மும்பையில் கொடி கட்டிப் பறந்துகொண்டிருக்கும் மதிய டேப்லாய்டு பத்திரிக்கையான "மிட் டே" நேற்று முதல் பெங்களூரு பதிப்பைத் துவங்கி இருக்கிறது.நகரின் பல்வேறு இடங்களில் பார்த்த சுவாரசியமான விளம்பரப் பலகைகள் மூலமே இந்தத் தகவலை அறிய முடிந்தது.கடைக்குச் சென்று கேட்ட போது "ஸ்டாக் இல்லா குரு" என்ற கடைக்காரரிடம் இன்றைய பதிப்புக்கு முன்பதிவு செய்து வந்துள்ளேன்.பெங்களூரைப் பொறுத்தவரை மாலை நேரப் பத்திரிக்கை என்னும் தளம் இன்னமும் unexplored ஆக இருப்பதாலும்,இதன் கண்டெண்ட்(obviously junk) பெங்களூரின் பையிங் பாப்புலேஷனான IT,BPO மக்களுக்குப் பிடித்தமான ஒன்று என்பதாலும் இந்தப் பத்திரிக்கை ஒரு பெரிய சுற்று வரும் என தீர்க்கமாகக் கூறலாம்.ஆனானப்பட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கே மும்பையில் தண்ணி காட்டிய மிட் டேயின் வரவு நல்வரவாகுக.
*************************************************************************************
இந்த சீசன் கோலிவுட்டில் நடனம் சொல்லித்தந்தவர்கள்,திரைப்பட இயக்குனர்களாக உருவெடுக்கும் சீசன் போல.பிரபுதேவா,ராகவேந்திரா லாரன்ஸ் வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் ராஜூ சுந்தரம்.பிரபுதேவாவும்,ராகவேந்திரா லாரன்ஸும் தெலுங்கில் தங்களது இயக்குனர் பணியை ஏற்கனவே துவங்கியிருந்த போதும் ராஜூ சுந்தரம் இப்போது தான் களத்தில் குதிக்கிறார்.
புதிய களம்.புதிய பொறுப்புகள்...ஆல் த பெஸ்ட் மக்களே...
*************************************************************************************
தற்போது பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் ஜெட் ஏர்வேஸ்-ஏர் சஹாரா இணைவதில் ஏற்பட்ட பிரச்சினையின் பின்புலத்தில் விரைவில் உபி.யில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலே காரணம் போலத் தெரிகிறது.அமர்சிங்குக்கும்,ஏர்-சஹாரா குழுமத்தின் சுப்ரதோ ராயிக்குமிடையேயான நட்பு, முலாயம்,அமர்சிங் வகையறாக்களுக்கும் மேடம் ஜீ முகாமுக்கும் இருந்து வந்த சண்டை போன்ற தகவல்களை வைத்துப் பார்க்கும் போது இது உண்மையாய் இருப்பதாகவே தொன்றுகிறது.
*************************************************************************************
"கபீ அல்விதா நா கெஹ்னா" என்ற விரைவில் வெளிவரவிருக்கும் தெரை ஓவியத்தின் மூலம் தன்னுடைய ஐந்தாண்டுகால ஹிபர்னேஷனில் இருந்து வெளி வருகிறார் கரண்ஜோஹர்.என்.ஆர்.ஐ. மக்களைத் திருப்தி செய்யும் வகையில் அமெரிக்காவினைக் கதைக்களனாகக் கொண்ட இப்படத்தில் அமிதாப்,ஷாரூக், அபிஷேக்,ராணி முகர்ஜி,ப்ரீத்தி ஜிந்தா என்னும் ஒரு பெரிய கும்பலே தெறம காட்டியிருக்கிறார்கள்.கரணோட பேட்டியைப் படிச்சா இந்தப் படம் பார்க்கும் போது கண்டிப்பா ரெண்டு கர்ச்சீப் பத்தாதுன்னு தோணுது.
30 June 2006
[+/-] |
குட்டீஸ் |
22 June 2006
[+/-] |
பெங்களூரில் வலைப்பதிவர்கள் சந்திப்பு |
வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதி பெங்களூரில் ஒரு வலைப்பதிவர்கள் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.நடைபெறும் இடம்,நேரம் முதலிய விவரங்கள் ஆலோசனையில் இருப்பதால் பின்னர் அறிவிக்கப்படும்.
