அம்மன் சுகர்ஸ்)அவர்களைச் சேர்மனாகவும்,மருத்துவர் R.V.ரமணி(சங்கரா கண் மருத்துவமனை),ரவி சாம்,ஆரதி வரதராஜ்,கனக்லால் அபய்சந்த்,N.V.நாகசுப்ரமணியம் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள சிறுதுளி ட்ரஸ்டியினால எடுத்து நடத்தப்படுகிறது.பெரிய அளவிலான மழை நீர் சேகரிப்பு,திட/திரவக் கழிவுகள் மேலாண்மை,ஆறு/குளம்/ஏரி போன்ற நீர் வள ஆதாரங்களின் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,அவற்றினைத் தூர்வாரல்,கரைகளை செப்பனிடுதல்,பெரிய அளவிலான மரப்பெருக்கம் என்று தனது இலக்கினை அடைய வெவ்வேறு களங்களில் பயணிக்கிறது இந்த சிறுதுளி திட்டம்.
கிருஷ்ணாம்பதி,செல்வம்பதி,முத்தண்ணன்குளம்,செல்வமுத்தண்ணன் குளம்,பெரிய குளம்,சின்ன குளம்,வாலன் குளம்,சிங்காநல்லூர் குளத்தேரி போன்றவை கோவையிலுள்ள சில முக்கிய குளங்கள்.நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள இந்தக் குளங்கள் நிலத்தடியே உள்ள கால்வாய்களால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.நாளடைவில் பல்வேறு காரணங்களால் இந்தக் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாய் மழைநீரானது குளங்களுக்கிடையே சீராகச் செல்ல இயலாமற்போனது.சில கால்வாய்களின் மேலே நிகழ்ந்த ஆக்கிரமிப்பு,கால்வாய் குளங்களை இணையும் இடத்தில் ஏற்பட்ட பிளாஸ்டிக் அடைப்புகள் போன்றவற்றின் காரணமாய் மழை நீர்வெள்ளமானது எதிர்த் திசையில் பெருகி ஓடி, பல இடங்களை வெள்ளக்காடாக்கிய நிகழ்வுகள் அனைவரும் அறிந்த ஒன்றே.
கோவை மக்களிடையே விழிப்புணர்வையும்,இந்தத் திட்டத்தினால் விளையும் நீண்டகால நன்மைகளையும்,முக்கியமாக நம்மால் முடியும் என்ற நம்பிக்கையினையும் புகுத்த கரும்பு வளர்ப்பு ஆராய்ச்சிக்கூடத்திற்கு அருகே உள்ள கிருஷ்ணாம்பதி குளத்தினைத் தூர் வாரும் பணி முதலில் மேற்கொள்ளப்பட்டது.108 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் ஏறத்தாழ 30% ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததது.தூர் வாருதல் முடிந்தபின்னர் மேலும் ஆக்கிரமிப்புகள் நேராவண்ணம் கரைகளை உயர்த்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.இந்தக் குளத்தினை நோக்கிச் செல்லும் கால்வாய்களும் தூர்வாரப்பட்டன.சிறுதுளியின் முதல் துளி இது தான்.பிறகு நடந்ததெல்லாம் வரலாறு தான்.
இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய இலக்கான பெரும் மரப்பெருக்கத்தினை அடைவதன் முதல் படியாகச் சுமார் 1 இலட்சம் மரக்கன்றுகள் பெரியகுளம்,கிருஷ்ணம்பதி போன்ற குளங்களின் கரைகள்,ராம் நகர்,ஹோப் காலேஜ் போன்ற இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.பசுமைப் பயணம் என்னும் இந்த நிகழ்வானது நமது குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களால் 6,ஜூலை,2005-ல் துவங்கி வைக்கப்பட்டது. கோவையிலுள்ள பள்ளிச் சிறார்களிடையே மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துரைக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறது.தற்போது நொய்யல் ஆற்றினைச் சுத்திகரிப்பதில் பெரும் முனைப்புடன் இயங்கி வருகிறது சிறுதுளி திட்டம்.
இப்படியாகக் கோவையின் எதிர்காலமானது சத்தமின்றி மாற்றியமைக்கப் பட்டுவருகிறது.
இந்தத் திட்டம் பற்றி மேலதிக விவரங்களுக்கு http://www.siruthuli.org/
இது பற்றிய மற்றுமொரு கட்டுரையைப் பின்னர் தருவேன்.
