டிஸ்க்ளெய்மர்: ஒரு குறிப்பிட்ட இறை வழிபாட்டு முறை நல்ல வழிகாட்டுதல் இன்றி நீர்த்துப் போய் வருகிறது என்ற ஆதங்கத்தின் விளைவினால் எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை. இதன் மூலம் யாருடைய மனத்தையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை.எல்லாம் வல்ல இறையின்(அதனை எந்தப் பெயரிட்டு அழைப்பினும்) மேல் எனக்கும் தீவிர நம்பிக்கையுண்டு.
"ரொம்ப நாளைக்கப்புறமா இந்த மாதிரி மூணு நாள் சேர்ந்தாப்பில விடுமுறை வருது.அதனால நாம தீவாளிக்குன்னு போட்டிருந்த பிளானைக் கேன்சல் பண்ணிட்டு இப்பமே மதுரை பக்கம் போயிட்டு வந்திடுவோம்.மணி கிட்ட கூட ஒரு டாடா - சுமோவுக்கு சொல்லி வச்சாச்சு" என்று அப்பா கூறியதிலிருந்து எனது மதுரைக் கனவுகள் ஆரம்பமாயின.திட்டமிட்ட படி நாங்கள் மதுரையை அடைந்தோம்.
"இன்னைக்குச் சனிக்கெழமை.அதனால கூட்டமும் அவ்வளவு அதிகமா இருக்காது.எந்தப் பிக்கல் பிடுங்கல் இல்லாமக் கோவிலையும் ஆர அமர சுத்திப் பார்க்கலாம்."என மனசுக்குள் நினைத்தவாறே கோவிலினுள் நுழைந்த போது எழுந்த அந்தக் கூச்சலினால் நான் சற்று ஆடிப்போனதென்னமோ உண்மை தான்.
"சாமியே....." "சரணம் அய்யப்பா!" "சாமியே....." "சரணம் அய்யப்பா!"
"சே.இங்கயும் வந்திட்டாங்களா."என்று உச்சுக் கொட்டினேன்.
"ஏம்பா தம்பி.ஒரு மண்டலம் கஷ்டப்பட்டு விரதம் இருந்து,இருமுடி கட்டி,பல சோதனைகளயெல்லாம் காட்டில தாண்டி,சாமி கும்பிடப் போறவிங்க அவிங்க.அய்யப்ப சாமி பக்தர்களை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது."
"அம்மா,நீயும் அண்ணனும் வெளியே போய் உங்க கச்சேரியை வச்சிகுங்க.மொதல்ல சாமி கும்பிடர வழியப் பாருங்க"சொன்னது தங்கை.
எனக்குச் சின்ன வயதில் இருந்தே அய்யப்ப சாமிகள் என்று அழைக்கப்படும் கூட்டத்தைக் கண்டால் ஒரு பயம்.அமைதியாக வழிபாடு நடந்து கொண்டிருக்கும் எந்தக் கோவிலும் இவர்கள் நுழைந்தவுடன் யானை புகுந்த வெண்கலக் கடையாய் மாறிவிடும்.எந்தக் கோவிலுக்குப் போனாலும் இவர்கள் அய்யப்பனைத் தான் உரக்கத் தொழுவார்கள். அதிலும் யார் சப்தமாகக் கூவுவது என்று சில சமயம் போட்டிகளும் நடக்கும். அன்றும் அங்கே அது தான் நிகழ்ந்தது.
சுந்தரேஸ்வரர் சன்னதியில், சில சிறுமிகள் தேவாரத்தை இனிமையாக ஓதிக் கொண்டிருந்தனர்.சன்னதியில் இருந்தவர்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.இந்தப் பக்தர்கள் உள்ளே நுழைந்தது தான் தாமதம்.பாவம் அந்தச் சிறுமியர்.பக்தர்களது பரவசப்பிளிரல்களுக்கிடையே இந்தச் சிறுமியரின் குரல் எடுபடவில்லை.பக்த கோடிகளுக்கோ, கூட்டத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்த்ததில் சொல்லவொண்ணாப் பெருமிதமும்,பூரிப்பும்.
அந்தக் காலத்தில் சிறு குழுக்களாகக் காட்டுக்குள்ளே நெடுந்தொலைவு பயணம் செய்து தான், சாஸ்தாவின் கோவிலை அடைய முடியும்.அப்படிப் பயணப்படும் போது ஒரு குழுவில் இருப்போரிடையே பயணத்தினால் ஏற்படும் சோர்வினைப் போக்குவதற்காகவும்,உற்சாகத்தை எழுப்புவதற்காகவும் உருவாக்கப்பட்டவையே இந்த உரத்த கோஷங்கள் என்பது எனது கணிப்பு.அது மட்டுமல்லாது பல்வேறு மொழி,கலாச்சாரப் பின்னணியில் இருந்து வரும் பக்தர் குழுக்களிடையே நெடும்பயணத்தில் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கவும் இவை பயன்பட்டிருக்கலாம்.
