வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு நாளை பிறந்த நாளாம்.இருந்தது என்னமோ இருபது மாதங்கள் என்றாலும்,சென்னை மீதான காதல் இன்னும் குறையவில்லை.
ஹூம் என்று என்னைப் போலவே பெருமூச்சு விடும் புண்ணியவான்களே அப்படியே என்னுடைய கேள்விகளுக்குப் பதிலையும் தாருங்களேன்.....
1.கீழ்க்கண்ட இடங்களது பெயர்களை விரிவு படுத்தவும்.
Ex:T.நகர் - தியாகராய நகர்
G.N.செட்டி தெரு -
K.K.நகர் -
T.T.K.சாலை -
2.சென்னையின் புறநகர்ப் பகுதியிலுள்ள இந்தக் கட்டிடம் கட்டுமானத்தில் பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளது.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தங்களது கட்டுமானத்திறமையை வெளிப்படுத்தவே அந்தக் கட்டிடத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அந்தக் கட்டிடத்தைக் கட்டியதாம்.
3.பொருத்துக.
வானவில் FM - 98.3
அண்ணா பல்கலை FM - 92.7
பிக் FM - 101.4
ஆஹா FM - 90.4
ரேடியோ மிர்ச்சி FM - 91.9
4.கோடம்பாக்கத்திற்கும்,பல்லாவரத்திற்க்கும் இடைப்பட்ட தொடர்வண்டி நிலையங்களைக் கூறுக.
5.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும்.
ராசி சில்க் எம்போரியம்
சென்னை சில்க்ஸ்
குமரன் சில்க்ஸ்
நல்லி 100
6.சென்னைத் தமிழைத் திரையில் பாடிப் பிரபலமாக்கிய பாடல்கள் மூன்று சொல்லவும்.
7.மேற்கு மாம்பலம் இருப்பதைப் போலவே கிழக்கு மாம்பலம் என்று ஒன்று உண்டா?
8.தி.நகர் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பெரியார் சிலைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.அது என்ன?
9.சுப்பு சென்னைக்கு வருவது அது தான் முதல் முறை.சுப்பு இருப்பதோ தி.நகர் மேன்ஷனில்.சுப்புவின் தோழி ருக்கு இருப்பதோ ஈக்காடுதாங்கலில்.ருக்குவைப் பார்க்க ஆட்டோவில் செல்லும் சுப்புவை ஆட்டோ ஓட்டுநர்கள் ஊர் சுற்றிக் காண்பித்து ஏமாற்றாமல் இருக்குமாறு அவனுக்கான ரூட் மேப்பினைத் தந்து உதவமுடியுமா?
10.மகாத்மா காந்தி எத்தனை முறை சென்னை வந்திருக்கிறார்?
21 August 2007
[+/-] |
சென்னை குறித்த சில கேள்விகள் |
13 August 2007
[+/-] |
புரட்டாசி விரதங்கள் |
"அம்மா,இன்னும் எத்தனை நாள் பாக்கி இருக்குதும்மா..?" கணேசு இந்தக் கேள்வியைக் காலையில இருந்து அஞ்சு வாட்டி கேட்டுட்டான்.
"கண்ணூ.பொரட்டாசி முடிய இன்னும் ஒம்போது நாள் பாக்கி இருக்கு.அய்யன்,மில்லு விட்டு வார நேரம் ஆச்சு.வெரசலா ராமாத்தக்கா கடைக்குப் போயி மைலா மாவு கால் கிலோவும்,தீப்பெட்டி ஒண்ணும் வாங்கியா.இந்தா நாலு ரூவா..."
"ஐய்யா..ராத்திரிக்கு சாப்பிட மைலா தோசையா???....டுர்...டுர்ர்..."
ஹூம்...கணேசைப் பார்த்தீங்கன்னா இந்தப் பையன் அஞ்சாம்பு படிக்கறானான்னு கேப்பீங்க.கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாத குறையா வீட்டுக்காரர் வாங்கற சம்பளம் முச்சூடும் வாங்குன கடனோட வட்டிக்கே போயிடுது.ஏதோ நானும் கூலி வேலைக்குப் போயிட்டு இருக்கிறதால் அரை வயித்துக் கஞ்சியாவது குடிக்க முடியுது.கருவேப்பிலக் கொத்து மாதிரி இருக்கிற ஒத்தைப் பையனுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப் போட முடியலயேன்னு நெனச்சா,நெம்பக் கஷ்டமாத்தான் இருக்கு.
அதுவும் இந்த சனி,ஞாயிறு ஸ்கூலு லீவு விடறதை நெனச்சாலே கவலை கொஞ்சம் கூடச் சேர்ந்துக்கும்.ஸ்கூல் இருக்கிற நாளுன்னாக் கூட மதியானம் ஒரு வேளையாச்சும் வயிறார சாப்பிட சத்துணவு கிடைக்கும்.
"தேனு..தேனு...வூட்டில யாரும் இல்லையா??"