[+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 1 |
குதிரைகள் பசுக்கள் போல
வாய்விட்டுக் கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரைரூபம்
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காகப் பணிந்து போகும்-இது
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்.
-- பாலகுமாரனின் "இரும்பு குதிரைகள்"
****************************************************************************
சதிலீலாவதியில் இடம் பெற்ற "மாருகோ மாருகோ" பாடலானது இளையராஜா இசையில் வெளிவந்த 9 படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பாடல்களின் மெட்லீ ஆகும்
1. மாருகோ மாருகோ (வெற்றி விழா)
2. ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன் (கல்யாணராமன்)
3. வாடி என் கப்பக் கிழங்கே (அலைகள் ஓய்வதில்லை)
4. நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடி (சகலகலா வல்லவன்)
5. இஞ்சி இடுப்பழகா (தேவர் மகன்)
6. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் (மை.ம.கா.ரா)
7. இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன்)
8. நிலா காயுது (சகலகலா வல்லவன்)
9. என்னடி மீனாக்ஷி (இளமை ஊஞ்சல் ஆடுது)
10. தண்ணீர் கருத்துடுச்சு (இளமை ஊஞ்சல் ஆடுது)
11. போட்டு வைத்த காதல் திட்டம் (சிங்கார வேலன்)
12. ராஜா கைய வச்சா (அபூர்வ சதரர்கள்)
13. ரம் பம் பம் ஆரம்பம் (மை.ம.கா.ரா)
14. பொன்மேனீ உருகுதேய் (மூன்றாம் பிறை)
**********************************************************************************
1)300 மிலி பெப்ஸியை 95 மிலியாகப் பிரித்தால் மூன்று குவளைகள்(ஒவ்வொன்றும் 100மிலி கொள்ளளவு)தேவைப்படும்.
2)சன் தொலைக்காட்சியின் 8 மணி செய்திகளின் நேரத்திற்கும் இந்திய ரயில்வே நேரத்திற்கும் இரு நொடிகள் வித்தியாசம் அவ்வப்போது உள்ளது.
--பொழுது போகாத பூங்காவனம்
05 August 2006
[+/-] |
"கல்யாண சமையல் சாதம்..." |
"சாப்பாடு எல்லாம் நல்லாத்தான் இருந்தது.ஆனா கேரட் பீன்ஸ் பொறியலுக்கு உப்பு பத்தலை.கேரட் கூட அரைவேக்காடாத்தான் இருந்தது.பாயாசம் ஊத்த ஒரு பிளாஸ்டிக் கப்பு வச்சாங்க பாரு.பாயாச சூட்டில கப்பு ஓட்டை ஆகி இலை எல்லாம் பாயாசம் ஓடி.....என்னதான் சொல்லு.போன வாரம் போயிருந்த நம்ம மணியண்ணன் பொண்ணு கல்யாணம் மாதிரி வராது"
"ஏம்பா...டிஃபன் ஏதும் இல்லையா? ஏன்னா,நான் சனிக்கிழமை ஒரு பொழுது தான் சாப்பாடு சாப்பிடுவேன்.இதனாலதான் சனிக்கிழமைகள்ள வர்ர விசேஷங்களுக்கு நான் போரதே கிடையாது."
"என்னங்க.போன பந்தியில மக்கன் பேடா போட்டீங்க.இந்த பந்திக்கு என்னடான்னா மைசூர்பா வைக்கறீங்க?என்னமோ போங்க"
கல்யாண வீடுகளில் இது போன்ற வசனங்களைக் கேட்காத காதுகளே இல்லை என்று உறுதியாகக் கூறிவிடலாம்.இரு குடும்பத்தார் இணையும் ஒரு நிகழ்வாய்த் திருமணங்கள் இருக்கும் இந்தியாவில்,திருமணத்தை முன்னிட்டு நடக்கும் அமளி துமளிகளுக்கு அளவே இல்லை.அதுவும் சாப்பாட்டு விஷயத்தில் அவ்வளவு எளிதாய்த் திருப்தி அடையாத நம்ம ஆளுங்களைத் திருமணத்தில் சமாளிப்பது ஒரு ஹெர்குலியன் டாஸ்க் தான்.கல்யாண முகூர்த்தம் குறிக்கப்பட்டு,நிகழுமிடம் உறுதிப்படுத்தப் பட்டபின்னால் அனைவரும் செய்யும் ஒரு முக்கிய விஷயம் கல்யாணசமையலுக்கு மெனு போடுவதுதான்.
