மீண்டும் குரோர்பதி ஒளிவலம் வருவதை முன்னிட்டு இந்தப் போட்டி.
கொடுக்கப்பட்ட படங்களுக்கிடையே உள்ள 5 வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்க பார்ப்போம்.
சரியாச் சொல்லும் முதல் 25 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது...
[+/-] |
சந்திரமுகி - ஒரு ஸ்டாடிஸ்டிக்கல் அனாலிசிஸ் |
23 சூலை 2005 - சந்திரமுகி 100 நாட்களை எட்டிப் பிடித்த நாள்.
திருட்டு VCD-க்கள்,மெகாசீரியல்கள்,டிக்கெட் கட்டண அதிகரிப்பு,திரையரங்குகளின் பராமரிப்புப் பிரிச்சனைகள்,சினிமாவை ஓரம் கட்டி விட்ட ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்கள் என்று ஆயிரம் தடைகளைத் தாண்டி 100 நாள் ஓடியிருப்பது ஒரு சாதனை தான்.ரஜினிகாந்தின் திரைப்படம் ஒரு தீம் பார்க்கினைப் போல.எப்போதல்லாம் அவரது படங்கள் வெளியிடப்படுகிறதோ,அப்போதெல்லாம் குடும்பத்துடன் வார இறுதியைக் களிக்க அவற்றைத் தேர்ந்தெடுப்பது என்பது காலம் காலமாக நடந்து வருவது.
கீழே தரப்பட்டுள்ள சந்திரமுகியின் சாதனை பல்வேறு ஊடகங்களினின்று தொகுக்கப்பட்டது.
1.மாயாஜாலில் 100 நாட்கள் ஓடிய முதல் படம்.
2.ஜூலு மற்றும் ஆஃப்ரிக்கானா மொழிகளில் டப் செய்யப்பட்ட முதல் படம்(ஜூலு - லான்ஸ் க்ளூஸ்னரின் தாய் மொழி,ஆஃப்ரிக்கானா- தென் ஆப்பிரிக்காவின் பிரதான மொழி)
3.இதன் மூலப் பிரதியின் மொழி பேசப்படும் கேரளாவில் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது.இதனுடன் வெளியான மோகன்லாலின் திரைப்படத்தையே ஓரம் கட்டிவிட்டது.
4.சுந்தரத் தெலுங்கிலும் சந்திரமுகியின் ராஜ்ஜியம் தான்.பத்துத் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிவிட்டது.
5.பொதுவாக,அமெரிக்காவில் இந்தியத் திரைப்படங்கள் இரு வாரங்களே ஓடும்;அதுவும் வார இறுதியில் 4 காட்சிகளும்,மற்ற நாட்களில் ஒரே காட்சியும் தான் காண்பிக்கப்படும்.ஆனால் சந்திரமுகி 5 வாரங்கள் ஓடியது அதுவும் தினசரி 5 காட்சிகளாக.
6.எல்லாவற்றிர்க்கும் மேலாயப் பல அனாலிஸ்களைப் பதிய வைத்துப் பல அனலிஸ்டுகளை உருவாக்கிய புண்ணியமும் இதற்குப் போய்ச் சேரும் :-)
[+/-] |
கொட்டும் மழையும் தொட்டுக்க சூடான ஒரு காதல் கதையும் |
மழை வரும் போது நிழலுக்காக டீக் கடையைத் தவிர்த்து எங்கே வேண்டுமானாலும் ஒதுங்கலாம்.அதுவும் சூடான பருப்புவடை,போண்டா போடும் கடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.பாடி மாஸ் இன்டெக்ஸ்,ஒபேசிட்டி என்று ஜல்லியடிப்பவர்கள் மழைக்குப் பயந்து எங்கேயும் ஒதுங்கக் கூடாது.திரு,திருவென முழிக்காமல் கீழே தொடரவும்.
"அடச்சே,என்ன மழைப்பா??சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்களேன்"என்ற அந்த சிவப்புச்சட்டை ஆசாமியின் குரல் கேட்டு தான் நான் இந்தப் பூவுலகிற்கு மறுபடியும் திரும்பினேன்."குடை எடுத்திட்டு வரும்போதெல்லாம் மழை பெய்யறதேயில்லை.இன்னைக்கு மறந்து குடைய வெச்சுட்டு வந்தனோ போச்சு மழ கொட்டிட்டு இருக்கு" என்று அவர் பாட்டுக்கு மழைக்கு தன்னுடன் ஒதுங்கிய சக மனிதர்களுடன் பேச ஆரம்பித்து விட்டார்.நாங்கள் அனைவரும் ஒதுங்கிய இடம் "அஜீத் டீ-இஷ்டால்".அவருக்கு இடம் தந்துவிட்டு கடைக்குள் இருந்து வந்த வடை சுடும் வாசனையின் உபயத்தால் சொர்க்கலோகத்திற்கு மறுபடியும் பயணிக்க ஆரம்பித்தேன்.
வெளியே மழை பாட்டுக்கு வெளுத்துக் கொட்டிக்கொண்டிருந்தது."ஹூம்.ஆஹா....அட வடையில் இஞ்சி,கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டிருக்காங்க போலிருக்கு.இது வெங்காய பக்கொடா பொரிச்செடுக்கும் சத்தம் தான்.அய்யோ..இந்த போண்டா எல்லாம் குண்டு,குண்டா பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு" என்று எனது ஐம்புலன்கள் தகவல்களைச் சேகரித்து தங்த வண்ணம் இருந்தன.
"முழுவதும் வறுக்கப்பட்ட பொருட்களை நீ சுத்தமாத் தவிர்க்கணும்.குறிப்ப உனக்குப் பிடிச்ச நொறுக்குத் தீனிகளான வடை,சிப்ஸ்,பக்கோடா.அப்புறமா,நார்ச்சத்து இருக்கிற பொருளா நிறைய சாப்பிடணும்.என்ன தான் உன்னோட பாடி மாஸ் இன்டெக்ஸ் படி கரெக்டான வெயிட்னாலும்,ஜெனடிக்கலா உங்க வீட்ல அம்மா சைட் எல்லாருமே ஒபீஸ் தான்.ஹல்லோ நான் உன் கிட்ட தான் சொல்லீட்டு இருக்கேன்"என்ற அவளது அறிவுரை ஒரு மின்னலாய் வெட்டிச் சென்றது.அவளைச் சந்தித்தது முதல் என்னால் நிம்மதியா சாப்பிட முடியலை.போயும் போயும் ஒரு நியூட்ரீஷியனைக் காதலித்தது தப்பாப் போச்சு.
"சார்,ஒரு வடை எடுத்துக்கோங்க"என்ற சிவப்புச் சட்டை ஆசாமியின் தாராள மனப்பான்மைக்கு நன்றி சொல்லி வடையக் கவனமாய்த் தவிர்த்தேன்."என்ன ஆயில் உபயோகிக்கறாங்களோ?எப்பத்த மாவோ?வடை போடற ஆசாமி சுத்த பத்தமாத் தான் சுடுவானா?இந்தப் பாத்திரங்களைப் பார்த்தா இதெல்லாம் குளிச்சே மாமாங்கமாயிருக்கும் போல இருக்கே?வாசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.ஆனா,மேடமோட வார்த்தைகளை மெமரியில ஏத்திக்கோ"என்றது எனது மனசாட்சி.பார்வையை மழையின் பக்கம் திருப்பினேன்.இன்னமும் சோவென ஊற்றிக்கொண்டிருந்தது.
"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியுது சார்.பொது இடத்தில வந்திட்டா நாமும் சோதியில ஐக்கியம் ஆயிடணும்.தவிர,இது நான் ரெகுலராச் சாப்பிடற கடை தான்.சுத்தம் பத்தி எல்லாம் கவலப்படாம ரெண்டு வடய உள்ள தள்ளுங்க.உங்க வயசுக்கு கல்லு,மண்ணு சாப்பிட்டாக் கூட செரிமானம் ஆயிடும்.தங்கம், அந்தச் சட்டினியைக் கொஞ்சம் இங்கே தள்ளு"என்று வடையினை வதம் செய்ய ஆரம்பித்தார் சிவப்புச்சட்டை ஆசாமி.