"அட..பாப்பாத்தியக்கா..வாங்க..வாங்க. இப்படி பாயில.உக்காருங்க"
"தேனு.எனக்கு உட்கார்ந்து,நாயம் பேசறதுக்கெல்லாம் நேரமில்லை.நம்ம பிரசிடெண்டம்மாவோட கச்சி, டவுனுல ஒரு பேரணி நடத்துறாங்க.காலைல டிஃபனு,மத்தியானம் சிக்கன் பிரியாணி,கட்சி பார்டர் போட்ட புது சேலையோட தலைக்கு 200 ரூபாய் தாராங்களாம்.எப்பயும் போல நீயும் வந்திடு...காலைல ஏழு மணிக்கு வீட்டுக்கே வேன் வந்திடும்.சாயங்காலம் வீட்டுக்கே கொண்டு வந்து விட்டுடுவாங்க.நீ போன மாசம் என் கிட்ட வாங்கின கைமாத்துக்கு அந்த 200 ரூபாயக் கழிச்சுக்கறேன்.அடியே..இது மகளிர் அணி நடத்துற பேரணியாம்.பொம்பளையாளுக மட்டும் தான் வரணும்..ஞாபகத்தில வச்சிக்கோ..."
"சரீக்கா.அப்புறம் வந்து... இந்தக் கூட்டம் ஐப்பசி மாசம் தான நடக்குது? பொரட்டாசி மாசம் நாங்க கவிச்சி சாப்பிடக் கூடாது.அதனால தான் கேக்கறேன்"
"இத பார்ரா...சாப்பாட்டுக்கே தாளம் போட்டுட்டு இருக்கீங்க,இதுல பொரட்டாசியும்,ஐப்பசியும் பார்த்தா முடியுமாடீ??? அட..உடனே மூஞ்சிய சிறுசா வச்சிக்கணுமா.ஐப்பசி மாசம் தான் பேரணி.இன்னும் கொஞ்சம் பேரைப் பார்க்கோணும்.நான் கெளம்பறேன்.அடுத்த சனிக்கிழமை வாரேன்."
பாப்பாத்தியக்கா எப்பவுமே இப்படித்தான்.லொட லொடன்னு பேசும்.அவங்க சொன்னதிலயும் நியாயம் இருக்குது.இங்க நல்ல சாப்பாட்டுக்கே வழியில்லை.இதுல போயி புரட்டாசி,ஐப்பசின்னு பார்த்துட்டு இருக்கிறோம்."இந்த மாசம் சத்துணவுல போடற முட்டை கூட சாப்பிடக் கூடாதாப்பா?" அப்படின்னு கணேசு கேட்ட கேள்விக்கு இன்னும் அவுங்க அய்யன் கிட்ட இருந்து பதில் ஒண்ணும் வரல்லை.மூணுவேளை வயிறார சாப்பிட்ட காலத்தில ஆரம்பிச்ச வழக்கத்தை இன்னும் கட்டீட்டு அழுகறதில என்ன பிரயோசனம்னு எனக்குத் தெரியலை.மொதல்ல மனுசன் வயித்துக்கு சோறு வேணும்.அப்புறம் தான் நாமம் போடற சாமியும்,பட்டை போடற சாமியும்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்படி,இப்படின்னு எப்படியோ பல்லைக் கடிச்சிக்கிட்டு புரட்டாசி மாசம் ஓடிப்போச்சு.இன்னைக்குக் கச்சிக் கூட்டமும் முடிஞ்சி போச்சு.என்னமோ முப்பத்து மூணு சதவாதம்னு கத்தச் சொன்னாங்க.வாங்குன காசுக்கு சத்தம் போட்டுட்டு பிரியாணியோட வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன்.சிக்கன் பிரியாணி எப்படி இருக்கும்மான்னு கணேசு இருவது வாட்டியாவது கேட்டிருப்பான்.இன்னைக்கு அவனுக்கு ஸ்கூல்ல முட்டை வேற தரப்போறாங்களாம்.கணேசோட அப்பத்தா வேற இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு கிடக்கு.தீவாளி நோம்பிக்குள்ள போயி சேர்ந்திடுச்சுன்னா,நல்லாத் தான் இருக்கும்.இல்லைன்னா பட்டாசு,புதுத்துணின்னு ஊறப்பட்ட செலவு இருக்கே...
"தேனு..ஊட்டுக்குப் பக்கம் வந்திட்டோம்.இதுக்கு மேலே வேன் போகாதாம்.இங்கேயே இறங்கிக்குவோம்"
சீக்கிரம் வீட்டுக்குப் போயிடணும்.எப்போ செஞ்ச பிரியாணியோ கெட்டுப் போயிடுச்சுன்னா?? பாவம் கணேசு...வீடு வந்திடுச்சி...இதோ கணேசோட அய்யனே இருக்காக.
"கூட்டம் எல்லாம் முடிஞ்சுதா??தேனு..உன் கிட்ட ஒரு விசயம் கேக்கணும்.ஆத்தாவுக்கு பிரியாணி சாப்பிடணும் போல இருக்காம்.வள்ளியாத்தா கிட்ட சொல்லியிருக்கு.நீ கொண்டு வந்த அந்தப் பிரியாணியை ஆத்தாவுக்குக் கொடுத்திடலாம்.படுக்கையில கெடக்கிற கிழவிக்குக் கொடுத்தா புண்ணியமாவது வரும்.கணேசுக்கு நான் சனிக்கெழமை கொத்து புரோட்டா வாங்கியாந்துடறேன்."
இதுக்கு மேல நான் என்ன சொல்ல முடியும்??ஹூம்ம்ம்..அய்யோ கணேசு கேட்டா என்ன பதில் சொல்வேன்??
"டுர்..டுர்..டுர்ர்..பீம்..பீம்ம்."