இன்னும் சொல்லப்போனால் பெண்/ஆண் பார்க்கும் படலத்திலேயே மெனு போடுதல் போன்ற் உணவு பற்றிய விவாதங்கள் ஆரம்பித்துவிடுகிறது.பெண்/ஆண் பார்க்கும் படலம் என்றால் எனது நினைவுக்கு வருவது by default மெனுவான சொஜ்ஜியும்,பஜ்ஜியும் தான்(உபயம் தமிழ் நகைச்சுவைத் துணுக்குகள்).சில தமிழ்த் திரைப்படங்களில் சொல்வது போல் சம்பந்தம் முடிக்காமல் அந்த வீட்டில் கையை நனைக்காத மனிதர் இன்றும் உளரோ என்று அவ்வப்போது ஆச்சரியப்பட்டதும் உண்டு.என் அம்மாவைப் பெண் பார்க்கச்சென்ற போது சாப்பிட்ட காப்பிக்கு "நல்லா இருக்கு" என்று சொல்லப்போய் அதனைத் தப்பாய் எடுத்துக்கொண்டு அம்மாவைத் தனக்கு மணம் முடித்ததாய் இன்னமும் அப்பா கூறிக்கொண்டே இருக்கிறார்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்தக் காப்பியானது அவரது நாக்கின் சுவை மொட்டுகளை விட்டு அகலாது இருக்கிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்...
கல்யாண சமையல் குழுவினைத் தேர்ந்தெடுத்த பின்,கல்யாண ஸ்வீட்டிற்கு என்ன போடலாம் என்பதில் ஆரம்பிக்கும் மெனு பற்றிய விவாதங்கள்.இரண்டு வீட்டாருக்கும் பொதுவான உறவினரோ,நண்பரோ தான் இதில் பெரும்பாலும் நாட்டாமை செய்து வைப்பார்.அப்படி போடப்படும் மெனுவானது கால தேச வர்த்தமானங்களுக்கு உகந்ததாய் இருத்தல் வேண்டும்.கோடைகாலமென்றால் ஐஸ்கிரீம்,குளிர்பான வகையறாக்களும்,குளிர்காலமென்றால் சூடான பாதாம்பால் வகையறாக்களும் இருக்கும்.இப்படிப் பார்த்துப் பார்த்து முடிவு செய்யப்பட்ட மெனுவினைக் கெடுக்காதது சமையல் குழுவின் கையில் இருந்தாலும்,அது உருவாவதில் இருந்து நுகர்வோரைச் சென்றடைவது வரை இன்னும் சிலருக்கும் பங்கு இருக்கிறது.
யாரைப் பற்றி பேசுகிறேன் என்று புரியவில்லையா??
ஸ்டோர் ரூமில் இருக்கும் மூலப் பொருட்களின் இருப்பைக் கண்காணிப்பவர்(inventory maintenance),சமைக்கப்பட்ட பதார்த்தங்களை விருந்தினருக்குப் பரிமாறுதலை மேற்பார்வையிடுபவர்(client co-ordinator),தவிர இவர்கள் இருவரும் தங்களது டிபார்ட்மென்டில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனே அணுகும் இவர்களது சமையல் துறையின் பொறுப்பாளர்(project lead) என்ற அந்த மூவர் கூட்டணியைத்தான் குறிப்பிட்டேன்.
ஸ்டோர் ரூமில் இருக்கும் முந்திரி,திராட்சை முதற்கொண்டு எது வெளியே போனாலும் கண்கொத்திப் பாம்பாய் கணக்கு பார்ப்பது தான் இந்த ஸ்டோர்ரூம் பாதுகாவலரின் முக்கிய வேலை.எங்கள் வீட்டுத் திருமணங்களில் ஒன்று விட்ட மிலிட்டரி சித்தப்பா தான் பெரும்பாலும் ஸ்டோர் ரூம் பாதுகாவலராய் இருப்பார்.எதிரிகள் ஊடுறுவா வண்ணம் எல்லையைக் காத்தவருக்கு இதெல்லாம் வெறும் ஜூஜூபி என்பார்.ஆனால் ஸ்டோர் ரூம் சாவி கைக்கு வந்த உடனே அதைப்பூட்டிக் கொண்டு, செவன்ஸ் விளையாடுமிடம் தேடி இவரது கால்கள் சென்றுவிடும்.ஏழரை மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய பந்திக்கான அப்பளக் கட்டைத் தேடி, ஸ்டோர் ரூமுக்குப் போன சமையல்கார சிதம்பரம் கத்திக் கொண்டிருப்பார்.மிலிட்டரி சித்தப்பாவோ கழுகுக்கு மூக்கு வியர்ப்பது போல ட்ரிங்ஸ் ப்ரெக்கில் வந்து நமது தேவையைத் தீர்த்து வைத்து விட்டி மீண்டும் களம் திரும்புவார்.இது போன்ற சில இடர்பாடுகள் இவரால் இருப்பினும், எங்கள் கல்யாணங்களில் by default ஸ்டோர் ரூம் பாதுகாவலர் மிலிட்டரி சித்தப்பாதான்.
