1)ஏலா.. முத்தம்மா உம்மனசு எங்கிட்டு
எங்கிட்டதான் சொல்லுடி அம்மா
2)ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கைய்யில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று
3)நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா
நிம்மதி இருக்காது அய்யா நிம்மதி இருக்காது
4)வான் இங்கே..நீலம் அங்கே...
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ??
5)காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
6)நீ உண்டு உண்டு என்றபோதும்
நீ இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமய்யா..
7)இந்த மேக கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோகநாத ராகம்
இந்த ஏழை பாடும் வேதம்
8)தாய்க்கொரு பிழை நேர்ந்தால் மகற்கில்லையோ...
அன்னைத் தமிழுக்கு பிழை நேர்ந்தால் உனக்கில்லையோ...
9)ஒருவன் இதயம் உறங்கும் நிலையில்
அறியாக் குழந்தை நீ வாழ்க...
10)நான் மூணு மெத்தை மாடி கட்டி
மாடி மேல உன்னை வச்சு
பார்க்காமல் போவேனோ சம்போ...
24 June 2007
[+/-] |
என்ன படம்? என்ன பாடல்? #6 |
[+/-] |
ஞாயிறு செய்திகள் |
ஞாயிற்றுக்கிழமையில் எந்த ஊரில் இருந்தாலும் செய்தித் தாள் வாசிக்காமல் எனக்கு சோறு இறங்காது.எங்கள் ஏரியாவில் சில கழுதைகளின் ஜீவனம்,எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாங்கும் செய்தித்தாள்களை நம்பியே ஓடிக்கொண்டிருக்கிறது என்று அம்மா சொல்வது உண்மையோ..என்னவோ??.தினமணி,தினமலர்,தினகரன்,இந்து,இண்டியன் எக்ஸ்பிரஸ்,விஜய் டைம்ஸ்,டெக்கான் ஹெரால்ட் என்று சங்கிலித்தொடர் போலே நீளும் எங்களது ஞாயிற்றுக்கிழமைகளின் செய்தித்தாள் பட்டியல்.
மற்றநாட்களில் மருந்துக்கும் தொட்டுப்பார்க்காத இண்டியன் எக்ஸ்பிரசை உச்சி முதல் உள்ளங்கால் வரை புரட்டுவது ஞாயிற்றுக்கிழமையில் தான்.பரத்வாஜ் ரங்கனின் சினிமா விமர்சனம்,எல்.சுரேஷின் முக்கிய கட்டுரை,வாணி கணபதியின் டீன் அட்வைசுகள்,படிக்க சுவாரசியமாக இருக்கும் மேட்ரிமோனியல் விளம்பரங்கள் என்று ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொல்லி வைத்தார்கள்.இங்கே வந்தபிறகும் இந்த ஞாயிறு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் போகவில்லை.இந்தப் பத்திரிக்கை வாங்கினால் இந்த டிவிடி இலவசம்;இது வாங்கினால் இந்தப் புத்தகம் இலவசம்;இது வாங்கினால் இந்த வாலெட் இலவசம் என்று மூன்று பவுண்டுகளுக்கு செய்தித் தாள்களையும்,10 பவுண்டுகள் மதிப்புள்ள இலவச இணைப்புகளையும் வாங்கிய பின்னர் ஏற்படும் பரவச நிலை இருக்கிறதே..ஹூம்..அதெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது ஓய்...
அப்படி இன்றைக்கு வாங்கிய செய்தித் தாள்களில் இருந்து சில சுவாரசியமான செய்திகளைக் கீழே தந்துள்ளேன்.
