26 January 2006

சின்ட்ரெல்லாக்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை

சின்ட்ரெல்லா என்ற பேரைக் கேட்டவுடன் உங்கள் மனத்திரையில் முதலில் காட்சி அளிப்பது யார்?எட்டாம் வகுப்பு வரை கூடப் படித்த சசிரேகா,பக்கத்து வீட்டு ரோசலின் அக்கா,தங்கையின் ட்யூஷன் தோழி,மூன்றாம் பிறை விஜி,கல்லூரியில் காதலித்த ரேணுகா,பிரியா மணி... என்று ஆளுக்குத் தகுந்த படி பிம்பங்கள் மாறும்.

தன் தாயை இழந்த அழகிய சிறுமி ஒருத்தி சிற்றன்னைக் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் பின் அதிலிருந்து ஒரு ராஜகுமாரனால் மீட்கப்படுவதுமாய்ச் செல்வது சின்ட்ரெல்லாவின் கதை.சரி அதையெல்லாம் விடுங்கள்.எனக்கு சின்ட்ரெல்லா என்றவுடன் நினைவுக்கு வருவது, தி.நகர் உஸ்மான் ரோடு,ரங்கனாதன் தெருவில் உள்ள பல்வேறு கடைகளில் நாராஷிஃபான் புடவையையும்,சந்திரமுகி ஜிமிக்கியையும்,ப்ரெஸ்டீஜ் குக்கரையும்,ஜாக்கி உள்ளாடைகளையும் விற்கப் போராடும் எஸ்தர்களும்,வனிதாக்களுமே.

மேற்படிப்பு என்னும் தாயை இழந்த சிறுமி/மங்கையர்,வறுமை என்னும் சிற்றன்னைக் கொடுமைக்கு ஆளான நிலையில், என்றோ ஒரு நாள் வரப்போகும் ராஜகுமாரனுக்குக் காத்திருக்காமல் தங்களையும்,தங்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றக் களத்தில் குதித்து விட்ட சிண்ட்ரெல்லாக்கள் தான் இவர்கள்.

நான் சென்னையில் இருந்த இரண்டரை ஆண்டுகளில் பெரும்பங்கு வசித்தது, தி.நகர்- ராமனாதன் தெருவிலிருந்த ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் தான்.இந்த ராமனாதன் தெருவானது ரங்கனாதன் தெருவிற்குப் பெர்பென்டிக்குலராய் இருக்கும்.ரங்கனாதன் தெருவிலிருந்த சில பெரிய கடைகளில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண்களுக்கான விடுதிகள் எங்கள் குடியிருப்புக்கு அருகாமையிலேயே இருந்தது.தினமும் அலுவலகம் விட்டு வரும் போதெல்லாம், இரவு உணவருந்தி விட்டு ஹாஸ்டலில் இருந்து பணியிடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் ஒரு பெண்கள் கூட்டத்தைக் காண்பது வழக்கம்.என்ன தான் கலகலப்பாக பேசிக்கொண்டே சென்றாலும்,கண்ணுக்குப் புலப்படாத புகையாய் ஒரு சோகத்தை அவர்களிடம் இருந்து உணர முடியும்.அப்பொதேல்லாம் சிறுவயதில் படித்த சின்ட்ரெல்லாவின் கதை தான் என் நினைவுக்கு வரும்.

ரங்கனாதன் தெருவிலிருக்கும் இந்த சோ கால்ட் சூப்பர்மார்க்கெட்டுகளில் விற்பனைப் பிரிவில் வேலை செய்ய பெரும்பான்மையான ஆண்/பெண்கள் தென் தமிழகத்திலிருந்து கூட்டி வரப்படுகிறார்கள்.டிமாண்டிங் குடும்பச்சூழ்நிலை,மேலே தொடரமுடியாத கல்வி,சென்னை பற்றிய கற்பனைகள்,வசிக்குமிடத்தில் வேலையின்மை,உண்ணும் உணவும் இருக்க உறைவிடமும் இலவசம்,முன்னமே இந்த வேலையில் இருக்கும் அவர்களது கசின்களின் சென்னை சாகசக் கதைகள் என்று இவர்கள் இந்தப் பணிக்கு சென்னை வர ஒத்துக்கொள்வதில் பல காரணங்கள் இருக்கின்றன.