"அவர் சொல்றதிலும் நியாயம் இருக்கு.வடை போட்ற ஆள் கூட நல்ல துணி தான் போட்டிருக்கான்.முகத்தையும் ஷேவ் பண்ணியிருக்கான்.அவன அசப்பில பாத்தா அல்ட்டிமேட் இஷ்டார் மாதிரிக் கூட இருக்கான்."என்று மனதில் நினைத்துக் கொண்டே தட்டின் மேல் ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்த வடைகளின் மேலே பார்வையை மையப்படுத்தினேன்.
"உங்க ஃபேமிலியில ஹார்ட் டிசீசஸ் வந்து மண்டையப் போட்டவங்க கவுன்ட் இதுவரைக்கும் நாலு.இதுக்கு அவங்களோட உணவு முறைகளும் சரியா உடலை மெயின்டெயின் செய்யாததும் தான் காரணும்னு உனக்கு நல்லாவே தெரியும் தான.இவ்ளோ ஏன் உங்க ராஜியக்காவுக்கு கல்யாணம் தள்ளிப் போறதுக்கு முக்கியக் காரணம் ஷீ இஸ் fat.அதனால நீ வந்து....."ஒரு மின்னல் இடியாய் முழங்கியது நினைவுக்கு வந்து தொலைத்தது.
"வடை சுடுறது மாதிரி அதை அரைக்கிறதும் ஒரு கலை தான்.முழுசா அரைபடாத பருப்பு பல்லுல பட்டுக் கடிபடும் போது இருக்கிற சுகம் இருக்கே.அட.அட.அதுவும் இந்தப் பருப்பு வடை கூடச் சின்ன வெங்காயச் சட்னி தொட்டுட்டு சாப்டா...ஆஹா...இத விட பெங்களூர் பக்கம் மத்தூர் வடைன்னு ஒண்ணு செய்வான் பாரு.அந்த வடையோட டேஸ்டுக்கு நம்ம சொத்தே எழுதிக் கொடுத்தாலும் தகும்"எனது ஆர்வமின்மையை உணர்ந்த சிவப்புச்சட்டை தற்போது பக்கத்திலிருந்த மற்றுமொரு வடைப் பிரியரிடம் உரையாடக் கொண்டிருந்தார்.வெளியே மழையின் வேகம் சற்றுத் தணிந்திருந்தது.
"சே.பாவம் இந்தக் கடைக்காரர்.மழை வந்ததனால சனங்க யாரும் வூட்டை வுட்டு வெளியே வரவே இல்லை.அதனால சரியாக் கூட்டமும் இல்லை;வியாபாரமும் இல்லை.இப்படி மழைக்கு ஒதுங்கினவங்களை நம்பித்தான் இவரோட இன்னத்த பொழப்பே இருக்கு.சுத்தம்,சுகாதாரம்,பி.எம்.ஐ,ஒபேசிட்டி,இன்டர்சிட்டின்னு கண்டதையும் போட்டுக் குழப்பாம ரெண்டு வடைய வாங்கி உள்ள தள்ளுவியா.."என்றது மனசின் குரல்.
"சரி ரெண்டு வடையச் சாப்பிட்டுடு நாளக் காலையில ஜாக்கிங்க்ல ஒரு ரெண்டு ரவுண்டு கூட்டிக்குவோம்.ஆனால்,இந்த சிவப்புச் சட்டைக்கு முன்னால வடை வாங்கிச் சாப்பிடரது நல்லா இருக்காது"என எண்ணிக்கொண்டே மௌனமாய் இருந்தேன்.மெல்லத் தூறலும் நிற்க ஆரம்பித்தது.சிவப்புச்சட்டையும் தனது சகாக்களுடன் கிளம்பியது.
"கிளம்பீட்டாங்கய்யா...கிளம்பீட்டாங்க"என்று மனசில் கூவிக்கொண்டே "ரெண்டு பருப்பு வடை,நிறையச் சட்னியோட குடுங்க"என்றேன்.
"வடையெல்லாம் ஆகிப் போச்சு."
"என்னது???"
"வடையெல்லாம் தீர்ந்து போச்சு சார்.நல்ல மழக்காலம் பாருங்க.எல்லாம் சூடு ஆறரதுக்கு முந்தியே வித்துப் போகுது.வேற ஏதாவது வேணுமின்னாக் கேளுங்க"என்றும் முழக்கமிட்டவாரே பால் பாக்கெட்டைப் பிரிக்க ஆரம்பித்தார் கடைக்காரர்.
"நல்ல வேளை வடை தீர்ந்திடுச்சு.எந்த எண்ணைல சுட்டதோ??எந்த மாவில சுட்டதோ?சன்டே-அன்னைக்குக் காலையில சீக்கிரம் எழுந்து ஓடரதே பெரிசு.இதில ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ராவா??தப்பிச்சேன்"என்று எச்சிலை விழுங்கியவாறே வடைச்சட்டியை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.
ஆகவே அன்பர்களே,மறுபடியும் இந்தக் கட்டுரையின் முதல் பாரவைப் படிக்கவும்.
[+/-] |
ஆட்டுக்குத் தாடி எதற்கு??? |
ஆண்டவனின் படைப்பே விசித்திரமானது.எத்தனையோ வகை உயிரினங்களையும் படைத்துள்ளான்.அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விசித்திரமான தோற்றத்தை அளித்திருக்கிறான்.எந்த உறுப்பும் வீணாகப் படைக்கப்படவில்லை.
ஆடுகளுக்கு வால் மட்டுமின்றி தாடி கூட இருக்கிறது.ஆட்டுத் தாடியின் உபயோகம் பற்றிப் பல பேருக்குப் பல முறை சந்தேகம் வந்திருக்கும்.நம் தமிழ்நாட்டில் சிலர் அதனை ஒரு குறிப்பிட்ட பதவியுடன் ஒப்பிட்டு முனைவர் பட்டம் கூட வாங்கிருக்கின்றனர்.
சென்ற பிறவியில் ஆடாக இருந்து இப்பிறவியில் ஒரு எருமை மாடாய் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் எனது ஒரு சகாவிடம் இருந்து நான் பெற்ற ஆட்டுத் தாடி பற்றிய விளக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அதாகப்பட்டது,முதலில் தோன்றிய ஆட்டுக் கூட்டத்தில் எந்த ஒரு ஆட்டிற்கும் தாடி இல்லை.இந்த ஓநாய் இருக்கிறதே,அதற்கு எப்போதும் ஆடு பற்றிய நினைப்புத்தான்.ஒரு கொட்டாயில் சில ஆடுகளும் அவற்றின் குட்டிகளும் வசித்து வந்தன.தாய் ஆடு வெளியில் செல்லும் போது அதன் கதவை மூடிவிட்டுச் சென்றுவிடும்.குட்டிகள் கதவை உள் தாளிட்டுக்கொள்ளும்.தாய் ஆடு வந்து கதவைத் தட்டினால்தான் குட்டிகள் திறக்கும்இந்த ஆட்டுக்குட்டிகளை ஏமாற்றி இரையாக்கத் தீர்மானித்தது ஓநாய்.அதன்படி தாய் ஆடு இல்லாத சமயம் பார்த்துச் சென்று கதவைத் தட்டியது.ஆட்டுக்குட்டிகள் கதவை உடனே திறக்கவில்லை.
சற்று நேரம் தாமதித்தன.ஓநாய் தந்திரமாகக் குரலை மாற்றி,"இந்த ஓநாய்களின் தொல்லை பெரிசா இருக்கு!ஓநாய்கள் தொலைந்தால்தான் நிம்மதி.சீக்கிரமாய் கதவைத் திறங்கள்"என்றது.இந்த வார்த்தைகள் தாய் ஆடு அடிக்கடி சொல்லக்கூடியது.இதை அறிந்து வைத்திருந்த ஓநாய் இந்தத் தந்திரத்தைக் கையாண்டது.ஆட்டுக்குட்டிகள் நம்பி ஏமாந்து போயின.உண்மையினை அறிந்த தாய் ஆடு ஆண்டவனிடம் முறையிட்டதன் பேரில்,இறைவன் அவற்றின் முகத்தில் புதிதாய் ஒரு உறுப்பான தாடியினைப் படைத்தான்.அதோடு ஓநாயினால் விழுங்கப்பட்ட குட்டி ஆடுகளுக்கும் உயிர் கொடுத்தான்.