வரும் புதன்கிழமையன்று பதவிலிருந்து செல்லவிருக்கும் டோனி பிளேர் அடுத்து என்ன செய்யப்போகிறார்,என்ன செய்யலாம் என்று ஆள் ஆளுக்கு கருத்துகளை அள்ளித்தெளித்திருக்கிறார்கள்.அதே போல் அன்று பதவியேற்கவிருக்கும் கார்டன் பிரௌனின் அமைச்சரவையில் இளம்ரத்தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.இப்போதுள்ள 23 பேர் அமைச்சரவையில் இருந்து குறைந்த பட்சம் 9 பேராவது நீக்கப்படுவது உறுதி என்ற செய்தி அனைத்து செய்தித்தாள்களிலும் முதல்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பதின்ம வயதினரிடையே கிறித்துவ மதக்கொள்கையைப் பரப்பும் வகையில் "Mixing it up with the Simpsons"என்ற ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளதாம்.இது மிகவும் பிரபலமான சிம்ஸன்ஸ் என்னும் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மூலம் கொள்கைகளைப் பரப்பும் முயற்சியாகும்.பல பெருந்தலைகள் இந்த முயற்சியினை வரவேற்று பேட்டி கொடுத்துள்ளார்கள்.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி எந்த ஒரு செய்தித்தாளிலும் செய்தி வரவில்லை.மாறாக 2010ல் புதுதில்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு அங்குள்ள பிச்சைக்காரர்களை சிறையில் அடைக்கும் திட்டம் பற்றி ஒரு பெரிய கட்டுரையே வந்துள்ளது;ஒரு பிச்சைக்காரரின் முழு வண்ணப்படத்துடன்.
நாளை துவங்கவிருக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்,அடுத்த மாதம் இங்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணியின் தற்போதைய நிலைமை போன்ற விளையாட்டு செய்திகள் ஏறத்தாழ எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ளன.
இப்போதெல்லாம் செய்தித்தாள்களின் விற்பனையினை செய்திகளின் நம்பகத்தன்மையை விட அவை எவ்வாறு பேக்கேஜ் செய்யப்படுகின்றன என்பதே தீர்மானிக்கிறது என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.அங்கிங்கெனாதபடி இந்தக் கூற்று எல்லா இடங்களுக்கும் பொருந்துகிறது.
17 June 2007
[+/-] |
கொட்டும் மழையும் தொட்டுக்க சூடான ஒரு காதல் கதையும் |
மழை வரும் போது நிழலுக்காக டீக் கடையைத் தவிர்த்து எங்கே வேண்டுமானாலும் ஒதுங்கலாம்.அதுவும் சூடான பருப்புவடை,போண்டா போடும் கடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.பாடி மாஸ் இன்டெக்ஸ்,ஒபேசிட்டி என்று ஜல்லியடிப்பவர்கள் மழைக்குப் பயந்து எங்கேயும் ஒதுங்கக் கூடாது.திரு,திருவென முழிக்காமல் கீழே தொடரவும்.
"அடச்சே,என்ன மழைப்பா??சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்களேன்"என்ற அந்த சிவப்புச்சட்டை ஆசாமியின் குரல் கேட்டு தான் நான் இந்தப் பூவுலகிற்கு மறுபடியும் திரும்பினேன்.
"குடை எடுத்திட்டு வரும்போதெல்லாம் மழை பெய்யறதேயில்லை.இன்னைக்கு மறந்து குடைய வெச்சுட்டு வந்தனோ போச்சு மழ கொட்டிட்டு இருக்கு" என்று அவர் பாட்டுக்கு மழைக்கு தன்னுடன் ஒதுங்கிய சக மனிதர்களுடன் பேச ஆரம்பித்து விட்டார்.நாங்கள் அனைவரும் ஒதுங்கிய இடம் "அஜீத் டீ-இஷ்டால்".அவருக்கு இடம் தந்துவிட்டு கடைக்குள் இருந்து வந்த வடை சுடும் வாசனையின் உபயத்தால் சொர்க்கலோகத்திற்கு மறுபடியும் பயணிக்க ஆரம்பித்தேன்.
வெளியே மழை பாட்டுக்கு வெளுத்துக் கொட்டிக்கொண்டிருந்தது.
"ஹூம்.ஆஹா....அட வடையில் இஞ்சி,கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டிருக்காங்க போலிருக்கு.இது வெங்காய பக்கொடா பொரிச்செடுக்கும் சத்தம் தான்.அய்யோ..இந்த போண்டா எல்லாம் குண்டு,குண்டா பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு" என்று எனது ஐம்புலன்கள் தகவல்களைச் சேகரித்து தந்த வண்ணம் இருந்தன.
