போஸ்டரில் உமா தர்மனைப் பார்த்ததும் ஏதோ விஜயசாந்தி டைப் படம்னு பயந்து போய் இந்தப் படத்துக்குப் போகாம இருந்தது எவ்வளவு தப்புன்னு இந்த வாரம் தான் தெரிஞ்சது.ரோம்-1ன் அடுத்த எபிசோடுக்காக ஆவலோட காத்துக்கிட்டு இருக்கும் போது,ஏதோ ஒரு குழப்படியின் விளைவா லவ்ஃபிலிம்ல இருந்து இந்தப் படத்தை அனுப்பிட்டாங்க.சரி...அப்படி என்ன தான் இருக்குன்னு படத்தை ஓட்ட ஆரம்பிச்ச பின்னாடி தான் தெரிஞ்சது என் கிட்ட இருக்கிறது படத்தோட ரெண்டாம் பாகம்னு.முதல் பாகத்தைப் பார்க்காம எப்படி ரெண்டாம் பாகம் பார்க்கிறது? உள்ளூர் நூலகத்தில் இருக்குமோன்னு ஒரு சந்தேகத்தோட போனா,பழம் நழுவி பாலில விழுந்த மாதிரி "இன்றைய ஸ்பெஷல்" லிஸ்டில மொத பாகம்.
பொதுவா ஒரு படம் வெற்றி அடைஞ்சிடுச்சுன்னா உடனே அதுக்கு பார்ட்1,பார்ட்2ன்னு எடுத்துத் தள்ளீடுவாங்க.ஆன இந்தப் படம் அதுல ஒரு விதிவிலக்கு.இந்தப் படம் ரெண்டு பாகங்களா வந்ததுன்னா அதுக்கு முக்கிய காரணம் படத்தின் நீளம் தான்.ரெண்டு பாகங்களையும் சேர்த்து படத்தோட ஓட்ட நேரம் கிட்டத்தட்ட நாலரை மணி நேரம்.உமா தர்மன் "the Bride" என்னும் கதாபாத்திரத்தில் நடிச்ச இந்தப் படத்தை எழுதி,இயக்கினது குவாண்டைன் டாரண்டினோ.
குவாண்டைன் டாரண்டினோ எடுத்த பல்ப் ஃபிக்ஷன்,ரிசர்வாயிர் டாக்ஸ் எல்லாம் முன்னாடியே பார்த்திருந்ததனால்,அவருடைய கதை சொல்லும் பாணி கொஞ்சம் பரிச்சயமாயிருந்தது.ரத்தம்,வன்முறை இல்லாம இருக்காது இவரோட படங்களில்.
இதுலயும் அப்படித்தான்,முதல் காட்சியே ஒரு ரத்தக்களரியோட ஆரம்பிக்குது.ஒரு கொலைகாரக் கும்பலில் இருக்கிற நம்ம கதாநாயகிய அவளோட கல்யாண ஒத்திகை அன்னைக்கு துவம்சம் செஞ்சிடறாங்க.எம லோகத்துக்குப் போயி திரும்பி வார கதாநாயகி தன்னைக் கொன்னவங்களைப் பழி வாங்குறது தான் கதை.யார் கொன்னது,ஏன் கொன்னது போன்ற கேள்விகள முதல் பகுதியிலும்,அதற்கான பதில்கள் ரெண்டாம் பகுதியிலும் இருக்கும்.இரண்டு பாகங்களில் மொத்தம் பத்து பகுதிகளாய ஒரு கதை சொல்லப்பட்டிருக்கு.
அட்டகாசமான சண்டைகாட்சிகள்,"lean-mean"ஹீரோயினி,டாப் கிளாசான திரைக்கதையோட வந்த இந்தப் படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.என்ன படத்தில் கொஞ்சம் ரத்தவாடை சாஸ்தி.
சண்டைப்படங்கள் உங்களுக்குப் பிடிக்குமின்னா,இது வரை இதைப் பார்க்கலைன்னா கட்டாயம் பாருங்க,Kill Bill.
எனக்குப் பிடிச்ச காட்சிகள்:
1)வர்னிதாவைக் கொல்லும் முன்னர் வரும் வசனங்கள் ஊடான ஒரு சண்டை
2)க்ரேசி-88 உடன் மோதும் காட்சி
3)திருமண ஒத்திகையின் போது,ஆசுவாசப்படுத்திக் கொள்ள சர்ச்சிலிருந்து வெளியே வரும் உமா,எங்கிருந்தோ காற்றில் வரும் பில்லின் புல்லாங்குழல் இசை கேட்டு உணர்ச்சிவசப்படுதல்
4)பாய் மேயுடனான குருகுலவாசம்
5)BBயுடன் டைனிங் டேபிளில் பேசும் தங்க மீன் பற்றிய வசனங்கள்
6)முத்தாய்ப்பான அந்த இறுதிக் கட்ட சண்டை...