இதில் பங்கு கொள்ள விருப்பமுள்ளவர்கள் iyappan_k@yahoo.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10 June 2006
[+/-] |
கனா காணும் காலங்கள் - தேன்கூடு போட்டி |
"ஏம்பா,நீ இன்னைக்கு கணக்கு ட்யூஷன் போகலியா?"
"இல்லையே அங்கிள்.இப்போ தான் ட்யூஷன் விட்டு வந்தேன்.கல்பனாவுக்கு ஒடம்புக்கு சரியிலீங்களா?இன்னைக்கு ட்யூஷனுக்கு வரலை.மாஸ்டர் கூடக் கேட்டாரு."
"என்னது ட்யூஷனுக்கு வரலையா??? என்ன தம்பி சொல்ரே? ட்யூஷன்ல இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகும்னு சொல்லீட்டுக் காலைலயே கெளம்பீட்டாளே.அப்படி ட்யூஷனுக்கு வாராம எங்க போயிருப்பா?ஒண்ணுமே புரியலையே.எதுக்கும் போய் அவ பிரண்ட் சில்வியா வீட்டுக்குப் போய் பார்க்கரேன்."
அது சரி...நீங்கள் கல்பனாவைப் பார்த்திருக்கிறீர்களா?
வலது பக்கத் தெற்றுப்பல் மற்றும் சிரித்தால் விழும் கன்னக்குழிகள் கொண்டு எங்கள் பள்ளியை ஆண்டு வந்த தேவதை. எங்கள் பத்தாம் வகுப்பு "ஆ" பிரிவில் எப்போதும் முதல் மூன்று ராங்குகளுக்குள் வாங்கி வந்த கல்பனா, அரையாண்டு விடுமுறையின் போது பஸ் கண்டெக்டருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்துகொண்டாள்.
"அவ எங்களுக்குப் பொண்ணே இல்லை.அவ வந்தாலும் சேர்த்துக்க மாட்டோம்.நாங்களும் போய்ப் பார்க்க மாட்டோம்." என்று இறுகிக் கிடந்த பெற்றோர்களின் சகிதம் கல்பனாவைக் குழந்தைகளுடன் போன வாரம் சாரதாம்பாள் கோயிலில் பார்த்தேன்.ஆள் பருத்துப் போய் கண்ணில் கருவளையம் விழுந்து....சே..அது கல்பனாதான் என்று நம்பவே முடியவேயில்லை..தேவதைகளுக்கும் வயதாகும் போல.
பள்ளியில் படிக்கும் போது "காதல்" குறித்து ஏற்பட்ட முதல் அனுபவம் அது. இரண்டாவது அனுபவம் சற்றே விநோதமானது.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு நெருங்கிய நண்பன் ஒருவன்.என் வகுப்பில் படித்த ஒரு பெண்ணுக்கும்,அவனுக்கும் தெய்வீகக் காதல்."வேண்டாம்பா.ப்ராப்ளம் வரும்...அந்தப் பொண்ணு 2 வருஷம் இருந்து மெடிக்கல் சீட்டுக்கு ட்ரை பண்ணி இம்ப்ரூவ்மெண்ட் முடிச்சுட்டு இப்போ இங்க வந்திருக்கு.உன்னை விட வயசில பெரியவங்க.இதெல்லாம் நமக்கெதுக்கு...?"நான் சொன்ன மறுநாளில் இருந்து அவன் என்னிடம் இருந்த நட்பைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கத் துவங்கினான்.
சில மாதங்கள் கழித்து அவன் என்னிடம் வந்து "ஒரு மேட்டர் பேசணும்.எனக்குக் கொஞ்சம் ப்ராப்ளம்...." என்றான்.என் வகுப்புத் தோழி அவளுக்கும் என் நண்பனுக்கும் ஏற்பட்ட காதலை வீட்டில் சொல்லியிருக்கிறாள்.அவள் மாமா ஒருத்தர் பையன் யாரென்று பார்க்கக் கல்லூரிக்கே வந்து விட்டார்.வந்தது மட்டுமல்ல,என் நண்பனைச் சந்தித்து,"தம்பி,உங்க வீட்டில பேசறோம்.கல்யாணத்தை வேண்டுமானால் படிப்பு முடிந்ததும் வச்சிக்கலாம்" என்று சொல்லியிருக்கிறார்.என் நண்பனின் உடலில் இருந்த அத்தனை உறுப்புகளும் வாய் வழியே வந்து விட்டது.
