என்ன தான் பல வருடங்கள் பயணம் செய்து கொண்டிருந்தாலும் ரயில் என்னவோ எனக்கு இன்னமும் ஒரு அன்னிய ஜந்துவாகத்தான் இருக்கிறது. ஓடும் போது பேருந்து போல நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் இறங்கவும் ஏறவும் முடியாது என்பது ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம். தவறான கம்பார்ட்மென்டில் ஏறிவிட்டால், நமது இடத்திற்குப் போய்ச்சேருவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.போகிகள் இணைக்காமல் இருந்தால் அதோ கதிதான். மயக்க பிஸ்கெட் கொள்ளைக்காரர்கள்,தூக்கம் வராமல் தவிப்பது தெரிந்தும் விளக்கை அணைக்க அழிச்சாட்டியம் செய்யும் சக பயணிகள் என்று ஒரு சங்கிலித் தொடர் போல இன்னமும் இருக்கிறது ரயிலின் மேல் பிடிப்பு வராமல் இருக்க ஆயிரத்தெட்டு காரணங்கள்.
ரயில் பெட்டிகளுக்குள் நடக்கவே நாம் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பெட்டிகளின் மீதேறி எப்படி சண்டை போட முடிகிறது என்பது எனக்கு இன்னும் விளங்காத புதிராகவே உள்ளது. அதுவும் ரயில் பயணிக்கும் திசைக்கு எதிராக ஓடி தேச துரோகிகளைப் பின்னிப் பெடலெடுக்கும் கேப்டன், ஆந்திர பாலைய்யா பிரதாபங்களைப் பார்க்கையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இதெல்லாம் என்ன பிரமாதம்?
முன்னாளைய பாண்டு ஷான் கானரி நடித்த இந்தப் படத்தைப் பார் என்று ஒரு நட்புவட்டாரத்திலிருந்து வந்த வேண்டுகோளை ஏற்று பார்த்த படம்தான் "முதல் மாபெரும் ரயில் கொள்ளை "(The First Great Train Robbery) மைக்கேல் கிரிக்டனின் எழுத்து, இயக்கத்தில் ஷான் கானரி, டொனால்ட் சுதர்லேண்ட், லெஸ்லீ-அன்னே டௌண் நடித்து 1979ல் வெளியானது இந்தப்படம்.
1885ன் இங்கிலாந்தில் நடப்பதாக இருக்கிறது கதையின் பின்னணி.அப்போது இங்கிலாந்து, ஃப்ரான்சுடன் கூட்டு சேர்ந்து ரஷ்யாவுக்கெதிராக க்ரைமியா என்ற இடத்தில் யுத்தம் செய்து வந்தன. இங்கிலாந்து வீரர்களுக்கு மாதாந்திர சம்பளமாகத் தங்கம் பட்டுவாடா செய்யப்பட்ட காலம் அது. லண்டனின் ஒரு முக்கிய வங்கியிலிருந்து, மாதம் ஒரு முறை 25,000 பவுண்டுகள் தங்கம், போக்ஸ்டென் ட்ரெயினின் சரக்குவேன் மூலமாகக் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கப்பல்கள் வாயிலாகக் க்ரைமியாவுக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாயிருந்தது.
இவ்வளவு தங்கத்தை எடுத்துச் செல்லும்போது அதற்குரிய பந்தோபஸ்து இல்லாமல் போகுமா?
தங்கப்பாளங்களை எடுத்துச் செல்லும் பெட்டி ஒவ்வொன்றும் 550 பவுண்டுகள் எடையுடன் தலா இரு பூட்டுகள் கொண்டிருந்தது. பெட்டிக்கு இரண்டு என்ற கணக்கில் மொத்தம் நாலு சாவிகள். ஆக இந்தத் தங்கத்தைக் களாவாட வேண்டுமென்றால் இந்த நாலு சாவிகளுக்கும் பிரதி எடுக்க வேண்டும். அது சரி, இந்த நாலு சாவிகளும் ஒரே ஆளிடத்தில் இருக்குமா என்றால், அதுதான் இல்லை. 2 சாவிகள் அந்த ட்ரெயினின் சரக்குகள் டிஸ்பேட்ச் செய்யும் அலுவலரிடமும், மூன்றாவது சாவி தங்கப்பாளங்களை அனுப்பும் வங்கியின் பிரசிடென்டிடமும், நான்காவது சாவி அந்த வங்கிக் கிளையின் மேலாளரிடமும் இருக்கின்றன.