"அம்மா..எப்பம்மா வந்தே??உன் கிட்ட ஒரு விசயம் சொல்லணும்.இன்னைக்கு சத்துணவில எங்களுக்கு ரெண்டு முட்டை கொடுத்தாங்க.என் கூடப் படிக்கிற மயில்சாமியோட அக்காவுக்கு ஒடம்பு குணம் ஆகணும்னா முட்டை நெறைய சாப்பிடணும்னு டாக்டர் சொன்னாராம்.அதனால என்னோட ரெண்டு முட்டையையும் அவன் கிட்டே கொடுத்து அனுப்பிட்டேன்..அவனுக்கு ரொம்ப சந்தோசமாப் போச்சு.எனக்கும் சந்தோசமா இருக்கு.இப்போ எனக்குப் பசியே இல்லை.பிரியாணி கூட வேணாம்"
09 August 2007
[+/-] |
The Shawshank Redemption |
சிறைச்சாலை என்னும் ஒரு இடத்தைப் பற்றிய எனது முதல் நினைவு இன்னும் பசுமையாகவே இருக்கிறது.மிசா காலத்தில் கைதாகி சிறையில் என் மாமா இருந்த பிரதாபங்களைச் சிறு வயதில் கேட்டு,என்னை அங்கே கூட்டிப்போனால் தான் ஆச்சு என்று அழத் தொடங்கிவிட்டேனாம்.அதற்குப் பிறகு கவிதா தியேட்டரில் மேட்னி ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு அருகில் உள்ள மத்தியசிறையை அப்பா காண்பித்தது இன்னும் கண்ணிலேயே நிற்கிறது.கைதி கண்ணாயிரம்,உதய கீதம் மாதிரியான படங்களைப் பார்த்து வெளியே இருக்கிறதை விட உள்ளே இருக்கிற வாழ்க்கை நல்லா தான் இருக்கும் போல;அப்புறம் ஏன் உள்ளே போகறதுக்கு எல்லாரும் இவ்வளவு வருத்தப்படறாங்க என்று நினைத்ததுண்டு.மகாநதியைப் பார்த்த பின்புதான் ஜெயிலுக்குள் இருக்கும் இன்னொரு உலகம் கொஞ்சம் கொஞ்சம் பிடிபடத் துவங்கியது.
ஏறத்தாழ அதே காலகட்டத்தில் வெளிவந்த ஹாலிவுட் படம் தான் "ஷாஷங்க் ரிடெம்ப்ட்ஷன்".டிம் ராபின்ஸ்,மார்கன் ஃப்ரீமேன் நடிப்பில் ஃப்ராங்க் டரோபண்ட் என்னும் இயக்குநரின் இயக்கத்தில் 1994ல் வெளியானது இந்தப் படம்.நிறைய உரையாடல்கள் உள்ள படம்.கதாநாயகி கிடையாது.காதல் காட்சிகள் கிடையாது.எல்லா காட்சிகளும்,படு யதார்த்தமாய் கவிதை மாதிரி செதுக்கியிருக்கிறார்கள்.இந்த படம் முழுவதும் ஷாஷங்க் என்னும் பெயர் போன ஒரு சிறைச்சாலையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே ஆகும்.
ஷாஷங்க் சிறை கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனது.கைதிகள் யாராவது வாயைத் திறந்தால் என்ன நடக்கும் என்பதை உங்களது கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.மனைவியையும்,அவளது கள்ளக் காதலனையும் சுட்டு விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குள் வரும் வங்கி அதிகாரி,ஆண்டியாக டிம் ராபின்ஸ்.அதே சிறைக்குள்,இருபது வருடங்களாக வாழ்ந்து,சிறைக்குள் எந்தப் பொருளையும் கொண்டு வருவதற்கு சக்தி படைத்த குற்றவாளி,ரெட்டாக மார்கன் ஃப்ரீமேன்.இந்த இரு முக்கியமான கதாபாத்திரங்களையும் வைத்துதான் கதை பின்னப்பட்டிருக்கிறது.
உலகில் நம்பிக்கையை விட மேலான விஷயம் ஒன்றுமில்லை.இதனை மையமாகக் கொண்டு சம்பவங்களால் கதை நகருகிறது.பல திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் இருப்பதால் மேற்கொண்டு கதையை விவரிக்க இயலவில்லல.
எனக்குப் பிடித்த காட்சிகள்:
1)குற்றவாளிகள் கடினமான வேலை செய்ய வைக்கப்படும் போது,தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆண்டி பீர் வாங்கிக் கொடுத்தல்.
2)உள்ளேயே நீண்ட காலம் இருந்ததால்,விடுதலை ஆன பின்னரும் இந்த உலகில் வாழ முடியாமல் ப்ரூக்ஸ் எடுக்கும் முடிவு
3)பல வருடங்களாக விடாமல் அனுப்பபடும் ஆண்டியின் மனுக்களின் பலனாக சிறைச்சாலை நூலகத்துக்கு அரசாங்கத்திடமிருந்து மானியம் கிடைக்கும் காட்சி
4)"முதலில் இந்த சிறைச்சாலையை வெறுப்போம்.பிறகு அதற்கு பழகிக் கொள்வோம்.கொஞ்ச நாளில் அதைச் சார்ந்து வாழ ஆரம்பித்து விடுவோம்" என்பதாய்ச் செல்லும் ரெட்டின் சொல்லாடல்
5)ரெட்டுக்கு பாரோல் கிடைப்பதற்கு முன்னால் நடக்கும் நேர்காணல் காட்சி.