இது தெரியாமல், இப்போது எங்கு சென்றாலும் இந்தக் கோஷங்களை எழுப்பும் பக்தர்களைப் பார்க்கும் போது எனக்கு ஐடென்டிடி கிரைசிஸ் வந்து தவிக்கும் சிறு குழந்தைகள் தான் நினைவுக்கு வருவர். இப்படிக் கூவிக் கூவித் தான் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது யார் இட்ட விதிமுறை?
இத்தோடு விட்டதா என்ன?அடுத்து மீனாட்சி அம்மன் கோவிலில் உச்சிகாலப் பூசைக்காகக் காத்திருந்த கூட்டத்திடையேயும் அவர்களது சாகசங்கள் தொடர்ந்தன.மகளிர்க்கென இருந்த க்யூவில் ஊடுறுவ முற்பட்டனர்.அய்யப்ப சாமிங்கதானே என்று அவர்களுக்கு அதில் இடமும் அளிக்கப்பட்டது.அங்கே அவர்கள் தமது தாய் மொழியில் (அதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து) அடித்த கமெண்டுகள் அவர்களது மனநிலையை அப்பட்டமாய் உணர்த்தியது. திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் தங்களது உணர்ச்சிகளை சரியான வழியில் சேனலைஸ் செய்வதற்கு இது போன்ற விரதங்களும் அதன் அசோசியேட்டட் பழக்க வழக்கங்களும் துணை புரியும். ஃபேஷனுக்காய் மாலை போடும் இன்றைய பக்தர்கள்,இது பற்றி உணர்ந்திருப்பார்கள் என எதிர்பார்ப்பது நமது தவறு தான்.
"கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா..."என்ற பழமொழி வேறு ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.கொஞ்ச நேரத்தில் கோவிலை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வெளியேறினோம்.
"அந்த அய்யப்ப சாமிக .....லிருந்து வந்திருக்காங்களாம்.சபரி மலைக்குப் போயிட்டு இந்த மாதிரி எங்கயாவது ட்ரிப் போவாங்களாம்.மதுரைக்கு இதுவரை மூணு வாட்டி வந்திருக்காங்களாம்.இன்னைக்குச் சாயங்காலம் அழகர் கோயிலுக்குப் போராங்களாம்.அவிங்க ட்ரைவர் நம்மாளுதான் சார்.அவன் தான் இதெல்லாம் சொன்னான்"
மதுரை நகரத்துக் கடை வீதிகளிலும் ஃபில்டர் கிங்ஸ் பிடிக்கும் ரமேசு சாமி,பெப்ஸி குடிக்கும் குருசாமி,பெண்கள் கூட்டத்தில் உரசிச் செல்லும் கன்னிச்சாமி என நிறைய அய்யப்ப சாமிகள் தென்பட்டார்கள். இடையிடையே சிறு சிறு கோவில்களைக் கண்ட போது அவரது பிளிரல்களும் தொடரத்தான் செய்தன.மதுரையில் மட்டுமல்ல;பழனி உட்படப் பல கோவில்களிலும் மேலே சொன்ன விஷயங்கள் ஆண்டு முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
சபரிமலைக்குப் போய்விட்டுப் பழனிக்குப் போகாமல் வீடு திரும்பக்கூடாது என்பதால் பயணச்செலவுக்குக் காசில்லாத நிலையிலும் கஷ்டப்பட்டுப் பழனிக்கு வந்த சில அய்யப்ப பக்தர்களை என் இளம் பிராயத்தில் பார்த்திருக்கிறேன்.இந்த மாதிரியான பக்தர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர்களை நெறிப்படுத்த ஒரு மாரல் போலீஸ் தேவையோ என்று தோன்றும்.
சாதி,மத பேதமில்லாத ஒரு இணக்கமான வழிபாட்டுச்சூழலுக்கு வழி செய்வதில் சபரிமலைக்கு ஒரு தனி இடமுண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை.ஆனால் அதே சமயத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பம்பா நதியின் சூழ்நிலைச் சீர்கேடு,ஆட்டு மந்தைகளாய்த் தாங்கள் செய்வதன் பொருள் உணராமல் நடந்து கொள்ளும் பக்தர்கள் என்று சபரிமலை சந்திக்கும் அபாயங்களும் இல்லாமல் இல்லை. இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்???
