13 August 2007

புரட்டாசி விரதங்கள்

"அம்மா,இன்னும் எத்தனை நாள் பாக்கி இருக்குதும்மா..?" கணேசு இந்தக் கேள்வியைக் காலையில இருந்து அஞ்சு வாட்டி கேட்டுட்டான்.

"கண்ணூ.பொரட்டாசி முடிய இன்னும் ஒம்போது நாள் பாக்கி இருக்கு.அய்யன்,மில்லு விட்டு வார நேரம் ஆச்சு.வெரசலா ராமாத்தக்கா கடைக்குப் போயி மைலா மாவு கால் கிலோவும்,தீப்பெட்டி ஒண்ணும் வாங்கியா.இந்தா நாலு ரூவா..."

"ஐய்யா..ராத்திரிக்கு சாப்பிட மைலா தோசையா???....டுர்...டுர்ர்..."

ஹூம்...கணேசைப் பார்த்தீங்கன்னா இந்தப் பையன் அஞ்சாம்பு படிக்கறானான்னு கேப்பீங்க.கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாத குறையா வீட்டுக்காரர் வாங்கற சம்பளம் முச்சூடும் வாங்குன கடனோட வட்டிக்கே போயிடுது.ஏதோ நானும் கூலி வேலைக்குப் போயிட்டு இருக்கிறதால் அரை வயித்துக் கஞ்சியாவது குடிக்க முடியுது.கருவேப்பிலக் கொத்து மாதிரி இருக்கிற ஒத்தைப் பையனுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப் போட முடியலயேன்னு நெனச்சா,நெம்பக் கஷ்டமாத்தான் இருக்கு.

அதுவும் இந்த சனி,ஞாயிறு ஸ்கூலு லீவு விடறதை நெனச்சாலே கவலை கொஞ்சம் கூடச் சேர்ந்துக்கும்.ஸ்கூல் இருக்கிற நாளுன்னாக் கூட மதியானம் ஒரு வேளையாச்சும் வயிறார சாப்பிட சத்துணவு கிடைக்கும்.

"தேனு..தேனு...வூட்டில யாரும் இல்லையா??"

"அட..பாப்பாத்தியக்கா..வாங்க..வாங்க. இப்படி பாயில.உக்காருங்க"

"தேனு.எனக்கு உட்கார்ந்து,நாயம் பேசறதுக்கெல்லாம் நேரமில்லை.நம்ம பிரசிடெண்டம்மாவோட கச்சி, டவுனுல ஒரு பேரணி நடத்துறாங்க.காலைல டிஃபனு,மத்தியானம் சிக்கன் பிரியாணி,கட்சி பார்டர் போட்ட புது சேலையோட தலைக்கு 200 ரூபாய் தாராங்களாம்.எப்பயும் போல நீயும் வந்திடு...காலைல ஏழு மணிக்கு வீட்டுக்கே வேன் வந்திடும்.சாயங்காலம் வீட்டுக்கே கொண்டு வந்து விட்டுடுவாங்க.நீ போன மாசம் என் கிட்ட வாங்கின கைமாத்துக்கு அந்த 200 ரூபாயக் கழிச்சுக்கறேன்.அடியே..இது மகளிர் அணி நடத்துற பேரணியாம்.பொம்பளையாளுக மட்டும் தான் வரணும்..ஞாபகத்தில வச்சிக்கோ..."

"சரீக்கா.அப்புறம் வந்து... இந்தக் கூட்டம் ஐப்பசி மாசம் தான நடக்குது? பொரட்டாசி மாசம் நாங்க கவிச்சி சாப்பிடக் கூடாது.அதனால தான் கேக்கறேன்"

"இத பார்ரா...சாப்பாட்டுக்கே தாளம் போட்டுட்டு இருக்கீங்க,இதுல பொரட்டாசியும்,ஐப்பசியும் பார்த்தா முடியுமாடீ??? அட..உடனே மூஞ்சிய சிறுசா வச்சிக்கணுமா.ஐப்பசி மாசம் தான் பேரணி.இன்னும் கொஞ்சம் பேரைப் பார்க்கோணும்.நான் கெளம்பறேன்.அடுத்த சனிக்கிழமை வாரேன்."