உங்களையும் அறியாமல் ஒன்றிப் போய்விடும் சுவாரசியமான அனுபவத்தைப் பெற வேண்டுமானால் கட்டாயம் பாருங்கள்.
07 August 2007
[+/-] |
ஸ்டீவ் ஜாப்ஸூக்கே போலியாம்??? |
எந்த ஒரு புதிய விஷயம் வந்தாலும் அதன் விதிமுறைகளை மீறிச் செயல்பட முயற்சிப்பது என்பது தொன்று தொட்டு மனித குலத்தில் இருந்து வரும் ஒரு பழக்கம்.இணையம் கொடுத்திருக்கும் சுதந்திரம் கட்டற்றது.இணையத்திலும் இந்தமாதிரி விதிமுறைகள் மீறப்படுதல் வெவ்வேறு பெயர்களில்,வெவ்வேறு இலக்குகளை முன்னிறுத்தி நடந்து வருகிறது.
The Secret Diary of Steve Jobs என்னும் ஒரு பதிவானது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸே எழுதுவது போன்ற ஒரு மாயையுடன் பல நாட்களாக நடத்தப்பட்டு வந்தது.தொழில்நுட்பம் சார்ந்த வாசகர்களால் ஆவலுடன் படிக்கப்பட்டு வருகிறது.அந்தப் பதிவுக்குச் சொந்தக்காரர் ஸ்டீவ் இல்லை;வணிகப் பத்திரிக்கையான ஃபோர்ப்ஸின் மூத்த எடிட்டரான டேனியல் ல்யான்ஸ் தான் அந்தப் பதிவின் சொந்தக்காரர் என்று நியூயார்க் டைம்ஸ் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறது.
லேரி எல்லிசன்,பில் கேட்ஸ்,எரிக் ஷ்மிட் போன்ற பல்வேறு தொழில்நுட்பப் பெருந்தலைகளை இந்தப் பதிவில் நையாண்டி செய்திருக்கிறார் டேனியல்.இந்தப் பதிவுக்கு உண்மையான ஸ்டீவ் ஜாப்ஸ்,பில் கேட்ஸ் போன்றவர்கள் நீண்ட நாளைய வாசகர்களாம்.
விரிவான செய்திக்கு இங்கே செல்லவும்.
05 August 2007
[+/-] |
சுப்பு & ருக்கு - 2 |
சுப்பு & ருக்கு -1 படிக்க
சுப்புவுக்கும்,ருக்குவுக்கும் திருமணம் ஆவதற்கு முந்தைய காலகட்டம்.சுப்பு,ருக்குவுடன் ஒரே கல்லூரியில் படித்த ஜிக்குவின்(ருக்குவின் மாமா பெண்)திருமணத்திற்கு சுப்புவும் வந்திருக்கிறான்..
ருக்கு:சுப்பு.இவங்க என்னோட மாமா.ஜிக்குவோட பெரியப்பா.மாமா இது எங்க கிளாஸ் மேட் சுப்பு.
சுப்பு:(பார்த்தா அந்தக் காலத்து மனுஷங்களாத் தெரியறாங்க.கை குடுத்தா தப்பா நெனச்சுக்குவாங்களோ??சேஃபா வணக்கம் போட்டு வைப்போம்.) வணக்கம் சார்.
ருக்குவின் மாமா:ஓ..வணக்கம்.வணக்கம்.தம்பி சாப்டாச்சா??.டிஃபன் எல்லாம் எப்படி இருந்தது?
சுப்பு:(ஹுக்கும்.இது ஒண்ணு தான் குறைச்சல்.வாயிலையே வைக்க முடியலை)ரொம்ப நல்லா இருந்தது சார்.அதுவும் அந்த மில்க் ஸ்வீட் பின்னிடுச்சி..
மாமா:(கஷ்டகாலம்.மில்க் ஸ்வீட்டுக்கும் மக்கன் பேடாவுக்கும் வித்தியாசம் தெரியாததுங்களை என்ன செய்யலாம்??)ஆமா.சிதம்பரத்தோட சமையல்னா சும்மாவா.ஆமாம்,தம்பி எங்கே உத்யோகம் பாக்கறீங்க??
சுப்பு:(ரொம்ப முக்கியம்.)நான் TI-ல வேலை பாக்குறேன்
மாமா:என்னது TI-யா??கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சுட்டு எதுக்கு TI சைக்கிள்சில வேலை பார்க்கணும்??(பாவம் இவங்க கிளாசிலேயே உருப்படாத கேசுன்னு தோணுது).
சுப்பு:இல்லை சார்.அது டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்னு ஒரு M.N.C
மாமா:(மன்னார் அண்ட் கோ மாதிரி எதாவது உப்புமா கம்பெனியா இருக்கும் போல)ஓஹோ..அப்படியா..நீ என்ன ஜாவாவிலேயா வேலை பாக்குறே??
சுப்பு:(ஆஹா..ஆரம்பிச்சுட்டாங்களா..)இல்லை சார்.நான் வந்து ஹார்ட்வேர் சைட் வேலை பார்க்குறேன்.நாங்க ஜாவாவில ப்ரோக்கிராம் பண்ண மாட்டோம்..