பின்கதைச்சுருக்கம்:
"அம்மா..அத்தை தான் ஃபோன் செஞ்சாங்க.அவங்களோட மாமனாரு,பெருந்துறையில தவறிட்டாராம்.நாளக்கிக் காலையில எரிப்பாங்க போலிருக்கு.இப்பமே வீட்டை விட்டுக் கிளம்பினாத்தான், ஏற்காடு எக்ஸ்ப்ரசைப் பிடிக்க முடியும்.அப்பத் தான் காலையில நேரத்துக்குப் போயிடலாம்"
"உக்கும்.எங்க அப்பா செத்ததுக்கு அவுங்க வீட்டில இருந்து யாராவது ஒரு ஆள் வந்திச்சா??நாம மட்டும் எதுக்கு செலவு பண்ணீட்டுப் போகணும்.அதெல்லாம் ஒண்ணும் வேணாம்"
"அப்பா நாளைக்குத் துபாய்ல இருந்து போன்ல கேட்டா என்ன சொல்ரது?"
"உங்க அண்ணன் தான் எப்படியும் இந்த வாரம் சபரிமலைக்கு மாலை போடப்போரான் தான.இன்னக்கிக் காலைலயே போட்டுட்டான்னு சொல்லீடுவோம்.மாலை போட்ட வீட்டில இருந்து இந்த மாதிரி விஷயங்களுக்கு யாரும் போகக் கூடாதுன்னு உங்க அப்பாவுக்குத் தெரியாதா என்ன??!!!"
17 August 2005
[+/-] |
அய்யப்ப பக்தர்கள் - தேவை ஒரு மாரல் போலீஸ் |
08 August 2005
[+/-] |
சிறுகதை - "முத்துசாமி சாரில் இருந்து புதுக் கிராப்பு வரை" |
சே,இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல.என் தலையில கொஞ்சம் தலையில முடி மொளச்சிடக் கூடாதே.உடனே எதோ ஒரு கோயிலுக்குக் கிளப்பீட்டுப் போயிடும்.கால் பரிச்சை லீவுல தான் கொல தெய்வம் கோயில் போய் மொட்டை போட்டுட்டு வந்தோம்.இப்போ இந்த முழுப் பரிச்சை லீவில பழனில மொட்டை போடணும்ணு சொல்றாங்க.இவங்களுக்கு என்ன?என் கூடப் படிக்கிற K.கதிர்வேல்,"கொடுக்காப்புளி"தங்கதுரை,மீனாச்சியக்கா வூட்டு ரமேசு இவிங்க எல்லாம் புதுசா வந்திருக்கிற மாயாவி பட சூர்யா மாதிரி முடி வெட்டிக்கப் போறாங்களாம்.
அப்பா,ரெண்டு வருசம் முன்னாடி எங்களை விட்டுப் போனப்போ ஆரம்பிச்சது இந்த மொட்டை போடரது.பழனியில ரெண்டு தடவை,கொடுமுடில ஒரு தடவை,குல தெய்வம் கோயில்ல ரெண்டு வாட்டின்னு தொடர்ந்துட்டே போகுது.இந்த வாட்டி லீவிலயே அடிக்கரதினால,பள்ளிக்கூடம் தொறக்கரதுக்கு முன்னாடியே முடி வந்திடும்.அப்பவாவது யாரும் என்னை மொட்டையான்னு கூப்பிடாம,"பழனிச்சாமி"ன்னு என் பேர் சொல்லியே கூப்பிடறாங்களான்னு பார்ப்போம்.
இப்படி வரிசைக்கா மொட்டை போட்றதப் பத்தி யாராவது கேட்டாலும் பழனிச்சாமிக்கு சாமி பக்தி சாஸ்தி;அவன் நேர்ந்து கிட்டதனாலத் தான் இப்படின்னு அம்மா பொய் சொல்றப்பவெல்லாம் ஊடால புகுந்து அம்மா பொய் சொல்றாங்கன்னு சொல்லத் தோணும்.ஆனா மொட்டை போட்டதுக்கு அப்புறம் அம்மா சந்தனத்தைப் பூசுரது குளுகுளுன்னு சூப்பரா இருக்கும்.இதுக்கோசரமே அடிக்கொருக்கா மொட்டை போட்டுக்கலாம்னு கூடத் தோணும்.
"பழனிக்கண்ணூ,டேய்.அங்க என்ன பண்ணீட்டு இருக்கற?"அம்மா முன்னாடி இருந்து கூப்படரது கேக்குது.அம்மா சந்தோசமா இருந்தா இப்படித்தான் பழனிக்கண்ணூன்னு கூப்புடும்.