இப்படியாக பலத்த காவலுடன் ட்ரெயினில் மாதாமாதம் ஒரு பெருஞ்செல்வம் சென்று கொண்டிருப்பதை அறிந்த கள்வர் கூட்டம் சும்மா இருக்குமா என்ன?
நமது கதாநாயகனுக்கு இந்தத் தங்கத்தின் மீது நீண்ட நாட்களாக ஒரு கண். நான்கு சாவிகளையும் அடையாமல் தங்கத்தைப் பற்றி சிந்திப்பது முட்டாள்தனம், கால விரயம் என்பதை அறிந்து கள்ளச்சாவிகள் உருவாக்குவதில் வல்லவனான ஒருவனோடு கூடு சேர்கிறான். தனது புத்திசாலித்தனம், கூட்டாளியின் தொழில் திறமை, காதலியின் அழகு, மனிதர்களுக்கிடையே மண்டிக்கிடக்கும் பலவீனங்கள், தேர்ந்த திட்டமிடல், கடுமையான பயிற்சிகள், தீவிர ஒத்திகை போன்றவற்றின் மூலமாக நான்கு சாவிகளையும் கைப்பற்றும் கதாநாயகனுக்கு இறுதிக்கட்டத்தில் வருகிறது சோதனை.
அதனையும் சமாளித்து வெற்றிகரமாகத் தங்கத்தைக் கொள்ளையடித்தும் விடுகின்றான். அப்பாடா எல்லாம் முடிந்தது என்று நினைத்திருக்கும் வேளையில் காவல்துறை அவனைக் கைது செய்கிறது. கோர்ட் விசாரணை முடிவில் 20 ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்கும் என்று அனைவரும் பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் அதுவா நடந்தது என்னும் கேள்விக்கான விடையினை வெண் திரையிலோ, சின்னத் திரையிலோ காண்க.
ஷான் கானரி நடிப்பில் திரையரங்கில் நான் முதன் முதலில் பார்த்த படம் "என்ட்ராப்மென்ட்" தான். அதுவும் தீபாவளி மலருடன் ஓசியாய் வரும் சீயக்காய்த் தூளைப் போல காத்ரீனாவைப் பார்க்கப் போய் இவரைப் பற்றி அறியலானேன். வயதான போதும் இந்த கிழவருக்கு அந்தப் படத்தில் என்ன ஒரு ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் என்று வியக்காத நாட்கள் இல்லை. பிறகு பார்த்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அவர் மீதான அபிமானத்தை அதிகப்படுத்தியது. பாண்ட் படங்களில் கேட்ஜெட்டுகள் துணை கொண்டு தனது திட்டத்தினை நிறைவேற்றும் ஷான் இந்தப் படத்தில் கத்தியைத் தீட்டாமல் தனது புத்தியைத் தீட்டி இருக்கிறார்.
"குரு" என்று எண்பதுகளில் வெளியான ஒரு தமிழ் மசாலாவில் கமல் வைரத்தையோ அல்லது வேறு ஏதோ ஒரு மண்ணாங்கட்டியினையோ பலத்த காவலுக்கு இடையே சென்று எந்த இடையூறுமின்றி வெற்றிகரமாய் பாட்டி சித்தி தலையில் பேன் பார்ப்பது போல எளிதாக எடுத்து வருவதைப் பார்த்து கொள்ளை அடிப்பது என்பது மிகவும் எளிதான செயல் என்றும், நினைத்த நேரத்தில் முடித்து விடலாம் என்றும் நினைத்திருந்தேன். அது தவறு. கொள்ளையடிப்பதற்குத் தகுந்த திட்டமிடுதலும், தீவிர பயிற்சியும் தேவை என்பதைப் பாட்டியின் சுருக்குப்பையில் இருந்து பணம் களவாண்ட போது அறிந்துகொண்டேன்.
படத்தில் முதலிரண்டு சாவிகளைப் பிரதியெடுக்கும் காரியத்தை, அந்தச் சாவிகள் இருக்கும் ரயில்வே அலுவலகத்தைக் காவல் காக்கும் இரவுக்காவலன் உச்சா போய் விட்டு வரும் அந்த 75 நொடிக்குள் முடித்தாக வேண்டும்.இதனைச் சாதிக்க ஷான் போடும் திட்டமும்,அதற்கு அந்தக் குழு மேற்கொள்ளும் பயிற்சிகளும் அற்புதம். அப்புறமாக ரிஸ்க் மிடிகேஷனுக்கு உதாரணமாய் அமையும் அந்த கிளைமாக்ஸ் காட்சி இன்னமும் என் கண் முன்னால் இருக்கிறது.