அடுத்து முக்கியமானவர் பந்தி பரிமாறுவதை மேற்பார்வையிடும் எங்களது டேவிட் மாஸ்டர்.இவரது வேலை வாங்கும் திறனைப்பார்த்து அனைவரும் ஹை-ஸ்கூல் பி.டி. மாஸ்டரா இருக்கீங்களா இல்ல சர்க்கஸ்ல ரிங் மாஸ்டரா இருக்கீங்களா என்று ஆச்சரியத்துடன் கேட்பதாய்க் கூறிக் கொண்டிருக்கிறார்.ஆனால் இவரைப் பார்த்தால் விளையாட்டுவாத்தியார் என்று யாருக்குமே எண்ணத் தோணாது.இவரிடம் படித்த/படித்துக் கொண்டிருக்கும் மாணவர் யாராவது வந்துவிட்டால் போது, கொஞ்சம் ஸ்பெஷல் கவனிப்பு கட்டாயம் இருக்கும்.
திருமணம் செய்து கொள்ளாத எங்களது மாமா ஒருவர் தான் இவர்களுக்கெல்லாம் தலை.ஸ்வீட் தீர்ந்து போனால கடையில் வாங்கி வருவதா, இல்லை சுடச்சுடப் போடுவதா என்பதில் ஆரம்பித்துப் பல விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை பெற்றவர்.இரவு உணவுக்கு விழுந்த இலைகளை வைத்தே காலை உணவுக்கு வரும் கூட்டத்தைத் துல்லியமாய்க் கணக்கிடுவதில் வல்லவர்.மாப்பிள்ளையின் நட்பு வட்டாரங்களுக்கு வாட்டர் ஸ்போர்ட்ஸின் போது தேவைப்படும் சைட் டிஷ்களைப் பார்சலாய் அனுப்புவது,கல்யாண சம்பிரதாயங்களை முடித்து உணவு உண்ண வரும் மணமக்களுக்கு ஸ்வீட்,சிறப்பு உணவு வகைகளை பத்திரப்படுத்தி வைப்பது,தேவைப்படும் நேரங்களில் சாம்பார் வாளி தூக்குவது,மீதியாகப் போன உணவு வகைகளைப் பக்கத்திலிருக்கும் சேரிக்கு அனுப்பி வைப்பது என்று பார்த்துப் பார்த்துப் பண்ணும் இவர் ஒரு பெரிய ஆல் ரவுண்டர்.
இப்படிக் கல்யாண வீட்டில் பரிமாறப்படும் ஒவ்வொரு கவள சோற்றுக்குப் பின்னாலும்,சொல்லப்படாத ஆயிரம் பேரின் உழைப்பு இருக்கிறது.திருமண வீடுகளில் மற்ற அனைவரும் திருப்தியாக சாப்பிடும் படி பார்த்துக்க் கொள்ளும் இவர்களது அன்றைய உணவு பெரும்பாலும் உப்புமாவாய்த் தான் இருக்கும்.கேட்டால்,"மத்தவங்க சந்தோஷமாச் சாப்பிட்டுப் போறதப் பார்த்தாலே எங்களுக்கு வயறு நெரஞ்சிடும்" என்பார்கள்.இந்த மூன்று பேரும் இல்லாத எங்கள் வீட்டுத் திருமணத்தை, நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.
உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் இருந்த அந்தப் மாமாவைப் பார்க்க சமீபத்தில் சென்றிருந்தேன்.தனது ஆரஞ்சு ஜூசை என்னோடு பகிர்ந்து சாப்பிட்ட அவரது முகம் வாட்டமாய் இருந்தது.