"அம்மா.இதோ வந்திட்டேன்."முன்னாடி ரூமுக்குப் போன புதுசா ஒரு ஆள்,அம்மா கூடப் பேசிட்டு இருக்காரு.
"பழனிச்சாமிக்கி என்ன அடையாளம் தெரியலை போலிருக்கு.அதான் இப்படி முழிக்கிறாப்பல.நான் தான் முத்துசாமி.உங்க அய்யனோட பங்காளி. அட,உங்கூட ஒண்ணாம்புப் படிச்ச கவிதாவோட அப்பா. ".
அட ஆமாம்.எங்க அப்பா இருந்தப்போ எங்க வீட்டுக்கு வந்து போயிட்டு இருந்தக் கொஞ்சப் பேர்த்தில இவரும் ஒருத்தரு.
"பழனி,நீ போய் சாமினாதன் கடையில அஞ்சு வடையும் இந்த தூக்கு போசியில மூணு காப்பியும் வாங்கியா"
அது ஏனோ எங்க அப்பா இருந்தப்பவும் சரி இப்பவும் சரி எங்க அம்மா வூட்டிலிருந்தோ எங்க அப்பா வீட்டிலிருந்தோ எங்க வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்க.எங்க அம்மாவும் என்னைய எந்த சொந்தக்காரங்க வீட்டுக்கும் கூட்டிட்டுப் போனதில்லை.ஆனா பக்கத்து வீட்டுக் கணேசண்ணன் வீட்டுக்கு எப்பப் பார்த்தாலும் யாரொ ஒரு சொந்தக்காரர் வந்து போயிட்டு இருப்பாரு.ஒரு வாட்டி இதப்பத்திக் கேட்டதுக்கு அம்மா கிட்ட நல்லா மாத்து வாங்கிக் கட்டீட்டது தான் மிச்சம்.
கணேசண்ணன் தான் சொன்னாரு இந்தக் காதல் படத்துல வர்ர மாதிரி எங்க அப்பாவும்,அம்மாவும் லவ் பண்ணி அப்பரமா அவங்க வீட்டுக்குத் தெரியாம திருட்டுக் கல்யாணம் செஞ்சிட்டாங்களாம். இதனாலத்தான் எங்க வீட்டுக்கு எந்தத் தாத்தாவும்,பாட்டியும் வாரதில்லையாம். இதெல்லாஞ்சரி,இந்தப் பிரச்சினை நடந்தப்போ நான் எங்கண்ணா போயிருந்தேன்னு கேட்டதுக்கு தலையில ஒரு தட்டுத் தட்டீட்டு சத்தமாச் சிரிச்சாரு கணேசண்ணன்.இது ஏன்னே தெரியல?அம்மா எப்பாவாச்சி சந்தோசமா இருக்கறப்போ இதப் பத்திக் கேக்கணும்.
டுர்ர்ரு....டுர்ர்ரு...அய்யய்யோ..வண்டிய வெரசலா ஓட்டிட்டு வந்ததில சாமினாதன் கடையத் தாண்டிப் போயிட்டேன்.
விரூம்..
இப்போ ரிவர்ஸ் எடுத்தாச்சி.ஹைய்யா..சாமினாதன் கடையும் வந்தாச்சு.
"அண்ணா,அம்மா அஞ்சு வடையும்,இந்தத் தூக்கு போசியில மூணு காப்பியும் வாங்கியாரச் சொன்னாங்க"
"என்ன பழனிச்சாமி.லீவு வுட்டு பத்து நாளு ஆகப்போகுது.இன்னும் உன் தலைக்கு மொட்டை போடாம இருக்கர.அது சரி,வீட்டில யாராவது ஒரம்பறையா?வடை,காப்பி எல்லாம் பார்த்தா வந்திருக்கரது பெரிய டிக்கட்னு தான் நினைக்கிரேன்.ஒரம்பரை ஆம்பளையா இல்ல பொம்பளையா?"இது டீ மாஸ்டர்.
இந்தாள் கூடவெல்லாம் பேசக்கூடாதுன்னு அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்ததனால தலையை ஆட்டிடு வடபொட்டலத்தயும்,தூக்குபோசியையும் வாங்கிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
டுர்ர்..டுர்ர்..பீம்...பீம்...டுர்ர்ர்ர்ர்..
"என்ன பண்றது தனம். நான் குவைத் போன ஒரே மாசத்தில இந்தத் தகவல் வந்திச்சு.போன வாரம் தான் திரும்பி வந்தேன்.ஓடிப் போனவன் போயிட்டான்.அவனையே நினைச்சிட்டு இருந்தா பழனிச்சாமி கதியை நினைச்சிப் பாரு.ஏதோ நீ பால்வாடி ஆயாவா இருக்கரதால அரைக்கஞ்சி சாப்பிடமுடியுது.இதுவும் இல்லாம இருந்திருந்தா என்ன செஞ்சிருக்க முடியும்.உன்னோட ட்ரான்ஸ்பருக்கு ஏற்பாடு செஞ்சிடறேன்.கொஞ்ச நாள்ல வந்திடும்.அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ".