"ஐயோ..எங்க வீட்டில இவர் போய் பேசினால் என்ன நடக்கும் ! ப்ளீஸ் மச்சி...டூ சம்திங்.டெல் ஹெர் டு ஃபர்கெட் மீ..."அழாத குறையாகச் சொன்னான்.
"நான் எத்தனை வருஷமானாலும் காத்திருக்கேன்..." என்றது அந்த நங்கை.
"வேண்டாம்மா...நீ இப்பவே எங்களை விட வயசில பெரிசு.உன் வீட்டில சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.இவனை விட்டிடு..."என்று ஒரு வழியாகப் பேசி முடித்தோம். கல்லூரியில் கேண்டீனில் வைத்து முதல் ஆண்டு நண்பனை மாப்பிள்ளை பார்க்கப்பட்ட அனுபவம் அனேகமாக உங்களில் யாருக்கும் ஏற்பட்டிருக்காது என நினைக்கிறேன்.சரி அதனால் என்ன?யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கித் தேற வேண்டிய அவன் வேண்டுமட்டும் கப்புகள் வாங்கி அவதியுற்றது தான்.
பெரும் கோ-கோ வீரனாக வருவான் என எதிர்பார்க்கப்பட்டவனும் காதலுக்காக வீட்டை விட்டு ஓடிப்போய் தற்போது மெஸ் வைத்து நடத்திவருபவனுமான எனது பள்ளிக்கூட சீனியர் சரவணன்,ஆண்டுக்கொன்றாய் ஆடைகளை மாற்றுவதைப் போல காதலர்களை மாற்றிப் பின் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையைக் கை பிடித்து இரு குழந்தைகளுக்குத் தாயாகியுள்ள அர்ச்சனா,சொத்துக்காகக் காதலித்துத் தற்போது மாமனார் வீட்டில் (சுயமரியாதையை இழந்து)ஏவலாளாயுள்ள ஒரு தோழன் என் சங்கிலித் தொடர் போலே நீளும் நான் கண்ட அடலசண்ட் காதல்களின் எண்ணிக்கை.
வளர்சிதை மாற்றப் பருவத்துக் காதலை அடிப்படையாக வைத்து வந்த "அலைகள் ஓய்வதில்லை","வைகாசி பொறந்தாச்சு" போன்ற படங்கள் எவ்வ்ளவு பேரைப் பாதித்ததோ...அனுபவபூர்வமாக நான் கண்டு,பழகிய,வியந்த பல மனிதர்களை(மேலே சொன்னது போக) நிறையப் பாதித்தது.
அது சரி காதல் என்பது என்ன?
காமம் என்பது ஆபாசமான சொல் என்று கருதி இலக்கியவாதிகள் கண்டுபிடித்த இடக்கரடக்கல் தான் காதல்."செத்துப் போயிட்டர்" என்பதை "சிவலோக பதவியடைந்தார்" என்பது மாதிரிதான் காமம் காதலானது.காதலுக்கென்றே தனி அகராதி உண்டு.அதன் பொருள் ஆளுக்கு ஆள் மாறுபடும்.
அடிப்பம்பில் தண்ணியடிக்கக் கஷ்டப்படும் போது "ஐயோ..பாவம்" என்று ஒரு குடம் அடித்துக் கொடுத்தவனும்,வழக்கமாய்ச் செல்லும் பேருந்தில் சில்லறையின்றித் தவிக்கும் போது "உங்களுக்கும் சேர்த்து டிக்கட் வாங்கிட்டேன்" என்று உதவிக்குரல் கொடுத்தவளும் அதைக் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுவதுண்டு.தன்னை உணரும் பருவத்தில்,இன்னொருவரால் வித்தியாசமான பார்வையில் கவனிக்கப்படுகிறோம் எனும் போது,மனதில் ஏற்படும் குறுகுறுப்பைக் காதல் என்று கற்பிக்கிறது வயது.
எனக்குத் தெரிந்த வரையில் பெரும்பாலும் வளர்சிதை மாற்றத்தில் ஒருவரது வீழ்ச்சிக்குப் பெரிதும் காரணமாய் இருப்பது பாலினக்கவர்ச்சியைக் காதல் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தான்.பத்தாவது வரை ஒழுங்காய்ப் படித்தவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் காதல் வலையில் சிக்கிய கதை ஏராளம்.என்னையும் சேர்த்துத் தான்.