31 July 2007
[+/-] |
பில்லைக் கொல்லு |
25 July 2007
[+/-] |
பிரசன்னா - சினேகா - அருண் வைத்தியநாதன் |
அகரதூரிகை என்னும் தமிழ் வலைப்பதிவுக்குச் சொந்தக்காரரும்,பல்வேறு குறும்படங்கள் இயக்கியவருமான அருண் வைத்தியநாதன் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைப்பார் போல.
பிரசன்னா-சினேகா-அருண்-எஸ்.பி.பி.சரண்-ப்ரேம்ஜி அமரன் -தாமரை கூட்டணியில் வரும் "அச்சமுண்டு அச்சமுண்டு" வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துகள்...
(இது அந்த அருணான்னு தெரியலை..ஆனால் இண்டியாக்ளிட்ஸ் சொல்லும் குறிப்புகளுடன் ஒத்துபோகிறவர் இவர் தான்னு நினைச்சதால் இந்தப் பதிவு)
21 July 2007
[+/-] |
சுப்பு & ருக்கு - 1 |
கடந்த ஏழு மாதங்களாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சுப்புவும் ருக்குவும் தங்களது முதலாமாண்டு கல்யாண நினைவுநாளை வெகு விரைவில் கொண்டாடவிருக்கின்றனர்.
சுப்பு: அது வந்து....சொல்லும்மா...இப்போ என்னோட வாட்சில மணி 10.02
ருக்கு:அதெல்லாம் கரெக்டா சொல்லு.9.28க்கு ஒரு தடவை கால் செஞ்சேன்.பிஸின்னு வந்தது.9.5க்கு கால் செஞ்சேன்.மறுபடியும் பிசி.உடனே 9.53க்கு ஒரு மெயில் அனுப்பினேன்.இன்னும் அதை நீ ஓப்பன் கூட செஞ்சு பார்க்கலை.யார் கூட காபிக்கு போனே?கிளியோபாட்ராவா இல்லை அந்த மூக்கழகியா?
சுப்பு:இது கொஞ்சம் ஓவர் ருக்கு.எனக்கு இன்னைக்கு 9-10 ஆன்ஷோர் டீமோட மீட்டிங் இருக்குன்னு நேத்தே சொன்னேன் இல்லை..அதை முடிச்சுட்டு இப்போ நேரா சீட்டுக்கு தான் வரேன்.ஆமா ஏதாவது சீரியசான மேட்டரா??
ருக்கு:bugல்லாம code எழுதத் துப்பில்லை.இதில ஆன்ஷோர் டீம் மீட்டிங் வேற.நேத்து உன்னை ஒரு module கொடுத்து code பண்ணச் சொன்னேனே,அதை எனக்கு அனுப்பும் முன்னாடி test செஞ்சியா??
சுப்பு:ஆங்...அது வந்து... ஒண்ணுக்கு ரெண்டு test வாட்டி செஞ்சேனே ருக்கு.அந்தக் கோடில ஏதாவது பிராப்ளமா??(இந்த கூகிள் கடங்காரன் காலை வாரிவிட்டுட்டான் போல இருக்கு..இப்போ மேட்டரை ஓரம் கட்டணுமே..எப்படி???)
ருக்கு:நீ கொடுத்த கோடில நாலு bug இருக்குன்னு மெயில் வந்திருக்கு.உருப்படியா நாலு வரி code எழுத வராது;இதில பேர் மட்டும் பெரிசா பிஸினெஸ் அனலிஸ்டுன்னு.ஏதோ என்னோட லீட் லீவில போனதால சமாளிச்சுட்டேன்.அது சரி..நீ வீட்டை விட்டு வர்ரச்சே கேஸ் எல்லாம் பார்த்து ஆஃப் செஞ்சிட்டு வந்தியா??
சுப்பு:அதெல்லாம் கரெக்டா செஞ்சிட்டேண்டா.(உஷ்..அப்பாடா.விஷயம் வேற ட்ராக்குக்கு மாறுது.)
