சின்ட்ரெல்லா என்ற பேரைக் கேட்டவுடன் உங்கள் மனத்திரையில் முதலில் காட்சி அளிப்பது யார்?எட்டாம் வகுப்பு வரை கூடப் படித்த சசிரேகா,பக்கத்து வீட்டு ரோசலின் அக்கா,தங்கையின் ட்யூஷன் தோழி,மூன்றாம் பிறை விஜி,கல்லூரியில் காதலித்த ரேணுகா,பிரியா மணி... என்று ஆளுக்குத் தகுந்த படி பிம்பங்கள் மாறும்.
தன் தாயை இழந்த அழகிய சிறுமி ஒருத்தி சிற்றன்னைக் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் பின் அதிலிருந்து ஒரு ராஜகுமாரனால் மீட்கப்படுவதுமாய்ச் செல்வது சின்ட்ரெல்லாவின் கதை.சரி அதையெல்லாம் விடுங்கள்.எனக்கு சின்ட்ரெல்லா என்றவுடன் நினைவுக்கு வருவது, தி.நகர் உஸ்மான் ரோடு,ரங்கனாதன் தெருவில் உள்ள பல்வேறு கடைகளில் நாராஷிஃபான் புடவையையும்,சந்திரமுகி ஜிமிக்கியையும்,ப்ரெஸ்டீஜ் குக்கரையும்,ஜாக்கி உள்ளாடைகளையும் விற்கப் போராடும் எஸ்தர்களும்,வனிதாக்களுமே.
மேற்படிப்பு என்னும் தாயை இழந்த சிறுமி/மங்கையர்,வறுமை என்னும் சிற்றன்னைக் கொடுமைக்கு ஆளான நிலையில், என்றோ ஒரு நாள் வரப்போகும் ராஜகுமாரனுக்குக் காத்திருக்காமல் தங்களையும்,தங்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றக் களத்தில் குதித்து விட்ட சிண்ட்ரெல்லாக்கள் தான் இவர்கள்.
நான் சென்னையில் இருந்த இரண்டரை ஆண்டுகளில் பெரும்பங்கு வசித்தது, தி.நகர்- ராமனாதன் தெருவிலிருந்த ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் தான்.இந்த ராமனாதன் தெருவானது ரங்கனாதன் தெருவிற்குப் பெர்பென்டிக்குலராய் இருக்கும்.ரங்கனாதன் தெருவிலிருந்த சில பெரிய கடைகளில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண்களுக்கான விடுதிகள் எங்கள் குடியிருப்புக்கு அருகாமையிலேயே இருந்தது.தினமும் அலுவலகம் விட்டு வரும் போதெல்லாம், இரவு உணவருந்தி விட்டு ஹாஸ்டலில் இருந்து பணியிடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் ஒரு பெண்கள் கூட்டத்தைக் காண்பது வழக்கம்.என்ன தான் கலகலப்பாக பேசிக்கொண்டே சென்றாலும்,கண்ணுக்குப் புலப்படாத புகையாய் ஒரு சோகத்தை அவர்களிடம் இருந்து உணர முடியும்.அப்பொதேல்லாம் சிறுவயதில் படித்த சின்ட்ரெல்லாவின் கதை தான் என் நினைவுக்கு வரும்.
ரங்கனாதன் தெருவிலிருக்கும் இந்த சோ கால்ட் சூப்பர்மார்க்கெட்டுகளில் விற்பனைப் பிரிவில் வேலை செய்ய பெரும்பான்மையான ஆண்/பெண்கள் தென் தமிழகத்திலிருந்து கூட்டி வரப்படுகிறார்கள்.டிமாண்டிங் குடும்பச்சூழ்நிலை,மேலே தொடரமுடியாத கல்வி,சென்னை பற்றிய கற்பனைகள்,வசிக்குமிடத்தில் வேலையின்மை,உண்ணும் உணவும் இருக்க உறைவிடமும் இலவசம்,முன்னமே இந்த வேலையில் இருக்கும் அவர்களது கசின்களின் சென்னை சாகசக் கதைகள் என்று இவர்கள் இந்தப் பணிக்கு சென்னை வர ஒத்துக்கொள்வதில் பல காரணங்கள் இருக்கின்றன.
பொதுவாக இவ்வாறு இடம் பெயர்ந்த பின்னர் ஆண்கள் தங்களைப் பற்றியும்,தங்களது இருப்பு பற்றியும் அதிகமாய்க் கவலைப்பட வேண்டியதில்லை.இது அவர்களைப் புதிய பணிச்சூழலில் எளிதாய்ப் பொருத்திக்கொள்ள உதவுகிறது.ஆண்களின் கவலையெல்லாம் காலிப்பயல்களுக்கு நடுவே ஊரில் விட்டு வந்த காதலி பற்றியோ,தன் தங்கையின் திருமணம் பற்றியோ அல்லது அடுத்து வரவிருக்கும் இளைய தளபதியின் படம் பற்றியோ தான் இருக்கும்.பெண்களுக்கு அப்படிப்பட்ட சூழல் இன்னும் கனியவில்லை.பணியிடத்திலும் வெளியிடங்களிலும் பெருகிவரும் பாலியல் கொடுமைகள்,இப்படி வேலைக்காய்ப் புலம் பெயரும் பெண்களிடையே ஒரு பீதியை உண்டுபண்ணி இருக்கிறது. இதனால் அவர்களால் புதிய இடத்திலும் சரி,பணியிடத்திலும் சரி தங்களைப் பொருத்திக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
பெற்றோரின் அரவணைப்பில் இருந்து கொண்டு வேலைக்குச் செல்லும் மகளிரையே பாதுகாப்பாய் விட்டு வைக்காத சென்னை மாநரகத்தில், பெற்றோர்/குடும்பத்தாரை விட்டு வந்து தனியே இருக்கும் இவர்கள் என்ன பாடுபடுகிறார்களோ என்ற எண்ணம் ஒவ்வொரு முறையும் அவர்களைப் பார்க்கும் போதும் தோன்றும்.