மாமா:(ஹூக்கும்.கம்பியூட்டரைப் பிரிச்சு மேயுற வேலையா...)ஓ...அது சரி..நீ இன்ஃபோ$$,வி$ப்ரோ,$சிஎஸ் மாதிரி சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல வேலைக்கு ட்ரை செய்யலாமே?? எனக்குத் தெரிஞ்ச பசங்க நிறையப் பேரு இருக்காங்க.நான் வேணும்னா சிபாரிசு பண்ணச்சொல்றேன்...நல்ல சம்பளம் தருவாங்க...
இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த சுப்புவைக் காப்பாற்றும் ருக்கு அவனைத் தனது சித்திக்கு அறிமுகப்படுத்திவிட்டு செல்கிறாள்.
ருக்குவின் சித்தி:அப்புறம் சொல்லுப்பா.நீ விசா வாங்கிட்டியா?
சுப்பு:(ஆஹா..கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா...)ஆண்ட்டி,இப்போ நான் எங்கேயும் போகலை.அதனால விசா வாங்கத் தேவையில்லை.
சித்தி:ஓ மை காட்.எங்க கார்த்தி எஞ்சினீயரிங் தேர்ட் இயர் தான் படிக்கறான்.இப்பவே அவன் விசா வாங்கி வச்சுட்டான்.விசா இல்லாம நீ இந்தியாவோட சிட்டிஸன்னு எப்படி நிரூபணம் செய்வே...???(சரியான தத்திப் புண்ணாக்கா இருக்கானே...)
சுப்பு:(ஸ்சப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே..)அது விசா இல்லை ஆண்ட்டி.அதுக்குப் பேரு பாஸ்போர்ட்.அது காலேஜில இருக்கும் போதே நான் வாங்கி வச்சுட்டேன்.
சித்தி:(மண்ணை உதறிக்கொண்டே..)ஓ..அப்படியா...நீ எந்த பிளாட்பாரத்திலே வேலை பார்க்கறே?எந்த ஊரு கிளையண்ட்??ஆன்சைட் ஏதாவது போயிருக்கியா??கார்த்தியோட சீனியர் அவனை மெயின்ஃப்ரேம் படிக்கச் சொல்லியிருக்கார்.கோர்ஸ் முடிச்ச உடனே வேலை உடனே கேரண்டியாம்.வேலைக்கு சேர்ந்த ஆறாவது மாசமே அமெரிக்கா அனுப்புவாங்களாம்.
சுப்பு:(ஹூம்..செண்ட்ரல் ஸ்டேஷன் மூணாவது பிளாட்ஃபாரத்தில வேலை பார்க்கறேன்.கடவுளே....)#$%##$$%$####$$%
-தொடரலாம்
04 August 2007
[+/-] |
செல்ஃபோன் பேட்டரி சக்தியை சேமிக்க... |
நான் பொறியியல் படிச்சிக்கிட்டு இருந்தப்போ அப்பாவோட தோஸ்து கிட்ட என்னோட ஸ்பெஷலைசேஷனை சொன்ன உடனே அவர் கேட்ட கேள்வி எங்க வீட்டு டீ.வி.,டெலிஃபோனு புட்டுக்கிச்சுன்னா ரிப்பேர் செஞ்சு தர முடியுமான்னு தான். லேப்பில சால்டரிங் வைக்கவே கை ஆடும் இந்த லட்சணத்தில நானாவது,டீ.வி ரிப்பேர் பண்றதாவதுன்னு மனசில நெனச்சிட்டே குத்து மதிப்பா தலையாட்டி வைப்பேன்.ஆனா காலேஜ் முடிக்கற வரைக்கும் அவரோட வீட்டில எந்தப் பிரச்சினையும் வரலைங்கறதால நான் எப்படியோ பொழச்சுட்டேன்.
இப்போ பொட்டி தட்ட வந்திட்டதால் அவர் பழைய குப்பைகளை எல்லாம் கிளறுவதில்லை.திடீர்னு கொஞ்ச நாள் முன்னாடி,"நீயும் தான் அஞ்சாறு வருசமா செல்ஃபோன்ல குப்பையக் கொட்டிட்டு இருக்கறியே.என்னோட ஃபோன்ல ஒரு பிரச்சினை.சரி செஞ்சு கொடுக்க முடியுமான்னு" கேட்டார்.வந்தவர் ஃபோனையும் கையோடு கொண்டு வந்திருந்தார். அவரோட செல்ஃபோன்ல அட்ரஸ்புக்கை ஓப்பன் செய்யவே முடியலை.என்ன பிரச்சினைன்னே இந்த மரமண்டைக்கு எட்டலை.சரி கடைசியா விண்டோஸ் ஃபார்முலாப்படி ரீஸ்டார்ட் செஞ்சு பார்ப்போமேன்னு அவர் கிட்ட விஷயத்தை சொல்லாம ஃபோனை ரீஸ்டார்ட் செஞ்சேன்..
அடடா....ஃபோன் சும்மா நச்சுன்னு வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.தொழில் ரகசியத்தை அவருக்கு சொல்லலை.இல்லேன்னா இன்னேரம் என்பேரு ரிப்பேராப் போயிருக்கும்.ஆனா செல்ஃபோன் உபயோகப்படுத்தறவங்க தங்களோட பேட்டரி சக்தியை நீண்ட நாட்களுக்கு இருப்பில் வைக்க சில டிப்ஸைக் கீழே கொடுத்திருக்கேன்.செயல் படுத்திப்பார்த்துட்டுக் கைமேல பலன் இருந்ததுன்னா உங்களுடைய நன்கொடைகளை அனுப்ப வேண்டிய இடம் எதுன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்...