"ஹூம்.நீங்க தகிரியம் கொடுக்கற மாதிரி ஆதரவாப் பேசக்கூட ஆள் இங்கில்லை. எங்க ரெண்டு வீடுகள்ளயும் தான் தண்ணியத் தெளிச்சி விட்டுட்டாங்களே. சொந்த ஊர்னா யாராவது ஒருத்தராவது சப்போர்ட்டுக்கு வருவாங்க.பொழைக்க வந்த ஊர்தானே.ஆம்பளையில்லாத வூடுன்னு ஊர்ல கண்ட நாயும் இங்க ஒதுங்கப் பாக்குது.ஒரு கல்யாணம்,காட்ச்சின்னு போனாக்கூட எல்லாரும் சாடை பேசராங்க.இவ்வளவு ஏன் ஒரு தடைவை பழனிச்சாமிய முடி வெட்டரதுக்குக் கூட்டிடுப் போய் திரும்பி வாரதுக்குள்ளே உசிரு போய் உசுரு வந்திடுச்சு.கேக்க ஆளில்லைங்கற தெனாவெட்டில கையப் புடுச்சிட்டான் கட்டிங் பண்ற ஆறுமுகம்.
அதிலிருந்து பழனிக்கு மூணு மாசத்துக்கொருக்கா மொட்டை தான்.நானும் ஏதாச்சி ஒரு சாமிக்கி விரதம் புடிக்க ஆரம்பிச்சிடுவேன்.இந்தக் வெள்ளப் பொடவைய விடக் காவியும்,மஞ்சளும் தான் என்னைக் காப்பாத்துது.ஹூம்.நான் வாழ்ந்து முடிஞ்ச ஆளு.எனக்கு இதெல்லாம் பழகிப்போச்சு.ஆனால் இவந்தான் ஆவூன்னா மொட்டையான்னு அழுதிட்டே இருக்கான்.வயசுப் பையன் வெத வெதமாக் கிராப்பு வைக்க வுடாமே நானும் ஒவ்வொரு கோயிலுக்காக் கூட்டிட்டுப் போய் மொட்டை போட்டிட்டு இருக்கேன்."
"அட.தனம் என்னாய்ப் போயிருச்சின்னு அழுகறே.நான் இருக்கேன். அப்பறம் ஒரு முக்கியமான விசயம்.மகேஸ்வரிக்கு இதெல்லாம் தெரியாது.தெரியாம இருக்கரதே நல்லதுண்ணு நினைக்கிறேன்.நீ என்ன சொல்ற?"
"இனிமேப்பட்டு நான் சொல்ரதுக்கு என்ன இருக்கு.விதி விட்ட வழின்னு போக வேண்டியது தான். அடக் கைய எல்லாம் புடிச்சிட்டு விடுங்க.பழனி வார சத்தம் கேக்குது"
எனக்குக் கால் பரிச்சை லீவு விட்டாச்சு.புது ஸ்கூல்ல புதுசா நெறையக் கூட்டாளிங்க கெடச்சிருக்காங்க.நாளைக்கு என்னை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போரென்னு முந்தா நேத்து வந்த முத்துசாமி சார் சொன்னாரு.ஆமாம்,இனிமேப்பட்டு அவர சார்னு தான் கூப்பிடணும்னு அம்மா சொல்லியிருக்காங்க.
இப்பெல்லாம் அவரும் வாரத்துக்கு ரெண்டு மூணு வாட்டி எங்க புது வீட்டுக்கு வந்திடராறு.அன்னைக்கெல்லாம் எங்க வீட்டுல நல்ல சாப்பாடு தான்.அவர் வந்தவுடனே நானும் அம்மா சொன்னா மாதிரி விளையாடப் போயிருவேன்.எங்க வீட்டுக்கு TV கூட வந்திடுச்சு.அதுவும் துபாய் TV. புது ஊர்ல அம்மாவுக்கு நெறய ஃபிரண்ட்ஸ் கெடச்சிட்டாங்க.முன்ன மாதிரி அம்மா அடிக்கடி எந்தக் கோயிலுக்கும் வேண்டிக்கரதில்லை.எனக்கும் மொட்டை போடறதில்லை.
ஆனா எனக்கு தான் இந்த எதுவுமே பிடிக்கலை. முத்துசாமி சார்ல இருந்து புதுசா வச்சிருக்கற ஸ்டைலான கிராப்பு வரைக்கும்.