"என்ன கண்ணு.இப்படி மாமா ஆசுபத்திரியில வந்து அடிக்கடி படுத்துக்கிறார்னு வெசனமா இருக்கா??உன்னோட கல்யாணத்துக்கு சமையல் இன்சார்ஜ் வேலை பார்க்காம நான் வர மாட்டேன்னு எமன் கிட்ட சொல்லியனுப்பீட்டேன்.அதப் பத்தி நீ ஒண்ணும் கவலைப்படாதே"
என்பதைக் கேட்டதும் என் குரல் லேசாய் உடைந்து போனது.
[+/-] |
நட்சத்திரமானது இந்த மின்மினி |
"தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட..."
"ஆமாம் வில்லினில் பாட..."
"வந்தருள்வாய் கலைமகளே..."
"ஆஹா...வந்தருள்வாய் கலைமகளே..."
"அதாகப்பட்டது மக்களே..."
"மக்களே..."
"கீர்த்தனாரம்பத்திலே கொஞ்சம் கொஞ்சமா எழுதிகிட்டு இருந்தவரும் இப்போது "ஓ" போட்டுக்கொண்டிருப்பவருமான சுதர்சன்.கோபால் தான் இந்த வாரத்துத் தமிழ்மண நட்சத்திரமாம்"
"ஓஹோ...நட்சத்திரமாம்"
"நட்சத்திர வாரத்தில என்ன செய்யப் போகிறார் தெரியுமா? "
"தெரியாதே...?"
"நல்ல கட்டுரைகளைத் தட்டிப்போடுவார்,பெரிய கொசுவர்த்தியை ஏற்றுவார் என்று ஊரார் எல்லாம் பேசிக்கொள்கிறார்கள்"
"ஓ...அப்படியா???!!!"
"ஆமாம்.இதோ.அவரே வந்திட்டார் போலிருக்கே.அவரை வரச் சொல்லி நான் வழி விடுறேன்.."
"ஆஹா....ஜென்ம சாபல்யம்"
அனைவருக்கும் வணக்கம்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் காலையில் மறக்காமல் செய்யும் காரியங்களுள் ஒன்று இந்த வார நட்சத்திரம் யார் என்று தமிழ்மணத்தில் பார்ப்பது.இந்த வாரம் இவர் தான் என்று மனத்தில் நினைத்தவரே நட்சத்திரமான வாரங்களும் உண்டு.பல நட்சத்திரங்கள் ஒளிவீசிய இந்தத் தளத்தில், ஒரு சிறிய மின்மினியாகிய நானும் இப்போது பதவி உயர்வு பெற்ற நிலையில்.அதுவும் ஒரு முழு வாரத்துக்கு.
இந்த உலகம் ஆச்சரியங்களால் ஆனது என்பது நிஜமான உண்மை போல.முழு வாழைப்பழ சோம்பேறியான என்னை இந்தப் பொறுப்பானது கொஞ்சம் சுறுசுறுப்பானவனாக மாற்றியிருக்கிறது.இந்த ஒரு வாரத்தில் நானும்,என்னுடைய பதிவுகளும் இன்னமும் அதிகம் பேரைச் சென்றடைய இருக்கிறோம் என்பதில் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
இதுவரை ஐம்பது பதிவுகளைக் கூட தாண்டாத என்னையும் நட்சத்திரமாக்கி அழகு பார்த்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகக் குழுவினருக்கு எனது நன்றிகள்.
சிறு வயதில் என் கையில் கிடைத்த பென்சிலை விட உயர்ந்த பொருள் ஏதும் இல்லை என்று முடிவு செய்திருந்தேன்.அதற்காக அழுது போராடியிருக்கிறேன்.கல்கி,விகடன்,குமுத வகையாறாக்களில் வரும் எந்த ஒரு புகைப்படமும் எனது பென்சிலால் அழகுபடுத்தப் படாமல் இருந்ததில்லை.பொய்யாய் மீசை வரைவது,தப்புத் தப்பாய் எனது பெயரை எல்லாப் பக்கங்களிலும் நிரப்புவது என்று தொடர்ந்தது எனது திருவிளையாடல்கள்.எனது கிறுக்கல்களெல்லாம் சித்திரங்களாகிப் புத்தகங்களை நிறைத்த சந்தோஷம்,அந்தக் காகிதங்கள் அண்ணாச்சி கடை ரவைப் பொட்டலமாய் வீட்டுக்கு வந்த பிறகும் வெளிச்சமாக நினைவில் நிற்கிறது.இப்படியாய் ஆரம்பித்தது எனது எழுத்துலக அனுபவம்(கொஞ்சம் ஓவராய்த் தோணுதா..ஹி...ஹி...).