சில மாதங்கட்குப் பிறகு அந்த ஆடுகளைத் தாடியுடன் பார்த்த ஓநாய் நினைத்தது.ஆடுகளுக்கு தாடி எதற்காக?அதனால் எந்தப் பயனுமில்லையே!வேடிக்கைக்காக இருக்குமோ என்றெல்லாம் கற்பனை செய்தது.அதற்கு சிரிப்புதான் வந்தது.வழக்கம் போல் தாய் ஆடு இல்லாத நேரம் பார்த்துக் கொட்டாயின் கதவைத் தட்டியது.ஆட்டுக்குட்டிகள் கதவை உடனே திறக்கவில்லை.சற்று நேரம் தாமதித்தன.
"இந்த ஓநாய்களின் தொல்லை பெரிசா இருக்கு!ஓநாய்கள் தொலைந்தால்தான் நிம்மதி.சீக்கிரமாய் கதவைத் திறங்கள்"என்ற வழக்கமான டயலாக் அடித்தது ஓநாய்.புத்திசாலியான ஆட்டுக்குட்டிகள்,"யார் அது?இங்கே வந்து இந்த சந்து வழியாக் உன் முகத்திலுள்ள தாடியைக் காட்டு!"என்று ஓர் ஆட்டுக்குட்டி கூறியது.
ஓநாய் திகைத்துவிட்டது.இந்த ஆட்டுக்குட்டிகளை ஏமாற்ற முடியாது என்றும் தெரிந்து கொண்டது.அது மட்டுமா?ஆட்டுக்கு மட்டும் தாடி இருப்பது இதற்குத் தானா என்றும் புரிந்து கொண்டது.
[+/-] |
எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் ஒரு காதல் |
"நல்லாத் தெரியுமா,அது அவ தான்னு" என்றவாரே தண்ணீரை விழுங்கினான் சர்த்தன்.எங்கள் அலுவலக மின்னஞ்சல் பயனர் உருவாக்க(Mail id creation) விதிமுறைப்படி அவனது ஸ்ரிநிவாசன் அர்த்தனாரி(Srinivasan arthanari) என்ற முழுப்பெயர் 8 எழுத்துகளுக்கு சுருக்கப்பட்டு சர்த்தன் ஆகினான்.
"ஆமாம் சர்த்தன்.அது அவளே தான்.அந்த லெமன் எல்லோ கலர் சூடிதார் அவ்ளோடோடது தான்.எனக்கு நல்லாவே தெரியும்"இது அடியேன்."தென் வாட்.நீ போய் பேசியிருக்கணும் சுட்.அல்மோஸ்ட் 4 வருஷம் ஆகப் போகுது.இன்னும் பழச நெனச்சுட்டு இருக்கறது வேஸ்ட்.என்னமோ போ"என்றவாரே எங்கள் மதிய உணவுக்குப் பின்னால் வழக்கமாகப் பயிலும் சிறு நடைக்குத் தயாரானோம்.
"ஏன் சுட்.அந்தப் பொண்ணு இப்பொ உன்னப் பார்த்தா ஞயாபகம் வச்சிருப்பாளா??தேர்ட் ஃப்ளோர் காஃபிடேரியால பார்த்தேன்னு தான சொன்னே.நாம இன்னைக்கு சாயங்காலம் ஸ்னேக்ஸ் சாப்பிட அங்கே போவோம்.கண்டிப்பா ஷீல் கம் தேர்.ஏன்னா கழுதை கெட்டா குட்டிச்சுவர் வந்து தானே ஆகணும்"என்று கலாய்த்துக் கொண்டு சென்ற சர்த்தனின் பேச்சுக்கு நான் செவி மடுத்தாலும்,நினைவெல்லாம் அந்த லெமன் எல்லோ தேவதை பற்றியே இருந்தது.உத்யோகப் பளுவினால் மேற்கொண்டு நடையைத் தொடர முடியாமல் இருக்கைகளுக்குத் திரும்பினோம்.
அது நிவேதா.மூன்றாண்டுகளுக்கு நாங்கள் ஒலம்பஸ் அருகில் வசித்த போது எங்கள் வீட்டுப் பக்கத்தில் குடியிருந்த சத்தியமூர்த்தி அங்கிளின் இரண்டாவது உயிர்.எங்கள் வீட்டுப் பக்கம் குடியிருந்ததும்,காலெஜில் எனது ஜூனியராய் இருந்ததும் எங்கள் நட்பு வளரக் காரணமாயிருந்தது.
நிவேதா தனது வகுப்புத் தோழனைக் காதலிப்பது தெரியாமல் அவள் மீது மனத்தை செலுத்தியது என் தப்புத் தான்.ஆனால் உண்மை தெரிந்ததுமாவது நான் அவள் மீதான என் நாட்டத்தினைத் திசை திருப்பியிருக்க வேண்டும்.என்னை நம்பகமானவன் என்று நம்பிச் சொன்ன இந்த விஷயத்தை அவர்கள் வீட்டில் போட்டுக் கொடுத்தது,நிவேதாவின் காதலை சத்தியமூர்த்தி அங்கிள் பிரித்தது,நாங்கள் சொந்த வீட்டுக்குக் குடி பெயர்ந்தது,நான் அந்த வருஷம் வேலை கிடைத்து மும்பாய் சென்றது...சே எவ்ளோ நடந்துடிச்சி இந்த மூணு வருஷத்தில...
இன்னமும் மறக்க முடியவில்லை.நான் தான் அந்த விஷயத்தை அவளது தந்தையிடம் போட்டுக் கொடுத்தேன் என்று தெரிந்ததும்,நிவி என்னைப் பார்த்த அந்தக் கடைசிப் பார்வை.அந்தக் குற்ற உணர்ச்சினால் நான் மனம் புழுங்காத நாட்களே இல்லை என்று சொல்லலாம்.
"சே இன்னைக்குப் பார்த்து நான் என்னோட 6610 கொண்டு வர்லை.மோகினி அடிக்கரதப் பத்தி கேள்விப்பட்டுருக்கேன்.இன்னைக்கு நேர்லயே பார்த்திட்டேன்.சுட்,நம்ம ரெட்டி சொல்ரான்.அவனுக்கு உன்னோட லெமன் எல்லோவைத் தெரியுமாம்"சர்த்தன் என்னை எழுப்பிய போது மணி 3.30.
"சே..சே..ஐ வாஸ் ஜஸ்ட் திங்கிங் அபௌட் த அப்ரய்சல்"என்றவாறு இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.
சர்த்தனுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியும்.ஒரு நம்பிக்கைத் துரோகத்தினால் என் மனம் படும் வேதனையும் தெரியும்."சுட்,பழச நினச்சுக் கவலப் பட்டுட்டு இருக்கிறதுல எந்த லாபமும் இல்லை.இந்த உலகத்திலே தப்பு செய்யாத மனுஷனே கிடையாது.உன்னோட பொசிஷன்லா யார் இருந்தாலும் அப்படித் தான் செஞ்சிருப்பாங்க.பழச மறந்திட்டு இன்னைக்கு மேடம் கிட்ட போய் மனசு விட்டு பேசு.நான் நினைக்கிறேன் அந்த ஆண்டவனே உன்னோட வேதனையைப் புரிஞ்சிட்டு தான் மேடத்தை இங்கே அனுப்பியிருக்கான்.கம்மான்.சியர் அப் மேன்."
"என்கு நிவேதாவைத் தெரியும்.ஷீ இஸ் ஸ்டயிங் வித் ஹர் பேரென்ட்ஸ் இன் 13த் மெயின்"இது அதே ஏரியாவில் தன் மாமனாரின் வீட்டை வைத்திருக்கும் ரெட்டி,என் மற்றுமொரு சகா.நாங்கள் கேஃப்டீரியாவினுள் நுழைந்த சிறிது நேரம் கழித்து வந்தது எலுமிச்சை மஞ்சள் நிற தேவதை.இரண்டு டீ மற்றும் ஒரு காபிக்குப் பிறகு என்னை சற்று தைரியப்படுத்திக் கொண்டு நான் அவள் அருகிலே சென்றேன்.சர்த்தனையும்,ரெட்டியையும் கழற்றி விட்டுத்தான்.
"ஹல்லோ நிவேதா,என்னைத் தெரியுதா???"