ருக்கு:நான் வாஷிங்மெஷின்ல போட்டிருந்த என்னோட துணிகளை எல்லாம் காயப்போட்டியா??பாலை எடுத்து மறுபடியும் ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சுட்டியா??
சுப்பு:(அய்யய்யோ..இந்த துணி மேட்டர் சுத்தமா மறந்து போச்சே.ஹூம்...அந்த நேரம் பார்த்துதானா சன் ம்யூசிக்ல "நிலவைக்கொண்டு வா..கட்டிலில் கட்டிவை" போடணும்)ஆச்சு..எல்லாம் செஞ்சிட்டுதாண்டா வீட்டை விட்டுக் கிளம்பினேன்...எதுக்கு வீணா நீ டென்ஷன் ஆகறே?? ஆமாம்.நீயே டிசைன் செஞ்ச சுடிதாரை இன்னைக்குப் போட்டுட்டுப் போனியே.அதை பத்தி தான் இன்னைக்கு உங்க ஆஃபிஸில ஒரே பேச்சாமே??
ருக்கு:அய்யோ....ஆமாம்பா....இது உனக்கு எப்படித் தெரிஞ்சது???டோரிக் கண்ணு வெங்கி கூட இன்னைக்கு இதைப் பார்த்து வொண்டர்ஃபுல்லுன்னு சொல்லுச்சி.இன் ஃபாக்ட் எங்க டீமில புதுசா சேர்ந்திருக்கிற ஃப்ரஷர்ஸ் இதுக்காக என்னை ட்ரீட் தரச் சொல்லியிருக்காங்க.நானும் வர சனிக்கிழமை அவங்களை வீட்டுக்குக் கூப்டிருக்கேன்.பாவம் பசங்க.புது ஊர்.புது மனுஷங்க.அவங்களுக்கும் ஒரு சேஞ்ச் வேணும் தானே??
சுப்பு:(அப்பாடா..ஒரு வழியா ட்ராக்கை மாத்தியாச்சு...)ஆமாம் ருக்கு.you are very correct, as always. நம்ம ரிஷப்சனுக்கு முதலில் நீ எடுத்த சேலை கூட இந்த ராமர் ப்ளூ கலர் தானே?
ருக்கு:சுப்பூ...கொஞ்சம் கூட உனக்கு கலர் சென்ஸே இல்லை.First of all இன்னைக்கு நான் போட்டுட்டு வந்த சுடிதார் கலர் ராமர் ப்ளூ இல்லை.அது ராமர் க்ரீன்.Secondly ரிஷப்சனுக்கு முதல்ல எடுத்த சேலை கலர் ஆலிவ் க்ரீன்.ஒரு வருஷம் கூட ஆகலை.அதுக்குள்ள எல்லாமே மறந்திடுச்சி உனக்கு.....
சுப்பு:(அய்யயோ..இதென்ன புதுக்கதை....ஏதாவது சொல்லி சமாளிடா...)ஆங்...அது வந்து..எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.உனக்கு மறந்திடுச்சான்னு டெஸ்ட் பண்ணிப்பார்த்தேன்.ஹி...ஹி....அப்புறம் உங்க பாலு மாமா தசரா லீவுக்கு இங்கே ஃபேமிலியோட வரார்னு சொன்னேல்லியா? ஏதாவது டூர் பிளான் செய்யட்டுமா??(ஹூம்.சூப்பராப் பாயிண்டைப் புடிச்சுட்டியேடா...)
ருக்கு:அடப்பாவி.போன சண்டே தானே அவரோட மாமனாருக்கு KMCH ல பைபாஸ் செய்யணும்னு ஃபோன் பண்ணி சொன்னாரு.நீ கூட உன்னோட ஸ்கூல் மேட் பிபின் அந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கான்னு சொல்லீட்டு இருந்தியே??அப்போ அதெல்லாம் ரீலா?? சரியான டுபாக்கூர் பார்ட்டி நீ...get lost....
சுப்பு:(சோதனை மேல் சோதனை..போதுமடா சாமி)ருக்கு..ருக்கு..ப்ளீஸ்..அது ரீல் எல்லாம் இல்லை..ருக்கு...லைனைக் கட் செஞ்சிட்டியா???ஹூம்....