மற்றபடி வங்கி பிரசிடென்டின் இரண்டாம் தாரத்துடன் ஷான் குஜால்சாகப் பேசுவது, ஷானின் காதலி துணை கொண்டு வங்கி மேலாளரை வீழ்த்துவது, அதிக உரையாடல்கள் இல்லாமல் காட்சிகளின் துணை கொண்டு கதையை நகர்த்துதல் என்று வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் ஜல்லி அடித்திருக்கிறார்கள். தங்கத்தைக் கொள்ளையடிக்க ஷான் ரயில் பெட்டிகளின் மீதேறி வரும் காட்சியமைப்புகளில் காமிராவும், இசையமைப்பாளரும் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு அருமையான மசாலா படம்.
ஜேம்ஸ்பாண்டு படம் பிடிக்குமுன்னா,கண்டிப்பாகப் பார்க்கலாம்...
01 August 2007
முதல் மாபெரும் ரயில் கொள்ளை
குறிச்சொல் ஃபிலிம் காட்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
அட இதையும் பார்த்துட்டா போச்சு.
பெரிய லிஸ்ட் இருக்குன்னா தனிமடல் போடும்யா, நான் நேராவே லைப்ரரி போயி வாங்கிக்குவேன் இல்லே?
இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா பாத்ததில்லை. பாத்துற வேண்டியதுதான். நல்ல விமரிசனம். ஆனா இதெல்லாம் தேட்டர்ல வராது. இறக்குமதி முடியும்னா லிங்குசாமிய அனுப்பி வையுங்க.
ரேட்டடோயீங்குற படத்தப் பாத்தேன். புளகாங்கிதம் அடைஞ்சேன். சூப்பர். அதுக்கு விமரிசனம் போட கை பரபரங்குது.
//அதுவும் ரயில் பயணிக்கும் திசைக்கு எதிராக ஓடி தேச துரோகிகளைப் பின்னிப் பெடலெடுக்கும் கேப்டன், ஆந்திர பாலைய்யா பிரதாபங்களைப் பார்க்கையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.//
//அதுவும் தீபாவளி மலருடன் ஓசியாய் வரும் சீயக்காய்த் தூளைப் போல காத்ரீனாவைப் பார்க்கப் போய் இவரைப் பற்றி அறியலானேன்.//
//பலத்த காவலுக்கு இடையே சென்று எந்த இடையூறுமின்றி வெற்றிகரமாய் பாட்டி சித்தி தலையில் பேன் பார்ப்பது போல எளிதாக எடுத்து வருவதைப் பார்த்து//
Good ones..Will try to watch...
சீன் கானரி படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படங்கள் "The Hunt for Red October" (Role:Captain-Submarine), The Rock (Role-Prisoner), Entrapment(Role- Thief) மற்றும் The League of Extra-ordinary Gentlemen.
கண்டிப்பா பாருங்க ....ரசிப்பீங்க
வாங்க நட்சத்திரம்.கண்டிப்பா ஒரு பெரிய லிஸ்டே இருக்கு..தனியா அனுப்பிடறேன்...
ஜீரா:
http://search.utorrent.com/search.php?q=The%20First%20Great%20Train%20Robbery&e=http%3a%2f%2fwww.mininova.org%2fsearch%2f%3futorrent%26search%3d&u=1
மேலே இருக்கிற டொரொண்டைப் பயன்படுத்திப் பார்க்கறது..சீக்கிரமாப் போடுமைய்யா...
அனானி:
பாரட்டுகளுக்கு நன்றி..
திகிலன்:
கண்டிப்பா பார்க்கறேன்.தகவலுக்கு நன்றி..(அதென்னங்க அப்படி ஒரு பேரு?? முகிலனைச் சுருக்கமா "முகில்"னு கூப்பிடலாம்.உங்கள என்ன "திகில்"னு கூப்பிடவா??)
நீங்கள் என்னை எப்படி கூப்பிட்டாலும் எனக்கு மகிழ்ச்சிதான் அண்ணா!
Post a Comment