இவர்களின் இந்த வேலை அரசால் முறைப்படுத்தப்பட்ட பணிகளின் பட்டியலில் வருகிறதா?பீஎஃப்,இன்ஷ்யூரன்ஸ் வசதி இவர்களுக்கு அளிக்கப்படுகிறதா?இவர்களுக்கு என்று யூனியன் என்று ஏதாவது இருக்கிறதா?எவ்வளவு மாதம்/வருடங்களுக்குப் பிறகு இவர்களுக்கு ஊதியவுயர்வு அளிக்கப்படுகிறது(If at all)?இப்படிப் பணி புரியும் பெண்களின் பாதுகாப்பிற்கென்று அந்த அந்த நிறுவனங்கள் ஏதாவது செய்து வருகின்றனவா?எல்லாவற்றிற்கும் மேலாய் தீபாவளி,பொங்கல்,கிறிஸ்துமஸ்,ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களை அவர்கள் எப்போது குடும்பத்தாரோடு கொண்டாடப் போகிறார்கள்?
ஹூம்.மேற்சொன்ன கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒரு ராஜகுமாரன்,இந்த சின்ட்ரெல்லாக்களிடத்தே சீக்கிரமே வந்தால் தேவலை.
26 January 2006
[+/-] |
சின்ட்ரெல்லாக்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை |
18 January 2006
[+/-] |
சோதனை முயற்சி |
புதுச் சரக்கு போட்டு செய்யும் ஒரு சோதனை முயற்சி.
05 January 2006
[+/-] |
தமிழக அரசியல் கட்சிகளின் இணைய தளங்கள் |
தலைவர்களின் சூறாவளி சுற்றுப்பயணங்களின் போது பறக்கும் யெஸ்.யூ.விக்கள்,மா.செக்களிடமும் வா.செக்களிடமும் புழக்கத்திலிருக்கும் நோக்கியா கம்யூனிகேட்டர்,பில்கேட்சின் தமிழ் தாகத்தைக் தணிக்க புத்தகங்கள் தருதல்,அன்றாட செய்திகளை சார்பு நிலையில் தர உதவும் சாட்டிலைட் தொலைக்காட்சிகள் என்று லேட்ட்ஸ்ட் அறிவியல் நுட்பங்களைத் தங்களது கட்சிப் பயன்பாட்டில் உபயோகப்படுத்தி வருவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல தமிழகத்து அரசியல் கட்சிகள். கட்சி நிதியைக் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்குவதால் ஏற்படும் சட்ட சிக்கல்களைக் அறிந்ததனாலோ என்னவோ அந்தத் தொழில் நுட்பம் உபயோகிக்கப் படுவதில்லை என்று நினைக்கிறேன்.
ரங்கனாதன் தெருவில் டீக்கடை வைத்திருப்பவர் முதற்கொண்டு அனைவரும் தங்களுக்கென ஒரு எக்ஸ்க்ளூசிவ் இணைய தளம் வைத்திருக்கும் காலம் அல்லவா இது.நம் கழகக் கண்மணிகள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?
தமிழகத்தின் முன்னேற்றக் கழகங்களுக்கு சொந்தமாக இணையதளங்கள் இருக்கின்றன என்பது தற்செயலாகக் கூகிளிட்ட போது தான் தெரிந்தது.தமிழகக் கட்சிகளில் இணையதளம் வைத்திருப்பவை :- தி.மு.க.,அ.இ.அதிமுக,ம.தி.மு.க மட்டுமே.(தேசியக் கட்சிகளான காங்கிரஸ்(ஐ),பா.ஜா.க,கம்யூனிஸ்ட்கள் போன்றவற்றை நான் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை).ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால்,தமிழகத்தின் மூன்றாவது பெரிய/முக்கியக் கட்சியாகத் தன்னை முன்னிறுத்தும் பா.ம.க.வுக்கென ஒரு தளம் கூடக் கிடையாது.(Not even geocities).
இந்தத் தளங்களின் கன்டென்டில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை யாராவது படித்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.
அதிமுகவின் இணைய தளத்திலும் சரி,திமுகவின் இணைய தளத்திலும் சரி கட்சி நிர்வாகிகள் பற்றி எந்தத் தகவலும் இல்லை.ஆனால் மதிமுக தனது தளத்தில் பொதுச்செயலர்கள்,மாவட்டச்செயலர்கள்,எம்பிக்கள் போன்றோரது தகவல்களோடு,அவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக கான்டேக்ட் எண்களும் தரப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவல்களுக்கு:
http://www.aiadmkindia.org/
http://www.mdmk.org.in
http://www.thedmk.org