(தொடரலாம்)
[+/-] |
நம்ம ஊரு,நல்ல ஊரு - 1 |
அது என்ன அவ்வளவு பிரபலமான ஊரா என்று யாரிடமாவது கேட்டால் போதும், ஜீ.டி.நாயுடு, சிறுவாணித் தண்ணீர், PSGCTCIT செட்டுகள், சிறுதுளி திட்டம், செழிய, சிவகுமார, மணிவண்ண, சத்ய சுந்தர பாக்கிய ராஜ வகையறாக்கள்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா, நரைன் கார்த்திகேயன், குர்லா எக்ஸ்பிரஸ், பிளாக் தண்டர் என்று சங்கிலித் தொடர் போலே நீளும் பதில்கள்.
நம் ஊரைப் பத்தி நம்மளோட கருத்துகளும், மதிப்பீடுகளும் எப்பவுமே ஒரு தலைப் பட்சமாகவே இருக்கும்.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சும்மாவா சொன்னாங்க.கோயமுத்தூரைப் பத்தி வெளியூர்க்காரங்க என்ன தான் சொல்றாங்கன்னு பார்ப்போம்
ஐகாரஸ் பிரகாஷின் பார்வையில்:வகை தொகையில்லாமல், மானாவாரியாக கெட்ட வார்த்தைகளை - அதன் நிஜ அர்த்தம் தெரியாமலேயே - அள்ளித்தெளிக்கும் கூவாங்கரையில் பிறந்த வளர்ந்த ஒருவனுக்கு,கோயமுத்தூர் தரும் தரும் அதிர்ச்சிகள், இன்பமானவை. அந்த அதிர்ச்சிகளை நானும் அனுபவித்திருக்கிறேன்.என்னமோ, எனக்கு கோவை என்று சுருக்கமாகச் சொல்வதைவிட, கோயமுத்தூர் என்று நீட்டி முழக்கிச் சொல்வதுதான் பிடித்திருக்கிறது.
கோயமுத்தூர் என்றவுடன் சட்டென்றுநினைவுக்கு வருவது என்ன? லக்ஷ்மி மில்ஸ் வளாகம்? மருதலைக் கோயில்? சுகுணா மோட்டார் கம்பெனி ? நிர்மலா காலேஜ் பெண்கள் ? அங்கண்ணன் கடை ? டேக் ஓவர் டைக்கூன் பி.ஆர்.ராஜரத்தினம் ?கோக்குமாக்கானவடிவத்தில் இருக்கும் ஃப்ளைஓவர் ? அநியாயமாக விமான விபத்தில் செத்துப் போன கரிவரதன் ? ராஜ்யஸ்ரீ பதி ? சிறுவாணி ? இல்லை... இதல்லாம் பிறகுதான்... முதலில் நினைவுக்கு வருவது அந்த ஊர் மக்களும், அவர்கள் பேசும் கொங்குத் தமிழும் தான்.
பாரதியார் பல்கலை எம்பிஏ நுழைவுத் தேர்வு எழுதச் சென்று, கேள்வித் தாளுக்காக காத்திருக்கும் போது என்ன வரும்? ஒழுங்காகத் தேர்வு எழுதி சீட்டு கிடைக்குமா என்ற நடுக்கம் வரும் அல்லது RAC டிக்கட் கன்ஃபர்ம் ஆகுமா யோசனை வரும். எனக்கு தூக்கம் தான் வந்தது. (இரவில் பன்னிரண்டு மணி நேர பேருந்துப் பயணம் + கௌரிஷங்கரில் 'பாத்தி கட்டி அடித்ததன்' விளைவு). கேள்வித் தாள் விநியோகம் செய்து கொண்டு வந்த நுழைவுத் தேர்வு பொறுப்பாளர், தட்டி எழுப்பி, "பரீட்சை ஆரம்பிச்சுடுச்சுங்க, பயணக் களைப்புங்களா? மொகம் கழுவிக்கிட்டு வந்து எழுதறீங்களா ?" என்று எந்த விதமான நக்கல்/கிண்டலுமில்லாமல் சாதாரணமாகக் கேட்டவர், கோயமுத்தூர் மக்கள்ஸின் ஒரு ரெப்ரசெண்டேடிவ் சாம்பிள் என்று தான் தோன்றுகிறது. வாங்க, போங்க என்று மரியாதையுடன் அழைக்கும் ஆட்டோ ஓட்டுநர்களையும், தமிழில் பேசும் bartender களையும் அங்கே தான் ஒரு சேரப் பார்க்கலாம்.
கேஜி வளாகத்தின் அருகே இருக்கும் பழமுதிர்ச்சோலையின் கிளை ஒன்று, சென்னையில் சாலிக்கிராமத்தில் துவங்கப்பட்டிருக்கிறது. சரி, போய்தான் பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தவுடன், வரவேற்பு, "வா சார், இன்னா வோணும்?"