"முழுவதும் வறுக்கப்பட்ட பொருட்களை நீ சுத்தமாத் தவிர்க்கணும்.குறிப்ப உனக்குப் பிடிச்ச நொறுக்குத் தீனிகளான வடை,சிப்ஸ்,பக்கோடா.அப்புறமா,நார்ச்சத்து இருக்கிற பொருளா நிறைய சாப்பிடணும்.என்ன தான் உன்னோட பாடி மாஸ் இன்டெக்ஸ் படி கரெக்டான வெயிட்னாலும்,ஜெனடிக்கலா உங்க வீட்ல அம்மா சைட் எல்லாருமே ஒபீஸ் தான்.ஹல்லோ நான் உன் கிட்ட தான் சொல்லீட்டு இருக்கேன்"என்ற மேடத்தினது அறிவுரை ஒரு மின்னலாய் வெட்டிச் சென்றது.அவளைச் சந்தித்தது முதல் என்னால் நிம்மதியா சாப்பிட முடியலை.அது சரி.. ஒரு நியூட்ரீஷியனிடம் வேறு என்னவிதமான சம்பாஷணை செய்ய முடியும்.
"சார்,ஒரு வடை எடுத்துக்கோங்க"என்ற சிவப்புச் சட்டை ஆசாமியின் தாராள மனப்பான்மைக்கு நன்றி சொல்லி வடையைக் கவனமாய்த் தவிர்த்தேன்.
"என்ன ஆயில் உபயோகிக்கறாங்களோ?எப்பத்த மாவோ?வடை போடற ஆசாமி சுத்த பத்தமாத் தான் சுடுவானா?இந்தப் பாத்திரங்களைப் பார்த்தா இதெல்லாம் குளிச்சே மாமாங்கமாயிருக்கும் போல இருக்கே?ஹூம்...வாசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.ஆனா,மேடமோட வார்த்தைகளை மெமரியில ஏத்திக்கோ"என்றது எனது மனசாட்சி.பார்வையை மழையின் பக்கம் திருப்பினேன்.இன்னமும் சோவென ஊற்றிக்கொண்டிருந்தது.
"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியுது சார்.பொது இடத்தில வந்திட்டா நாமும் சோதியில ஐக்கியம் ஆயிடணும்.தவிர,இது நான் ரெகுலராச் சாப்பிடற கடை தான்.சுத்தம் பத்தி எல்லாம் கவலப்படாம ரெண்டு வடய உள்ள தள்ளுங்க.உங்க வயசுக்கு கல்லு,மண்ணு சாப்பிட்டாக் கூட செரிமானம் ஆயிடும்.தங்கம், அந்தச் சட்டினியைக் கொஞ்சம் இங்கே தள்ளு"என்று வடையினை வதம் செய்ய ஆரம்பித்தார் சிவப்புச்சட்டை ஆசாமி.
"அவர் சொல்றதிலும் நியாயம் இருக்கு.வடை போட்ற ஆள் கூட நல்ல துணி தான் போட்டிருக்கான்.முகத்தையும் ஷேவ் பண்ணியிருக்கான்.அவன அசப்பில பாத்தா அல்ட்டிமேட் இஷ்டார் மாதிரிக் கூட இருக்கான்."என்று மனதில் நினைத்துக் கொண்டே தட்டின் மேல் ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்த வடைகளின் மேலே பார்வையை மையப்படுத்தினேன்.
"உங்க ஃபேமிலியில ஹார்ட் டிசீசஸ் வந்து மண்டையப் போட்டவங்க கவுன்ட் இதுவரைக்கும் நாலு.இதுக்கு அவங்களோட உணவு முறைகளும் சரியா உடலை மெயின்டெயின் செய்யாததும் தான் காரணும்னு உனக்கு நல்லாவே தெரியும் தான.இவ்ளோ ஏன் உங்க ராஜியக்காவுக்கு கல்யாணம் தள்ளிப் போறதுக்கு முக்கியக் காரணம் ஷீ இஸ் fat.அதனால நீ வந்து....."ஒரு மின்னல் இடியாய் முழங்கியது நினைவுக்கு வந்து தொலைத்தது.
"வடை சுடுறது மாதிரி அதை அரைக்கிறதும் ஒரு கலை தான்.முழுசா அரைபடாத பருப்பு பல்லுல பட்டுக் கடிபடும் போது இருக்கிற சுகம் இருக்கே.அட.அட.அதுவும் இந்தப் பருப்பு வடை கூடச் சின்ன வெங்காயச் சட்னி தொட்டுட்டு சாப்டா...ஆஹா...இத விட பெங்களூர் பக்கம் மத்தூர் வடைன்னு ஒண்ணு செய்வான் பாரு.அந்த வடையோட டேஸ்டுக்கு நம்ம சொத்தே எழுதிக் கொடுத்தாலும் தகும்"எனது ஆர்வமின்மையை உணர்ந்த சிவப்புச்சட்டை தற்போது பக்கத்திலிருந்த மற்றுமொரு வடைப் பிரியரிடம் உரையாடக் கொண்டிருந்தார்.வெளியே மழையின் வேகம் சற்றுத் தணிந்திருந்தது.
