இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் வாத்யாருக்கு
03 July 2006
[+/-] |
லலிதாம்மாவுக்கு சில கேள்விகள் |
லலிதாம்மா,
கடைசியா நான் எப்போ என் கையால கடிதம் எழுதினேன்?
ஆங்...ஞாபகம் வந்திருச்சு.அஞ்சு வருஷம் முன்னாடி மும்பையில இருந்தப்போ இதே மாதிரியான ஒரு பெருமழைக்காலத்தில உங்களுக்கு எழுதினது தான் கடைசியா நான் எழுதின கடிதம்னு நினைக்கிறேன்.
வழக்கமான கடிதங்களோட ஃபார்மேட்ல நலம் நலமறிய ஆவல்,மற்றவை நேரில் அப்படின்னு எல்லாம் எழுதறது ரொம்பவும் ஃபார்மலா இருக்கறாப்ல தோணுது.அதனால கடிதம்னு சொல்ல முடியாத ஒரு உரை வடிவத்தில இந்தக் கடிதம்.
இதில இருக்கிற சில கேள்விகளை நான் பல்வேறு காலகட்டங்களில் உன் கிட்ட கேட்டு அதுக்கு உன்னோட மௌனமான புன்னகையே பதிலா வாங்கியிருக்கேன்.இருந்தாலும் தன் முயற்சியில் சிறிதும் மனம் தளரா விக்கிரமாதித்த மகாராஜா மாதிரி நானும் கேட்கறத நிறுத்தினதில்லை.அப்புறம், இப்படி எல்லார் முன்னிலையிலும் உனக்கான கேள்விகளைப் போட்டு உடைப்பது கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு.என்னோட பல தப்புகளை மன்னிச்ச நீ இதையும் பெரிசுபடுத்தமாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
பப்புவுக்கு மதிய சாப்பாடு வச்சிருப்ப போலிருக்கு.போய் குக்கர் விசில் ஆஃப் பண்ணீட்டு வந்து நிதானமாப் படி.
1) அப்பாவைக் கல்யாணம் செய்யறதுக்கு முன்னால வரைக்கும் R.லலிதான்னு கையெழுத்து போட்டிட்டு இருந்த நீ கல்யாணத்துக்கு அப்புறம் மட்டும் ஏன் G.லலிதான்னு போட ஆரம்பிச்சே?
2) என் கூட எப்போ ஃபோன்ல பேசினாலும் மொதல்ல "சாப்பிட்டியா கண்ணு"ன்னே ஏன் ஆரம்பிக்கறே?அது எந்த நேரமானலும் சரி,நான் எங்கே இருந்தாலும் சரி என் கூட தொலைபேசும் போது உன்னோட முதல் கேள்வி இது தான்.
3) "அரிசிக்காரர் வீட்டு ரங்கனாயகி அம்மாவோட கடைசி மருமக","நம்ம கோபாலண்ணன் சம்சாரம்","மிஸ்ஸஸ்.கோபால்","சங்கீதாம்மா" அப்படின்னு கூப்பிடறவங்களுக்கு உன்னோட உண்மையான பேரு தெரியுமா?அவங்கள விடு உனக்காவது உன்னோட பேரு ஞாபகம் இருக்கா?
4) என் கூட ஒண்ணாப்புப் படிச்ச மயில்சாமில இருந்து இப்போ கூட வேலை செய்யிற ராம்ஸ் வரைக்கும் எல்லார்த்தையும் ஞாபகம் வச்சிருக்க ஒனக்கு,உன்னோட பத்தாம்பு ஃபோட்டோல பக்கத்தில் ஒக்கார்ந்திருக்கரது சரசுவா இல்லை செல்வியான்னு தெரியாமப் போனது ஏன்?
5) நான் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த என் கூட வேலை பார்க்கிற வெளியூர்ப் பசங்க கூட உன்னால கொஞ்சம் கூட பேச முடியாமப் போனதுக்காக நீ என்கிட்ட "இங்லீஸ்,ஹிந்தி தெரிஞ்ச அம்மாவுக்குப் பையனாப் பொறந்திருக்கலாம்னு தோணுதா கண்ணு" சொன்னது ஞாபகம் இருக்கா?நீ கிண்டலுக்கு சொன்னியா இல்ல நெசமாச் சொன்னியான்னு தெரியாது.இப்போ அந்தப் பசங்க ஒன் கூடப் பேசணும்னு தமிழ் படிச்சுட்டு இருக்காங்கன்னு ஒனக்குத் தெரியுமா?
இதுக்கேல்லாம் வழக்கம் போலவே உன் கிட்ட இருந்து பதில் வராதுன்னு தெரியும்.அதுக்காக நான் கேக்கறத மட்டும் நிறுத்தவே மாட்டேன்.
வாசல்ல குருவிக சத்தம் போடுது போல.அதுகளுக்கு தங்கமே தீனியாப் போட்டாலும் நீ பக்கத்தில இருக்கோணும்.அதுங்களைப் பார்க்கையில கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு.
ஹூம்...லலிதாம்மா, கொஞ்ச நாள் நீ என் கூட வந்து இருந்திட்டுப் போகக் கூடாதா?