வளர்சிதை மாற்றப் பருவ காலத்துக் காதல் பற்றிய எனது அனுபவங்கள்,அதன் மூலமான புரிதல்கள் பெரும்பாலும் கசப்பாகவே இருந்ததால் கல்லூரிக்காலங்களில் உள்ளுக்குள் ஒரு வித எச்சரிக்கை ஒலித்துக் கொண்டே இருந்தது.படித்து முடித்து வேலையில் சேர்ந்த பின்னர் கொல்லுவதற்கு நிறைய மணித்துளிகள் இருந்தன.பல சந்தர்ப்பங்களில்,"நாம் பொய்யோ..எதன் பெயராலோ இயற்கை உணர்வுகளுக்கு மாறுபட்டு வாழ்வதும் ஒரு சாடிஸம் தானோ" என்று ஆன்ம விசாரணை செய்து கொண்ட நிமிடங்கள் உண்டு.ஆனால் அடலசன்ட் காதல்கள் பற்றிய எனது கணிப்பு என்றுமே பொய்த்ததில்லை.வாழ்க்கையின் சில வருடங்களைக் கடந்த பின்னர் "எதையோ இழந்துவிட்டோமோ?" என்று மனம் கேட்டது.ஆனால் எதுவுமே இழக்கவில்லை என்றே என் புத்தி எனக்குச் சொன்னது.இந்த ரஸவாதம் நடக்காத மனம் ஏது என்று அப்புறப்படுத்தி விடுவேன்.
அடலசண்ட் காதல் கொடுத்த வலியால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தம்பிமார்களுக்கு,"சரி போனது போகட்டும்.காதலை மட்டுமல்ல,உங்களின் அத்தனை உறவுகளையும் இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.வாழப் பிடிப்பதற்கு அதுதான் ஆதாரம்.காயங்கள்,இழப்புகள்,பிரிவுகள்.....யாருக்கு இல்லையென்று சொல்லுங்கள்? பூக்கள் எவ்வளவு மலர்ந்து உதிர்ந்தாலும் வாசம் உண்டு.மேகங்கள் எத்தனை கடந்து போனாலும் வானம் உண்டு.வாழ்க்கையும் தானே...."
"எல்லாம் சரிதாங்க..சொல்றதுக்கும் கேக்கரதுக்கும் இது எல்லாம் ரொம்ப நல்லாத் தான் இருக்கு.புதுசாப் பொண் கொழந்தை பொறக்கிற உங்க சகாக்கள் கிட்ட எல்லாம் ஏன் அனிதான்னு பேர் வைக்க சொல்லி சஜஸ்ட் செய்யறீங்க???உங்க அடுத்த கதையோட நாயகி பேரு கூட அனிதாவாமே??இன்னா மேட்டர் அது.???.." என்று நிறுத்தி என்னை கேள்வி கேட்கத் தோன்றுகிறவர்களுக்கு மட்டும்
" நீங்க காதலிச்சிட்டு இருக்கீங்களா.... என்னோட வாழ்த்துகள்!"
08 June 2006
[+/-] |
முக்கியமில்லாத சில குறிப்புகள் |
மதுமிதா அவர்களின் ஆய்வுக்காக,என் வலைப்பூ விவரங்களை அளிக்கிறேன்.
வலைப்பதிவர் பெயர்: சுதர்சன்.கோபால்
வலைப்பூ பெயர் : ஓ...!!!
சுட்டி(உர்ல்) :http://konjamkonjam.blogspot.com (எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: சொந்த ஊர்: கோவை,தற்போது இருப்பது:பெங்களூர்
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகிள் மற்றும் தமிழோவியம்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 22/ஜூன்/2005
இது எத்தனையாவது பதிவு: 49
இப்பதிவின் சுட்டி(உர்ல்): http://konjamkonjam.blogspot.com/2006/06/blog-post_08.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தமிழில் எழுதுவது என்பது மனதில் தேக்கி வைக்கப்பட்ட ஆசையாக இருந்தது.நீண்ட நாள் கனவு என்று கூட சொல்லலாம்.தற்போதைய எனது சூழலில் அது நனவாவது வலைப்பூக்களின் மூலமே சாத்தியம் என்று உணர்ந்ததால்.