பொதுவாக இவ்வாறு இடம் பெயர்ந்த பின்னர் ஆண்கள் தங்களைப் பற்றியும்,தங்களது இருப்பு பற்றியும் அதிகமாய்க் கவலைப்பட வேண்டியதில்லை.இது அவர்களைப் புதிய பணிச்சூழலில் எளிதாய்ப் பொருத்திக்கொள்ள உதவுகிறது.ஆண்களின் கவலையெல்லாம் காலிப்பயல்களுக்கு நடுவே ஊரில் விட்டு வந்த காதலி பற்றியோ,தன் தங்கையின் திருமணம் பற்றியோ அல்லது அடுத்து வரவிருக்கும் இளைய தளபதியின் படம் பற்றியோ தான் இருக்கும்.பெண்களுக்கு அப்படிப்பட்ட சூழல் இன்னும் கனியவில்லை.பணியிடத்திலும் வெளியிடங்களிலும் பெருகிவரும் பாலியல் கொடுமைகள்,இப்படி வேலைக்காய்ப் புலம் பெயரும் பெண்களிடையே ஒரு பீதியை உண்டுபண்ணி இருக்கிறது. இதனால் அவர்களால் புதிய இடத்திலும் சரி,பணியிடத்திலும் சரி தங்களைப் பொருத்திக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.

பெற்றோரின் அரவணைப்பில் இருந்து கொண்டு வேலைக்குச் செல்லும் மகளிரையே பாதுகாப்பாய் விட்டு வைக்காத சென்னை மாநரகத்தில், பெற்றோர்/குடும்பத்தாரை விட்டு வந்து தனியே இருக்கும் இவர்கள் என்ன பாடுபடுகிறார்களோ என்ற எண்ணம் ஒவ்வொரு முறையும் அவர்களைப் பார்க்கும் போதும் தோன்றும்.

இவர்களின் இந்த வேலை அரசால் முறைப்படுத்தப்பட்ட பணிகளின் பட்டியலில் வருகிறதா?பீஎஃப்,இன்ஷ்யூரன்ஸ் வசதி இவர்களுக்கு அளிக்கப்படுகிறதா?இவர்களுக்கு என்று யூனியன் என்று ஏதாவது இருக்கிறதா?எவ்வளவு மாதம்/வருடங்களுக்குப் பிறகு இவர்களுக்கு ஊதியவுயர்வு அளிக்கப்படுகிறது(If at all)?இப்படிப் பணி புரியும் பெண்களின் பாதுகாப்பிற்கென்று அந்த அந்த நிறுவனங்கள் ஏதாவது செய்து வருகின்றனவா?எல்லாவற்றிற்கும் மேலாய் தீபாவளி,பொங்கல்,கிறிஸ்துமஸ்,ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களை அவர்கள் எப்போது குடும்பத்தாரோடு கொண்டாடப் போகிறார்கள்?

ஹூம்.மேற்சொன்ன கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒரு ராஜகுமாரன்,இந்த சின்ட்ரெல்லாக்களிடத்தே சீக்கிரமே வந்தால் தேவலை.

11 Comments:

நாமக்கல் சிபி said...

சிண்ட்ரெல்லாக்களின் சோகம் நிச்சயமாய் மாற வேண்டும்.

டிபிஆர்.ஜோசப் said...

நீங்கள் கூறுவது நூத்துக்கு நூறு உண்மைதான் சுதர்சன்.

அது ஒருபுறமிருக்கட்டும்.

நான் சமீபத்தில் ஒரு ஃபிசியோ தெரப்பி மனைக்குச் சென்றிருந்தேன். அந்த நிறுவனம் ஒரு நர்சிங் பள்ளியும் நடத்துகிறது.

நான் அங்கு சென்றிருந்த சமயத்தில் அப்பள்ளியில் படிக்கும் சுமார் 18 - 20 வயதுக்குள் இருந்த இரண்டு பெண்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களிருவருமே தென் தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமத்திலிருந்தவர்கள் போல் தெரிந்தது. அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததை அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தால் அந்நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தவர் நிச்சயம் கம்பி எண்ண வேண்டியதுதான். ஆனால் அத்துடன் அச்சிறு பெண்களுடைய வாழ்க்கையும் பாழாகிவிடுமே என்று எண்ணித்தான் வாய் மூடி மவுனியாய் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வந்தேன்.

நீங்கள் வர்ணித்துள்ள அதே சோகம், என்ன செய்ய முடியும் எங்களால் என்ற ஒரு விட்டேத்தித் தனம். அதை முழுவதும் எழுத்தில் வடிக்கக் கூட முடியாத கயவர்கள் அந்நிறுவன உரிமையாளர்..

இதைப் போல் எத்தனை, எத்தனை ஆதரவற்ற பெண்கள் தினமும் சீரழிந்துப் போகின்றனர்.. சென்னையிலென்ன இத்தகைய கொடுமைகள் நடக்காத ஊர்களே தமிழ்நாட்டில் இல்லை எனலாம். என்ன? சென்னையில் சிறிது கூடுதலாயிருக்கலாம். அவ்வளவுதான்.