1)உங்களோட செல்ஃபோனில் பேக்ரவுண்ட் இமேஜ் இல்லாம வைக்கலாம்.
2)ப்ளுடூத் வசதியை நிறுத்தி வைக்கலாம்.தேவையான போது செட்டிங்க்ஸ் போயி அதை ஆன் செஞ்சுக்கலாம்.
3)உங்களோட இருப்பிடத்தைத் தெரிவிக்கும் வசதியை நிறுத்தி வைக்கலாம்.(எப்படியும் முக்காவாசி நேரம் சரியான இடத்தை நம்ம ஊரு ப்ரொவைடர்ஸ் சொல்றது கிடையாது)
4)ஃப்ரீ கால் கிடைச்ச குசியில கால நேரம் தெரியாம அடுத்தவங்களை ஃபோன் போட்டு டார்ச்சர் பண்ணாம இருக்கலாம்.
மீதி இன்னொரு நாளைக்கு...
03 August 2007
[+/-] |
தேடிக்கிடைத்த புதையல்கள் |
பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னா அது உண்மையாக மாறிடும்னு சொல்றாங்க.இது உண்மையா பொய்யான்னு எனக்குத் தெரியாது.ஆனா பாடல்களுக்கு இது பொருந்தும்.முதலில் புடிக்கலைன்னாலும் திரும்பத் திரும்பக் கேட்டா,நம்மளுக்கு தெரியாமலேயே மனசில ஒட்டிக்கும்.அதிலையும் பதின்ம வயசில கேட்ட பாடல்களுக்கு இருக்கிற மவுசே தனிதான்.ராமநாதபுரம் கருப்புசாமிகிட்ட கணக்கு டூசனுக்கு, மப்சல் வண்டிகளில் போன காலத்தில ரெகுலராக் கேட்ட சில பாடல்களைப் புதையல்கள்னு சொல்ல முடியுமா?
உங்களுக்கு எப்படியோ..இந்தப் பாட்டுக எனக்குப் புதையல்கள் தான்.பின்னே இந்தப் பாட்டுகளை இணையத்திலே பிடிக்க நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா??இந்தப் பாடல்கள் வந்த காலத்தில எம்.பி3 ஒலி வடிவம் இல்லை;இசையமைச்ச ஆளுங்க பிரபலமாகதவங்க;படங்க எல்லாம் சுமாரா ஓடின படங்க தான் அப்படின்னு பல காரணம் இருக்கலாம் என்னோட தொடர் தோல்விகளுக்கு.தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராத விக்கிரமாதித்த மகாராசா மாதிரி,ரெண்டு வருஷம் பட்ட பாட்டுக்குக் கொஞ்ச நாள் முன்னாடி தான் பலன் கிடைச்சது.எது எப்படியோ..தேடிக்கிடைத்த புதையல்களை உங்க கூட பகிர்ந்துக்கிறேன்.கேட்டுப்பார்த்திட்டு சொல்லுங்க...
புதையல்:
கோவை செழியனோட தயாரிப்பில செல்வா இயக்கத்தில மம்முட்டி,அர்விந்த்சாமி,கவுண்டபெல்,ஆம்னி,சாக்ஷி நடிப்பில வெளிவந்த படம் தான் புதையல்.அர்விந்த்சாமிக்கு காமெடி கூட வரும்னு நிரூபித்த படம்.வைரமுத்துவோட பாடல்களுக்கு இசையமைச்சது வித்யாசாகர்.மின்சாரக்கனவு வந்த கொஞ்ச நாளிலே ரிலீசாகி ஃபிளாப் ஆன இந்தப் படத்திலே இருக்கிற பாட்டுக எல்லாம் டாப் டக்கர்.இதில இருந்து ரெண்டு பாட்டு கொடுத்திருக்கேன்.கேட்டுப்பார்த்திட்டு சொல்லுங்க.
ஒச்சம்மா..ஒச்சம்மா:
ராக்கம்மா,பொன்னம்மா வரிசையில நம்ம பாடலாசிரியருக வித்தியாசமாக் கற்பனை செஞ்சு புடிச்ச பேருன்னு நினைக்கிறேன்.இரண்டு கதாநாயகர்களும் பாடும் இந்த டூயட்டைப் பாடியிருப்பது எஸ்.பி.பியும் உன்னி மேனனும்.கிளைமேக்சுக்கு முன்னால வரும் பாடல்.
|
பூத்திருக்கும் மனமே:
மீசையில்லாத மம்முட்டியை இந்தப் பாட்டில் பார்க்கலாம்.உமா ரமணன் குரலில் வந்திருக்கும் மற்றுமொரு இனிமையான காதல் பாடல்.