சந்தித்த அனுபவங்கள்: ஏராளம்.கல்லூரியில் வெகு தினங்களுக்கு முன் சந்தித்த ஒரு சீனியரை அவரது பதிவுலகு மூலம் மீண்டும் எதிர்பாராத வகையில் சந்தித்தது என்று சங்கிலித் தொடர் போலே செல்லும் அனுபவங்கள்.
பெற்ற நண்பர்கள்: ஏராளம்
கற்றவை:ரொம்பக் கம்மி.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: வித்தியாசமான களங்களில் பயணிக்கத் தூண்டுகிறது.
இனி செய்ய நினைப்பவை: கடற்கரையில் உள்ள கூழாங்கற்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன் போன்று உணர்கிறேன்.இன்னமும் முழுமையாக உணர்ந்தறியா ஒரு சமுத்திரம் என் முன்னே இருக்கிறது.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:இரண்டு விஷயங்களுக்காக நான் இதயம் திறப்பேன்.ஒன்று காதல்;மற்றொன்று சுதந்திரம்.காதெலென்றால் நான் இதயம் தருவேன்.சுதந்திரமென்றால் காதலையும் தருவேன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இந்த உலகம் ஆச்சரியங்கள் நிறைந்தது.
05 June 2006
[+/-] |
அம்பலப்புழை பாயாசம்,G.P & சில சவால்கள் |
உலகின் பழமையான இனிப்புப் பண்டம் என்னவென்றால் பாயாசம் என்று தான் நான் அடித்துக் கூறுவேன்.தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்த போது கிடைத்த பாயாசத்தைப் பகிர்ந்துண்ட பிறகு தான் ராம,பரத,லக்ஷ்மண,சத்ருக்கன சகோதரர்கள் இப்புவியில் உதித்ததாகக் கூறுகிறது ராமாயணம்.இட்லியைப் போலவே மிக எளிய செய்முறையைக் கொண்டுள்ள பாயாசம் இல்லாத விருந்து ஒரு போதும் நிறைவு பெறுவதில்லை.ஜவ்வரிசி,சேமியா,கோதுமை,கடலை,பலாப்பழம் என்று பல்வேறு வேரியன்ட்ஸ் வந்த போதும் பால் பாயாசத்திற்கு(யம்மீ...) இருக்கும் மவுசே தனி தான்.
தமிழகத்திலுள்ள வைஷ்ணவத் திருத்தலங்களின் நைவேத்தியங்களில் சர்க்கரைப் பொங்கல்/அக்கார அடிசில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது போலவே கேரளாவிலுள்ள கிருஷ்ணன் கோவில்கள் பிரசாதங்களில் பாயாசத்திற்கு முக்கியத்துவம் தரப்படும்.குருவாயூரில் சோறூட்டலின் போது வழங்கப்படுவதும் அரிசிப் பாயாசமே.
அது சரி நீங்கள் அம்பலப்புழை(ஆலப்புழை மாவட்டம்,கேரளா) கிருஷ்ணன் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா?கேரளாவிலுள்ள மூன்று பெரிய கிருஷ்ண பரமாத்மாவின் கோவில்களுள் இதுவும் ஒன்று.இந்தக் கோவிலில் வழங்கப் படும் பாயாசப் பிரசாதத்தின் பின்னணி வரலாற்றைக் கேட்டால் என்னைப் போலவே நீங்களும் ஆச்சரியமடையக் கூடும்.
அதாகப்பட்டது கிருஷ்ண பரமாத்மா ஒருமுறை ஒரு முனிவரின் வடிவில் சதுரங்கப் பிரியனான அந்தப் பிரதேசத்து அரசரின் சபைக்கு வந்தாராம்.வந்ததும் அரசனை ஒரு சதுரங்கப் போட்டிக்கும் அழைத்தாராம்.போட்டி துவங்கும் முன்னரே பரிசை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முனிவரின் நிபந்தனையை மன்னரும் ஏற்றுக் கொண்டார்.முனிவர் போட்டியில் வென்றால் அவருக்குக் கொஞ்சம் அரிசி மணிகள் தரப்பட வேண்டும் என்பது தான் அந்தப் பரிசு.ஆனால் தரப்பட வேண்டிய அரிசி மணிகளின் எண்ணிக்கை சதுரங்கக் கட்டத்திலிருந்து கீழ்க்கண்ட முறையில் கணக்கிட வேண்டும் என்றார்.