---- சுதர்சன்.கோபால்
பி.கு: இக்கதை முகமூடி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை. போட்டியின் நடுவர் மாலனின் கருத்துகள் பின்வருமாறு:
"இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்துசாமி சாரிலிருந்து... கதை ஒரு நுட்பமான கதை. ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை சற்றும் மிகையில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. அடிக்கடி மொட்டையடித்துக் கொள்ளும் நிர்பந்த்தத்திற்குள்ளாகிறான் பழனிச்சாமி. அந்த மொட்டைக்குப் பின் ஒரு காரணம் இருக்கிறது. அது எவருக்கும் மகிழ்ச்சிதரும் காரணமல்ல. நிர்கதியான பெண்களை வெள்ளைப் புடவையை விட மஞ்சளும் காவியும்தான் காக்கிறது என்பதில் ஓர் உரத்து முழக்கப்படாத சமூக அவலம் இருக்கிறது. அம்மாவை அம்மாவாக, ஒரு புனிதப் பசுவாகப் பார்க்கிற மனோபாவம்தான் நம்மிடையே உருவாக்கப்பட்டிருக்கிறது. அவளை ஒரு பெண்ணாகவும் பார்ப்பதற்கு ஒரு பேருள்ளம் வேண்டும். தி.ஜானகிராமனுக்கு இருந்த அத்தகைய உள்ளத்தை இந்தக் கதாசிரியரிடமும் பார்க்க முடிகிறது. சமூகம் வகுத்துள்ள ஒழுக்கவிதிகளை வலியுறுத்தாமல் பெண்ணைப் பெண்ணாகப் பார்க்க முற்படும் அதே வேளையில் அதை முற்றிலும் அங்கீகரிக்க முடியாத சங்கடமும் கடைசியில் வெளிப்படுகிறது.யதார்த்தம், வ்டிவமைதி இவை கருதிக் கூடக் கதை இந்த விதமாக முடிந்திருக்கலாம்."
03 August 2005
[+/-] |
எளிமையாக இருப்பது ஒரு குற்றமா? |
"நெசமாவா சொல்ர??என்னப்பா இது,நீ வாங்கிற சம்பளத்துக்கு ஒரு செல் போன் கூட வாங்க முடியலையா உன்னால?அடப்போப்பா"என்ற ஒரு சொந்தக்காரரின் கேள்விக்கு என்ன பதில் தருவது?
"இன்னும் சைக்கிள்லயும் பஸ்ஸிலயுமா ஆஃபீஸ் போய்ட்டு இருக்க?சீக்கிரமா ஒரு டூ வீலர் வாங்கிக்கப்பா.என்ன தான் ஆஃபீஸ் பக்கம்னாலும் வண்டில போய் இறங்கினாத் தான ஒரு கெத்தாய் இருக்கும்.சைக்கிள் எல்லாம் அந்தக் காலத்து வண்டி"என்ற அப்பாவின் நண்பருக்கு எப்படிப் புரிய வைப்பது.
இங்கே நிறையப் பேருக்கு எளிமைக்கும்,ஏழ்மைக்கும் வித்தியாசமே தெரிவதில்லை.கடன் வாங்கியாவது பகட்டாய்த் தோற்றமளிப்பது தவறில்லை நம்ம ஊரில்.ஆனால் எளிமையாய் இருக்க முயற்சிப்பவருக்குக் கிடைக்கும் பட்டமோ கஞ்ச மகாப் பிரபு.
"என்கிட்ட கார் கிடையாது.அதனால ஒரு விழாவுக்கு நான் ஆட்டோவில போயிருந்தேன்.நான் ஆட்டோவில் இருந்து இறங்கியதைப் பார்த்த விழா அமைப்பாளர் ஓடி வந்து,"என்ன சார் இது?சொல்லியிருந்தா நானே வீட்டுக்கு வண்டி அனுப்பிச்சிருப்பேனே.ரஜினி,ஸ்ரீதேவியை எல்லாம் வச்சி படம் எடுத்த டைரக்டர் நீங்க.ஒரு கார் கூட வச்சிக்காம இருக்கீங்களே?"என்று கேட்டார்.கார் இல்லாமல் இருப்பது ஒரு குற்றமா?எளிமையாய் இருப்பதும் ஒரு தவறா"என்று உதிரிப்பூக்கள்-மகேந்திரன் அங்கலாய்த்தது நினைவுக்கு வருகிறது.