பாப்பாத்தியக்கா எப்பவுமே இப்படித்தான்.லொட லொடன்னு பேசும்.அவங்க சொன்னதிலயும் நியாயம் இருக்குது.இங்க நல்ல சாப்பாட்டுக்கே வழியில்லை.இதுல போயி புரட்டாசி,ஐப்பசின்னு பார்த்துட்டு இருக்கிறோம்."இந்த மாசம் சத்துணவுல போடற முட்டை கூட சாப்பிடக் கூடாதாப்பா?" அப்படின்னு கணேசு கேட்ட கேள்விக்கு இன்னும் அவுங்க அய்யன் கிட்ட இருந்து பதில் ஒண்ணும் வரல்லை.மூணுவேளை வயிறார சாப்பிட்ட காலத்தில ஆரம்பிச்ச வழக்கத்தை இன்னும் கட்டீட்டு அழுகறதில என்ன பிரயோசனம்னு எனக்குத் தெரியலை.மொதல்ல மனுசன் வயித்துக்கு சோறு வேணும்.அப்புறம் தான் நாமம் போடற சாமியும்,பட்டை போடற சாமியும்....

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்படி,இப்படின்னு எப்படியோ பல்லைக் கடிச்சிக்கிட்டு புரட்டாசி மாசம் ஓடிப்போச்சு.இன்னைக்குக் கச்சிக் கூட்டமும் முடிஞ்சி போச்சு.என்னமோ முப்பத்து மூணு சதவாதம்னு கத்தச் சொன்னாங்க.வாங்குன காசுக்கு சத்தம் போட்டுட்டு பிரியாணியோட வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன்.சிக்கன் பிரியாணி எப்படி இருக்கும்மான்னு கணேசு இருவது வாட்டியாவது கேட்டிருப்பான்.இன்னைக்கு அவனுக்கு ஸ்கூல்ல முட்டை வேற தரப்போறாங்களாம்.கணேசோட அப்பத்தா வேற இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு கிடக்கு.தீவாளி நோம்பிக்குள்ள போயி சேர்ந்திடுச்சுன்னா,நல்லாத் தான் இருக்கும்.இல்லைன்னா பட்டாசு,புதுத்துணின்னு ஊறப்பட்ட செலவு இருக்கே...

"தேனு..ஊட்டுக்குப் பக்கம் வந்திட்டோம்.இதுக்கு மேலே வேன் போகாதாம்.இங்கேயே இறங்கிக்குவோம்"

சீக்கிரம் வீட்டுக்குப் போயிடணும்.எப்போ செஞ்ச பிரியாணியோ கெட்டுப் போயிடுச்சுன்னா?? பாவம் கணேசு...வீடு வந்திடுச்சி...இதோ கணேசோட அய்யனே இருக்காக.

"கூட்டம் எல்லாம் முடிஞ்சுதா??தேனு..உன் கிட்ட ஒரு விசயம் கேக்கணும்.ஆத்தாவுக்கு பிரியாணி சாப்பிடணும் போல இருக்காம்.வள்ளியாத்தா கிட்ட சொல்லியிருக்கு.நீ கொண்டு வந்த அந்தப் பிரியாணியை ஆத்தாவுக்குக் கொடுத்திடலாம்.படுக்கையில கெடக்கிற கிழவிக்குக் கொடுத்தா புண்ணியமாவது வரும்.கணேசுக்கு நான் சனிக்கெழமை கொத்து புரோட்டா வாங்கியாந்துடறேன்."

இதுக்கு மேல நான் என்ன சொல்ல முடியும்??ஹூம்ம்ம்..அய்யோ கணேசு கேட்டா என்ன பதில் சொல்வேன்??

"டுர்..டுர்..டுர்ர்..பீம்..பீம்ம்."

"அம்மா..எப்பம்மா வந்தே??உன் கிட்ட ஒரு விசயம் சொல்லணும்.இன்னைக்கு சத்துணவில எங்களுக்கு ரெண்டு முட்டை கொடுத்தாங்க.என் கூடப் படிக்கிற மயில்சாமியோட அக்காவுக்கு ஒடம்பு குணம் ஆகணும்னா முட்டை நெறைய சாப்பிடணும்னு டாக்டர் சொன்னாராம்.அதனால என்னோட ரெண்டு முட்டையையும் அவன் கிட்டே கொடுத்து அனுப்பிட்டேன்..அவனுக்கு ரொம்ப சந்தோசமாப் போச்சு.எனக்கும் சந்தோசமா இருக்கு.இப்போ எனக்குப் பசியே இல்லை.பிரியாணி கூட வேணாம்"

17 Comments:

#BMN said...

Really intersting story...keep it up! I like the style...

இராம்/Raam said...

சூப்பர்...... :)

ramachandranusha(உஷா) said...

நல்லா வந்திருக்கு.

Sud Gopal said...