"ஹல்லோ சுட்.ஓ வாட் எ சர்ப்ரைஸ்.உங்கள மறக்க முடியுமா?? எப்படி இருக்கீங்க?? நேத்து ஈவினிங் தான் உங்க க்ளாஸ் வெண்ணிலா அக்காவைப் பார்த்தேன்.ஷீ டோல்ட் மீ தட் யூ ஆர் வொர்க்கிங் ஹியர்.நான் இன்னைக்குத் தான் இங்கே ஜாயின் செஞ்சேன்.வெட்டியா ரொம்ப நேரம் உக்கார முடியலை.சோ,மதியத்தில இருந்து இதோட மூணு வாட்டி கேஃப்டீரியா வந்தாச்சு.என்ன அமைதியா இருக்கீங்க??"
"ஒண்ணும் இல்லை நிவி.க்ளேட் டு மீட் யூ.ரொம்ப நாள் ஆச்சில்ல பார்த்து.வீட்டுல எல்லாம் நல்லா இருக்காங்களா? எனக்கும் வேலை ஒண்ணும் ஜாஸ்தியில்லை இன்னைக்கு."வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தோம்.
இருவருக்கும் இடையில் இருந்த பனித்திரையை உடைக்க முடிவு செய்து ஆரம்பித்தேன்,"என்னை மன்னிச்சிரு நிவி.நான் அன்னைக்கு உங்க அப்பா கிட்ட உங்க விஷயத்தை சொல்லாம இருந்திருக்கணும்.என்னை முழுசா நம்பி உன்னோட காதலைப் பத்தி நீ சொன்ன.ஆனா,உனக்கு நான் நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டேன்.இத்தனை நாளும் இந்த விஷயத்தை மனசில போட்டு புழுங்கிட்டு இருந்தேன்.ஐம் சோ சாரி."
இதனைக் கேட்டதும் சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தது தேவதை."அய்யோ சுட்,இன்னுமா அதை நினைச்சு ஃபீல் செஞ்சிட்டு இருக்கீங்க.எனக்கும் கொஞ்ச நாள் கஷ்டமா இருந்தது.அப்புறமா மத்த விஷயங்கள் ஆக்கிரமிச்சுட்டதால அந்த ஃபீலிங்க்ஸ் எல்லாம் போயிடுச்சு.
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா,நான் லவ்வீட்டு இருந்த அந்த பாலா அவங்க மாமா பொண்ண நாங்க ஃபைனல் இயர் படிக்கும் போதே கல்யாணம் செஞ்சிட்டான்.இந்தக் கல்யாணம் சின்ன வயசிலேயே அவங்க வீட்டுல பேசி வச்சதாம்.அவனுக்கு அந்த விஷயம் தெரிஞ்சும் என்னை லவ் செஞ்சிருக்கான்.கேட்டா எப்படியும் உங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க-ங்கற தைரியத்தில தான் என்ன லவ் செஞ்சேன்னு சொல்றான்.இவனப் போய் நான் நம்பியிருக்கேன் பாருங்க.
இதெல்லாம் தெரிஞ்ச பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெளிஞ்சேன்.இதுக்கு அப்புறமா இதப் பத்தி உங்க கிட்ட மனசு விட்டு பேசணும்னு கூட நினைச்சேன்.பட்,நீங்களோ மும்பாய் போய்ட்டீங்க.நானும் ப்ரொஜெக்ட் அது இதுன்னு ரொம்ப பிசி ஆகிட்டேன்.
இந்தச் சுடிதார் ஞயாபகம் இருக்கா??இன்னைக்கு இங்கே வரும் போது எப்படியாவது மீட் செய்வேன்னு மனசில ஒரு குருவி சொல்லிச்சு.அதனால தான் பழசானாலும் பரவால்லைன்னு இதையே போட்டுட்டு வந்தேன்."
என்று தொடங்கிப் பல விஷயங்களைப் பேசிவிட்டும்,எங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களைப் பரிமாரிக் கொண்டும் இருக்கைக்குத் திரும்பும்போது மணி 5.30.எல்லாவற்றையும் கேட்டு விட்டு "அப்புறம் என்ன சுட்.நிவேதா உன் மேல வச்சிருந்த அன்பு,நம்பிக்கை எல்லாம் கூடியிருக்கு.ஏஸ் டிஸ்கஸ்டு இந்த வாரம் சனிக்கிழமை அவங்க வீட்டுக்கு போய்ட்டு வா.நான் அப்பவே சொன்னேன் இல்லையா?நத்திங் டூ வொர்ரி.காலேஜ் படிக்கும் போது தான் மிஸ் பண்ணிட்ட.இந்த முறையாவது உன் மனசில இருக்கறத சொல்லிடு..."என்றார் சர்த்தன்.
என்ன செய்யலாம்??
நீங்களும் சொல்லுங்களேன்...
[+/-] |
குழலினிது யாழினிது என்பர்... |
[+/-] |
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்... |
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
"அம்மா.ரொம்ப நாளா இந்த பட்டுப் புடவையை ட்ரை வாஷ் பண்ணணும்னு சொல்லீட்டு இருந்தீங்களே..." என்று பெண்பிள்ளை ஆரம்பித்தால் அடுத்து வரப்போவதைத் தாராளமாக ஊகிக்கலாம் - "அந்தப் பட்டுப்புடவையும் திருமண பஃபே விருந்தில் கலந்து கொண்டு பசியாற்றியது" என்று.
அதே போல இவற்றைக் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.
1.கல்யாணத்திற்குக் கெளம்பரப்ப தான் ஞயாபகம் வந்திச்சி இன்னைக்கு ஞயாயித்துக் கிழமைன்னு.இந்த ஊர்ல எவன் ஞயாயித்துக் கிழமையன்னிக்கு கடைய சீக்கிரமே தொறக்கப்போரான்... ஹி.ஹி..
2.நம்ம சூலூர் பிரேஞ்சில உங்களப் போல ஒரு அனுபவஸ்தர் இல்லாமத் தான் குட்டிச்சுவர் ஆகிப்போச்சு.
3.ஸ்போர்ட்சிலயெல்லாம் உங்க பையன் தான் ஸ்கூல்லயே முதல்..
4.அடடா..நீங்க சொல்ரது சரிதான் சார்.ரொம்பத்தான் ஒழுகுது.ரிப்பேர் செஞ்சிட வேண்டியது தான்.
5.ஏம்பா.உங்க பேனா உடையவே உடையாதுன்னு சொல்லீட்டு இருந்தீங்களே...
6.இஸ்திரிக்கு போட்டிருந்த அந்த புளூக் கலரு கட்டம் போட்ட சட்டை புதுசுங்களா???
7.ஆமாம்.காவிக்கலர்ல இந்தச் சேர்ல தான் இருந்தது.நீங்க தான் அந்த கர்ச்சீப்பைப் போட்டு வச்சிருந்தீங்களோ??
8.என்ன சார்.நீங்க ஏறும் போதே தெளிவா சொல்லியிருக்காலம்ல இன்னர் ரிங் ரோடு தான் போகணும்னு.
9.உப்பெல்லாம் புக்ல சொல்லியிருக்கிற அளவு தான் போட்டேன்.ஆனாக்கூட....
எங்க மேலே சொன்ன மேட்டர்கள்ள மெய்ப்பொருள் என்ன என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்...
[+/-] |
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே... |
எப்போதெல்லாம் வெறுமையும்,சோகமும் கோடை வெயிலாய் என்னைப் பீடித்ததோ அப்போதெல்லாம் நான் தேடி ஓடும் நிழல்களில் இந்தப் பாடலும் ஒன்று.
நல்ல கருத்தாழம் நெஞ்சைத் தொடும் பாடல் வரிகள்.
வரிகளுக்கு மதிப்பளித்து அவற்றை அமுக்காது இயல்பாய்ப் பின் தொடரும் இசை.
கேட்டவர் மனதில் கேட்ட உடனேயே பாடலை நடவு செய்யும் குரல்.
எல்லாவற்றிற்கும் மேலாக பாடல் படம் ஆக்கப்பட்ட விதம்.
இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னால் ஒரு நேர்காணலில் இந்தப் பாடலானது முன்னர் சேரன் பாடுவது போன்று இருந்ததாகவும் பின்னர் அது சினேகாவிற்கு ஒதுக்கப்பட்டது எனவும் சினேகா குறிப்பிட்டிருந்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடம் ஆக்கப்பட்டது,தென்னிந்தியத் திரை உலகிற்கான ஃபிலிம்பேர் விருதுகளில் தமிழில் சிறந்த இசை அமைப்பாளர் விருது பெற்றது என்று தொடரும் இப்பாடலின் சாதனைகளில் ஒரு மகுடமாய் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த பின்னணிப் பாடகி விருதினையும்,சிறந்த பாடலாசிரியர் விருதினையும் பெற்றுள்ளது இந்தப்பாடல்.
சித்ரா,பா.விஜய் மற்றும் சேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
மனிதா! உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்[+/-] |
வீட்டு தோசையும் எனது ஒரு வார இறுதியும் |
முன் குறிப்பு:இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் வீட்டு தோசை என்றழைக்கப்படும் வஸ்துவானது வீட்டில் மட்டுமல்ல காடு,மேடுகளில் கூட செய்யலாம்.இதன் மூலப்பொருளான கோதுமை ஆங்கிலத்தில் வீட் என்று அழைக்கப்படுவதால் தமிழ் தெர்யாத தோசைப் பிரியர்களின் சௌகரியத்திற்காக வீட் தோசா என நாமகரணம் சூட்டப்பட்டது.பின்னர் காலப்போக்கில் அதுவே மறுவி வீட்டு தோசை என்றானது.
நம்ம ஊரு ஆளுங்க சமையல் விஷயத்தில எப்பவுமே புதுமை விரும்பிங்க."கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்"ல மணிவண்ணன் சொல்ற மாதிரி நம்ம ஊர்க்காரவங்க புதுசா ஒரு பூவைப் பார்த்தா ஒண்ணு நூலால் கட்டி தலையில வச்சிக்குவாங்க இல்லையின்னா மாவில பிரட்டி எண்ணையில பொறட்டி எடுத்துடுவாங்க.போன வாரம் இங்கே ஒரு ஹோட்டல்ல "தோசா ஃபெஸ்டிவல்" நடக்குதுன்னு என்னோட ஒரு சோக்காளிக்கு எப்படியே தகவல் வந்திருக்கு.எப்பவுமெ வெளினாட்டு அலகிகளப் பார்க்க மட்டுமெ TOI-ஐப் புரட்டற ஆள் இன்னைக்கு இந்த விளம்பரம் வந்திருக்கான்னு பேப்பரைத் தலைகீழா அலசினான்.எப்படியோ அந்த உணவகத்து முகவரியும் கண்டுபிடிச்சிட்டான்.மக்கா நாள்,சனிக்கிழமை ராவைக்கு அந்த ஹோட்டலுக்கு போறதா முடுவு செஞ்சோம்.
உங்களுக்குத் தான் சனிக்கிழமை ட்ராஃபிக்-ஐப் பத்தி நல்லாத் தெரியுமே.எப்பேர்ப்பட்ட வண்டியானலும் ஆமை மாதிரி ஊர்ந்து செல்லும் ட்ராஃபிக் இருக்கிற ஏரியாவுல இருந்து அந்தப் பலகாரக் கடை.ஒரு வழியா அந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேரும்போதே மணி 9.15 ஆகிடுச்சு.உள்ளே போனவுடனே எங்க எல்லார்த்துக்கும் மயக்கம் வர்ர மாதிரி ஆகிடுச்சு.செமத்தியான கூட்டம்."தம்பிகளா,சனி,ஞாயித்துக் கிழமைகள்ள இங்ஙன யாருமே அடுப்பு பத்த வைக்கிரது இல்லை போல இருக்கு"ன்னு ஒரு வயசான சோக்காளி பொலம்பிட்டே அனாதையா இருந்த ஒரு டேபிள் பக்கமா எங்களை அழச்சிட்டு போனார்.
வெயிட்டர் வந்து ஆர்டர் எடுக்கும் போது தான் அந்தக் கூத்து நடந்தது.என் கூட வந்த தோஸ்துகள்ள ஒருத்தர் கொஞ்சமா சோமபானம் ஏத்தியிருந்தார்.அவர் கேட்ட வீட் தோசை தீர்ந்து போச்சுன்னார் வெயிட்டர்.வீட்டு தோசை இல்லைன்னா என்ன எனக்குக் காட்டு தோசை கொண்டு வான்னு ஒரே அலப்பர.அவர சமாதானப்படுத்த நான் தெரியாத்தனமா வீட் தோசை எல்லாம் வீட்டுல தான் சாப்பிடணும்.நான் உங்களுக்கு நாளைக்கு நம்ம வீட்டுல செஞ்சி தர்ரேன்னு சொல்லி மெதுவா சமாதானப் படுத்தினேன்.அவரோட ஞாபகசக்தி மேலே எனக்கு அபார நம்பிக்கை.
ஒரு வழியா வாழப்பழ தோசை,அன்னாச்சி தோசை,தேங்காய் தோசை,பொடி தோசை அப்படின்னு வித விதமா ரவுண்டு கட்டி சாப்பிட்டு விட்டு வூடு வந்து சேர்ந்தப்போ மணி 11.30 ஆயிருச்சு.நம்ம தோஸ்த்தோ தூக்கத்தில எல்லாம் "வீட்டு தோசை,வீட்டு தோசை"ன்னு பொலம்ப ஆரம்பிச்சிட்டார்.
மக்கா நாள் சன்டே-ங்கறதால எல்லாரும் சூரியனுக்கு மரியாத செலுத்தும் விதமா 11 மணிக்கு எந்திரிச்சோம்.ஒரே அடியா சாப்பாடு செஞ்சு சாப்பிடடலாம்னு எல்லாம் பேசிட்டு இருந்தப்போ தான் நம்ம தோஸ்த்து வீட்டு தோசை பிரச்சினையைக் கெளப்பினாரு.செம்ம ரகளைக்கு அப்பறமா எல்லாம் சேர்ந்து ஒரு முடுவுக்கு வந்தாங்க.அந்த முடுவு என்னன்னா அதாகப்பட்டது நான் வீட்டு தோசை ஊத்தணும்;அதுக்குத் தொட்டுக்க பொடியை நம்ம சோக்காளிகள்ள ஒருத்தர் போய் கடயில வாங்கிட்டு வருவார்.
இதுல என்ன ஒரு கொடுமைன்னா எனக்கு அப்போ வீட்டு தோசைன்னா எப்படி இருக்கும்,அதை எதில செய்யிறதுன்னெல்லாம் தெரியாது.நான் பாட்டுக்கு ஏதோ ஒரு மாவில தோசை சுட்டிடலாம்.ஆனா என் கூட இருக்கிற சோக்காளிக எல்லாம் கோக்கு மாக்கனவிங்க.அவிங்க கிட்ட பொய் சொல்லைத் தப்பிக்க முடியாது.அப்புறம் அதுக்கு தண்டனையா எங்கியாவது கூட்டிட்டுப் போய் தீர்த்தவாரி வைக்கணும்.அப்பாலிக்கா,நம்ம கூட வேலை செய்யற ஒரு தாய்க்குலத்து கிட்ட பேசினப்புரம் தான் தெரிஞ்சது வீட்டு தோசைன்னா கோதுமை தோசைன்னு.அப்படியே அவிங்க கிட்ட அந்த தோசை-யோட ரெசிப்பி கேட்டு வாங்கிட்டேன்.எல்லா மூலப் பொருள்களையும் தயார் பண்ணிட்டு களத்தில குதிச்சேன்.
இப்போ தோசை ஊத்த மாவு ரெடி செஞ்சாச்சு.ஆனா தண்ணி மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கிற மாதிரியில்ல இருக்கு.சரி.மாவு கொஞ்சம் போட்டுட வேண்டியது தான்.அய்யோ.என்ன இது மாவு கொஞ்சம் ஜாஸ்தியாப் போன மாதிரியில்ல இருக்கு.சரி தண்ணி கொஞ்சம் ஊத்திட வேண்டியது தான்.இப்படி 2 கிலோ மாவைப் போட்டு தோசை மாவ ரெடி செஞ்சாச்சு.தோசையும் நல்லாவே வந்தது.எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.