எளிமையின் இலக்கணமாய்த் திகழ்ந்த கர்மவீரர் சாதிக்காத விஷயங்களையா தற்போது ஸ்கார்ப்பியோவிலும்,குவாலிசிலும் பறக்கும் கரை வேட்டிகள் சாதித்து விட்டார்கள்.எளிமையாய் இருப்பது அப்படி ஒன்றும் கடினமான செயலும் அல்ல.ஒவ்வொருவரும் தங்கள் நிலையினை உணர்ந்து இயல்பாய் இருந்தாலே போதும்.ஒரு மனிதனுக்கு எப்போதெல்லாம் தனது நிலையின்று உயர்வு வருகிறதோ(பதவி,பொருள்),அப்போதெல்லாம் அடி மனதில் புதைத்து வைக்கப்பட்ட மிருக எண்ணங்களான கோபம்,அடக்கி ஆள நினைத்தல்,எள்ளல் போன்றவை வெளி வர முயற்சி செய்யும்.இவற்றையும் அடக்கி ஆண்டால் மட்டுமே ஒருவர் அடைந்த உயர்வு முழுமை பெரும்.
என் அப்பாவின் நண்பர் ஒருவர்,மிகவும் எளிமையானவர்.எல்லார்க்கும் உதவும் மனது படைத்தவர்.எங்கள் குடியிருப்புப் பகுதியில் பொதுக் குடிநீர் வழங்கல்,சாலை செப்பனிடல்,சாலையோர மரங்கள் பராமரிப்பு போன்ற பொதுக் காரியங்களில் தன்னார்வத்துடன் கலந்து வந்தார்.குடி தண்ணீர்ப் பிரச்சினைக்காக எப்போது வேண்டுமானாலும் அவரது கதவைத் தட்டலாம்.பொதுக் காரியங்கள் அவரது பெரும்பான்மையான நேரத்தினை விழுங்கிய போதும்,முகம் சுளிக்காது பங்களிப்புத் தருவார்.
அவரது நண்பர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க,வார்டு தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்கினார்.கடுமையான போட்டிகளுக்குப் பின் கரை வேட்டிகளை வீழ்த்திவிட்டு வெற்றியும் பெற்றார்.அவரது பதவிக்காலத்தில் முதல் இரு வருடங்கள் வழக்கம் போல கால்களைத் தரையில் ஊன்றித்தான் நடந்து சென்றார்.அவரது பெருகி வரும் செல்வாக்கினையும்,அவர் சார்ந்த சமூகத்தின் சாதி ஓட்டுகளையும் கணக்குப் போட்டு ஒரு முன்னேற்றக் கழகம் அவரை நல்ல விலைக்கு வாங்கியது.அவருக்கு மாவட்ட அளவில் ஒரு நல்ல பதவியும் கொடுக்கப்பட்டது.TVS-50, மாருதி ஆம்னியாக வளர்சிதை மாற்றம் அடைந்தது."நாய்கள் சாக்கிரதை"என்ற அறிவிப்போடு ஒரு காவலாளி அவர் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டான்.
அவரை வார்டுப் பிரச்சினைக்கு அணுகுவதே கடினமாய் இருந்தது.எளிமையின் சின்னமாய் இருந்தவர் ஒரே நாளில் தலைகீழாக மாறினார்.ஆனால் இதற்கு விலையாக அவர் கொடுத்த பல நட்புக்கள் மற்றும் நேசமனங்களின் இழப்பினை அவர் அப்போது அறிந்திருக்க வழியில்லை.கழகத்தில் யாரோ அவரது விரோதி போட்டுக் கொடுக்க,சிறகுகள் வெட்டப்பட்டன.கெத்தாயிருக்கும் என்று சொல்லி வாங்கப்பட்ட காருக்குப் பெட்ரோல் வாங்க வழியின்றி விற்றார்.தனது வீட்டையும் காலி செய்து விட்டு எங்கள் குடியிருப்புப் பகுதியினை விட்டு விட்டுச் சென்று விட்டார்.
இவ்வளவு களேபரங்களுக்கிடையே உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.இந்த முறை எங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் போட்டியிடப்போவதாகச் சொல்லி வருகிறார்.எங்கோ தெருவில் ஒரு பிரச்சார ஊர்தி செல்கிறது.அதிலிருந்து மெல்லியதாய்க் கசிந்து கொண்டே செல்கிறது கீழ் வரும் பாடல்.
"பூமியில் இருப்பதும்,வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே"
02 August 2005
[+/-] |
நான் ரெடி.நீங்க ரெடியா??? |
எனது முந்தைய பதிவுக்குக்(நான் யார்? )கிடைத்த அமோக ஆதரவினை முன்னிட்டு(எத்தனை பேரு வந்து பார்த்தாங்கன்னு மனசாட்சி கேக்கறது சத்தியமா என் காதில விழவே இல்லை),இதோ மற்றுமொரு வினாடி-வினா பதிவு.நீங்க கொடுக்கும் ஆதரவைப் பொறுத்து இந்தப் பகுதியை நான் தொடரலாம்னு நினைச்சிட்டு இருக்கேன்.