Boston Bala said...

முறை சாரா அமைப்புகளுக்காக குரல் கொடுப்பவர்கள் வெகு குறைவு. பல தொழிற்சாலைகள் யூனியனைஸ்ட் ஆக இருக்கும்போது, எந்த அமைப்பையும் வைத்துக் கொள்ளாதவர்களை ஒருங்கிணைக்க எடுக்கப்படும் முயற்சிகள் எப்பொழுதாவதுதான் காண்கிறேன்.

யாத்ரீகன் said...

நேற்றுதான் ரங்கநாதன் தெருவில் இரவு வந்து கொண்டிருக்கையில் நீங்கள் குறிப்பிட்டிருந்த பெண்களைப்பார்த்து யோசித்துக்கொண்டிருந்தேன்.. இரவு இவ்ளோ நேரம் வேலை பார்த்து விட்டு போராங்களேனு... !!!

-
செந்தில்/Senthil

Anonymous said...

நமக்காகப் பல வண்ணப் புடவைகளை முகம் சுழிக்காமல் எடுத்துக் காட்டும் விற்பனைப் பிரிவு பெண்களைப் பார்க்கும்போது எப்போதும் ஏதோ ஒரு சோகம் என்னைத் தாக்குவதுண்டு.
ஹும்.என்னவோ போங்க.இன்னைக்குப் பொழுதை சோகமாக்கீட்டீங்க.
தொடர்ந்து எழுதவும்.

ஜெ. ராம்கி said...

Excellent Post. Thanks for ur post. Sorry for the late. I will come to share something more on this subject...Soon.

துளசி கோபால் said...

சுதர்சன்,

நல்ல பதிவுன்னு ச்சும்மா அப்படியே போற போக்குலே சொல்லிட்டுப் போக முடியலையேப்பா.

ஒரு மூணு வருசத்துக்கு முன்னாலெ நடந்தது இது.
அப்ப இங்கெ ஒரு கடை ஆரம்பிக்கற ஐடியவுலெ இருந்தோம். நானும் தோழியும்( வியாபார பார்ட்னர்) கொள்முதல்
செய்ய ச்சென்னையிலே கடைகடையா ஏறி இறங்கிக்கிட்டு வாங்கிக் குவிச்சுக்கிட்டு இருந்தோம்.வாங்கறது எல்லாம்
ரெண்டு மூணு சாம்பிள்கள்தான்.
'அல்சா மால்'லே இருந்த ஒரு ரெடிமேடு கடை. அங்கே 'சிக்கன் வொர்க்' செஞ்ச சுரிதார் பார்த்துக்கிட்டு இருந்தோம்.
ஒரு மூணு செட் வாங்கினவுடனே, அந்தவிற்பனைப் பெண்கள், மேடம். இன்னிக்கு உங்க புண்ணியத்துலே சோறு
ஊசிப்போறதுக்கு முந்தி சாப்புட்டுற முடியும்'னு சொன்னதும் எனக்கு 'பக்'னு இருந்துச்சு.

விவரம் கேட்டப்ப அதிர்ந்து போயிட்டொம்.
கடை ஒரு வடக்கத்திக்காரருக்குச் சொந்தம். இந்த ரெண்டு பொண்களும் இங்கே வேலை. நாளுக்கு 20 ரூபா சம்பளம்(!)
அவருக்கு இதே போல பலகடைகள் இங்கே இருக்கு. எல்லாகடையிலும் போய் விற்பனை என்னன்னு பார்த்து,
பணத்தை வசூலிக்கறதுதான் மொதலாளியோட வேலை. நியாயம்தான். அதோட இருக்கலாமுல்லையா?

ஆனா, இருக்கமாட்டாராம். மொதலாளியாச்சே. எதாவது விற்பனை ஆச்சுன்னாதான் அவுங்க கொண்டுவந்த பகல்
சாப்பாட்டையே சாப்புட முடியுமாம். வாங்கு, வாங்குன்னு தெருவுலே போற ஆளுங்களை இழுத்துக்கிட்டா வரமுடியும்?
விற்பனை ஆகாம சாப்புட்டா அவ்ளொதானாம். வாய்க்கு வந்தபடிப் பேசுவாராம்.
ரொம்ப வறுமை நிலையிலே இருக்குற அந்தப் பொண்களால், சாம்பார்சாதம், தயிர்சாதம் இப்படி எதாவதுதான்
கொண்டுவர முடியுமாம். சிலசமயம் மூணு, நாலு மணி ஆயிருமாம் முதல் விற்பனையைப் பார்க்க. அதுக்கப்புறம்
டிபன்பாக்ஸைத்திறந்தாலே ஒண்ணு சாம்பார் சாதம் ஊசியிருக்கும், தயிர்சாதமுன்னா புளிச்சு நாறும்.ச்சென்னையிலே
அடிக்கற வெய்யிலுக்கு காலையிலே செஞ்ச குழம்பே மதியம் கெட்டுருதுல்லெ? அந்தக் கடையிலே என்ன ஃப்ரிஜ்ஜா இருக்கு?