பூவோடு சேர்ந்த நார், மணக்குமா அல்லது நாறுமா என்பதை யார் சொல்ல முடியும்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே...??? (பின்னூட்டங்களின் வாயிலாகவோ அல்லது தனிமடல் மூலமாகவோ).
17 July 2007
[+/-] |
சொன்னாங்க...சொன்னாங்க... |
இந்த உலகம் ஒரு நாடக மேடை என்னும் கருத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள பெரும்பான்மையான தமிழர்களைப் பொருத்த மட்டிலும் நிழலும் நிஜமும் ஒன்றே.அப்படி நிழலிலும்,நிஜத்திலும் பேசப்பட்ட சில வசனங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
யார் சொன்னது?? எந்த சூழ்நிலையில் சொன்னது???
1)பி.பி.சி.க்கு பேட்டி வழங்கியது மகிழ்ச்சி தரும் அனுபவமில்லை
2)வெவரம் தெரியாதவனுக்கு பொண்டாட்டியா இருக்கிறதை விட,விவரம் தெரிஞ்சவனுக்கு வப்பாட்டியா இருக்கலாம்.
3)வேட்டைக்காரன் வர்ரான்..உஷாரா இருந்துக்கோங்க...
4)அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.
5)இவங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்தா அந்த ஆண்டவனால கூட தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாது...
6)'நான் செத்ததுக்குப் பொறவு தான் இந்த கல்யாணம் நடக்கும்.'
'அது வரைக்கும் என்னால காத்திட்டிருக்க முடியாது'
7)இந்த உலகத்திலேயே ரொம்பவும் கொடுமையான விஷயம் எது தெரியுமா? மத்தவங்க நம்மளை மறந்து போறது தான்
பி.கு:- எனக்கு கேள்வியின் நாயகன் என்னும் பட்டம் தரப்போவதாகக் காத்து வாக்கில் உலவும் செய்தி பற்றி அனைவரும் இன்னேரம் அறிந்திருப்பீர்கள்.அந்தப் பட்டம் சூட்டும் விழாவில் எனக்குத் தரப்படும் பொற்கிழிக்காக உங்களது பங்களிப்பை நீங்கள் செய்ய விரும்பினால்,அணுக வேண்டிய முகவரி எது என்று உங்களுக்குக் தெரியும் தானே???
09 July 2007
[+/-] |
நான் யார்? நான் யார்? நான் யார்? |
1)என்னோட அண்ணாவும் தன்னோட ஆரம்பகால வாழ்க்கையை மீடியா துறையில தான் ஆரம்பிச்சார்.எங்க அப்பாவுக்கு இருந்த செல்வாக்கு,அரசியல் பலம்,வியாபார நெளிவுசுளிவுகள் காரணமா எங்கோ இருந்த நாங்க இன்னைக்கு இருக்கிற இடத்தை நினைச்சுக் கூட பார்க்க முடியலை.நாளைக்கு அழிவில்லைல வந்த எலியட் கார்வர் கதாபாத்திரம் எங்க அப்பாவைத் தாக்கி இருக்குன்னு எங்கோ படிச்ச ஞாபகம்.அப்புறம்,2003ல நான் பதவிக்கு வந்தப்போ இருந்த சர்ச்சை இப்போ சுத்தமாக் குறைஞ்சிருச்சு.
2)1982ல் வெளியாகி உலக புகழ்வாய்ந்த அந்தப் படத்திலே நடிக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.என்னோட படத்தைப் பத்தி வேட்டையாடு விளையாடுவில ஜோதிகா ஏதோ சொல்லியிருக்காங்களாமே,அது நிஜமா? நாலு குழந்தைகளுக்கு அப்பாவான என்னோட இயற்பெயர் கிருஷ்ணா பான்ஜி.
3)மார்ச் 1976ல் இருந்து ராஜ்யசபா எம்.பி.ஆன போதிலும் எனக்கு அமைச்சர் பதவி கிடைச்சதென்னமோ 29 ஜனவரி 2006ல் தான்.நான் 1943ல் லாகூர்ல பிறந்தேன்.உங்க ஊர்ல கூட என் பேர்ல ஒரு நடிகை எண்பதுகளில் கலக்கிட்டு இருந்தாங்களாமே,உண்மையா?