"சே.பாவம் இந்தக் கடைக்காரர்.மழை வந்ததனால சனங்க யாரும் வூட்டை வுட்டு வெளியே வரவே இல்லை.அதனால சரியாக் கூட்டமும் இல்லை;வியாபாரமும் இல்லை.இப்படி மழைக்கு ஒதுங்கினவங்களை நம்பித்தான் இவரோட இன்னத்த பொழப்பே இருக்கு.சுத்தம்,சுகாதாரம்,பி.எம்.ஐ,ஒபேசிட்டி,இன்டர்சிட்டின்னு கண்டதையும் போட்டுக் குழப்பாம ரெண்டு வடைய வாங்கி உள்ள தள்ளுவியா.."என்றது மனசின் குரல்.
"சரி ரெண்டு வடையச் சாப்பிட்டுடு நாளக் காலையில ஜாக்கிங்க்ல ஒரு ரெண்டு ரவுண்டு கூட்டிக்குவோம்.ஆனால்,இந்த சிவப்புச் சட்டைக்கு முன்னால வடை வாங்கிச் சாப்பிடரது நல்லா இருக்காது"என எண்ணிக்கொண்டே மௌனமாய் இருந்தேன்.மெல்லத் தூறலும் நிற்க ஆரம்பித்தது.சிவப்புச்சட்டையும் தனது சகாக்களுடன் கிளம்பியது.
"கிளம்பீட்டாங்கய்யா...கிளம்பீட்டாங்க"என்று மனசில் கூவிக்கொண்டே "ரெண்டு பருப்பு வடை,நிறையச் சட்னியோட குடுங்க"என்றேன்.
"வடையெல்லாம் ஆகிப் போச்சு."
"என்னது......???"
"வடையெல்லாம் தீர்ந்து போச்சு சார்.நல்ல மழக்காலம் பாருங்க.எல்லாம் சூடு ஆறரதுக்கு முந்தியே வித்துப் போகுது.வேற ஏதாவது வேணுமின்னாக் கேளுங்க"என்றும் முழக்கமிட்டவாரே பால் பாக்கெட்டைப் பிரிக்க ஆரம்பித்தார் கடைக்காரர்.
"அப்பாடா...நல்ல வேளை, வடை தீர்ந்திடுச்சு.எந்த எண்ணைல சுட்டதோ??எந்த மாவில சுட்டதோ?சன்டே-அன்னைக்குக் காலையில சீக்கிரம் எழுந்து ஓடரதே பெரிசு.இதில ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ராவா??தப்பிச்சேன்"என்று எச்சிலை விழுங்கியவாறே வடைச்சட்டியை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.
ஆகவே அன்பர்களே,மறுபடியும் இந்தக் கட்டுரையின் முதல் பாரவைப் படிக்கவும்.
[+/-] |
மீண்டும்... |
வீட்டில் நடந்த ஒரு மகிழ்வு தரும் நிகழ்வு,வெளியூர்ப் பிரயாணம் என்று பம்பரமாய்ச் சுழன்றதில் மாதங்கள் போனதே தெரியவில்லை.
கோடைகாலம் முடிந்த நிலையில் தமிழகத்தில், முதல் மழைக்காலம் வெகு விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறது.புதிதாய்ப் பள்ளி,கல்லூரிகளில் சேர்ந்திருக்கும்/சேரவிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
கடந்த இரண்டு மாதங்களாக சுதந்திரக் காற்றை அனுபவித்து வந்த சிறார் பட்டாளம்,புத்தக மூட்டைகளைச் சுமந்த நிலையில் மீண்டும் கைதிகளாய்.இது எப்போது மாறும் என்று தெரியவில்லை??
தென்மேற்குப் பருவக்காற்று தரவிருக்கும் முதல் துளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் மக்களது எதிர்பார்ப்பை,இயற்கை நிறைவேற்றட்டும் என்று பிரார்த்திப்போம்.எழுத நிறைய விஷயங்களும்,நேரமும் இருக்கிறது என்பதால் இனிக் கிறுக்கித் தள்ளப்போகிறேன்.
பொறுத்தருள்க...