ஆனா ஒண்ணு மட்டும் எனக்கு புரியலைங்க.முந்தா நேத்து மத்தியானம் சாப்பிட்டப்ப எல்லாம் நல்லா இருக்குண்ணாங்க.எப்பவுமே தோசை சாப்பிடாத ஆளு கூட ரெண்டு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிட்டாங்க.முந்தா நேத்து ராவையில சாப்பிட்டப்பவும் ஒருத்தரும் ஒண்ணும் சொல்லலை.நேத்திக்குக் காத்தாலை வீட்டு தோசை சாப்பிட்டப்பவும் எல்லாப் பய புள்ளையும் கம்முன்னு தான் இருந்திச்சு.நேத்திக்கு ராவைக்கு சாப்பிடரப்ப மட்டும் எல்லாம் உம்முன்னு இருந்தாங்க.அதென்னமோ இன்னைக்கு கார்த்தால சாப்பிடரப்ப அந்த வீட்டு தோசை கேட்ட சோக்களி அழுவ ஆரம்பிச்சுட்டாரு.மத்தவிங்க எல்லாம் அவரைத் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.என்ன இனிமே சமயல் ரூமுக்கு வரக் கூடாதுண்ணும் சொல்லிட்டாங்க.எனக்குத் தான் ஒண்ணுமே வெளங்கல.
அவிங்கள விடுங்க.இன்னைக்கு ராத்திரி சாப்பாட்டுக்கு என்ற வூட்டுப்பக்கம் வாங்க.உங்களுக்கு சூடா ஸ்பெஷலா வீட்டு தோசை சுட்டு தர்ரேன்.
அட,என்னப்பா ஓட ஆரம்பிச்சிட்டீங்க.அட நான் என்ன விஷம் சாப்பிடவா வரச் சொன்னேன்.வீட்டு தோசை சாப்பிடத்தானே வரச்சொன்னேன்.
[+/-] |
சில சமயம் காதலையே.... |
"மூணு பேர்த்த லவ் பண்றானாம்.கடைசியில நாலாவதா ஒரு பொண்ணக் கல்யாணம் செஞ்சிக்கிறானாம்.என்ன கத இது.கனிகாவுக்குப் பதிலா சினேகாவைக் கல்யாணம் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும் இல்லையா அண்ணா??"என்று கேட்ட எனது தங்கை(cousin sister)அப்போது படித்துக் கொண்டிருந்தது ஏழாம் வகுப்பில்.
நாங்கள் ஆட்டோகிராஃப் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது தான் மேற்கண்ட சம்பாஷனை நடந்தது.நானும் சித்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம்."நந்து,படத்தில மூணு பேர சேரன் லவ் பண்ணல.சினேகா அவரோட ஃப்ரெண்ட் மட்டுமே" என்ற எனது பிரசங்கத்தினை ஆரம்பித்த போது,சித்தி மெல்ல நந்தினிக்குத் தெரியாமல் டாபிக்கை மாற்றுமாறு சைகை காட்டினார்.
வீட்டுக்கு வந்தபின் சித்தி "நந்தினிக்கு இந்த உணர்வு பூர்வமான விஷயங்கள் தெரிய வர இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலாம்.நேத்து கூட ஒரு ஹிந்தி படத்தை பார்த்துட்டு இப்படித்தான் ஏதோ சொல்லிட்டு இருந்தா.சினிமா பார்த்து எதக் கத்துக்கறாங்களோ இல்லையோ இதப் பத்தி மட்டும் நல்லாத் தெரிஞ்சுக்கறாங்க.ஆமாம்,நீ கூட புது வசந்தம் படம் வந்த புதிசில அதைப் பார்த்திட்டு சித்தாரா முரளியை ஏன் கல்யாணம் பண்ணலைன்னு கேள்வியாக் கேட்டிடு இருப்பியே,அதெல்லாம் இப்போ ஞாபகம் இருக்கா??
அது சரி.படம் பார்த்திட்டு இருந்தப்போ ஒரு சில காட்சிகள்ள நீ லேசா கண்ணக் கசக்கின மாதிரித் தெரிஞ்சது.என்ன உன்னோட மல்லிகா,கோபிகா எல்லாம் ஞாபகத்திற்கு வந்திட்டாங்களோ" என்றவாறு என்னிடம் போட்டு வாங்க ஆரம்பித்தார்.
நான் மெல்லமாய்ச் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டி வைத்தேன்.
காதல் என்ற உணர்வு ஒரு முறை கூட தனது வாழ்வில் வாராத மனிதர் இருக்க முடியாது.காதல் எனப்படுவது யாதெனின்....ஹல்லோ.யாரும் ஓடிடாதீங்க.என்னோட கதை எல்லாம் போட்டு நான் உங்களைத் துன்பப்படுத்த விரும்பலை.
அது சரி,காதல்னா என்ன???
தான் அன்பு செலுத்தற சக மனிதனை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்.எதனையும் எதிர்பாராமல் பேரன்பு செலுத்துதல்.எங்கேயோ படிச்சது இப்போ ஞாபகத்துக்கு வருது.காதலிக்கும் போது நாம நம்மளோட வீட்டின் முகப்பை மட்டுமே நமது சகாவிற்குக் காட்டுவோம்.நம்ம வீட்டிலும் கழிப்பறை இருக்குங்கறத திருமணத்திற்குப் பிறகே அவங்க அறிய அனுமதிப்போம்.
என்னோட கல்லூரிக்காலங்களில் ஆயிரம் காதல் கதைகள் பார்த்திருப்பேன்.அதில மறக்கமுடியாத ஒரு கதை தான் இப்போ நான் உங்க கூட பகிர்ந்துக்கப் போறது.எந்த ஒரு உறவும் சிறந்து விளங்க அடிப்படைப் பொருளாய் அமைவது ஒருவர் மற்றவரிடத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கையே. இந்த சித்தாந்தத்தின் மேல நான் வச்சிட்டு இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கைக்கு காரணமான நிகழ்வு தான் இது.
என்னோட கிளாசில ஒரு பையன்.அவன் பேரு ஈஸ்வர்னு வச்சிக்குவோம்.ஒரு பொண்ணு.அந்தம்மா பேரு பிரேமான்னு வச்சிக்குவோம்.ரெண்டு பேரும் முத வருஷம் தொட்டே ரொம்ப ஆழமா லவ்வீட்டு இருந்தாங்க.DDLJஐ பார்த்த நம்ம ஹீரோ சார் அதில வர்ர மாதிரி ஹீரோயினி வீட்டுல அவிங்க அப்பா,அம்மா,தங்கச்சி,கஸினுக,ஒண்ணு விட்ட சித்தப்பா,ரெண்டு விட்ட அத்தை இப்படி எல்லார்த்தையும் சினேகம் பண்ணிட்டாரு.இதில அடிக்கடி ,"ப்ரேம்ஸ் வீட்டுக்கு நான் மருமகனாப் போகப் போறது கிடையாது.பையன் இல்லாத வீட்டுக்கு ஒரு பையனாத்தான் போகப் போறேன்" அப்படின்னு டயலாக் வேற விடுவாரு.
ஹீரோயினி வீட்டிலயும் இவிங்க மேல ஒரு நல்ல மதிப்பு வளர்ந்திட்டு வந்தது.
இப்படியா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா அவிங்க காதல் சோதி வளர்ந்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சது.எங்க கல்லூரியில யாரைக் கேட்டாலும் இந்த ரெண்டு பேரும் தான் தங்களோட ஆதர்ஷ காதல் சோடிகள்னு சொல்லுவாங்க.ஹூம் அதெல்லாம் ஒரு காலம்.
எஞ்சினீயரிங் முடிச்சு எல்லாம் திசைக்கு ஒரு பக்கமாப் பிரிஞ்சு போய்ட்டோம்.நாங்க முடிச்ச வருஷத்தில தான் அமெரிக்க ரெஸிஷன்,டாட் காம் பர்ஸ்ட்,கிரகம் புடிச்ச செப்டம்பர் 11 அப்படின்னு தொடர்ச்சியான துன்பியல் நிகழ்வுகள்.எந்த சாஃப்ட்வேருக் கம்பெனியும் ஃப்ரஷர்களை எடுக்கலை.நாங்க ஒரு 10 பேர் கேம்பஸில் தேர்வாகியிருந்ததால் உடனே வேலைக்குச் சேர்ந்துட்டோம்.நம்ம ஹீரோ வேலை தேடி ரொம்பக் களைச்சிப் போயிருந்தார்.ஹீரோயினி ஒரு நிகர் நிலை பல்கலைக்கழகத்தில முதுகலைப் படிப்புக்கு சேர்ந்துட்டாங்க.ஹீரோவை ரொம்பவும் மோட்டிவேட் செஞ்சாங்க.