4)இந்த அம்மா குச்சிப்புடி,பரதம் நல்லா ஆடுவாங்கன்னு என்னைப் பத்தி எழுதறவங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் நான் IIM-A அலுமினி என்பது.காலேஜில பசங்க பேப்பர்ல விட்டுக்கிட்டு இருக்கிற அந்த விஷயத்தை நம்ம இந்தியாவில சாதிக்கக் காரணமாக இருந்த அந்த நிறுவனத்தை உருவாக்கினதில எங்க அப்பாவுக்கு ஒரு பெரும்பங்கு இருக்கு.என்னது..?நரேந்திர மோடியா...ஆளைவிடுங்கப்பா...
5)ஜாக்கிசான் 80நாட்களில் உலகம் சுற்றிய பயணத்தின் போது நான் தான் ஹாட் ஏர் பலூன் ஓட்டுனர்.உங்க ஊர் தினத்தந்தி சிந்துபாதுக்கும் எனக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கு.2006ல் நான் ஆரம்பிச்ச அந்த காமிக்ஸ் நிறுவனத்தில் சேகர்கபூர் சித்திரக்காரராய் இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா?
05 July 2007
02 July 2007
[+/-] |
என்னைப் பற்றி ஒரு எட்டு |
"சிவாஜியின் வருகையும் தில்லி அரசியலில் அதன் விளைவுகளும்" என்னும் தலைப்பில் சீஸனல் பதிவு ஒண்ணு போட்டு ஹிட் கவுண்டைக் கூட்டலாம்னு நினைச்சுட்டு இருந்த நேரத்தில் இப்போ நடந்திட்டு இருக்கிற எட்டு வெளையாட்டு ஆட காதல் முரசுவும்,தேவும் கூப்பிட்டு இருக்காங்க..
ஃப்ளேப்ஜாக் திங்க கூலியான்னுட்டு எழுத ஆரம்பிச்சேன்;எழுத ஆரம்பிச்சேன்;எழுதினேன்;எழுதினேன்;இன்னும் எழுதிட்டே இருக்கேன்.நம்ம சோம்பேறித்தனம் தான் உலகப்பிரசித்தி பெற்றதாச்சே...
சரி..சரி..விஷயத்துக்கு வருவோம்.
(1)முதல் கனவு: சின்னப் பையனா தாத்தா ஊரில வளர்ந்த போது,மாதம் ஒரு முறை என்னைக் கூட்டீட்டு தாத்தா சூலூர் வருவார்.பழனியில இருந்து உடுமலை வரும் வழியில் மடத்துக்குளத்துக்கு முன்னாடி ஒரு லெவல் கிராசிங் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட பஸ்ஸில ஏறினா,அந்த லெவல் கிராசிங் புண்ணியத்துல ரயில் பொட்டிகளைப் பார்க்கலாம்.எங்க தாத்தா என்னை அந்த பஸ்ஸுக்குத்தான் கூட்டிட்டி வருவாரு.எனக்கோ ரயில் பெட்டிகளை விட,இரண்டு பக்கமும் பல்வேறு வாகனங்களை நிறுத்தின லெவல் கிராசிங் கேட்டு மேல தான் ஒரு கண்ணு.நான் படிச்சு பெரியவன் ஆனவுடனே,அந்த லெவல் கிராசிங் கேட்மேனாகத் தான் வருவேன்னு கொஞ்ச காலம் சொல்லீட்டு இருந்தேனாம்.ரயில் அந்த ரூட்டில வரலேன்னா அந்த லெவல் கிராசிங்குக்கே வேலை இல்லைன்னு தெரிஞ்ச போது,அந்த ரயிலில் ட்ரைவராகவோ,கண்டக்டராவோ இல்லை க்ளீனராகவோ ஆகப் போறேன்னு சொல்ல ஆரம்பிச்சேன்.முதல் முறையா ரயிலில் பிரயாணம் செஞ்ச பிறகு,அந்த ரயிலில் டீ விற்பனை செய்யும் ஆளாக ஆகப்போறேன்னு சொன்னது இன்னும் நினைவுல இருக்கு.ஹூம்..கடைசியில் இப்போ இங்கே வந்து ஆணி புடுங்கணும்னு என்னோட தலையில எழுதியிருக்கிறதை மாத்த முடியுமா??