அம்மா வழிப் பாட்டனாரின் பண்புகள் பேரனுக்கும்,அப்பா வழிப் பாட்டியின் மரபியல் பண்புகள் பேத்திக்கும் மரபியல் ரீதிப்படி வரும் என எங்கோ படித்ததாய் ஞாபகம்.எனது விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருந்தி வருகிறது.
வருடா வருடம் வரும் போனஸ் பணத்தில் தனக்குத் தீபாவளித்துணி கூட எடுக்காமல் அந்தக் காசுக்கு தீபாவளி மலர்களையும்,வேறு சில புத்தகங்களையும் வாங்குவது எனது தாத்தாவின் வழக்கம்.புத்தகங்களுக்குச் செலவிடுவது என்பது அவரால் என்னுள் பதிக்கப்பட்ட ஒரு முக்கிய பண்பு.எண்பதுகளின் தொடக்கத்தில் நடந்த ஒரு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட எங்கள் தாத்தாவுடன் பிரச்சாரத்திற்கு வீடு வீடாய்ப் போனதிலிருந்து ஆரம்பித்தது எனது அரசியல் மீதான காதல்."கட்,கட் கமர் கட்...________யை ஒழிச்சுக் கட்" என்பது போன்ற கூவல்கள் அப்போது எங்களைப் போன்ற சிறாரிடையே மிகவும் பிரபலம்.இன்னமும் மாறாமல் என்னைத் துரத்தும் எனது நாற்காலி பற்றிய கனவுகள், அவரால் என்னுள் பதிக்கப்பட்ட மற்றுமொரு பண்பு.
இப்படியாகக் கொங்கு நாட்டில் இளம் பிராயத்தைக் கழித்த பின்னர் தற்போது பணியின் நிமித்தம் பெங்களூரில் வாசம்.சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால் நான் பெஞ்சில் இருந்த சமயத்தில்,ஒரு சுபயோக சுபதினத்தில் வலைப்பதிவதை ஆரம்பித்தேன்.அன்றே தமிழ்மணத்தில் ஐக்கியமாகி விட்டேன். தமிழ்மணம் மூலம் எனக்கு கிடைத்த நட்புகள் ஏராளம்.
"எந்தரோ மகானு பாவுலு
அந்தரிகி நா வந்தனமு..."
மற்றவரை மனத்தால் கிஞ்சித்தும் பாதிக்காத,தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமளிக்காத, ஒரு இனிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கக் கூடியதாய் எனது பதிவுகள் இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் கவனமாய் இருக்கிறேன்.என் சக்திக்கு எட்டியவரை நல்ல படைப்புக்களை உங்களுக்கு இந்த நட்சத்திர வாரத்தில் தரவேண்டும் என நினைத்துள்ளேன்.
இந்த நட்சத்திர வாரத்தில் எழுதவிருக்கும் சில தலைப்புகள்.
1.'கல்யாண சமையல் சாதம்..."
2.சிறுதுளி பெருவெள்ளம்
3.என் பதின்மங்களின் பாடல்கள்
4.மந்திராலயம் போனோமே
5.ஆப்பரேஷன் "மொட்டைக் கடிதாசி"
6.பெங்களூரு - குறிப்புகள்,கோபங்கள்,கேள்விகள்
7."காணாமல் போனவர்கள்" ஸ்பெஷல்
என 7 கட்டுரைகளை இந்த நட்சத்திர வாரத்தில் இட எண்ணி உள்ளேன்.அத்துடன் அவ்வப்போது கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடியினையும் தரலாம் என்று எண்ணியிருக்கிறேன்.மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன்.
உங்கள் ஆதரவினை எதிர்பார்த்து,
சுதர்சன்.கோபால்
PS:- நேற்று தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடிய உலகளாவிய இணையத்திற்கும்,11 செப்டெம்பர் 2007ல் தனது முதல் மணநாள் நிறைவினைக் கொண்டாடவிருக்கும் சரவணன்(s/o பழனிச்சாமி) தம்பதியினருக்கும் எனது வாழ்த்துகள்.