பாவம் ஹீரோ சார்.விதி விளையாட அவர் என்ன பண்ணுவார்.வீட்ல திடீர்னு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள்,தனக்கு இன்னும் வேலை கிடைக்காத சூழ்நில.தன்னோட வயதொத்த சினேகிதிமார் எல்லாம் கல்யாணம் கட்டீட்டு அமெரிக்கா,ஐரோப்பான்னு பறக்கரதப் பார்த்து முதுகலை படிக்கப் போன நம்ம ஹீரோயினி இன்னமும் ஹீரோவையே நம்பியிருந்தா வேலைக்கு ஆகாதுன்னு முடிவு செஞ்சிட்டாங்க.இப்படி ஒரு வருஷமும் முடிஞ்சு போச்.இப்பொ எப்படியோ ஹீரோ ஒரு அரசாங்கக் கம்பெனியில வேலைக்கு சேர்ந்திட்டார்.ஆனா நம்ம ஹீரோயினிக்கோ சாபுட்வேரு மாப்பிள்ளைங்க மேல தான் இப்ப நாட்டம்.அப்புறம் என்ன நடந்ததுன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.
ஹீரோயினி வீட்டுல அவிங்க காதலப் பத்தி சொல்லியிருந்தா கண்டிப்பா அவிங்க ஒத்துட்டி இருந்திருப்பாங்க.ஆனா வெளி நாடு பறக்கும் ஆசையானது கண்ணை மறச்சிட்டதனால ஹீரோயினி டபுள் கேம் ஆடிட்டாங்க.வீட்டுல தங்களோட காதலுக்கு அங்கீகாரம் கிடைக்காதுன்னு ஹீரோ கிட்ட பொய் சொல்லிட்டு,வீட்டுல இவிங்க காதலைப் பத்தித் தெரியாத பேரன்ட்ஸ் பார்த்து வச்ச ஒரு அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிட்டாங்க.வெவரம் தெரியாத ஹீரோ கொஞ்ச நாளைக்குத் தேவதாசு மாதிரி சுத்தினாரு.கலியாணத்துக்கு எல்லோருக்கும் அழைப்பு வந்தது.
ஹீரோ வீட்டுல இருந்திட்டு "எங்கிருந்தாலும் வாழ்க"ன்னு ஆசிர்வாதிச்சிட்டாரு.அதுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு நம்ம ஹீரோயினி அம்மா ஆகிட்டாங்க.ஆனா அவிங்க பையனுக்கு நியூமராலஜி எல்லாம் பார்த்து மிலிந்த் கார்த்திகேயன்னு தான் பேர் வச்சாங்க.இத்தக் கேள்விப்பட்ட நம்ம ஹீரோ இனியும் ப்ரேம்ஸை நினச்சு வாழ்க்கயத் தொலைக்கறதுல அர்த்தம் இல்லைன்னு முடிவு செஞ்சிட்டாராம்.என்னை அவரோட கலியாணத்துக் கூப்பிட வந்தப்போ தான் இத்தனை கதயும் சொன்னாரு.ஹீரோயினி டபுள் கேம் ஆடின மேட்டர் ஹீரோயினோட ஜிகர் தோஸ்த்து ஹீரோ மேல பரிதாப்பட்டு ரகசியமா சொன்னதாகவும் சொன்னாரு.
ஆகவே மக்கா,திரும்பவும் சொல்றேன்.காதல்னா என்ன???
தான் அன்பு செலுத்தற சக மனிதனை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்.எதனையும் எதிர்பாராமல் பேரன்பு செலுத்துதல்.அது மட்டுமல்ல,எந்த ஒரு உறவும் சிறந்து விளங்க அடிப்படைப் பொருளாய் அமைவது ஒருவர் மற்றவரிடத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கையே (Trust is the basic entity between any relationship).
காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.
சில சமயம் காதலையே...
[+/-] |
கோவன்புத்தூர் தொடங்கி கோயம்புத்தூர் வரை. |
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா..."
இந்தப் பாட்டைச் சின்ன வயசில கேட்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு தான் வரும்.
எப்படா கால் பரிச்சை,அரைப் பரிச்சை லீவு வரும்,எப்படி ஊர் சுத்தத் தாத்தா ஊருக்குப் போலாம்னு நெனக்கிற ஆளு நானு.
லீவு முடிஞ்சாலும் எனக்கு ஊருக்குத் திரும்ப மனசே இருக்காதாம்,சினிமாவுக்குக் கூட்டிட்டு போறேன்,சர்க்கஸுக்குக் கூட்டிடுப் போறேன்னு பொய் சொல்லிதான் என்னை அங்கே இருந்து இங்கே கிளப்பிட்டு வருவோம்னு இப்போ கூட எங்க மாமா கூட ஓட்டிட்டு இருப்பார்.அங்கென்னு சொல்றது எங்க தாத்தா ஊரான பழனியை.இங்கென்னு சொன்னது நம்மட ஊரான கோயம்த்தூரை.
"சென்னை மேரீ ஜான்"-அப்படின்னு எழுதிய ஒரு பதிவுக்கு வந்த வரவேற்பப் பார்த்து சரி நம்பட ஊரப் பத்தியும் அதே பாணியில ஒரு பதிவைப் போட்டுடலம்ன்னு முடிவு செஞ்சிட்டு இத்த ஆரம்பிச்சிருக்கேன்.
அதனால மக்கா உங்களது கோவை தினங்களை நினைவு படுத்தும் விதத்துல இந்த ஒரு போட்டி.இப்போவே சொல்லிப் புட்டேன் ஆனா prize எதுவும் கிடையாது.
1.கீழ்க்கண்ட இடங்களது பெயர்களை விரிவு படுத்தவும்.
Ex:P.N.பாளையம் - பாப்ப நாயக்கன் பாளையம்
(i)R.S.புரம் -
(ii)N.G.G.O காலனி -
(iii)D.B.ரோடு -
2."செவன் இஸ் ஹெவன்" என்றெல்லாம் சரித்திரப் புகழ் வாய்ந்த 7-ஆம் நெம்பர் பேருந்து செல்லும் பாதையில் உள்ள வழித்தடங்களைக் கூறவும்.
3.ஹோப் காலேஜ் : கோவையிலிர்ந்து அவினாசி மார்க்கமாகச் செல்லும் ஒரு முக்கியமான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பு.இந்தப் பகுதியினைச் சுற்றிலும் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.ஆனால் இந்தப் பகுதில் ஒரு காலேஜும் இந்தப் பெயருடன் இல்லை.
பிறகு எப்படி இந்தப் பகுதிக்கு "ஹோப் காலேஜ்" என்ற பெயர் வந்தது?
4.நான் குறிப்பிடும் இத்திரை அரங்கம் கோவையில் உள்ள திரை அரங்குகளில் மிகச்சிறந்த ஒலி நுட்பம் கொண்டுள்ளது.இந்தத் திரையரங்கில் தான் மணிரத்தினத்தின் திரைப்படங்களில் 90%,ராஜ்கமல் நிறுவன வெளியீடுகளில் 90% ரிலீஸ் செய்யப்பட்டது.(அஞ்சலி,தளபதி,குணா...).இதனுடைய கான்டம்ப்ரரி நிறுவனங்கள் மருத்துவ,ஹோட்டல் துறைகளில் ஈடுபட்டு வந்தாலும் இந்த நிறுவனம் திரைப்பட வெளியீட்டுத் துறையினில் மட்டும் ஈடு பட்டு வருகிறது.
இந்தத் திரையரங்கினைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
5.கோவையில் தொடங்கி மற்ற நகரங்களிலும் வெற்றிக் கொடி கட்டி இருக்கும் வியாபார நிறுவனங்கள் 4 கூறவும்.
6.கோவை மாநகர எல்லைகள் யாவை?