(2)வியாபார காந்தம்:இப்படியாகத் தானே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த யாம் ஒரு சுபயோக சுப தினத்தில் சூலூர் மக்களின் மனக்கேதத்தினைத் தீர்க்கும் பொருட்டு,சூலூரில் எழுந்தருளினோம்.அடச்சீ...சொல்ல வந்த மேட்டரைச் சொல்லாம மொக்கை போடறானேன்னு திட்டறது கேக்குது. சூலூரில எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருந்த காலிவீட்டுல திடீர்னு செமையான கூட்டம்.யாரோ காமாட்சி பீடத்தின் ஆஸ்தான அடிகள் அந்த வீட்டுக்குக் குடி வந்ததனால் எங்க ஏரியாவுக்கே கொஞ்ச நாள் செம்ம மௌசு வந்திடுச்சு.முழுப் பரிச்சை லீவுக்கு என்ன செய்யலாம்னு நகத்தைக் கடிச்சிக்கிட்டு இருந்த சோக்காளிகளுக்கு என்னோட அந்த ஐடியா மொதல்ல கூமுட்டைத்தனமாத்தான் பட்டது.ஆனா வெயில் காலம்,வர்ர ஆளுங்களோட எண்ணிக்கை, சீப்பான ப்ரொடெக்ஷன் காஸ்ட்,அதிக லாபம், தவிரவும் வெட்டுப்பட்டான் குட்டையில நடக்கிற கிரிக்கெட்டு மேட்சுக்கு ட்ரிங்ஸ் ஸ்பான்ஸர் அப்படின்னு கலர் கலரா நான் சொன்னதை நம்பி ஆரம்பிக்கப்பட்டது தான் "சூலூர் கோலா". எலுமிச்சை சூசுக்கு நாங்க வச்ச பேரு அது தான்.நல்லாத்தேன் போச்சு.ஆனா எங்க கெட்ட நேரம் ...ஹும்..மீதிக் கதையை இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம். சப்ளை அண்ட் டிமாண்ட் அப்படின்னு பல ஜல்லிகள் தெரியாத அந்த நாளில் எனக்குள் தோணின அந்த ஐடியாவை செயல்முறைப்படுத்தி லாபமும் சம்பாரிச்சதை நெனச்சா இன்னைக்கும் புல்லரிக்குது.
(3)சுயமரியாதை: அட.இது டிடில மதியம் போடுற மெகா தொடரோட பேர் இல்லைங்க.நான் கொஞ்சம் கௌரவம் பார்க்கிற ஆளு.நண்பர்கள் கிட்டே பார்க்க மாட்டேன்.ஆனா சொந்தக் காரங்ககிட்டே அதிகம் பார்ப்பேன்.எனக்கு மண்டைக்கனம் ஜாஸ்தீன்னு இதனால் அவங்க சொல்லீட்டுப் போனாலும்,யாருக்காகவும் இதனை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.நம்மளை நாமளே மதிக்கலைன்னா யாரு மதிக்கப் போறாங்க சொல்லுங்க??
(4)சினிமா பைத்தியம்: தியெட்டரில் பார்த்த முதல் படமான"பயணங்கள் முடிவதில்லை"யில் ஆரம்பித்தது இந்தப் பைத்தியம்.மின்சாரக் கனவு வேண்டாம்டா, இருவர் போலாம்னு சொன்னப்போ எல்லாரும் என்னை மொறச்சதைச் சொல்லவா,இந்தியன் ஓப்பனிங் ஷோ பார்க்க டிக்கெட்டுக்கு அலைஞ்ச கதையைச் சொல்லவா,"Love actually"பார்த்திட்டு அதனோட திரைக்கதை format பத்தி மூணு மணிநேரம் செந்தில் கூட மொக்கை போட்டதைச் சொல்லவா.??அப்படி ஒரு சினிமா பைத்தியம் நான். ரசனைகளில் மாற்றம் வந்த போதும், கரகாட்டக்காரனை ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டியாவது பார்க்காம தூக்கம் வருவதில்லை.
(5)பொறுப்பான பையன்:எங்க அப்பாவோட அருமைச்சினேகிதர் ஒருவர் எப்போ பார்த்தாலும் என்னைப் பத்தி ஏதாவது நொணை நாயம் சொல்லீட்டே இருப்பார்.அப்படிப்பட்ட அவர்கிட்டயே "கலக்கீட்டயே தம்பீ..." அப்படின்னு பேர் வாங்கிற மாதிரி திட்டமிட்டு செஞ்ச உடம்பொறப்போட கல்யாணம்,மறக்கவே முடியாது.நிச்சயம் முடிஞ்சு இருபதாவது நாள் கல்யாணம்.பயங்கரமா பிளேன் செஞ்சு,பேக்கப் ஏற்பாடுகளைப் பத்தி தீவிரமா யோசிச்சு செஞ்ச நிகழ்வு இது.கல்யாணத்தன்னைக்கு எங்க அப்பா முகத்தில இருந்த அந்த சந்தோஷத்தயும்,எம் மகன் சாதிச்சுட்டான்கிற பெருமித உணர்வையும் பார்க்கிறப்போ இன்னுமொரு உடன்பிறப்பு இருந்திருக்கக் கூடாதுன்னு ஏக்கந்தான் வருது.