அதாவது சதுரங்கத்தின் முதல் கட்டத்தில் 1,அதையடுத்துள்ள இரண்டாம் கட்டத்தில் 2,மூன்றாம் கட்டத்தில் 4,நான்காம் கட்டத்தில் 8 என்று தொடர்ந்து செல்லும்.அதாவது ஒவ்வொரு கட்டமும் அதனுடையே முந்தைய கட்டத்தின் எண்ணிக்கையைப் போல இரட்டிப்பு மடங்கு அரிசி மணியைப் பெறும்.
ie. பத்தாம் கட்டத்திலுள்ள மணிகளின் எண்ணிக்கை = 2 x (ஒன்பதாம் கட்டத்திலுள்ள மணிகளின் எண்ணிக்கை).
போட்டியும் விறுவிறுப்பாய்ச் சென்றது.முடிவில் முனிவர் தான் வென்றார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.போட்டியில் தோற்ற மன்னனும்,முன்னரே ஒப்புக் கொண்டது போலப் பரிசினை வழங்க ஆயத்தமானான்.முன்னர் பார்த்த கணக்கீட்டின் அடிப்படையில் அரிசி மணிகளைக் கூட்டிக் கொண்டு வந்த போது தான் முனிவரின் நிபந்தனையின் உண்மையான அர்த்தம் புரிந்தது.
இருபதாவது கட்டம் வந்த போது அரிசி மணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும்,நாற்பதாவது கட்டத்தை அடைந்த போது ஒரு ட்ரில்லியனையும் அடைந்தது.வெகு சீக்கிரமே -தானிய நிலவறையில் இருந்த மொத்தக் கையிறுப்பும் காலியாகிவிட்டது.தனது நாட்டில் மட்டுமல்ல,பக்கத்திலுள்ள நாடுகளில் இருந்து அரிசியைக் கொணர்ந்தாலும் முனிவருக்குத் தரப்பட்ட தனது வாக்கை எப்போதும் காப்பாற்ற முடியாது என்பதை அந்த மன்னன் உணர்ந்தான்.
ஜ்யாமெட்ரிக் ப்ரோக்ரஷனில் அதிகரித்துக் கொண்டு சென்றது அரிசி மணிகளின் எண்ணிக்கை.64 கட்டங்கள் உள்ள சதுரங்கக் கட்டத்தை நிரப்பத் தேவையான அரிசி மணிகள் எவ்வளவு தெரியுமா?
18,446,744,073,709,551,615 [ (2^64)-1 ].இது கிட்டத்தட்ட பல ட்ரில்லியன் டன்கள் மதிப்பாகும்.அரசனின் குழப்பத்தை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா தனது நிலையை வெளிப்படுத்தினார். மேலும் அந்தக் கடனை உடனே தர வேண்டியதில்லை எனவும்,கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாயாசமாக்கி தனது பக்தர்களுக்குப் பிரசாதமாய்த் தந்தால் போதும் எனவும் கேட்டுக்கொண்டார்.அந்த வழக்கம் இன்னமும் தொடர்ந்து வருகிறது.
இது புனைக்கதையோ இல்லை உண்மை நிகழ்வோ தெரியாது.ஆனால் அந்தக் கோவிலின் பாயாசத்திலிருக்கும் சுவையில் எந்த ஒரு ஐயமும் கொள்ளத் தேவையில்லை.
அப்புறம் தெருவில் எத்தனையோ சாமான் கூவல்கள்! ஆனால் என்ன சொல்லிக் கத்துகிறான் என்பது நூற்றுக்கு நூத்திரெண்டு சதவிகிதம் யாருக்கும் தெரியாது.எனக்குத் தெரியும் என்பவர்களுக்குக், கீழே கொஞ்சம் கூவல்கள் சவால்களாகத் தரப்பட்டுள்ளன.எங்கே முயற்சி செய்து தான் பாருங்களேன்???
1.ம்ல்லி,கதம்ப்பா,சம்ந்தி....
2.சான்யாப்டிக்கலியா...க்திக்கி..
3.பளே பேய் வாங்கர்தூ...
4.யாப் பாத்ர சேமே....