|
மதுரை அழகரோ:
புதையல் அளவுக்கு இந்தப் படம் நஷ்டம் ஆகலைன்னாலும்,அப்போ வெளிவந்த காதல் கோட்டை கூட இதனால தாக்குப்பிடிக்க முடியலைங்கறது தான் உண்மை.சிற்பி இசையில சித்ராவின் குரலில் வந்த இந்தப் பாடலின் நடுவே லிவிங்ஸ்டன் அவரோட ஸ்டைலில் நடந்து வருவார் பாருங்க.தியேட்டர்ல அப்போ கிளாப்ஸ் அள்ளுச்சு.இந்தப் படத்தில எல்லாப் பாட்டும் நல்லா இருக்கும்.வெண்ணிலா வெண்ணிலா,கெட்டப்பை மாத்தி,அப்புறமா அந்த டைட்டில் பாடல் - இதெல்லாம் யார் கிட்டயாவது இருந்து கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா?
|
[+/-] |
ஆடிப்பெருக்கு |
ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள்
அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
--"ஆடித்திருநாள்" பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி
01 August 2007
[+/-] |
முதல் மாபெரும் ரயில் கொள்ளை |
என்ன தான் பல வருடங்கள் பயணம் செய்து கொண்டிருந்தாலும் ரயில் என்னவோ எனக்கு இன்னமும் ஒரு அன்னிய ஜந்துவாகத்தான் இருக்கிறது. ஓடும் போது பேருந்து போல நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் இறங்கவும் ஏறவும் முடியாது என்பது ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம். தவறான கம்பார்ட்மென்டில் ஏறிவிட்டால், நமது இடத்திற்குப் போய்ச்சேருவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.போகிகள் இணைக்காமல் இருந்தால் அதோ கதிதான். மயக்க பிஸ்கெட் கொள்ளைக்காரர்கள்,தூக்கம் வராமல் தவிப்பது தெரிந்தும் விளக்கை அணைக்க அழிச்சாட்டியம் செய்யும் சக பயணிகள் என்று ஒரு சங்கிலித் தொடர் போல இன்னமும் இருக்கிறது ரயிலின் மேல் பிடிப்பு வராமல் இருக்க ஆயிரத்தெட்டு காரணங்கள்.
ரயில் பெட்டிகளுக்குள் நடக்கவே நாம் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பெட்டிகளின் மீதேறி எப்படி சண்டை போட முடிகிறது என்பது எனக்கு இன்னும் விளங்காத புதிராகவே உள்ளது. அதுவும் ரயில் பயணிக்கும் திசைக்கு எதிராக ஓடி தேச துரோகிகளைப் பின்னிப் பெடலெடுக்கும் கேப்டன், ஆந்திர பாலைய்யா பிரதாபங்களைப் பார்க்கையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இதெல்லாம் என்ன பிரமாதம்?
முன்னாளைய பாண்டு ஷான் கானரி நடித்த இந்தப் படத்தைப் பார் என்று ஒரு நட்புவட்டாரத்திலிருந்து வந்த வேண்டுகோளை ஏற்று பார்த்த படம்தான் "முதல் மாபெரும் ரயில் கொள்ளை "(The First Great Train Robbery) மைக்கேல் கிரிக்டனின் எழுத்து, இயக்கத்தில் ஷான் கானரி, டொனால்ட் சுதர்லேண்ட், லெஸ்லீ-அன்னே டௌண் நடித்து 1979ல் வெளியானது இந்தப்படம்.
1885ன் இங்கிலாந்தில் நடப்பதாக இருக்கிறது கதையின் பின்னணி.அப்போது இங்கிலாந்து, ஃப்ரான்சுடன் கூட்டு சேர்ந்து ரஷ்யாவுக்கெதிராக க்ரைமியா என்ற இடத்தில் யுத்தம் செய்து வந்தன. இங்கிலாந்து வீரர்களுக்கு மாதாந்திர சம்பளமாகத் தங்கம் பட்டுவாடா செய்யப்பட்ட காலம் அது. லண்டனின் ஒரு முக்கிய வங்கியிலிருந்து, மாதம் ஒரு முறை 25,000 பவுண்டுகள் தங்கம், போக்ஸ்டென் ட்ரெயினின் சரக்குவேன் மூலமாகக் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கப்பல்கள் வாயிலாகக் க்ரைமியாவுக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாயிருந்தது.
இவ்வளவு தங்கத்தை எடுத்துச் செல்லும்போது அதற்குரிய பந்தோபஸ்து இல்லாமல் போகுமா?
தங்கப்பாளங்களை எடுத்துச் செல்லும் பெட்டி ஒவ்வொன்றும் 550 பவுண்டுகள் எடையுடன் தலா இரு பூட்டுகள் கொண்டிருந்தது. பெட்டிக்கு இரண்டு என்ற கணக்கில் மொத்தம் நாலு சாவிகள். ஆக இந்தத் தங்கத்தைக் களாவாட வேண்டுமென்றால் இந்த நாலு சாவிகளுக்கும் பிரதி எடுக்க வேண்டும். அது சரி, இந்த நாலு சாவிகளும் ஒரே ஆளிடத்தில் இருக்குமா என்றால், அதுதான் இல்லை. 2 சாவிகள் அந்த ட்ரெயினின் சரக்குகள் டிஸ்பேட்ச் செய்யும் அலுவலரிடமும், மூன்றாவது சாவி தங்கப்பாளங்களை அனுப்பும் வங்கியின் பிரசிடென்டிடமும், நான்காவது சாவி அந்த வங்கிக் கிளையின் மேலாளரிடமும் இருக்கின்றன.