வெண்ணை வெட்டி:
பாராட்டுகளுக்கு நன்றிகள்.(அதென்னங்க அப்படி ஒரு பேரு???)

இராம்:
நன்னீ :-)

உஷாஜீ:
வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றிகள்

வெட்டிப்பயல் said...

கதை அருமை...

ஆனா கடைசில அந்த பையன் பிரியாணி கேட்ட மாதிரி முடிச்சிருக்கலாமோ?

G.Ragavan said...

ஓமப்பொடி..நல்ல முடிவு. வெட்டி சொன்ன மாதிரி முடிக்காதீங்க. இதுதான் நல்லாருக்கு. வெத ஒன்னு போட்டா சொர ஒன்னா மொளைக்கும். நல்லாருக்கு. கண்ணுல தண்ணி கொளங்கட்டுதுவோய். அந்தப் பயலும் அம்மாவும் நல்லாருக்கனும்வே! நல்லாருக்கனும்.

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

ஓமப்பொடி..நல்ல முடிவு. வெட்டி சொன்ன மாதிரி முடிக்காதீங்க.//

இனிமே உங்களுக்கு நிம்மதியா தூக்கம் வரும்னு நினைக்கிறேன் :-)

Anonymous said...

நல்லா எழுத வருது உங்களுக்கு. நல்ல கதை

Sud Gopal said...

வெட்டிப்பையல்:
பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி.

ஜீரா:
//வெத ஒன்னு போட்டா சொர ஒன்னா மொளைக்கும். நல்லாருக்கு.//
தன்யனானேன்..மகாப்பிரபோ...

Sud Gopal said...

// வெட்டிப்பயல் said...
//G.Ragavan said...

ஓமப்பொடி..நல்ல முடிவு. வெட்டி சொன்ன மாதிரி முடிக்காதீங்க.//

இனிமே உங்களுக்கு நிம்மதியா தூக்கம் வரும்னு நினைக்கிறேன் :-) //

அட..வெட்டி..ஏன் இந்தக் கொலை வெறி??? :-)

Sud Gopal said...

சின்ன அம்மிணி:
பாராட்டுகளுக்கு தேங்க்ஸூங்...
இது நான் எழுதின மூணாவது கதைங்..

1)முத்துசாமி சாரில் இருந்து புதுக் கிராப்பு வரை

2)விட்டு விடுதலையாகி... - தேன்கூடு போட்டிக்கு

ilavanji said...

சுட்ஜீ,

கதை ரத்தின சுருக்கமாகும் கதைக்கரு 'நச்'சுன்னும் இருக்கு. பேச்சோட பேச்சா சொன்னதால நடுவுல தேனு யாருங்கறதைதான் லைட்டா கொழம்பிட்டேன்.

நடத்துங்க... :)

வெட்டிப்பயல் said...

//சுதர்சன்.கோபால் said...

// வெட்டிப்பயல் said...
//G.Ragavan said...

ஓமப்பொடி..நல்ல முடிவு. வெட்டி சொன்ன மாதிரி முடிக்காதீங்க.//

இனிமே உங்களுக்கு நிம்மதியா தூக்கம் வரும்னு நினைக்கிறேன் :-) //

அட..வெட்டி..ஏன் இந்தக் கொலை வெறி??? :-)
//

ஓம்ஸ் நான் சொன்னது ஜி.ராக்கு.. உங்களுக்கில்லை :-)

பெத்தராயுடு said...

கதையின் களம் மற்றும் நடை அருமை.
முடிவைப் பொருத்தவரையில் நான் வெட்டியின் கருத்தை வழிமொழிகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

கதை சூப்பருங்கோவ்

Sud Gopal said...

//இளவஞ்சி said...
சுட்ஜீ, கதை ரத்தின சுருக்கமாகும் கதைக்கரு 'நச்'சுன்னும் இருக்கு. பேச்சோட பேச்சா சொன்னதால நடுவுல தேனு யாருங்கறதைதான் லைட்டா கொழம்பிட்டேன்.
நடத்துங்க... :)//

_/\_ நன்றிகள் வாத்யாரே...

Sud Gopal said...

வெட்டி:
போலாம்..போலாம்.ரைட்டேய் :-D

பெத்தராயுடு:
ஹூம்.அந்தப் பையன் பிரியாணியைக் கேட்டா அந்த அம்மா மனசு என்ன பாடு படும்னு தெரியாதா??அதனால தான் இந்த முடிவுங்கோ...பாராட்டுக்கு நன்றிகள்

மதுரையம்பதி:
பாராட்டுக்கு நன்றிகள்...