அதே போல வேலைக்கு வரும்போது காலையிலே ஒம்பது மணிக்கு வந்துரணுமாம். அரை மணி நேரம்
லேட்டா வந்தாலும், மூணு ரூபாய் கட். ஆனா வேலைவிட்டுப்போறது மட்டும் ஒம்பது மணின்னு பேரே தவிர
ஒருநாளும் சரியான நேரத்துக்குப் போக முடியாதாம். எப்படியும் பத்தாயிருமாம்.

மேடம், போன ஜென்மத்துலெ பயங்கரமான பாவம் என்னவோ செஞ்சுட்டுத்தான் இப்படி சேல்ஸ் வேலைக்கு வந்திருக்கோம்.
ஒரொரு சமயம், அவர் திட்டுறதைக்கேட்டா அப்படியே செத்துரலாமுன்னு இருக்குமுன்னு சொன்னதைக் கேட்டு
அப்படியே விக்கிச்சுப் போயிட்டோம்.

திரும்ப வந்த பிறகு, இதைப் பத்தி ஒரு கடிதம் சென்னை அரசுக்கு அனுப்புனோம். தூக்கிக் கடாசி இருந்துருப்பாங்க(-:

நிலமை இன்னும் அப்படியேதான் இருக்குன்னு சமீபத்திய விஸிட்லே தெரியவந்தது.

Sud Gopal said...

நாமக்கல் சிபி:
தங்களின் கருத்துக்கு நன்றி சிபி.அவர்களின் சோகநிலை மாறும் என நம்புவதோடு இல்லாமல் அவர்கள் நிலை மாற ஏதாவது செய்யவேண்டும் நாம்.

டி.பி.ஆர். ஜோசஃப்:
அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததை அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தால் அந்நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தவர் நிச்சயம் கம்பி எண்ண வேண்டியதுதான்.
சரிய்யாச் சொல்லியிருக்கீங்க சார்.இதுங்களை புடிச்சு "குண்டர்" சட்டத்தில உள்ள போட்டாத்தான் திருந்துங்கன்னு நினைக்கேன்.

Sud Gopal said...

Boston Bala:
முறை சாரா அமைப்புகளுக்காக குரல் கொடுப்பவர்கள் வெகு குறைவு. பல தொழிற்சாலைகள் யூனியனைஸ்ட் ஆக இருக்கும்போது, எந்த அமைப்பையும் வைத்துக் கொள்ளாதவர்களை ஒருங்கிணைக்க எடுக்கப்படும் முயற்சிகள் எப்பொழுதாவதுதான் காண்கிறேன்

நீங்கள் சொன்னது நிதர்சனமான உண்மை.எழுபதுகளின் இறுதியிலேயே பல நூறு தொழிலாளர்களுக்குப் பனியன் தொழிற்சாலைகள் மூலம் பணி அளித்த திருப்பூரில்,அந்தத் தொழிலாளிகளுக்கு என்று முறைப்படுத்தப்பட்ட யூனியன் வந்ததோ தொண்ணூறுகளின் மத்தியில் தான்.சிவகாசியின் நிலை எனக்குத் தெரியாது.

Sud Gopal said...

செந்தில்/Senthil:
ஓ.நீங்களும் இப்போ ராமனாதான் தெருவில தான் இருக்கீங்களா?சந்தியாபவன் சாப்பாடு இப்போவாவது நல்லா இருக்கா?

ஜிகிடி:
நந்தா படத்தில ராஜ்கிரண் "அரசாங்கம் வீடு,வேலை மாதிரி உதவி வேணுமின்னா செய்யும்.ஆனா வாழ்க்கையை நாம தான் தரணும்"னு சொல்றது மாதிரி யாராவது வந்த நல்லாத்தேன் இருக்கும்.
இது வேற சூழலுக்கு சொல்லப்பட்ட வசனம்னாலும் இங்கனயும் கச்சிதமாப் பொருந்துது.

Sud Gopal said...

அனானி கருத்துக்கு நன்றி.
வாங்க ராம்கி.நீங்க இவங்களப் பத்தி எழுதறதைப் படிக்க காத்திட்டு இருக்கேன்.