(6)கிச்சன் கில்லாடி:இன்னும் ஒரு மாசத்துல அட்டகாசமா சாம்பார் செஞ்சு காமிக்கறேன்னு போட்டீல குதிச்ச அப்புறம் தான் சமையல் இவ்வளவு கஷ்டமான விஷயமான்னே தெரிய வந்தது.எப்படியோ..முட்டி மோதி ஒரு வழியா சமையலும் கத்துக்கிட்டாச்சு.இப்போ சமையல் என்னோட பேஷன்(passion)னு டயலாக் அடிக்கற மாதிரி சமையலிலும் தேறியாச்சேய்.ஊருக்குப் போனா இப்போ அய்யா தான் டீ போடறது.என்னைக் கேட்டா சமையல் நல்லாச் செய்யிறவங்க, நல்ல பொறுமைசாலியா இருப்பாங்கன்னு தான் சொல்லுவேன்.பெங்களூரில் ஒரு சாப்பாட்டுக்கடை போடலாம்னு கொஞ்ச நாளா யோச்சிட்டு இருக்கோம்.
(7)அட்வைஸ் அண்ணாசாமீஸ்: "காதல்ங்கிறதெல்லாம் மாயை.பிராக்டிக்கலா யோசீ"அப்படீங்கற வசனத்தை எங்க காலேஜ் பக்கம் போன நூற்றாண்டில கேட்டிருந்தீங்கன்னா நீங்க கட்டாயம் அ.அண்ணாசாமிக்களைப் பார்த்திருக்கீங்கன்னு அர்த்தம்.அது வேற யாருமில்லை.அடியேனும் அடியேனோட நண்பர் குழாமும் தான்.பாலகுமாரனோட நாவல்கள் படிச்சிட்டு பசங்க மத்தியில டயலாக்கா அடிச்சு வுட்டுட்டு இருந்த காலம் அது.எந்தப் பையனாவது எந்தப் பொண்ணுக்காவது ரூட்டு வுடறான்னு தெரிஞ்ச உடனே,அவனைப் புடிச்சு இந்த மாதிரி ஒரு நாலஞ்சு வஜனத்தை அள்ளி விடாட்டி எங்க கும்பலுக்கே தின்ன சோறு சீரணம் ஆகாது.இப்படி நாங்க பிரிச்சு விட்ட ஜோடிகள் ஏராளம் . காதலிக்கத் தேவையான மன தைரியம் இல்லாத எங்களை ஐடியா அண்ணாசாமீஸ்னு கற்பனை செஞ்சிட்டு அட்வைஸ்ங்கிற பேர்ல நாங்க செஞ்ச அலப்பறையை எப்போ நினைச்சாலும் சிரிப்புதான் வரும்.
(8)அதீத ஞாபக சக்தி:மூணாம் வகுப்பில கணக்குப் பாடம் எடுத்த டீச்சரோட வீட்டுக்காரர் பேரில் இருந்து,ஸ்பீடு படம் இந்தியாவில வெளியிடும் போது ஸ்டார் நிறுவனம் வைச்ச போட்டியில் இருந்து,அழ.வள்ளியப்பா காலமாகும் போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் யார்ங்கிற வரைக்கும் குத்து மதிப்பா ஞாபகத்துக்கு இருக்கும்.ஆனா என்னோட யாஹீ மெயில் பாஸ்வேர்ட்,எங்க வீட்டு லேண்ட்லைன் நம்பர்,எங்க அப்பாவோட வண்டி நம்பர் போன்ற விஷயங்கள் தான் அடிக்கடி குழப்பும். எண்களை விட முகங்களும்,பெயர்களும் அவ்வளவு சீக்கிரமா மறந்திட மாட்டேன்.
இனி, நான் அழைக்க விரும்பும் எட்டு பேர்.
1)இளவஞ்சி
2)ஸ்ருசல்
3)யாத்ரீகன்
4)கேவீஆர்
5)ரம்யா நாகேஸ்வரன்
6)செல்வேந்திரன்
7)சந்திரவதனா
8)கோ.கணேஷ்
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்