இப்படியாக பலத்த காவலுடன் ட்ரெயினில் மாதாமாதம் ஒரு பெருஞ்செல்வம் சென்று கொண்டிருப்பதை அறிந்த கள்வர் கூட்டம் சும்மா இருக்குமா என்ன?
நமது கதாநாயகனுக்கு இந்தத் தங்கத்தின் மீது நீண்ட நாட்களாக ஒரு கண். நான்கு சாவிகளையும் அடையாமல் தங்கத்தைப் பற்றி சிந்திப்பது முட்டாள்தனம், கால விரயம் என்பதை அறிந்து கள்ளச்சாவிகள் உருவாக்குவதில் வல்லவனான ஒருவனோடு கூடு சேர்கிறான். தனது புத்திசாலித்தனம், கூட்டாளியின் தொழில் திறமை, காதலியின் அழகு, மனிதர்களுக்கிடையே மண்டிக்கிடக்கும் பலவீனங்கள், தேர்ந்த திட்டமிடல், கடுமையான பயிற்சிகள், தீவிர ஒத்திகை போன்றவற்றின் மூலமாக நான்கு சாவிகளையும் கைப்பற்றும் கதாநாயகனுக்கு இறுதிக்கட்டத்தில் வருகிறது சோதனை.
அதனையும் சமாளித்து வெற்றிகரமாகத் தங்கத்தைக் கொள்ளையடித்தும் விடுகின்றான். அப்பாடா எல்லாம் முடிந்தது என்று நினைத்திருக்கும் வேளையில் காவல்துறை அவனைக் கைது செய்கிறது. கோர்ட் விசாரணை முடிவில் 20 ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்கும் என்று அனைவரும் பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் அதுவா நடந்தது என்னும் கேள்விக்கான விடையினை வெண் திரையிலோ, சின்னத் திரையிலோ காண்க.
ஷான் கானரி நடிப்பில் திரையரங்கில் நான் முதன் முதலில் பார்த்த படம் "என்ட்ராப்மென்ட்" தான். அதுவும் தீபாவளி மலருடன் ஓசியாய் வரும் சீயக்காய்த் தூளைப் போல காத்ரீனாவைப் பார்க்கப் போய் இவரைப் பற்றி அறியலானேன். வயதான போதும் இந்த கிழவருக்கு அந்தப் படத்தில் என்ன ஒரு ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் என்று வியக்காத நாட்கள் இல்லை. பிறகு பார்த்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அவர் மீதான அபிமானத்தை அதிகப்படுத்தியது. பாண்ட் படங்களில் கேட்ஜெட்டுகள் துணை கொண்டு தனது திட்டத்தினை நிறைவேற்றும் ஷான் இந்தப் படத்தில் கத்தியைத் தீட்டாமல் தனது புத்தியைத் தீட்டி இருக்கிறார்.
"குரு" என்று எண்பதுகளில் வெளியான ஒரு தமிழ் மசாலாவில் கமல் வைரத்தையோ அல்லது வேறு ஏதோ ஒரு மண்ணாங்கட்டியினையோ பலத்த காவலுக்கு இடையே சென்று எந்த இடையூறுமின்றி வெற்றிகரமாய் பாட்டி சித்தி தலையில் பேன் பார்ப்பது போல எளிதாக எடுத்து வருவதைப் பார்த்து கொள்ளை அடிப்பது என்பது மிகவும் எளிதான செயல் என்றும், நினைத்த நேரத்தில் முடித்து விடலாம் என்றும் நினைத்திருந்தேன். அது தவறு. கொள்ளையடிப்பதற்குத் தகுந்த திட்டமிடுதலும், தீவிர பயிற்சியும் தேவை என்பதைப் பாட்டியின் சுருக்குப்பையில் இருந்து பணம் களவாண்ட போது அறிந்துகொண்டேன்.
படத்தில் முதலிரண்டு சாவிகளைப் பிரதியெடுக்கும் காரியத்தை, அந்தச் சாவிகள் இருக்கும் ரயில்வே அலுவலகத்தைக் காவல் காக்கும் இரவுக்காவலன் உச்சா போய் விட்டு வரும் அந்த 75 நொடிக்குள் முடித்தாக வேண்டும்.இதனைச் சாதிக்க ஷான் போடும் திட்டமும்,அதற்கு அந்தக் குழு மேற்கொள்ளும் பயிற்சிகளும் அற்புதம். அப்புறமாக ரிஸ்க் மிடிகேஷனுக்கு உதாரணமாய் அமையும் அந்த கிளைமாக்ஸ் காட்சி இன்னமும் என் கண் முன்னால் இருக்கிறது.
மற்றபடி வங்கி பிரசிடென்டின் இரண்டாம் தாரத்துடன் ஷான் குஜால்சாகப் பேசுவது, ஷானின் காதலி துணை கொண்டு வங்கி மேலாளரை வீழ்த்துவது, அதிக உரையாடல்கள் இல்லாமல் காட்சிகளின் துணை கொண்டு கதையை நகர்த்துதல் என்று வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் ஜல்லி அடித்திருக்கிறார்கள். தங்கத்தைக் கொள்ளையடிக்க ஷான் ரயில் பெட்டிகளின் மீதேறி வரும் காட்சியமைப்புகளில் காமிராவும், இசையமைப்பாளரும் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு அருமையான மசாலா படம்.
ஜேம்ஸ்பாண்டு படம் பிடிக்குமுன்னா,கண்டிப்பாகப் பார்க்கலாம்...