இதோ இன்றைய கேள்விகள்.
1.பிரபல இந்திப் பாடகர் கிஷோர்குமார் மாடலிங் செய்த ஒரெ பொருள் எது?
2.டில்பெர்ட் நகைச்சுவைத் துணுக்குகளில் கொடூரமாகச் சித்தரிக்கப்படும் மனித வள மேம்பாட்டு(HR) இயக்குனரின் பெயர் என்ன?
3.சுமார் 550 நாட்களுக்கு மேல் நீடித்த இந்தியாவின் மிக நீளமான ஸ்ட்ரைக்கினை முன்னின்று நடத்தியவர் யார்?
4."லக்ஸ்:சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்" என்று விளம்பரங்களில் கூவிய முதல் இந்திய நடிகை யார்?
5.அமெரிக்கா எந்த நாட்டிடம் இருந்து வர்ஜீனியத் தீவுகளை வாங்கியது?
6.ஆசியாவில் இந்த நாட்டில் மட்டும் தான் வெளியிடப்படும் கரன்ஸி நோட்டுகள் அனைத்தும் ஒன்பதால் வகுபடக் கூடியவைகளாக இருக்கும்.நான் குறிப்பிடும் நாடு எது?
7. #700,19-வது தெரு
NW, வாஷிங்டன்(D.C)20431
மேலே சொன்ன முகவரியின் சிறப்பம்சம் என்ன?
8.மேடம் துஸ்ஸாடின் காட்சியகத்தில் பொம்மையாக வைக்கப்பட்ட முதல் சூப்பர் மாடல் யார்?
01 August 2005
[+/-] |
நான் யார்? நான் யார்? நான் யார்? |
1.நான் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில் ஒரு அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறேன்.அனைவரும் மறந்த ஒரு விஷயம் நான் பாம்பே டையிங்-குக்கு மாடலிங் செய்தது தான்.நான் ஒரு பெண் என்பதையே சில நேரங்களில் மறந்து விடுகிறேன்.அமலா அக்கினேனியும் நானும் ஒரு விஷயத்தில் ஒரே நேர் கோட்டில் வருகிறோம்.நான் யார்?
2.ஏப்ரல் 1999 - அப்போது பிரபல மாடலாக இருந்த சரிதாவைக் கை பிடிக்க ட்ராக்சூட் அணிந்து கொண்டு, லான்ட்க்ரூஸரில் சர்ச்சிற்குச் சென்றது இன்னமும் நினைவில் இருக்கிறது.நான் நடத்தும் உணவகத்தின் பெயர் "கர்ரி லீவ்ஸ்".எனது பழைய பொழுதுபோக்கு கிரிக்கெட் விளையாடுவது தான்.இப்போது சொல்லுங்கள்,நான் யார்?
3.கர்னாடகாவைச் சார்ந்த நான் ஒரு சிறந்த பேங்கர் மற்றும் நிர்வாகி என்று இன்னமும் மக்கள் என்னை நினைவில் வைத்து இருக்கிறார்கள்.அது மட்டும் அல்ல,நான் மத்திய அரசில் ரயில்வே அமைச்சராகவும்,தொழில் துறை மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சராகவும் பணி புரிந்து இருக்கிறேன்.எனது நினைவாக ஒரு மேலாண்மைக் கல்விக்கூடம் பெயரிடப்பட்டுள்ளது.நான் யார்?
4.எனது தாத்தா "பர்மாவின் அரிசி அரசு"(The Rice king of Barma) என்று அழைக்கப்பட்டவர்.எனது தந்தையோ பாகிஸ்தானுக்கு வரும்படி அழைத்த ஜின்னாவின் வேண்டுகோளை நிராகரித்தவர்.நான் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மின்னியலில் பட்டம் பெற்றேன்.குடும்ப வியாபரத்தில் நுழைந்த நான் என் சிந்தனைகளைத் திறம்படச் செலுத்தி வெற்றி கண்டு வருகிறேன்.நான் யார்?
5.லண்டன் மிருகக் காட்சி சாலை இழுத்து மூடப்படுவதை நிறுத்த 1 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் கொடுத்த NRI நான்.இப்போது எனது மகளின் பெயரிடப்பட்டுள்ள அந்த ஜூவில் ஒவ்வொரு வருடமும் நான் பார்ட்டி தருவது வழக்கம்.மற்றவர்களால் வள்ளல் எனவும் அழைக்கப்படும் நான் யார்?