அப்புறம்,ஒரு முக்கிய விஷயம்.உங்களோட பங்களிப்பு,ஆதரவப் பொறுத்து மத்த நகரங்களுக்கும் இந்தக் கேள்வித்தொடரைத் தொடரலாம்னு இருக்கேன்.
நான் போயிருக்காத ரசிக்க வாய்ப்புக் கிடைத்திருக்காத ஊர்கள் ஏராளமா இருக்கு.அதனால உங்க ஊர் பத்தியும் இப்படி ஒரு கேள்வித்தொடர் நடத்த ஆர்வம் இருக்கிற மக்கா எனக்கு ஒரு மெயில் போடுங்க...
[+/-] |
ஆகாசவாணி,செய்திகள் வாசிப்பது... |
"தம்பி,ஏழே கால் நியூஸ் ஆரம்பிச்சாச்சு.போய் குளிச்சுட்டு வந்திடு" இந்த வாசகம் கேட்காத நாட்களே இல்லை எனலாம் எனது K.G.நாட்களில்.
இங்கே தம்பி என்று விளிக்கப்பட்டது எனது மாமா.
என்னதான் எங்கள் வீட்டில் அப்போது சாவி கொடுக்கும் கடிகாரம் இருந்தாலும் எனது தாத்தாவிற்கு ஆகாசவாணி தான் கடிகாரம்.எங்கள் வீட்டில் இருந்த ரேடியோப் பெட்டியோ அரதப் பழசான ஒன்று.என் தாத்தாவின் திருமணப்பரிசாக அவரது எதிரிகளால் பரிசளிக்கப்பட்டது என்று கேலி செய்வது எங்கள் பாட்டியின் தினசரிக் கடமைகளில் ஒன்றாய் இருந்தது.
"ஏம்மா அப்பவோட ஜிகிரி தோஸ்த்துகளைப் போய் இப்படிப் பேசறியே"என்று மெதுவாகத் தீயில் எண்ணை ஊற்றத் துவங்குவார் என் மாமா."ஆமாம்.உங்கப்பா தான் அவங்கள மெச்சிக்கணும்.தோஸ்துகளாம் தோஸ்துங்க.எல்லாம் எச்சக் கையால காக்கா ஓட்டாத ஆளுங்க.அவங்கள விட்டுத் தள்ளு.அவங்க பரிசாக் கொடுத்த இந்தப் பொட்டி-யை வச்சிட்டு உங்க அப்பா செஞ்ச கூத்து இருக்கே.அப்ப எங்க ஊரில ரேடியோ எல்லாம் கிடையாது.இவருக்கோ ரேடியோக் கேக்காம உண்ட சோறு சீரணம் ஆகாது.இவர் புடிச்ச புடிவாதத்தினால எங்க தல தீவாளிக்கு எங்க வீட்டுல இருந்து எல்லா சனமும் இங்கயே வந்திட்டாங்க."என்று தனது வணக்கம் தமிழகத்தைத் தொடர்வார் என் பாட்டிம்மா.
இப்படி ரேடியோவை வைவதெல்லாம் வெறும் நடிப்பே என்பதை இலங்கை வானொலியில் மாலை நேர ஒலிபரப்புகளில் வரும் பாடல்களை ரசித்தவாறே அவற்றை முணுமுணுக்கும் பாட்டியின் மற்றுமொரு முகம் காட்டிக் கொடுத்துவிடும்.
இந்த வானொலியின் விசேஷம் என்னவென்றால்,இதன் வாக்குவம் குழாய்களின் மூலம் இயங்குவதைக் குறிப்பிடலாம்.ட்ரான்சிஸ்ட்டரின் எல்டர் சிஸ்டர் இது :)
நீங்கள் 7 மணிக்கு ஏதாவது நிகழ்ச்சியினைக் கேட்க வேண்டும் என்றால் வானொலியினை சுமார் 6.45க்கே ஆன் செய்து விட வேண்டும்.(கூகிளிட்டுத் தெரிந்து கொள்ளலாம்).ஆயினும் எத்தனையோ இதயங்களின் சாயங்கால சந்தோஷமாய் வானொலி இருந்தது என்பதினை மறுப்பதற்கில்லை.
திருமணமாகாத சித்திக்குப் பிடித்த இலங்கை ஒலிபரப்பு(எனக்குப் பிடித்தது அவற்றினூடெ வரும் பிறந்த தின வாழ்த்துக்கள்),என் மாமாவிற்குப் பிடித்த கிரிக்கேட் வர்னணைகள்,தாத்தாவிற்குப் பிடித்த மதிய நேரத்து கர்னாடக சங்கீதம்,புதனிரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் அரை மணி நேர நாடகம்,என்னுடைய favourite என்று முத்திரை குத்திவிட்டு அனைவரும் அமர்ந்து கேட்கும் மழலையர் பூங்கா,ஞாயிறு மதியம் ஒலி வலம் வரும் ஒரு மணி நேர நாடகம்/ஒலிச் சித்திரம்,மார்கழிக் காலைகளை எழுப்பும் திருப்பாவை,திருவம்பாவை விளக்கங்கள் இப்படிப் பலப் பல நிகழ்ச்சிகள்.
எந்த ராஜா எந்த பட்டிணம் போனாலும் எங்கள் தாத்தா மாலை 6.30க்கு அலுவலகத்திலிருந்து வந்து விடுவார்.6.30 மாநிலச் செய்திகள்,அதற்குப் பிறகு என் பாட்டியுடன் சிறிது சண்டை(பெரும்பாலும் இரவு டிபன் பற்றியும்,எங்கள் மாமா நேரத்திற்கு வீடு திரும்பாத்து பற்றியுமே இருக்கும்)பிறகு 7.15 தேசியச் செய்திகள் என்று தொடரும்.அவர் விருப்ப ஓய்வு பெற்ற போது வீட்டினுள் தொலைக்காட்சி வந்திருந்த போதிலும் அவரது அந்தப் பழய வானொலி மீதான காதல் குறையவில்லை.
அட இப்போது தான் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.அப்போது சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் நேர்முக வர்ணனை தமிழில் சென்னை வானொலி நிலையத்தின் புண்ணியத்தால் வந்து கொண்டிருந்தது.ஒளிக்கு தூர்தர்ஷனையும் ஒலிக்கு வானொலியினையும் set செய்து புதுமை செய்தார் எங்கள் தாத்தா.அந்தச் சமயங்களில் தெருவே எங்கள் வீட்டில் தான் இருக்கும்.துபாய் கலர் டி.வி. வைத்திருந்த சத்தியமூர்த்தி மாமா கூட எங்கள் வீட்டில் தான் மேட்ச் பார்ப்பார்.எனது பாட்டிக்கோ பெருமை கொள்ளாது.
ஹூம்....இப்பொது அந்த வானொலியும் இல்லை எனது தாத்தவும் இல்லை இந்தப் பூவுலகில்.நான் 7வது படிக்கும் போது(ரோஜா வெளிவந்த சமயம்)ஒரு கால் பரிட்சை விடுமுறையின் போது எனது தாத்தாவும் அதற்கு சற்றேறக்குறைய 15 நாட்களுக்கு முன்னால் அவரது வானொலி நண்பனும் இயக்கமற்றுப் போயினர்.
இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை.
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை.
[+/-] |
21 ஆயிரம் கோடிக்கு எவ்வளவு சைபர்??? |
மிகச் சரியாகச் சொல்லப் போனால் 21,068 கோடிக்கு எவ்வளவு சைபர் என்று தான் கேட்க வேண்டும்.
இந்தத் தொகை தான் ஆண்டொன்றுக்கு ஒரு சராசரி இந்தியன் பல்வேறு அரசு எந்திரங்கள் இயங்க லஞ்சமாகக் கொடுக்கும் பணம் என்று சொல்கிறது ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்னேஷனல் என்ற அமைப்பு நேற்று தில்லியில் வெளியிட்ட "இந்தியா கரப்ஷன் ஸ்டடி 2005" அறிக்கை.
இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட 62% பேர் ஊழல் என்பது ஒரு நிதர்சனமான உண்மை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.மூன்றில் ஒரு பங்கு மக்கள் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஊழல் அதிகரித்திருப்பதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு...
http://economictimes.indiatimes.com/articleshow/msid-1157054,curpg-2.cms