ஞாயிற்றுக்கிழமையில் எந்த ஊரில் இருந்தாலும் செய்தித் தாள் வாசிக்காமல் எனக்கு சோறு இறங்காது.எங்கள் ஏரியாவில் சில கழுதைகளின் ஜீவனம்,எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாங்கும் செய்தித்தாள்களை நம்பியே ஓடிக்கொண்டிருக்கிறது என்று அம்மா சொல்வது உண்மையோ..என்னவோ??.தினமணி,தினமலர்,தினகரன்,இந்து,இண்டியன் எக்ஸ்பிரஸ்,விஜய் டைம்ஸ்,டெக்கான் ஹெரால்ட் என்று சங்கிலித்தொடர் போலே நீளும் எங்களது ஞாயிற்றுக்கிழமைகளின் செய்தித்தாள் பட்டியல்.
மற்றநாட்களில் மருந்துக்கும் தொட்டுப்பார்க்காத இண்டியன் எக்ஸ்பிரசை உச்சி முதல் உள்ளங்கால் வரை புரட்டுவது ஞாயிற்றுக்கிழமையில் தான்.பரத்வாஜ் ரங்கனின் சினிமா விமர்சனம்,எல்.சுரேஷின் முக்கிய கட்டுரை,வாணி கணபதியின் டீன் அட்வைசுகள்,படிக்க சுவாரசியமாக இருக்கும் மேட்ரிமோனியல் விளம்பரங்கள் என்று ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொல்லி வைத்தார்கள்.இங்கே வந்தபிறகும் இந்த ஞாயிறு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் போகவில்லை.இந்தப் பத்திரிக்கை வாங்கினால் இந்த டிவிடி இலவசம்;இது வாங்கினால் இந்தப் புத்தகம் இலவசம்;இது வாங்கினால் இந்த வாலெட் இலவசம் என்று மூன்று பவுண்டுகளுக்கு செய்தித் தாள்களையும்,10 பவுண்டுகள் மதிப்புள்ள இலவச இணைப்புகளையும் வாங்கிய பின்னர் ஏற்படும் பரவச நிலை இருக்கிறதே..ஹூம்..அதெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது ஓய்...
அப்படி இன்றைக்கு வாங்கிய செய்தித் தாள்களில் இருந்து சில சுவாரசியமான செய்திகளைக் கீழே தந்துள்ளேன்.
வரும் புதன்கிழமையன்று பதவிலிருந்து செல்லவிருக்கும் டோனி பிளேர் அடுத்து என்ன செய்யப்போகிறார்,என்ன செய்யலாம் என்று ஆள் ஆளுக்கு கருத்துகளை அள்ளித்தெளித்திருக்கிறார்கள்.அதே போல் அன்று பதவியேற்கவிருக்கும் கார்டன் பிரௌனின் அமைச்சரவையில் இளம்ரத்தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.இப்போதுள்ள 23 பேர் அமைச்சரவையில் இருந்து குறைந்த பட்சம் 9 பேராவது நீக்கப்படுவது உறுதி என்ற செய்தி அனைத்து செய்தித்தாள்களிலும் முதல்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பதின்ம வயதினரிடையே கிறித்துவ மதக்கொள்கையைப் பரப்பும் வகையில் "Mixing it up with the Simpsons"என்ற ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளதாம்.இது மிகவும் பிரபலமான சிம்ஸன்ஸ் என்னும் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மூலம் கொள்கைகளைப் பரப்பும் முயற்சியாகும்.பல பெருந்தலைகள் இந்த முயற்சியினை வரவேற்று பேட்டி கொடுத்துள்ளார்கள்.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி எந்த ஒரு செய்தித்தாளிலும் செய்தி வரவில்லை.மாறாக 2010ல் புதுதில்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு அங்குள்ள பிச்சைக்காரர்களை சிறையில் அடைக்கும் திட்டம் பற்றி ஒரு பெரிய கட்டுரையே வந்துள்ளது;ஒரு பிச்சைக்காரரின் முழு வண்ணப்படத்துடன்.
நாளை துவங்கவிருக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்,அடுத்த மாதம் இங்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணியின் தற்போதைய நிலைமை போன்ற விளையாட்டு செய்திகள் ஏறத்தாழ எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ளன.
இப்போதெல்லாம் செய்தித்தாள்களின் விற்பனையினை செய்திகளின் நம்பகத்தன்மையை விட அவை எவ்வாறு பேக்கேஜ் செய்யப்படுகின்றன என்பதே தீர்மானிக்கிறது என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.அங்கிங்கெனாதபடி இந்தக் கூற்று எல்லா இடங்களுக்கும் பொருந்துகிறது.
24 June 2007
ஞாயிறு செய்திகள்
குறிச்சொல் நூஸ்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
பேப்பர இப்பிடி மாஞ்சி மாஞ்சி படிப்பீங்களா...இன்னொன்னு சொல்றேன்..இந்த ஊர்ல எதத்தொட்டாலும் டச்சுதான். ஆகையால பேப்பர் படிக்கிறதே இல்லை. இங்க டிசிஎஸ் கம்பெனிக்காரங்களும் பட்னி, விப்ரோ எல்லாரும் இருக்காங்க. அன்னைக்கு மழை...என்னைக்கி? முந்தாநேத்து..வெள்ளிக்கிழமை. நாங்க எல்லாரும் ஓடியாந்து பஸ்ல ஏறி உக்காந்தோம். கீழ பாத்தா...இங்கிலீஸ் பேப்பர். அட்ரா சக்கைன்னானாம்னு....படக்குன்னு எடுத்துட்டேன். அப்படியே பொரட்டு பொரட்டுன்னு லேசா பொரட்டீட்டு...வரிசையா எல்லாரும் படிச்சிட்டாங்க. ஒவ்வொருத்தரு மொகத்துலயும் ஒரு ஒளி தெரிஞ்சதே! அடடடா!
அப்புறம்..அந்த இலவசப் பழக்கம் அங்கயும் போகலையா?
புதுபோட்டோ அருமைங்க!
பார்த்து... மீசை கண்ணைக் குத்திடப்போகுது :)
Post a Comment